காவிரி நீரும் தஞ்சை விவசாயிகளின் நிலையும் .....3
திராவிடர் இயக்கம் பொருளியல் குறிக்கோள்களை எந்தக் கட்டத்திலும் சரியாகவோ முழுமனதோடோ முன்வைக்கவில்லை (திராவிடர் கழகத்தில் திரண்டிருக்கும் பணம், அதன் பல கிளைப்புகளில் சேர்ந்திருக்கும் பணம், பதவிகள் என்பவற்றைத் தவிர வேறு எதனையும் குறிக்கோள்களாகக் கொண்டிருக்கவில்லை என்பது வேறு, முன்வைக்கவில்லை என்பது வேறு). அதனால் தத்தமக்குப் போதும் என்ற அளவுக்குக் குமுகியல் ஏற்புக் கிடைத்தவுடன் அவை எதிரணிக்குத் தாவி எதிரிக்குப் பணிந்து தம்மைக் காப்பாற்றிக் கொண்டன.
அவ்வாறின்றி திராவிடர் இயக்கம் ஒரு நிலையான பொருளியல் குறிக்கோளை முன்வைத்திருக்குமானால் ஒவ்வொரு சாதிக்குழுவுக்குள்ளும் இருந்த குமுகியல் விசைகளுக்கும் பொருளியல் விசைகளுக்கும் மோதல் ஏற்பட்டுப் புரட்சிகரத் தனிமங்கள் வெளிப்பட்டு இயக்கம் முன்னேறிச் சென்றிருக்கும்.
எடுத்துக்காட்டாக நாடார்களை எடுத்துக் கொள்வோம். திராவிடர் இயக்கத்தின் தொடக்க காலத்தில் மேற்சாதிகளின் ஒதுக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்க்கும் வகையில் தாழ்த்தப்பட்டோர் உட்பட அனைத்துச் சாதியினரும் சேர்ந்து பயிலும் பள்ளிகளை அவர்கள் தொடங்கினர். கூட்டு விருந்து(சமபந்தி போசனம்)கள் நடத்தினர். பொதுக் கிணறுகளையும் பொதுக் குளங்களையும் பொது இடுகாடு சுடுகாடுகளையும் அனைவரும் பயன்படுத்த வேண்டுமென்ற முழக்கத்தையும் முன்வைத்தனர். இந்த முழக்கங்களுடன் தங்கள் செல்வ வலிமையைத் திராவிடர் இயக்கத்துக்கு வாரி வழங்கினார். நாளடைவில் இவர்களின் குமுகியல் நிலை மேம்பட்டது. அவர்களுக்கெதிரான ஒடுக்குமுறை, ஒதுக்குமுறைகள் மட்டுப்பட்டன. ஒரு கட்டத்தில் அதுவரை தாங்கள் தங்களுடன் இணைத்துக் கொண்ட தாழ்த்தப்பட்டோர் தங்களுக்குச் சமமாவ வருவதை விட எஞ்சியிருக்கும் ஒடுக்குமுறை, ஒதுக்குமுறைகளை ஏற்றுக்கொண்டு மேற்சாதியினருடன் இணங்கிச் செல்வதே மேல் என்ற நிலைப்பாட்டை எடுத்தனர்.
அதே நேரத்தில் பம்பாய் மூலதனத்தால் இதே நாடார்கள் நெருக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். அதை எதிர்த்து இவர்களுக்குக் குரல் கொடுக்க திராவிடர் இயக்கம் முன்வரவில்லை. எனவே தங்களைக் காத்துக் கொள்ள ஒரே வழி பேரவைக் கட்சியிடம் அடைக்கலம் புகுவதே என்று முடிவு செய்தனர். அக்கட்சியில் பார்ப்பனர்களுக்கும் பிற மேற்சாதியினருக்கும் இடையில் உருவான முரண்பாட்டின் விளைவாகத் தலைமையைப் பெற்ற காமராசருக்குப் பின்னணியாக நின்றனர். நாளடைவில் வேறு வழியின்றி மார்வாரிகளின் காலடிகளில் வீழ்ந்துவிட்டனர்.
திராவிடர் இயக்கம் தமிழகத்தின் பொருளியல் விடுதலை என்ற திசையிலும் குரல் எழுப்பியிருக்குமாயின் தங்கள் பொருளியல் நலன்களுக்குப் போராடும் வலிமையைத் தாழ்த்தப்பட்டோரிடமிருந்து பெறுவதற்காக அவர்களின் குமுகியல் உரிமைகளுக்கு இடம் கொடுத்திருப்பர். பொருளியல் நலன்களுக்கும் குமுகியல் நலன்களுக்கும் இடையிலான இயங்கியல் உறவை விளக்க அண்மைத் தமிழக வரலாற்றின் இப்பகுதி நமக்கு நல்ல ஓர் எடுத்துக்காட்டாகும்.
ஒதுக்கீடு என்ற கோரிக்கை ஏற்கப்பட்ட அன்றே அதனுடைய புரட்சித் தன்மை போய்விட்டது. கிடைத்த ஒதுக்கீட்டுக்கான பங்குச் சண்டை தொடங்கிவிட்டது. அந்த வெற்றியே தோல்வியாகி விட்டது. இடையில் மங்கியிருந்த சாதிச் சங்கங்கள் புத்துயிர் பெற்று புதுப் பிளவுகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. பொருளியல் நலன்கள் குமுகியல் முரண்பாடுகளை மங்க வைப்பதற்குப் பகரம் இரண்டும் ஒன்று சேர்ந்து இந்தப் பூசலை வலுப்படுத்திக் கொண்டு பொருளியல் பின்னணியால் பேய்வலிமை பெற்றுவிட்ட குமுகியல் பிற்போக்குக் போராக மாறிவிட்டிருக்கிறது. இந்த நிலையில் பொருளியலைக் குமுகியலுக்கு எதிராக அதாவது பகைகொண்டு நிற்கும் குமுகியல் பிரிவுகளுக்குப் பொதுவான அதாவது அப்பிரிவுகள் ஒன்றுபடுவதை இன்றியமையாததாக்கும் பொருளியல் நலன்களை முன் வைத்துப் போராட்டங்களைத் தொடங்கினால் இன்று பொருது கொண்டிருக்கும் குழுக்களின் கவனம் திரும்புவதோடு இணைந்து நின்று அவர்களுக்குப் புதிதாகச் சுட்டிக் காட்டப்பட்டிருக்கும் பொது எதிரியை எதிர்த்துப் போராடத் தொடங்குவர். இந்தப் போராட்டம் நெடுகிலும் அவ்வப்போது எழும் சூழ்நிலைகளுக்கேற்ப குமுகியல் பொருளியல் போராட்டங்களை நடத்திச் செல்வதன் மூலம் அகப்புற முரண்பாடுகளுக்கு நாம் தீர்வு காணலாம்.
எந்தவொரு முற்போக்கான முழக்கமும் திட்டவட்டமான மக்கள் குழுக்களைத் தொடுவனவாக இருக்க வேண்டும். தேசிய விடுதலை, தேசிய எழுச்சி, தமிழின விடுதலை, தமிழின மீட்சி, ஒடுக்கப்பட்டோர் விடுதலை அல்லது மீட்சி, புதிய பண்பாட்டு(கலாச்சார)ப் புரட்சி, புதிய மக்களாட்சி(சனநாயக)ப் புரட்சி பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோர் ஒற்றுமை என்ற அருமையான முழக்கங்கள் மக்களைத் தீண்டவே தீண்டா.
தமிழக மக்கள், குறிப்பாகத் தஞ்சை மக்கள் உணர்ச்சிகளற்றவர்களல்ல. தன்மான இயக்கத்தின் உயிர்மூச்சாய் இருந்தவர்கள். வரலாற்றில் இப்பகுதி மக்களுக்கு அஞ்சித்தான் இராசேந்திரன் மக்களில்லாத இடத்தில் கங்கை கொண்ட சோழபுரத்தை அமைத்துப் பதுங்கி வாழ்ந்தான். அதிராசேந்திரனைக் கொன்று கோயில்களை இடித்துப் பார்ப்பனப் பூசாரிகளை வெட்டி வீசியவர்கள் இவர்களே. ஆனால் குலோத்துங்கனால் அரசியல் - குமுகியல் உரிமைகளடிப்படையில் வலங்கையினரென்றும் இடங்கையினரென்றும் கூறுபடுத்தப்பட்டுத் தங்களிடையில் கொலைவெறிச் சண்டைகளிட்டு அரசன் மற்றும் பார்ப்பனர்கள் முன் மண்டியிட்டாலும் அவ்வப்போது பொருளியல் நெருக்குதல்களால் வரிகொடா இயக்கங்கள் நடத்தியவரே.
அதே போன்று இன்று ஒதுக்கீடு என்ற மாயமானாலும் காலத்துக்கும் களத்துக்கும் பொருந்தாத பொதுமையரின் முழக்கத்தாலும் திசையிழந்து நிலைமறந்து நகர இடமிழந்து நிற்கும் இம்மக்களை வெற்று முழக்கங்களால் அசைக்க முடியவில்லை. உங்களுக்கு என் கருத்துகள் ஆயத்தக்கண என்ற நம்பிக்கையிருந்தால் நீங்கள் மக்களிடையிலேயே ஒரு கருத்துக் கணிப்பு நடத்திப் பார்த்து அடுத்த நடவடிக்கையில் ஈடுபடலாம். இந்த ஓர் அணுகலோடு காவிரி நீருக்காக நடத்தப்படும் போராட்டத்துக்குக் காவிரிப் பாசனப் பகுதி மக்களின் முழு ஒத்துழைப்பையும் பெறமுடியும் என்பது என் உறுதியான நிலைப்பாடு.
நன்றி, வணக்கம்.
அன்புடன்,
குமரிமைந்தன்.
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக