6.5.07

குமரி மாவட்டக் கலவரம் - ஒரு பகுப்பாய்வு (3)

புதிய உறவுகள்

1956இல் மாநிலங்கள் மறுசீரமைப்புக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் குமரி மாவட்டம் உருவாக்கப்பட்டு தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. அதன் விளைவுகள் நாடார்களிடையிலும் மீனவர்களிடையிலும் புதிய சூழ்நிலைகளை உருவாக்கின.

தி.த.நா.கா. 1956இல் ஒட்டுமொத்தமாக இந்தியத் தேசியக் காங்கிரசின் தமிழ்நாடு மண்டலக் குழுவில் இணைந்தது. தாம் வேண்டி நின்றவாறு தேவிகுளம்-பீர்மேடு தமிழகத்துடன் இணையவில்லையாயினும் இ.தே.கா.வினுள்ளிருந்தே தொடர்ந்து போரடப்போவதாகத் தீர்மானம் நிறைவேற்றி அவர்கள் அக்கட்சியில் இணைந்தனர்.[1]

திருவிதாங்கூர் முடியாட்சியின் கீழ் இருந்த போது அங்கு திவானாக இருந்த சி.பி. இராமசாமி ஐயர் கட்டாய இலவயக் கல்வித் திட்டத்தை ஆய்வு அடிப்படையில் இன்றைய குமரி மாவட்டப் பகுதிகளில் புகுத்தினார்.

இந்தத் திட்டத்தின் படி 5 ஆண்டுகள் நிறைந்த ஒவ்வொரு சிறுவரையும் கண்டுபிடித்து ஆசிரியர்கள் பள்ளியில் சேர்க்க வேண்டும். பெற்றோர் குழந்தைகளைப் பள்ளிக்கு விட மறுத்தால் தண்டனை உண்டு. பள்ளிகளில் நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு காலை, மாலை என்று முறை வைத்து வகுப்புகள் நடத்தப்பட்டன. ஏழை மாணவர்களுக்கு நண்பகல் உணவு வழங்கப்பட்டது. அரிசி, உளுந்து போட்டுக் கஞ்சி வைத்து அதன் மீது தேங்காய்த் துருவலைத் தூவி தேங்காய்த் துவையலுடன் கூடியது இந்த நண்பகல் உணவு. எளிமையுடன் சுவையுமுள்ள சத்துணவு இது. இத்திட்டம் 1946 அல்லது 47இல் தொடங்கப்பட்டது. இத்திட்டம் தொடங்கப்பட்ட பின்னர் குமரி மாவட்டத்தில் எழுத்தறிவற்றோரே இல்லை என்ற நிலை ஏற்பட்டது.

இந்தக் கல்வித் திட்டத்தின் பயனாக, குமரி மாவட்ட மக்களிடையில், குறிப்பாக, கல்வி வாய்ப்பு குன்றியிருந்த நாடார்களிடையில் கல்வியறிவு திடீரென வளர்ந்து நின்றது. குமரி மாவட்டம் உருவாகித் தமிழகத்துடன் இணைந்தவுடன் கல்வியறிவு பெற்றிருந்த குமரி மாவட்ட இளைஞர்களுக்கு மேற்படிப்பு வாய்ப்புகளும் வேலைவாய்ப்புகளும் பெருகின. இவற்றுக்கு தி.த.நா.கா. காலத்தில் திருவிதாங்கூரில் ஒரு கூட்டணி அரசில் அமைச்சர் பொறுப்பிலிருந்த சிதம்பரநாதனாரும் பிறரும் மிகவும் உதவி புரிந்தனர். இந்தக் கட்டாயக் கல்வியால் தாய் மொழியாகிய தமிழில் கல்வி பெற்று மலையாளத்தை ஆட்சி மொழியாகக் கொண்ட திருவிதாங்கூர் அரசில் வேலைவாய்ப்பும் மேற்படிப்பு வாய்ப்பும் அற்ற நிலையை எதிர்நோக்கியிருந்த இளைஞர்களின் பங்கு தி.த.நா.கா.வின் போராட்டங்களில் மிகப் பெரிதாகும்.

புதிய சூழ்நிலைகளில் உருவான இந்து நாடார்களின் வளர்ச்சி சீர்திருத்தக் கிறித்துவ நாடார்களுக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை ஏன்?

முன்பு கல்வியில், அதிலும் சிறப்பாகப் பெண் கல்வியில் சிறப்புற்றிருந்தவர்கள் இவர்களே. ஆனால் இன்று கல்வியில் ஆண்களோடு மட்டுமல்லாமல் பெண்களோடும் ஒவ்வொரு துறையிலும் இந்து நாடார்கள் சீர்திருத்த சபைக் கிறித்தவர்களுக்கு இணையாகிவிட்டார்கள். இது சீர்திருத்த சபைக் கிறித்துவர்கள் மனதில் அழுக்காற்றை ஏற்படுத்தியது. அது மட்டுமல்ல முன்பு ஆடவர்கள் தகுந்த மணமகளுக்காகவே மத மாற வேண்டியிருந்தது.

இருந்தாலும் பெண்களைப் பொறுத்தவரையில் கிறித்துவர்களின் நிலைமை இந்துக்களை விட இன்றும் ஒரு படி மேலாகவே உள்ளது. இந்து நாடார்ப் பெண்களிடையில் கல்வி வளர்ச்சி பெருகினாலும் பிற ஆடவரோடு நெருங்கிப் பழகுவதற்கு அவர்களுக்கு இன்னும் உரிமை கிடைக்கவில்லை. நிலக்கிழமைக் குடும்ப அமைப்பினுள் அவர்கள் அடைபட்டுக் கிடக்கின்றனர். ஆனால் கிறித்துவப் பெண்கள் ஆடவர்களுடன் நெருங்கிப் பழகுவதற்கு அவர்களது குடும்பத்தினர் தடையாயிருப்பதில்லை. எனவே கல்வித் திறனிலும் பதவி நிலையிலும் உயர் நிலையிலுள்ள பல இந்து நாடார் இளைஞர்கள் கிறித்துவப் பெண்களை மணக்க விரும்பி மதம் மாறுவது இன்றும் தொடர்கிறது. இந்துக்களிடையில் கிறித்துவதத்தின் மீது வெறுப்பு மிகுவதற்கு இது ஒரு பெரும் காரணியாக இன்றும் நீடிக்கிறது. தகுதி உயர்வுள்ள இளைஞர்கள் தங்கள் பெண்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பு நழுவி விடுகிறதே என்பது தான் முகாமையான காரணம்.[2]

குமரி மாவட்டம் கல்விச் சாலைகள் நிறைந்த மாவட்டம். அரசுக் கல்வி நிறுவனங்கள் நீங்கலாக எஞ்சிவற்றில் பெரும்பாலானவை கிறித்தவ மத நிறுவனங்களின் கைகளிலேயே உள்ளன. கிறித்துவ மதத்துக்குப் பிறரை ஈர்க்கும் அமைப்புகளாக இந்தக் கல்விச் சாலைகள் இயங்கி வருகின்றன. பழைய தலைமுறைக் கிறித்துவர்களைவிடப் புதிதாக மதம் மாற ஆயத்தமாயுள்ளவர்களுக்கு இங்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதையும் மீறி இந்துக்களுக்கு இங்கு வேலைவாய்ப்புகள் கிடைத்தாலும் பதவி உயர்வுகளில் அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். எனவே இந்து நாடார்களில் படித்தோருக்கு, குறிப்பாக ஆசிரியர்களுக்கு கிறித்துவர்கள் மேல் கசப்பு உருவாகியுள்ளது.

இவ்வாறு தங்களை நாடார்களிடையில் ஓர் உயர்ந்த பிரிவினராகக் கருதியிருந்த சீர்த்திருத்தக் கிறித்துவர்களுக்கும் இவர்கள் மீது ஏற்கெனவே பகை கொண்டிருந்த பழைய முதலூடிகளின் பின்னால் அணிவகுத்து நின்ற படித்த நாடார்களின் பகுதியினருக்கும் பகை வளர்ந்து வந்தது.

இதற்கிடையில் இன்னொரு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தில் இந்து மதத்தையும் தில்லி ஆதிக்கத்தையும் எதிர்த்து திராவிட இயக்கம் வளர்ந்து மக்களிடையில் பெரும் செல்வாக்குடனிருந்தது. தமிழக(திராவிட) விடுதலை என்ற முழக்கத்தை முன்வைத்து அது போராடியது. இந்தப் போராட்டத்தால் தமிழகத்தில் பார்ப்பனர்களின் கைகளிலிருந்த சாதியமும் பல்வேறு மதத் தலைவர்களுக்கு மக்கள் மீதிருந்த செல்வாக்கும் இற்று நொறுங்கத் தொடங்கின.[3] இதைக் கீழறுக்க இந்திய முதலாளிகளும் தமிழகத்துப் பார்ப்பன, மேல் சாதியினரும் சூழ்ச்சி செய்தனர். விவேகானந்தர் என்ற துறவியைப் பற்றி, அவர் இந்தியாவின், இந்து மதத்தின் மதிப்பை உலகில் நிலைநாட்டியவரென்ற கருத்துப் பரப்பப்பட்டது. ஆனால் உண்மையில், பார்ப்பனர்களின் வல்லாண்மையைச் சாடியதால் பார்ப்பனரல்லாத இத்துறவியை ஒரு காலத்தில் இவர்கள் புறக்கணித்தனர். தமிழரான இராமநாதபுரம் அரசர் தான் இவரை அமெரிக்கா அனுப்பி வைத்ததுடன் இந்தியா முழுவதையும் சுற்றி வரவும் வைத்தார். ஆனால் தமக்கு இடர் வந்த காலத்தில் முன்பு தம்மால் புறக்கணிக்கப்பட்ட இந்தத் துறவியின் பெயரைத் தங்கள் ஆயுதமாக இவர்கள் பயன்படுத்தத் தயங்கவில்லை. (பாரதியாரைப் பொறுத்தும் இவர்கள் இதே நடைமுறையைத் தான் பின்பற்றினர். வ.உ.சி.யைப் பொறுத்து சிவனிய வெள்ளாளரும் இவ்வாறே.) புத்த மதக் கருத்துகளை இந்து மதத்துக்கு ஏற்றிக் கூறி அதை விவேகானந்தர் வெளிநாடுகளில் கவர்ச்சி பெறச் செய்திருந்தார். வீரார்ப்பான சில முழக்கங்களையும் இந்து மதத்துக்கு அவர் வைத்தார். ஆனால் குமுக அமைப்பில் மாற்றம் எதுவும் நிகழ்த்தாமல் கம்பும் தடியும் கொண்டே செத்துக் கொண்டிருக்கும் இந்து மதத்தை உயிர்ப்பிக்க ஒரு கும்பல் கிளம்பியது.

இந்தத் துறவி குமரி முனைக்கு வந்ததாகவும் கடலில் நீந்திச் சென்று ஒரு பாறையின் மீது ஊழ்கத்தில்(தியானத்தில்) இருந்ததாகவும் ஒரு கதை. எனவே விவேகானந்தருக்கு ஒரு நினைவாலயம் எழுப்புவதாகக் கூறி ஒரு குழு புறப்பட்டது. திராவிடர் இயக்கத்தால் மனம் புழுங்கியிருந்த பண முதலைகள் மனம் போல் பணத்தை வாரியிறைத்தனர். வடநாட்டு முதலாளிகளும் மார்வாரிகளும் ஏராளமான பணத்தைக் குவித்தனர். மண்டபம் கட்டி முடித்ததும் அதைக் கட்டியாள வங்கத்துப் பார்ப்பனர் வந்து சேர்ந்தனர். அத்துடன் இரா.சே.ச.வும் (இராட்டிரீய சுயம் சேவக் சங்கம்) குமரி மாவட்டத்தில் நுழைந்து எங்கு கால் ஊன்றலாம் என்று இடம் தேடியது.

குமரி மாவட்டத்தின் மேற்கு வட்டங்களில் நாடார்களுக்கும் நாயர் - குறுப்புகளுக்கும் பூசல்கள் அடிக்கடி நடைபெற்றன. நாடார்கள் பெரும்பாலும் கிறித்துவர்களாயிருந்ததால் இந்துக்கள் என்ற பெயரில் நாயர் - குறுப்புகளிடையில் இரா.சே.ச. முதன்முதலில் புகுந்தது. தோவாளை, அகத்தீசுவரம் வட்டங்களில் தம் மேல்சாதிச் செல்வாக்கை நாள்தோறும் இழந்துவரும் மேல்சாதியினரிடமும் முதலூடி நாடார்களிடமும் அது செல்வாக்குப் பெற்றது.

அடுத்து குமரி முனையில் விவேகானந்தருக்கு நினைவு மண்டபம் கட்டுவதற்கு முன்பிருந்தே அப்பாறை மீது மீனவர்களாகிய கிறித்துவர்கள் உரிமை கொண்டாடினர். இப்பாறையைக் குறித்து நெடுநாள் வெளியுலகுக்குத் தெரியாத போராட்டம் நடைபெற்று வந்திருக்கிறது. அது பின்னர் 1980இல் வெடித்தது.

விவேகானந்தர் நடுவத்தைச் சேர்ந்த வங்கப் பார்ப்பனர்கள் தமக்கு மீனவர்கள் இடையூறு செய்வதாகத் தாளிகைகள் மூலம் ஓலமிட்டனர். மீனவர்கள் தம் குடியிருப்புகள் அழிக்கப்படுவதாகவும் கட்டுமரங்கள் விடும் இடம் பறிக்கப்படுவதாகவும் முறையிட்டனர். மாநில முதல்வர் ம. கோ. இராமச்சந்திரன் வந்து பார்த்து எந்த முடிவையும் கூறாது சென்றார். தமக்கெதிராக அரசு இயங்குவதாக மீனவர்கள் கருதினர். மீனவரான திரு எட்மண்டின் கட்சிமாற்றம்[4] வேறு அரசுக்கு எதிரான உணர்வை மீனவர்களிடையில் தோற்றுவித்தது. இதற்கிடையில் இந்துக்களுக்குக் கொடுமை இழைக்கப்படுவதாகத் தாளிகைகள் ஓலமிட்டன. பணக்கார நாடார்களும் பிற சாதியினரும் நடத்தும் விசுவ இந்து பரிச்சத் எனும் அமைப்பு இந்து மதத்துக்கு வந்துள்ள ''அறைகூவலை'' ஊரெங்கும் சுவரொட்டிகளை ஒட்டிப் பரப்பியது.


இதற்கிடையில் இந்து நாடார்களின் வளர்ச்சியால் தம் தனி உயர்வுக்கு ஏற்பட்டுள்ள அறைகூவலை எதிர்கொள்ள கிறித்துவ நாடார்கள், குறிப்பாக சீர்திருத்த சபையினர் ஆள் திரட்டினர். கிறித்துவ வழக்கறிஞர் சங்கம் என்பது போன்ற அமைப்புகளை நிறுவினர். பழஞ்சபைக் கிறித்துவர்களாகிய நாடார்களையும் மீனவர்களையும் கிறித்துவரான பிற சாதியினரனைவரையும் ஒன்றுகூட்டினர். நாளெல்லாம் நற்செய்திக் கூட்டங்கள் நடைபெற்றன. இந்தியா போன்ற ஏழை நாடுகளைக் குலைப்பதையே தம் குறிக்கோளாகக் கொண்டிருக்கும் அமெரிக்கா, கானடா, மேற்கு செருமனி போன்ற நாடுகளிலிருந்து நன்கொடைகள் என்ற பெயரில் பெருந்தொகையான பணம் வந்து குவிந்தது. இரு புறத்திலும் மக்கள் தாங்கள் விரும்பாமலே, தங்களை அறியாமலே அணி திரட்டப்பட்டனர்.

குமரி மாவட்டம் உருவான பின்னர் நாடார்களைப் போல மீனவர்களுக்கும் வேலைவாய்ப்புகள் பெருகின. தி.த.நா.கா.விலிருந்து இ.தே.கா.வுக்குச் சென்ற மீனவரான திருமதி லூர்தம்மாள் சைமன் தமிழக அமைச்சராக இருந்த காலத்தில் அவர் மீனவர்களுக்குப் பல வழிகளில் உதவினார். மீன்வளத்துறையிலும் பிற துறைகளிலும் வாணிகக் கப்பல்களிலும் கப்பற்படையிலும் அவர்கள் வேலைவாய்ப்புகளைப் பெற்றனர். வெளிநாடுகளுக்குச் சென்றும் பெரும் பொருள் ஈட்டினர். தங்கள் இருப்பிடமாகிய கடற்கரையை அண்டியுள்ள நாடார்களின் வயல்களையும் தென்னந்தோப்புகளையும் விலைக்கு வாங்கினர். இவ்வயல்களையும் தோப்புகளையும் பெரும்பாலும் நாடார்களே பராமரித்தனர். இவ்வாறு ஒரு புறம் உறவுகள் வளர்ந்தாலும் இன்னொரு புறம் கசப்புகளும் வளர்ந்தன. ஏழைகளாக இருந்த மீனவர்கள் செல்வ நிலையடைவதும் தம் நிலங்களை விலைக்கு வாங்குவதும் நாடார்களிடையில் அழுக்காற்றை ஏற்படுத்தின. அதே நேரத்தில் தாம் கல்வியிலும் செல்வ நிலையிலும் உயர்ந்தும் நாடார்கள் முன்போலத் தாழ்த்தியே நடத்துவது மீனவர்களிடையில், குறிப்பாக இளைய தலைமுறையினரிடையில் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக அவர்களது தமிழ் ஒலிப்பைக் கேலிப்பொருளாக்குவதுடன் பேருந்துகளில் மீனவப் பெண்களை(மாணவிகளை) நாடார் இளைஞர்கள் கேலி பேசுவதும் வழக்கமாக நடைபெறும் ஒரு நிகழ்ச்சியாகும். இதுவும் ஆத்திரம் வளர்வதற்குக் காரணமாகியது. பார்ப்பதற்கு எல்லாம் இயல்பாக இருப்பதாகத் தோன்றினாலும் உள்ளே எரிமலை குமுறிக் கொண்டிருந்தது.

இதே போன்று முகமதியர்களும் முனைப்பாக மதப்பணிகள் புரிந்து வந்தனர். எண்ணிக்கையில் இவர்கள் சிறு விழுக்காட்டினரே. இருப்பினும் இவர்களது பங்கு பெரிது.

1982 பெப்ருவரி 12, 13 ஆம் நாட்களில் இந்து மத ஓற்றுமை எழுச்சி மாநாடென்ற பெயரில் ஒரு மாநாடும் மாபெரும் ஊர்வலமும் நடந்தன. ஊர்வலத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். இதில் ஒரு மறையம் அடங்கியுள்ளது. வைகுண்டர் எனப்படும் முத்துக்குட்டியடிகளின் கல்லறை இன்று அய்யா வழியினர் எனப்படும் வைகுண்ட நெறியினரின் சாமிதோப்புப் பதி என்ற பெயரில் திகழ்கிறது. அதை நடத்தும் அறங்காவலர் குடும்பத்தைச் சேர்ந்த பால பிரசாபதி என்ற இளைஞரை இம்மாநாட்டை நடத்தியோர் மயக்கி வயப்படுத்தி விட்டனர். [5] அவரது வேண்டுகோளின் பேரில் கலந்து கொண்ட அய்யா வழி மக்களாலேயே மாநாடும் ஊர்வலமும் ''மாபெரும்'' எனும் அடைமொழிக்கு உரியவாயின.

இங்கு ''இந்து'' மதத்துக்கும் தமிழர்களுக்கும் உள்ள உறவைப் பற்றி ஒன்றைக் கூறியாக வேண்டும். ''இந்து'' மதம் என்று மேல்சாதியினரும் படித்தவரும் இந்து மத இயக்கங்கள் எனப்படுபவையும் கூறுவதும் தமிழகத்தின் சராசரி மக்களின் மதமும் வெவ்வேறானவை. சிவனும் திருமாலும் முருகனும் பிள்ளையாரும் காளியும் இந்துக்களின் தெய்வங்கள் என்று போற்றி அவற்றுக்கு சமற்கிருதத்தில் மந்திரங்களைச் சொல்லும் பார்ப்பனர்களை முகவர்களாக்கி அம்முகவர்களுக்குத் தரகுப் பணம் (தட்டில் போடும் காணிக்கை) கொடுத்து அத்தெய்வங்களிடமிருந்து எட்டி நின்று வணங்குவர் ''மேல்''வருப்பார். ஆனால் எளிய தமிழனோ ''தரகு'' கொடுக்கமாட்டான். ''காணிக்கைப் பெட்டியில்'' வேண்டுமானால் பணம் போடுவான். ஆனால் அவன் மதிக்கும் தெய்வங்கள் வேறுண்டு. காடன், பன்றிமாடன் உட்பட எண்ணற்ற மாடன்கள், கறுப்பண்ணன், மதுரை வீரன், இயக்கி, சாத்தன், காலன், கன்னி, பேய்ச்சி, முண்டன் என்று இப்பட்டியல் நீண்டுகொண்டே போகும். இத்தெய்வங்களுக்கு அவன் பூசை செய்வான்; அவற்றோடு தன் தாய்மொழியில் பேசி தன் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்வான்; அதாவது ''சங்கடங்கேட்பான்'', சினமேற்படும் போது நேருக்கு நேர் ஏசவும் செய்வான். அடிப்படையான குமுக மாற்றம் நிகழாமல் அவனை இத்தெய்வங்களிடமிருந்து பிரிக்க முடியாது. அதுவரை எந்த உத்தியைக் கையாண்டும் இவர்களது ''இந்து மதக் கூண்டுக்குள்'' அவர்களைக் கொண்டு வரவும் முடியாது.

இனி விட்ட இடத்துக்கு திரும்புவோம். மாநாட்டில் வீராவளியான உரைகள் நிகழ்த்தப்பட்டன. வெட்டுவோம், குத்துவோம் என்ற முழக்கங்கள் கேட்டன. இந்த வெற்றாரவாரம் கிறித்துவ மக்களைத் தம் பின்னால் அணி திரட்டி வைத்திருந்தோரின் பணியை எளிதாக்கியது. மிக எளிதாக மீனவர்களை அணிதிரளச் செய்ய இது போதியதாக இருந்தது.

(தொடரும்)

அடிக்குறிப்புகள்:

[1]இத் தீர்மானம் பற்றிப் பின்னர் எவரும் பேச்சே எடுக்கவில்லை ''கட்சியைக் காப்பாற்றுவதற்காகக் கொள்கையைக் கைவிட்ட'' தி.மு.க.வினர் அவ்வப்போது கட்சித் தொண்டர்களைக் கிளர்ச்சி பெறச் செய்யவும் நடுவணரசிடம் கொஞ்சம் ''பிடிமானம்'' வைத்திருக்கவும் ''பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டாலும் அதைத் தேவையாக்கும் சூழ்நிலைகள் இன்னும் நிலவுகின்றன'' என்று கூறுவது போன்றது இது. இது பதவியைப் பிடிப்பதற்காகக் கொள்கையைக் கைவிடும் போது அரசியல் கட்சிகள் பொதுவாகக் கையாளும் ஓர் உத்தி. ஆனால் தி.மு.க.வினரை விட தி.த.நா.கா.வினர் எய்திய வெற்றி பெரிது என்பதில் ஐயமில்லை.

[2]கலப்புத் திருமணங்களில் பெரும்பாலும் தகுதி மிகுந்த ஆடவர்களையே அவர்களை விட உயர்ந்த சாதிப் பெண்கள் மணந்து கொள்கின்றனர். இதன் மூலம் ஆடவனின் சாதியிலுள்ள பெண்களுக்கு இவ்வாறு நடைபெறும் ஒவ்வொரு கலப்பு மணத்தின் விளைவாகவும் ஒவ்வொரு தகுதி மிகுந்த மணமகன் குறைந்து விடுகிறான். ஒருவேளை கலப்பு மணம் பரவலாகும் போது இது ஒரு புதுச் சிக்கலாக வெடிக்கக் கூடும்

[3]இன்றைய நிலை சொன்னால் வெட்கக்கேடு. இன்று திராவிட இயக்கங்களே பார்ப்பனியத்தை எதிர்த்து ஒன்று திரண்டு நின்ற மக்களைத் தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காகத் தம்முள் மேல்ச்சாதி, பிற்படுத்தப்பட்டோர், தாழத்தப்பட்டோர் என்று பிளவுபடுத்தி அவர்களைத் தனித்தனியே பார்ப்பனர்களுடன் கூட்டுச்சேர உதவி மத வேறுபாடுகளை மதப் பகைமையாகக் கூர்மைப்படுத்த உதவி வருகின்றன.

[4]அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.வுக்கு. இன்று மீண்டும் அ.தி.மு.க.வுக்குத் திரும்பி விட்டார். இவர்களையும் ஒரு மக்கள் கூட்டம் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டிய இழிநிலை தான் கொடுமை?

[5]இவர் பின்னாட்களில் தான் பிறரின் கருவியாகிவிட்டதை உணர்ந்து இந்தக் கும்பலிலிருந்து விலகிவிட்டார் என்பது வேறு கதை. இருந்தாலும் நடந்தது நடந்தது தானே!

0 மறுமொழிகள்: