20.5.07

காலத்துள் புதைந்து கிடைக்கும் உறவுகளும் உண்மைகளும் (4)

தமிழ் எழுத்து அமைப்பு மிக உயர்வானதாக, கணினிப் பயன்பாட்டுக்கு பிற எந்த மொழியையும்விட பொருத்தமாக இருப்பதாக எழுத்தாளர் சுசாதா கூறியிருக்கிறார். அவர் அதன் எந்த தன்மையை வைத்துக் கூறினார் என்பது தெரியவில்லை. அனால் இன்றைய தமிழ் எழுத்து முறையில் விடை தேட வேண்டிய பல கேள்விகள் உள்ளன.

1. தமிழ் எழத்துக்கள் 33 என்கிறது தொல்காப்பியம்.
உயிரெழுத்து 12
மெய்யெழுத்து 18
சார்பெழுத்துகள் 3 – ஆய்தம், குற்றியலிகரம், குற்றியலுகரம். ஆனால் ஐகாரக்குறுக்கம் ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம் போன்றவை இந்த எண்ணிக்கையில் வரவில்லை.

2. தந்தை, பந்து போன்ற சொற்களில் தகரத்துக்கு முன் நகரத்துக்கு உள்ள ஒலி நகரம் முதலெழத்தாகும் போது மாறுகிறது. னகர ஒலியேமுதலெழுத்தாவதற்குப் பொருந்துகிறது.

3. உ, ஊ, இ, ஈ, எ, ஏ, ஒ, ஓ, ஆகிய எழுத்தக்களுடன் குழம்பும் என்பதால் முறையே வு, வூ, யி, யீ, யெ, யே, வொ, வோ, என்ற எழுத்துக்கள் மொழி முதலாவது தடுக்கப்பட்டுள்ளது சரிதான். ஆனால்,

அ) ச, சை, சௌ, மூன்றும் முதலெழுத்தாவதற்கிருக்கும் தடைக்கு மொழியியல் அல்லது ஒலியியல் காரணம் என்ன?


அ, ஐ, ஒளி எனும் மூன்றலங்கடையே என்ற தொல்காப்பிய நூற்பாவுக்கு “அவை ஒள எனும் ஒன்றலங்கடையே” என்று பாடவேறுபாடு காட்டினும் சௌ மொழி முதலாவதற்குள்ள தடைக்குக் காரணம் யாது?

தமிழிலும் சரி ஆங்கிலத்தலும் சரி சகர வரிசையிலுள்ள சொற்கள் பிற எந்த வரிசையிலுள்ள சொற்களையும் விட மிகுதி. இந்த விதி தமிழ்ச் சொற்களின் எண்ணிக்கையை மிகவும் குறுக்கிவிடும். ஆதனால் இந்த விதி பற்றிய கருத்துப்போர் நெடுங்காலமாக நடைபெறுகிறது. திருவள்ளுவர் இவ்விதியை ஏற்றுள்ளார்; இளங்கொவடிகள் புறக்கணித்துள்ளார்.

ஆ) ய, யு, யூ, யை, யொ, யோ, யௌ, ட முதல் டௌ வரை, ர முதல் ரௌ வரை, ல முதல் லௌ வரை, ழ முதல் ழெள வரை, ள முதல் ளௌ வரை, ற முதல் றெள வரை, ன முதல் னௌ வரை சொல் முதலில் வரக்கூடாது என்பதன் நோக்கமென்ன?

இ) ட, ர, ல, போன்ற எழுத்துக்களுக்கு இ, உ, எ போன்ற உயிரெழுத்துக்களை முன்னால் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று விதி உள்ளது. இந்த விதி ஆங்கிலத்தில் Write, Wrong, Wrought போன்ற சொற்களில் கையாளப்பட்டிருப்பதைப் பாவாணர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் வரியனில் இருக்கும் இந்த அமைப்பு ஒலிப்பில் இடம்பெறவில்லை.

Log என்ற ஆங்கிலச் சொல்லுக்கு

1. Log (லோகு) என்ற ஈபுரூச் சொல்லிலிருந்து ஒரு முகத்தலளவைப் பெயர், ஏறக்குறைய ½ லிட்டர் அளவு கொண்டது – தமிழில் உழக்குக்கு இணையானது.

2. Log (லோகு) தடிமனான மரக்கட்டை – தமிழில் உலக்கை.

3. கப்பல் மற்றும் பிறவற்றின் செயற்பாடு அல்லது பட்டறிவுகளின் பதிவு - உலவு - உலா
Log book – உலவுச் சுவடு
அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருப்பதை (உ)லாத்துதல் என்பது வழக்கு. லாந்துதல் என்பது குமரி மாவட்ட வழக்கு.

4. Locus: இடம் --- இலக்கு; பொது வழக்கில் லெக்கு. இதுபோன்று எண்ணற்ற சொற்களைக் காட்ட முடியும்.

இந்தக் குறிப்பிட்ட மாற்றம் செய்யப்படும் முன்னரும் பின்னரும் குமரிக்கண்ட மக்கள் அவர்களது மொழி வழக்குகளுடன் உலகில் பரவியுள்ளனர் என்று கொள்ளலாம்.

4. சமற்கிருதம், இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் கசடதப ஆகிய 5 வல்லெழத்துகளுக்கும் முறையே நன்னான்கு ஒலியன்களும் வரியன்களும் உண்டு. தமிழில் 6 வல்லெழுத்துகளுக்கும் அவற்றிலிருந்து சிறு மாறுபாட்டுடன் இடத்திற்கேற்ப வெவ்வேறு ஒலிகள் உண்டு.

1. குடம் அகம் அக்காள் அங்கணம் அழகு
2. செல்வம் வசம் வச்சிரம் வஞ்சகம் வீசு
3. -- படம் பட்டம் பண்டம் பாடு
4. தவிடு விதம் வித்தை விந்தை விதை
5. புனுகு கோபுரம் கோப்பியம் கோம்பை கோபி
6. -- முறம் முற்றம் முன்றில் மறை

இந்த ஒலிகள் வரியனின்றி மரபு அடிப்படையில் பேணப்படுகின்றன. மறைகளைக் குறிப்பிட நாம் கையாளும் “எழுதாக் கிளவி”த் தன்மையை இந்த ஒலிப்புகள் தமிழுக்குத் தருகின்றன. அதே நேரத்தில் இத்தன்மையைப் பயன்படுத்தி க,ச,ட,த,ப ஆகிய ஐந்து எழுத்துக்களுக்கும் ஒவ்வொரு ஒலி மட்டும் இருப்பது போல் ஒலிக்கும் முறை தொடங்கிவிட்டது. அகம் என்பதை Aham என்று ஒலிக்காமல் Akam என்றும் பல்கலைக்கழகம் என்பதை Palhalaikkazhaham என்று ஒலிக்காமல் Palkalaikazhakam என்றும் இதுபோன்றும் ஒலிக்கத் தொடங்கிவிட்டனர். இந்தத் தவறுக்கான அடித்தளம் தமிழ் ஆட்பெயர்களையும் இடப்பெயர்களையும் ஒலிபெயர்த்த சமற்கிருதம் அறிந்தவர்களிடமிருந்து தொடங்கியது. நாகப்பட்டினம் என்பதை Nahappattinam என்று எழுதாமல் Nagapattinam என்றும் நடராஜன் என்பதை Nadarajan என்று எழுதாமல் Natarajann என்றும் பாலன் என்பதை Palan என்று எழுதாமல் Balan என்றும் கணபதி என்பதை Kanabathi[1] என்று எழுதாமல் Ganapathi என்றும் இவ்வாறெல்லாம் இது தொடங்கியது.

இவ்வாறு பல ஒலிகள் முற்றிலும் கைவிடப்பட்டும் இருக்கின்ற ஒலிகளுக்கு வரியன்கள் இன்றியும் வகுக்கப்பட்ட இந்த இலக்கணம் ஒரு கட்டத்தில் மறைமொழியாக இருந்திருக்கலாமா என்றொரு ஐயம் எழுகிறது.

நாமறிந்த தமிழ் மொழி வரலாற்றைப் பார்ப்போம். கழக இலக்கியங்களாயினும் சிலம்பு, மேகலை போன்ற காப்பியங்களாயினும் தமிழக அரசர்கள் மறை வேள்விகளையும் பார்ப்பனப் பூசாரிகளைக் கொண்டு சமற்கிருதத்தில் வழிபாடு செய்யும் கோயில்களையும் புரந்தனர் என்பதையே காட்டுகின்றன. பின்னர் சமற்கிருதத்தில் இலக்கியங்களையும் ஆட்சியையும் கண்ட களப்பிரர்[2] ஆட்சியைக் காண்கிறோம்.

அறைபோகு குடிகளோ டொருதிறம் பற்றி
வலம்படு தானை மன்ன ரில்வழி
புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின்

என்று இளங்கோவடிகள் சுட்டிக்காட்டிய ( அந்திமாலை சிறப்புச் செய்காதை 10-12 ) அறைபோகு குடிகள் (தாய்நாட்டைக் காட்டிக்கொடுத்து தம் வளத்தைப் பெருக்கிக்கொள்வோர்) நாள்தோறும் பெருகிவந்தனர். புத்த - சமணத்தின் பின்னணியில் நிகழ்ந்த சுரண்டலுக்கு எதிராக வாணிகர்கள் தொடங்கிய இயக்கத்திற்குப் பார்ப்பனர்களும் வெள்ளாளர்களும் தலைமை தாங்க ஒரு மொழி மீட்பியக்கமாகவும் அது வடிவம் கொண்டது. அதனைக் கைப்பற்றி வளர்ந்த சோழப் பேரரசு மக்களைக் கசக்கிப் பிழிந்து எண்ணற்ற ஆகமக் கோயில்களை எழுப்பி பிறமொழிப் பூசாரியரையும் தேவரடியாரையும் இறக்குமதி செய்து சமற்கிருதத்தைப் பூசை மொழியாக்கியது. மக்களின் எதிர்ப்புக்கு ஈடுகொடுக்க ஓதுவார்களை அமர்த்தி வெளியில் நின்று தமிழைப் பாட வைத்தது.

பேரரசுச் சோழர்களின் ஆண் வழியினருக்கும் இராசராசனின் பெண் வழியினருக்கும் உருவான போட்டியில் ஆண்வழியில் வந்த அதிராசேந்திரன் என்பவன் மக்களின் ஒரு புரட்சியைப் பயன்படுத்தி கொல்லப்பட்டு இராசராசன் அவன் மகன் இராசேந்திரன் ஆகியோரின் பெண்களின் வழியில் வந்தவனும் சாளுக்கிய அரசனாக ஆண்டு கொண்டிருந்தவனுமான இரண்டாம் இராசேந்திரன் குலோத்துங்கன் என்ற பெயரில் சோழ அரியணையில் அமர்ந்தான். அவனுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் நாடு முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களிடையிலும் மோதல்கள் நடந்ததற்கு தடயங்கள் உள்ளன. எதிர்த்தவர் ஒடுக்கப்பட்டனர்; பக்கஞ்சார்ந்து காட்டிக்கொடுத்தவர் பயன் பெற்றனர். அதுவரை அங்கொன்றும் இங்கொன்றுமாக இது நடந்தாலும் அன்றிலிருந்து நாட்டைக் காட்டிக்கொடுப்பதே ஆதாயம் என்ற மனப்பான்மை மேல்மட்டத் தமிழர்களிடம் ஆழ வேரூன்றிவிட்டது. தமிழகத்தைக் கைப்பற்ற நினைப்போர் இதைத் தெரிந்து எளிதில் இங்கு காலூன்றிவிட முடிகிறது.

விருதுகள் என்பவை சில அடிப்படை உரிமைகளுடன் சிறப்புரிமைகளும் கொண்ட ஒரு கலப்பாகும் (பட்டங்கள் வழங்குவதையும் விருதுகள் என்ற பெயரில் குறிப்பிடுவதுண்டு). தெருவில் செருப்பணிந்து செல்வது, வெற்றிலைப் பெட்டி வைத்துக்கொள்வது, பல்லக்கில் செல்வது, வாள் வைத்துக்கொள்வது, குடைபிடிப்பது போன்ற அடிப்படை உரிமைகளுடன் பகலில் விளக்கேந்திச் செல்வது, நடைபாவாடை மேல் பாவாடை விரிப்பது, முன்னும் பின்னும் சதிராடுதல், முன் சங்கு, பின் சங்கு ஒற்றைச் சங்கு, இரட்டைச்சங்கு ஊதுதல் போன்ற சிறப்புரிமைகளுமாக மொத்தம் 72 விருதுகளை நம் பண்டை அரசர்கள் மக்களுக்கு வழங்கிவந்தனர்.[3] இவற்றுள் அடிப்படை உரிமைகள் சிலவற்றை அடித்தள மக்களில் ஒரு பிரிவினருக்கு மறுப்பதன் மூலம் அவர்களையொத்த பிற பிரிவினருடன் இடைவிடாத கொலைவெறி மோதல்களை உருவாக்கிவிட்டுத் தாங்கள் நடுநிலை தாங்குவோர் போல் காட்டித் தங்கள் மேலாளுமையை உறுதிப்படுத்தியதோடு சிறப்புரிமைகளைத் தமக்கும் தம்மைச் சார்ந்தோருக்கும் வைத்துக்கொண்டனர். முகம்மதியர் படையெடுப்புகளின்போது தங்கள் பெருநில உடமைகளைக் காப்பதற்காக மதம் மாறி அந்தந்த வட்டார மக்கள் மீது ஆளுமை செலுத்திய சிவனிய வேளாளராயினும் சரி (இவர்கள் பெரும்பாலும் மாட்டிறைச்சி உண்பதில்லை) நாயக்கர் காலத்தில் நாடுகள் என்ற ஆட்சியியல் நிலப்பிரிவுகளையும் அவற்றுள் ஆள்வினை புரிந்த நாடான்கள் என்ற பதவிகளையும் ஒழித்து பாளையங்களை உருவாக்கிய அரியநாத முதலியாராயினும் சரி அவருக்குத் துணையாய் நின்று நாடுகளாகிய தங்கள் உடமைகளைக் காத்துக் கொண்ட மறவர் பாளையக்காரர்களாகிய முன்னாள் நாடான்களாயினும் சரி, நாயக்கர் ஆட்சிக் காலத்தில் அவர்கள் அமைத்துத் தந்த முதன் முதல் முல்லை நிலத்தில் அமைந்த பெருமாள் கோயில்களைச் [4] சுற்றியுள்ள நிலங்களைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்குப் பணிபுரிந்த ஆயர்களாயினும் சரி (இந்த ஊர்கள் இன்றும் கிருட்டிணாபுரம், முத்துக்கிருட்டிணாபுரம், கிருட்டிணன்கோயில் போன்ற பெயர்களுடன் விளங்குகின்றன) வெள்ளையர் வந்தபோது அவர்களுக்கு மொழிபெயர்ப்பாளர்களாகவும் தரகர்களாகவும் செயல்பட்டு வாணிகர்களாக வந்தவர்களுக்கு நாடுபிடிக்கும் அவாவை மூட்டி உளவும் சொன்ன அனந்தரங்கம் பிள்ளை (ஆயர்) பச்சையப்ப முதலியார் போன்ற பார்ப்பனரல்லா மேல் சாதியினராயினும் சரி, பின்னர் கோயில் தேவரடியாரைப் பயன்படுத்தி அவர்களது இடத்தைப் பிடித்துக்கொண்ட பார்ப்பனராயினும் சரி, இன்று நம் நாட்டு மக்கள் மீது தம் சாதிய ஒடுக்குமுறையைத் தக்கவைத்துக்கொள்ளவும் இயன்ற வழியிலெல்லாம் பொருள் சேர்க்கவும் சேர்த்த பொருளைப் பாதுகாக்கவும் எந்த வரைமுறையும் இன்றி மேடைபோட்டு காலில் விழுந்து புகைப்படம் எடுத்துப் பெருமைப்பட்டுக்கொள்ளும் “வீரம் செறிந்த” மரபினராயினும் சரி , திரை நடிகர்கள் போடும் எச்சிற்காசுக்கு அவர்களுக்குக் கொடிபிடித்து கட்சியமைத்து அரியணை நோக்கி அழைத்தச் செல்லத் துடிக்கும் இந்தத் தலைமுறை இளையோராயினும் சரி, நாட்டைக் காட்டிக் கொடுப்பது தமிழ் நாட்டு “மேல் தட்டை” நோக்கிப் போவோரின் இயல்பாகிப் போய்விட்டது. தாங்கள் நாட்டை ஆண்ட சாதி என்று சாதி வரலாற்றாசிரியர்கள்” காட்டும் சான்றுகளை ஆய்ந்தால் அவற்றுள் மிகப் பெரும்பாலானவை தம் நாட்டை எதிரிகளுக்குக் காட்டிக்கொடுத்தமைக்காக வழங்கப்பட்ட நல்கைகளும் பட்டயங்களுமாகவே (விருதுகளுமாகவே) இருப்பதைக் காணலாம். மொத்தத்தில் இன்றைய நிலையில் மேல் சாதியினரும் கீழ்ச்சாதிகளில் மேல்நிலையிலிருப்போர், குறிப்பாக மரபுரிமையாக பெருநிலவுடைமை கொண்டிருப்போரும் என்றோ ஒருநாள் தம் சொந்த நாட்டைப் பகைவர்களுக்குக் காட்டிக்கொடுத்தோரின் வழியினராக இருப்பதைக் காணலாம்.

நம் மக்களின் இந்தப் போக்குக்கு ஆழமான பண்பாட்டுப் பின்னணி உண்டு. நாம் மிகப்பழமையான நாகரிகம் உள்ள மக்கள். மனிதனை மனிதன் சுரண்டுவதை மிகத் தொல்பழங்காலத்திலேயே நுட்பமான கலையாக்கியவர்கள். குபேரன் எனும் செல்வக் கடவுளுக்கு மனிதனையே ஊர்தியாக்கி சுரண்டலுக்குத் தெய்வப் படிமம் வகுத்தவர்கள். அதற்கும் அப்பால் சென்று உழைக்கும் மக்களையும் அவர்களோடு நின்று அவர்களை இயக்கும் விளைவிப்போரையும் குமுக மதிப்பில் தாழ்த்துவதற்கென்றே வயிற்றுப்பாட்டுக்கு பாடுபடுவது வினைகளைச் சேர்க்கும் என்றும் அதனால் அவ்வாறு செயல்படுவோர் இழிந்த பிறவியினரென்றும் “அவாவை அறுத்து” உழைப்பவனும் விளைப்பவனும் “கடமையாக”த் தருவனவற்றை வயிராற உண்டு “வீடு” தேடி வாளாவிருப்போரே மேன்மக்கள் என்றும் அவர்கள் பிறப்பறுத்து பேரான்மாவோடு இரண்டறக் கலக்கும் பேறுடையவர்களென்றும் கூறும் வினைமறுப்புக் கோட்பாடென்னும் மலட்டுக் கோட்பாட்டை உயர்த்திப் பிடிப்பவர்கள். இன்னொருபக்கம் பணி செய்வோருக்கும் பண்டம் படைப்போருக்கும் ஒழுக்க வரையறை கிடையாது என்னும் பொருளில்,

“அடியவர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்,
கடிவரை யில ………”

என்று அகத்திணை இலக்கணமும் வகுத்து வைத்துள்ளோம். இவற்றின் வெளிப்பாடு தான் ஆசிரியர்கள் பிஞ்சியிலேயே பிள்ளைகளின் நெஞ்சில் நஞ்சாக “மாடு மேய்க்கத்தான் போகவேண்டும்”, “சுமை தூக்கத்தான் போகவேண்டும்”, “சிரைக்கத்தான் போகவேண்டு”மென்று, உழைப்பு, தொழில் ஆகியவை மீது வெறுப்பையும், கசப்பையும் ஊட்டுவது. இந்த நஞ்சூட்டுதலை ஊடகங்கள் இன்னும் நன்றாகவே செய்கின்றன. இந்தப் பின்னணியில் அவாவறுத்தல் என்ற நச்சுக் கோட்பாட்டோடு உருவாகிய புத்தமும் சமணமும் ஆட்சியாளர் பூசாரியர் கூட்டணியை எதிர்ப்பதென்ற பெயரில் உழைப்பு, விளைப்பு அகியவற்றோடு தொடர்புடைய பங்கீட்டுப் பணியைச் செய்யும் வாணிகரிடமும் அதனைப் புகுத்தி அவர்களை உழைப்போர், விளைப்போரிடமிருந்து முற்றிலும் அயற்படுத்தி வைத்துள்ளன. முகம்மதியமும், கிறித்துவமும் உழைப்போரைத் தாழ்த்தி வைத்திருந்தாலும் விளைப்போரையும் வாணிகர்களையும் மதித்தன. இந்நிலையில் விளைப்பு வாணிக வகுப்புகளுக்கு மதிப்பளித்த ஆங்கிலர் ஆட்சி அகன்றதும் பாட்டாளியக் கோட்பாடு என்ற பெயரில் ஒட்டுண்ணி வாழ்க்கையினரான அரசூழியர்களும் ஆசிரியர்களும் - அதிகாரிகளும் மேலேறி அமர்ந்து விளைப்புச் செயல்முறையில் தவிர்க்க இயலாமல் சேர்ந்தியங்க வேண்டிய உழைப்பாளரையும் விளைவிப்போரையும் இணக்கம் காணா எதிரிகளாக்கி நம் விளைப்பு செயல்முறையையே முடக்கிவிட்டனர்.

இது போன்ற ஒட்டுண்ணி வாய்ப்பைத் தங்களுக்கு மட்டும் வைத்துக்கொள்வதற்கு மேற்சாதியினர் கடந்த காலத்தில் சமற்கிருதத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். அவர்களில் பார்ப்பனர்களுக்கும் பிற மேற்சாதியினருக்கும், உள்ளுர்ப் பார்ப்பனருக்கும் அயலிலிருந்து வந்த பார்ப்பனருக்கும் மற்றும் பிறருக்கும் போட்டிகள் ஏற்பட்டபோது உள்நாட்டுக் கீழ்ச்சாதி மக்களையும் தமிழ் மொழியையும் இணைத்துத் துணையாக்கிக்கொண்டு வேலை முடிந்ததும் வீசியெறிந்து விட்டனர். இந்நிகழ்சிகளில் கீழ்ச்சாதிகளிலுள்ள சிலர் மேற்சாதிகளில் உட்பிரிவுகளாக ஏறி அமர்ந்து கொண்டனர். இவ்வாறு சிக்கலான பலகலப்பான ஒரு நிகழ்முறையில் தமிழ் தன் இருப்பைக் காப்பாற்றி வந்துள்ளது. அவ்வாறு தமிழ் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழ வாய்ப்பாய் அமைந்தது இந்த மேலடுக்குகளுடன் போதிய தொடர்பின்றி எழுத்தறிவும் இன்றி இருந்த கீழச்சாதி மக்களின் தமிழ் வழக்குகளே. இன்று அந்த இரும்புக் கோட்டையும் திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்களாலும் கல்வி என்ற பெயரில் வழங்கப்படும் இலக்கு தவறிய எழுத்தறிவாலும் தகர்ந்து போய்விட்டது. இப்போது தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் வேறுபாடு காண முடியாத ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. இன்றைய இந்த இருள் சூழ்ந்த நிலைமைக்குக் காரணம் உள்நாட்டு பண, இயற்கை, மனித வளங்களைப் பயன்படுத்தி உள்நாட்டு மக்களை தாங்கத் தக்க ஒரு பொருளியல் கோட்பாட்டையும் கட்டமைப்பையும் உருவாக்க இயலாத குமுகமும் பிழைப்பு தேடி நாட்டைவிட்டோடுவதும் அயலவருக்காகத் தாய் நாட்டினுள் அடிமை செய்வதும் இழுக்கென்றும் அழிவென்றும் உணராத, உணர்த்தாத “தமிழப் பற்றாளர்களும்” தாம் ஆட்சியிலிருக்கும் போது தமிழை அழிக்கும் சட்டங்களை இயற்றிவிட்டு இன்று செம்மொழிக்கும் தில்லியில் ஆட்சி மொழி உரிமைக்கும் போராடுவதாக பசப்புவோரை தமிழ்க் காவலர், தமிழினக் காவலர் என்று புகழ்வதும் செம்மொழி ஆகவேண்டுமானால் செத்தமொழி ஆகவேண்டுமென்று அப்போது ஆட்சியிலிருந்த நடுவண் அமைச்சர் கூறியதை மெய்ப்பிக்கும் நடவடிக்கைகளேயாகும்.

நல்வாழ்வு வாழவேண்டுமாயின் நாட்டைவிட்டுச்செல்ல வேண்டும் அல்லது உள்நாட்டிலேயே வெளிநாட்டினருக்கு அடிமை செய்யவேண்டும் என்றிருக்கும் நிலையை மாற்றாமல், அதற்கு நூற்றுக்கு ஒருவருக்கும் குறைவாக இருக்கும் வாய்ப்புக்காக நூறு பேரும் ஆங்கிலமும் இந்தியும் கற்கும் நிலையை, அதற்கான அரசியல், பொருளியல், குமுகியல், பண்பாட்டியல் சூழ்நிலைகளை கண்டுகொள்ளாமல், தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும், கல்விமொழியாக வேண்டும், வழிபாட்டுமொழியாக வேண்டும் செம்மொழியாக வேண்டும் என்று குரல் எழுப்புவது உலகப் பல்கலைக் கழகங்களில் வாய்ப்புள்ளவையாக அவர்கள் கூறும் ஆய்வு இருக்கைகளில் பணியாற்றத் துடிப்போருக்கன்றி தமிழுக்கோ தமிழ் மக்களுக்கோ எவ்வாறு உதவும்? அவர்கள் அங்கு சென்று நிகழ்த்தும் ஆய்வுகள் கூட தமிழிலிருக்குமா? அந்த ஆய்வுகள் தமிழை வளப்படுத்துமா அல்லது அவ்வாய்வுகள் நிகழ்த்தப்படும் மொழிகளை வளப்படுத்துமா?

இன்று மக்களிடையில் எழுத்தறிவு பரவப் பரவ தமிழ் அவர்களிடமிருந்து அகன்று கொண்டிருக்கிறது. ஆங்கிலத்தில் பேச இயலாவிடினும் ஓரளவு புரிந்து கொள்ளும் சூழல் பெரும்பான்மையரிடத்து உருவாகிக்கொண்டிருக்கிறது. எனவே மேல்மட்டத்தினரிடையில் இந்தி பேசுவோரின் எண்ணிக்கை விரிவடைந்து கொண்டிருக்கிறது. அயல்நாடுகளிலிருந்தும் இந்திய அரசிடமிருந்தும் பணம் பெற்றுத் “தொண்டாற்று”வோராகக் கருதப்படும் அரசு சாரா நிறுவனங்களிலுள்ளோர் இன்று தமக்குள் இந்தி பேசுவோராக மாறிக்கொண்டுள்ளனர். ஆங்கிலத்தில் கூட, பொதுவாகப் புரியாத, அவர்களுக்கென்று உருவாகிக்கொண்டிருக்கும் ஒரு குழுஉக்குறிப் பிரிவு உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்தி என்று இன்று கற்பிக்கப்படும் மொழி கூட இந்தி மண்டலத்தில் வழங்கும் 18 கிளை மொழிகள் எதனொடும் நெருங்கியதல்ல, செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு புது மொழி. ஒருவேளை இன்றைய ஆங்கிலமோ, இந்தியோ ஆட்சிமொழியாகி நாளடைவில் அதே வடிவில் அல்லது தமிழுடன் கலந்து ஒரு புது மொழி உருவாகி அது புழக்கத்திற்கு வந்து தமிழ் வழக்கொழிந்து போனால் அதே மொழி மக்களுக்குப் புரியாது என்ற தகுதியில் ஆட்சிமொழியாகிவிடக் கூடும். இது தான் மக்களுக்கும் ஆட்சியாளருக்கும் மொழிக்கும் உள்ள தொடர்பு. முழுமையான மக்களாட்சி மலர்ந்து எந்த மறையமும் இன்றி ஆட்சி நடவடிக்கைகள் அனைத்தும் வெளிப்படையாக நடைபெறும் போது தான் இந்த முரண்பாடு அகலும்.

(தொடரும்)

அடிக்குறிப்பு:

[1]முன்னாள் திருவிதாங்கூரான இந்நாள் குமரி மாவட்டத்தில் மூத்தோர் பலரின் பெயர்கள் Nadarajan, Kangadharan என்றவாறு எழுதப்படுகின்றன. இப்பகுதியில் வழங்கிய தெக்கன் மலையாளம் மொழிவழக்கு இன்றைய மலையாளத்திலிருந்து மாறுபட்டதாகும். திரிவிக்கிரமன் தம்பி என்பார் பதிப்பித்த பறப்பேடி மண்ணாப்பேடி என்ற நூலில் கணபதி (Kanabathi) என்ற சொல்லுக்கு ------ (Ganapathi) என்று அடிக்குறிப்பு தரப்பட்டுள்ளது. Kanabathi என்பது பழந்தமிழ் மரபைத் தழுவியதாகும்.

[2]மலைவாழ் மக்களாகிய கள்ளர்களையும் முல்லைநில மக்களையும் கொண்ட கலவையே களப்பிரர் - கள்ளர்பிறர் என்பது எமது கருத்து. சமற்கிருதத்தை வைத்து அவர்களை அயலவர் என்று கருதுவது தவறு. கழகக் காலம் தொடங்கி சிலம்பு, மேகலைக் காலங்கள் ஊடாக சமணத் துறவிகள் வடிவில் மலைக் குகைகளில் தங்கி ஊடுருவிய அயலவர் ஒருங்கினைந்தவர்கள் இவர்கள். உள்நாட்டு அட்சியாளர்கள் மூலமாக இன்றுபோல் நாட்டைச் சுரண்டிய இந்த புத்த - சமணர்களை எதிர்த்தே சிவனியமும் மாலியமும் இங்கு மறுமலர்ச்சி பெற்றன. இன்றும் பொருளியல் வளம் பெற்று வரும் "கீழ்ச்சாதி”யினரை பார்ப்பனியம் என்னும் வெள்ளாளக்கட்டினுள் இழுத்து வைக்கும் “இந்து” இயக்கங்களின் பின்னணியில் சமணர்களாகிய மார்வாரிகள் இருப்பதைக் காண்க.

[3]இவற்றுள் சில இன்றைய ஓட்டுநர் உரிமம். துமுக்கி உரிமம் போன்றிருந்தாலும் இப்போது போல் உரிய திறமைகளையும் தேவைகளையும் மெய்பித்தால் மட்டும் போதாது. ஆட்சியளர்களுக்கு வேண்டியவர்களாகவும் இருக்க வேண்டும்.

[4]நம் நாட்டிலுள்ள பழைய திருமால் கோயில்களில் எதுவும் நம் மரபுப்படி மாயோனின் நிலமாகிய முல்லை நிலத்தில் இல்லை. அனைத்துமே வளமான ஆற்றின் கரைகளிலுள்ள செழிப்பான நிலங்களின் நடுவிலேயே அமைந்துள்ளன. பன்னீராழ்வார்களில் எவரும் ஆயர்குலத்தைச் சார்ந்தவர்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. களப்பிரர் காலத்திலிருந்து நிகழ்ந்த சிவனிய மாலிய எழுச்சிகள் இந்த வளமான நிலங்கள் அனைத்தையும் கோயில்கள் வழியாக ஆட்சியாளர் - பூசாரியர் கூட்டணியின் கைபிடிக்குள் கொண்டு வரவே பயன்பட்டன.

0 மறுமொழிகள்: