20.5.07

காலத்துள் புதைந்து கிடைக்கும் உறவுகளும் உண்மைகளும் (2)

குமரிக் கண்ட வரலாற்றைப் புரிந்து கொள்வதற்கு எகிப்திய தொல் வரலாற்றையும் சீனத் தொல்வரலாற்றையும் ஒப்பு நோக்க வேண்டும். தமிழர் வரலாற்றில் உள்ள இடைவெளிகளை அவை நிரப்பும். மறைகள், சமற்கிருத இலக்கியங்கள் துணை இன்றி இதை நிறைவேற்ற முடியாது.

Masks of Gods - Primitive Mythology என்ற நூலில் சோசப் காம்பல் என்பவர் எகிப்தில் பூசாரித் தலைவர்கள் ஒன்றுகூடி சில விண்மீன்கள் ஒன்றுகூடும் ஒரு நாளில் ஒருவனை அரசனாக அமர்த்துவர் என்றும் அடுத்த முறை அதே விண்மீன்கள் கூடும் நாளில் அவனை அகற்றிவிட்டு இன்னொருவனை அரசனாக்குவர் என்றும் எகிப்தியத் தொன்மங்களிலிருந்து விளக்குகிறார். அதே நடைமுறை இங்கும் இடம் பெற்றுள்ளது. இந்திர பதவியடைவோர் மாறிக்கொண்டே இருப்பர்; இந்திராணி தொடர்வாள்.[1] மகாபாரதத்தில் நகுசன் எனும் பாண்டவர்களின் மூதாதை வேள்வி செய்து இந்திர பதவி அடைந்தான். ஏழு முனிவர்களும் தாங்கிய பல்லக்கில் இந்திராணி இருப்பிடம் நோக்கிச் சென்றவன் அவர்களை அதட்ட, சினமுற்ற அகத்தியர் அவனை நாகமாகுமாறு சபித்தார். இந்திரன் அவையில் உருப்பசி ஆடும் போது அவளும் இந்திரன் மகனும் காதல் குறிப்புகளைப் பரிமாறியதால் ஆட்டம் பிசக சினமுற்ற அகத்தியர் அவர்களைப் புவிக்குச் செல்லுமாறு சபித்தார்(சிலம்பு). இந்திரன் அவையில் முனிவர்களுக்கிருந்த மேலாளுமை தொன்மங்களில் தெளிவாகக் காணக் கிடக்கிறது.

வானுலகில் இருப்பவனாக நம் தொன்மங்களில் குறிப்படப்பட்டிருக்கும் இந்திரன் நம் மருத நிலத் தெய்வம். அதாவது குக்குலங்களிலிருந்த மருத நிலப் பூசாரித் தலைவர்களால் மருத நிலத் தலைவனாக அமர்த்தப்பட்டவன். அவனுக்கு அளிக்கப்பட்ட வேலை கோட்டைகளை அழிப்பது.

கோட்டை என்பது ஒரு வகை குமுக அமைப்பென்று தோன்றுகிறது. நடுவில் தலைவனது குடிலும் சுற்றிலும் அவனைச் சார்ந்து வாழ்வோரின் குடில்களுமாக வட்டவடிவில் அமைந்த குடியிருப்புகள் அவை.[2] அண்டை அயலிலுள்ள இது போன்ற குடியிருப்புகளோடு தொடர்பின்றித் தனிமையாக, “தன்னிறைவுடன்” அவை வாழ்ந்தன. ஒரு நிலப்பரப்பில் ஏழு குக்குலங்களில் ஒன்றோ பலவோ குக்குலங்களைச் சார்ந்த இது போன்ற கோட்டைகள் ஒன்றோடொன்று தொடர்பற்று இருந்தன. அவற்றை ஒரு பொது அதிகாரத்தின் கீழ் கொண்டுவருவதற்காக இந்திரன் போன்ற நிலத்தலைவன் ஒருவனை அவ்வட்டாரத்திலுள்ள குக்குலப் பூசாரிகள் உருவாக்கியிருக்க வேண்டும். இவ்வாறு ஒன்றுபடுத்தும் தேவை ஏதாவது வெளிவிசையின் தாக்குதலினால் ஏற்பட்டிருக்க வேண்டும். அந்த வெளிவிசை பெரும்பாலும் நெய்தல் நிலத்திலிருந்து வந்திருக்க வேண்டும்.

உலகில் இது போன்று தனித்தனியே வாழும் குழுக்களை ஆங்காங்குள்ள அரசுகளின் முழு அதிகாரத்தினுள் கொண்டு வரும் முயற்சிகள் இன்று வரை முழு வெற்றி பெறவில்லை. குறும்பர் போன்ற சில குழுக்களை கரிகாலன் அடக்கினான் என்று அறிகிறோம். இன்று ஊர் பஞ்சாயங்கள் என்ற அமைப்புகள் அரசின் சட்டங்களுக்குப் புறம்பாகச் செயல்பட்டு வருவதைக் காண்கிறோம். மலைவாழ் மக்களைப் பிற மக்களுடன் இணைக்கும் அரசின் முயற்சிகளை வெளிநாட்டுப் பணத்தில் செயல்படும் “தொண்டர்கள்” பண்பாட்டைக் காப்பது என்ற பெயரால் தடுக்க முயல்கின்றனர். மக்களுக்கிடையிலிருக்கும் சாதி வேறுபாடுகளை ஒழிக்க ஒருபுறம் சிலர் உள்ளத் தூய்மையுடன் முயலுகையில் பொதுவான வளர்ச்சிச் சூழலில் சென்ற தலைமுறையில் கீழ்நிலையிலிருந்த சிலருக்குக் கிடைத்த வளர்ச்சி நிலையைத் தம் பிறங்கடையினருக்கு மட்டும் தொடர்ந்தும் கிடைப்பதற்காக படிப்பு, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் ஒதுக்கீடு என்ற சாக்கில் பண்பாட்டைப் பேணுதல் என்ற முழக்கத்தைத் தம் சாதி அடையாளங்களைப் பாதுகாப்பதற்காகச் சிலர் இவர்களோடு சேர்ந்து முன்வைக்கின்றனர்.

பண்பாடு என்பது பல்வேறு வளர்ச்சி நிலைகளுக்கேற்ப எளிதில் மாறக்கூடியது. சில பண்பாட்டு எச்சங்கள் வெறும் சடங்குகளாக மட்டும் ஒட்டிக்கொண்டிருக்கும். சென்ற ஒரு தலைமுறைக்குள் நம் குமுகத்தில் பண்பாட்டின் பல கூறுகள் மாறிவிட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, பெண்கள் சேலை அணிவதைக் கைவிட்டு வருகின்றனர். ஆனால் திருமணம் போன்ற நிகழ்வுகளில் மட்டும் கட்டாயம் சேலை அணிகின்றனர். அத்தகைய எச்சங்களைக் கூடக் கைவிட்டு ஒரு பண்பாட்டு ஒருமைப்பாடு ஒரு நிலப்பரப்பில் வாழும் மக்களிடையில் ஏற்படுவது அவர்களது ஒற்றுமைக்கும் வலிமைக்கும் இன்றியமையாதது. அத்தகைய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதே இந்திரன் போன்ற நிலம் சார்ந்த தலைவர்களுக்கு அந்த நிலப்பரப்பில் வாழ்ந்த பூசாரித் தலைவர்கள் வகுத்த கடமையாகும்.

நானிலத் தெய்வங்கள் வரிசையில் “வருணன் மேய பெருமணல் உலகமும்” என்ற தொல்காப்பிய வரியில் வருவதன்றி கழக இலக்கியங்கள், சிலம்பு போன்ற பழந்தமிழ் இலக்கியம் எதிலும் வருணனின் தடமே இல்லை. ஆனால் இந்திரனைப் பற்றி குறிப்பிடத்தக்க செய்திகள் உள்ளன. இவ்விரு தெய்வங்களைப் பற்றிய விரிவான செய்திகள் மறைகளிலும் தொன்மங்களிலும் உள்ளன.


வருணனைப் புகழ்ந்தும் பழித்தும் கூறும் பாடல்கள் மறைகளில் உள்ளன. அது போலவே வருணனால் துன்புற்றவர்களுக்குத் துணை செய்தவனாக இந்திரனைப் புகழ்ந்தும் கொடியவனாகப் பழித்தும் பாடல்கள் மறைகளில் உள்ளன. அதே போல் இந்திரனை வென்று ஆயர்களைக் காத்தவனாகக் கண்ணன் தொன்மங்களில் போற்றப்படுகிறான். அவனை ஒரு வேடன் கொன்றதாக மகாபாரதம் கூறுகிறது. அவன் பெயர் சேரன்.[3] நாகர்களாகிய சேரர்களின் கொடி நாகத்திலிருந்து வில்லாக மாறியதும் இந்நிகழ்ச்சியின் விளைவாகத்தானோ?[4] உலகில் “பொதுமை” நாடுகள் தவிர செயற்கைப் பொருட்களைக் கொடியில் கொண்டவர்கள் தமிழர்களே. சேரனின் வில், பலதேவனின்(பலராமன்) கலப்பை முதலியன.

இந்நிகழ்ச்சிகளை நாம் இவ்வாறு விளக்கலாம். மனித வரலாற்றில் ஒரு கட்டத்தில் கடற்கரை முதல் மலைமுகடு வரை தம் ஆளுமையின் கீழும் பின்னர் ஆளுகையின் கீழும் கொண்டு வந்தவர்கள் நெய்தல் நில மக்கள். அந்நிலப் பூசாரியர் குக்குலக் குழுக்களைக் குலைத்து மக்களை ஒன்றுசேர்க்கத் தேர்ந்தெடுத்த தலைவன் வருணன். கடல் வழியாகக் கடலில் விழும் ஆற்றுக் கழிமுகங்களுக்கும் அங்கிருந்து ஆறுகள் வழியாக உள்நாடு செல்லவும் அவர்களால் முடிந்தது. ஆறு என்பதற்கு வழி என்ற பொருளும் வழி என்பது நீரின் வழிதல் எனும் தன்மை தொடர்பாகவும் இருத்தல் காண்க. உப்பு, கருவாடு போன்ற பண்டங்களை வைத்துப் பண்டமாற்றைத் தொடங்கி வைத்தவர்கள் அவர்கள் என்று கொள்ளலாம். உப்பு ஒரு காலத்தில் பண்டமாற்று ஊடகமாக இருந்தது என்ற கருத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நெய்தல் நில மக்களின் உறவாலும் வேளாண்மை வளர்ச்சியாலும் விழிப்புற்ற மருத நிலப்பரப்பிலுள்ள பூசாரிகளின் தேர்வு இந்திரன். இக்காலகட்டத்து மறைப் பதிவுகளே இந்திரனுக்குக் கோட்டைகளை அழிப்பவன் என்ற அடைமொழியைப் பெற்றுத் தந்தன. உண்மையில் வருணன் முதல் சேயோன் வரை நானிலத் தெய்வங்களாக கூறப்படுவோர் தத்தம் நிலப்பரப்புகளில் “கோட்டை”களை அழித்தவாகளே.

மருத நில வளர்ச்சி முல்லை நிலத்தின் மீது அதிகாரத்தையும் சுரண்டலையும் உருவாக்கியது. அதன் எதிர்வினையாக முல்லை நிலத்து பலதேவன் பாசனத்தையும் கலப்பையையும் அறிமுகம் செய்து அங்கும் வேளாண்மையைத் தொடங்கினான். மலையிலிருந்து ஓடிவரும் ஆறுகள் சுமந்து வந்து பரப்பும் வண்டலில் மருத நில மக்கள் பயிரிட்டனர். பலதேவன் ஆறுகளிலிருந்து வாய்க்கால்கள் மூலம் தண்ணீரைத் திருப்பி கலப்பையால் உழுது நிலத்தைச் சேறாக்கி வேளாண்மை செய்ததைக் கலப்பையால் ஆற்றைத் தன் பக்கம் இழுத்தான் என்ற தொன்மக் கதை கூறுகிறது. ஏறு தழுவல் மூலம் காளையை வசக்கி உழவு, பாரம்சுமத்தல் வண்டியிழுத்தல் போன்றவற்றில் பழக்கி அதை ஓர் உழைப்புக் கருவியாக்கிய, ஆவின் பாலிலிருந்து தயிர், மோர், வெண்ணெய் நெய் முதலியவற்றை உருவாக்கி நெய்யில் எரியும் அக(ல்) விளக்கின் தோற்றத்திற்கு வழியமைத்து வெட்டவெளியில் எரியும் நெருப்பை வீட்டினுள் வெளிச்சம் தருவதாக மாற்றி நந்து எனப்படும் இருளை விரட்டிய கண்ணனை உடன்பிறந்தான் ஆக்கியுள்ளது தொன்மம். இந்தக் கண்ணன் இந்திரனின் மேலதிகாரத்தை முறியடித்ததால் முல்லை நிலத் தெய்வமானான்.

நெய்தல், மருதம், முல்லை முதலிய நிலங்களில் தனியாட்சிகள் ஏற்பட்ட போது அவற்றுக்கிடையில் போர்களும் உருவாயின. யானையை வசக்கிய சேயோன் அது குறிஞ்சி நிலத்தின் பொருளியல் அடிப்படைகளில் ஒன்றான மரங்களைச் சுமப்பதுடன் அது ஒரு போர்க் கருவியாக இருப்பதையும் கொண்டு மலைபடுபொருள் வாணிகத்துடன் மரம், யானை ஆகியவற்றின் வாணிகத்தையும் வளர்த்து அண்டை நிலமான முல்லை நிலத்தார் அதிகாரத்தை முறியடித்து குறிஞ்சி நிலத் தெய்வமானான். வள்ளியை வசப்படுத்த அவளை யானையைக் கொண்டு அச்சுறுத்தியது, அவனது ஊர்தியாகிய யானை, மயில் போன்றவை கொடியாகிய சேவல் ஆகியவை முருகனுக்கு குறிஞ்சி நிலப் பொருளியலிலுள்ள பங்கை காட்டுகின்றன.

தொல்காப்பியம் நானிலங்களை மட்டுமே கூறி அவற்றுக்கு உரிய தெய்வங்களை வரிசைப்படுத்தினாலும் விடப்பட்டுள்ள பாலையும் உட்படும் வகையில் ஐந்நிலத்தைப் பற்றிய குறிப்பும் அதில் உள்ளது.

முதலொடு புணர்ந்த யாழோர் மேன
தவலருஞ் சிறப்பின் ஐந்நிலம் பெறுமே …….


தொல். பொருள். களவியல் 15

முதற்கழகத் தலைநகரான தென்மதுரை கடலுள் முழுகிய பின்பு கபாடபுறத்தைத் தலைநகராகக் கொண்ட எஞ்சிய நிலத்தில் பாலைநிலம் இல்லாமையால் “அது ஒழிய” எஞ்சிய நிலத்தை வைத்து நூல் யாத்த தொல்காப்பியரின் கவனத்தை மீறி இவ்வரிகள் இடம் பெற்றதாகத் தான் கொள்ள வேண்டும்.

தொல்காப்பியர் பாலை நிலம் இல்லையென்று கூறி அதற்குத் தெய்வம் கூறாது விட்டாலும் உரையாசிரியர்கள் கொற்றவை எனும் பெண் தெய்வத்தைப் பாலை நிலத் தெய்வமாகக் கூறியுள்ளனர்.

பாலை நிலம் மக்கள் வாழத் தகுதியற்ற வளமில்லாப் பகுதி எனவே இங்குள்ள மக்கள் ஆறு அலைத்தல் எனும் வழிப்பறியையே வாழ்க்கையாகக் கொண்டிருந்தனர். வழிப்பறிக்கு அவ்வழியில் மக்கள் போக்குவரத்து இன்றியமையாதது. தாங்கொணாக் கொடும் வெய்யிலையும் உயிர் பறிக்கும் வழிப்பறியாளர்களையும், பொருட்படுத்தாமல் அவ்வழியில் செலவு மேற்கொள்வோர் வாணிகராகவே இருக்க வேண்டும். அப்படியானால் பெருமளவு வாணிகமும் ஆதாயமும் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் வழிப்பறியை நம்பி அங்கு ஒரு மக்கள் குழு உருவாக முடியும். பாலைக்கு இருமருங்கிலும் உள்ள மருதம், முல்லை நிலங்களிலிருந்து மிகுதியாகவும் பிற நிலங்களிலிருந்து வாணிகக் குழுக்களில் வந்து வழிப்பறியாளர்களாக மாறியோர் சிறுபான்மையராகவும் அவர்கள் இருந்திருக்க வேண்டும் வாணிகர்களும் எப்போதும் வழிப்பறியாளர்களை எதிர்த்து போருக்கு ஆயத்த நிலையில் உள்ள வீரர்களாக இருந்திருக்க வேண்டும். இவர்கள்(பாலை நில மக்கள் நானிலத் தெய்வங்கள் உருவாவதற்கு முன்பிருந்த தாய்த் தெய்வ வழிபாட்டை மேற்கொண்டிருந்தனர் என்பதை கொற்றவை வழிபாடு காட்டுகிறது.

இந்த ஐந்து தெய்வங்கள் பற்றிய தொன்ம வரலாறுகள் மறைகளிலும் சமற்கிருதத் தொன்மங்களிலும் விரிவாகக் காணப்படுவதால் இந்நூல்களுக்கும் தமிழர்களுக்கும் நெருக்கமான உறவிருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். சீன, எகிப்திய வரலாறுகளில் கூறப்படும் நான்கு தொல் பேரரசுகள் மேலே விளக்கிய நானில ஆட்சிகளைக் குறிப்பதாக இருக்கலாம்.

(தொடரும்)


அடிக்குறிப்பு:

[1]இது பெண் தலைமையிலிருந்து ஆண் தலைமைக்கு மாறியதற்கு முந்திய இடைமாற்றக் கட்டத்தைக் குறிக்கலாம். எகிப்தில் கி.மு. ஆறாம் நூற்றாண்டு வரை முழுமையான பெண் தலைமைக் குமுகம் இருந்துள்ளது. பெண்களுக்கே மண்ணுரிமை இருந்துள்ளது. திருமணத்தில் பெண்ணின் அகவை ஆணுடையதை விடக் கூடுதலாக இருந்நது. தமக்கை தம்பி மீது காதல் பா பாடியதும் உடன் பிறந்தார்களிடையில் திருமணமும் இருந்தன. எசு.வி.எசு. இராகவன் மொழிபெயர்ப்பில் எரோடட்டசு பற்றிய நூலையும் வில் டுரான்றின் Story of Civilisation Vol.I Our Oriental Heritage நூலையும் பார்க்க.

[2]கொண்டா ரெட்டிகள் எனப்படும் மலை ரெட்டிகளிடம் இத்தகைய அமைப்பு இருந்ததாக நண்பர் வெள்ளுவன் கூறுகிறார்.

[3]அபிதான சிந்தாமணியில் சேரன் 2 காண்க.


[4]திரு. பூங்குன்றனால் திறனாயப் பெற்றுள்ள நூலில் “பெருஞ்சேற்று உதியஞ்சேரல்” எனும் கட்டுரை காண்க. மகாபாரதப் போரில் ஐவரால் கொல்லப்பட்ட தன் முன்னோருக்காக பெருஞ்சோறு கொடுத்தான் உதியஞ்சேரல் என்பதை முதற்கழகப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் பாடியுள்ளது பாரதப்போர் முதல்கழகக் காலத்தில் அல்லது அதற்கு முன் தென் அரைக்கோளத்தில் நடைபெற்றது என்பதற்குச் சான்றாகும்
.

0 மறுமொழிகள்: