13.5.07

பழைய பாண்டம் - புதிய பண்டம் (2)

“கோண்ட்வானாக் கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்த இந்தியத் துணைக்கண்டம் வடக்கு நோக்கி நகர்ந்து வடக்கிலிருந்த லாரோசியா என்ற பெருங்கண்டத்தை நெருங்க, அப்பகுதியில் இருந்த டெதிசு எனும் ஆதிக்கடல் பரப்பு சிறுத்து, இடைப்பட்ட படிவங்கள் இமயமலை எனும் மடிப்பு மலையாக உயர்ந்தன. இதில் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய விவரம். இது நடந்தது சுமார் 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன். அதற்கும் 130 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னரே மனித இனம் தோன்றியது”. (அழுத்தம் செயகரனுடையது பார்க்க, அதே நூல் பக்: 59.)

இந்தக் கூற்றிலிருந்து பல உண்மைகளைப் பெற முடியும்:

(1) மனிதர்கள் தோன்றி (135-130) = 5 மில்லியன், அதாவது ஐம்பது இலக்கம் ஆண்டுகள் ஆயின என்பது. ஆனால் சிக்கல் என்னவென்றால் இந்த ஆசிரியர் இதே நூலில் மனிதன் தோன்றிய காலமாக ஐந்து இடங்களில் 5 வெவ்வேறு காலங்களைக் கூறுகிறார். அவற்றுள் 17-ஆம் பக்கத்தில் “ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன், ஆதிமனிதர் தோன்றிய பின்னர் கண்டங்கள் சில மீற்றர்கள் மட்டுமே நகர்ந்துள்ளன”. (தன்னினைவில்லாதவர் போன்று எழுதும் இவர் போன்றோரது படைப்புகளை ஆகா ஓகோவென்று புகழும் தமிழகத்து மதிப்புரையாளர்களை நினைக்கும்போது இன்றைய கல்வி முறை சிந்தனை என்ற புலனை எவ்வளவு அழிந்து விட்டது என்னும் திடுக்கிட வைக்கும் உண்மை புரிகிறது.)

(2) டெதிசு கடல் மறைந்து 135 மில்லியன் ஆண்டுகள் ஆயிற்று என்றால் அதற்கும் முன்பு டெதிசு கடலைக் காட்டும் வரைபடத்தை மனிதர்கள் வரைந்துள்ளனர் என்றால் மனிதன் புவிமேல் அதற்கும் பல மில்லியன் ஆண்டுகளுக்கும் அதாவது 14 அல்லது 15 கோடி ஆண்டுகளுக்கும் முன்பே தோன்றிவிட்டான் என்பது புலனாகிறது.

(3) காட் எலியட் என்பவர் லெமூரிய மனித இனம் 13.5 முதல் 22.5 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள் என்றும் அவர்களிலிருந்து இருபடிகள் முன்னேறிய இனமே ஆரிய இனம் என்று கூறுவதாகவும் திரு.சு.கி. செயகரன் கூறுகிறார். அப்போது டினோசர்கள் லெமூரியாவில் வாழ்ந்தன என்று காட் எலியட் கூறுவதாகக் கூறுகிறார். ஆரிய இனத்தை உயர்த்துவதற்காக உருவானதே லெமூரியாக் கோட்பாடு என்று இதை வைத்து சு.கி.செயகரன் கூறுகிறார். ஆனால் உண்மை அதுவல்ல. எர்ணசுட்டு எக்கல் என்பார் உருவாக்கியது லெமூரியக் கோட்பாடு. மனிதன் தோன்றி வளர்ந்த நிலம் லெமூரியா என்பதோடு அவரது வேலை முடிந்தது. இதன் மூலம் ஐரோப்பா அல்லாத ஒரு மண்ணில் மனிதன் தோன்றி வளர்ந்ததாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதற்காக அதில் “உள்ளுணர்வால் உணர்ந்த செய்திகளை”ப் புகுத்தியவர் இறைநெறி (பிரம்மஞான)க் கழகத்தினர். இந்தியாவினுள் “ஆரிய” வேதங்களின் ஆட்சியை அழிக்கிறார்கள் ஆங்கிலேயர்கள் என்று பரப்பி இந்திய விடுதலைப் போராட்டத்தில் பார்ப்பனர்களிடையில் ஊடுருவத் திட்டமிட்ட அமெரிக்க முயற்சி தான் இறைநெறிக் கழகம். அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு மும்பையில் காலூன்ற முயன்ற அதனை அங்கு எவரும் ஏறெடுத்தும் பார்க்காததால் சென்னையில் காலூன்றிய அதனுள் உலகிலுள்ள “ஆரிய இன” வெறியர்களும் சாதி வெறியர்களும் புகுந்து கொண்டனர். இந்தியாவில் இறைநெறிக் கழகத்திலிருந்து அமெரிக்கப் பிடியை விலக்க அன்னிபெசன்றைக் கருவாக்கிய பிரிட்டனின் தந்திரம் குறிப்பிடத்தக்கது.

நமக்கு வேண்டியது டெத்திசுக் கடல் மறைந்த 13.5 கோடி ஆண்டுக்கும் லெமூரியாவில் மனிதர்கள் தோன்றியதாக காட் எலியட் கூறிய 13.5 - 22.5 கோடி ஆண்டுக்கும் தற்செயலாகவோ, ஏதோ ஏற்பட்ட இணைவை எண்ணிப் பார்க்கத் தோன்றுவது தான். இடைப்பிறவரலாக ஒன்றைக் கேட்கிறேன். கடாரம் (சுமத்திரா) மீது படையெடுத்த இராசேந்திரன் பிடித்த நாடுகளில் “இலாமுரிதேசம்” என்ற ஒன்று இருந்ததாக அவனது மெய்கீர்த்தி கூறுகிறது. அந்த வட்டாரத்தில் அத்தகைய பெயருள்ள பகுதி எது என்று அப்பகுதிவாழ் தமிழர்கள் கூற முடியுமா? லெமூரியா என்ற பெயர் நாம் பொதுவாகக் கருதுவது போல் லெமூர் எனும் குரங்குகளிலிருந்து வந்ததா அல்லது வேறு காரணங்கள் உண்டா என்பது இதிலிருந்து ஒரு வேளை புலப்படலாம்.

இந்தோனேசியத் தீவுக் கூட்டங்களில் சுமத்ரா (சு + மதுரா) = நன்மதுரை அல்லது மூலமதுரை, போர்னியோ, புரூனெய் (பொருனை) போன்ற பகுதிகள் உள்ளன.

இனி தமிழர்கள் மட்டுமல்ல, இந்தியர்கள், உலக மக்களின் வரலாற்றையும் குழப்புவது மாக்சுமுல்லர் வகுத்துத் தந்த “ஆரிய இன”க் கோட்பாடு. அறிவொளிக் காலம் எனப்படும் 16 ஆம் நூற்றாண்டு தொடங்கிய ஐரோப்பியரின் உலக வலம் அவர்களுக்குப் பல்வேறு மொழிகளை அறிய வைத்தது. அவற்றுள் முதலில் அவர்கள் அறிந்த சமற்கிருத்ததுக்கும் கிரேக்க, இலத்தீன் மொழிகளுக்கும் இருந்த சில தொடர்புகளை வைத்து “ஆரியர்” என்ற இனத்தை செருமானியரான மாக்சுமுல்லர் உருவாக்கி அவர்களுக்கு செருமானியரின் உடல் தோற்றத்தையே சொந்தமாகக் காட்டினார். ஏறக்குறைய அதே காலகட்டத்தில் வாழ்ந்த கால்டுவெல் ஐயரும் நண்ணில (மத்திய தரை)க் கடல் பகுதி உட்படட 6 பகுதிகளிலிருந்து “திராவிட இனத்தவர்” இந்தியாவில் குடியேறியதாக தன் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலில் எழுதினார். இருவருக்கும் அறிஞர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வந்தது. மாக்சுமுல்லர் தான் எழுதிய Biography of words என்ற நூலில் தான் ஒன்றோடொன்று உறவுடைய மொழிகளைப் பேசும் மக்கள் இருந்ததாகத் தான் சொன்னதாகவும் அதனடிப்படையில் மனித இனங்களைக் கற்பிப்பது “பாவம்” என்றும் கூறி அதை மறுத்தார். அதே போல் 1875 இல் கால்டுவெல் வெளியிட்ட இரண்டாம் பதிப்பில் பிற்சேர்க்கையாக மனித இனங்களைப் பற்றிய விரிவான விளக்கங்களுடன் உடலின் நிறம், முகத்தோற்றம், மயிரமைப்பு முதலியவை வாழும் சூழல், உணவு ஆகியவற்றால் எளிதில் மாற்றமடைந்து விடுவதாகவும் மண்டையோட்டு நீள அகல விகிதம் தான் இன அடையாளமென்றும் அந்த வகையில் திராவிட ஆரிய மக்கள் எனப்படுவோரிடையில் வேறுபாடு இல்லையென்றும் எழுதினார். மாக்சுமுல்லர் கூறியதை எவரும் கண்டுகொள்ளவில்லை. ஐரோப்பாவில் செருமனி-பிரிட்டன் ஆதிக்க அரசியலுக்கும் இந்தியாவில் பார்ப்பன-வெள்ளாள ஆதிக்க அரசியலுக்கும் இவை தேவைப்பட்டன. கால்டுவெலாரின் நூலை மொழிபெயர்த்தவர்கள் அவரது பிற்சேர்க்கையைத் திட்டமிட்டு மறைந்துள்ளனர்.

முதலில் மனிதன் தோன்றிய நிலம் குமரிக் கண்டமே. அங்கிருந்து வெவ்வேறு காலகட்டங்களிலிருந்த மொழி, நாகரிக வளர்ச்சிகளுடன் உலகின் வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்றவர்கள் ஆங்காங்கு தமக்குரிய வளர்ச்சியை அடைந்தோ அல்லது தேங்கியோ நிற்கின்றனர். அதுபோன்றே குமரிக் கண்டத்தில் தோன்றிய மொழியே மேலே கூறிய மாற்றங்களை ஆங்காங்குள்ள மக்களுடன் எய்தி நிற்கிறது. குமரிக் கண்டத்தில் தொழில்நுட்பம், ஆட்சி போன்றவை வளர்ச்சியடைந்த போது உருவான குழுஉக் குறி மொழி பூசகர்கள்-அரசர்கள் கூட்டணியால் திட்டமிட்டு வளர்த்தெடுக்கப்பட்டு படிப்படியாக வேதமொழியாகவும் சமற்கிருதமாகவும் உருவாகி நிற்கின்றன. உலகில் நாகரிக வளர்ச்சிடைந்த மக்களின் மொழிகளில் அடித்தளத்தில் தமிழின் சாயலையும் மேல் மட்டத்தில் சமற்கிருதத்தின் சாயலையும் காணலாம். ஆங்கிலச் செய்யுளும் தமிழின் உரைநடையும். எழுவாய்-பயனிலை-செயப்படுபொருள் வைப்பில் இணையானவை. அதுபோலவே தமிழின் செய்யுளும் ஆங்கிலத்தின் உரைநடையும். சொற்களைப் பொறுத்தவரை ஐரோப்பிய மொழிகளைப் பொறுத்தவரை அவை சமற்கிருதத்தை விடத் தமிழுக்கு மிக மிக நெருக்கமானவை. உலகமெலாம் எழுத்தறிவற்ற மக்களின் பேச்சுவழக்குகள் தமிழுக்கு மிக நெருக்கமானவை.

உலகில் அகழ்வாய்வுச் சான்று ஒன்று கூட இன்றி அனைத்து வரலாற்றுக் கோட்பாடுகளையும் விடச் செல்வாக்குடன் கேள்வி கேட்பாரின்றி நிற்பது “ஆரிய இனக் கோட்பாடு” ஒன்று தான். அந்தக் கோட்பாட்டைத் தூக்கிக் குப்பையில் வீசினால் தான் உண்மையான குமரிக் கண்ட, தமிழக, இந்திய, ஏன் உலக வரலாறு மட்டுமின்றி மனித வரலாறே வெளிச்சத்துக்கு வரும்.

பாவாணர் முதல் பல்வேறு தமிழ் ஆய்வர்களும் தமிழ் இலக்கியங்களை விட சமற்கிருத நூல்களிலிருந்து தான் குமரிக் கண்டம் பற்றிக் கூடுதலான செய்திகளைத் தர முடிகிறது. தென் அரைக் கோளத்தில் இருந்த “ரூட்டா” என்ற நிலப்பகுதி கடலினுள் முழுகிய போது அங்கிருந்த மக்கள் சீனத்துக்கும் மேற்கு நோக்கியும் பாரதத்துக்கும் குடிபெயர்ந்தனர் என்று கூறுகிறது இருக்கு வேதம். மச்ச புராணம், வாயு புராணம் ஆகியவை கடற்கோள் பற்றி விரிவாகப் பேசுகின்றன.

நாக நாட்டை 700 காவதம் கடல் கொள்ளும் என்பதறிந்த பூருவ தேசத்து அரசன் படகில் மாவும் மரமும் புள்ளும் ஏற்றி குசராத்துக் கரையில் அவந்தி நாட்டில் கரையேறி காயங்கரை ஆற்றை அடைந்தான் என்கிறது “பழம் பிறப்புணர்ந்த காதை” மணிமேகலையில். அவர்கள் சிந்துக் கரையில் பரவி மேற்கு நோக்கிப் பாரசீகத்தையும் கிழக்கு நோக்கிக் கங்கைச் சமவெளியையும் அடைந்தனர். காயங்கரை ஆறு மணலிணுள் மறைந்துபோக கங்கையும் தொழுனை(யமுனை)யும் இணையும் இடத்தில் கண்ணுக்குத் தெரியாமல் மணலினுள் வந்து கலக்கும் சரசுவதி ஆறு என்று அதனை இன்றும் வழிபடுகின்றனர்.

சமற்கிருத நூல்களிலிருந்து அபிதான சிந்தமணி, கதிரைவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதி ஆகியவை திரட்டித் தரும் செய்திகளின் படி இமயமலையும் விந்திய மலையும் நில நடுக்கோட்டின் தெற்கிலிருந்து தொடங்கி வடக்கு நோக்கி நீண்டுகிடந்த இரு மலைத் தொடர்கள்; அவற்றுக்கு இடையில் இருந்த நிலம் நடுநாடு (மத்தியப் பிரதேசம்) என்ற செய்திகள் தெரிகின்றன. சீவகசிந்தாமணியில் வருகின்ற சச்சந்தனின் நடுநாடு இதுவாகலாம். இந்தியாவில் இருக்கின்ற மலைகள், ஆறுகளின் பெயர்கள் அனைத்தும் முழுகிப்போன நிலத்திலிருந்த மலைகள், ஆறுகளின் பெயர்களே. இந்தியாவில் கேரளத்திலும், சேலத்திலும் குமரி மாவட்டத்திலும் பறளியாறுகள் ஓடுகின்றன. நெல்லை மாவட்டத்திலும் குமரி மாவட்டத்திலும் தாமிரபரணியாறுகள் ஓடுகின்றன.

துவரைக் கோமான் என்பவன் இடைக் கழகத்தவன். கார்க்கி கூறுவது தவறு. துவார் என்றால் கதவு. கபாடம் என்றாலும் கதவு. கபாடபுரம் தான் துவாரகை →துவரை. தெற்கே கடலினுள் அமிழ்ந்த நிலத்துக்குத் துவரையம்பதி என்ற பெயர் உண்டு என்ற மரபு குமரி மாவட்டத்தில் உருவான அகிலத் திரட்டு அம்மானை என்ற நூலில் பதிவாகியுள்ளது. அய்யா ஒளி என்ற இதழில் நான் எழுதியுள்ள “துவரையம்பதி” என்ற கட்டுரை பார்க்க. கபாடபுரம் அழிந்த பின் அங்கிருந்து குசராத்துக் கரையில் குடியேறியவர்கள் தங்கள் நகரத்துக்குத் துவாரகை என்று பெயரிட்டனர்.

மகாபாரதம், மதுரை (மாத்ரா = மா + துறை → மாதுறை → மதுரை)யில் ஆண்ட கண்ணனை சிசுபாலன் என்ற நாக அரசன் துரத்த அவன் துவாரகையில் குடியேறியதாகக் கூறுகிறது. இதைக் குமரிக் கண்டத்தில் நிகழ்ந்த மதுரை → கபாடபுரம் இடப்பெயர்ச்சியை நினைவுகூரும் கதைக் கருவாகக் கொள்ளலாம்.

மகாபாரதம் குமரிக் கண்டத்தில் நடந்த நிகழ்வின் தொன்ம வடிவம். பாம்பைத் தோற்றக்குறியாகக் கொண்ட நூற்றுவர்க்கும் அதாவது நாகர்களுக்கும் இயற்கையில் அதன் எதிரியாகிய பருந்தைக் குலக்குறியாகக் கொண்ட கண்ணணுக்கும் அதாவது யாதவர்களுக்கும் நடந்த போர். அதில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்கிறார் எரிக் வான் டெனிக்கன் (பார்க்க: Charists of Gods). காண்டவனத்தை (கோண்ட்வானா – காண்டவனம்; இன்று இந்தியாவில் கோண்டு எனும் மக்கள் வாழும் பகுதியின் பெயர். கோண்டுவானா நிலம் என்று கண்டப்பெயர்ச்சிக்கு முன் தென் அரைக் கோளத்தில் அனைத்து நிலப்பரப்பும் திரண்டிருந்த நிலைக்கு ஏன் புவியியங்கியலாளர் பெயர் கொடுத்தனர்?) எரித்து அழிக்கப் புறப்பட்ட கண்ணணும் அருச்சுனனும் பயன்படுத்திய படைக்கலன் (அம்பு?) ஏற்படுத்திய விளைவுகளை நாகசாகியில் அமெரிக்கா வீசிய அணுக்குண்டின் விளைவுகளோடு ஒப்பிட்டுக் காட்டுகிறார் அவர். அசுவத்தாமன் வீசிய ஓர் ஆயுதம் கருவிலிருந்த குழந்தைகள் அனைத்தையும் அழித்ததாம்.

நூற்றுவரும் சேரர்களின் முன்னோர் என்று பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதனை முரிஞ்சியூர் முடி நாகராயர் பாடிய பாடல் மூலம் தெரிய வருகிறது.

அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்

(புறம் 1:13-16)

இதன் பொருள் ஐவரைப் பகைத்து போர்க்களத்தில் இறந்த நூற்றுவர்க்கும் சேரலாதன் முன்னோர் கடன் ஆற்றினான் என்பதாகும்.

மகாபாரதம் கலுழன் சருக்கத்தில் பாம்புகளுக்கும் பருந்துகளுக்கும் உள்ள பகைமை கூறப்பட்டுள்ளது. காண்டவனத்தைக் கண்ணணும் அருச்சுனனும் தீவைத்ததே நாகங்களை (நாகர்களை)க் கொல்லத்தான்.

போர் முடிந்து அனைவரும் மடிந்து இறுதியில் கண்ணன் உயிரைக் கால் கட்டைவிரலில் தேக்கி அறிதுயிலில் இருந்த போது அசைந்த விரலைக் குருவி எனக் கருதி அம்பெய்து கண்ணனின் சாவுக்குக் காரணமான வேடனின் பெயர் சேரன். அதுவரை நாகமாக இருந்த சேரனின் கொடி இதிலிருந்து தான் வில்லாயிற்றோ?
முரிஞ்சியூர் முடி நாகராயர் ஓர் நாகர் என்பது அவர் பெயரிலிருந்து தெரிகிறது. அவர் இரண்டாம் கழகத்தில் துவரையை ஆண்ட கண்ணனின் பிற்காலத்தவராக இருக்க வேண்டும்.

குமரிக் கண்டத்திலிருந்து முதலில் வெளியேறியவர்கள் தொலைவான இடங்களுக்கே சென்றனர். ஆறுகளின் கரைகளில் பாலை நிலம் முடிந்து மருத நிலம் தோன்றும் மென்காடுகளையே நாடினர். தாம் சென்ற இடங்களில் இரும்பைக் கண்டுபிடித்து கோடரி செய்த பின்னரே அடர்காட்டுப் பகுதிகளை நாடினர். கங்கைச் சமவெளிக்கும் அவ்வாறே. வட இந்தியாவில் அவர்களுக்கு முன்பே குடியிருந்தவர்களோடு போரிட வேண்டியிருந்தது. அந்தப் போரைப் பாடும் முகத்தான் குமரிக் கண்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் சேர்த்துக் கொண்டனர். பாண்டியர்களின் நிலவு மரபு பாண்டவர்-கவுரவர்களுக்கும் சோழர்களின் கதிரவன் மரபு இராமனுக்கும் கூறப்பட்டுள்ளது. மேற்குக் கடற்கரையில் கோவா வரையுள்ள பகுதி மாவலி நாடு (மகாபலி நாடு) என்று சேரர்க்குரியதாகக் கூறப்படுகிறது.

தமிழகம் அடர்காட்டுப் பகுதியாக இருந்தது. எனவே இறுதியாகக் குமரிக் கண்டத்திலிருந்து வெளியேறிவர்கள் தாம் அங்கு குடியேறினர். பரசுராமன் கோடரி கொண்டு கடலில் வீசி சேரநாட்டை உருவாக்கினான் என்பது இதனைத் தான். சேரர், அவர்களைத் தெடர்ந்து சோழர், இறுதியில் பாண்டியர் குடியேறியதால் சேர, சோழ, பாண்டியர் என்ற வரிசை முறை வழங்குகிறது. நெல்லை மாவட்டத் தாமிரபரணியாற்றுக்குச் சோழனாறு என்ற பெயர் இருந்ததாக வி.கனகசபையார் தன் ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் நூலில் குறிப்பிடுகிறார். அதன் கரையில் தான் ஆதித்த நல்லூர் அகழ்வாய்வுக் களம் உள்ளது. ஆதித்தன் எனும் கதிரவன் குலத்தினர் சோழர்கள். அவர்களைத் துரத்திவிட்டுப் பாண்டியன் அமர்ந்தான்.

“மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வெளவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்
புலியொடு வில்நீக்கிப் புகழ்பொறித்த கிளர் கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தன்னவன்”.

என்று முல்லைக் கலிப்பாடல் (104 : 1-4) இதனைக் குறிப்பிடுகிறது.

சோழன் இந்திரனுடன் உறவு கொண்டவன். இது சிலப்பதிகாரத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்திரன் அவையில் ஆடல் மகளான ஊர்வசி எனும் மாதவியை இந்திரன் சோழ நாட்டுக்கு நாடுகடத்த அவள் வழிவந்த மாதவி தான் கோவலனின் காதலி என்கிறது சிலம்பு. இந்திரன் வாழ்ந்த நாடு தாய்லாந்து என்கிறார் பாவாணர். இந்தரனின் ஊர்தியாகிய வெள்ளையானை அங்கு தான் உள்ளது. அங்குள்ள ஒரு நகரின் பெயர் சம்பாபதி. புகார் நகரக் காவல் தெய்வமும் சம்பாபதியே - மணிமேகலை. சம்பா என்ற ஒரு வகை நெல்லைத் தாய்லாந்திலிருந்து சோழன் கொண்டு வந்திருக்கலாம். இன்று பள்ளர்கள் என்று அழைக்கப்படும் மருதர்கள் அங்கிருந்து சோழர்களுடன் வந்திருக்கலாம். இந்திரனை மருத்துக்கள் என்பவர்களோடு எப்போதுமே இணைத்துப் பேசுகின்றன மறைகளும் தொன்மங்களும்.

இந்திரனிடமிருந்து ஒருவகை நெல்லையும் ஒருவகைக் கரும்பையும் சேரன் பெற்றுவந்தான் என்று கழக இலக்கியம் கூறுகிறது.

இந்திரனுக்கும் பாண்டியனுக்கும் பகை இருந்ததையும் இந்திரனது மணிமுடியிலிருந்த வளையத்தை உடைத்து அவனது ஆரத்தைப் பிடுங்கிக் கழுத்தில் அணிந்து கொண்டான் பாண்டியன் என்கிறது சிலம்பு. மறைகளில் வரும் இந்திரனும் வருணனும் பொருளிலக்கணத்தில் மருத, நெய்தல் நிலத் தெய்வங்கள் எனும் போது மறைகளையும் தொல்காப்பியத்தையும் யாத்தவர்கள் தமிழர்களே என்பதும் “ஆரியர்கள்” என்பவர்கள் ஐரோப்பியர் உருவாக்கிய கற்பனை என்பதும் தாமே விளங்காவா?


(தொடரும்)

1 மறுமொழிகள்:

சொன்னது…

ஐயா வணக்கம். அறிவு பசியாற்றிய உங்கள் கட்டுரைக்கு நன்றி. எல்லோரும் இந்நாட்டு மன்னர் தான் என்று உணர்ந்து நாம் செயல்பட்டால் நமது திராவிட ஆரிய பேதம் அடிபட்டு போகும். அருமையான வலிமையான படைப்புக்கு நன்றி.