6.5.07

குமரி மாவட்டக் கலவரம் - ஒரு பகுப்பாய்வு (4)

வெடி மருந்துக் கிடங்கில் தீ

மண்டைக்காட்டில் என்ன நடந்ததென்று யாராலும் தெளிவாகக் கூற முடியவில்லை. ஆளுக்கொன்றதாகக் கூறுகிறார்கள்.

மண்டைக்காட்டுக் கோயில் பற்றிய வரலாறு இது தான்: மண்டைக்காடு கடற்கரையூர். இவ்வூரில் சிறுவர்கள் மாடு மேய்க்கும் போது கடல் மணலைக் கூட்டிச் சாமி விளையாட்டு விளையாடி வெள்ளெலியைப் பிடித்துக் காவு கொடுத்துப் பின்னர் கலைத்துப் போட்டுவிட்டுப் போவது வழக்கமாம். அப்படி ஒரு நாள் கலைக்கும் போது ″கடல் மணல் கடவுளிடமிருந்து′′ குருதி பொங்கியதாம். அன்றிலிருந்து இது மண்டைக்காட்டம்மன் என்று வழிபடப்படுகிறது. பெரும்பாலும் கேரளத்திலுள்ள தாழ்த்தப்பட்ட மக்களும் குமரி மாவட்ட மக்களும் இதில் கலந்து கொள்வார்கள். கேரளத்திலுள்ள மதம் மாறாத மீனவர்களும் வருவதாகத் தெரிகிறது. அடியார் அனைவரும் மீன் சமைத்துண்டு அம்மையை வழிபட்டுச் செல்வதே இங்குள்ள சிறப்பு.

இக்கதையைக் கேட்கும் போது நமக்குத் தோன்றுவது இதுதான்: கிறித்துவத்துக்கு அடித்தள மக்கள் மாறுவதைத் தடுக்க இக்கதை புனையப்பட்டுக் கோயிலும் நிறுவப்பட்டிருக்க வேண்டும். இதே போன்ற கதைகளுள்ள கோயில்கள் தமிழகம் நெடுகிலும் உள்ளன.[1] தாழ்த்தப்பட்டோர் மிகுதியாகக் கலந்துகொள்வதும் மீன் சமைத்துண்பதும் பார்க்கும் போது இந்தக் கருத்து உறுதியாகிறது.

இனி மண்டைக்காட்டு நிகழ்ச்சிக்கு வருவோம். ஒரு கூற்றின்படி மண்டைக்காட்டுத் திருவிழாவுக்கு முன்பே கடற்கரை நெடுகிலும் உள்ள மீனவர்களுக்குச் செய்தி சொல்லி ஏற்பாடு செய்து வைத்திருந்தார்களாம். கடலில் குளிக்கச் சென்ற பெண்களைத் துரத்தினார்களாம். இதனைத் தடுக்கக் காவலர்கள் முயன்ற பொது மீனவர்கள் அவர்களைத் தாக்கியதால் காவல்துறையினர் சுட்டார்களாம். மாதா கோயில்களின் கோபுர உச்சிகளில் நின்று தீப்பந்தங்களை அசைத்ததன் மூலம் மீனவர்கள் திரட்டப்பட்டனர் என்று கூறுகிறது இக்கதை.[2]

மண்டைக்காட்டுக் கோயிலின் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கியை மாதா கோயிலை நோக்கித் திருப்பிவைத்து இந்து மதப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்டனவாம். அதற்கு எதிர்ப்பாக மாதா கோயில் ஒலிபெருக்கி அம்மன் கோயிலை நோக்கித் திருப்பப்பட்டதாம். அதை நிறுத்தும் படி கேட்கப்போன காவலரைத் தாக்கினதால் அவர்கள் சுட்டார்களாம். இது இன்னொரு கதை.

மூன்றாவதாகவும் ஒரு கதை கூறப்படுகிறது. மீனவர் ஒருவர் நடத்தும் தேநீர்க் கடையில் காவலர்கள் தேநீர் அருந்தினராம். அவர்கள் காசு கொடுக்க மறுத்ததால் ஏற்பட்ட சண்டை மீனவர்க்கும் காவலருக்கும் மோதலாக மாறிச் சூட்டில் முடிந்தது என்கிறது இக்கதை.

இதற்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றும் மண்டைக்காட்டு நிகழ்ச்சிக்கு முன்பே மதப் பகைமையை வளர்த்து வைத்திருந்தது. திங்கட்சந்தை[3] என்னுமிடத்தில் பேருந்து நிலையத்தருகே சாலை கூடுமிடத்தில் சிறிது வெற்றுப் புறம்போக்கு நிலம் கிடந்ததாம். அதில் ஒரு சிலுவை நிறுவப்பட்டதாம். இது குறித்து இந்துக்கள் முறையிட்ட போது காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இந்துக்கள் சிலுவையை அகற்றிவிட்டுப் பிள்ளையாரை நிறுவினராம். காவல் துறை இரவோடிராவாக அச்சிலையை அகற்றியதாம். இவ்வாறு பிள்ளையாரை நிறுவியோர் நாடார்களல்லாத பிற சாதியினர். பிள்ளையார் நாம் மேலே குறிப்பிட்டதைப் போல் நாடார்களின் அடிப்படைத் தெய்வமல்லவாதலால் இந்நிகழ்ச்சியின் மூலம் நாடார்களிடையில் பிற சாதி இந்துக்கள் எதிர்பார்த்த கிளர்ச்சி நடைபெறவில்லை.

எப்படியோ துப்பாக்கிச் சூடு நடந்துவிட்டது. ஆறு மீனவர்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாயினர். இவ்வாறு மக்கள் மீது காவல் துறையினர் நடத்திய தாக்குதலை கிறித்துவர்கள் மீது இந்துக்கள் நடத்திய தாக்குதலாகக் காட்டிப் பெரிதுபடுத்தினார் நாகர்கோயில் கத்தோலிக்கப் ஆயர் ஆரோக்கியசாமி. ஓர் ஊர்வலத்துக்கு அவர் ஏற்பாடு செய்தார். அரசு அதைத் தடைசெய்தது. கிறித்துவர்கள் மீது அரசு அடக்குமுறை நடத்துவதாக அவர் அறிக்கை வெளியிட்டார். இந்தக் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது 1.3.1982 அன்று.

ஆயரின் இந்தச் செய்கைக்குக் காரணம் இருக்கிறது. சிறிது காலம் முன்பு வரையில் கடற்கரையில் கத்தோலிக்கச் சாமியார்கள் ''கொடிகட்டி'' வாழ்ந்தனர். மக்கள் கல்வியறிவு பெறப்பெற மக்கள் மீது அவர்களின் பிடி சிறிது சிறிதாகத் தளர்ந்தது. இந்நிலையில் விசைப் படகுகளின் போட்டியாலும் இறால் மீன் பிடிப்பினாலும் ஏழை மீனவர்கள் பலரது வருமானம் குறைந்தது. எனவே பிடிக்கப்பட்ட மீனில் கோயிலுக்குத் தரும் தெரிப்பு பங்கு பற்றிய கேள்விகள் எழுந்தன. அத்துடன் உரோமிலுள்ள மதத் தலைமையகத்திலிருந்து ''குமுக நீதிக்காகப் பாடுபடுதல்'' என்ற திட்டம் சாமியார்கள் மூலம் செயற்படுத்தப்பட்டது. விசைப் படகுகளை எதிர்த்து கட்டுமர மீனவர்களை அணி திரட்டும் பணி இதன் மூலம் நடைபெற்றது. அவ்வாறு திரட்டப்பட்ட அணியினர், மத குருக்கள் உண்மையில் பணக்கார மீனவர்களுக்கே சார்பாக இருப்பதைக் கண்டு அவர்களை எதிர்க்கும் நிலை தோன்றியது. இந்த இக்கட்டிலிருந்து மதத்தைக் காப்பாற்ற மண்டைக்காட்டு நிகழ்ச்சி அவர்களுக்கு ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது. அதை ஆயர் நன்கு பயன்படுத்திக் கொண்டார்.தீ பரவியது

மண்டைக்காட்டு நிகழ்ச்சி நடந்து பதினொரு நாட்களுக்குப் பிறகு மார்ச்சு 12 ஆம் நாள் வெள்ளிக் கிழமை நண்பகலில் ஈத்தாமொழியில் நாடார்கள் மீது பெரியகாடு, இராசாக்கமங்கலம் ஆகிய இரு பகுதிகளிலுமுள்ள மீனவர்கள் தீடீர்த் தாக்குதல்கள் நடத்தினர். இங்குள்ள நாடார்களில் ஏறக்குறைய அனைவரும் இந்துக்கள். இதற்கு முன் இப்பகுதியில் நடைபெற்ற சில நிகழ்ச்சிகள் இத்தாக்குதலின் அடிப்படையைப் புரிந்து கொள்ள உதவும்.

ஈத்தாமொழிக்கு அருகில் இருக்கும் அத்திக்கடையில் உள்ள முகம்மதியர்களின் பள்ளிவாசல் நிகழ்ச்சியொன்றில் இந்து மதத்தைக் குறைகூறிப் பேசினராம். அதன் பின்னர் நடைபெற்ற இந்துக்களின் நிகழ்ச்சியொன்றில் முகமதியர்களைத் தாக்கிப் பேசியிருக்கிறார்கள். இப்பேச்சை நாடாவில் பதிவு செய்து ஈத்தாமொழி முகம்மதியர்களிடையிலும் பெரியகாடு மற்றும் இராசாக்கமங்கலம் துறையிலுள்ள மீனவர்களிடையிலும் போட்டுக்காட்டியிருக்கிறார்கள். இவ்வாறு இத்தாக்குதலில் முகம்மதியர்களும் பங்கு கொண்டுள்ளனர்.

இந்தப் பகுதியில் கலவரம் நடந்த அன்று மீன் விற்கப் போன மீனவப் பெண்களைத் திரும்பிப் போய்விடும்படி நாடார் பகுதியிலுள்ள சிலர் கூறியதாகவும் திரும்பிப் போன பெண்களைக் கண்டு மீனவர்கள் கொதிப்படைந்ததே உடனடிக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

மீனவர்களின் தாக்குதலின் போது நாடார்களாகிய இந்துக்களின் கடைகளும் வீடுகளுமே தாக்கப்பட்டு கொளுத்தப்பட்டன. ஈத்தாமொழியிலுள்ள முகம்மதியர்களும் இத்தாக்குதலில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. ஏறக்குறைய மீனவர் குடியிருப்புகளையும் நாடார் குடியிருப்புளையும் பிரிக்கும் சாலை என்ற பெயருடைய சாலை ஒன்றுண்டு. சாலைக்குத் தெற்கிலும் நாடார்கள் வாழ்கின்றனர். ஆனால் வடக்கில் மீனவர் யாரும் கிடையாது. சாலைக்குத் தெற்கில் வாழ்ந்த நாடார்களின் வீடுகள் எளிதில் தாக்குதலுக்குள்ளாயின. அம்மக்கள் சாலைக்கு வடக்கே ஒடி வந்தனர். மொத்தத்தில் ஈத்தாமொழியிலுள்ள மக்கள் கையில் கிடைத்த பாத்திரம் பண்டங்களை எடுத்துக்கொண்டு நாகர்கோயிலை நோக்கி ஓடத் தொடங்கினர்.

ஈத்தாமொழிக்கும் நாகர்கோயிலுக்கும் ஏறக்குறைய பத்து கிலோமீட்டர் தொலைவுண்டு. ஈத்தாமொழி தாக்கப்பட்டதை அறிந்த ஈத்தாமொழியை அடுத்த பகுதிகளைச் சார்ந்த இந்து நாடார்கள் ஈத்தமொழிக்கு விரைந்தனர். மீனவர்களுக்கும் முகம்மதியர்களுக்கும் சொந்தமான கடைகளைச் சூறையாடி நெருப்பிட்டனர். தென்னந்தோப்புகளுக்குள் புகுந்து யார் எவருடையது என்று பாராமல் தேங்காய்களை வெட்டிச் சுமந்து சென்றனர். இங்குள்ள தென்னந்தோப்புகளில் பெரும்பாலானனைவ இந்து நாடார்களுக்குச் சொந்தமானவையே. மீனவர் குடியிருப்புகளைத் தாக்கவுமில்லை, அங்கு செல்லவுமில்லை. எனவே இந்த ''எதிர்த்தாக்குதலை'' நடத்தியவர்கள் கொள்ளையடிக்கப் போனவர்களே என்று இந்து நாடார்கள் நடுவிலேயே பேசப்பட்டது.

அன்று ஈத்தாமொழிக்கு வடக்கிலிருக்கும் சூரங்குடி எனும் ஊரிலுள்ள கிறித்துவ நாடார்களின் கோயில் முன்பு நின்ற பூச்செடிகள் வெட்டியெறியப்பட்டன. அங்கு குடியிருக்கும் கிறித்துவர் சிறு தொகையினரே. இதை அறிந்த மறவன் குடியிருப்பு(இது சூரங்குடிக்கு வடக்கிலிருக்கும் ஓர் ஊர்) கிறித்துவ நாடார்கள் போகும் வரும் வண்டிகளையும் ஆட்களையும் மறித்தனர். நாடார்களுக்குள் மத அடிப்படையில் சண்டை மூண்டுவிடும் நிலை. நாடார்களாகிய கிறித்துவர்களும் நாடார்களாகிய இந்துக்களும் கூடி நாகர்கோயிலில் அமைதிப் பேச்சு நடத்தினர். குருசடி எனும் நாடார்களின் ஊரிலுள்ள மாதா கோயில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டதாக ஒரு வதந்தி திடீரெனப் பரவியது. அமைதிப் பேச்சு முறிந்தது. ஆனால் வதந்தி பொய்யெனத் தெரிந்ததும் நிகழவிருந்த மோதல் ஒரு வழியாகத் தவிர்க்கப்பட்டது. கிறித்துவ நாடார்கள், குறிப்பாகக் கத்தோலிக்கர்கள் நிலைமையை ஒரளவு புரிந்து கொண்டு தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டனர்.[4]

மார்ச்சு 13ம் நாள், அதாவது அடுத்த நாள் பெரியகாடு நோக்கி இந்து நாடார்களின் பெருந்திரள் கையில் கிடைத்தவற்றை ஏந்தி நடந்தது. இவர்கள் பெரியகாட்டை நெருங்கும் போது பெண்டு பிள்ளைகள், முதியோரைக் கட்டுமரங்களில் ஏற்றியனுப்பிவிட்டு மீனவர்களில் ஒரு சிறு பகுதியினரே எஞ்சி நின்றனர். அவர்கள் வெடிகுண்டுகளாலும் தூண்டில்களாலும் தங்களைத் தாக்க வந்தவர்களைத் தாக்கினர். திரண்டு சென்ற நாடார்கள் இச்சிறு தொகை மீனவர்களுக்குப் புறமுதுகிட்டுப் பிழைத்தால் போதுமென்று திரும்பி வந்தனர். முன்பின் பாராமல் மாதா கோயிலினுள் சென்ற இருவர் திரும்பவேயில்லை.

இவ்விரு நிகழ்ச்சிகளிலும் ஈத்தாமொழியிலுள்ள பணக்கார நாடார்கள் தம் கோழைத் தனத்தையும் வஞ்சகத்தையும் மிகத் தெளிவாகக் காட்டினர். மீனவர்களுக்கும் நாடார்களுக்கும் பகைமையை வளர்ப்பதில் முதப்பத்து நாடான்களாகிய ஈத்தாமொழி பணக்கார நாடார்கள் பெரும்பங்காற்றினர். ''இந்து மதத்துக்கு''த் தூண்களாக நாடார்களிடையில் ஈத்தாமொழி நாடார்கள் பெயர் பெற்றவர்கள். ஆனால் ஈத்தாமொழித் தாக்குதலின் போது அவர்கள் நாகர்கோயிலில் தங்களுக்கிருந்த வீடுகளில் ஒடி ஒளிந்து கொண்டார்கள். இரு நாட்களிலும் அவர்களுக்கு உதவி செய்யத் திரண்டு வந்த மக்களுக்கு வழிகாட்டக் கூட ஆளில்லை. பெரியகாட்டுக்குச் சென்றவர்கள் வழி தெரியாமல் இடர்ப்பட்டதே மிகுதி.

இந்நிகழ்ச்சிகளால் துணிவு பெற்ற மீனவர்கள் கிட்டத்தட்ட எல்லா முனைகளிலும் தாக்குதல் தொடங்கினர். சில இடங்களில் காவலரோடு மோதல்கள் ஏற்பட்டுத் துப்பாக்கிச் சூடுகளும் நடந்தன. இறுதியில் பள்ளம் எனுமிடத்தில் நாடார்கள் நடத்திய கொடுந்தாக்குதலுக்குப் பின் கலவரம் முடிவுக்கு வந்தது.

இவ்வூரில் மீனவர்களில் ஒரு பிரிவினர் அமைதிப் பேச்சு நடத்திக் கொண்டிருந்ததாகவும் இன்னொரு பிரிவினர் அதை ஏற்காமல் நாடார்களின் வீடுகளைக் கொளுத்தி தோப்புகளை அழிக்கத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. இதைக் கண்ட நாடார்களில் சிலர் மிதியுந்துகளில் விரைந்து சென்று பல ஊர்களுக்கும் செய்தியறிவித்து சரக்குந்துகளில் ஆயிரக்கணக்கானவர்களைக் கொண்டு குவித்தனர். இறுதியில் பள்ளம் மீனவர் குடியிருப்பு முழுவதும் சூறையாடப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டது. கிணறுகளில் மண்ணெய் ஊற்றப்பட்டது. மீனவர்கள் கடலுக்குள் கட்டுமரங்களில் தப்பியோடி கன்னியாகுமரி போன்ற இடங்களில் உள்ள மீனவர் குடியிருப்புகளில் தஞ்சம் புகுந்தனர். ஏராளமான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அவ்வூர் இயல்பு நிலைக்குத் திரும்பப் பல மாதங்கள் ஆயின.

இவ்வாறு மோதல்கள் ஏற்பட்டு மக்கள் ஒருவரைக் கண்டு ஒருவர் அஞ்சி ஒருவரையொருவர் பகைத்திருந்த நேரத்தில் காஞ்சி காமகோடியும் மதுரை மடமும் அறிக்கைகள் விட்டன. இந்து மதம் அழிக்கப்படுவதாகக் கூக்குரலிட்டனர் இம்மடத்தலைவர்கள்.

மதுரை ஆதினம் கலவரத்தில் மாண்ட ''இந்துக்கள்'' குடும்பங்களுக்கு நேரில் சென்று பரிவு தெரிவித்தார். உதவிகள் செய்வதாக வாக்களித்தார். வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா என்பது தெரியவில்லை.

குன்றக்குடி அடிகள் மேற்கொண்ட அணுகல் வேறு விதமானது. மதங்களைக் கொண்டு மக்களிடையில் பகைமையை வளர்க்காமல் இரு மத மக்களையும் ஒன்றுபடுத்தும் நோக்கில் நெடும்பயணம் மேற்கொண்டார். இரா.சே.ச.வினர், அவர் முகம்மதியர்களோடும் கிறித்துவர்களோடும் கூட்டுச் சேர்ந்து இந்து மதத்தினரைக் காட்டிக் கொடுத்துவிட்டதாகக் கூறினர். ஊரெல்லாம் சுவரொட்டிகள் ஒட்டினர். சாமிதோப்பு பாலபிரசாபதி தன் முன்னாள் தவற்றுக்குக் கழுவாய் தேடுவார் போல் இப்பயணத்தில் கலந்து கொண்டார்.[5] ஆனால் மக்களிடையில் மனக்கசப்பு குறையவில்லை. சிக்கல் உண்மையில் மதச் சிக்கலாயிருந்தால் தானே!

இந்தக் கலவரம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது மாபெரும் சுவரொட்டிப் போர் ஒன்று நடந்தது. அதோடு சுவருக்குச் சுவர் இரா.சே.ச.வுக்கு விளம்பரங்களும் செய்யப்பட்டன. ஆனால் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள், குறிப்பாக இந்து நாடார்கள் இரா.சே.ச.வுக்கு ஆதரவு அளிக்கவில்லை.

(தொடரும்)

அடிக்குறிப்புகள்:

[1]தமிழ் நாட்டுக் கோயில்களின் தல புராணங்களில் பெரும்பாலானவற்றுக்கு ஒரு பொதுத்தன்மை உண்டு. இக்கோயில்களின் தெய்வப் படிமங்கள் தற்செயலாக வெளிப்பட்டனவென்று அக்கதைகள் கூறும். அப்படிமங்களை முதலில் கண்டு பிடித்தவர் பெரும்பாலும் தீண்டாமைக் கொடுமைக்கு உட்பட்ட ஒரு சாதியைச் சேர்ந்தவராக இருப்பார். இதன் பொருளென்ன?


கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகம் அலையலையான மதப்படையெடுப்புகளுக்கு ஆளாகி வந்துள்ளது. புத்தம், சமணம், வேதியம், சிவனியம், முகம்மதியம், கிறித்துவம் என்று இப்படையெடுப்பு தொடர்ந்து வந்துள்ளது. குமுகத்தில், குறிப்பாகச் சாதிவெறிக்கு உள்ளாகி ஒடுக்கப்படும் மக்களையே இம்மதங்கள் முதலில் பற்றிக்கொண்டு உள்ளே நுழைகின்றன. இவ்வாறு நுழைந்த புதிய மதங்களுக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் மாறுவதைத் தடுத்து நிறுத்துவதற்காக அச்சாதியைச் சேர்ந்த ஒருவரைப் பிடித்து அவர் மூலம் நடத்தப்பட்ட நாடகங்களாகவே தமிழகக் கோயில்களில் பெரும்பாலானவற்றின் தோற்றக் கதைகள் அமைந்துள்ளன. இந்த அடிப்படையில் தமிழகக் கோயில்களின் வரலாற்றை அணுகினால் தமிழக வரலாற்றில் வெவ்வேறு சாதியினர் வெவ்வேறு காலங்களில் குமுகத்தில் தாங்கிய பங்கு பற்றியதெளிவையும் பெற முடியும்.

[2]அண்மையில் சந்தித்த பள்ளத்தைச் சேர்ந்த நண்பர் அப்போது மண்டைக்காட்டு மாதா கோயில் பொறுப்பிலிருந்த சாமியார் தான் இதற்குக் காரணம் என்றும் முன்பு அவர் பள்ளத்தில் பொறுப்பிலிருந்த போது புதிய ஒரு கோயிலைக் கட்டி ஊரை இரண்டாகப் பிரித்து ஊர் மக்களுக்குள் பகைமூட்டிவிட்டதாகக் கூறினார். இப்போது அவர் ஆத்திரேலியாவிலிருக்கிறாராம். (நம் ஆட்சியாளர்கள் போல கோயில் கட்டுமானத்தில் காசுபார்க்க அவர் இதைச் செய்திருக்கலாம்.)

[3]இப்போது திங்கள்நகர்

[4]கிறித்துவ நாடார்கள் மோதலைத் தவிர்த்தது அவர்களது சாதி உணர்வைக் காட்டுவதாக மட்டும் கூறி விட முடியாது. நாம் ஏற்கனவே கூறியுள்ளது போல் அகத்தீசுவரம் வட்டத்தில் நாடார்களிடையில் கிறித்துவர்களின் விழுக்காடு குறைவு. எனவே மோதல் ஏற்பட்டால் இந்து நாடார்கள் வாழும் பகுதிகளால் சூழபட்டிருக்கும் கிறித்துவ நாடார்கள் பேரிழப்பு எய்த வேண்டியிருக்கும். ஆனால் மேற்கு வட்டங்களில் கிறித்துவ நாடார்களின் எண்ணிக்கை இந்து நாடார்களின் எண்ணிக்கையை விட மிகுதி. மாவட்டம் முழுவதையும் எடுத்துக் கொண்டால் இரு சாரரும் ஏறக்குறைய சம எண்ணிக்கையுடையவராய் இருப்பர்.


கலவரம் உண்மையிலேயே மதத் தன்மை பெற்றிருந்தால், அதாவது இந்து நாடார்களும் கிறித்துவ நாடார்களும் மோதியிருந்தால் கலவரத்தை அடக்குவது மிகக் கடினமாயிருந்திருக்கும். இழப்புகளும் மிகப் பெரிதாயிருந்திருக்கும். மீனவர் - நாடார் மோதலை சாலையைக் கண்காணித்ததன் மூலமே காவல்துறையினரால் எளிதில் கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால் உண்மையான மதவடிவைக் கலவரம் எடுத்திருந்தால் ஒவ்வொரு ஊருக்குள்ளும் குருதியாறு ஒடியிருக்கும். கட்டுப்படுத்த முடியாத நிலையில் காவல் துறையின் ''அத்துமீறல்களும்'' பேரளவில் நிகழ்ந்திருக்கும்.

[5]இடங்கைப் பொதுமைக் கட்சியினர் போல் ஊர்வலம் எதுவாயிருந்தாலும் கொடி பிடித்துக்கொண்டு கலந்துகொள்ளும் பழக்கம் தன்னிடம் படிந்து விடாமல் இவர் பார்த்துக்கொள்வது நல்லது.

0 மறுமொழிகள்: