20.8.07

மொழியும் அரசியலும் பொருளியலும்

அறிமுகம்

இன்று தமிழகத்தில் தாய்மொழிக் கல்வி, தமிழ் ஆட்சி மொழி போன்ற சிக்கல்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வு தோன்றியுள்ளது மகிழ்வூட்டுகிறது. இவ்வரங்கில் ஆட்சி மொழி பற்றி மட்டும் ஆயப்படுகிறது.

தமிழ் ஆண்ட ஒரு மொழியா?

தமிழக வரலாற்றில் தமிழ் என்று ஆட்சியிலிருந்தது என்பதே கேள்விக்குறியாக நம் முன் நிற்கிறது. சங்க இலக்கியங்கள் எனப்படும் இலக்கியங்களில் தமிழகத்தின் பண்பாட்டுத் தலைநகரமான மதுரையில் வேள்விப்புகையின் நடுவே வடமொழி வேதங்களின் ஒலியே நிறைந்திருந்ததைக் காண்கிறோம். சிலப்பதிகாரம் காட்டும் பூம்புகாரில் இந்திரவிழாவில்கூட அந்த அளவுக்கு வேதங்களின் ஆதிக்கம் காணப்படவில்லை. ஆனால் சேரனின் வஞ்சியில் அரண்மனைக் கோயிலின் உள்ளிருந்து வடமொழிப் பூசை செய்யும் பூசாரி தலையை நீட்டுவதைக் காண்கிறோம்.

பொதுவாக உலக வரலாற்றில் ஆளுவோரும் பூசாரிகளும் மக்களுக்குப் புரியாத மொழிகளையே விரும்பி வந்துள்ளனர். ஐரோப்பாவில் ஏறக்குறைய 13 நூற்றாண்டுக் காலம் ஆட்சியிலும் கோயில்களிலும் மக்களுக்குப் புரியாத கிரேக்கமும் இலத்தீனும் தான் பயன்பட்டன. இங்கிலாந்தின் நான்காம் என்ரியும் செருமனியின் மார்ட்டின் லூதரும் கிளப்பிய புயலினால் வெடித்த போர்களில் ஒரு நூற்றாண்டுக் காலத்துக்கும் மேலாக ஓடிய குருதியாறுதான் இவ்விரண்டு மொழிகளைக் கரைத்து மக்களின் தாய் மொழிகளுக்கு இடமளிக்கத் தொடங்கியது.

தமிழகத்திலும் கழகக் காலத்தில் தமிழ் ஆட்சி மொழியாயிருந்திருக்கக் கூடும். ஆனால் கழகத்தின் இறுதிக் காலத்தில் ஆட்சியினுள் வேதமொழி ஆதிக்கம் புகுந்துவிட்டதற்குத் தடயங்கள் உள்ளன.

கழக இலக்கியங்களைத் தொகுத்தவர்களில் ஒருவராகக் கருதப்படும் உருத்திர சன்மனின் பெயர் ருத்ரசர்மா என்பதன் தமிழ் வடிவமே. இந்தப் பின்னணியில் களப்பிரர்களின் காலத்திலும் பல்லவர்களின் காலத்திலும் சமற்கிருதம் ஆட்சி மொழியானது ஒரு நிகழ்முறைத் தொடர்ச்சியின் விளைவேயன்றி மாற்று மொழியாளர் படையெடுப்பின் விளைவென்று கொள்வதற்கில்லை.

பல்லவர்கள் காலஞ் செல்லச் செல்ல தமிழ் மீது கவனம் செலுத்தியதிலிருந்து மக்களின் செயற்பாடு அதன் பின்னணியில் இருந்திருக்க வேண்டுமென்பது புரிகிறது. பல்லவர்களின் இறுதிக்காலத்தில் அரசனின் ஆதரவோடு தோன்றிய நந்திக் கலம்பகம் அவனுக்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காகப் பொதுமக்கள் ஆதரவை நாடிநின்றதன் ஒரு அடையாளமே.

களப்பிரர், பல்லவர் காலங்களுக்குப் பின்னர் தோன்றிய சிவனிய எழுச்சியில் ஒரு தனித்தமிழ் இயக்கமும் அடங்கியிருக்கிறது. ஆனால் அவ்வியக்கத்தையொட்டி உருவான சோழப்பேரரசு தமிழில் பொறித்த கல்வெட்டுகளிலும் பட்டயங்களிலும் குறிப்பாக அவற்றின் மெய்சீர்த்திகளில் சமற்கிருத ஆட்சியே மேலோங்கி நின்றது.

அரசுகளும், கோயில்களும் முற்றிலும் சமற்கிருதக் கல்விக்கே அனைத்து உதவிகளும் செய்தன. மடங்களும் அம்மொழிக்கே முதலிடம் தந்தன. அதனால் பொதுமக்கள் அறிவதற்காகத் தமிழில் பிறப்பிக்கப்பட்ட ஆணைகள் எழுத்து, இலக்கணம் என்று அனைத்துவகையிலும் தரம் இழந்திருந்தன. இக்காலகட்டத்தில் செப்புத் தகடுகளில் அரசனின் மெய்சீர்த்திகள் பொறிக்கப்பட்டு அவை உள்ளூர் ஆட்சியமைப்புகளுக்கு வழங்கப்பட்டனவென்றும் அவற்றில் ஆவணச் செய்திகளை உள்ளூர் மக்கள் எழுதிக் கல்வெட்டுகளிலும் பொறித்தவர் என்றும் பர்ட்டன் றீன் என்ற அமெரிக்க ஆய்வாளர் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது. இவ்வாவணங்களில் காணப்படும் கழகக் காலத்திலிருந்து தொடர்ந்து வரும் சில சொல்லாட்சிகள் இன்று வரையிலும் கையாளப்படுகின்றன.

சோழர்களின் காலத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளின் விளைவாகவே கலிங்கத்துப் பரணி, மூவருலா, வீரசோழியம் போன்ற நூல்கள் அரசனின் ஆதரவுடன் தோன்றின. சோழனின் அமைச்சரான சேக்கிழாரைக் கொண்டு பெரிய புராணத்தை அரசனே எழுதுவித்ததற்கும் அரசியற் பின்னணி உண்டு.

கம்பராமாயணம் அரசனின் எதிர்ப்புக்கு நடுவே எழுந்ததென்று கருத இடமுள்ளது. அதுபோலவே தமிழில் இடைக்காலத்தில் உருவான பல இலக்கியங்களும் சிற்றரசர்கள் மற்றும் உயர்குடியினரின் ஆதரவினாலும் ஆட்சியாளரை அண்டியும் அகன்றும் நடைபெற்று சமய வடிவிலான மக்கள் இயக்கங்களிலிருந்தும் தோன்றியவையே.

மொத்தத்தில் சென்ற ஈராயிரம் ஆண்டுகளாகத் தமிழ் அரசுகளினால் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது. அதையும் மீறி மக்கள் அம்மொழியின் சீரிளமைத் திறம் குறையாது வைத்திருக்கின்றனர். வெவ்வேறு காலங்களில் மேல்மட்டத்திலுள்ள வெவ்வேறு குழுக்கள் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காகத் தமிழை, அதிலும் குறிப்பாக, ஒதுக்கப்பட்ட மக்களின் தமிழை மீட்டிருக்கின்றன. சிவனிய(சைவ), மாலிய(வைணவ), சமண, புத்த இலக்கியங்கள், பிற்காலத்தில் தோன்றிய குறவஞ்சி, பள்ளு போன்ற இலக்கியங்கள் இதற்கான எடுத்துக்காட்டுகள். இறுதியில் கிறித்தவர்கள், அதிலும் கத்தோலிக்கத் கிறித்தவர்கள் தமிழை மீட்டெடுப்பதில் தைரியநாதராயிருந்து தன்னை உயர்த்திக் கொள்வது மூலம் தமிழை உயர்த்திய வீரமாமுனிவரின் வழிகாட்டலில் பெரும் பங்காற்றியிருக்கின்றனர்.

ஆனால் இவர்களின் முயற்சிகளுக்குக் காரணமாகவும் மூலவளமாகவும் இருந்தது உழைக்கும் பெருங்குடி மக்களின் தமிழே. ஒதுக்கப்பட்டிருந்த அவர்களின் கோட்டையினுள் பிறமொழி ஆதிக்கம் ஊடுருவ முடியவில்லை. வெட்ட வெட்டத் தளிர்க்கும் உயிர்மரமாகத் தமிழ் அவர்களிடம் வேர்கொண்டிருந்தது. ஆனால் இன்றைய நிலை மாறிவிட்டது. அறிவியலின் விளைவான திரைப்படங்களும் வானொலியும் தொலைக்காட்சியும் தமிழின் வேரில் வென்னீர் ஊற்றுகின்றன. இந்த நிலையில் தமிழைக் காக்கவும் மீட்கவும் நாம் அதிக முனைப்போடும் ஆழ்ந்த சிந்தனையோடும் செயற்பட வேண்டியுள்ளது.

″விடுதலைக்கு″ப் பின் பதவியேற்ற அரசுகள் தமிழ் ஆட்சி மொழியாவதற்குப் பெரும் முயற்சிகள் மேற்கொண்டன. படிப்படியாகத் தமிழ் ஆட்சிப் பணிகளில் இடம் பிடித்து முன்னேறியது. ஆனால் அதற்குப் பல தடைகள் போடப்பட்டன. எடுத்துக்காட்டாக உயர்நீதி மன்றத்தில் தமிழில் தீர்ப்பு வழங்கவேண்டும் என்ற திட்டம் தமிழக அரசால் உருவாக்கப்பட்ட அதே வேளையில் நடுவணரசு உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாநிலத்துக்கு மாநிலம் மாற்றப்படுவார் என்று ஆணை பிறப்பித்தது. எனவே தீர்ப்புகளைத் தமிழில் எழுதும் முயற்சி மேற்கொள்ளப்படவே இல்லை.

ஐந்தாண்டுத் திட்டம் போன்று ஏறக்குறைய மாநிலத்தின் அனைத்துத் துறைத் திட்டங்களும் நடுவணரசிடமிருந்து உதவி பெறும் வகையில் இந்திய அரசின் நிதி ஆள்வினை மாற்றப்பட்டது. எனவே உருவாக்கப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்ந்து ஆங்கிலத்திலேயே உருவாக்கப்பட்டன.

மாற்றம் என்பது கடினமான உழைப்பும் கவனமும் தேவையான நிகழ்முறை. அதனைச் செயற்படுத்துவது எளிதல்ல. இந்தச் சிக்கலான நிலையில் மேற்கூறியவாறான தடைகள் இந்த மாற்றத்தைச் செயற்படுத்தும் எண்ணத்தையே இல்லாமலாக்கி விடுகிறது.

இந்த மாற்றத்தைச் செய்ய பொதுமக்களின் எழுச்சி தேவை. ஆனால் இந்த எழுச்சி தோன்றுவதற்குரிய சூழ்நிலையும் இல்லை. அதாவது தமிழக மக்களின் வாழ்வுக்குத் தமிழ் அறிவு இன்றியமையாதது என்ற சூழ்நிலை இல்லை. குறைந்தது தமிழால் வாழமுடியும் என்ற நிலை, பட்டிமன்றம், வழக்காடு மன்றம், பாட்டரங்கம், கருத்தரங்கம் நிகழ்த்துவோர் தவிர, சராரசித் தமிழ் மகனுக்கு இல்லை. உள்நாட்டில் வேலை வாய்ப்பில்லை; எனவே பிற மாநிலம், ஏதாவது அயல்நாடு ஒன்றுக்கு ஓடுவதுதான் வாழ வழி என்ற சூழ்நிலை உள்ளது. இதனால் தமிழ் ஆட்சிமொழி அல்லது கல்வி மொழியாக இருக்க வேண்டும் என்ற உந்துதலுக்கு வழியில்லை.

இந்த நிலை மாற நாம் என்ன செய்ய வேண்டும்? நம் நாடு பொருளியலில் தற்சார்பு பெற நாம் போராட வேண்டும். மக்களின் மூலதனத்தையும் முன் முயற்சியையும் உழைப்பையும் முடக்கும் வகையில் அமைந்திருக்கும் வருமானவரிக் கெடுபிடிகள், தொழில் உரிமமுறை, மூலப்பொருட்களுக்கு ஒதுக்கிட்டுமுறை, இசைவாணை(பெர்மிட்) முறை ஆகியவை ஒழியப் பாடுபட வேண்டும். ஏற்றுமதி என்ற பெயரில் அரும்பொருட்கள் எல்லாம் மூலப்பொருள் நிலையில் ஏற்றுமதி செய்யப்படுவதை எதிர்த்து நாம் போராட வேண்டும். அவ்வாறு செயற்பட்டால் தான் இங்கு பிழைக்க முடியாமல் பிற நாடுகளுக்கு பிழைப்பு தேடி ஓடுவதற்கும் அவ்வாறு ஓடிய இடங்களில் பன்றிகளைப் போல் இருட்டறைகளில் அடைக்கப்பட்டும் நாய்களைப் போல் கொலை செய்யப்பட்டும் அழிவை நோக்கி நடைபோடும் இளைய தலைமுறையின் கவனம் நம் நாட்டின் மீதும் அதன் இன்றைய அவலநிலைக்குரிய காரணங்கள் மீதும் திரும்பும். அவற்றின் விளைவாக எழும் செயலூக்கங்களில் ஒன்றாக கலை இலக்கிய மலர்ச்சி தோன்றும். பிற மொழிக் கல்விக்கு மக்களிடையில் இருக்கும் நாட்டம் குறையும்; அவர்களின் ஆதரவை நாடும் நம் முயற்சியும் வெற்றி பெறும்.

ஆட்சியாளர்கள் எப்போதுமே மக்களுக்குப் புரியாத மொழியொன்று ஆட்சி மொழியாக இருப்பதைத் தான் விரும்புவர் என்று மேலே குறிப்பிட்டோம். நம் நாட்டில் நேற்று சமற்கிருதம். இன்று ஆங்கிலம், மக்களிடையில் ஆங்கிலக்கல்வி பரவினமையால் அது பலருக்கும் புரிந்து கொள்ளத்தக்க மொழியாகி விட்டது. எனவே இப்போது இந்தியைப் பற்றிக்கொள்ள முனைகின்றனர். இத்தகைய சூழலில் நாம் உரிய வகையில் செயலாற்றாமலிருந்தால் அடுத்து இந்தி மொழி தான் ஆட்சிமொழி கல்விமொழியாகும்.

எனவே நாம் ஆட்சியும் கல்வியும் தமிழ் இடம் பெற வேண்டுமென்று நினைத்தால் பொருளியல் தற்சார்புக்கான போராட்டங்களின் மூலம் பொதுமக்களின் கவனத்தையும் ஆதரவையும் ஈர்த்து அத்துடன் தமிழ் மொழி மேம்பாட்டுக்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

சொல்லாக்கத்தைப் பொறுத்த வரையில் அதற்குத் தேவையான மனித வளத்தைப் பெறுவது பெரும் சிக்கலில்லை. மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட திறன் தேவையாயிருந்து அத்திறனை வெளிப்படுத்துவோருக்குச் சிறப்பு கிடைக்கும் நிலையிருந்தால் திறனுள்ளோர் தாமே வெளிப்படுவர்.

இருந்தாலும் இன்று மொழிபெயர்ப்புப் பணியிலிறங்குவோர் முதலில் கழக இலக்கியங்கள் தொடங்கி வெள்ளையர் வரும் வரை எழுந்த இலக்கியங்கள் அவற்றிலும் சிறப்பாக அந்நூற்களுக்குப் பண்டை உரையாசிரியர்கள் எழுதிய பல்வேறு வகைப்பட்ட உரையாக்கங்கள், கல்வெட்டுகள், பட்டயங்கள் ஆகிய அனைத்தையும் அலச வேண்டும். அவை அனைத்துக்கும் சொல்லடைவு, பொருளடைவு உருவாக்க வேண்டும். அவற்றிலிருந்து ஆட்சித்துறையில் தேவைப்படும் சொற்களை அப்படியே பெற்றுக்கொள்ள முடியும். அறிவியல்துறையிலும் கலையியல், மொழியியல் துறையிலும் பலவற்றுக்கு பொருள் விளக்கமும் தமிழ் வடிவமும் கிடைக்கும். அவற்றுக்கு உட்படாத சொற்களுக்கு மட்டுமே புதிய சொற்களை வடிக்க வேண்டியிருக்கும்.

அவ்வாறு புதிதாகப் புனைய வேண்டிய சொற்களை அதன் நடைமுறைக் கருத்தின் அடிப்படையிலும் மூலமொழிச் சொல்லின் வேர்ப் பொருளைக் கண்டும் புனையலாம்.

அவையன்றி கலைக்கதிர் போன்ற இதழ்களும் பாவாணர், பெருஞ்சித்திரனார், வா.மு.சேதுராமன், இராமலிங்கனார் போன்று இயக்கமாகச் செயற்பட்டவர்களும் கே.என்.இராமசந்திரன், இல.க.இரத்தினவேலு போன்ற எண்ணற்ற தனி ஆர்வலர்களும் உருவாக்கியுள்ள சொற்களைத் தொகுத்துத் தெரிந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்தப் பணிகளை எல்லாம் அரசாங்கம் செய்ய முடியாது, செய்யவும் கூடாது. கடந்த காலம் போல் தமிழகத்துப் பொதுமக்களே அமைப்புகளை ஏற்படுத்தி பணமும் நல்ல மனமும் படைத்த பெருமக்களின் ஆதரவை நாடிப் பெற்றுச் செயற்படுத்த வேண்டும். மதுரை பாண்டித்துரைத் தேவரின் நான்காம் தமிழ்ச் சங்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியொன்று மிகச் சிறப்பான ஒரு செயல்திட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட இருப்பதாகத் தெரிகிறது. அத்தகைய உள்நாட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவது பயனுடையதாயிருக்கும். அதே வேளையில் இந்நாட்டின் பொருள் வளஞ்சிறக்கத் தேவையான முயற்சிகளின்பால் மக்களின் கவனத்தை ஈர்ப்பதன் மூலம் அவர்களுக்கு அதற்குரிய வழிகாட்டுதலும் கூட இன்றியமையாதது, முதன்மையானது.

நிலமும் காலமும் முதற்பொருளென்பது பொருளிலக்கணம். மொழி மரமானால் அம்மொழி பேசும் மனிதன் அம்மரத்தை ஈன்று வளர்த்துத் தாங்கி நிற்கும் நிலமாகும். நிலம் பாழாகிப் போனால் மரம் வாழாது. பேசும் மக்கள் வளங்குன்றி வறுமையுற்று வேரற்று நிற்பார்களானால் மொழி எவ்வாறு வளம் பெறும்? எனவே தமிழை வளர்க்க வேண்டுமென்று நெஞ்சார விரும்புவோர் தமிழ் மக்களின் பொருளியல் வாழ்வு சிறக்கத் தேவையான நடவடிக்கைகளில் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும்.

0 மறுமொழிகள்: