6.5.07

குமரி மாவட்டக் கலவரம் - ஒரு பகுப்பாய்வு (2)

மாவட்டத்தின் மக்கள் வரலாறு

இம்மாவட்டம் மாறி மாறி சேர, பாண்டிய அரசர்களின் செல்வாக்கின் கீழ் இருந்திருக்கிறது. பாண்டியர்களின் ஆட்சியின் கீழிருந்தமைக்குச் சான்றாக பூதப்பாண்டி, அழகியபாண்டிபுரம் போன்ற ஊர்ப் பெயர்கள் நிலவுகின்றன. பாண்டியன் அணை என்ற பெயரில் ஒர் அணைக்கட்டு பெருஞ்சாணி அணையின் கீழே அமைந்துள்ளது. தென்பாண்டி நாட்டின் ஒரு பகுதியாகவும் இப்பகுதி குறிக்கப்படுகிறது. நெல்லை மாவட்டத்தைப் பாண்டி என்றும் நெல்லை மாவட்டத்தினரைப் பாண்டிக்காரர்கள் என்றும் இங்குள்ள மக்கள் அழைப்பதை இப்பகுதி சேரர்களின் அல்லது வேறு சிற்றரசர்களின் கீழ் நெடுங்காலம் இருந்தது என்பதற்குச் சான்றாகக் காட்டலாம்.

இம்மாவட்டத்தில் தோவளை, அகத்தீசுவரம், கல்குளம், விளவங்கோடு ஆகிய வட்டங்கள் முறையே கிழக்கிலிருந்து மேற்காக அமைந்துள்ளன. தோவாளை வட்டத்தின் பெரும்பகுதி நாஞ்சில் நாடு என்று அழைக்கப்படுகிறது. நாஞ்சில் என்ற சொல்லுக்கு கலப்பை என்பது பொருள். இப்பகுதி பெரும்பாலும் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுக்கு இரண்டு பருவங்கள். ஏறக்குறைய 8 முதல் 10 மாதங்கள் வரை மழையுண்டு. குத்திறக்கமாகச் சாயும் நிலத்தில் நீரின் கசிவு எப்போதும் இருக்கும். இக்குத்துச் சாய்வில் சிறு சிறு குளங்களை அமைத்து அவற்றின் கீழுள்ள நிலத்தை அகப்பற்று என்று அழைக்கிறார்கள். மலையிலிருந்து அடித்து வரப்படும் வண்டலால் இயற்கையாகவே உரவளமிக்க மண்ணைக் கொண்டது இந்ந நிலப்பரப்பு.

நாஞ்சில் நாட்டில் வாழ்வோரில் பெரும்பாலோர் மருமக்கள் வழி வேளாளர் எனப்படும் நாஞ்சில் நாட்டு வேளாளராவர். பள்ளர்களும் நாடார்களும் குறைந்த எண்ணிக்கையில் வாழ்கின்றனர். இவர்களிடையில் மருமக்கள் தாய முறை எனும் பெண்ணுரிமைக் குமுக அமைப்பு இருந்து அண்மையில் தான் மறைந்தது. இவர்கள் குமரி மாவட்டத்தை அடுத்த நெல்லை மாவட்டத்திலிருந்து வந்து குடியேறியிருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது. மேலும் நாஞ்சில் நாட்டு வேளாளர்கள் பேசும் மொழி பிற மக்களின் பேச்சு வழக்குகளிடமிருந்து மாறுபட்டு நெல்லை மாவட்ட வேளாளர்கள் பேசும் மொழி வழக்கை ஒத்திருக்கிறது. சேர நாட்டு அரச மரபைத் தழுவி இவர்கள் மருமக்கள் வழியைக் கடைப்பிடித்திருக்கலாம். ஆனால் நாயர்களின் தாய்வழி முறைக்கும் இவர்களது மருமக்கள் வழி முறைக்கும் சில அடிப்படை வேறுபாடுகள் உள்ளன.

நாஞ்சில் நாட்டு வேளாளர்களிடையில் நிலவிய மருமக்கள் வழியை எதிர்த்துப் போராடியோரில் கவிமணி தேசிக வினாயகர் சிறப்பிடம் பெறுகிறார். அவர் எழுதிய மருமக்கள் வழி மான்மியம் என்ற பாவியம் இப்போராட்டத்தில் முகாமைப் பங்கு ஏற்றது. இன்று இவ்வமைப்பு சட்டத்தின் மூலம் அகற்றப்பட்டுவிட்டது.

நாஞ்சில் நாட்டை நாஞ்சில் வள்ளுவன் என்ற கழகக்காலக் குறுநில மன்னன் ஆண்டதாகக் கழக இலக்கியம் கூறுகிறது. அவனைச் சார்ந்த மக்கள் இன்று எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை.

கடற்கரையைத் தொட்டு அமைந்திருக்கும் அகத்திசுவரம் வட்டத்தில் கடற்கரையில் மீனவர்களும் அதை அடுத்த பகுதியில் நாடார்களுமாகச் செறிந்து வாழ்கிறார்கள். அகத்திசுவரம் வட்டம் என்று வழங்கப்படும் பகுதி முன்பு புறத்தாய நாடு என்று வழங்கப்பட்ட பகுதியாகும்.

நாடார்கள் எனும் சாதியினர் ஒரு வரலாற்றுப் புதிராகவே உள்ளனர். இன்று தமிழகத்தில் மேலோங்கி நிற்கும் பெரும்பான்மையான சாதிகளும் இது போன்ற புதிர்களாகவே உள்ளன. ஆனால் நாடார்களின் புதிர் ஒர் இருமடிப் புதிர்.

நாடார்களைப் பிற சாதியார் சாணார்கள் என்று குறிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு அழைக்கப்படுவதை நாடார்கள் இழிவாகக் கருதுகிறார்கள். சாணார், நாடார் எனும் இரு சொற்களும் ஒரே சாதியினரையே குறிக்கும் சொற்கள் என்பதைத் தென் மாவட்டங்களில் வாழும் மக்கள் அறிவர். ஆயின் கோவை போன்ற மாவட்டங்களில் தொழில்-வாணிக நிமித்தமாகக் குடியேறியுள்ள தென் மாவட்டத்து நாடார்களுக்கும் அங்கு வாழும் சாணார்களுக்கும் தொடர்பு ஏதும் இல்லாததால் அங்குள்ள மக்களுக்கு இவ்விரு பிரிவு மக்களும் வெவ்வேறு சாதியினராகவே தோன்றுகின்றனர். இதிலிருந்து நமக்குத் தோன்றுவது, சாணார் என்பது பனையேறும் மக்களின் பெயர். இது தமிழகம் முழுவதற்கும் பொருந்தும். குமரி மாவட்டம் நெல்லை மாவட்டம் ஆகிய பகுதிகளில் ஊர்த் தலைவர்கள் நாடான்கள் எனப்பட்டனர்.[1] ஊர்த்தலைவனும் ஊராரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாக, பல நேர்வுகளில் ஒரே குடும்பத்தினராக இருந்ததால் நாளடைவில் ஊர்த்தலைவன் பட்டத்தை ஊர் மக்களும் தமக்கு வைத்துக் கொண்டனர்.

சாணார் என்ற சொல்லுக்குச் சரியான பொருள் தெரியவில்லை. சான்றோர் என்பதன் மருவே சாணார் என்பர். சான்றோர் → சான்றார் → சாணார் என்பார் தேவநேயப் பாவாணர். இலங்கையில் பனை யேறுவோருக்கு நளவர் என்று பெயர். நறவு = கள், நறவர் = கள் இறக்குவோர். நறவர் → நளவர். இது போன்ற பொருட்பொருத்தம் எதுவும் சான்றோர் என்ற சொல்லுக்கோ சாணார் என்ற சொல்லுக்கோ பனையேறும் தொழிலோடு இல்லை.

சான்றாண்மை என்ற பண்புப் பெயரில் ஒரு சாதி எழ வேண்டுமாயின் அவர்கள் அரசியலில் அல்லது போரில் சிறப்புற்ற தலைவர்களாயிருந்திருக்க வேண்டும். அப்படியாயின் அவர்கள் பனையேற வேண்டிய தேவை என்ன என்ற கேள்வியும் எழுகிறது. எதிரியின் படையெடுப்புகளின் விளைவாக உள்நாட்டுப் படை தோல்வியுற்ற போது தண்டித்துத் துரத்தப்பட்ட படைத் தலைவர்கள் இந்நிலையடைந்திருக்கலாம்.

பள்ளர்களில் சாணாப் பள்ளர்கள் என்றொரு பிரிவினர் உள்ளனர். இவர்கள் சாத்தனை வழிபடுகின்றனர். உயிர்ப் பலி ஏற்காத சமணச் சாத்தன் இவன். சமணர் என்ற சொல்லிலுள்ள சகர முதல் சானா என்று ஆரியிருக்கும். சானாப்புள்ளி → சாணாப்புள்ளி → சாணார். எடு. வேனாப்புள்ளி = வெள்ளாளப் புள்ளி, தூனாப்புள்ளி = துலுக்கப் புள்ளி. சமணர்கள் மீது இடைக் காலத்தில் நிகழ்த்தப்பட தாக்குதல்களின் விளைவாக இறுதியில் சிலர் பனை ஏறும் தொழிலை மேற்கொண்டிருக்கலாம்.

கரிகாலன் ஈழத்திலிருந்து சிறைப்பிடித்து வந்த பன்னீராயிரம் போர்வீரர்களைக் காவிரிக்குக் கரைபோடப் பணித்தான் என்பதை அறிவோம். அப்போது அடிமை வேலை பார்க்க மறுத்தோரை யானைக்காலில் இடறப் பணித்தான் கரிகாலன். அதற்கு அவர்கள் அஞ்சாமல் நிற்கவே அவர்களை விடுவித்ததாகவும் ஆனால் தொடர்ந்து கொடுமைகள் புரிந்ததாகவும் நாடார்களின் வரலாறு கூறுகிறது. இவர்களும் இச்சாதியினரில் கலந்திருக்கலாம். இவ்வாறு சாணார்களின் தோற்றம் பல காரணங்களின் விளைவாக இருக்கலாம்.[2]

சாணார் என்ற சொல்லுக்குச் சான்றோர் என்ற சொல்லை மூலமாகக் கூறிப் பெருமைப்படும் நாடார்கள் தங்களை அப்பெயரால் அழைப்பதை விரும்புவதில்லை. கோனார் என்ற சொல்லுக்கு அரசன் என்று பொருள்படும் கோன் என்ற சொல்லை மூலமாகக் காட்டும் ஆயர் குலத்தார் தம்மைக் கோனார் என்று அழைப்பதை விரும்பாமல் இன்று யாதவர் என்று அழைத்துக் கொள்வது போன்றது தான் இதுவும்.

ஒவ்வொரு சாதிப் பெயரும் அச்சாதியின் ஒரு குறிப்பிட்ட வாழ்நிலையைக் குறிக்கிறது. வாழ்நிலையில் மேம்பாடடைவோருக்குப் பழைய பெயர் இழிவாகத் தோன்றும். எனவே அவர்கள் புதிய பெயர்களைத் தேடிச் சூட்டிக் கொள்ளும் போது அவ்வாறு மேம்பாடடையாதோரும் அவர்களைப் பின்பற்றுகிறார்கள்.

நாடார்கள் குமுகத் தரத்தில் உயர்நிலையிலிருந்து கீழிறங்கியவர்களாயிருக்கக் கூடும் என்ற எண்ணத்தை உருவாக்கும் சான்று ஒன்று உள்ளது. பெண்களுக்குக் கைம்மையில் கடும் நோன்பும் மறுமணமோ மணவிலக்கோ இன்மையுமே அது. (இன்று இவை தளர்ந்து வருவது மகிழ்ச்சிக்குரியது). இவற்றை மீறுவோரை பிழுக்கைகள் என்று ஒதுக்கி வைக்கும் வழக்கம் அண்மையில் தான் மறைந்திருக்கிறது.

குமரி மாவட்டத்து அகத்திசுவரம் வட்டத்தில் வாழும் நாடார்களில் பெரும்பாலோர் சென்ற இருநூறு ஆண்டுகளுக்குள் அங்கு குடியேறியவராகவே காணப்படுகின்றனர். நாயக்கர்கள் மதுரையிலிருந்து தெற்கு நோக்கிப் பரவிய போது அங்கு வாழ்ந்த மக்களில் பலர் துரத்தப்பட்டனர் அல்லது தப்பியோடினர். குமரி மாவட்டம், நெல்லை மாவட்டம் ஆகியவற்றின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் அரசியல் சூனியப் பகுதிகளாக இருந்தன. இப்பகுதிகள், குறிப்பாக நெல்லை மாவட்டப் பகுதிகள் மக்கள் வாழத் தகுதியற்ற தேரிகளாய் இருந்தன. நெல்லை மாவட்டத்து வெற்றிடத்தில் குடியேறியோர் போக எஞ்சியோர் குமரி மாவட்டத்தில் குடியேறி ஏற்கனவே இருந்தோரை வெளியேற்றினர். இங்குள்ளோரில் பெரும்பாலோரிடம் கிழக்கிலிருந்து இடம் பெயர்ந்து வந்தமைக்கான மரபுச் செய்திகள் காணப்படுகின்றன. கடம்பூர் பகுதியில் 14 ஆம் நூற்றாண்டில் ஆண்ட பஞ்ச பாண்டியர் மரபினர் இங்கு வந்து குடியேறியதாகவும் தெரிகிறது. இவ்வாறு குடியேறியவர்கள் முன்பு ஒரே சாதியாக இருந்தவர்கள் என்று கூற முடியவில்லை. இங்குள்ள தனித்தனிக் குடும்பவழிகளின் வரலாற்றைக் கேட்கும் போது இங்கு வந்து சேர்ந்த பல்வேறு சாதியினரும் தமக்கு முன்பிருந்தவர்களைப் பார்த்துத் தாமும் சாணார்கள் என்று கூறிக் கொண்டார்கள் என்று தோன்றுகிறது. இத்தகைய நிகழ்முறை தமிழகத்தின் பிற பகுதிகளில் பெரும்பான்மையோராக வாழும் பல்வேறு சாதிகளுக்கும் பொருந்தி வரும்.


தோவாளை வட்டத்து நாஞ்சில் நாட்டு வேளாளரின் பேச்சு வழக்கு ஒரு வகை. அது நெல்லை மாவட்டத்து வெள்ளாளர் கையாளும் பேச்சு வழக்கை ஒத்தது. அகத்தீசுவரம் வட்டத்து நாடார்களின் பேச்சு வழக்கு நெல்லை மாவட்டத்து நாடார்களின் பேச்சு வழக்கை ஒத்து வரும். இவற்றிலிருந்து வேறுபட்டதாக ஈழத்துத் தமிழும் குமரி மாவட்ட மீனவர் தமிழும் தோவாளை அகத்திசுவரம் வட்டங்களுக்கு மேற்கேயுள்ள அனைத்து மக்களும் பேசும் தமிழும் தெக்கன் மலையாளம் எனப்படும் அங்கு வழங்கும் மலையாளமும் நெருக்கமானவை. இவையனைத்தும் சேர்ந்து குமரி மாவட்டத்தை வரலாற்றாய்வாளர்களுக்கு வற்றா வளமுள்ள களமாக்குகின்றன.

தோவாளை வட்டத்து வேளாளர்களும் அகத்தீசுவரம் வட்டத்து நாடார்களும் அடுத்தடுத்து வாழ்ந்தாலும் தனித்தனிப் பகுதிகளில் செறிந்து வாழ்கின்றனர். ஆனால் மேற்கேயுள்ள கல்குளம், விளவங்கோடு வட்டங்களில் நாடார்களோடு நாயர்களும் குறுப்புகள் எனும் சாதியாரும் கலந்து வாழ்கின்றனர். இப்பகுதி வள்ளுவ நாடு என்று முன்பு வழங்கப்பட்டதென்றும் வேணாடு என்று வழங்கப்பட்ட பகுதியென்றும் இருவேறு கருத்துகள் வரலாற்றாசிரியர்களிடையில் நிலவுகின்றன.

நாயர்களும் குறுப்புகளும் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். முடியாட்சிக் காலத்தில் இவர்களிடம் தான் பெரும்பான்மை நிலங்கள் இருந்தன. சாணார்கள் இவர்களின் நிலத்தில் உழைக்கும் அடிமைகளாக இருந்தனர். நாயர்களின் கொடுமைகள் தாங்காது இவ்வடிமைகள் அவ்வப்போது எதிர்த்து எழும் போது அடக்குவதற்காக நாயர்களால் பேணப்பட்டவர்களாகவே இக்குறுப்புகள் கருதப்படுகின்றனர். தமிழக வரலாற்றில் குறும்பர்கள் எனும் அடங்கா மக்கள் கூட்டத்தை அடிக்கடி எதிர்கொள்கிறோம். அவர்ளைக் கரிகாலன் அடக்கியதாக கழகப் பாடல்கள் கூறுகின்றன. அவர்களுக்கும் இந்தக் குறுப்புகளுக்கும் தொடர்புண்டா என்று ஆய்வது பயன் தரும்.

சென்ற இரு நூற்றாண்டுகளில் குமரி மாவட்டத்தில், குறிப்பாக நாடார்ளிடையில் நிகழ்ந்ததாக நமக்குத் தெரியவந்துள்ள வரலாறு சிறப்பானது.

சாணார்கள் வாழ்ந்த பகுதியில் அவர்களைச் சேர்ந்தோரே நாடான்கள் என்ற பெயரில் ஊர்த் தலைவர்களாக இருந்தனர். இவர்கள் திருவிதாங்கூர் மன்னரின் படிநிகராளியராக மக்களிடம் இறை தண்டி அரசனுக்கு இறுத்து வந்தனர். அரசனுக்குத் தேவையான பனை ஒலை, ஈர்க்கு, கருப்புக்கட்டி போன்ற பனைபடு பொருட்களையும் பிறவற்றையும் பெற்றுத் தர வேண்டியது இந்த நாடான்களது பொறுப்பு. இதற்காக அவன் சில சிறப்புரிமைகளை அவர்களுக்கு அளித்திருந்தான். இவை சாணார்களுக்கு மறுக்கப்பட்டிருந்தன. திருவிதாங்கூர் மரபுப்படி (குமரி மாவட்டம் அன்று திருவிதாங்கூர் அரசரின் கீழ் இருந்தது.) மேல் சாதியினர் அணியும் ஆடைகளுக்கு இணையாக கீழ்ச்சாதியினர் அணியக் கூடாது. அதன்படி நாயர் பெண்கள் அணியும் குப்பாயத்தைச் சாணார் பெண்கள் அணியக் கூடாது; அவர்கள் அணிந்த தாவணியையும் (மேலாக்கு, முந்தானை, தொள்சீலை என்று எப்படி வேண்டுமானாலும் குறிப்பிடலாம்) அணியக்கூடாது. சாணார் பெண்கள் இடுப்பில் குடம் வைத்துச் செல்லக் கூடாது; மண் பாண்டங்கள் தவிர பொன்ம(உலோக) ஏனங்களைப் பயன்படுத்தக் கூடாது; தாளிதம் செய்து சமைக்கக் கூடாது; வாழையிலையில் சோறுண்ணக் கூடாது; பார்ப்பனரை வைத்துப் புரோகிதம் செய்யக் கூடாது என்றெல்லாம் தடைகள் இருந்தன. தீண்டாமைக் கொடுமைகள் அனைத்துக்கும் அவர்கள் ஆட்பட்டனர். அத்துடன் பொருளியல் சுரண்டலுக்கும் வன்முறைக் கொடுமைகளுக்கும் ஆளாயினர். மாடன், இயக்கி போன்ற சிறு தெய்வங்களை மட்டுமே வணங்க அவர்களுக்கு உரிமை இருந்தது. சாவின் போது பட்டங்கட்டுதல்(உருமால் கட்டுதல்) என்ற சடங்கை மறைவாகவே நிகழ்த்த வேண்டியிருந்தது. இன்று இந்தச் சடங்கு இவர்களிடையில் அறவே இல்லை.

இதற்கு மாறாகச் சாணார்களுக்கு மறுக்கப்பட்ட இந்த உரிமைகளில் சில ஊர் நாடான்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தன. இவ்வாறு சாணார்களுக்கும் நாடான்களுக்கும் பிணக்குகள் இருந்தன.

அதே போன்று மீனவர்கள் அரபு வாணிகர்களின் கொடுமைகளுக்கு ஆளாயினர். அரசர்களும் அவர்களை ஒடுக்கி வந்தனர். திருவிதாங்கூர் அரசாலும் அராபிய வாணிகர்களாலும் இவ்விரு சாதியாரும் கொடுமைப்படுத்தப்பட்ட நிலையில் 17ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியக் கத்தோலிக்கக் கிறித்துவ விடையூழியர்கள்(சமய ஊழியர்கள்) இம்மாவட்டத்தினுள் நுழைந்தனர். கத்தோலிக்க சமயத்தில் சேருமாறு மதகுருக்கள் மக்களுக்குக் கூறினர். போர்த்துக்கீசிய அரசரின் குடிமக்களானால் அவர் அவர்களுக்குப் பாதுகாப்பளிப்பார், அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவார் என்று உறுதியளிக்கப்பட்டது. உயிர் வாழ்வதே கடினமாக இருந்த நிலையில் வெளியிலிருந்து வந்த இந்தப் ''பாதுகாப்பை'' அவர்கள் ஏற்றுக் கொண்டனர். மீனவர்கள் அனைவரும் ஒரே நாளில் புதிய மதத்தைத் தழுவியதாக கூறப்படுகிறது. சாணார்களில் அகத்தீசுவரம் வட்டத்தில் சிறு அளவிலும் மேற்கேயுள்ள வட்டங்களில் பெருமளவிலும் கத்தோலிக்கத்தைத் தழுவினர். போர்த்துக்கீசியர்களின் ஆதிக்கம் இந்தியாவில் நிலைக்கவில்லை. ஆனால் மதம் மாறியோர் பழைய கொடுமைகளிலிருந்து ஒரளவு மீண்டனர். மதம் மாறாத மக்களின் துயரம் தொடர்ந்தது.

பின்னர் ஆங்கிலர் வந்தனர். தங்கள் பங்குக்கு அவர்களும் சாணார்களை மதம் மாற்றினர்; மதம் மாறியவர்களுக்குக் கல்வியூட்டினர்; தம் கல்வி நிறுவனங்களிலும் சமய நிறுவனங்களிலும் மலைத் தோட்டங்களிலும் வீடுகளிலும் அவர்களுக்கு வேலை வாய்ப்பளித்தனர். இவ்வாறு கல்வியும் செல்வமும் பெற்ற மதம் மாறிய சீர்திருத்த சபை (புராட்டற்றன்று) கிறித்துவச் சாணார்கள் தமக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை வேண்டிப் போராடினர். குறிப்பாகத் தோள்சீலைப் போராட்டம் என்பது அவற்றில் குறிப்பிடத்தக்கது.

தோள்சீலைப் போராட்டம் மூன்று கட்டங்களில் நடைபெற்றது. நாடார்கள் மத வேறுபாடின்றி இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். இது முதலில் வெறும் கருத்துப் போரட்டமாகவே இருந்தது.

இரண்டாவது கட்டத்தில் (1830வாக்கில்) கிறித்துவர்கள் தனித்து நின்று போராடி இலக்குமிபாய் அரசி காலத்தில் தோள்சீலை அணியும் உரிமை பெற்றனர்.

பின்னர் மூன்றாம் கட்டத்தில் இந்து நாடார்கள் தாங்களும் தோள்சீலை அணிவதற்கான உரிமைப் போரட்டத்தில் இறங்கினர். அதைக் கிறித்துவ நாடார்கள் எதிர்த்தனர். போராட்டம் கிறித்தவர்களை எதிர்த்தும் நடைபெற்றது. பல கிறித்தவக் கோயில்களுக்குத் தீ வைக்கப்பட்டது. இறுதியில் நாடார்கள் அனைவரும் தோள்சீலை அணியும் உரிமை பெற்றனர்.[3]

நாடார்கள் மீது செலுத்தப்பட்ட ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் கிறித்துவர்கள் நடத்திய போராட்டம் நெடுந்தொலைவு செல்லவில்லை. கிறித்தவ விடையூழியர் தம் ஆட்சியில் தலையிடுவதாக திருவிதாங்கூர் மன்னர் சென்னை ஆளுநருக்கு ஆங்கில அரசின் உள்ளுறை முகவர்(ரெசிடெண்ட்) மூலம் முறையிட்டார். எனவே கிறித்துவ விடையூழியர்கள் கட்டுப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் புதிதாக ஒர் இயக்கம் தோன்றியது.

இவ்வியக்கத்தை நிறுவியவர் இன்று வைகுண்டர் என்று அழைக்கப்படும் முத்துக்குட்டி அடிகளாவார். இவர் பெயர் முடிசூடும் பெருமாள் என்று இருந்ததாகவும் இவ்வாறு பெயர் வைப்பதற்குச் சாணார்களுக்கு உரிமை இல்லையென்று மறுக்கப்பட்டதால் முத்துக்குட்டி என்று பெயர் மாற்றம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இது உண்மையாயின் முத்துக்குட்டி அடிகளாரின் பெற்றோரும் போராட்டத் தன்மையுடையோராகவே இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.


முத்துக்குட்டி அடிகள் பிறந்தது நெல்லை மாவட்டம் என்றும் குமரி மாவட்டம் என்றும் இரு வேறு செய்திகள் நிலவுகின்றன. இதே போன்று கருத்துமுரணுக்குரிய இன்னொரு செய்தியும் உலவுகிறது. இவர் கிறித்துவராயிருந்தார் என்றும் பின்னர் தான் அதிலிருந்து திரும்பி தன் புதிய நெறியை நிறுவினாரென்றும் இச்செய்தி கூறுகிறது. கிறித்துவம் சாணார்களுக்கு விடுதலை பெற்றுத் தரும் என்ற மதகுருக்களின் வாக்குறுதியை நம்பி அவர் மதம் மாறினார் என்றும் கிறித்துவ மதகுருக்கள் சென்னை ஆளுநரின் ஆணைக்கடங்கி சாணார்களின் போராட்டத்தில் பங்கு கொள்வதைக் கைவிட்டதோடு மதம் மாறாத சாணார்களின் போராட்டத்தை எதிர்த்தும் நின்றதால் தான் அவர் கிறித்துவத்தைக் கைவிட்டுத் தன் புதிய நெறியை நிறுவினார் என்று இச்செய்தி கூறுகிறது. ''இந்து'' சமயப் பக்கத்திலுள்ள சிலர் இதை மறுக்கின்றனர். இந்தப் பெரியார் இயற்கையெய்தி நூற்றைம்பது ஆண்டுகளுக்கு உள்ளாக அவருடைய வரலாற்றுச் செய்திகளில் ஏற்பட்டுள்ள குழப்பம் சொல்லத் தரமன்று.

முத்துக்குட்டி அடிகள், தான் திருமாலின் தோற்றரவு என்றும் கலியை அழிக்கவே தான் தோன்றியிருப்பதாகவும் கூறினார். தான் எதிர்த்துப் போராடிய நாயர்கள் சிவனடியார்களாயிருந்ததால் இவர் மாலியத்தைக் கைக்கொண்டிருக்கலாம். இந்து சமயச் சடங்குகளுக்கு மாற்றாகப் புதிய சடங்குகளை வகுத்தார். எல்லாத் தெய்வங்களும் தன்னுள் அடங்கிவிட்டதாகவும் கூறினார். மொத்தத்தில் பல தெய்வ வழிபாட்டை ஒழித்து ஒரு தெய்வ வழிபாட்டை நிறுவி மக்களை ஒன்றுபடுத்தி பேராற்றல் மிக்கோராய்ச் செய்த மோசேயையும் முகமது நபியையும் பின்பற்றி இவர் கூறினாலும் அவர்களைப் போல் தானும் இறைவனின் தூதன் என்று கூறி போராட்ட நெறியைக் கடைப்பிடிக்காமல் தானே கடவுளின் தோற்றரவு என்று கூறி மக்களைச் செயலற்றவர்களாக்கிவிட்டார் என்று சொல்வதே பொருந்தும். மற்றும் புலால் மறுப்பு போன்ற உயர்சாதிப் பழக்கங்களை ஏழைச் சாணார்களிடையில் புகுத்த முயன்றதும் மக்களை இவரிடமிருந்து அயற்படுத்தியிருக்க வேண்டும். இவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் காலமானார். மொத்தத்தில் இவருடைய இயக்கம் வெற்றி பெறவில்லை என்றே கூற வேண்டும், ஏனென்றால் மீண்டுமொருமுறை அந்த மண்ணில் நாடார்களிடையில் மதமாற்றம் நிகழ்ந்தது. இம்முறை மக்கள், குறிப்பாக பிழுக்கைச் சாணார்கள் சாணார்களின் கொடுமை தாள முடியாமல் முகம்மதியத்துக்கு மாறினர். இந்த உண்மையை முகம்மதியர்கள் பலரும் ஏற்றுக் கொள்வதாகக் கூறப்படுகிறது. அவர்களிடமுள்ள சொத்தாவணங்களிலும் இதற்குச் சான்றுகள் காட்டப்படுகின்றன. இம்மதமாற்றம் கிட்டத்தட்ட 1890இல் நடைபெற்றதாகத் தெரிகிறது.

இதற்குள் சாணார்கள், குறிப்பாக அகத்தீசுவரம் வட்டத்தில் குடியேறிய சாணார்கள் தாம் வாழ்ந்த வளம் மிகுந்த செம்மண் பகுதியில் புன்னை, மா, முந்திரி(கொல்லமா), பலா, புளி முதலிய மரங்களை வளர்த்தனர். ஆண்டுக்கு இரு பருவங்களிலும் பயிறு, காணம் முதலிய புன்செய்ப் பயிர்களை வளர்த்தனர். பனை ஏறிய நேரம் போக எஞ்சிய நேரங்களில் இதைச் செய்தனர். நாஞ்சில் நாட்டில் வேளாண்மைக் காலத்தில் அங்கு சென்று தங்கி உழவுத் தொழில் செய்தனர். அறுவடைக் காலத்தில் அறுவடை, சூடடிப்பு(போரடித்தல்) முதலிய வேலைகளைச் செய்து ஆண்டு முழுவதும் உணவுக்குத் தேவையான நெல்லைச் சேர்த்து வைத்தனர். சிலர் மாங்காய், மாம்பழம், கொல்லாங்கொட்டை(முந்திரிக் கொட்டை), கொல்லாம்பழம்[4](முந்திரிப்பழம்), சக்கைப்பழம்(பலாப்பழம்), பனங்கிழங்கு, நுங்கு, கருப்புக்கட்டி, பனம்பழம், பயிறு, காணம் போன்ற பொருட்களை நெல்லுக்கும் மீனுக்கும் மாற்றினர். மீனவர்கள் நெல் முதல் பலாப்பழம் வரை அனைத்தையும் சாணார்களிடமிருந்தே பெற வேண்டியிருந்தது. ஏராளமாக மீன்படும் காலங்களில் சாணார்களில் பலரும் மீனவர்களும் நெல்லின் தேவையின்றி மீன், கருப்புக்கட்டி, பழங்கள் முதலியவற்றிலேயே வாழந்தனர். (என்னே ஊட்டமிக்க உணவு!) வண்டி வைத்து சம்பை(கருவாடு), வெற்றிலை, கருப்புக்கட்டி, போன்ற பொருட்களின் போக்குவரத்திலும் பணம் ஈட்டினர். நாளடைவில் வெற்றிலை வாணிகம் இலை வாணிகர்களிடமிருந்து சாணார்கள் கைகளுக்குள் வந்து விட்டது. நிறைய நிலம் வைத்திருந்த ஊர் நாடான்களிடம் கூலி வேலை செய்தனர். கொத்துவேலை, தச்சுவேலை முதலிய தொழில்நுட்பங்களிலும் தேர்ச்சி பெற்றனர்.

கடற்கரையை ஒட்டி குமரி முனையிலிருந்து தொடங்கி மணக்குடி எனும் ஊரில் பழையாறு எனப்படும் கோட்டாற்றைக் கடந்து திருவனந்தபுரம் வரை அரச குடும்பத்தினர் படகில் சென்று வருவதற்காக ஒரு கால்வாய் ஓடியது. அதற்கு அனந்தன் விக்டோரியா மார்த்தாண்டவர்மா (A.V.M.) வாய்க்கால் என்று பெயர். அது ஆங்காங்கே தூர்ந்து கிடந்தது. சாணார்கள் அதை முழுமையாகத் தூர்த்து எந்நாளும் நீர்வளம் குன்றாத கழனிகளாக்கினர். அத்துடன் கடற்கரையை அடுத்த மணற்பாங்கான பகுதிகளில் தென்னை மரங்களை நட்டனர். நாளடைவில் செம்மண்ணிலும் தென்னைகளை வளர்த்தனர். அவை சாணார்ப் பெண்களின் இடைவிடா உழைப்பால் வளமிக்க தோப்புகளாயின. அத்துடன் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன் கட்டப்பட்ட பேச்சிப்பாறை நீர்த்தேக்கம் இச்செம்மண் நிலத்தில் பெரும் பரப்புகளை நன்செய் ஆக்கி இம்மக்களது வளத்தை மேலும் பெருக்கியது. இந்த நிலத்தைத் தான் இங்கு காட்டுப்பத்து என்கின்றனர்.

இவ்வாறு செல்வ நிலையில் சாணார்கள் உயர்ந்த போது இவர்களை அடக்கி ஒடுக்கி வைத்திருந்த வேளாளர், நாயர், குறுப்பு முதலியோரின் ஆதிக்கத்தை எதிர்க்கத் தலைப்பட்டனர். வீறு கொண்டெழுந்த சாணார்களின் முன்னே அவர்களால் எதிர்நிற்க முடியாமல் போயிற்று. மேற்சாதியாரை எதிர்க்கும் போது அச்சாதியார்களின் விருப்பத்தை நிறைவேற்றும் அரசாகிய திருவிதாங்கூர் அரசின் ஊழியர்களான ஊர் நாடான்களையும் இம்மக்கள் எதிர்த்தே வந்தனர். நாடான் - சாணான் பிணக்கு தொடர்ந்து வந்தது. புதிதாகச் செல்வம் பெற்ற சாணார்களுடன் சூழ்நிலைகளால் வறுமையெய்திய நாடான்கள் மணவுறவுகளை மேற்கொண்டனர். நாடான் - சாணான் ''கலப்பு'' தோன்றி வளர்ந்தது. (ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களான ஊர் நாடான்களும் ஊர் மக்களும் வெவ்வேறு சாதியார் போல் பிளவுண்டு, பின்னர் அவர்களுக்குள் மணவுறவுகள் ஏற்படுவதைக் ''கலப்பு'' என்று கூற வேண்டிய விந்தையைப் பாருங்கள்! சாதி என்பது எத்தகைய ஒரு மாயை!) நாடான் - சாணான் வேறுபாடுகள் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை நிலவின. [5]

இவ்வாறு செல்வமும் அதன் விளைவாகக் கல்வியறிவும் பெற்று விட்ட நாடார்கள் (இனி அவர்களை நாடார்கள் என்று கூறுவதே பொருத்தம் என்று கருதுகிறோம்) பிற சாதியினரோடு தங்களுக்குச் சம மதிப்பு வேண்டுமென்று விரும்பினர். திருவிதாங்கூர் அரசு வேலைவாய்ப்பு முதல் அனைத்திலும் நாடார்களுக்கு உரிய பங்கைத் தர வேண்டுமென்று கேட்டனர்.

இக்காலத்தில் 1943இல் ஏ.சங்கரபிள்ளை என்பவர் தலைமையில் ஒரு சிறு அமைப்பு தோன்றியது. இதில் முகாமையாக நாஞ்சில் நாட்டு வேளாளர்களும் கிறித்துவ நாடார்களும் முதப்பத்து நாடான்களும் இருந்தனர். 1945இல் குமரி முதல் காசர்கோடு வரை கேரளம் என்று மலையாளிகள் ஒரு தீர்மானம் நிறைவேற்றினர். இதை ஏற்பதா எதிர்ப்பதா என்ற கருத்து வேறுபாட்டால் இயக்கத்தில் பிளவு ஏற்பட்டது. அதே ஆண்டு திசம்பரில் நத்தானியல் என்ற கிறித்துவ நாடாரின் தலைமையில் திருவிதாங்கூர் தமிழகக் காங்கிரசு என்ற பெயரில் ஒரு அமைப்பு தோன்றியது. அப்போது அவருக்கு மிக உறுதுணையாயிருந்தவர்கள் பி.எசு.மணி, காந்திராமன் ஆகியோர். இவர்கள் கட்சியின் மேல்மட்டத் தலைவர்களாயிருந்தனர். 1946 சூனில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு என்ற பெயரை அது பெற்றது. தி.த.நா.கா. என்று இதைச் சுருக்கமாக அழைப்பது வழக்கம்.

அக்காலகட்டத்தில் நெல்லை மாவட்டத்துக்கும் திருவனந்தபுரத்துக்கும் சென்று கல்வி பெற வாய்ப்புப் பெற்றோர் நாஞ்சில் நாட்டு வேளாளர்களும் கிறித்துவ நாடார்களும்; அதிலும் குறிப்பாக சீர்திருத்தக் கிறித்துவ நாடார்களும் சில முதப்பத்து நாடான்களும் தாம். மலையாளத்தை ஆட்சி மொழியாகக் கொண்ட திருவிதாங்கூர் அரசு தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இத்தொகுதியினருக்கு வேலைவாய்ப்பில் வஞ்சனை செய்தது. தமிழர்கள் வந்தேறிகள் என்றும் திருவிதாங்கூர் முழுவதும் மலையாள நாடென்றும் மலையாளிகள் கூறினர். இதற்கு எதிர்க் கருத்துகளை இவர்கள் வைத்தனர்; சேரநாடு முழுவதும் தமிழர் நாடே, மலையாளிகளை விட தமிழர்களுக்கு அதில் அதிக உரிமை உண்டென்று நிறுவ முயன்றனர். கவிமணி தேசிய வினாயகர் இதற்கென்று அரிய வரலாற்றாய்வுகள் செய்து பல இலக்கியச் சான்றுகளைக் காட்டியதுடன் எண்ணற்ற கல்வெட்டுகளை ஆய்ந்து வெளிக்கொணர்ந்தார். வித்துவான் சதாசிவம் என்ற ஆசிரியர் பெருமகன் சேரநாடும் செந்தமிழும் என்ற அரிய ஆய்வு நூலை எழுதினார். குமரி மாவட்ட மக்களின் விடுதலைப் போருக்கு அடிப்படையான வரலாற்று ஆவணமாக இது போற்றுதற்குரியது.

ஆனால் இவையனைத்தையும் செய்து இயக்கத்தின் தோற்றத்துக்குக் காரணமான நாஞ்சில் நாட்டு வேளாளர்கள் அதில் நாடார்களின் எண்ணிக்கை பெருகியவுடன் பின்வாங்கினர். தம்மை விட இழிந்தவர்களென்று தாம் கருதிய நடார்கள் தம்மோடு சம உரிமை பெறுவதை விடத் தமக்கு மேல்மக்கள் அல்லது தமக்கு இணையானவர்கள் என்று இவர்கள் கருதிய மலையாளிகளிடம் குட்டுப்படுவதே மேல் என்று கருதினர். தோள்சீலைப் போராட்டத்தில் மதம் மாறாத நாடார்களுடன் சேர்ந்து போராடிய கிறித்துவ நாடார்கள் தமக்கு மட்டும் கிடைத்த அந்த உரிமையை மற்றவரும் கேட்டபோது எதிர்த்தது போன்றது இது.[6] இத்தகைய தாக்கத்தை வென்று தி.த.நா.கா.வில் தொடர்ந்து ஈடுபட்ட நாஞ்சில் நாட்டு வேளாளரில் மக்கள் மனதில் நிலைத்து நிற்பவர் ஆர்.கே. இராம் என்று அழைக்கப்படும் திரு. இராமன் பிள்ளை அவர்களே. இன்று தி.த.நா.கா.வை உருவாக்கியவர் என்று உரிமை கொண்டாடும் திரு.பி.எசு.மணி அவர்கள் இன்று வரை விடுபட்டுப் போன 4½ வட்டங்களும் விடுவிக்கப்பட்டுத் தமிழகத்தோடு இணைக்கப்பட வேண்டும் என்ற முழக்கத்தை வைத்துக் கொண்டிருந்தாலும் இடையில் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவில் பங்கு கொண்டு எதிரியாகிய கேரள (இந்தியத் தேசியக்) காங்கிரசுடன் கூட்டு வைத்த தாணுலிங்க நாடாருடன் உறவு வைத்ததனால் அன்று மக்களிடமிருந்து அயற்பட்டு நின்றார். அவரை நம்பிய மா.பொ.சி.யின் பணிகளும் மக்களின் கவனத்துக்கு வரவில்லை.

அகத்தீசுவரம் வட்டத்தில் உள்ள நாடார்களைப் போலன்றி விளவங்கோடு வட்டத்தில் வாழ்ந்த நாடார்கள் செல்வ நிலையில் உயரவில்லை. அவர்களுக்குச் சொந்த நிலங்கள் இல்லை. பெரும்பாலான நிலங்கள் நாயர், குறுப்பு சாதிகளிடமே இருந்தன. அவர்களிடம் இவர்கள் கூலிகளாகவே, அடிமைகளாகவே வாழ்ந்து வந்தனர். 'அட கடவுளே'! என்று கூறுவதற்குப் பகரம் 'அட நாயனே!'' என்று கூறுவதை இந்தப் பகுதிகளில், ஏன், குமரி மாவட்டம் முழுவதும் கேட்கலாம். இந்தச் ''சாணான் - நாயன்'' உறவு எப்படி இருந்திருக்கும் என்பதற்கு இது ஒரு சான்று. இவர்களது உணவு கூட பெரும்பாலும் கம்புக் கிழங்கும்[7] மீனுமே. அவ்வாறு வாழ்ந்தவர்களுள்ளும் பெரும்பாலோர் மதம் மாறாதவர்களும் கத்தோலிக்கர்களுமே இருந்தனர். இவர்களுக்கு அரசு அரவணைப்பு இல்லை. வலுவான மத நிறுவனங்களும் உதவ முன்வரவில்லை. இவ்வாறு இடருற்றுக் கொண்டிருந்தோர்க்குப் பாடாற்ற நேசமணி முன் வந்தார். சீர்திருத்த சபைக் கிறித்துவரான அவர் தான் பெற்ற கல்வியறிவையும் சட்ட அறிவையும் இம்மக்களை மேற்சாதியாரின் கொடுமைகளிலிருந்து மீட்கவே பயன்படுத்தினார் என்று அப்பகுதியில் அவர் காலத்தில் வாழ்ந்த மக்கள் நினைவுபடுத்துகின்றனர்.

இவ்வாறு நாடார்கள் நடுவில் தி.த.நா.கா. வளர்ந்து தேர்தல்களிலும் வெற்றியீட்டி நாடான் காங்கிரசு என்று மேல்சாதிக்காரர்களால் பெயர் சூட்டப்பட்டுவிட்டது. மீனவர்களும் இக்கட்சியை ஆதரித்தனர். இந்நிலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்று குறிப்பிடத்தக்கது.

தி.த.நா.கா.வின் தலைவர்களில் ஒருவராயிருந்த தாணுலிங்கம் நாடார் என்பவர் திடீரென்று கட்சியை விட்டு வெளியேறினார். கிறித்துவர்களின் ஆதிக்கம் கட்சியிலிருப்பதாகக் குற்றம் சாட்டினார். ஒரு போட்டி தி.த.நா.கா.வைத் தொடங்கி இந்தியத் தேசியக் காங்கிரசுடன் கூட்டு சேர்ந்தார்.

உண்மையில் கிறித்துவர்களின் போட்டியினால் மட்டும் அவர் கட்சியிலிருந்து வெளியேறவில்லை. தாணுலிங்கர் முதப்பத்து நாடான்கள் குடும்பத்தில் பிறந்தவர். திருவிதாங்கூர் மன்னர்களுடன் தொடர்பு கொண்டது அவரது குடும்பம். மாறச்சன்[8] என்ற பட்டத்தை அரசரிடமிருந்து பெற்றவர்கள் அவர்கள். முதல் தேர்தலில் பெரிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் கிறித்துவர்களும் தேர்தலில் நின்று வென்றனர். அடுத்த தேர்தலில் எளிய குடும்பத்தில் பிறந்த வேட்பாளர்களே வெற்றி பெறும் நிலை ஏற்பட்டது. அப்போது தான் தன் குழுவின் நலன் எங்கிருக்கிறதென்பதை அவர் உணர்ந்து கொண்டார். தன்னையொத்த மேற்சாதி - மேட்டுக்குடித் தலைவர்களுடன் சேர்ந்து கொண்டார். தொடக்கத்தில் சீர்திருத்த சபைக் கிறித்துவருடன் கூட்டுச் சேர்ந்து ஏழை மக்களைத் தட்டியெழுப்பிய முதப்பத்து நாடான்கள் முதல் கட்ட வெற்றியிலேயே தங்கள் வகுப்பு நலன்களுக்காக எதிரிகளுடன் கூட்டுச் சேரும் நிகழ்முறையை இங்கு காண்கிறோம்.

அணி மாறியதன் விளைவாகத் தாணுலிங்கரின் செல்வாக்கு குன்றியது. மீண்டும் தி.த.நா.கா. திரும்பினார். இருந்தும் அவருக்குப் பழைய மதிப்பு திரும்பவில்லை. நாளடைவில் அவர் அரசியலிலிருந்து ஒய்வு பெற்றார்.

மீனவர்களைப் பற்றிப் பார்ப்போம். எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் நாம் மீனவர்களென்று கூறும் பரவர்கள்(பரதவர்கள்) இன்று அவர்கள் வாழும் நிலத்துக்கே உரியவர்கள்; பதியெழுவறியாப் பழங்குடியினர். மீனவர்களில் முக்குவர், சவளக்காரர் என்ற பிரிவினர் இருந்தாலும் குமரி மாவட்டத்தில் உள்நாட்டில் சவளக்காரர்கள் மிகுதியாக உள்ளனர். கடற்கரையில் வாழ்வோரில் பரவரே மிகுதி.

தமிழர் நாகரிக வரலராற்றில் மிகப் பழமையானவர் பரதவர். வாணிகத்திலும் கடற்படையிலும் பரந்து திரிந்தோராகிய இவர்கள் சங்கம் மருவிய காலத்திலும் சிறப்புடன் வாழந்தனர். அரச குமரரும் பரத குமரரும் என்று இளங்கோ அடிகள் இவர்களைக் குறிப்பிடுகிறார். பரவை = கடல், பரவர் → பரதவர் → பரதர். மாபாரதக் காலத்திலேயே பரதர் என்ற சொல் நிலைத்து விட்டதாயின் இவர்களதும் தமிழினதும் தொன்மையை என்னென்பது!

மாபாரத்தில் வரும் ஐவரும் நூற்றுவரும் மச்சகந்தி என்ற பரதவப் பெண் வயிற்றுப் பேரர்களே என்பதும் அதனாலேயே அப்பாவியத்துக்கு மாபாரதம் என்ற பெயர் வந்தது என்பதும் இராமாயணத்தில் பரதனுக்கு உரிய அரசு இராமனுக்கு வழங்கப்படுவதைப் பரதனின் தாய் எதிர்த்ததனாலேயே இராமன் காட்டுக்குச் செல்ல வேண்டியிருந்த தென்பதும் கவனிக்கத்தக்கவை. இவ்வாறு காட்டுக்குச் சென்ற இராமன் ஆற்றில் படகு விடுவோனான குகனை உடன்பிறந்தானெனச் சிறப்பிப்பதும் இரானைத் தேடி வந்த பரதனை இக்குகன் எதிரியாகப் பார்ப்பதும் பின்னர் இராமனின் அரசுரிமையைப் பரதன் ஏற்றுக்கொண்டு இராமனின் காலணிகளை அரியணையில் வைத்து ஆட்சி செய்வதும் ஆராயத் தக்கன. இந்தியாவுக்குப் பரதநாடென்ற பெயர் வந்ததும் கருதத்தக்கது. அந்தக் காலகட்டத்தில் மீனவர்களிடமிருந்து உள்நாட்டினர்க்கு அதாவது நெய்தல் நிலத்தாரிடமிருந்து மருத நிலத்தாருக்கு ஆட்சி அதிகாரம் பெயர்ந்ததனை இந்நிகழ்ச்சிகள் காட்டுகின்றனவா என்றும் பார்க்க வேண்டும்.

பாண்டியர் கொடியான மீனை வைத்து பாண்டிய முதல்வியான மீனாட்சியை மீனவப் பெண் என்று கருதுவோரும் உளர். பாண்டியர்களை மீனவர்கள் என்றே குறிப்பிடுவதையும் காண்கிறோம். அதைப் போல் பரத நாடு என்பது பரதவ நாடு என்பதன் திரியே என்றும் கருதப்படுகிறது. இலங்கையில் மீனவர்களில் திமிலர் என்ற ஒருபிரிவினர் உள்ளனர். இது திரமிலர் என்பதன் திரிபென்பதற்குச் சான்றுகள் உள்ளனவாம். அப்பர் ஈராசு(ஈராசுப் பாதிரியார்) திரைமிலர் என்ற சொல்லுக்கு கடலின் குழந்தைகள் என்று பொருள்; இதிலிருந்து தான் திராவிடர் என்ற சொல் வந்ததென்று கூறுகிறார். திரௌபதியம்மன் தமிழக நாட்டுப்புறத் தெய்வங்களில் சிறப்பு வாய்ந்தது. இது திரைபதி என்பதன் மருவாயிருக்கலாமோ என்றோரு கேள்வி. அதே போல் திருமகளை அலைமகள் என்பது தமிழ் வழக்கு. கடல் வாணிகத்துக்ம் செல்வப் பெருக்குக்கும் உள்ள தொடர்பை நோக்கினால் வரலாற்றுக்கு முந்திய நாளில் கடல் வாணிகத்தில் சிறந்திருந்த தமிழர்களின் தெய்வமே திருமகள் என்பதும் அதனாலேயே அவளை அவர்கள் அலைமகளாகக் கண்டனர் என்றும் எண்ணத் தோன்றுகிறது. பரவை என்ற சொல்லுக்கு திருமகள் கூத்து எனும் பொருளும் இருப்பது குறிப்பிடத்தக்கது. பரதவர்களின் வரலாற்றுப் பழமையைக் குறிக்கவே இத்தகைய செய்திகள் இங்கு வைக்கப்படுகின்றன. உண்மையில் மீனவர்களின் வரலாற்றை யாரும் சரியாக ஆயவில்லை என்றே கூற வேண்டும். அது மட்டுமல்ல தமிழகத்தில் அண்மைக் காலம் வரை மிகப் புறக்கணிக்கப்பட்ட மக்கள் மீனவர்களென்றே கூற வேண்டும்.

உள் நாட்டினர், குறிப்பாக திருவிதாங்கூர் அரசு மற்றும் முகம்மதிய வாணிகர்களின் தாங்கொணக் கொடுமைகளுக்கு இவர்கள் சாணோர்களோடு சேர்ந்து ஆளாகிய போது தான் 17ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசிய மதகுருக்களால் மதம் மாற்றப்பட்டனர். இவர்கள் படையணிகளாக்கப்பட்டு திருவிதாங்கூர் அரசருக்காகப் போரிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலோரின் வன்முறைக் கொடுமைகளிலிருந்து விடுபட்டாலும் இவர்கள் பொருளியலில் முன்னேறவில்லை. போர்த்துக்கீசியர் தமிழகத்தில் நிலைக்காதது இதற்கு ஒரு காரணம்; கத்தோலிக்க மதகுருக்கள் இவர்களது வளர்ச்சியை முழுமனதுடன் விரும்பாதது இன்னொரு காரணம். இவர்கள் வாழும் பகுதிகளில் மாதா கோயில்கள் வளர்ந்த அளவுக்கு இவர்களது வாழ்வு வளரவில்லை. மீன் பிடிப்பதில் கிடைக்கும் அவர்களது வருமானத்தில் பெரும் பகுதி தெரிப்பு என்ற பெயரில் கோயிலுக்கு வழங்கும் பங்கிலேயே சென்று விடுகிறது.

இருந்தாலும் இந்திய விடுதலைக்குப் பின்னர் இவர்களுக்குக் கல்வி வாய்ப்புகளும் வேலை வாய்ப்புகளும் பெருகின. குமரி மாவட்ட நாடார்கள் திருவிதாங்கூர் அரசின் கீழ் அடைந்த இன்னல்களையே இவர்களும் அடைந்தனர். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட நாயர்களும் குறுப்புகளும் இவர்களுக்கும் இடையூறாகவே இருந்தனர். எனவே தி.த.நா.கா. காலத்தில் அக்கட்சியையே இவர்கள் ஆதரித்தனர்.

திருவிதாங்கூர்-கொச்சி (இன்றைய கேரள மாநிலம் உருவாவதற்கு முன் இருந்த மாநிலப் பெயர் இதுவே) மாநிலத்தின் முதல்வராயிருந்த பட்டம் தாணுபிள்ளையின் கொடுங்கோன்மையின் விளைவாகக் குமரி மாவட்டத் தமிழர்கள் ஏற்க நேர்ந்த கடும் இழப்புகளுக்குப் பின் குமரி மாவட்ட வரலாற்றுப் போக்கில் ஒரு பெரும் மாறுதல் ஏற்பட்டது.

(தொடரும்)

அடிக்குறிப்புகள்:

[1] முதலூடி, முதப்பத்துக்காரன், முதப்பத்து நாடான், ஊர் நாடான் என்றெல்லாம் இவர்கள் அழைக்கப்படுவர். ஊர் நாட்டாண்மைக்காரன் என்று பொருள்படுபவை இச்சொற்கள்.

[2] இந்நிகழ்ச்சி வெங்கலராசன் கதை அல்லது வலங்கையர் கதை எனும் கதைப்பாடலில் வருகிறது. குலோத்துங்க சோழன் காலத்தில் இது நடந்திருக்கலாமென்று கருதவும் இடமுள்ளது. இரண்டும் ஒன்றோடொன்று மயங்கியும் இருக்கலாம்.

[3] இத்தோள்சீலைப் போராட்டம் ஒரு விந்தையான பண்பாட்டு மோதலின் வெளிப்பாடெனக் கொள்ளலாம். தமிழ்ப் பெண்களின் உடையென நாம் இன்று கருதும் சேலை இடைக்காலத்தில் தெலுங்கர்களிடமிருந்து பரவியதாகும். பேரரசுச் சோழர் காலத்து ஓவியங்கள், சிற்பங்களில் இன்றைய சேலை இல்லை. இடுப்பில் ஒரு முண்டு அல்லது பாவாடையும் மேலே கச்சை அல்லது குப்பாயமும் (இரவிக்கை) அணிந்து அதன் மீது ஒரு மெல்லிய துணியை மார்பில் அணியும் வழக்கமே அன்று இருந்தது. இன்று தமிழகத்தில் வாழும் சில மலைவாழ் மக்களிடம் இவ்வுடை நிலவுகிறது. முதிய முகமதியப் பெண்களிடையில் இவ்வுடையை நாம் காணலாம். அதே போல் மலையாளத்துப் பெண்கள் அணியும் உடையும் பழந்தமிழ்ப் பெண்களின் உடையின் தொடர்ச்சியேயாகும். தெலுங்கு நாட்டிலிருந்து கோயிற்பணிக்காக சோழ மன்னர்கள் காலத்தில் வரவழைக்கப்பட்ட தேவரடியார்கள் மூலமாகவோ பரத நாட்டியத்தில் அணியப்படும் உடைகளிலிருந்தோ மேல்மட்டத்து மக்களிடையிலும் இன்று துப்புரவு வேலை பார்க்கும் தெலுங்கு பேசும் பெண்களிடமிருந்து கீழ்மட்டத்து மக்களிளடையிலும் இது பரவி இருக்கலாம். மேல்தட்டுப் பெண்களுக்கு ஒட்டியானம் குப்பாயம் முதலிய விலை மிகுந்த துணை அணிகளுடன் அணியத் தக்கதாகவும் கீழ்த்தட்டுப் பெண்களுக்குப் பிற துணையணிகள் எதுவுமின்றி மிக மலிவாக அணியத்தக்கதாகவும் இது உள்ளது. ஒரே உடையை வைத்துக்கொண்டு அதனைத் துவைத்து ஒரு பகுதியை உடலில் சுற்றி மீதியை உலர்த்தி உடுக்கத்தக்க உடை சேலை ஒன்றே. முந்தானையின் தொங்கலைத் தலையில் சும்மாடாகச் சுற்றி வைத்துக் கொள்ளவும் முடியும்.

இந்த உடை வகை தமிழகத்தினுள் நுழைந்த போது இங்கு எத்தகைய பண்பாட்டு மோதல்கள் நிகழ்ந்தனவோ நமக்குத் தெரியாது. ஆனால் பழங்காலத் தமிழ் உடையாகிய மலையாளப் பெண்களின் உடைக்கும் தமிழகப் பகுதியில் புழங்கிய தெலுங்குச் சேலைக்கும் ஏற்பட்ட இந்த மோதல் ஆளும் மலையாள மக்களுக்கும் ஒடுக்கப்பட் தமிழ் பேசும் மக்களின் ஒரு பிரிவினருக்கும் இடையில் நடைபெற்ற போராட்டமாக வெளிப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்பு நிகழ்ச்சி பண்பாட்டு ஆய்விளருக்குச் சிறந்த ஆய்பொருளாகத்தக்கது.

[4] வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் உணவுப் பயிர்களின் முன்னொட்டாகக் கொல்லம் என்னும் சொல்லைச் சேர்த்துக் கொள்வது கேரள வழக்கு. கொல்லம் என்ற துறைமுகத்தில் வந்து இவை இறங்குவதால் இவ்வடைமொழியைப் பெற்றுள்ளன. உள்நாட்டுப் பொருள் ''நல்ல'' என்ற அடைமொழியைப் பெறுகின்றன. எ-டு. கொல்லமா x நல்லமா, கொல்ல மிளகு x நல்ல மிளகு. ஒப்புநோக்கு: செவிலித்தாய் x நற்றாய், கடலை எண்ணெய் முதலியன x நல்லெண்ணெய்.

[5] நெல்லை மாவட்டத்தில் இன்றும் சில பகுதிகளில் நாடார் - சாணார் வேறுபாடுகள் நிலவுகின் றன. இங்கு ஊர் நாடான் - ஊர் மக்கள் என்றவாறு அது இல்லை. பனை ஏறுவோர் சாணாரென்றும் அதனைக் கைவிட்டோர் நாடார் என்றும் கருதப்படுகின்றனர். குமரி மாவட்டத்தில் பனையேறும் தொழில் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. பெரும்பாலான பனை மரங்களும் வெட்டப்பட்டுவிட்டன. நெல்லை மாவட்டத்தில் இன்னும் கணிசமான எண்ணிக்கையில் பனை மரங்கள் உள்ளன.

சான்றோர் என்று பொருள் தருவதாகவே சாணார் என்ற சாதிப் பெயரை நாடார் சாதியைச் சேர்ந்த சாதி வரலாற்றாசிரியர்கள் பெருமையுடன் கூறிக்கொள்கின்றனர். அதே நேரத்தில் தங்களைச் சாணார் என்று பிறர் அழைப்பதை இழிவாகக் கருதி ஆத்திரப்படுகின்றனர். நாடார் என்ற புதுப் பெயரால் அழைக்கப்பட வேண்டுமென்று விரும்புகின்றனர். இது நம் நாட்டில் மட்டுமல்ல, உலக மக்களிடையில் நிலவும் ஒரு மனப்பான்மையின் வெளிப்படாகும். சாணார் என்ற பெயருடன் அவர்களிடையில் ஒரு காலத்தில் நிலவிய வறுமையும் பிற்பட்ட நிலையும் தொடர்புடையன. இன்று நாடார் என்ற பெயருடன் செல்வமும் அரசியல் செல்வாக்கும் குமுகத் தரமும் தொடர்புடையன. எனவே பட்டப்பெயர்களின் பொருளை விட அது குறிக்கும் குமுகத் தரமும் செல்வ நிலையுமே மக்கள் மீது அதிக ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த நிகழ்முறைக்குத் தமிழகத்திலும் வெளியிலும் பல சான்றுகளைக் காட்ட முடியும். மூப்பன், பண்ணையாடி(பண்ணாடி), குடும்பன் எனும் பட்டப் பெயர்களைக் கொண்ட பள்ளர்களில் ஒரு பகுதியினர் ஒரளவு செல்வநிலையில் உயர்ந்ததும் தேவேந்திரகுல வேளாளர் என்ற பட்டத்தைச் சூடுவது அண்மைக் காலத்தில் நிகழ்ந்தது. அரசன் என்ற பொருள்படும் கோன் என்ற சொல்லடிப்படையில் பிறந்த கோனார் (கோங்கமார்←கோன்கள் மார்) என்று பிறர் அழைக்கின்றனர்.) என்ற பட்டம் தங்கள் கடந்த கால ஏழ்மையையும் குமுகத் தரத்தில் தாழ்வையும் குறிப்பதாகக் கருதி அவர்கள் வடக்கிலிருந்து இறக்குமதியான ''யாதவர்'' என்ற பட்டத்தைச் சூடிக்கொள்வதும் இது போன்றதே.

கறுப்பின மக்கள் இன்று பொருளியலிலும் செல்வாக்கிலும் உயர்வடைந்த பின் முன்பிருந்த நீக்ரோ என்ற பட்டத்தை வெறுத்துக் கறுப்பர்கள் என்று அழைக்கப்ட வேண்டுமென்று விரும்புவது இது போன்றதே. இரு சொற்களுக்கும் ஒரே பொருள் தான் என்பது இந்த நிகழ்வின் சிறப்பு.

[6] மக்களுக்கு நலத்திலும் கேட்டிலும் உதவுவதற்கென்று உருப்படியான அரசியல் அமைப்புகள் இல்லாத போது சாதி, சமயம், மொழி போன்ற குமுக அமைப்புகளின் அடிப்படையில் மக்கள் திரள்கின்றனர். அவ்வக்குழுவில் மேல் நிலையிலிருப்போர் தம் தேவைகளுக்கேற்ப இக்குழுக்களை உடைத்தோ இணைத்தோ தம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர். அடிப்படை மக்கள் இம்மேல்மட்டத்தோருக்காய் போராடி, குருதி சிந்தி உயிர்களை ஈந்து பின்னர் கைவிடப்படுகின்றனர். குமுக மேம்பாட்டுக்காகப் பாடுபடுவோர் இம்மேல்மட்டத்தார் கைக்கொள்ளும் உத்திகளில் எவை பிளவுகளை நீக்கி முன்னோக்கித் தள்ளுபவையாயிருக்கின்றனவோ அவற்றை அம்மேல்மட்டத்தார் கைவிட்ட இடத்திலிருந்து பற்றி மேற்கொண்டு செலுத்தி அவ்வடிப்படை மக்கள் விடுதலை பெறுமளவும் நடத்த வேண்டும்.

[7] கம்புக் கிழங்கு என்பது மரவள்ளிக் கிழங்கு, கப்ப(ல்)க் கிழங்கு, மரச்சீனிக் கிழங்கு, குச்சிக் கிழங்கு, எழிலைக் கிழங்கு என்றெல்லாம் குறிப்பிடப்படும் கிழங்கு தான். வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு பண்டத்துக்கு இத்தனை பெயர்கள் வைத்துத் தமிழின் சொல்வளத்தைப் பெருக்கிய தமிழக உழைக்கும் மக்களின் சொல்லாக்கத்திறனை என்னென்று புகழ்வது! ஆனால் இன்றைய ''கற்றோரோ'' தமிழின் சொல்லாக்க வல்லமையைத் தங்களின் இயலாமையையே அளவுகோலாகக் கொண்டு அளக்கும் கொடுமையைக் காண்கிறோம்.

[8] மதுரை நாயக்கர் ஆட்சி நிலைப்பட்ட போது பாண்டிய நாடு, நாடுகள் எனும் ஆட்சிப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அதில் நாடான்கள் என்போர் ஆட்சி அதிகாரிகளாக இருந்தனர். தளவாய் அரிய நாத முதலியார் என்பவர் நாயக்கர் படைகளை நடத்தி அந்த நாடான்களைப் பதவியிறக்கினார். தனக்கு ஒத்துழைப்பு நல்கிய சிலரைப் பாளையக்காரர்கள் ஆக்கினார். பிற பகுதிகளை நாயக்கர் பாளையங்களாக மாற்றினார். அப்போது நாயக்கர் ஆட்சிப் பகுதிக்கு வெளியே கேரள அரசின் பிடியிலிருந்த குமரி மாவட்டத்திலும் நெல்லைப் பகுதிகளிலும் நாடான் என்ற ஊர்த் தலைவன் பட்டம் தொடர்ந்தது. இப்பட்டத்திலிருந்து தான் நாடார் என்ற சாதிப் பட்டம் பிறந்தது. மன்னர் மார்த்தாண்ட வர்மாவுக்கு எதிரிகளால் ஒருமுறை ஏற்பட இருந்த கேட்டிலிருந்து இவருடைய மூதாதை ஒருமுறை காத்தார் என்பதனால் தந்தைக்கு இணையானவர் என்ற பொருளில் மாறச்சன் என்ற பட்டம் வழங்கப்பட்டதாம்.

4 மறுமொழிகள்:

சொன்னது…

//கடற்கரையில் வாழ்வோரில் பரவரே மிகுதி.//

இது தவறான தகவல் .குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரியிலிருந்து நீரோடி வரை உள்ள கிட்டதட்ட 45 மீனவ கிராமங்களில் கோவளம் ,புத்தன் துறை ,கேசவன் புத்தன் துறை ,பொழிக்கரை ,பெரியகாடு ,ராஜாக்க மங்கலம் ஆகிய ஆகிய கிராமங்கள் மட்டுமே பரவர் கிராமங்கள் .கன்னியாகுமரி மற்றும் முட்டம் கிராமங்களில் முக்குவரும் பரவரும் இணைந்து வாழ்கிறார்கள் .மற்றெல்லா கிராமங்களிலும் முழுக்க முழுக்க முக்குவர்களே வாழ்கிறார்கள்.

சொன்னது…

தாணுலிங்க நாடார் திருவிதாங்கூர் தமிழ் நாடு காங்கிரசிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை. போட்டி திருவிதாங்கூர் தமிழ் நாடு காங்கிரசை ஊருவாக்கினார். நேசமொணியை எதிர்த்து தமிழர் பார்ட்டி சார்பில் போட்டியிட்டார். தேர்தலில் தோற்ற பின்பு குளச்சல் சைமன் எம். எல்.எ., மூலம் திருவிதாங்கூர் தமிழ் நாடு காங்கிரசில் இணைந்தார்.

Nachinarkkiniyan சொன்னது…

Naan & Chaan are the words used in tamil to specify "Kayiru" or Rope. People associated with this might have called as Naan+An=Naanan-Naadaan or Chaan + An = Chaanaan etc.

If you compare Tanjavur Kallars Surname "Naadaalvaan" which means head of the "Nadu" & Naattaar (Like Venkatasamy Naattaar, a known tamil scholar)again head of "Nadu" the meaning can be derived &differentiated. Sivagangai kallars & Maravars surname also is "Naattaar". Presently Chennai people with their slang call "Naadaars" as "Naattaars" a phonetically changed version.

However Naadaar/Chaanaar surname is associated with "Kayiru/Naan" which they use to climb tree.

nachinarkiniyan

சொன்னது…

பாவம் நச்சினார்க்கினியன். மனநிறைவு கொள்ளட்டும்.