5.7.09

காவிரி நீரும் தஞ்சை விவசாயிகளின் நிலையும் .....2

2. குத்தகை முறை:

தஞ்சை மாவட்டத்தில் கணிசமான விளைநிலங்கள் கோயில்களுக்கும் மடங்களுக்கும் சொந்தமானவை. மீதயுள்ளவற்றில் பெரும்பகுதி மூப்பனார், வாண்டையார், தீட்சிதர், முதலியார் ஆகியோருக்குச் சொந்தமானவை. இவற்றில் கோயில்களுக்கும் மடங்களுக்கும் குத்தகை ஒழிப்புச் சட்டத்திலிருந்து விலக்கு உண்டு. பெருவுடைமையாளர் நிலங்கள் பொய்ப் பெயர்களிலிருப்பதனால் உச்சவரம்புச் சட்டத்திலிருந்து தப்பிவிடுகின்றன. இப்பெருமுதலைகள் நிலத்தை விற்பதில்லையாகையால் குத்தகைச் சட்டத்தின் பயன்கள் குத்தகையாளருக்குக் கிடைப்பதில்லை.

எனவே பயிரிடும் குத்தகையாளருக்கு நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்க வேண்டும். சந்தை விலையில் பாதியைக் குத்தகையாளரிடமிருந்து தவணை முறையில் பெற்றுக் கொள்ள வேண்டும்.

பொதுமை இயக்கத்தினரின் நிலச்சீர்த்திருத்த முழக்கம் "உமுபவனுக்கே நிலம் சொந்தம்" என்பது. இதில் உழுபவன் என்ற சொல்லாட்சி தெளிவற்றது. உழுபவன் என்பவன் உழுதொழிலாளியாகிய வேளாண் தொழிலாளியா பயிரிடுவோனாகிய குத்தகையாளனா என்பதில் தெளிவில்லை.

"உழுபவனுக்கே நிலம் சொந்தம்" என்ற முழக்கம் முழுமையான நிலக்கிழமையிய(Feudalism)த்திலிருந்த ஐரோப்பாவில் உருவானதாகும். அங்கு மிகப் பெரும்பாலான நிலங்களும் பண்ணையடிமைகளான குத்தகையாளர்களால் பயிரிடப்பட்டன. உழைப்பு, இடுபொருட்கள் ஆகிய பொறுப்புகளை எல்லாம் ஏற்றுக்கொண்டு பயிர் செய்து விளைந்ததில் பெரும் பகுதியை நிலக்கிழாருக்கு வாரமாகக் கொடுப்பதுடன் குறிப்பிட்ட நாட்களில் அவருக்குக் கூலியற்ற வெட்டிவேலையும் செய்ய வேண்டும். நிலத்தை விட்டுப்போக முடியாது. நிலம் கைமாறினால் அவனும் நிலத்துடன் மாற வேண்டும். அந்த நிலையில் உழுபவன் என்பவன் குத்தகையாளனே. எனவே அங்கு இந்த முழக்கம் குத்தகையாளனையே குறித்தது.

இங்கோ தமிழகத்தில் ஒரு பக்கத்தில் குத்தகை முறையும் இன்னொரு பக்கத்தில் சொந்தப் பயிர் முறையும் இயங்கி வந்தது. உடைந்த நிலையிலான நிலக்கிழமை நிலை. இது நீண்ட காலமாக நிலவுகிறது. எனவே உழுதொழிலாளர்களும் கணிசமான நிலையிலிருந்தனர். தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டத்தகாதவராக இவ்வளவு எண்ணிக்கையில் இறுகிப் போனதற்கும் இந்த இரட்டை நிலை தான் காரணமாக இருக்க வேண்டும்.

இதில் உழுதொழிலாளிக்கு முதலிடம் கொடுப்பதா குத்தகையாளருக்கு முதலிடம் கொடுப்பதா என்ற கேள்வி எழுகிறது.

குமுகம் ஒரு பொருளியல் - பண்பாட்டுக் கட்டத்திலிருந்து அதைவிட மேம்பட்ட பொருளியல் - பண்பாட்டுக் கட்டத்துக்கு (எ-டு. அடிமைமுறையிலிருந்து நிலக்கிழமையியத்துக்கு, நிலக்கிழமையியத்திலிருந்து முதலாளியத்துக்கு) மாறுவதற்கு உந்து விசையாயிருப்பது குமுக விளைப்புக் கருவிகளாகிய நிலம், இயற்கை வளங்கள், விளைப்பு விசைகளாகிய உழைப்பு, கருவிகள், தொழில்நுட்பம் ஆகியவற்றிலிருந்து மிக அதிகமான விளைப்புத்திறனைப் பெறும் நோக்கமே. இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே சுரண்டும் வகுப்புகள் பொருளியல் கட்டமைப்பை மாற்றிக் குமுகியல் மேம்பாட்டுக்கு வழி வகுக்கின்றன. அதாவது பழைய பொருளியல் உறவுகள் மாறும் போது குமுகியல் உறவுகளில் மாற்றத்துக்கான அடிப்படை உருவாகிறது. இந்த வகையில் நிலக்கிழமையியத்திலிருந்து முதலாளியத்துக்கு மேம்பட்டதில் அடங்கியிருந்த பொறியமைப்பைப் பார்ப்போம்.

நிலக்கிழமையியத்தில் நிலமும் குத்தகையாளரும் ஒருவர் இன்னொருவரால் பிணைக்கப்பட்டிருந்தனர். நிலத்துக்கு நல்ல உரமிட்டுப் பண்படுத்தி விளைப்பு உத்திகளை மேம்படுத்தும் பொருளியல் வலிமை பண்ணையடிமைக்கு இல்லை. நிலக்கிழாரோ நிலத்தில் நேரடி வேளாண்மைக்கு ஆயத்தமாயில்லை. உழவனோ நிலத்தை விட்டு வெளியேறி மாற்றுப் பிழைப்புக்கு வழியில்லை. இந்நிலையில் நிலம் உழவனுக்கு, அதாவது குத்தகையாளனுக்குச் சொந்தமானால் அவனால் அதை இன்னொருவருக்கு விற்றுவிட்டு வெளியேறி வேறு பிழைப்பைப் பார்க்கலாம். நிலம் சொந்தப் பயிர் செய்யத் துணிந்த புதிய வேளாண் வகுப்புகளிடம் முழுமையான ஈடுபாட்டுடன் மிகக்கூடிய விளைதிறனை எய்தும்; குமுகத்தின் செல்வமும் மீத மதிப்பும் பெருகும். அம்மீதமதிப்பு மீண்டும் வேளாண்மையில் பாய்ந்து அதை மேம்படுத்தலாம் அல்லது தொழில்துறையில் முதலீடாகி அத்திசையில் வளர்ச்சியை ஊக்கலாம். அது தான் ஐரோப்பாவில் தொழிற்புரட்சியின்போது நடைபெற்றது.

இந்த அடிப்படையை நோக்காமல் வெறும் வெற்று முழக்கமாக "உழுபவனுக்கே நிலம் சொந்தம்" என்ற நிலக்கிழமையியத்துக்குரிய முழக்கத்தையும் முதலாளியத்துக்குரிய பாட்டாளியக் கோட்பாட்டையும் குழப்பி குத்தகையாளனைப் புறக்கணித்துவிட்டு உழுதொழிலாளியை முதன்மைப்படுத்தியதால் எதிர்விளைவுகளே நேர்ந்தன.

குத்தகை ஒழிப்புச் சட்டத்தால் பயன்பெற்ற குத்தகையாளர்களில் பெரும் பான்மையோராகிய பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் விரைந்து வளர்ந்தனர். அதற்குப் பல காரணங்களுண்டு. அவர்கள் நேரடியாக நிலத்தில் இறங்கி வேலை செய்தனர்; அதனால் கூலி மிச்சம். அவர்களுக்கு நடப்பிலிருக்கும் வேளாண் தொழில்நுட்பம் அத்துபடி; அதனால் இழப்புகள் குறைவு. அவர்களது தாழ்ந்த பண்பாட்டு மட்டத்தால் குடும்பச் செலவு குறைவு. இவற்றால் மீத மதிப்புப் பெருகி கணிசமான பேரின் நிலஉடைமை உச்சவரம்பின் எல்லையைத் தாண்டியது. எனவே நில உச்சவரம்பையே குறியாகக் கொண்டு பொதுமை இயக்கத்தினர் முன்வைக்கும் உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற முழக்கம் இம்மக்களை அயற்படுத்தியது.

பொருளியல் - குமுகியல் வளர்ச்சி என்ற அடிப்படையிலிருந்து பார்த்தால் நிலத்தைப் பகிர்ந்து நிலமற்றோருக்குக் கொடுப்பதென்பது ஒரு பிற்போக்கு நடவடிக்கையாகும். வளர்ச்சிப் போக்கைத் தலைகீழாக்குவதாகும். நிலக்கிழமையியத்திலிருந்து முதலாளியத்துக்கு மேம்படுவது என்பதில் வேளாண்துறைக் குறிதகவு என்னவென்றால் பண்னையடிமையை நிலத்திலிருந்தும் நிலத்தைப் பண்ணையடிமையிலிருந்தும் விடுவித்து முதலாளிய விளைப்பு உத்திகளுடன்(சொந்த இடுபொருட்கள் கூலி வேளாண் தொழிலாளர்களுடன்) சிக்கனமாகப் பயிரிட இயலும் வகையில் பெரும்பண்ணைகளை உருவாக்குவதாகும். நிலஉச்சவரம்பு, நிலத்தைத் தொழிலாளர்களுக்குப் பகிர்ந்து கொடுப்பது என்பவை இந்த உருவாக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக மட்டுமின்றி அவ்வாறு வளர்ந்து வரும் நிலவுடமைகளைச் சிதறடித்து நிலத்தின், குமுகத்தின் விளைதிறனைச் சிதைப்பதுமாகிறது. சிறுவுடைமையாளர்கள் ஆதாயத்துடன் வேளாண்மை செய்ய முடியாததோடு நினைத்தபடி அவற்றை வாங்குவோர், நிலச்சீர்திருந்தச் சட்டங்களுக்கஞ்சி அருகிப் போகின்றனர். நிலம் இன்னோர் சிறுவுடமையாளருக்குச் சொந்தமாகும் அல்லது ஒரு பெருவுடைமையாளர் அதை வாங்கி மறைத்துச் சிறுவுடைமை போலவே நடத்த வேண்டியுள்ளது. அதனால் நிலத்தின் விளைதிறன் மேம்பட வாய்ப்பில்லாமல் போகிறது.

அதுமட்டுமல்ல ஒரு வேளாண் கூலித் தொழிலாளியை விட ஒரு சிறு உடைமையாளனின் பொருளியல் - உளவியல் நிலை கீழானது. இன்றைய நிலையில் ஆற்றுப் பரப்புகளில் உழுதொழிலாளர்களுக்குக் கிடைக்கும் கூலி, அவர்களிடம் வரலாற்றுக் காரணங்களால் படிந்து இறுகிப் போய்விட்ட ஊதாரிப் பண்பாட்டுக் கூறுகள் இல்லையென்றால் ஒரளவு வாழ்க்கைத் தரத்தை அமைக்கப் போதுமானது. அத்துடன் வேலை முடிந்தால் மன அமைதியுடன் வாழ முடியும். ஆனால் சிறு உடமையாளனோ விதைத் தேர்வு செய்தல், கடன் பெறுதல், உரம் வாங்குதல், பயிர் நோய்களோடு போராடுதல், தண்ணீர் பெறுவதிலுள்ள சிக்கல், நடவு, அறுவடைக் கூலியாட்கள் சிக்கல், விளைந்தவற்றை விற்பதில் அரசின் நெருக்கடி என்று எண்ணற்ற சிக்கல்களில் அவனது ஆற்றலுக்கு மீறிச் செயற்பட வேண்டியிருக்கிறது. சிறுஉடைமை, நிலத்தில் மட்டுமல்ல, அணைத்துத் துறைகளிலும் நாய் தன் வாலையே துரத்தித் துரத்திச் சுற்றிவருவது போல் நம் மக்களைச் சுற்ற வைத்து அவர்களது ஆற்றலை அழிக்கிறது. அதனால் தான் குமுகத்தில் நிலவும் எந்தக் கடும் சூழல் கூட அவர்களின் கவனத்துக்கு வருவதுமில்லை வந்தாலும் எதுவும் செய்ய இயலாதவர்களாய் அக்கறையற்றுப் போய்விடுகிறார்கள்.

இன்னும் ஒரு கோணத்திலிருந்து பார்ப்போம். "பயிரிடுவோனுக்கே நிலம் சொந்தம்" அல்லது "குத்தககையாளனுக்கே நிலம் சொந்தம்" என்ற முழக்கத்தை எடுத்துக் கொள்வோம். இந்த முழக்கத்தால் பயன் பெற இருப்போருக்கு முன் கூட்டியே யார் யாருக்கு என்னென்ன பயன்கள் கிடைக்குமென்று தெரியும். எனவே அதற்காக அவர்கள் போராட முன்வருவார்கள். அதே நேரத்தில் "உழுபவனுக்கே நிலம் சொந்தம்" என்ற தெளிவில்லாத முழக்கத்தையோ "நிலத்தை அனைவருக்கும் பகிர்ந்து கொடு" என்ற முழக்கத்தையோ "உச்சவரம்புச் சட்டத்தைக் கண்டிப்பாகச் செயற்படுத்து" என்ற முழக்கதையோ எடுத்துக் கொள்ளுங்கள். நிலவுடைமையாளர்கள் அனைவருக்கும் இவை அச்சுறுத்தலாகும். அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கும் போது(இது நடைபெறுமாயின்) ஒவ்வொருவருக்கு எவ்வளவு கிடைக்கும், தமக்குக் கிடைக்குமா அல்லது இருப்பது பறிபோகுமா என்றெல்லாம் கலக்கம் ஏற்படும். எனவே எதிர்ப்புணர்வு தான் உருவாகும். நிலமற்றவருக்கோ நில உச்சவரம்பிலிருந்து பிடுங்கப்படும் நிலம் யார் யாருக்குச் செல்லும், பகிர்ந்து கொடுப்பார்களா அல்லது ஆட்சியாளர்களே வைத்துக் கொள்வார்களா அல்லது நிலம் வைத்திருப்பவர்களை மிரட்டிப் பணம் பிடுங்க மட்டும் சட்டத்தைப் பயன்படுத்துவார்களா (இவையெல்லாம் இன்று நடைபெறுகின்றன) என்றெல்லாம் ஐயங்கள் தோன்றும். அத்துடன் சிறுவுடைமைகளின் இயலாமைகளும் உழவனுக்குத் தெரியும். உச்சவரம்பு நிலங்களிலிருந்து பகிர்ந்ததளிக்கப்பட்டவை உடனுக்குடன் விற்பனையாவது நடைமுறை. எனவே இந்த முழக்கங்களின் மீது மக்களின் எந்தப் பிரிவினருக்கும் பரிவு ஏற்படாதது மட்டுமல்ல நிலடைமையாளர்கள் அனைவரின் வெறுப்புக்கும் அவை உள்ளாகும்.


பொய்யுடைமை(பினாமி) நில ஒழிப்புச் சட்டத்திற்கு ஏற்பட்ட நிலையைப் பார்ப்போம்.

பொய்யுடைமை வைத்திருப்போர் சொந்தப்பயிர் செய்வதில்லை. பெரும்பாலும் குத்தகைக்கே விட்டுள்ளனர். இந்தப் பொய்யுடைமைகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவை உச்சவரம்புச் சட்டத்தின் படி பிடுங்கப்பட்டு மறுபங்கீடு செய்யப்படுமா அல்லது கைப்பற்றாக வைத்திருக்கும் குத்தகையாளருக்கு ஒப்படைக்கப்படுமா என்ற குழப்பம் ஏற்படும். (இந்த வகையில் சட்டம் என்ன சொல்கிறதென்று எனக்குத் தெரியவில்லை) அப்படியானால் இன்றைய குத்தகையாளருக்கு அது எதிரானதாக இருக்கும். எனவே அவர்கள் எதிர்ப்பர். அதே நேரத்தில் மறுபங்கீடு செய்யப்படுமானால் யார் யாருக்குக் கிடைக்கும் என்பது முன்கூட்டியே தெரியாதாகையால் அதில் எவருக்கும் கவனம் இருக்காது. மாறாக பொய்யுடைமை ஒழிப்பையும் குத்தகை ஒழிப்பையும் இணைத்து முழக்கம் வைத்தால் குத்தகையாளர்களுக்குத் தங்களுக்கு எவ்வளவு நிலம் கிடைக்கும் என்ற உறுதி ஏற்பட்டு அவர்கள் போரிட முன்வருவர்.

முதலாளியக் குமுகம் என்பது பொதுமைக் குமுகம் உருவாவதற்குத் தேவையான பொருளியல் அடித்தளத்தை உருவாக்குவது என்பது மார்க்சின் கூற்று. மிகப்பெரும்பாலான மக்கள் உடைமைகளை இழந்து விரல்விட்டு எண்ணத்தக்க சிலரிடம் உடைமைகள் அனைத்தும் குவிதல், அவற்றில் மக்கள் கூலியாட்களாக கூட்டம் கூட்டமாகப் பணியாற்றுவதால், தங்களுக்குள் மக்கள் திரளாகுதல். இந்தக் கட்டத்திலிருந்து உடைமையாளர்களாகிய விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சிலரிடமிருந்து உடைமைகளைப் பறித்து எவருக்கும் உடைமையில்லாத அதே நேரத்தில் அனைவருக்கும் உடைமையுள்ள ஒரு நிலையே உருவாக்குவது. அந்த வகையில் குத்தகை உடைமைகள் சொந்த உடைமைகளாவதும் சிறுஉடமைகள் மறைவதும் முற்போக்கானவையேயன்றி பிற்போக்கானவையல்ல.

கோயில்கள் மற்றும் மடங்களின் நிலங்கள் குத்தகை உடைமைகளாகவே உள்ளன. ஆனால் குத்தகை ஒழிப்புச் சட்டங்களிலிருந்து விலக்கு உண்டு. இதனால் இந்தக் குத்தகையாளருக்குப் பாதுகாப்பில்லை. ஆனால் தனியார் நிலங்கள் போன்று உடைமையாளராகிய கோயில்கள் அல்லது மடங்களில் நெருக்கமான கண்காணிப்பு இல்லாததால் நாளடைவில் வாரம் செலுத்துவது குறைந்துவிட்டது. இதனால் இச்சமய அமைப்புகளின் மூலம் பயனடையும் குழுக்கள் இணைந்து ஆலயப் பாதுகாப்பு என்ற பெயரில் குத்தகை நிலங்களைப் பறிமுதல் செய்ய விரும்புகின்றன. பா.ச.க., இரா.சே.ச. (ஆர்.எசு.எசு.) இந்துமுன்னணி போன்ற அமைப்புகள் இந்த முயற்சிக்கு அரசியல் பின்னணி அளிக்கின்றன. குத்தகையாளர்கள் ஆளற்றுவிடப்பட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் கோயில் மற்றும் மடங்களின் நிலங்களுக்கும் குத்தகைச் சட்டத்தை விரிவுபடுத்துமாறு போராடத் தொங்கினால் அதன் விளைவுகள் மிக முற்போக்காக இருக்கும்.

1. இதனால் பயன்பெறும் மக்களில் மிகப்பெரும்பாலோர் பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோரே. இதனால் இவ்விரு பிரிவினரிடையிலும் உயிரியக்கமான ஒரு இணைப்பு ஏற்படும். ஆயிரமாயிரம் நல்லிணக்கக் குழுக்களும் அரசியல், குமுகியல் குழுக்களும் ஒன்றிணையுங்கள் ஒன்றிணையுங்கள் என்று குரலெழுப்பியும் இணைவதற்குப் பகரம் பிளவு விரிந்து சாதிச் சண்டைகள் மலிந்து வருகின்றன. சாதி மேட்டிமையுணர்வும் ஒதுக்கீட்டுச் சிக்கலும் பிளவுபடுத்தும் விசைகளைத் தலைமையில் கொண்டு வைத்துள்ளன, குறிப்பாக பிற்படுத்தப்பட்டோருக்கு. அதே நேரத்தில் இரு சாராருக்கும் பொதுவான பொருளியல் சிக்கல்கள் வெளிப்படுத்தப்படுமானால் இப்பிளவுபடுத்தும் விசைகள் தூக்கி எறியப்பட்டு ஒற்றுமையை வலியுறுத்தும் கூறுகள் தலைமையைக் கைப்பற்றும்.


2. கோயில் சொத்துகளைப் பிடுங்குவது என்று வரும் போது சமயப் பிற்போக்கு விசைகளுக்கும் பண்ட விளைப்பிலீடுபட்டிருக்கும் பொதுமக்களுக்கும் முரண்பாடுகள் முற்றும். கடவுள், கோயில், இந்துமதம் அதன் வருண அமைப்பு முதலிய கேள்விகள் மீண்டும் பூதவடிவில் பிற்போக்கர்களை அச்சுறுத்தும் வகையில் எளிய மக்களிடமும் வேர் கொள்ளும். இதையே பயன்படுத்தி கருவறை முதல் கோபுர வாசல் வரை வருணமுறையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் கோயில்களை இடிக்கும் வரைகூட நாம் இதை நடத்திச் செல்லலாம். ஏனென்றால் கோயில் அல்லது மடச்சொத்துகள் தஞ்சை மாவட்டதில் மட்டும் குவிந்து கிடக்கவில்லை. தமிழகம் முழுவதுமே பரந்து கிடக்கின்றன. நன்செய் நிலத்தில் 25 நூற்றுமேனியும் புன்செய் நிலத்தில் கணிசமான அளவும் உள்ளன. எனவே போராட்டம் பரந்த அளவில் பரவும்.


3. உழவர்கள் மீது அரசு கட்டவீழ்த்துவிட்டிருக்கும் நேரடியான (கொள்முதல் விலை முதலியவை) மற்றும் மறைமுகமான (கடன், மானியம் முதலியவை) ஒடுக்குமுறைகளுக்கு எதிரான நிலைப்பாடு, நடுவண், மாநில அரசுக்கு எதிரான ஒரு மக்கள் போராட்டத்தை உருவாக்கும். இது அடிப்படையில் தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமாகும். பஞ்சாபில் சமயப் போராகத் திசைதிருப்ப ஆட்சியாளர்கள் முயன்றும் வெற்றி பெறாத ஓர் வலிமையான பொருளியல் உள்ளடக்கத்தைக் கொண்டதாகும்.


4. கோயில் சொத்துகளின் மீது கைவைக்கும் போராட்டம் தொடங்கப்படும் போது பா.ச.க. போன்ற பிற்போக்கு விசைகள் தங்கள் உண்மையான உருவத்தை வெளிப்படுத்தும். சாதி மேட்டிமையால் அக்கும்பலை ஆதரிக்கும் பிற்படுத்தப்பட்டோரிடையில் பிளவுகள் ஏற்பட்டு முற்போக்கு விசைகள் வலிமை பெறும். வெளியிலிருந்து வந்திருக்கும் இந்தப் பார்ப்பனிய பிற்போக்குக் கும்பல்கள் தமிழக மண்ணிலிருந்து வீசியெறியப்படும். உள்ளிருக்கும் விசைகள் தகர்க்கப்படும்.


5. ஒரு மக்கள் போராட்டம் குமுகியல் குறிக்கோள்களைக் கொண்டதாகவோ அல்லது பொருளியல் நோக்கங்களைக் கொண்டதாகவோ இருக்கலாம். பெரும்பாலும் பொருளியல் நலன்களோடு இணைத்து மேற்கொள்ளப்படும் குமுகியல் போர்கள் தாம் வெற்றியை நோக்கிச் செல்லும். அவ்வாறு தான் திராவிட இயக்கத்தில் பல்வேறு சாதிக் குழுக்களின் செயற்பாடும். தங்களுக்கு நிறைவு தரும் அளவுக்குக் குமுகியல் சிக்கல்களில் ஒரு தீர்வு ஏற்பட்டுவிட்டால் அவை இரண்டு தளங்களில் செயற்படுகின்றன. ஒன்று தங்கள் பொருளியல் மேம்பாடு நோக்கியது. மற்றொன்று கீழ்மட்டங்களிலிருந்து தமக்கு வரும் குமுகியல் அறைகூவல்களை எதிர்கொள்வது. இவ்விரு தளங்களின் மேலிருந்து தான் தமிழ்நாட்டுத் சாதிக் குழுக்கள் திராவிட இயக்கத்தில் செயற்பட்டன. வெள்ளாளர், நாயக்கர்கள், பின்னர் நாடார்கள் என்று ஒவ்வொரு சாதியும் தத்தம் சாதிமட்டத்திற்கேற்ப ஒன்றன் பின்னொன்றாகப் பேரவை (காங்கிரசு)க் கட்சியைத் தழுவிக் கொண்டதும் பார்ப்பனியம் எனப்படும் வெள்ளாளக் கட்டிணைத் தாங்கிக் கொண்டதும் இதனால் தான்.

(தொடரும்)

0 மறுமொழிகள்: