காலத்துள் புதைந்து கிடைக்கும் உறவுகளும் உண்மைகளும் (5)
தமிழுக்கு எதிர்காலத்தில் நிகழக்கூடுமோ என்று நாம் ஐயுறும் ஒரு நிகழ்வு முன்னர் ஒருமுறை நிகழ்ந்திருக்குமோ என்ற ஐயம் எழுகிறது. வானிலுள்ள மண்டலங்களுக்குச் சென்று வந்தவர் போல் அவற்றைப்பற்றி கூறுகிறவர்களும் இருக்கிறார்கள் என்ற பொருளில்
செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ் ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளிதரும் திசையும்
வறிது நில இய காயமும் என்றிவை
சென்றளந் தறிந்தோர் போல என்றும்
இனைத்து என்போரும் உளரே
(புறம் 30: 1 - 6)
வலவன் இல்லா வானவூர்தி,
என்ற சீவகசிந்தாமணி வரிகள், பால்வழி எனப்படும் விண்மீன் தொகுதியைச்(Galaxy)த் தாண்டிச் செல்லும்போது ஏற்படும் நிலையை குறிப்பிடும் புறநானூற்று பாடல்,
மயங்கிருங் கருவிய விசும்புமுக னாக
இயங்கிய விருசுடர் கண்ணெனப் பெயரிய
வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம்
(புறம் 365: 1 - 3)
எரிக் வான் டெனிக்கன் என்பவர் கடவுளர்களின் தேர்கள் (Chariots of Gods) எனும் நூலில் சுட்டிக்காட்டியுள்ள, தொல்லுலகில் நடந்திருக்கும் அணுப்போர், விண் வழிச் செலவுகள், மகாபாரதத்திலுள்ள சிறப்புச் செய்திகள், இவற்றை வைத்துப் பார்க்கும் போது எழுத்தாளர் சுசாதா வியப்புறும் தமிழ் எழுத்தமைப்பு இத்தகைய ஒரு சூழலில் உருவாகியிருககக்கூடும். மறைமொழியாகத் தோன்றிய தமிழ் நாளடைவில் மக்கள் மொழியாகி விட, புதிதாக மறைமொழியும் (வேதமொழி) சமற்கிருதமும் உருவாகியிருக்கலாம்.
உலக வரலாற்றில் முதலில் ஓரணு உயிரியக்கமும் படிப்படையான வளர்ச்சியில் அணுவூழிவரை சென்று போரில் அழிந்து காட்டுவிலங்காண்டிகளிடமிருந்து மீண்டும் பலமுறை நாகரிகம் வளர்ந்து பனிவூழிகள், பனிவூடுருவல், எரிமலைகள், கண்ட நகர்வுகள், நிலப்பகுதிகள் உயர்தல், அமிழ்தல், நிலநடுக்கங்கள், ஆகிய மீள் நிகழ்ச்சிகளால் அனைத்தையும் இழந்து புதிது புதிதாகக் குடியேறிய இடங்களில் மீண்டும் பழைய வளர்ச்சியைப் படிப்படியாக எய்துதல் என்று மறைநூல்கள் சமற்கிருதத் தொன்மங்கள் அடங்கிய நம் பண்பாட்டினுள் ஒன்றின் மீது ஒன்று, ஒன்றனுள் ஒன்று எனப் பல படிவுகளான பதிவுகள் உள்ளன. அவற்றை உரிய அணுகலில் இழை பிரித்து இனங்காண முடியும். வல்லரசுகள் தம் மூலதனத்தையும் தொழில்நுட்பத்தையும் பண்டங்களையும் இங்கு கடைவிரிக்கவும் நம்மிடமுள்ள மூலப்பொருட்களை நாமே திரட்டி அவர்களுக்குத் தேவைப்படும் பக்குவத்தில் அவர்கள் “அறப்பணி” என்றும் “தொண்டு” என்றும் அளிக்கும் பயிற்சிகளால் செய்து ஏற்றுமதியால் வளம் பெறுகிறோம் என்ற ஏமாற்றை நம்பி அவர்களுக்கு அளிக்கவும் மார்வாரிகளுக்குப் போட்டி வராமல் தடுக்கவும் செயல்படும் வருமான வரித்துறையையும் தொழில் தொடங்குவதற்கு நம் ஆட்சியாளர்கள் உருவாக்கி வைத்திருக்கும் எண்ணற்ற தடைகளையும் மார்க்சியம் என்று பாட்டாளியரைக் காட்டி நம் நாட்டுத் தொழில்வளம் தற்சார்புடையதாக மலராமல் கோட்பாட்டாலும் செயற்பாட்டாலும் தடுப்பதை வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்ட ஒட்டுண்ணிகளின் கூட்டாளிகளாக இருந்துகொண்டு பாட்டாளிகளின் கூட்டாளிகள் என்ற பொய்யுருத்தாங்கிகளையும் கொண்ட கூட்டணியைக் களத்திலிருந்து அகற்றி மறைநூற்கள், சமற்கிருத நூற்கள், ஆகமங்கள், நம் மக்களிடையே நிலவும் மரபுகள், மருத்துவ நூல்கள், கணிய நூல்கள், ஆகிய அனைத்தையும் ஆய்ந்தால் வல்லரசுகளின் அறிவியல்-தொழில் நுட்பங்களை வெல்லும் வல்iமையை நாம் பெற முடியும். மக்களாட்சி மலரச்செய்து ஆட்சிக்காயினும் கல்விக்காயினும் வழிபாட்டுக்காயினும் மக்கள் பேசும் ஒரு மொழியே போதும் என்ற நிலையை உருவாக்க முடியும்.
ஒலிப்பெயர்வு (Transition) எளிதாக இருக்குமாறு தமிழ் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து
செல்லிய பள்ளி எழுதரு வளியின்
பிறம்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்
தகத்தெழு வளியிசை அரில்தப நாடி
அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே
அஃதிவண் நுவலா தெழுந்து புறத் திசைக்கும்
மெய்தெரி வளியிசை அளவுநுவன் றிசினே
(தொல். எழுத்து: 102)
அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்
(தொல். எழுத்து: 33)
அந்தணர் மறைகளின் எழுத்திலக்கணம் கூறாது ஒரு குறிப்பிட்ட வரையறைக்குட்பட்ட மொழிவழக்குகளுக்கே தாம் இலக்கணம் வகுத்திருப்பதாகத் தொல்காப்பியர் தெளிவாகவே கூறுகிறார். ஒரு மொழிக்கு இலக்கணம் எழுதும் ஆசிரியர் தான் இங்கு இன்னொரு மொழிக்கு இலக்கணம் எழுதவில்லை என்று கூறத் தேவையில்லை. அவ்வாறு கூறுவது ஏளனத்துக்குரியதாகும். அப்படி இருக்கும் போது இங்கு இவ்வாறு கூறுவதன் பொருள் யாது? அந்தணர் மறைகள் நரம்பின் மறை போன்றவற்றுக்கு வேறு ஒலிப்பு முறைகள் இருந்தன, அவை தமிழக மொழிவரம்பிற்குட்பட்டவை, தமிழ் வரம்புக்குள் வழங்கப்பட்டவை என்று சொல்லுவது தான் முறையாகும்.
இன எழுத்துக்கள் எனப்படும் வல்லெழுத்துகளுக்கு நான்கு ஒலிப்புகள் இந்தியாவுக்கு வெளியில் எந்த மொழியிலும் இல்லை. தமிழில் நாம் சுட்டிக்காட்டிய ஒரே வரியனுக்கு இடத்துக்கு ஏற்ப ஒன்றுக்கு மேற்பட்ட ஒலிகள் வழக்கிலிருப்பதையும் சேர்த்தால் இந்த முறை முற்றிலும் குமரிக்கண்டத்திலேயே உருவானது என்பது ஐயத்திற்கிடமின்றி விளங்கும். கடந்த 50 ஆயிரம் முதல் ஓரிலக்கம் ஆண்டுகளுக்குள் நடைபெற்றிருக்கக்கூடிய இந்த நிகழ்முறையை மனதிற் கொள்ளாமல் சமற்கிருதத்தில் இருக்கிறது என்பதாலேயே அறுபதாண்டுச் சுழற்சி முறையையும் அது சார்ந்த ஐந்திறத்தையும் நமக்குரியனவல்ல என்பது நம் பண்டைநாள் எய்தல்களுக்கான உரிமையை நாமே மறுப்பதாகும்.
மற்றொன்று கூறல் என்ற குற்றமாயினும் இன்று தமிழின் இருப்புக்கு ஏற்பட்டுள்ள அறைகூவலை எதிர்கொள்வது எவ்வாறு என்பதைப் பற்றி சிறிது சிந்திப்பது இங்கு பொருத்தமாக இருக்கும்.
கல்வி என்பது அரசுப் பணி போன்ற ஒட்டுண்ணி வேலைகளுக்கே என்ற மனப்பான்மையின் பின்னணியில் உழைப்பு விளைப்பு சார்ந்தோருக்கு நம் குமுகத்திலுள்ள இழிவு உள்ளது. சாதி உயர்வு தாழ்வும் அதன் அடிப்படையிலேயே கணிக்கப்படுகிறது. இவ்வாறு உழைப்பு - விளைப்பு சார்ந்த “கீழச்சாதி”யினருக்கும் அதனைத் தவிர்த்து விட்ட மேல் சாதியினருக்கும் ஒரு பண்பாட்டு முரண்பாடு உள்ளது. உணவு, உடை, தெய்வம், ஆண் - பெண் உறவு என்று ஏறக்குறைய பண்பாட்டின்[1] அனைத்துத் தளங்களிலும் அது செயற்படுகிறது. மொழி அதில் ஒரு இன்றியமையாத கூறாகும். அந்த வகையில் பொருளியல் நிலையில் உயர்ந்தோர் பிற பண்பாட்டுக் கூறுகளோடு மொழி சார்ந்தும் தங்களை மாறுபடுத்திக் கொள்கின்றனர். “மேற்சாதி” பண்பாட்டுக் கூறுகளைக் கடைபிடிக்க ஒரு குறிப்பிட்ட பொருளியல் பின்புலம் வேண்டும். அது இல்லாத “கீழ்ச்சாதி” மக்கள் அந்த “மேல்ச்சாதி”ப் பண்பாட்டை உயர்வானதென்ற தவறான கணிப்பில் அந்தப் பண்பாட்டுக் கூறுகளை கடைபிடிக்க முடியாததால் தாம் தாழ்ந்தவரென்றும் கடைபிடிக்க இயல்கின்ற மேற்சாதியினர் உயர்ந்தவர் என்றும் தங்களைத் தாங்களே தாழ்த்தி மதிப்பிட்டுக்கொண்டுள்ளனர். பண்பாடு சார்ந்த இந்த இழுவிசைக்கு “கீழச்சாதி” மக்களிடையிலுள்ள தாழ்வு மனப்பான்மையில் பெரும் பங்குண்டு. “மேல்ச்சாதி”யினர் கடைப்பிடிக்கும் இந்தப் பண்பாட்டுத் தொகுதியைத் தான் நாம் பார்ப்பனியம் என்கிறோம். நெல்லை மாவட்ட ஊர்ப்புறங்களில் சென்ற நூற்றாண்டில் வெள்ளாளக்கட்டு என்றனர். இந்த வெள்ளாளக்கட்டுப் பண்பாட்டுக்கு எதிராக சாதியொழிப்பிலும் தமிழ் வளர்ச்சியிலும் நாட்டம் கொண்டோர் வன்மையாகப் போராடவேண்டும்.
அடுத்து கல்வி என்ற பெயரில் வழங்கப்படும் எழுத்தறிவு மனப்பாடம் செய்தல் என்ற ஒரேயொரு திறனை மட்டும் சார்ந்துள்ளது. ஆய்வகப் பயிற்சி என்பது கூட பெரும்பாலும் அன்றாடப் பயன்பாட்டிற்குத் தேவைப்படாத உயர் கோட்பாட்டு மட்டத்திலேயே உள்ளது. மருத்துவர் படிப்பிலுள்ள பயிற்சி கூட மேலெழுந்தவாரியாக உள்ளதேயன்றி அடித்தளத்திருந்து ஆழமாக அமையவில்லை. பொறியாளர்கள், குறிப்பாக கட்டுமானம், இயந்திரம், மின்சாரம், போன்ற துறை மாணவர்கள் நடைமுறைக்குத் தேவைப்படும் திறன்களை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பைத் தங்கள் கல்வி நிலையங்களில் பெறமுடியாதவர்கள்.
நமக்கு, கட்டடம் கட்டுவதிலுள்ள பலதரப்பட்ட வேலைகள், முடிதிருத்துதல், துணி வெளுத்தல், வேளாண்மை தொடர்பான பல்வேறு கருவிகளை இயக்குதல். வேளாண்மைத் தொழில்நுட்பங்கள், கால்நடைப் பண்ணையில் உள்ள தொழிலாளர்கள், உணவு விடுதியில் சமையல் மற்றும் பரிமாறுவோர் என்று மக்களின் தேவைகளுக்கான பணிகளைப் புரிவோருக்கு எந்தவித முறையான கல்வியோ பாடத்திட்டமோ இல்லை. இவற்றைப் பாடத்திட்டத்தினுள் கொண்டுவந்தால் நம் நாட்டு மக்களுக்குத் தரமான பணிகளைப் பெற முடியும். உள்நாட்டிலேயே வேலைபெற முடியும். தமிழில் பாடத்திட்டங்களை வகுத்துத் தமிழுக்குப் பள்ளிகளில் இடம் பெற்றுக்கொடுக்க முடியும்.
இருக்கிற ஒரு கல்வி முறையை மாற்றுவதென்பது நினைத்துப்பார்க்க முடியாத கடும் பணி. ஆனால் தமிழார்வலர்களுக்கு இருக்கின்ற ஈடுபாடும் அதற்கென்று நாம் செலவிடும் ஆற்றலும் சரியான திசையில் திரும்பினால் இது இயலாத ஒன்றல்ல.
இன்று திசை தெரியாமல் மக்கள் தங்கள் சொத்துக்களை விற்றும் நம் ஆட்சியாளர் வாக்களித்துள்ள கடன்களைப் பெற்றும் ஓரிலக்கத்துக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்புள்ள படிப்புகளுக்காகச் செலவிட்டு நாடெல்லாம் நச்சுத் தொழிற்சாலைகள் போல் கல்வி நிலையங்கள் முளைத்துள்ளன. விரும்பும் வேலை கிடைக்காத இலக்கம் பேரில் எஞ்சியோர் அனைவரும் எதற்கும் உதவாமல் தங்களையும் தங்கள் குமுகத்தையும் வெறுக்கும் கும்பலாக மாறிவருகின்றனர். அவர்களிடமுள்ள அனைத்துத் திறமைகளும் கல்வி நிலையங்களுக்குள் அழிந்து போகின்றன. இது நம் குமுகத்துக்கு நல்லதல்ல. தொழில் வளர்ச்சிக்கும் தங்கள் வாழ்க்கைத்தரமும் பண்பாடும் மேம்படவும் பயன்பட வேண்டிய நம் பணத்திரட்சி இவ்வாறு அழிக்கப் பயன்படுவதைத் தடுத்து நிறுத்தாமல் தமிழருக்கோ தமிழகத்துக்கோ தமிழுக்கோ மீட்சியில்லை. சிந்தித்து செயலாற்றுவோமாக!
இனி, இவ்வாறு தமிழும் சமற்கிருதமும் வேத மொழியும் ஒரே மூலத்திலிருந்து தோன்றியவை என்றால் தமிழ் எழுத்துமறை, சொற்கள், இலக்கணம் ஆகியவற்றைப் பேணிப் பாதுகாக்க வேண்டுமா அல்லது சமற்கிருதத்தோடு கலந்துவிடலாமா, தனித்தமிழ், தூயதமிழ் என்பனவெல்லாம் தேவைதானா என்ற கேள்விகள் எழுகின்றன.
தமிழ் முழுகிப்போன குமரிக் கண்டத்தில் மக்கள் மொழியாயிருந்து இன்றைய தமிழகத்தில் நிலம் சார்ந்து தொடர்ந்து வரும் ஒன்று. அங்கு உருவாகி இங்கும் தொடர்ந்த மக்களின் உள் முரண்பாடுகளினால் வலுவிழந்து தங்களின் பெரும்பான்மை மக்களை இழிந்தோராக வைத்ததனால் தானும் செல்வாக்கிழந்து இழிமொழியாகி, சேரிமொழியாகிச் சிறுமைப்பட்டு நிற்கிறது. இந்த இழிநிலையை மாற்றி இழிவுக்குள்ளான மக்களின் குமுக செயற்பாடுகளான உழைப்புக்கும் விளைப்புக்கும் உரிய மதிப்பளித்து அவர்களது தொழில்முறைகளை இம்மொழியில் பாடத்திட்டங்களாக்கி கல்விமொழியாக்கி ஒட்டுமொத்த குமுகமும் பொருளியலில் வளர்ந்து மக்களும் மொழியும் நிலமும் உலகில் பெருமிதத்துடன் நிமிர்ந்து நிற்கத் தேவையான அரசியலின் ஊடகமாக இந்த மொழியின் இருப்பு தேவையாகிறது. அந்த அரசியலில் வெற்றி பெற்றபின் தேவையானால் இம்மொழியில் மாற்றங்களோ மேம்பாடுகளோ செய்துகொள்ளலாம். அதே நேரத்தில் இந்தக் குமுகியல் – பொருளியல் - அரசியல் நடவடிக்கைகளின்றி எவராலும் எந்த உத்தியாலும் இந்த மொழியை இனி காக்க முடியாது.
அடிக்குறிப்பு:
[1]பண்பாடு என்பது பருப்பொருள் பண்பாடு, நடத்தைப் பண்பாடு என்று இருவகையாகக் கூறப்பட்டாலும் இரண்டுக்கும் இடையில் ஒன்றை ஒன்று ஊடுருவும், ஒன்று மற்றொன்றாக மாறும் இயங்கியல் உறவுண்டு. இங்கு நாம் பருப்பொருள் பண்பாட்டு நிலையிலிருந்து பேசுகிறோம்.