6.5.07

குமரி மாவட்டக் கலவரம் - ஒரு பகுப்பாய்வு (1)

முன்னுரை

சாதிக் கலவரங்களும் மதக் கலவரங்களும் இந்தியாவுக்குப் புதியனவல்ல, அன்றாட நிகழ்ச்சிகள்; காற்றும் நீரும் போன்று இயல்பானவை. தமிழகத்தைப் பொறுத்தவரையில் சாதிக் கலவரங்கள் அடிக்கடி நிகழ்பவை. முதுகுளத்தூர் சாதிக் கலவரம் அண்மைக் காலங்களில் நிகழ்ந்தவற்றுள் மிகப் பெரியது. இத்தகைய சாதிக் கலவரங்கள் அடிக்கடி நடைபெற்றுக் கொண்டுதானிருக்கின்றன. மதக் கலவரங்கள் தமிழகத்தில் குறைவென்றே சொல்ல வேண்டும்.

இந்த வகையில் குமரி மாவட்டத்தில் 1982 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் நடைபெற்ற கலவரம் மதக் கலவரம் என்ற பெயரைப் பெற்றது. உண்மையில் அதில் ஒரளவு மத வடிவம் இருந்ததென்றாலும் சாதியும் மதமும் மயங்கிய நிலையிலேயே அக்கலவரம் நடைபெற்றது. இதைக் குமரி மாவட்டத்திலுள்ள மக்களின் வரலாற்று அடிப்படையிலிருந்து வெளிப்படுத்த முயன்றிருக்கிறேன். பல்வேறு சாதிகளின் வகுப்புத் தன்மை, அவற்றின் இடைவினைப்பாடுகளால் மக்களிடையில் நிகழ்ந்த உறவு மாற்றங்கள், உள்முரண்பாடுகளைப் பயன்படுத்தி புறமுரண்பாடுகள் மக்கள் நடுவில் ஏற்படுத்திய பிளவுகள் ஆகியவற்றை அணுகி இக்கலவரத்தில் உண்மையில் சாதிப் பூசலே மேலோங்கியுள்ளது என்ற முடிவுக்கு வந்துள்ளேன்.

இக்கட்டுரை இச்சிக்கலை நாடார்களை நடுப்படுத்தி அணுகுகிறது. குமரி மாவட்ட மக்கட்தொகையில் நாடார்களின் தொகை மொத்தத்தில் 65 நூற்று மேனியாகும். அவர்கள் ஏறக்குறைய சம அளவில் இந்துக்களாகவும் கிறித்துவர்களாகவும் உள்ளனர். இந்த வகையில் அவர்களை நடுப்படுத்துவது தேவையாகிறது.

குமரி மாவட்ட நாடார்கள் ஏறக்குறைய பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் கடுமையான தீண்டாமைக் கொடுமைகளுக்கு ஆளாகி பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இடைவிடாத போராட்டத்தின் விளைவாக இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் முழு உரிமை பெற்றனர். கிறித்துவர்களாக மாறியோருக்குக்குக் கிடைத்த வெளி உதவி இந்துக்களுக்குக் கிடைக்கவில்லை. சொந்த உழைப்பால் முன்னேறி வெற்றி கண்டவர்கள் அவர்கள். மத மாற்றம் நிகழ்ந்த பின்னர் மதம் மாறியவர்களுக்கும் மாறாதவர்களுக்கும் இடையில் தோன்றிய முரண்பாடுகள், கூட்டணிகள், மதம் மாறாதவர்களுக்குள் நிலவிய உள் முரண்பாடுகள், இன்று இம்முரண்பாடுகள் முற்றிப் புற முரண்பாடுகளோடு அக முரண்பாடுகள் ஒன்றிய தன்மை ஆகியவற்றை ஆய்ந்து முடிவுகள் பெற்று அவ்வாறு பெறப்பட்ட முடிவுகளைப் பிற பகுதி மக்களின் இயக்கங்களில் கையாண்டு பார்த்து அவற்றையும் புரிந்து கொள்ள உதவும் என்ற வகையிலும் நாடார்களை நடுப்படுத்தி எழுதியுள்ளேன்.

நாடார்கள் தங்கள் போராட்டத்தின் இரண்டாம் கட்டத்திலிருக்கிறார்கள். அதாவது அடிமைத்தளையை உடைத்தெறிந்த முதல் கட்டத்தைத் தாண்டி இன்று அடிமைப்படுத்தியவர்களை மிஞ்சும் கட்டத்தினுள் நுழைந்திருக்கின்றனர். அதே வேளையில் மீனவர்கள் முதல் கட்டம் எனும் நிலைக்கு வந்துள்ளனர். மீனவர்கள் நாடார்களைப் போல் சட்டத்தின் துணை கொண்டு ஒடுக்கப்படவில்லையாயினும் வறுமை, அறியாமை எனும் தளைகளில் பெருமளவு சிக்கிக் கிடக்கின்றனர். இவ்வாறு நாடார்கள் இருவகைத் தாக்குதல்களுக்கு உள்ளாயினர். மீனவர்கள் முதல் கட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளனர். இனி இவ்விரு சாரரும் ஒன்றுபட்டு வாழ வேண்டிய தேவையும் அதற்குரிய சூழலும் அமைந்துள்ளன என்று கருத இடமுள்ளது. அதற்கு தன்னுணர்வுடைய வினைப்பாடும் தேவை.

கட்டுரையில் ஆங்காங்கு தமிழக வரலாற்றுடன் குமரி மாவட்ட மக்கள் வரலாற்றின் ஒப்புமை கூறிச் செல்கிறேன். தமிழகத்தின் அண்மைக் கடந்த கால வரலாற்றுடன் குமரி மாவட்ட வரலாற்றுக்குள்ள தொடர்பையும் எதிர்காலத் திசைநோக்கு எவ்வாறு இருக்க வேண்டுமென்றும் கூற முயன்றிருக்கிறேன்.

கட்டுரையில் மேற்கொண்டுள்ள அணுகுமுறை பற்றிய திறனாய்வை அறிஞர் பெருமக்களிடம் வேண்டுகிறேன்.


அறிமுகம்

1982 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 12 ஆம் நாள் நடந்த ஒரு நிகழ்ச்சி பலருக்கு வியப்பை அளித்தது. குமரி மாவட்டத்தில் நடைபெற்ற ''மதக் கலவரம்'' தான் அது. இதில் வியப்படைய என்ன இருக்கிறது? சாதிக் காலவரங்களும் சமயக் கலவரங்களும் இந்தியாவின் அன்றாட நிகழ்ச்சிகள் தாமே என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றும். இருந்தாலும் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடி கற்றவர்களை அதிக விகிதத்தில் கொண்ட மாவட்டம், தமிழகத்தின் எந்த மூலையிலுமிருக்கும் எந்த ஒர் அலுவலகத்திலும் ஒர் உறுப்பினர் மூலமாவது பங்கேற்கும் மாவட்டம் என்ற புகழ் படைத்த குமரி மாவட்டத்தில் மதக் கலவரம் என்று அறிந்தவுடன் பலர் வியப்படைந்தது உண்மையும் இயல்பும் கூட.

இந்தக் கலவரம் எப்படி வெடித்தது? திடீரென்று தோன்றியதா? அல்லது நாட்பட இருந்த பகைமைகள் முற்றி வெடித்ததா? உண்மையில் இது மதப் பூசலா அல்லது சாதிப் பூசலா? இது தானாகவே மூண்டதா அல்லது யாராவது மூட்டிவிட்டார்களா? இதனுள்ளே ஏதாவது வெளிவிசைகள் செயற்பட்டுள்ளனவா? அப்படியாயின் அவற்றின் பங்கு என்ன? இந்தக் கலவரத்தின் வரலாற்று, குமுக, பொருளியல் மற்றும் அரசியல் பின்னணிகள் என்னென்ன என்ற கேள்விகளெல்லாம் எழுகின்றன. அவற்றுக்கு நாம் விடை காண முயல்கிறோம். இப்படி விடை காண முயலுகையில் தமிழகத்தின் குமுக அமைப்புக்கும் இந்நிகழ்ச்சிக்குமுள்ள தொடர்புகளையும் ஒப்புமைகளையும் எதிர்காலத் தமிழகத்தின் வரலாற்றில் இந்நிகழ்ச்சிக்குள்ள குறிதகவையும் நாம் ஆராய முயல்வோம்.


குமரி மாவட்ட அமைப்பு

குமரி மாவட்டம் தமிழகத்தின், இந்தியாவின் தென்கோடி மாவட்டம். இம்மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குப் புறத்தில் அமைந்துள்ளது. நெல்லை நாகர்கோயில் சாலையில் ஆரால்வாய்மொ‌ழி எனுமிடத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள ஒரு சந்தில்(கணவாயில்) குமரி மாவட்டத்தினுள் நாம் நுழைந்தால் நாகர்கோயில் - திருவனந்தபுரம் சாலையில் களியக்காவிளை எனும் இடத்தில் இம்மாவட்டத்தை விட்டுக் கேரள மாநிலத்தினுள் நாம் வெளிறேயலாம்.

இம்மாவட்டத்தில் மலையடிவாரத்தைத் தொடர்ந்து நன்செய் நிலங்கள் அமைந்துள்ளன. பெரும்பாலும் அதற்கப்பால் தான் முல்லை நில அமைப்பு தோன்றுகிறது. கடற்கரையை அடுத்த ஒரு சிறு கீற்றுப் போல மீண்டும் நன்செய் நிலங்கள் உள்ளன. முல்லை நிலப்பகுதியிலுள்ள பெரும் நிலப்பரப்புகளை பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, நெய்யாறு போன்ற நீர்த் தேக்கங்கள் வளங்கொழிக்கும் வயல்வெளியாக்கியுள்ளன. குமரி மாவட்டத்திலுள்ள பெரும்பாலான இடங்கள் கடற்கரையிலிருந்து 30கி.மீக்குள் அடங்கியுள்ளன. எனவே இம்மாவட்ட மக்களுக்குத் தாராளமாகக் கடல் மீன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக மீன் அரிதான பகுதிகளில் வாழ நேர்ந்தால் இம்மாவட்டத்தினர் தவித்துப் போவதைப் பலர் பார்த்திருக்கலாம்.

(தொடரும்)

0 மறுமொழிகள்: