5.7.09

வெற்றிடம்

'இந்தியா'வினுள் அயல்நாட்டு மூலதனம் இறங்குவதற்கெதிராகப் "பொதுமை"யினர் அடிக்கடி வெற்றுக் கூச்சல் எழுப்புவதைப் பார்க்கிறோம். இவர்களது இந்தக் கூக்குரல் நேர்மையாயிருந்தால் அவர்கள் இரு கேள்விகளுக்கு விடை கூறியாக வேண்டும். நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்கும் அதன் விளைவான வளமைக்கும் முதலீடு என்ற ஒன்று தேவையா இல்லையா, அந்த முதலீட்டுக்கு வெளி மூலதனத்தை இங்கே நுழைய விடுவதைத் தவிர வேறு வழிகள் ஏதாவது உள்ளனவா என்பனவே அந்தக் கேள்விகள்.

ஆனால் இவர்களுக்கு நன்றாகத் தெரியும் பொருளியல் வளர்ச்சிக்கு முதலீடு தேவை என்பதும் 'இந்திய' அரசால் அந்தத் தேவையை நிறைவேற்ற முடியாது என்பதும். அப்படியானால் வெளி முதலீடு தான் ஒரே வழியா என்ற கேள்வியும் எழுகிறது.

இல்லை என்பதே நம் விடை. நம் நாட்டில் மூலதன வாய்ப்பு மிகப் பெரிதாக உள்ளது. அது கருப்புப் பணம் என்ற முத்திரையிடப்பட்டு பதுங்கிக் கிடக்கிறது.

உண்மையில் கருப்புப் பணம் என்பது என்ன?

'கருப்புப் பணம்' என்ற சொல்லைக் கேட்டவுடனேயே அது ஏதோ சட்டத்துக்குப் புறம்பான வழியில் சேர்ந்த பணம் என்ற எண்ணம் தான் நம் கருத்தில் எழுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல.

போபர்சு ஊழலில் சுருட்டப்பட்ட பல நூறு கோடி உருவாக்களையோ பங்குச் சந்தை ஊழலில் திருடப்பட்ட பல்லாயிரம் கோடி உருவாக்களையோ போன்றதல்ல கருப்புப் பணம் எனப்படுவது. இன்றைய சட்டங்கள் ஏற்றுக் கொள்ளும் விதிகளின் படி ஈட்டப்பட்ட பணம் தான் கருப்புப் பணம் எனும் முத்திரை குத்தப்படுகிறது. ஒருவன் வருமான வரித்துறைக்குக் காட்டாமல் மறைக்கும் பணம் கருப்புப் பணமாகிறது.

அதே நேரத்தில் ஒரு போலி நிறுவனத்தைப் பெயருக்கு நடத்துவது போல் நடிக்கும் ஒரு வழிப்பறிக்காரன் தன் தேட்டைகளைத் தன் போலி நிறவனத்திலிருந்து வந்த வருமானமாகக் காட்டிவிட்டு அரசு நிறுவும் ஏதோவொரு நூற்றுமேனியை வருமான வரியாகக் கட்டிவிட்டானானால் அவன் பணம் "வெள்ளை"யாகிவிடுகிறது.

ஆனால் பாடுபட்டு உழைத்துச் சிந்தித்துத் திட்டமிட்டுப் பொருளியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒருவன் தன் ஈட்டத்தை ஒரு திருடன் தன் தேட்டையை ஆட்சியாளர்களிடம் பங்கு போட முன் வருவது போல் பங்கு போட முன்வரமாட்டான். எனவே ஆட்சியாளரின் வரம்பு மீறிய வருமான வரி விதிப்பை எதிர்ப்பதாகவே "வரி ஏய்ப்புகள்" நடைபெறுகின்றன.

இதனால் தான் தங்கள் தேட்டைகளை ஆட்சியாளர்களுடன் பங்குபோடுவதில் எந்தத் தயக்கமும் தேவைப்படாதக் குமுகப் பகைவர்கள் மட்டும் இன்றைய நிலையில் ஆதிக்கர்களாகச் சிறப்புப் பெற முடிகிறது.

உண்மையில் வருமான வரித்துறை குமுகத்தில் உருவாகும் பணத் திரட்சியைக் கருப்புப் பணமாக மாற்றும் பணியையே செய்து வருகிறது. அத்துறைக்கு வேண்டும் சம்பளம் முதலான செலவுகளை மாதச் சம்பளம் பெறுவோரிடமிருந்து பெற்றுக்கொள்கிறது. ஆசிரியர்கள், அரசூழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என்ற வகையினர் தான் உண்மையிலேயே வரி கட்டுகின்றனர். அண்மை ஆண்டுகளில் பெருந்தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களும் வருமான வரிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதனால் தான் ஐ.என்.டி.யூ.சி.த் தலைவராயிருந்த திரு. இராமானுசம் வருமான வரி உச்சவரம்பை உயர்த்துமாறு கேட்டார். இவர் தொல்லை தருவார் என்பதற்காக அவரை ஆளுநராக்கி அப்புறப்படுத்திவிட்டனர் பேரவைக் கட்சியினர்.

இவ்வாறு செயற்கையாக உள்நாட்டு மூலதனத்துக்கு ஓர் வெற்றிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வெற்றிடத்தை ஈடுசெய்வதாகக் கூறித்தான் 'இந்திய' அரசு வெளி மூலதனத்தை இறக்குமதி செய்வதாகக் கூறி நம்மை ஏமாற்றுகிறது.

ஆனால் ஆட்சியாளரின் ஏமாற்றை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். அதே நேரம் பொதுமையினரின் ஏமாற்று மிகத் திறமையானது. ஏனென்றால் இவர்கள் வெளியார் - உள்நாட்டினர் என்றெல்லாம் பாகுபடுத்துவதில்லை. "தனியார்" என்ற சொல்லைத்தான் பயன்படுத்துவர். ஆட்சியாளர்கள் மக்களின் பொருளியல் நடவடிக்கைகளை ஒடுக்கி அயலாருக்கு நாட்டின் வளங்களை விற்றுத் தமக்குக் காசாக்குவதற்காகத் திட்டமிட்டுச் செயற்படும் போது தனியாருக்குக் கொடுக்காதே என்ற இவர்களின் கூப்பாடு உள்நாட்டு மக்களைப் புறக்கணிப்பதற்கு ஆட்சியாளருக்கு ஒரு சாக்காகவும் மக்கள் மனதில் ஒரு தடுமாற்றத்தை உண்டாக்குவதாகவும் உள்ளது. அதே நேரத்தில் அயலாருக்கு அவ்வாய்ப்புகளைக் கொடுப்பதற்கெதிராக இவ்வெற்றுக் கூச்சலால் எதையுமே செய்ய முடிவதில்லை.

எனவே இம்மண்ணின் வளங்கள் வெளிநாட்டு மூலதனப் படையெடுப்பால் கொள்ளையடிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால், உள்நாட்டின் வேலை வாய்ப்புகள் பெருகி இளைஞர்களின் எதிர்காலம் ஒளிபெற வேண்டுமென்றால் உள்நாட்டு விளைப்பு பெருகி அனைத்து மக்களுக்கும் உணவு, உடை, உறையுள் என்ற நிலையை நோக்கி நாம் முன்னேற வேண்டுமானால் இந்தச் செயற்கை மூலதன வெற்றிடம் நிரப்பப்படல் வேண்டும். கருப்புப் பணம் ஆக்கப்பட்டுள்ள பணத் திரட்சி வெள்ளையாக மாற்றப்படல் வேண்டும். அதற்கு முதன்முதல் தேவை வருமான வரித்துறையின் ஒழிப்பு. தமிழகத்து இளைஞர்களே உங்கள் பார்வையை வருமான வரித்துறைக்கு எதிராகத் திருப்புங்கள். பதுக்கப்பட்டிருக்கும் பல கோடிக்கணக்கான கோடி உரூபாய்களை மூலதனமாக்கி உங்கள் எதிர்கால வாழ்வை வளப்படுத்தும் போராட்டத்தை வருமானவரித் துறை ஒழிப்புப் போராட்டத்திலிருந்து தொடங்குங்கள்.

0 மறுமொழிகள்: