6.5.07

குமரி மாவட்டக் கலவரம் - ஒரு பகுப்பாய்வு (5)

மீண்டும் தாணுலிங்கர்

கலவரம் நடந்து கொண்டிருந்தபோது முதல்வர் ம.கோ.இரா. நாகர்கோயிலுக்கு வருகை புரிந்தார். பல்வேறு தலைவர்களும் அவரைப் பார்த்து முறையிட்டனர். அப்போது தன் மகள் வாழ்ந்த ஊராகிய ஈத்தாமொழி தாக்கப்பட்டபோது அவரது மகளின் உடைமைகளுக்கும் ஏற்பட்ட சிறு அழிவுகளால் உந்தப்பட்ட தாணுலிங்கரும் முதல்வரைப் பார்த்துக் குறைகளை எடுத்துரைத்தார். அவரது பேச்சுவன்மையைக் கண்ட மேல் சாதி, குறிப்பாக வெள்ளாளத் தலைவர் சிலர் அவரையே இந்து முன்னணித் தலைவராக்க அப்போதே முடிவு செய்தனர். முன்னாள் காங்கிரசு ச.ம.உ. திரு. ஏ. பாலையா என்ற நாடாரை இ.மு. தலைவராக்க முன்பு முடிவெடுக்கப்பட்டிருந்ததாம். அந்த முடிவு அங்கேயே கைவிடப்பட்டது.

ஏற்கனவே அரசியலிருந்து தூக்கியெறியப்பட்டிருந்த தாணுலிங்கருக்குத் தானே தேடி வந்த தலைமைப் பதவி இனிப்பாயிருந்தது. அவரது பெயர் தமிழ், ஆங்கில நாளிதழ்களில் அடிபட்டது. இராம.கோபாலன் போன்ற பார்ப்பனத் தலைவர்களும் காமகோடி போன்ற ''மகான்களும்'' ''நாடார்வாள்'' என்று அழைக்கும் போது எவ்வளவு இனிமை! பார்ப்பனர்கள் எவ்வளவு திருந்தி விட்டார்கள் என்று அவர் வியந்தார். அந்த வேகத்தில் இந்து மதத்தைத் காக்கப் புறப்பட்டு விட்டார். அவரது முதலூடி மனப்பான்மைக்கும் இது உவப்பாகவே இருந்தது.

இதற்காக நாம் தாணுலிங்கரை மட்டும் ஒரேயடியாகக் குறைகூற முடியாது. ஏனென்றால் கிறித்துவர்களான நாடார்களும் சும்மா இருக்கவில்லை. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் திரு. தர்மராசு சந்தோசம் குமரி மாவட்டக் கிறித்துவர்களுக்காக வாதாடினார். இவரே அதே சூட்டோடு நடைபெற்ற நாடார் மகாசன சங்க மாநாட்டில் நிகழ்த்திய தலைமையுரையில் நாடார்கள் தங்கள் மத வேற்றுமைகளை மறந்து சாதியடிப்படையில் ஒன்றுபட வேண்டுமென்று கூறினார். தாணுலிங்கரிடம் இத்தகைய இரட்டை நாக்குத் தன்மை இல்லை என்று கூற முடியும்.

இந்து முன்னணித் தலைவராக்கப்பட்ட தாணுலிங்கரும் குமரி மாவட்ட இந்து நாடார் சங்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். இவருக்குப் பின்னால் நின்று இவரை இயக்கிய விசைகள் இவர் கூறும் இந்து மக்களுக்கோ அல்லது இந்து நாடார்களுக்கோ எவ்வாறு பயன்படுகின்றன என்று அவர் எண்ணிப் பார்த்ததாகத் தெரியவில்லை. இதுபோன்ற சிந்தனைகள் அவரது இளமைக் காலத்திலேயே இல்லை. தள்ளாத இந்த அகவையில் எவ்வாறு அதை எதிர்பார்க்க முடியும்?

இந்த நேரத்தில் நாம் இன்னொரு சேதியையும் கூறாமல் மேலே செல்ல முடியாது. கலவரத்துக்கு ஐந்தாறு மாதங்களுக்கு முன்பு பொதுமைக் கட்சிப் பெருமானார் சீவா அவர்களின் நினைவு நாள் கூட்டமொன்றில் குமரி மாவட்டப் போக்குவரத்துக் கழகத்துக்கு சீவாவின் பெயரை இடப் போவதாக முதல்வர் ம.கோ.இரா. அறிவித்தார்.[1] ஏற்கெனவே நேசமணியாரின் பெயரை வைப்பதாக அரசு ஒப்புக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. எனவே நாடார்கள் இதில் சாதிச் சிக்கலைக் கொண்டு வந்தனர். நாடார்களிடமிருந்து கடும் எதிர்ப்பு உருவானதும் அரசு தன் முடிவை மாற்றிக் கொண்டு நேசமணி பெயரில் போக்குவரத்துக் கழகம் அமைக்கப்போவதாகவும் அறிவித்துவிட்டது. இது கலவரத்துக்கு முந்திய நிலை. இதைத் தங்களுக்கு விடப்பட்ட அறைகூவலாக நாடாரல்லாத மேல்சாதியினர் எடுத்துக் கொண்டது இயல்பே. மொத்தத்தில் குமரி மாவட்டப் போக்குவரத்துக் கழகத்துக்கு நேசமணியின் பெயரை வைப்பதென்ற அரசின் முடிவு நாடார்களின் சாதி ஒற்றுமைக்கு ஒரு வெற்றியாக கலவரத்துக்கு முன் கருதப்பட்டது.

ஆனால் கலவரத்துக்குப் பின் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. புதிது புதிதான அமைப்புகளின் பெயரில் ″சீவா பெயர் நிலைநிறுத்தப் போராட்டக் குழுக்கள்'' சுவரொட்டிகள் ஒட்டின. எதிர்ப்புறத்திலிருந்து வலுவான குரல் இல்லை. நேசமணியின் பெயர் வைக்குமாறு வலியுறுத்தினால் அது நாடார்களிடையில் மத அடிப்படையில் பிளவை ஏற்படுத்தி விடுமோ என்று நாடார்களிடையில் அச்சமேற்பட்டுவிட்டது. கலவரத்தின் விளைவு எவ்வளவு ஆழமாக மத உணர்வுகளைக் கிளறிவிட்டுள்ளது என்பதையும் ஒரு சாதிச் சண்டை மதச் சண்டையாகக் கற்பிக்கப்பட்டதன் விளைவாக வலுவான ஒரு மக்கள் கூட்டம் எவ்வளவு எளிதில் பிளக்கப்பட்டுவிட்டதென்பதையும் இது தெளிவாகக் காட்டுகிறது. இவ்வாறு நாடார்களில் ஒரு சிலர் சாதிவெறியினால் உருவாக்கிய ஒரு சிக்கல் (நேமணியின் பெயர் வைத்தல்) இன்னொரு வடிவில் அவர்கள் மீதே திருப்பியடித்ததைப் பார்க்கிறோம்.

இன்று இச்சிக்கல் நேசமணியின் பெயரை குமரி மாவட்டப் போக்குவரத்துக் கழகத்துக்கு வைத்ததன் மூலம் தீர்க்கப்பட்டு விட்டது. பெரும்பாலோர் எதிர்பார்த்தது போல் இது நாடார்களிடையில் மோதல்களையோ புகைச்சல்களையோ ஏற்படுத்தவில்லை. சாதியை மதத்தால் உடைக்க முடியவில்லை.

இருந்தாலும் நாடார்கள் சிலரின் சிந்தனைகள் இப்பிளவின் தன்மைமையும் அது ஏற்படுத்தப் போகும் விளைவுகளையும் சீர்தூக்கிப் பார்த்தன. குறிப்பாகக் கலவரத்தின் போது தங்களது தென்னந்தோப்புகள் அழிக்கப்பட்டது அவர்களுக்கு அச்சத்தை மூட்டியது.


நச்சரவு மீண்டும் படமெடுத்தாடியது

ஓராண்டு கழித்து மீண்டும் அதே பிப்ரவரி 12,13 நாட்களில் 'இந்து ஒற்றுமை எழுச்சி மாநாடு' நடக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்று நடக்க இருந்த ஊர்வலத்துக்குத் தடைவிதித்தது அரசு. தடையை மீறி ஊர்வலம் புறப்பட்டது. கோட்டாறு எனுமிடத்திலிருக்கும் சவேரியார் கோயில் என்னும் கிறித்துவர் கோயிலின் பக்கம் ஊர்வலம் வந்தபோது காவலர்களுக்கும் ஊர்வலத்தினருக்கும் சச்சரவு ஏற்பட்டு துப்பாக்கிச் சூட்டில் இருவர் மாண்டனர். கோட்டாற்றில் அரசுப் பேருந்துகள் கொளுத்தப்பட்டன. பேருந்துகள் கொளுத்தப்பட்ட இடத்தில் இந்து நாடார்கள், பிற சாதியினர் முகம்மதியர்கள் அனைவரும் செறிந்து வாழ்கின்றனர். ஆனால் காவல் துறையினருக்கு இரா.சே.ச.வினர் இந்து நாடார்களைச் சுட்டிக்காட்டியதாகக் கூறப்படுகிறது. கோட்டாற்றைச் சுற்றியிருக்கும் ஐந்து சிற்றூர்களில் இந்து நாடார்களின் வீடுகளில் புகுந்து காவல்துறையினர் தாக்கினர். தாக்குதல் நடத்தப்பட்ட பின் அப்பகுதிகளிலுள்ள சுவர்களில் காணப்பட்ட எழுத்து முழுக்கம் இது தான்: ''இந்துக்களின் காவலன் இரா.சே.ச.'' எப்படி இருக்கிறது சேதி! இரா.சே.ச.வின் உத்தியே இது தான். எதிரிகள் என்று இவர்கள் யாரைக் கூறுகிறார்களோ அவர்கள் அல்லது அவர்கள் சார்பில் அரசு தாக்குவது போன்ற ஒரு தோற்றத்தை இவர்கள் உருவாக்குவார்கள். பின்னர் எங்களை விட்டால் உங்களுக்கு வேறு ஆளில்லை என்பார்கள். ஏதுமறியா மக்கள் இவர்களை நம்பி ஏமாறுவார்கள்.

ஊர்வலத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் கண்டு கிறித்துவர்களில் பெரும்பாலோர் மகிழ்கின்றனர். உண்மையில் மதவெறி அவர்கள் கண்களை மறைக்கிறது. மக்களுக்கு எந்த வகையிலும் நன்மை செய்யாத, செய்ய நினைக்காத இரா.சே.ச. போன்ற மக்கள்பகைக் கும்பலுக்கு உதவுவதாக அரசின் செயல் அமைந்திருப்பது நன்றாகத் தெரிகிறது. இதை அரசு அறிந்து செய்கிறதா அறியாமையினால் செய்கிறதா என்று நம்மால் கூற முடியவில்லை. ஆட்சியையே தொழிலாகக் கொண்டவர்களிடம் இன்னது செய்தால் இன்னது நடக்கும் என்ற தெளிவிருக்காது என்று நம்மால் நம்ப முடியவில்லை. கிறித்துவர்களின் தூண்டுதலினால் தான் ஊர்வலத்துக்குத் தடைவிதித்துத் தாக்குதலும் நடத்தியது அரசு என்றும் திருச்செந்தூர் இடைத் தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகளைக் கவர்வதற்காகவே இது செய்யப்பட்டது என்றும் சென்னையிலிருந்தே காவலர் உடையில் அடியாட்கள் வந்தனர் என்றும் இரா.சே.ச. இதழான இந்து பூமி கூறுகிறது.

(தொடரும்)

அடிக்குறிப்பு:

[1]கருணாநிதி தொடங்கி வைத்த இந்தப் பெயர்வைக்கும் நடைமுறையால் மக்கள் நடுவில் மகோ.இரா. உண்டாக்கிய பிளவுகள் தாம், மோதல்கள் தாம் எத்தனை? ஒருவேளை அவர்களதுநோக்கமே இது தானோ?

2 மறுமொழிகள்:

சொன்னது…

உங்கள் அனுபவங்களைப் பதிவு செய்வதற்கு மிக்க நன்றி ஐயா.

அன்புடன்,

மா சிவகுமார்

சொன்னது…

அய்யா,

உங்களது பார்வையில் குமரிமாவட்ட மதக்கலவரத்தை படிக்கும் போது பழைய நினைவுகள் வருகின்றன.