6.5.07

குமரி மாவட்டக் கலவரம் - ஒரு பகுப்பாய்வு (6)

கலவரத்தைத் தூண்டியோரின் உள்நோக்கங்கள்

இனி, கலவரத்தின் விளைவுகளையும் அதை நிகழ்த்தியவர்களின் விளக்கங்களையும் அத்தீய நோக்கங்களை முறியடிக்க வேண்டிய இன்றியமையாமையையும் அப்படி முறியடிக்காவிடின் விளையவிருக்கும் கேடுகளையும் அதை முறியடிக்கும் முறைகளையும் இக்கலவரம் நடந்தவிடத்து, தமிழகத்து, இந்திய, அனைத்துலகக் குறிதகவுகளையும் பற்றி ஒரு சிறு ஆய்வை மேற்கொள்வோம்.

இந்தியாவில் முகாமையான இரு போங்குகள் வரலாற்றுக் காலத்துக்கு முன்பிருந்தே நிலவி வந்திருக்கின்றன. ஒன்று பார்ப்பனர் சார்பானது, சாதிய ஒடுக்குமுறை, தீண்டாமை, பெண்ணடிமை ஆகியவற்றைக் கற்பிப்பது. மற்றொன்று அதை எதிர்ப்பது. இவ்விரு போங்குகளுக்கும் நிலவிய பகைமையே இந்தியாவினுள்ளும் தமிழகத்தினுள்ளும் நடைபெற்ற எண்ணற்ற படையெடுப்புகளுக்கு ஊக்கமூட்டின என்றால் மிகையாகாது. சென்ற நூற்றாண்டில் வட இந்தியாவில் ஆரிய சமாசம் என்ற பெயரில் ஒன்றும் மற்றொன்று பிரம்ம சமாசம் என்ற பெயரிலும் முறையே தம்மை அடையாளம் காட்டிக் கொண்டன. இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் வடக்கில் செறிவாக இருந்த முகம்மதியர்களுக்கெதிராகப் பார்ப்பனத் தலைவர்களும் இந்தியாவில் புதிதாக உருவாகியிருந்த குசராத்தி - மார்வாரி முதலாளிகளும் அணி திரண்டனர். இந்துத்தானி என்ற மொழியிலிருந்து இந்தி என்ற மொழியை இறுத்தெடுத்து அதற்குச் சமற்கிருத(தேவநாகரி) வரிவடிவம் கொடுத்தனர்.[1] இந்து, இந்தி, இந்தியா என்ற முழக்கத்தை முன் வைத்தனர்(காந்தியிடம் இந்தப் போங்கு மிகுந்திருந்தது.) இந்த இயக்கம் தான் பின்னர் இரா.சே.ச. என்ற பெயரைப் பெற்றது. சாதிவெறி பிடித்த பார்ப்பனர் தம் குமுக மேலாதிக்கத்தைக் காக்க இதைத் தலைமையேற்று நடத்தினர். அதனால் தான் அது ஒரு மத இயக்கம் என்ற மாயையை உருவாக்கியது. குசாரத்தி - மார்வாரிக் கூட்டம் இந்தியா முழுவதையும் சுரண்டுவதை நிலைநிறுத்தவும் வளர்ந்து வரும் பொதுமைப் போக்குக்கு ஓர் எதிரணியாகவும் இதற்கு உரமிட்டு வளர்த்து வருகிறது. இதற்கு எதிராகத் தமிழகத்தில் தோன்றிய திராவிடர் இயக்கம் இருந்தது. இரா.சே.ச.வுக்கு நடுக்கம் தந்த ஓர் இயக்கம் என்று கூற வேண்டுமானால் அது பெரியாரின் திராவிடர் இயக்கமே. (இன்று நிலமை மாறிவிட்டதென்று துணிந்து கூற முடியும்.) பார்ப்பனர்களை எதிர்த்த உயர்சாதி இந்துக்களும் அவர்களுக்குப் பின்னால் நின்ற தமிழகத்து வாணிகர்களும் முதலாளிகளும் இவ்வியக்கத்தை ஆதரித்தனர்.

இவ்வாறு தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ் மக்களின் நலன்களைப் பேணுவதற்காகத் தோன்றிய திராவிடர் இயக்கம் எனும் கோட்டையை உடைத்துக் கொண்டு இரா.சே.ச.வோ இந்தியோ தமிழகத்தில் நுழைய முடியவில்லை. ஆனால் நாளடைவில் நிலமை மாறியது.

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற முழக்கத்தை முன்வைத்து திராவிடக் கழகத்திலிருந்து பிரிந்த திராவிட முன்னேற்றக் கழகம் பிரிவினை (தமிழக விடுதலை) கேட்டது. அதன் பிரிவினைக் கோரிக்கைக்கு அஞ்சிய நடுவணரசு பல புதிய தொழில்களைத் தமிழ்நாட்டில் நிறுவியது. ஆனால் அவற்றைப் பொதுத்துறையில் நிறுவியது. அதுமட்டுமல்ல, அதுவரை தமிழ்நாட்டிலுள்ள வாணிகத் தொழில்துறைக் சாதியராயிருந்த நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் மற்றும் நாயுடுகளிடம் இருந்த இந்திய உயிர்க் காப்பீட்டுக் கழகம், இந்திய வங்கி, இந்திய ஓவர்சிசு வங்கி, தென்னிந்திய வங்கி ஆகியவற்றை நாட்டுடைமை என்ற பெயரில் பிடுங்கிக் கொண்டது. இத்தோடு இச்சாதியினரின் பின்னணி திராவிட இயக்கங்களுக்கு இல்லாது போயிற்று. குசராத்தி மார்வாரி மூலதன ஊடுருவலுக்குத் தடை ஏதுமில்லாது போயிற்று. 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது தி.மு.க. தலைமை கோழைத்தனமாகப் பதுங்கிக் கொண்ட பின் இந்தி எதிர்ப்பில் மக்களுக்கு நம்பிக்கை இல்லாது போயிற்று. அத்துடன் இன்னொன்றும் நிகழ்ந்தது.

பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு அளிக்கப்பட்ட கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளால் கல்வி பெற்று வந்தோர்க்குச் சில சிக்கல்கள் நேரிட்டன. தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்ட சலுகைகள் தமக்கு இடையூறாக இருப்பதாக பிற்படுத்தப்பட்டோர் கருதினார். குமுக அடிப்படையை மாற்றாமல் சலுகைகளாலேயே ஒரு குமுகத்தின் சிக்கல்களைத் தீர்த்துவிட முடியுமென்ற பொய்யான நம்பிக்கையை மக்கள் மனதில் ஏற்படுத்தியதின் விளைவு இது. உண்மையில் ஒன்று சேர்ந்து போராட வேண்டிய மக்களைத் தமக்குள் பகை கொண்டு போரிட வைத்து குமுகப் பகைவர்களுக்கு உதவும் வேலையை இச்சலுகைகள் இன்று தொடங்கிவிட்டன. சலுகைகளுக்கு உண்மையான தேவையிருந்த காலம் ஒன்றிருந்தது. அதைப் பயன்படுத்திக் குமுகத்தைப் பற்றியும் அதில் தமக்குரிய இடத்தைப் பற்றியும் அதைப் பெறப் போராட வேண்டிய தேவையைப் பற்றியும் அப்போராட்டத்தை நடத்த வேண்டிய விதத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள அச்சலுகைகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதவின. அப்போராட்டங்களை உரிய காலத்தில் உரிய விதத்தில் நிகழ்த்தாமையால் ஒன்று கூடிப் போராட வேண்டி மக்கள், குறிப்பாக பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் தம்முள் பிணங்கிப் போரிட அணி திரண்டு நிற்கின்றனர். எந்தக் கல்வியறிவு இவர்களிடையிலுள்ள குமுக ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து அவர்களை சிறிது சிறிதாக நெருங்கி வரச் செய்திருக்கிறதோ அதே கல்வியறிவு பழம் பகைமைகளை மிண்டும் புதிய வடிவில் மீட்கவும் பயன்பட்டிருக்கிறது. முன்பு திராவிட இயக்கத்தை உருவாக்கிய பார்ப்பனரல்லாத மேல்சாதியினர் இச்சலுகைகளால் பார்ப்பனர்களைப் போல் தாமும் தாக்குறுவதைக் கண்டு பார்ப்பனரோடு கூட்டுச் சேர்ந்து இரா.சே.ச.வைத் தாங்கி நிற்கின்றனர். பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரால் தம் வாய்ப்புகள் பறிபோவதாகக் கருதி அதே நச்சியக்கத்தைத் தாங்குகின்றனர். நடுவணரசில் ஒதுக்கீடுகளுக்காகப் போராடும் பிற்படுத்தப்பட்டோரால் தம் வாழ்வு பறிபோய்விடுமோ என்றஞ்சி தாழ்த்தப்பட்டோரும் இரா.சே.ச.வை ஆதரிக்கின்றனர். இதிலிருந்து நாம் பெறும் பாடம் மேலேயிருக்கும் வகுப்புகள் அல்லது சாதிகள் தம் கீழேயுள்ள வகுப்புகள் அல்லது சாதிகளின் ஒற்றுமை தமக்குத் தேவையாகும் போது அவர்களை ஒன்றுகூட்டுவர்; அது தமக்கு இடையூறாகும்போது அவ்வொற்றுமையை உடைப்பர். அவர்களது உதவியில்லாமல் மக்களை ஒன்று திரட்டுவது விதிவிலக்கான நிலைமைகளிலேயே முடியும். அவ்வாறு ஒன்றுதிரண்ட மக்களை ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களால் நடத்திச்செல்ல முடியாது என்பதாகும். இது திராவிட இயக்கத்தின் வரலாற்றிலிருந்து மட்டுமல்ல குமரி மாவட்ட வரலாற்றிலிருந்தும் பெறப்படும் பாடமாகும். அப்படிப்பட்ட நிலைமைகளில் முற்போக்கு விசைகள் அக்களத்தினுள் இறங்க வேண்டும். திராவிட இயக்க வளர்ச்சிக் காலத்தில் தம்மை முற்போக்காளர் என்று பறைசாற்றிக் கொள்ளும் பொதுமைக் கட்சியினர் அதற்கு எதிராக நில்லாமல் இணைந்து நின்று அந்தப் போராட்டத்தைக் கைக்கொண்டிருப்பார்களாயின் இன்று இம்மக்கள் இவ்வாறு தமக்குள் போரிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. அதனால் எந்த பார்ப்பனரல்லா மேற்சாதியினர் தம் நலனுக்காக கீழேயுள்ள அனைத்து மக்களையும் ஒன்றுகூட்டினரோ அதே கூட்டத்தினர் இன்று அம்மக்களைப் பிளவுபடுத்தும் நிலை உருவாகியுள்ளது.

இந்த அணிதிரட்டலை இரா.சே.ச. திறமையாகச் செய்கிறது. மக்களை இவ்வாறு பிளவுபடுத்தி தில்லியின் பின்னணியில் செயல்படும் விசைகள் தமிழகத்தை ஒடுக்குவதையோ பணம் படைத்தோர் ஏழையரைச் சுரண்டுவதையோ எதிர்த்து ஒன்றாக நின்று போராட வேண்டிய மக்களை எதிரெதிராக நிறுத்தியுள்ளது.

இந்தத் துயர நிலைக்கு இரா.சே.ச. மட்டும் காரணம் என்று சொல்ல முடியாது. திராவிட இயக்கத்துக்கும் பொதுமை இயக்கத்துக்கும் சமமான, ஏன் அதிகமான பங்கு கூட உண்டு. தமிழகம் சுரண்டப்படுவதை எதிர்த்துத் தொடர்ச்சியான போராட்டம் நடத்தாமல் தில்லிக்கு முகவர்களாகிவிட்ட திராவிட இயக்கத்தின் தலைவர்களும் உழைப்போரின் விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் கூலி பெற்றுக் கொடுத்துக் கூலி பெறும் போராட்டங்களையே நடத்திக்கொண்டிருக்கும் பொதுமைக் கட்சியினரும் இரா.சே.ச.வினருக்கு மக்கள் மனதில் பரிவு ஏற்படப் பெருமளவில் உதவியுள்ளனர்.

இந்தியைப் படித்து மாவட்ட ஆட்சித் தலைவராகலாம், காவல்துறை அதிகாரியாகலாம் என்று கனவு காணும் இளைஞர்களால் இந்தி உள்ளே நுழைந்து விட்டது; இந்திக்காரர்களும் நுழைந்துவிட்டனர். அதே நேரத்தில் தமிழ் மக்கள் கொத்தடிமைகளாக உலகெங்கும் விலையாகிக் கொண்டிருக்கின்றனர். ஆக, அரசியல், பொருளியல், மொழி, மதம் ஆகிய நான்கு முனைகளிலும் இரா.சே.ச. சார்பான நிலை மக்களிடையில் தோன்றிவிட்டது. பின்னர் அது நுழைய வேண்டியது தானே! தமிழகம் அதன் சுவையைக் குமரி மாவட்டத்தில் கண்டு விட்டது. அத்துடன் இந்தியை ஏற்றுக் கொண்டால் தமிழர்களாகிய நாம் அதிகாரிகளாக முடியாது, வடவர் தாம் நம் அதிகாரிகளாக வருவர் என்பதையும் மக்கள் கண்டுவருகின்றனர். பொருளியலில் நாம் ஒவ்வொரு முனையிலும் இரக்கமின்றிச் சுரண்டப்படுவதையும் கண்கூடாகக் கண்டுவருகிறார்கள். அதனால் தான் நாம் உறுதியாகக் கூறுகிறோம், இரா.சே.ச. என்றும் இந்த மண்ணில் நிலைத்து நிற்க முடியாது என்று.

மக்களைப் பிரிப்பது தான் இரா.சே.ச.வின் நோக்கம் என்பது புளியங்குடி நிகழ்ச்சியாலும் நன்கு நிறுவப்பட்டு விட்டது. குமரி மாவட்டத்தில் மதத்தைப் பிடித்துக்கொண்டு நின்ற இரா.சே.ச. புளியங்குடி கலவரத்தில் சாதியைப் பிடித்துக் கொண்டு நின்றது. அங்கு மதத்தைப் பிடித்திருந்தால் இன்று தாழ்த்தப்பட்டோராகவும் பிற்படுத்தப்பட்டோராகவும் பிளவுண்டு கிடக்கும் ''இந்து'' மதத்தினர் ஒன்றுகூடும் வாய்ப்பு இருந்திருக்கும், அல்லது பிளவு விரியாமலாவது இருந்திருக்கும்.[2] ஆனால் அது தான் அவர்களது நோக்கமல்லவே!

குமரி மாவட்டத்திலும் புளியங்குடியிலும் கிறித்துவ, முகம்மதிய இயக்கங்களும் இதே பணியைத் தான் செய்தன. மதத்தைக் குமரி மாவட்டத்தில் பிடித்துக் கொண்ட அவை புளியங்குடியில் கிறித்துவர் முகமதியர் தாழ்த்தப்பட்டோர் கூட்டணி பற்றிப் பேசினர். ஆனால் கலவரத்தின் போது தாழ்த்தப்பட்டவர்களைத் தனியாக விட்டு விட்டு ஒடி ஒளிந்து கொண்டனர். இந்த வகையில் இந்து, முகமதிய, கிறித்துவ மத இயக்கங்களின் நோக்கம் ஒன்றாகவே இருப்பதை நாம் காண முடியும். மக்கள் தம் போராட்டத்தில் ஒன்று சேராமல் பார்த்துக் கொள்வது தான் அந்த நோக்கம்.

அடுத்து நமக்குத் தெரியவருவது குமரி மாவட்டத்தில் நடைபெற்றது அடிப்படையில் சாதிக் கலவரமே என்பது. தொடக்க காலத்தில் உள்நாட்டுப் பகுதிகளில் நாயர் - குறுப்புகளுக்கும் நாடார்களுக்கும் நடைபெற்ற சாதிப் பூசல்கள் இந்து - கிறித்துவர் மோதல்களென்று விளக்கப்பட்டன. ஏனென்றால் இங்குள்ள நாடார்களில் பெரும்பான்மையினர் கிறித்துவர்களாகவும் எதிரணியிலிருந்தோர் இந்துக்களாகவும் இருந்தனர். பின்னர் நாடார் - மீனவரிடையில் நடைபெற்ற சாதிப் போரையும் கிறித்துவர் - இந்துக்களின் மோதல் என்றே கூறினர்; இங்கு நாடார்களில் பெரும்பாலோர் இந்துக்களும் மீனவர்கள் கிறித்துவர்களுமாவர். ஆனால் மீனவர்களைத் தாக்கியதில் குறிப்பாகப் பள்ளத்தில் கிறித்துவ நாடார்களும் கலந்துகொண்ட செய்தி இருட்டடிப்பு செய்யப்பட்டது. இவ்வாறு இருபுறத் தாக்குதலாக நடைபெற்ற சாதிச் சண்டைக்கு மதச்சாயம் பூசப்பட்டது. இவ்வாறு மதச்சாயம் பூசி நாடார்களைத் தமக்குள் மத அடிப்படையில் மோதவிட முயன்றனர். ஆனால், இந்து நாடார்களைத் தாக்கும் போது அவர்களுக்கு கிறித்துவ நாடார்களும் கிறித்துவ நாடார்களைத் தாக்கும் போது அவர்களுக்கு இந்து நாடார்களும் முழு உதவி வழங்கவில்லை என்பதைத் தவிர மோதல் சாதித்தன்மையிலிருந்து மதத்தன்மைக்கு மாறவேயில்லை.

இம்மோதலை உருவாக்கியவர்கள் இதன் மூலம் தமிழகம் முழுவதும் மாபெரும் அறுவடைக்குக் காத்திருந்தனர்.

இந்து - கிறித்துவர் என்று மோதல் வந்தால் குமரி மாவட்டத்திலுள்ள நாடார்கள் மட்டுமல்ல, பிற பகுதிகளிலுள்ள நாடார்களும் தாழ்த்தப்பட்டவர்களும் தத்தம் சாதிகளுக்குள் இரண்டிரண்டு கூறுகளாகப் பிரிவர் என்று கனவு கண்டனர். இரு கனவுகளும் பொய்த்துப் போயின. நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்டுப் போராடி ஒரளவு உலகைப் பற்றியும் குமுகத்தைப் பற்றியும் புரிந்து கொண்டு குமுக ஒடுக்குமுறையாலும் பொருளியல் புறக்கணிப்பாலும் ஏற்பட்ட இழிவுகளையும் துயரங்களையும் மீறத் தொடங்கியுள்ள மக்களுக்கு தம் சாதிப் பாதுகாப்புணர்வு அவ்வளவு எளிதில் மறைந்து விடும் என்று இந்த நச்சுப்பாம்புகள் கண்ட கனவு நனவாகவில்லை.

அடுத்து, இந்த மோதலிலிருந்து இரா.சே.ச.வின் புரவலர்களான குசராத்தி - மார்வாரிக் கூட்டணியினர் அறுவடை செய்ய நினைத்த விளைச்சல் ஒன்றுண்டு.

சென்ற நூற்றாண்டில் நெல்லை மாவட்டத்தில் சாணார்கள் வாழ்ந்த பகுதிகளில் கிடைத்த பனைபடுபொருட்களையும் சம்பை(கருவாடு)யையும் வாணிபம் செய்வதற்காகச் சாணார்கள் வண்டிகளில் வடக்கு நோக்கிச் கிளம்பினார்கள். வழிப்பறிக் கொள்ளைக்காரர்களாகிய மறவர்களிடமிருந்து தற்காப்புக்காக இருபத்தைந்து ஐம்பது வண்டிகள் கொண்ட சாத்துகள் ஒருசேரப் போய்த்திரும்பின. இவ்வண்டிகள் நின்று இளைப்பாறுவதற்கு வண்டிப் பேட்டைகள் நிறுவப்பட்டன. இவ்வண்டிப் பேட்டைகளைப் பராமரிப்பதற்காகத் தண்டப்பட்ட மகமைப் பணம் வாணிக முதலாகி சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை முதலிய ஊர்களிலிருந்து தொடங்கி வெங்காலூர்(பெங்களூர்) வரையில் விரிவடைந்த பெரும் வாணிகக் குமுகமொன்றை வளர்த்தது. இவ்வாணிக முதல் சிறுகச் சிறுகத் தொழில் முதலாகியது. வங்கிகள் அரசுடைமையாக்கப்பட்ட பின் தம் மூலதன அடித்தளத்தை இழந்துவிட்ட செட்டியார், நாயுடு ஆகியோருக்குப் பின் தமக்குப் போட்டியாக நாடார்களின் இம்மூலதனம் எழுவதைக் கண்டு இதையும் முன் போல (செட்டியார், நாயுடுகளின் மூலதனத்தின் நேர்வில் போல்) முளையிலேயே கிள்ளிவிடும் முயற்சியாகவே இம்மதப் பூசல் விளங்குகிறது. இது எப்படி?

தமிழ் நாட்டில் எல்லாப் பகுதிகளிலும் நாடார்கள் வாழ்கின்றனர். எல்லா இடங்களிலும் இந்துக்களாகவும் கிறித்துவர்களாகவும் கலந்து வாழ்கின்றனர். ஆனால் அவர்கள் தமக்குள் மோதிக் கொள்ளத் தக்க வகையில் மொத்த மக்கள் தொகையின் எண்ணிக்கையில் இல்லை. அப்படி இருக்கும் இடங்களிலும் கிறித்துவர்களின் எண்ணிக்கை குறைவே. எனவே எதிர்த்து நிற்க மாட்டார்கள். எதிர்த்து நிற்கத் தக்க எண்ணிக்கையிலும் செறிவிலும் கிறித்துவ நாடார்கள் உள்ள இடம் குமரி மாவட்டமே. இங்கு மதப் பகைமையை வளர்த்து இருவருக்குள்ளும் மோதலை உருவாக்கி விட்டால் அதன் எதிரொலி தமிழகமெங்கும் இருக்கும். இது ஒன்றுபட்ட நாடார்களின் மூலதன வலிமையை உடைக்கும். உடைபட்ட இந்த மூலதனம் எளிதில் சிதைந்து விடும். இப்படிச் செல்கிறது இந்தக் கணக்கு.[3] கிறித்துவ மத இயக்கங்களுக்கு 'நன்கொடை'யளித்து நற்செய்திக் கூட்டங்களை நடத்தும் விசைகளுக்கும் இந்தக் குறிக்கோள் உண்டு. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு, அவன் மும்பைக் கூத்தாடியாயினும் நியூயார்க்குப் கூத்தாடியாயினும் கொண்டாட்டம் தானே!

அதேபோல் தென்னந்தோப்புகளிலிருந்து கிடைக்கும் வருமானம் சிறுகச் சிறுக நாகர்கோவிலில் கடைகளில் மூலதனமாகிறது. இதன் மூலம் பிற சாதியாரும், குறிப்பாக வேளாளர்களும் முகம்மதியர்களும் நடத்தி வரும் வாணிகம் தாக்குதலுக்குள்ளாகிறது. நாடார்கள் தமக்குள் அடித்துக் கொண்டு தோப்புகளை அழித்துக் கொண்டால் இன்று முளைத்திருக்கும் போட்டி ஒழிவதுமல்லாமல் அடிநாள் போல் மீண்டும் நமக்கு நாடார்கள் அடிமையாவார்கள் என்றும் இவர்கள் தம் ''மதப் பணிகளை'' முடுக்கி விட்டனர்.

இனி, இரா.சே.ச. கூறும் சில கருத்துகளை நாம் ஆய வேண்டியுள்ளது. ''கிறித்துவம், முகமதியம், பொதுமை ஆகியவை வெளிநாட்டவர்களின் கைக்கூலி இயக்கங்கள்; பழஞ்சபைக் கிறித்துவர்கள் உரோமுக்கு நம் நாட்டைக் காட்டிக் கொடுக்கிறார்கள், சீர்திருத்த சபையினர் இங்கிலாந்துக்கு அல்லது ஐரோப்பிய நாடுகளுக்குக் காட்டிக் கொடுக்கின்றனர், முகம்மதியர் பாக்கித்தானுக்கும் அரபு நாடுகளுக்கும் காட்டிக் கொடுக்கின்றனர்,[4] பொதுமைக் கட்சியினர் உருசியாவுக்கும் சீனத்துக்கும் காட்டிக் கொடுக்கின்றனர்''. உண்மை ஒப்புக் கொள்கிறோம். மரபுப் பொதுமைக் கட்சியினரும் இடங்கை மற்றும் தீவிர மார்க்சிய - லெனினியக் குழுக்களும் வழக்கமான தன்னலத்தினாலும் அறியாமையாலும் உள்நாட்டுச் சிக்கல்களை விட உருகிய, சீனச் சிக்கல்களுக்கே முதலிடம் தருகின்றனர்.

இவர்களைப் பற்றியெல்லாம் கூறிவிட்டீர்கள் இரா.சே.ச.வினரே! ஆனால் நீங்கள் யார்? தமிழில் ஓம் என்று எழுதுவதை ॐ என்று எழுதுகிறிர்களே, நீங்கள் யார்? இந்தியே எல்லோருக்கும் தாய்மொழி என்கிறிர்கள், தமிழர்களைப் பொறுத்தவரையில் உங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள உறவு யாது? பிள்ளையார் சதுர்த்தியையும் தீபாவளியையும் ஆயுத பூசையையும் தூக்கி வைத்து ஆடும் இரா.சே.ச.வினரே உங்களுக்கும் தமிழர்களாகிய எங்களுக்கும் உள்ள உறவின் தன்மை என்ன? திருநீறு இட்டுக் கொள்ளும் எங்கள் நெற்றிகளில் குங்குமம் இடவருகிறீர்களே, ஏன்? நீங்கள் எங்கள் கைகளில் கட்டவரும் காப்புக் கயிறு (இரட்சாபந்தன்) உண்மையில் எங்களுக்கு நீங்கள் இட விரும்பும் விலங்கில்லையா? நீங்கள் உண்மையில் எங்கள் நலன்களை, எங்கள் தாய்மொழியை, எங்கள் தமிழகத்தை இந்திக்காரனுக்கும் குசராத்திக்கும் இராசத்தான் மார்வாரிக்கும் காட்டிக்கொடுக்கும் கைக்கூலிகளில்லையா?

இந்துபூமி என்ற இதழில் டி.இராமன் என்ற ஒருவர் கூறியிருக்கிறார், இரா.சே.ச. ஒன்று தான் உண்மையான நாட்டுப் பற்றுள்ள ஒரே இயக்கம் என்று! திராவிட இயக்கத்துக்குக் கூட நாட்டுப்பற்று இல்லை என்று! அட, இராமா! தமிழர்களைப் பொறுத்தவரை உண்மையான நாட்டுப் பற்றும் மொழிப்பற்றும் மக்கட்பற்றும் உள்ள ஒரே இயக்கம் திராவிட இயக்கமே. திராவிட இயக்கத்தின் நாட்டுப் பற்றைப்பற்றி இரா.சே.ச. கேள்வி கேட்க வந்துவிட்ட துணிவு நமக்கு வியப்பூட்டுகிறது. யாருக்கு எதில் முடிவு சொல்வதென்ற வரையரை இல்லாமல் போய்விட்டது. நாட்டையும் மக்களையும் மொழியையும் காட்டிக்கொடுக்கும் இரண்டகர்கள், வடநாட்டு மார்வாரிகளின் கைக்கூலிகள் தமிழக மக்களின் உரிமைப் படையை (இன்று அது சிதைந்த நிலையிலிருந்தாலும்) பார்த்து நாட்டுப் பற்றற்ற கூட்டம் என்று கூறுவதைப் பார்த்து இன்று நாம் பெருமூச்சு விட வேண்டியவர்களாகவே இருக்கிறோம் என்பது ஒரு கசப்பான உண்மை.[5]

இரா.சே.ச. மக்களைத் தமக்கே எதிரான கருவியாகப் பயன் பயன்படுத்துகிற தென்பதற்கு ஒரு சான்றையும் குமரி மாவட்டம் தந்துள்ளது. தாணுலிங்கரை இந்து முன்னணித் தலைவராக்கியது பற்றி முன்பே குறிப்பிட்டோம். அத்துடன் அது நிற்கவில்லை. அவரது பெயரின் பின்னால் நாடார் என்ற அடைமொழியிருப்பதை அது நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது. தமிழகத்து முகாமையான நகர்களிலும் தமிழ்நாட்டுக்கு வெளியிலும் செல்வம் படைத்த நாடார்கள் வாழும் பகுதிகளுக்கு அவரை அழைத்துச் சென்று இலக்ககணக்கான, ஏன், கோடிக்கணக்கான பணத்தை இவர்கள் சேர்த்துவிட்டார்கள். குமரி மாவட்டத்தில் இவருக்குச் செல்வாக்கு இல்லாதிருந்தும் தாளிகைகள் தந்த விளம்பரத்தால் இவருக்கு இங்கு பெரும் செல்வாக்கு இருப்பது போல் காட்டி இந்த ஏமாற்று முடிந்துவிட்டது.

ஆனால் தமிழகம் விழித்துக் கொண்டுள்ளது. திராவிட இயக்கம் தன் பாதையில் செய்த தவறுகளையும் பொதுமை இயக்கத்தினர் செய்த சூதுகளையும் கண்டு தெளிந்து உண்மையான பொதுமைக் கோட்பாடு என்ன, அது எவ்வாறு திராவிடக் இயக்கத்தின் குறிக்கோள்களுடன் உயிரியக்கமாகப் பொருந்துகிறது என்பதைப் புரிந்துகொண்டுள்ளது. இந்தப் புரிதலின் முன்னே இரா.சே.ச.வாயினும் சரி கிறித்துவ இயக்கங்களாயினும் சரி முகம்மதிய இயக்கங்களாயினும் சரி இந்தியப் பொதுமை இயக்கங்களாயினும் சரி எதிர் நிற்க முடியாது என்பதைத் தெளிவு படுத்தியாக வேண்டும்.

(தொடரும்)

அடிக்குறிப்புகள்:

[1]ராம்மோகன் என்பவர் எழுதிய Hindi Against India என்ற நூலில் மேற்கொள். ஆட்சிமொழிக் குழுவில் சுனீதி குமார் சாட்டர்சி கூறியது. சாட்டர்சி இந்தி ஆட்சிமொழியாவதை மிக விருப்புடன் ஆதரிப்பவர்.

[2]மதத்தைப் பிடித்தால் நெல்லை மாவட்டத்தின் அந்தப் பகுதியில் இந்துக்களாகவும் கிறித்துவர்களாகவும் உள்ள தாழ்த்தப்பட்டவர்களுக்குள் பூசலை உருவாக்க மட்டுமே வாய்ப்பு உண்டு. ஆனால் குமரி மாவட்டத்தில் இந்து நாடார்களை மதமென்ற வடிவில் சாதிச் சண்டைக்கிழுக்க மீனவர்கள் இருப்பதைப் போன்று அங்கு வலுவுள்ள கிறித்துவச் சாதி எதுவும் இல்லை. எனவே அங்கு(நெல்லை மாவட்டத்தில்) அந்த வாய்ப்பு மத மோதலாக நடைமுறைக்கு வர வழியில்லை.

[3]ஈத்தாமொழியில் கலவரம் நடந்து கொண்டிருந்த போது பிர்லா என்ற வட நாட்டுப் பணமுதலை கமுக்கமாக அங்கு வந்து போனதாக ஒர் இந்து மதத் ''துறவி'' தன்னிடம் கூறியதாக நண்பர் ஒருவர் கூறினார். பகுத்தறிவு இயக்கத்தைச் சேர்ந்தவரான அந்த நண்பரை இந்து மத உணர்வுள்ளவரென்று கருதி இதைக் கூறினாராம்.

[4]அமெரிக்காவைக் கூறமாட்டார்கள், ஏனென்றால் பொதுமை எனும் எதிரியை எதிர்ப்பதிலும் இந்திய மக்களைச் சுரண்டுவதிலும் இவர்களுக்கு நம்பகமான கூட்டாளி அது.

[5]20 ஆண்டுகளுக்கு மேலாயிற்று இதை எழுதி. இன்றைய பாராளுமன்றத் தேர்தல் என்ற ஏமாற்றைப் பயன்படுத்தி திராவிட இயக்கத்தின் வலிவு மிக்க பிரிவான தி. மு.க. இன்று மாநிலத்திலும் தில்லியிலும் வலுவான நிலையிலிருந்துகொண்டு முழு இந்தியாவையும் விற்றுக் காசாக்கிக்கொண்டிருக்கிறது.

1 மறுமொழிகள்:

Albert சொன்னது…

நான் பிறந்து வளர்ந்த பெருமை மிகு குமரியை சீரழிக்க RSS செய்த ப்ரம்ஹ பகீரதங்களை தங்களை போன்ற ஒரு அனுபவமிக்கவர் நினைவு படுத்தியதற்கு பாராட்டுக்கள். ஆனால் இந்த அகஸ்தீஸ்வரம் இந்து நாடார்கள் இன்றும் அந்த சதியை புரிந்துகொள்ளாமல் ராமகோபாலன் போன்றோர் சொல்லும் பொய்யான " கிறிஸ்தவ நாடார்கள் எல்லாம் வெளி நாட்டு காரர்கள்" என்று நம்பி கொண்டு இருக்கிறார்கள்.
அவர்களும் இந்த கட்டுரையை படித்தால் நன்றாக இருக்கும்.
நான் படித்த மிகவும் அறிவுபூர்வமான கட்டுரை இது.
வாழ்த்துக்கள்
(Naan oru matha vaathi illai)