14.5.07

பழைய பாண்டம் - புதிய பண்டம் (5)

கலியாண்டு இயற்கை ஆண்டிலிருந்து 24 நாள் தள்ளிக் கணக்கிடும் இன்றைய முறையிலேயே அமைந்துள்ளது. எகிப்திலிருந்துதான் உரோமுக்கு இன்றைய கிறித்துவ ஆண்டுமுறை சூலியர் சீசரால் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன் ஆண்டுக்குப் பத்து மாதங்களாய்ப் பகுத்து அவை ஒவ்வொன்றிலும் அங்குள்ள குக்குலங்கள் ஒவ்வொன்று ஆட்சி புரிவது போல் அமைக்கப்பட்டிருந்தது.

கிரேக்கர்கள் நிலவாண்டையும் கதிராண்டையும் இணைக்க புதுமையான ஓர் முறையைக் கையாண்டனர். 8 ஆண்டுகளில் இரண்டு முறை ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்தினர். முதல் ஒலிம்பிக்கில் இரண்டு மாதங்களையும் இரண்டாம் ஒலிம்பிக்கில் ஒரு மாதத்தையும் கழித்துச் சரி செய்து விட்டனர்.

உரோமில் நடைமுறையிலிருந்த ஆண்டுமுறை மட்டுமின்றி சீனக் கடற்கரை மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ ஐரோப்பாவில் கலியாண்டிலுள்ள 24 நாள் பிழையில்லாத மேழத்திலிருந்து (மார்ச் 21) தொடங்கிய இயற்கை ஆண்டுகள் பல நாடுகளில் வழக்கத்திலிருந்துள்ளன.

16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த போப் கிரிகோரி என்பவர் மதமற்றவர்கள் (Pagens) என்று கருதப்படும் தமிழர்களின் பொங்கல் திருநாளும் கிறித்தவ ஆண்டுப்பிறப்பும் ஓரே நாளில் வருவது கண்டு அப்போது உருவாகியிருந்த “விண்மீன் ஆண்டுமுறை” (நட்சத்திரமானம் Sidereal year[1]) என்ற சாக்கை வைத்து 13 நாட்கள் ஆண்டை முன் கூட்டியே கணித்தார். அதற்கு முன் நம் சித்திரை மாதப் பிறப்பு அன்று தான் ஏப்ரல் மாதமும் பிறந்தது.

நம் ஐந்திறங்கள் தென்மதுரையிலோ அல்லது அதற்கும் முன் தென்னிலங்கையிலோ கணிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதற்கு அவற்றிலேயே சான்றுகள் உள்ளன. சித்திரை மாதத்தை எடுத்துக் கொள்வோம். தலைப்பில் “சித்திரை மாதம்”, “மேச ரவி” என்று இருக்கும். ஆனால் 7 முதல் 9 ஆம் நாளுக்கு நேராக “ரிசபாயனம்” என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது கதிரவன் மேச ஓரையிலிருந்து ரிசப ஓரைக்குள் நுழையும் நாள் என்பது இதன் பொருள். அந்த மாத பகல்நேரப் பட்டியலில் (அகசு) 5 நாளுக்கொருமுறை நேரம் குறிப்பிட்டு விட்டு ரிசபாயன நாளுக்கு ஒரு நேரமும் குறிக்கப்பட்டிருக்கும். ஓரைகளின் இருப்பைக் காட்டும் பட்டியல் பழைய முறைக்குத் தான் பொருந்துமேயன்றி இப்போதைய முறைக்குப் பொருந்துவதில்லை. புதியவற்றைப் புகுத்தியிருக்கிறார்களேயன்றி பழையவற்றை அகற்றிவிடவில்லை. கிட்டத்தட்ட 130 ஆண்டுகளுக்கு முன்பு கணிக்கப்பட்ட திருக்கணித ஐந்திறம் சில மாற்றங்களைக் கொண்டுள்ளது. அண்மைக் காலத்தில் பிற நிறுவனங்களும் மாற்றங்களைச் செய்துள்ளன. மொத்தத்தில் ஐந்திறங்கள் நம் பண்டை வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வுகளுக்கு உதவும் மிகப் பெரும் கருவூலங்களாகும்.

உலகில் 365¼ (சற்று குறைவாக) நாட்களையும், 12 மாதங்களையும் கொண்ட ஆண்டுமுறைகள் இரண்டே தான். ஒன்று தமிழர்களின் வாக்கிய ஐந்திறம் காட்டும் 60 ஆண்டுச் சுழற்சியுடைய கலியாண்டு. இன்னொன்று அதிலிருந்து தோன்றி மாதங்களின் நாட்கள் எண்ணிக்கையில் ஏற்பட்ட சீர்மையால் கையாள்வதற்கும் நினைவில் வைத்துக் கொள்வதற்கும் எளிமையான கிறித்துவ ஆண்டு. விடுதலையடைந்த பின் இந்திய அரசாங்கம் அமைத்த குழு வகுத்தளித்த சக ஆண்டு முறையையும் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதுதான் தென்மதுரையில் கடற்கோளுக்கு முன் நாம் கடைப்பிடித்த ஆண்டுமுறை. ஆனால் மாதப் பெயர்கள் சைத்ரம், வைசாகம் என்றிருப்பதற்கு மாறாக மேழம், விடை என்று மலையாள மாதப் பெயர்களைப் போல் இருந்தன. அதன் வரலாற்றுப் பதிவாக ஐரோப்பிய சோதிடக் குறிப்புக்குப் பயன்படுத்தும் ஓரைவட்டம் (Zodiac) இன்று உள்ளது.

24 நாட்கள் தள்ளி ஆண்டைக் கணக்கிட்டு நம் முன்னோர்கள் அதற்கிசைய மாதப் பெயர்களை மாற்றி விட்டனர். 27 நாண்மீன்களை 12 ஓரை வட்டத்துக்குள் ஓரைக்கு 2¼ ஆக வைத்தால் ஒவ்வொரு ஓரையின் தொடக்கத்திலும் ஒரு நாண்மீன் இருக்கும். எனவே ஒவ்வொரு மாதமும் வெள்ளுவா (பவுர்ணமி-முழுநிலா) அன்று நிலவு எந்த ஓரையில் உள்ளதோ அந்த ஓரையின் முதல் நாண்மீனின் பெயரில் அந்த மாதம் அழைக்கப்பட்டது. முன்பு மேழ மாதம் முழுவதும் கதிரவன் மேழ ஓரையில் இருந்தது. இப்போது அதில் பிசகு ஏற்பட்டதால் அதற்கு எதிரில் அதாவது 7-வதாக இருக்கும் அதாவது அம்மாத வெள்ளுவா அன்று நிலவு இருக்கும் துலை ஓரையின் முதல் நாண்மீனாகிய சித்திரையின் பெயர் வைக்கப்பட்டது. இதில் நாண்மீன்கள் வரிசையை கார்த்திகையிலிருந்து தொடங்குவதா, அசுவதியிலிருந்து தொடங்குவதா என்ற குழப்பம் இன்றும் நிலவுகிறது.

தமிழர்கள் தம் அறிவுத் துறைகள் அனைத்தையும் ஓரைவட்டத்துக்குள் அடக்கி வைத்துக் காத்துள்ளனர். இது ஒரு தனித்துறை. இதுபற்றித் தனியாகப் பேசலாம்.

இன்று கிரீன்விச் மைவரை (Meridian) உலகின் நேரக் கணக்கீட்டுக்கு அடிப்படையாக இருப்பது போல் முன்பு லங்கோச்சையினி மைவரை இருந்தது. முன்பு விளக்கிய, சுறவக் கோட்டில் இருந்த இராவணனின் தென்னிலங்கையையும் இந்தியாவிலுள்ள உச்சையினியையும் இணைக்கும் கோடு இது. இது இலக்கத் தீவுகள், மாலத்தீவு, டீகோகார்சியா, கடல் மட்டத்திலிருந்து 600 அடிக்குள் முழுகிக் கிடக்கும் பழைய இமைய மலையில் திரிகூட மலைகள் என்று சுறவக் கோட்டிலும் நிலநடுக்கோட்டிலும் மேற்கு நோக்கி கிளை மலைகள் பிரிந்து செல்லும் இடத்தில் அமைந்துள்ள இரண்டு இலங்கைகளையும் இணைத்து வடக்கே கடகக் கோட்டில் அமைந்துள்ள உச்சினியில் முடிகிறது. இது 75° கிழக்கில் உள்ளது. இன்றைய இலங்கை 79° கிழக்கில் உள்ளது. இதனை யாமோத்திர ரேகை என்றும் கூறுவர். எமதிசை - தென்திசை, உத்திரம் – வடக்கு; எமம் → யாமம், எம + உத்திரம் - யாமோத்திரம். அப்போதெல்லாம் கதிரவன் இந்தியாவில் அல்லது குமரிக் கண்டத்தில் தோன்றிப் பின் பிற பகுதிகளுக்குச் சென்றது போல் நாள்கணக்கு இருந்தது. இதை மாற்றுவதற்காக போப் கிரிகோரி 16 ஆம் நூற்றாண்டில் ஒரு வியாழக் கிழமையைக் கழித்து புதனுக்குப் பின்னர் வெள்ளிக் கிழமை வருவது போல் நாள்காட்டியை மாற்றியமைத்தார். எனவே இன்றைய கிரீன்விச் நேரம் நம்மை விட 5½ மணி நேரம் முன்னதாக உள்ளது.

இந்திரனைப் பாண்டியன் போரில் தோற்கடித்தது கண்ணனுக்கும் இந்திரனுக்கும் நடந்ததாகத் தொன்மங்கள் கூறும் போராக இருக்கலாம். மதுரை அழிந்து எஞ்சிய பகுதியில் இந்திரன் ஆட்சி நடந்ததற்கு எதிராகக் கண்ணன் நடத்திய போராக இது இருக்கலாம். அதனால் பாண்டிய நாட்டில் மழைவளம் குறைந்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் குறையைப் போக்க மழையைக் கட்டியாண்டான் பாண்டியன் என்று சிலம்பு கூறுகிறது. கபாடபுரம் பகுதி மழை வளம் குறைந்ததாக இருந்திருக்கலாம். இந்திரன் அதுவரை அளித்து வந்த உணவுப் பண்டங்களை நிறுத்தியிருக்கலாம். அதனால் அணைகளைக் கட்டித் தண்ணீரைத் திருப்பியும் குளங்களை வெட்டி நீரைத் தேக்கியும் பாசன அமைப்புகளைப் பாண்டியன் உருவாக்கியிருக்கலாம். கண்ணனின் மூத்தோனாகக் கூறப்படும் வெள்ளையன் என்ற பலதேவன் அல்லது பலராமன் கலப்பையைக் கொடியாகவும் ஆயுதமாகவும் கொண்டவன். அவன் கலப்பையால் கங்கையைத் தன்னிடம் கொண்டு வந்தவன் என்றொரு தொன்மக் கதை உள்ளது. வெண்மையைப் பெயரில் கொண்ட வெண்டேர்ச்செழியன் பலதேவனாயிருக்கலாம். 60 ஆண்டுகளை மழைப் பொழிவின் அடிப்படையில் 20-20-20 எனப் பிரித்து ஆண்டுக்கு ஒரு வானிலையியல் பாடலையும் பாடிய இடைக்காடனார் மழையின் தேவை கருதி அதனைப் பாடியிருக்கலாம். நம் ஐந்திறங்களில் மழை பற்றிய குறிப்புகளுக்கும் இடைக்காடரின் பாடல்களுக்கும் முரண்பாடு உள்ளதா என்பதையும் ஆயலாம். இடைக்காடனார் ஓர் ஆயர்-இடையர் என்பதும் கண்ணனும் இடையன் என்பதும் இணைத்துப் பார்க்கத் தக்கது.

தமிழறிஞர்கள் நம் ஐந்திறங்களிலும் 60 ஆண்டுப் பெயர்களிலும் நாண்மீன், ஓரைப் பெயர்களிலும் உள்ள சமற்கிருத வடிவத்தை நோக்கி அவை நமக்குரியவை அல்லவென்கின்றனர். ஆனால் அப்பெயர்களைத் தமிழ்ப்படுத்தி விட்டால் மட்டும் அவை தமிழர்களுக்குரியவாகிவிடுமாம். வருணன். இந்திரன் போன்ற இருக்குவேத தெய்வங்களைத் தொல்காப்பிய நானிலத் தெய்வங்களில் சேர்த்திருக்கும் நமக்கு இருக்கு வேதமும் சமற்கிருதமும் எவ்வாறு அயலாக இருக்க முடியும்?

சமற்கிருதத்தில் 50 விழுக்காடு தமிழ்ச் சொற்கள் என்று சொன்னார் பாவாணர். அவருக்குப் பின் வந்தவர்கள் மேலும் பல சொற்களைத் தமிழுக்கு உரியனவென்றனர். அவர்கள் விட்ட சொற்கள் இன்னும் எண்ணற்றவை. சாத்தூர் சேகரன் போன்றவர்கள் ஏறக்குறைய அனைத்துச் சொற்களையும் தமிழ் என்று கூறி அதற்குரிய சொல்லியல் நெறிமுறைகளையும் வகுத்துள்ளார். இவ்வாறு நம் தவறான நோக்கால் தமிழுக்குரிய எண்ணற்ற சொற்களையும் தமிழர்க்குரிய பல்வேறு எய்தல்களையும் படைப்புகளையும் நூல்களையும் அவை சமற்கிருதத்தில் உள்ளன என்ற ஓரே காரணத்தால்; நமக்குரியவையல்ல என்று மறுத்து வெறுங்கையராய் நிற்கிறோம்.

எடுத்துக்காட்டாக, கோயில் நடைமுறைகளை நெறிப்படுத்தும் ஆகம நூல்கள் கட்டடவியலில் அடிப்படை தோண்டுவதில் தொடங்கி “இறைவனை” இரவில் படுக்க வைப்பது வரை தேவைப்படும் அனைத்து அறிவியல் தொழில்நுட்பத் துறைகளையும் விளக்குகின்றன. அவை சமற்கிருதத்தில் இருப்பதால் அவற்றைக் காண நாம் மறுக்கின்றோம். அவை கிரந்த மொழியில் உள்ளன என்கின்றனர் சிற்பிகள். கிரந்தம் அவர்களுக்குரிய (குழுஉக்குறி) மொழியாம்.

இங்கு குமரிக் கண்டம் குறித்த மிகக் குறைந்த செய்திகளை, நான் அறிந்தவற்றிலிருந்து ஒழுங்குபடுத்தித் தந்துள்ளேன். இது ஒரு முதல்நிலை முயற்சி தானேயொழிய முடிவானதல்ல. இதை ஒரு தொடக்கப்புள்ளியாகக் கொண்டு வருங்காலத்தவர் விரிவுபடுத்தலாம். இதில் பல முரண்களும் இருக்கலாம். சிவன், கண்ணன், பலதேவன், முருகன் போன்றவர்கள் இந்திரனைப் போன்று பதவிப் பெயர்களா அல்லது தனிமனிதர்களா என்பது அவற்றுள் ஒன்று. பதவிப்பெயர்கள் என்று கொண்டாலே பல முரண்பாடுகளை விளக்க முடியும்.

1984 இல் குமரிக் கண்ட ஆய்வுக் கழகம் என்ற ஒன்றைத் தொடங்கினேன். உலகளாவிய நிலையில் ஆங்காங்குள்ள பண்பாடுகளுக்குக் குமரிக் கண்ட வரலாற்றோடு ஏதேனும் தொடர்பு இருந்தால் அவை பற்றிய கட்டுரைகளோடு கருத்தரங்குகள் நடத்தத் திட்டமிட்டு ஒரு கட்டுரைத் தலைப்புப் பட்டியல் உருவாக்கினேன். தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் அமைந்த அந்தப் பட்டியலை அடியில் தருகிறேன்.

இன்று தமிழர்கள் உலகளவில் பரவியுள்ளனர். அவர்கள் நினைத்தால் இத்தகைய ஒரு கருத்தரங்கை நடத்த முடியும். அதற்கு இந்த உரையாடல்கள் உதவட்டும்.

உலகப் பேரழிவிலிருந்து தப்பிய மக்களின் வழிவந்தவர்களாக அமைதிவாரி (பசிபிக் பெருங்கடல்)த் தீவுகளில் வாழும் மக்கள் முழுகிப் போன நிலத்தில் வாழ்ந்த தம் முன்னோர் தங்கள் வரலாற்றையும் அறிவியல் தொழில்நுட்பம் அனைத்தையும் பளிங்குக் கற்களில் பதிந்து வைத்துள்ளதாக நம்புகிறார்களாம். அவற்றை அவர்கள் வைத்துள்ளதாகவும் லெமூரியா பற்றிய இணைய தளம் ஒன்று கூறுகிறது. இன்று கணினித் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் தமிழர்கள் ஒரு நாள் அந்தப் பதிவைப் படித்து அறிவார்கள்; உலகுக்கும் சொல்வார்கள் என்று நம்பலாம்.

முன்பு கூறியது போல் வரலாற்று வரைவு என்பது ஓர் அரசியல் பணி. தமிழர்களின் வருங்கால அரசியலுக்கு விதையாக இந்தக் குமரிக் கண்ட ஆய்வு அமையட்டும்.

(இந்த கட்டுரைத் தொடர் திண்ணை இணைய இதழில் "பழைய பாண்டம் - புதிய பண்டம்" என்ற தலைப்பில் வெளிவந்ததின் மீள் பதிவு)


அடிக்குறிப்பு:

[1]ஆண்டு முறைகளை நிலவாண்டு (Lunar year), கதிராண்டு (Solar year), கதிர் நிலவாண்டு (Lumisolar year), விண்மீன் ஆண்டு (Sidereal year) என்று நான்காகப் பகுப்பர். வானில் உள்ள ஒரு விண்மீனுக்கு நேராகக் கதிரவன் அடுத்தடுத்து வரும் கால இடைவெளிக்கு விண்மீன் ஆண்டு என்று பெயர்; இது திருப்புகை (Tropical) அல்லது பருவமுறை ஆண்டை விட ஏறக்குறைய 20 நிமிடங்கள் நீளமானது.

0 மறுமொழிகள்: