14.5.07

பழைய பாண்டம் - புதிய பண்டம் (4)

வரலாற்று வரைவென்பது ஓர் அரசியல் நடவடிக்கையாகும். எந்த ஓர் அரசியல் இயக்கமும் ஒரு வரலாற்று வரைவைத் தொட்டுத்தான் தொடங்குகிறது. வரலாறு உண்மையாக இருந்தாலும் அந்த உண்மையால் பயன்பெறும் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை அது தொடங்கி வைக்கிறது.

சேர, சோழ, பாண்டியர் இன்றைய தமிழகத்தில் நுழைந்த போது இங்கு வாழ்ந்து வந்த மக்கள் பாணர், பறையர், துடியர், கடம்பர் என்ற நான்கு குழுக்கள் ஆகும். அவர்களின் எதிர்ப்புக்குரல் கழகப் பாடல் ஒன்றில் மாங்குடிக் கிழாரின் வழியாக வெளிப்பட்டுள்ளது. எனவே தாங்கள் வந்தேறிகள் என்ற உண்மை வெளிப்படாமல் இருக்க குமரிக் கண்டத்தைப் பற்றிய செய்திகளை முடிந்த வரையில் மறைத்தனர் கழக இலக்கியத்தை தொகுத்தோர். அதே வேளையில் மச்ச புராணம் போன்ற சமற்கிருத நூற்களில் எழுதி வைத்தனர் என்றும் கொள்ளலாம்.

இன்றும் ஆத்திரேலியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பழங்குடி மக்கள் வெள்ளை வந்தேறிகளுக்கெதிராகப் போர்க்கொடி தூக்குவதையும் அமெரிக்க வல்லரசு பழம் பெரும் நாகரிக வராலாறுகளை மறைக்கப் புதுப்புது வராலாற்று அணுகல்களை அந்தந்த நாட்டுப் படிப்பாளிகளுக்கு ஆங்காங்குள்ள பல்கலைக் கழகங்கள் மூலமாகப் பரிந்துரைப்பதையும் போன்றது இது.

கடல் வழிச் செல்கையில் கதிரவனின் கரும்புள்ளி புவியை நோக்கி வரும் போது வீசும் காந்தப்புயலால் திசைமானியின் நம்பகத்தன்மை பாதிப்படைகிறது. எனவே அந்த நாளை இனம் காண வேண்டிவந்தது. எனவே வானியல் நிகழ்வுகளைக் காட்டும் ஒரு கையேடு தேவைப்பட்டது. அந்த நோக்கத்தை நிறைவு செய்தது சிவவாக்கியரின் வாக்கியப் பஞ்சாங்கம். வாக்கியம் என்பதற்கு பட்டியல் என்று பொருள் கூறப்படுகிறது. பஞ்சாங்கம் என்ற ஐந்திறத்தில் தேதி, நாள், திதி, நாண்மீன், யோகம் என்ற ஐந்து உறுப்புகள் உள்ளன. இவை அனைத்தும் விண் கோணங்களை நாழிகையில் கூறும் தரவுகளே. இந்தப் பட்டியல் தவிர்த்து ஒவ்வொரு நாளும் பகல் வேளையின் நீட்சி (அகசு), ஓரைகளின் (ராசிகளின்) இயக்கம் ஆகியவற்றைக் காட்டும் பட்டியல்களும் உள்ளன. இவை முற்றிலும் வானியல் சார்ந்தவையே. சோதிடம் எனப்படும் கணியத்துக்கும் இதற்கும் நேரடித் தொடர்பு இல்லை. அதற்கு வேண்டிய தரவுகளை இதிலிருந்து எடுத்துக் கொள்கிறார்கள் அவ்வளவே.

ஐந்திறங்கள் வானிலையை அறிந்து கொள்ளவும் உதவுகின்றன. பண்டை உலகின் மிகச் சிறந்த வானிலையியல் அறிஞரான (Meteorologist) இடைக்காடரின் 60 பாடல்களும் நம் வானிலையியலறிவிற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. நம் ஐந்திறங்களில் நம் வானிலையியலறிவு பற்றிய மேலும் பல செய்தகள் உள்ளன.

வானிலை சிறப்பாயிருந்தால் நாடு செழிப்பாகும்; மக்களின் வாழ்க்கை சிறப்பாகும்; அரசனின் செல்வாக்கும் வலிமையும் பெருகும். எனவே பருவகாலத்தை முன்னறிவதற்காக நிமித்திகன் இருந்தான். எனவே வானிலை அரசனின் தனிப்பட்ட வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. அது பிற தலைவர்களுக்கும் கையாளப்பட்டு தனிப்பட்ட மக்களின் வாழ்க்கைக்குக் கையாளப்பட்டு கணியமாக வாணிக வடிவம் பெற்று விட்டது.

இங்கு திசைமானியைத் தமிழ்க் கடலோடிகள் பயன்படுத்தினார்களா என்ற ஐயம் எழக்கூடும். தமிழில் வடக்குத் திசையைக் குறிக்க “ஊசி” என்று ஒரு சொல் உள்ளது. ஊசிக்கும் வடக்குக்கும் உள்ள உறவு காந்த ஊசி வடக்கு நோக்கியே நிற்கும் என்பது. இதிலிருந்து திசைமானியைத் தமிழர்கள் அறிந்திருந்தார்கள் என்பது தெரிகிறது.

நில நடுக்கோட்டில் தலைநகர் அமைத்த தமிழர்கள் தங்கள் தலைநகருக்கு மேலே கதிரவன் வரும் நாளை, அதாவது இன்றைய மார்ச் 21-ஐ ஆண்டுப் பிறப்பாகக் கொண்டனர். ஓரை வட்டத்தின் படி மேழம் விடை(மேசம்,இடபம்) என்று தொடங்கும் மாதங்களின் பெயர்களை இட்டார்கள்.

முக்கழகச் செய்திகளின் படி ஏறக்குறைய கி.மு.6000 ஆண்டளவில் முதற்கடற்கோள் (முந்திய கடற்கோள்கள் பற்றி தமிழிலக்கியங்களில் பதிவுகள் இல்லை. அதிலும் உரையாசிரியர்கள் மூலமாகவே நாம் கூறும் செய்திகளும் கிடைத்துள்ளன.) நிகழ்ந்தது. அது நில நடுக்கோட்டில் இருந்த நிலப்பரப்பையே சிதறடித்து விட்டது. நில நடுக்கம், புவி மேலடுக்கினுள் நிலப்பரப்பு தாழ்தல், சுனாமி எனப்படும் ஓங்கலை என்று பேரழிவை அது ஏற்படுத்தியிருக்கும். இந்தோனேசியப் பகுதியை இன்றைய உலகத் திணைப்படத்தில் பார்த்தாலே அந்தச் சிதறல்களைப் புரிந்து கொள்ள முடியும்.

அணுப்போரால் ஏற்பட்ட அழிவு என்றும் விண்கற்கள் வீழ்ந்ததால் நேர்ந்ததென்றும் ஆய்வாளர்கள் விளக்கங்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். மீனவர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்திரன் இடையில் ஆட்சியைச் செலுத்தினான். இதற்கிடையில் நானும் ஒரு கதை சொல்லுகிறேன்.

மகாபாரதத்தில் யயாதி என்று ஓர் அரசன். அவன் சுக்கிரச்சாரி என்பவனின் மகள் தேவயானியை மணந்தான். ஒரு பூசலில் அவளுக்கு வேலைக்காரியாகப் பணிக்கப்பட்ட அசுர அரசனின் மகளும் உடன் செல்கிறாள். அவள், அரசனைத் தன்வயப்படுத்துகிறாள். இருவரும் மக்களைப் பெறுகின்றனர். இதனால் சினமடைந்த சுக்கிராச்சாரி அவனை முதுமையடையச் சபிக்கிறான். மருமகன் கெஞ்ச தன் மகன்களிலொருவனிடமிருந்து இளமையைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறுகிறான். மனைவியின் மகன்கள் மறுக்க வேலைக்காரியின் மகன் ஒருவன் ஏற்றுக் கொள்கிறான். தனக்குப் பின் அவனை அரசனாக்கி விட்டு மனைவியின் மகன்களைத் துரத்தி விடுகிறான். அவர்களில் ஒருவன் பெயர் யது. அவனது வழி வந்தவர் யாதவர். வேலைக்காரி மகன் வழி வந்தவர்கள் பாண்டவரும் நூற்றுவரும்.

ஊத மறைநூலில் ஒரு கதை. ஆபிரகாமுக்குக் குழந்தை இல்லை. அவன் மனைவி வேண்டியதால் வேலைக்காரி மூலம் ஒரு பிள்ளையைப் பெறுகிறான். அவனுக்கு 99-ம் மனைவிக்கு 90-ம் அகவையான போது அவள் ஒரு பிள்ளையைப் பெற்றாள். வேலைக்காரியின் பிள்ளையைத் துரத்தி விட்டாள். அவளது பிள்ளை வழி வந்தவர் ஊதர். வேலைக்காரி வழி வந்தவர் அரேபியர். வேலைக்காரி பிள்ளை பெறுதல், முதுமை இரண்டும் இக்கதைகளின் பொதுவான கதைக் கருக்கள். இது போன்ற மிக வியப்பூட்டும் ஒற்றுமைகள் நம் இந்தியத் தொன்மங்களுக்கும் ஊத மறைநூலுக்கும் உள்ளன.

“மிசிரத்தானம்” என்ற சொல்லுக்கு, எகிப்து எனும் நாட்டின் பெயர் என்கிறது தமிழ்மொழி அகராதி. யயாதியின் மகன் யதுவின் வழிவந்தவர்கள் இங்கு குடியேறினர் என்கிறது. மிசிரம் என்றால் கலப்பு என்றும் பொருள் கூறுகிறது.

சீனமும் எகிப்தும் குமரிக் கண்டப் பண்பாட்டோடு தொடர்புடையவை. அவை தங்கள் நாட்டை நான்கு அரச மரபுகள் ஆண்டன என்கின்றன. நம் பண்பாட்டில் மறைகளில் முதலில் வருணன் போற்றப்படுகிறான். அடுத்து அவன் தூற்றப்பட்டு இந்திரன் போற்றப்படுகிறான். தொடர்ந்து தொன்மம் இந்திரனை இகழ்ந்து கண்ணனைப் போற்றுகிறது. மகாபாரதம் கண்ணனை வேடன் கொன்றதைக் காட்டுகிறது. வருணன் தொடங்கி முருகன் வரை நான்கு நிலங்களைச் சார்ந்த அரச மரபுகளால் குமரி தொடங்கி வைத்த பாண்டியப் பேரரசு விளங்கியதை சீன, எகிப்திய மரபுகள் பதிந்துள்ளன எனலாம்.

மகாபாரதப் போரில் துரியோதனன் நாக மரபைச் சேர்ந்தவனாகக் கூறப்பட்டாலும் அவனுக்கு மீனவர் தொடர்பு காட்டப்படுகிறது. அவனது பூட்டனான சந்தனு முதலில் கங்கையையும் பின்னர் மச்சகந்தி எனப்படும் மீனவப் பெண்ணையும் மணந்தான். அந்த மீனவப் பெண் வழி வந்தவர்களே நூற்றுவரும் பாண்டவர்களும். அதில் பாண்டவர்கள் இந்திரன், இயமன், வாயு, அசுவினி தேவர்கள் என்ற பிறருக்குப் பிறந்தவர்கள் என்ற வகையில் மரபு மாறிப் போனவர்கள். நூற்றுவரை எதிர்த்த போரில் கண்ணனும் இந்திரனின் மகனான அர்ச்சுனனும் சேர்ந்து நிற்பதையும் காணலாம். மீனவர்கள் நாகமரபினரே என்று வி. கனகசபையார் போன்றவர்கள் கூறுகின்றனர். நாகர்கோயில் தொடங்கி நாகூர் வரை நாகர்களின் பெயரிலமைந்த கடற்கரை ஊர்களைக் காண்கிறோம். நாகரம்மன் (நாகர்கோயில்), பிடாரி, புற்றடி மாரியம்மன் (சீர்காழி) என்று அம்மன்களின் வழிபாடும் நடைபெறுகிறது.

ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால் மதுரை அழிவிற்கும் மகாபாரதப் போருக்கும் கூடத் தொடர்பு இருக்கலாம்.

யாயாதியால் துரத்தப்பட்ட யதுவின் வழிவந்தவர்கள் கபாடபுரத்தில் ஆண்டு கொண்டிருந்தார்கள் என்று வைத்துக் கொள்வோம். மதுரை அழிந்து சில நூற்றாண்டுகள் சென்று தமிழறிஞர்கள் சேர்ந்து வெண்டேர்ச் செழியன் என்பவன் தலைமையில் புதிய தமிழ்க் கழகத்தைத் தோற்றுவித்திருக்கலாம். அங்கு நூற்றுவர் வழிவந்த அல்லது அவர்களுக்கு உறவான வேடர்கள் அவர்கள் மீது படையெடுத்து அவர்களைத் துரத்தி விட்டுத் தங்கள் ஆட்சியை அமைத்திருக்கலாம்.

உலகில் ஆண்டுமுறைகள் அனைத்தையும் அமைத்தவர்கள் குமரிக் கண்டத் தமிழர்கள் என்கிறோம். அவர்கள் ஐந்து வகையாகத் தொடங்கும் ஆண்டு முறைகளை வகுத்திருந்தனர். சம்வத்சரம், பரிவத்சரம், இடவத்சரம், அனுவத்சரம், உதயவத்சரம், ஆகியவை அவை. சர ராசிகள் எனப்படுபவை மேழம், கடகம், துலை, சுறவம் ஆகிய நான்கும் ஆகும். கடகத் திருப்பம், சுறவத் திருப்பம், வடக்கே செல்லும் போது மேழம் தெற்கே செல்லும் போது துலை என்று கதிரவன் நில நடுக்கோட்டைத் தொடுகையில் இருக்கும் இரண்டு ஓரைகள் என்று இவற்றை இவ்வாறு அழைக்கின்றனர்.; நம்மிடையில் பொங்கல், சித்திரை, ஆடிப் பிறப்பு, ஐப்பசி விசு ஆகியவற்றைக் கொண்டாடும் பழக்கம் உள்ளது. இவ்வகையில் மேழத்தில் பிறக்கும் ஆண்டுக்கு சம்வத்சரம் என்பது பெயர்(அபிதான சிந்தாமணி பார்க்க). பிறவற்றில் எவற்றுக்கு எவை என்பது தெரியவில்லை. இவை நான்கையும் நீக்கி மலையாள ஆண்டு போன்று (மடங்கல்-சிங்கம்) வேறு ஓரைகளில் தொடங்கும் ஆண்டுகள் ஐந்தாவது வகையில் சேர்க்கப்பட்டுள்ளன. இதைத் தவறாகப் புரிந்துக் கொண்டு 5 ஆண்டுமுறை என்பதை ஐந்தைந்து ஆண்டுகளைக் கொண்ட உகம் என்ற தொகுதி என்று ஆய்வாளர் இராமதுரை அவர்கள் கருதுகிறார்.

இப்போது யாதவர் ஆட்சி முடிந்து வேடர்கள் - முருகன் ஆட்சி தொடங்கியது. இவர்கள் ஆண்டு முறையில் ஒரு மாற்றம் செய்தனர். ஏற்கனவே தலைநகரம் நிலநடுக்கோட்டில் இருந்த போது மேழ ஓரை தொடங்கும் இன்றைய மார்ச் 21-இல் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்போது 24 நாட்கள் தள்ளிப் போடப்பட்டது. ஏனென்றால் கபாடபுரம் ஏறத்தாழ 6 பாகைகள் வடக்கேயிருந்தது. இதனால் சுறவத்தில் பிறக்கும் ஆண்டு, மேழத்தில் பிறக்கும் ஆண்டு என்று எல்லாமே மாறிப் போய்விட்டன. இந்த மாற்றத்துடன் கலியாண்டு முறை புகுத்தப்பட்டது. கண்ணன் இறந்த நாளிலிருந்து கலியாண்டு தொடங்குவதாக மரபு உள்ளது அனைவருக்கும் தெரியும். அதை யாதவர்கள் துவரையம்பதியாகிய கபாடபுரத்திலிருந்து துரத்தப்பட்ட நாளிலிருந்து தொடங்கப்பட்டது என்று மாற்றிப் புரிந்து கொள்ளலாம். இந்த எம்முடிவுக்குத் துணையாக ஒரு செய்தி உள்ளது. பண்டை எகிப்தியர் கி.மு. 3100 வாக்கில் தொடங்கும் ஓர் ஆண்டு முறையைக் கையாண்டணர் என்பதும் அவர்கள் வெளியிலிருந்து ஓர் உயர்ந்த நாகரிகத்தோடு குடியேறியவர்கள் என்பதும் அதுபோல் தென் அமெரிக்காவில் குடியேறியுள்ள மக்களும் அதே காலத்தில் தொடங்கும் ஓர் ஆண்டு முறையைக் கையாண்டுள்ளனர் என்பதும்.

கரிகால் சோழன் வென்ற வட இந்திய அரசர்களில் ஒருவனான இருங்கோவேள் என்பவன் துவரையை ஆண்ட வேளிர் குடியில் 49 தலைமுறைக்குப் பிந்தியவன் என்று கூறப்படுகிறது. கண்ணன் இறந்தபின் துவரையிலிருந்து வெளியேறிய யாதவர்களாகிய வேளிர்களில் அவனும் ஒருவன் என்று கூறப்படுகிறது. அவன் முன்னோர் விட்டு வெளியேறிய துவரை வடக்கே உள்ள துவாரகையாகவே இருக்க வேண்டும். தலைமுறைக்கு 50 ஆண்டுகள் என்று சராசரியாக வைத்துக் கொண்டால் 2450 ஆண்டுகள் ஆகின்றன. முதல் கரிகாலன் காலம் கி.மு. 150 என வைத்துக் கொண்டால் 2450 + 2150 = 4600 ஆண்டுகள். கலியாண்டு கணக்கிலிருந்து 400 ஆண்டுகள் வேறுபாடு இவர்கள் கபாடபுரமாகிய துவரையம்பதியிலிருந்து வடக்கிலுள்ள துவாரகைக்குக் குடிபெயர்ந்து தெற்கு நோக்கி நகர்ந்ததற்கு இடைப்பட்ட காலத்தைக் குறிக்கலாம்.


(தொடரும்)

0 மறுமொழிகள்: