5.7.09

காவிரி நீரும் தஞ்சை விவசாயிகளின் நிலையும் .....1

08 – 09 - 1995.
பாளையங்கோட்டை.

அன்புத் தோழர் பெ.மணியரசன் அவர்களுக்கு வணக்கம்.

தமிழக எல்லையில் தாங்கள் திட்டமிட்டுள்ள சாலை மறியல் போராட்டத் துண்டறிக்கை[1] கிடைத்தது. நன்றி. தங்கள் போராட்டம் வெற்றிபெற நல்வாழ்த்துகளுடன் என் மனம் நிறைந்த ஆதரவையும் தருகிறேன்.

பொதுவுடைமைப் பெயர் கொண்ட ஓர் இயக்கம் தமிழக மக்களுக்குரிய பொருளியல் உரிமைச் சிக்கல்களிலொன்றைக் கையிலெடுத்திருக்கும் நிலை கண்டு வியப்பும் மகிழ்வும் அடைகிறேன். அதிலும் பாட்டாளியப் புரட்சி, கூலி உயர்வு என்ற வழக்கமான தடத்திலிருந்து விலகி வந்திருப்பது பெரும் இறும்பூது!

அதே வேளையில் என் மனதினுள் சில கேள்விகள். 29 இலக்கம் ஏக்கர் நிலத்துக்குப் பாய வேண்டிய நீரை மறித்துக் கன்னட அரசு தர மறுத்தும் அதற்கு எவரும் எதிர்பார்க்கத்தக்க எதிர்ப்பு அப்பகுதி மக்களிடமிருந்து எழவில்லையே ஏன்? திரு. நெடுமாறன் நெடும்பயணம் மேற்கொண்ட போதும் மக்களின் ஆதரவு கிடைக்கவில்லையே ஏன்? ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் வழக்கு மன்றத்துக்குச் சென்ற போதெல்லாம் மாநில அரசு இறங்கி வந்து ஏமாற்றியும் பெருநிலக்கிழார்கள் வலிய எதிர்ப்பொன்றையும் தெரிவிக்கவில்லையே என்ற கேள்விகளுக்கு விடைகாண நான் என் மூளையைக் கசக்கிக் கொண்டிருக்கிறேன். எனக்குக் சில விடைகள் கிடைத்துள்ளன. அவற்றைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என் முடிவுகள் சரியானவை அல்லது ஆய்ந்து பார்க்கத் தக்கவை என்று நீங்கள் கருதினால் காவிரிப் பரப்பில் அவற்றை நடைமுறைப்படுத்திப் பாருங்கள் என்று வேண்டுகிறேன்.

1. தஞ்சை மாவட்டத்தை மூடி(சீலிட்டு)க் கொள்முதலை அரசு மட்டும் நடத்துவது.

இது பற்றிய உண்மைகளாவன:


தஞ்சை மாவட்டத்தில் விளையும் நெல் கேரளமாகிய சந்தையை நோக்கியது. கேரளத்தில் விரும்பப்படும் பருக்கன்(மோட்டா) வகை நெல்லே அங்கு விளைகிறது. பெருநிலவுடையோர் மட்டும் தங்களுக்கென்று பொடி வகைகளைப் பயிரிட்டுக் கொள்கின்றனர். கேரளத்தில் நெல், அரிசி ஆகியவற்றின் விலைகள் தமிழகத்திலுள்ளதை விட மிகக் கூடுதலாகும். எனவே கட்டுப்பாட்டு விலையில் கொள்முதல் செய்யப்பட்டு இசைவாணை(பெர்மிட்) வைத்திருக்கும் வாணிகர்கள் மூலமாக இந்நெல் கேரளத்துக்கு விற்பனையாகும் போது அவ்வாணிகர்கள் பெரும் ஆதாயம் ஈட்டுகிறார்கள். ஆனால் அவ்வாதாயத்தில் பெரும் பகுதியை நாட்டிலிருக்கும் எண்ணற்ற சோதனைச் சாவடிகள் மூலம் ஆட்சியாளர்கள் பிடுங்கிக்கொள்கிறார்கள். விளைப்பவனும் நுகர்பவனும் ஒருசேர இழப்பெய்துகின்றனர். வேறுபாடின்றி யார் வேண்டுமானாலும் நெல் வாணிகம் செய்யலாமென்று விட்டால் போட்டியில் வாங்குமிடத்துக்கும் விற்குமிடத்துக்குமுள்ள விலை வேறுபாடு குறையும்; உழவன் உண்மையில் ஆதாயம் பெறுவான். ஆனால் அதற்கு இன்று வழியில்லை. ஆதாயமில்லாத தொழிலாக நெற்பயிர் மாறியபடியால் அரசு பணப்பயிர்களைப் பரிந்துரைத்த போது அதனை நாடத்தொடங்கினர். பணப்பயிர் விற்பனையில் நெல் விற்பனையில் போன்ற கெடுபிடிகள் இல்லை. இந்தச் சூழ்நிலையில் தான் காவிரி தண்ணீர் குறைந்தது மிகப் பெரிய பாதிப்பாக தஞ்சை உழவர்களுக்குத் தெரியவில்லையோ என்று நினைக்கிறேன்.

கேரளத்து எல்லையைத் திறந்து விட்டால் தமிழகத்திலுள்ள அரிசியை எல்லாம் அவர்கள் கொண்டுபோய் விடுவார்களே என்ற ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. இன்று என்ன கேரள மக்கள் பட்டினியா கிடக்கிறார்கள்? நன்றாக வயிராறச் சாப்பிடத் தான் செய்கிறார்கள். எல்லைகளைக் கண்காணிப்பதால் கேரள மக்களின் அரிசி நுகர்வு ஒன்றும் குறைந்துபோய்விடவில்லை. தில்லியில் இருப்பவர்கள் உட்பட நம் ஆட்சியாளர்களின் பைகள் தாம் நிரம்புகின்றன.

உண்மையில் நடப்பது என்னவென்றால் தமிழகத்துக்கு வேண்டிய பொடி அரிசி ஆந்திரத்தில் விளைவதாகும். தஞ்சையில் விளையும் பருக்கன் அரிசி கேரளத்துக்குச் சென்று விடுவதால் தமிழகத்தின் தேவையை ஆந்திர அரிசி ஈடுசெய்கிறது. குமரி மாவட்டம் வரை இந்நெல் வந்து இறங்குகிறது. அதாவது ஆந்திரம், கேரளம், தமிழகம் மூன்றும் ஒரே உணவு மண்டலமாக நெடுங்காலம் செயற்பட்டு வருகிறது. இவற்றின் எல்லைகளில் வள்ளுவர் கூறியது போல் ஆட்சியாளர்கள் “வேலொடு நின்று” பணம் பறிக்கிறார்கள்.

இன்றைய நிலையில் ஆந்திரத்திலிருந்தோ வேறு எந்த மாநிலத்திலிருந்தோ நெல் உட்பட பிற பொருட்கள் கேரளத்துக்குச் செல்வதற்குச் சரியான பாதை கிடையாது. தமிழகத்தைக் கடந்து தான் செல்ல வேண்டும். ஆனால் கொங்கன் இருப்புப் பாதை திட்டம் நிறைவேறிவிட்டால் கன்னடத்திலிருந்து கேரளத்துக்கு அரிசி நேரடியாகச் சென்று விடும். காவிரியை மறித்துக் கட்டப்பட்ட பல்வேறு அணைகளின் பாசனப் பரப்பில் விளையும் மிகுதி நெல்லை வாங்கிக் கொள்ளும் சந்தையாகக் கேரளம் மாறிவிடும். தஞ்சை மாவட்டத்து நெல்லுக்குச் சந்தை இல்லாமல் போய்விடும். காவிரி நீரின் மீது தஞ்சை மக்களுக்கு இருக்கும் ஆர்வம் இன்னும் குன்றிவிடும்.

இந்த மறியல் போராட்டத்தைக் காணரம் காட்டிக் கன்னட வெறியர்கள் கொங்கன் இரும்புப் பாதையை உடனடியாக முடிக்கச் சொல்லி நெருக்குவர். செயலிலும் கன்னடனாக விளங்கும் இருப்புப் பாதை அமைச்சர் சாபர் செரீப் இதையே சாக்காகக் கொண்டு அப்பாதையை விரைந்து முடித்து விடுவான். எனவே நீங்கள் போராடினாலும் இல்லையென்றாலும் தஞ்சை நெல்லுக்குக் கேரளச் சந்தை இழப்பு என்பது சற்று முன்பின்னாகத் தான் நடைபெறும். எனவே தமிழகத் தேவைகளுக்கு உகந்த நெல்வகைகளைப் பயிரிடுமாறு அம்மக்களுக்குப் பரிந்துரைக்க வேண்டும். அத்துடன் அரசை எதிர்த்துக் கீழ்க்கண்ட முழக்கங்களை வைக்க வேண்டும்.

1. வேளாண் பொருட் போக்குவரத்துக்கு அனைத்து மாநிலங்களின் எல்லைகளையும் திறந்து விட வேண்டும்.

2. வேளாண் விளைபொருட்களுக்கு விலைவைக்கும் உரிமை உழவர்களுக்கே இருக்க வேண்டும்.

3. வேளாண் விளைபொருள் விலை ஆணையம் ஒழிக்கப்பட வேண்டும்.

4. நெல் போன்ற உணவுப் பொருள் வாணிகத்துக்கு உரிமம், இசைவாணை போன்ற முறைகள் ஒழிக்கப்பட வேண்டும்.

5. உழவர்களுக்கு அரசு வழங்கும் கடன் பணமாகவே இருக்க வேண்டும்.

6. அரசின் முற்றுரிமை (ஏகபோக)க் கொள்முதல் திட்டம் முற்றாகக் கைவிடப்படல் வேண்டும்.

இவற்றில் வேளாண் விளைபொருளுக்கு விலை வைக்கும் உரிமை பற்றி: 1982என்று நினைவு, அந்த ஆண்டில் வேளாண் விலை ஆணையம் நிறுவிய நெல் விளைப்புச் செலவு குவின்றாலுக்கு பஞ்சாபில் உரூ.122⁄-தமிழகத்தில் உரூ.150⁄-. இந்த நிலையில் இந்தியா என்ற பெரிய சந்தையில் பஞ்சாபியர்கள் ஆதாயத்தை அள்ளிக் குவித்திருக்க முடியும். இந்தியா அவர்களுக்குத் தேவருலகமாகத் திகழ்ந்திருக்கும். ஆனால் இந்தக் காலக் கட்டத்திலிருந்து தான் பஞ்சாபில் விடுதலை வேட்கை ஆயுதம் தாங்கிய போராக வெடித்தது. காரணம் என்ன? வேளாண் விளைபொருள் விலை ஆணையமும் கட்டாயக் கொள்முதல் திட்டமும் தேசிய ஒடுக்குமுறையின் ஓர் வடிவமாகும் என்பதே. பஞ்சாப் உழவர்கள் உழைத்த உழைப்பின் பயனை ஆட்சியாளர்கள் உரிமம் பெற்ற வாணிகர்களை மூலம் பறித்துக் கொண்டனர் என்பதே. எனவே இக்கோரிக்கைகள் தஞ்சை உழவர்கள் மட்டுமல்ல இந்திய உழவர்கள் அனைவரின் கவனத்தையும் கவரும்.

அரசின் கடன் கொள்கை ஆட்சியாளர்களின் ஊழல்களுக்காகவே அமைந்துள்ளது. விலை குறைப்புடன் வழங்கப்படும் உரம், அடியுரம் தேவைப்படும்போது மேலுரமும் மேலுரம் தேவைப்படும்போது அடியுரமும் வழங்கப்படுகிறது. இவ்வுரத்தைக் கடைகளில் குறைந்த விலையில் விற்று உயர்ந்த விலையில் தேவையான உரத்தை வாங்க வேண்டியுள்ளது. இதனால் பெயரளவில் உள்ள விலை குறைப்பு உழவர்களுக்குப் பயனளிக்கவில்லை. கூட்டிக் கழித்துப் பார்த்தால் உயர் வட்டியில் வெளியாரிடம் வாங்கப்படும் கடனை விட இது இழப்புத் தருவது. கடன் பெறுவதற்கு முன் உழவர்கள் அலையும் அலைச்சலும் படும் தொல்லைகளும் சொல்லி மாளாது. முன்னுரிமைத் துறை என்ற பெயரில் குறைந்த வட்டி கூட வேண்டாம், சந்தையில் நிலவும் வட்டியிலாயினும் பணமாகக் கிடைப்பதே உழவர்களுக்கு ஆதாயமாகும்.

(தொடரும்)

==============

[1] காவிரி நீர் தராத கர்நாடகத்திற்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்கக் கோரி தமிழக எல்லையில் சாலை மறியல்

நாள் : 25.9.95 திங்கள் காலை


இடம் : சத்தியமங்கலம்

தலைமை: தோழர் பெ.மணியரசன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

காவிரிப் பாசனப் பகுதியில் 29 லட்சம் ஏக்கர் நன்செய் நாசமாகும் நிலை. குறுவை, சம்பா முற்றிலும் பாதிப்பு. நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின்படி வேண்டிய தண்ணீரைக் கர்நாடகம் தர மறுப்பதால் தமிழ்நாட்டிற்கு இந்த அவலம்.

கர்நாடகக் கிருஷ்ணராஜ சாகர் அணையில் நிறைய நீர் உள்ளது. கபினி நிரம்பி விட்டது. ஆனாலும், கர்நாடகம் மோசடி செய்கிறது. இந்திய அரசோ, இதைக் கண்டு கொள்ளாமல் தமிழர்களை வஞ்சிக்கிறது.

கர்நாடகத்திற்கு நெருக்கடி கொடுத்துதான் நமது உரிமையை நிலைநாட்ட முடியும். தமிழக அரசு கர்நாடகத்திற்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். தமிழகத்தின் வழியாகக் கர்நாடகம் பொருள் போக்குவரத்து நடத்தத் தடை விதிக்க வேண்டும்.

தமிழக அரசு இக்கோரிக்கையை நிறைவேற்றக் கோரி நடைபெறும் சாலை மறியலுக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டுகிறோம்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

தலைமையகம்,
53,ஜமீன்தார் குடியிருப்பு,
புது ஆற்றுச் சாலை,
தஞ்சாவூர் - 613 001.

0 மறுமொழிகள்: