மீண்டும் ஓர் உப்பு அறப்போர்
உப்பு நம் நாட்டு மக்களின் உரிமைகளின் ஒரு குறியீடாக விளங்கி வந்திருப்பது இந்நூற்றாண்டின் புதுமை.
உப்பு ஓர் ஒப்பற்ற பொருள். பண்டைக் காலத்தில் ஒரு சிறந்த பண்டமாற்று ஊடகமாகப் பயன்பட்டுவந்தது. கடற்கரையிலிருந்து உப்பை எடுத்துக் கொண்டு உப்பு வாணிகர்கள் மலைகளின் உச்சி வரை சென்று திரும்பிருக்கின்றார்.
உப்பு உணவுக்குச் சுவை சேர்க்கவும் உடல் நலனுக்குத் துணையாகவும் பயன்படுகிறது. உணவு பதப்படுத்தலில் உப்பின் பங்கை நாம் மிகைப்படுத்தவே முடியாது.
இத்தகைய உப்பின் மீது வரி விதித்தான் ஆங்கிலேயன். வெளிநாடுகளுக்கு இந்தியச் சரக்குகளை ஏற்றிக் கொண்டு வெறுமையாகத் திரும்பும் கப்பல்களில் அந்நாடுகளிலிருந்து உப்பை ஏற்றி வந்து இங்கு விற்க வேண்டும். அதற்கு உள்நாட்டு உப்பு போட்டியாக இருந்தது. உள்நாட்டு உப்பின் விலையை ஏற்றும் முகத்தான் அதன் மீது வரி விதிக்கப்பட்டது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் பாதித்த ஆங்கிலேயனின் இந்தச் செய்கைக்கு எதிராக உப்பு அறப்போர் ஒன்றைக் காந்தி அறிவித்தார். நாடு முழுவதும் அறப்போரில் கலந்து கொண்டது. தன் அதிகாரத்துக்கு எதிராக மக்கள் விடுத்த இந்த அறைகூவலை வன்கரம் கொண்டு அடக்க முற்பட்டது ஆங்கில அரசு. மக்கள் கொந்தளித்து எழுந்தனர். இந்திய விடுதலைப் போரின் வீறு மிக்க கட்டங்களில் ஒன்றாகும் இந்த உப்பு அறப்போர்.
இன்று ஆங்கிலேயன் வெளியேறி விட்டான். ஆனால் மக்களாகிய நமக்கு உண்மையில் விடுதலை கிடைத்துள்ளதா என்ற கேள்வி நம் முன் பெரிதாக எழுந்து நிற்கிறது. ஆங்கில ஆட்சியின்போது மக்களின் நுகர்வுக்குக் கிடைத்த பல பொருட்கள் இன்று நேரடியாகவும் மறைமுகமாகவும் மறுக்கப்படுகின்றன. தேயிலை, முந்திரிப் பருப்பு, குளம்பி(காப்பி) மீன் வகைகள் ஆகியவற்றில் முதல் தரமானவை உள்நாட்டு மக்கள் பயன்படுத்தத் தடை உள்ளது. இவை ஏற்றுமதி, இறக்குமதி, வெளிச்செலவாணி என்ற பொருளியல் காரணங்களைக் காட்டி மறுக்கப்படுகின்றன. அதேபோல் ஏற்றமதியால் அதிக ஆதாயம் கிடைப்பதால் முந்திரிப் பருப்பு, இறால் மற்றும் பலவகை மீன்கள் ஆகிய சத்தும் சுவையும் கொண்ட உணவுப் பொருட்கள் ஏற்றமதியால் மக்களுக்கு மறைமுகமாக மறுக்கப்படுகின்றன.
உள்நாட்டு மக்கள் ஈட்டும் வருமானத்துக்கு வரியுண்டு. வெளிநாட்டிலிருந்து செலுத்தப்படும் தொகைக்கோ, வெளிநாட்டினர் இங்கு ஈட்டும் வருமானத்துக்கோ வரி கிடையாது. இவ்வாறு நாம் வெளிநாட்டவருக்காக உள்நாட்டவர்களால் ஆளப்படுகின்றோம். ஆனால் இவை பணக்காரர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ற எண்ணத்தில் எளிய மக்களிடமிருந்து எதிர்ப்புகளை உருவாக்கவில்லை. அந்தக் "குறையை" ஈடு செய்ய மீண்டும் வந்துள்ளது உப்பு, அதுதான் அயோடின் கலப்பட உப்பு.
மனிதர்களின் தைராயிடு சுரப்பி முறையாகச் செயற்பட அயோடின் தேவையாம். அயோடின் பற்றாக்குறை ஏற்பட்டால் தைராய்டு சுரப்பி வீங்கி முன்கழுத்துக் கழலை வருமாம். அவ்வாறு வருவதைத் தடுப்பதற்காக மக்கள் உண்ணும் உப்பில் அயோடின் சேர்த்துக்கொள்ள வேண்டுமாம். இவ்வாறு கூலிக்கு மாரடிக்கும் சில போலி அறிவியலாளர்கள் ஏறக்குறைய கடந்த பத்தாண்டுகளாகவே கருத்துப் பரப்பல் செய்துவந்தார்கள். செய்தித் தாள்கள் இந்தக் கருத்துப் பரப்பலை கருத்தோடு சுமந்துநின்றன. ஏதோ அறிவியல் புனைகதை போல் மக்களும் சுவைத்துப் படித்தனர்; ஏனென்றால் இந்தப் போலி அறிவியலாளர்கள் கூறுவது உண்மையாயின் நம் நாட்டு வீதிகளில் எங்கு பார்த்தாலும் முன்கழுத்துக் கழலையாளர்களாக மக்கள் அலைந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் நம் நாட்டைப் பொறுத்த வரையில் முன் கழுத்துக் கழலையுள்ளோர் மிக அரிதே. இப்படி அரிதாகக் காணப்படுவோருக்குக் கூட உணவில் அயோடின் குறைவினால்தான் இக்குறைபாடு நேர்ந்ததா அல்லது உணவிலுள்ள அயோடினை உடல் செரித்துக் கொள்வதிலுள்ள குறைபாடுகளால் அல்லது வேறு காரணங்களால் நேர்கிறதா என்பதை அறிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.
இதே நேரத்தில் டாடா போன்ற முதலைகள் வாளாவிருக்கவில்லை தமிழகத்துக் கடலோரங்களில் அதுவும் உப்பு விளைவிப்பதற்கு ஏற்ற சூழ்நிலைகளைக் கொண்ட இராமனாதபுரம், தூத்துக்குடி மாவட்டக் கடலோரங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கிப் போட்டிருக்கின்றன. இவ்வாறு இப்பெரு முதலைகள் நிலம் வாங்கிப் போட்டபோது அது எதற்காக என்று திகைத்தவர்களுக்கு இப்போது விடை கிடைத்திருக்கும்.
தங்கள் சொந்த அளங்களை அமைத்து அவற்றிலிருந்து உப்பை விளைவித்து வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் அயோடினைக் கலந்து (இந்த இறக்குமதிக்குத் தேவைப்படும் வெளிச் செலவாணிக்காக இன்னும் நம் பொருட்களில் எவையெவற்றை ஏற்றமதி எனும் பெயரில் இழக்க வேண்டியுள்ளதோ) இந்தக் கலப்பட உப்பைத் தங்கள் முகவர்கள் மூலம் பலசரக்குக் கடைகளுக்கு வழங்கி அங்கிருந்து அனைத்துக் குடிமக்களுக்கும் முன்கழுத்துக் கழலை வராமல் தடுக்கும் அரிய மக்கட்பணி ஆற்றுவதற்கே அவர்கள் மிக முன்னெச்சரிக்கையோடு, மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு தங்கள் குமுகக் கடமையை நிறைவேற்றும் நோக்கத்தோடு இந்நிலங்களை தமிழகத்து மண்ணில் தங்கள் பெயரில் ஒதுக்கி வைத்துள்ளனர். இதெல்லாம் உச்சவரம்புச் சட்ட வரம்புக்குள் வராது. அது உழவன் மேல்தான் பாயும். வேளாண்மை செய்து உணவைப் பெருக்குவோனது கால்களையும் கைகளையும்தான் கட்டும்.
1995 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து கடைகளில் அயோடின் கலப்படமில்லாத வெறும் உப்பை விற்பது தடை செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த ஆணையை நிறுத்திவைக்க வேண்டி வழக்கு மன்றத்திடம் வைத்த கோரிக்கையினடிப்படையில் தற்காலத் தடை வழங்கப்பட்டது. ஆனால் ஒரு நாளும் இல்லாத திருநாளாக 11.01.95 அன்று இறுதி உசாவல் வைக்கப்பட்டது. தமிழகம் முழுவதிலுமுள்ள நகராட்சிகளிலும் வரி செலுத்தும் மக்களைப் பாதிக்கும் சொத்து வரி விதிப்புக்கு 15.10.93இலும் அதைத் தொடர்ந்தும் உயர் வழக்கு மன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தடையாணைகளை விலக்கிக் கொள்ள இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு அயோடின் கலப்பட உப்பு குறித்த வாணிகர்களின் வழக்குக்கு மட்டும் முண்டியடித்துக் கொண்டு, வரிந்துகட்டிக் கொண்டு மல்லுக்கு நின்றது.
இன்று வெறும் உப்பு படி ஒன்று அல்லது ஒன்றரை ரூபாய்க்கு விற்கிறது. ஆனால் அயோடின் கலப்பட உப்பு கிலோகிராம் நான்கு உரூபாய். எடை அடிப்படையில் பார்த்தால் இன்றைய ஒரு படி வாங்கும் மக்கள் அதே அளவு அயோடின் உப்புக்கு பன்னிரண்டு ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும். இன்று தெருவில் உப்பைக் கூவி விற்றுக்கொண்டிருக்கும் அன்றாடங்காய்ச்சிகள் இருளில் மூலை முடுக்குகளில் "கள்ள உப்பை" விற்கும் "கடத்தல்காரர்களாக" மாறவேண்டியிருக்கும்.
இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து ஆங்கிலேயன் பர்மாவிலிருந்து கொண்டு வந்த அரிசி நம் வயிறுகளைக் கழுவிய போது ஏற்பட்ட விளக்கவொண்ணா உணவுப் பஞ்சத்தின் போது கூட காணப்படாத அளவுக்கு நம் "சுதேசி"களின் ஆட்சிக் காலத்தில் அரிசியையும் நெல்லையும் "கடத்தும்" "கடத்தல்காரர்கள்" என்று தெருவில் அரிசி விற்றுக் கொண்டிருந்த மக்களைத் துரத்தியடித்தனர். இன்று விற்பனையாகும் ஒவ்வொரு நெல்மணிக்கும் ஏதோவொரு வகையில் "கப்பம்" தண்டும் வகையில் உணவுப் பொருள் வாணிகத்துக்கு உரிமம் கொண்டு வந்துவிட்ட கொடுமையைக் காண்கிறோம். கட்டடம் கட்டும் போது தளத்தை நிரப்புவதற்கென்று எங்காவது மண்ணை வெட்டிச் சரக்குந்தில் கொண்டு சென்றால் சரக்குந்து உரிமையாளரிடத்திலும் கட்டடங்கட்டுபவரிடத்திலும் வழிப்பறிப்பதற்கென்றே "சுரங்கத் துறை" ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. அதுபோல் இனி உப்புக் "கடத்தல்காரர்"களிடமிருந்தும் கப்பம் தண்டப்படும் நாள் மிகத் தொலைவில் இல்லை.
அயோடின் கலப்படமில்லாத உப்பு விற்கும் கடைகளின் மீது உணவுப் பொருள் கலப்படச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே மக்கள் தாம் விரும்பாத அயோடின் உப்பை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். அல்லது "கடத்தல் உப்பை" நாட வேண்டியிருக்கும். கலப்பட உப்பை விற்பதற்காக கலப்படமில்லாத உப்பை விற்போர் மீது கலப்படத் தடைச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் கொடுங்கோன்மையைப் பாருங்கள்.
இந்த வேளையில் ஒன்றைச் சொல்ல வேண்டியிருக்கும். பொதுவாக மருத்துவக் கருத்துகளின் படியும் புள்ளிக் கணக்குகளின் படியும் இந்தியாவில் ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே அயோடின் பற்றாக்குறையால் மக்கள் துன்புறுகிறார்கள். தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் இந்த வரிசையில் வரும். அதுவும் மிகச் சிறுபான்மை மக்களே அயோடின் குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அயோடின் குறைவைக் கடல் மீன் உண்பதால் கூடச் சரிப்படுத்தி விடலாம். இன்றுள்ள போக்குவரத்து வசதிகளால் கடல் மீன் எட்டாத இடமேயில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் ஏற்றுமதி - இறக்குமதி வாணிகத்தில் தரகு பெறும் ஆட்சியாளர்கள் உள்நாட்டு விளைபொருளான கடல்மீனை மக்கள் கூடுதலாக நுகர்வதை எவ்வாறு விரும்புவர்?
அதுமட்டுமல்ல அயோடின் உட்கொள்ளும் பலருக்கு ஒவ்வாமை நோய் வரும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். தேவைக்கு மேல் உட்கொள்ளப்படும் அயோடினும் உடல் நலத்துக்குக் கேடு தரும். இவ்வேளையில் தங்களால் தாங்கமுடியாத விலையைக் கொடுத்து நோய்களை உண்டாக்கும் அயோடின் கலப்பட உப்பை வாங்குவதைக் காட்டிலும் மக்கள் வெறும் "கடத்தல் உப்பையே" வாங்க முன் வருவர். இன்றைய சிறு உப்பள உரிமையாளர்களெல்லாம் "கள்ள" உப்புக் காய்ச்சிகளாக மாறிவிடுவர். கப்பம் கொடிகட்டிப் பறக்கும். சாராயம் காய்ச்சுவதிலும் விற்பதிலும், கஞ்சா, அபின் மற்றும் போதைப் பொருள் கடத்தலிலும் விற்பனையிலும் கிடைப்பதைவிட அதிக வருமானம் இந்தக் "கள்ள உப்பு" விற்பதிலும் அரசாள்வோருக்குக் கிடைக்கும்.
வாணிகர்கள் அரசின் ஆணையை எதிர்த்து வழக்கு மன்றத்தை நாடினார்கள். இந்நாளில் வழக்கு மன்றம் என்பது மதில் மேல் பூனை. அது ஒரு புறம் தாவினால் மறுபறம் உள்ளோர் திரும்பவும் அதனை மதில் மேல் ஏற்றுவர். அது இன்னொரு தடவை தாவும் வரை நீதி நாடி நிற்போர் தவித்தே நிற்க வேண்டும்.
ஆனால் இன்னொரு வலிமையான இறுதி முடிவெடுக்கும் நீதிபதி ஒருவர் உள்ளார். அவரைக் கண்டு வாணிகர்கள் அஞ்சுவதால் அவரை அணுக அவர்கள் தயங்குகின்றனர். அந்த நீதிபதிதான் பொதுமக்கள். 1995இல் நடந்த கடையடைப்பின்போது வாணிகர்கள் முன்வைத்த கோரிக்கைகள் ஒவ்வொன்றும் பொதுமக்கள் சார்பானவையே. இருப்பினும் அக்கோரிக்கைகளைப் பொதுமக்கள் முன் விரிவாக வாணிகர்கள் எடுத்து வைக்கவில்லை. இருந்த போதிலும் பொதுமக்கள் முழு ஆதரவை வழங்கினர்.
இன்றைய உப்புச் சிக்கல் முன் நேற்றைய வரிச் சிக்கல் உப்புச் சப்பற்றுப் போய்விடும். எனவே வாணிகர்கள் இம்முறையாவது சிக்கலைப் பொதுமக்கள் முன் வைக்க வேண்டும். அயலானான ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெறுவதற்காக 1920இல் உப்பு அறப்போரை நடத்தினார் காந்தியடிகள். இன்று "சுதேசி"களிடமிருந்து விடுதலை பெறுவதற்கு ஆயத்த நடவடிக்கையாக மீண்டும் ஓர் உப்பு அறப்போர் தொடங்குவதற்கு நாமனைவரும் ஆயத்தமாவோம்.
பின்குறிப்பு:
அயோடின் சத்துள்ள உணவுப் பொருட்கள்:
கேரட், தக்காளி, பசலைக் கீரை, உருளைக் கிழங்கு, பட்டாணி, வெங்காயம், வாழைப்பழம், கடல் உணவுப் பொருட்கள், பால், பாலாடைக் கட்டி, முட்டை மஞ்சள் கரு, தண்ணீர் விட்டான் கிழங்கு.
உடலில் அயோடின் சத்தைச் சேர்க்க விடாமல் செய்யும் சில உணவுப் பொருட்கள்:
முட்டைக் கோசு, காலிபிளவர், முள்ளங்கி.
சான்று: தினமணி கதிர் 24 -07-1997.
2 மறுமொழிகள்:
அயோடின் உப்பு விற்க வேண்டும் என சட்டம் போடுவதை அவ்வப்போது வலைபதிவுகளில் எனது பின்னூட்டம் மூலம் எவ்வாறு பெருவணிகர்களுக்கு ஆதரவாக அரசு நடந்து கொள்கிறது உதாரணம் காட்டப்பயன்படுத்துவேன். உண்மையில் இது தேவை அற்றது. அயோடின் அதிகம் ஆனால் பல உபத்திரங்கள் வரும் என்ற சூழலில் ஏன் அதனை கட்டாயப்படுத்த வேண்டும்.
இதனை தடுக்க ஏதாவ்து வழி உள்ளதா?
குமரிமைந்தன் ஐயா
இந்த கட்டுரைக்கான என் மாற்று கருத்துக்களை தனிபதிவாக இட்டுள்ளேன்.படித்து தங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.
http://holyox.blogspot.com/2007/08/324.html
நன்றி
கருத்துரையிடுக