கருணா மனோகரனின் நூல்கள், ″நிகழ்″ நேர்காணல் – சில கருத்துகள்
பாளையங்கோட்டை,
23-07-95.
மதிப்பிற்குரிய கருணா மனோகரன் அவர்களுக்கு குமரிமைந்தன் எழுதுவது,
ஏறக்குறைய இரண்டாண்டுகளுக்கு முன் தங்களின் சாதிய சமூக அமைப்பும் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையும் என்ற நூலைப் படித்தேன். படித்து முடித்தவுடன் என் வழக்கப்படி கருத்துகளை எழுத ஆயத்தமானேன். ஆனால் நேரம் இன்மையால் இயலாமல் போயிற்று. இப்போது நிகழ் தாங்கி வந்துள்ள தங்கள் நேர்காணல் உங்களைப் பற்றிய செய்திகளையும் கண்ணோட்டங்களையும் தெரியவைத்துள்ளது. திராவிடத்தால் வீழ்ந்தோமா? சாதியத்தால் வீழ்ந்தோமா? நூலையும் அது பற்றிய குன்றம்.மு.இராமரத்தினம் அவர்களின் திறனாய்வையும் (தாராமதி) பார்த்தேன்.
முதல் நூலைப் படித்தபோது எனக்குத் தோன்றியது தாங்கள் பா.ம.க.வின் கோட்பாட்டாளர் என்பது. ஈரோட்டில் நான் கேள்விப்பட்டது அதை உறுதி செய்தது. அதாவது பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் இணைந்து போராட வேண்டுமென்பது. ஆனால் இந்த முழக்கம் இயந்திர முறையில் வைக்கப்பட்டுள்ளது. இரு குழுவினருக்கும் பொதுவான நலன் ஏதும் முன்னிறுத்தப்படவில்லை, தமிழ்த் தேசியம் என்ற மிகப் பொதுப்படையான ஒன்றைத் தவிர. அதாவது செயல் திட்டம் உருவாக்கும் பணி தொடங்கவில்லை.
உங்கள் நூல்களின் அடிப்படையிலும் நேர்காணலின் அடிப்படையிலும் சில கருத்துகளைச் சுருக்கமாக முன் வைக்கிறேன். இத்துடன் இணைத்துள்ள என்னுடைய எழுத்துகளின் படிகள் விளக்கமாக அமையலாம்.
மார்க்சியம்:
1. மார்க்சியம் கூறும் வளர்ச்சிப் படிநிலை சரிதான். குக்குலம்(இனக்குழு) - அடிமைக் குமுகம் - நிலக்கிழமை - முதலாளியம் - ? ஆனால் பாட்டாளியரே புரட்சிகரமானவர் என்பது வளர்ச்சியடைந்த முதலாளிய நாடுகளுக்கே பொருந்தும். இன்றைய நிலையில் அதுவும் காலங்கடந்ததாகிவிட்டது. ஏழை நாடுகளில் மார்க்சியத்தின்படி புரட்சிகரப் பாட்டாளியரே உருவாகியிருக்க முடியாது. கருநிலையிலிருக்கும் - தரகர்களாகிய பெருமுதலாளிகளாலும் அரசாலும் உலக வல்லரசியத்தாலும் ஒருசேர ஒடுக்கப்படும் - சிறு முதலாளிகளே அப்பங்கை ஏற்க வல்லோர்.
2. நேர்காணலில் (பக்.119,நிகழ்) "முதலாளியம் வருவதற்கு முன்பு இந்தியாவில் இருந்த சமூகக் குழுக்கள் யாவை?" என்ற வினா எழுப்பியுள்ளீர்கள். மார்க்சியக் கண்ணோட்த்திலான முதலாளியம் இங்கு எங்கே உள்ளது? இருப்பது முதலாளியத்துக்கு முந்திய ஆனால் உடைந்த அதே வேளையில் முற்றிலும் உடையாத, அழியாத நிலக்கிழமை தானே. நிலக்கிழமை ஆட்சியமைப்பை வெள்ளையன் அழித்தான். இருக்கும் பெருந்தொழில்கள் இங்கு வேர்கொள்ளாதவை, வல்லரசியத்தின் சிலந்தி வலைகள். அடிமட்டத்தில் ஏற்பட்ட சிறு சிறு தொழில்நுட்ப மாற்றங்களும் பழைய சாதிவரம்பை உடைக்காத வகையில் கடன், உதவி, சலுகை என்ற அளவில் அரசாலும் பொதுமைக் கட்சிளாலும் பேணப்படுகின்றன. நாவிதர்களுக்கு முடிதிருத்துக் கருவிகளும் வண்ணாருக்குத் தேய்ப்புப் பெட்டிகளும் செம்மாருக்கும் சக்கிலியர்களும் செருப்புத் தைக்கும் கூண்டுகளும் வைத்துக்கொடுப்பதும் நெசவாளர், ஐந்தொழிற் கொல்லர்கள், தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கென்று தனித்தனிக் குடியிருப்புகளும் அமைத்துக் கொடுப்பதும் ஆச்சாரியாரின் பழைய ′′குலக்கல்வித்′′ திட்டத்தின் மறுவார்ப்புகளன்றி வேறென்ன? உண்மையில் நாம் எய்த வேண்டியது பெருமரபியல்(Classical) முதலாளியமே. அதுவும் கட்டுப்படுத்த முடியா வலிமையோடும் விரைவோடும் பழங்குமுகத்தை அடித்து நொறுக்கித் தகர்த்துக் குப்பையாக்கி வெள்ளமாக இழுத்துச் செல்லத்தக்க பேய்த்தனமான முதலாளியமே.
ஐரோப்பாவில் முதலாளியக் குமுகத்திலிருந்து பொதுமைக் குமுகத்துக்கு மாறிச் செல்வதற்குச் செயல்திட்டம் வகுத்த மார்க்சு வந்தேறி நாடுகளில் நிலக்கிழமையிலிருந்து முதலாளியத்துக்கு முன்னேறுவதற்குச் செயல்திட்டம் வகுக்கவில்லை. பிறரும் இதுவரை அதனைச் செய்யவில்லை. இப்போது நாம் செய்ய வேண்டும்.
3. முதலாளியத்துக்கான இந்தச் செயல்திட்டம்தான் நீங்கள் குறிப்பிடும் இரு குழுக்களையும் (பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோர்) ஒன்றிணைக்க முடியும். அதற்கு அவ்வகுப்புகளிலுள்ள பணம்படைத்தோரையே முதலில் நாம் தொட வேண்டும். மேற்சாதியினரிடமிருந்தும் துணை கிடைக்கும்.
உலகில் இதுவரை நடைபெற்ற நாமறிந்த இயக்கங்கள் அனைத்துமே மேல்மட்டத்திலிருந்தே தொடங்கியுள்ளன. பேரவைக் கட்சி (காங்கிரசு), திராவிடர் இயக்கம், சிறிய குமரி மாவட்டத் திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு, உருசிய போல்சுவிக் கட்சி அனைத்துக்கும் இது பொருந்தும்.
உங்கள் களப்பட்டறிவிலிருந்து தெரிந்து கொண்ட உண்மை என்னவென்றால் கீழிருந்து எந்த அமைப்பையும் கட்டி எழுப்ப முடியாது என்பதாகும். எந்த ஓர் இயக்கத்தையும் தொடங்குவதற்குத் தேவையான தொடக்கவிசையை வழங்குவதற்கு மேலுள்ள வகுப்புகளால்தான் முடியும். ஊர்திகள் மேலிருந்து கீயர்களால் மாற்றப்பட்டு இயங்கும் அதே நடைமுறையே குமுக இயக்கங்களுக்கும் பொருந்தும். கீழிருந்து கட்டியெழுப்புமாறு வழங்கப்பட்ட அறிவுரைகளெல்லாம் அறியாமையால் விளைந்தவையல்ல. உலகளாவிய ஒரு வல்லரசுச் சூழ்ச்சியின் விளைவுதான். சிறுதொழில் தொடங்க உதவுகிறேன் என்று ஏழை எளிய மக்களுக்கு ஆசைகாட்டி அவர்களின் மன உறுதியைத் தகர்த்தெறியும் அதே உத்திதான் இதுவும். நல்லவேளை உங்கள் மனம் இன்னும் உறுதியாக இருக்கிறது.
4. நீங்கள் கருதுவது போல் சாதியம் ஒன்றும் இறுகிபோனதல்ல. அதற்கும் இயக்கம் உண்டு. கழக(சங்க) காலத்திலும் இடைக்காலத்திலும் அண்மை நூற்றாண்டுகளிலும் சாதியமைப்புகள் இடைவிடாமல் மாறிவந்துள்ளன இதைப்பற்றிய ′குன்றம்′ திறனாய்வு சரியே.
திராவிட இயக்கத்திற்கு முன்பும் இப்போதும் உள்ள சாதி உறவுகளே இதைப் புலப்படுத்தும். முன்பு சாதி ஏற்றத் தாழ்வு இருந்த இடத்தைச் சாதிப் பகைமைகள் பிடித்துள்ளன. முன்பு சாதிகள் இல்லையென்று கீழ்ச்சாதியினர் முழங்கினர். இன்று ஒதுக்கீட்டினால் இழப்பெய்துவோம் என்ற அச்சத்தில் (அப்படி ஒன்றும் இழந்துவிட வில்லை அவர்கள்) சாதிகள் இல்லை என்று மேற்சாதியினர் அலறுகிறார்கள்.
எண்ணூறு ஆண்டுகளாக தமிழக மக்கள் விருதுகள் என்ற குமுகியல் - அரசியல் உரிமைகளைப் பெறுவதற்கும் அதைத் தடுப்பதற்குமான கொலைவெறிச் சண்டையில் வலங்கையினர் - இடங்கையினர் எனப் பிரிந்து ஈடுபட்டிருந்தனர். அரசர்களும் பார்ப்பனர்களும் இதனைத் தூண்டிவிட்டனர். அதற்கு முன் 12ஆம் நூற்றாண்டில் இவ்விரு குழுவினரும் இணைந்து அரசன் ஒருவனை (அதிராசேந்திரன் என்ற சோழன்)க் கொன்றனர். கோயில்களை இடிந்தனர். பார்ப்பனப் பூசாரிகளைக் கொன்றனர்.
வெள்ளையர்தான் இச்சண்டையை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
5. இந்திய விடுதலைப் போராட்டத்தின்போதும் அதைவிடவும் சிறப்பாகத் திராவிட இயக்கத்தின் தொடக்கத்திலும் சாதி வரம்புகள் மங்கத் தொடங்கின. திராவிட இயக்கத்தினரின் ஏமாற்றும் பொதுமையினரின் இரண்டகமும் அந்தச் சூழலைச் சிதைத்தன. எனவே சாதி அழிக்க முடியாதது என்பது ஒரு கையறு உணர்வே.
தங்கள் திராவிடத்தால் வீழ்ந்தோமா? சாதியத்தால் வீழ்ந்தோமா?வில் மரபுத் தொழில் இறுமாப்பு பற்றிய தங்கள் கூற்று ஓர் அரிய கண்டுபிடிப்பு. இதிலிருந்து நீங்கள் ஒன்றைத் தெரிந்துகொள்ளலாம். சாதியத்தின் அழிவுக்கு முதன்முதல் தேவை மரபுத் தொழில்களை அழிப்பது. அதுமட்டுமல்ல, மக்களின் மரபு வாழிடங்களும் சாதியத்தின் வேர்களைப் பிடித்து வைத்துள்ளன. எனவே நமக்குத் தேவையானவை:
1. மரபுத் தொழில்களின் அழிவு
2. மக்கள் ஒட்டுமொத்தமாக இடம் பெயர்வது.
இதை நடைமுறைப்படுத்த இருவகை நிலைமைகள் உருவாக்கப்பட வேண்டும்.
1. மக்களால் கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் உள்ளிருந்தே உருவாகும் பொருளியல் நடவடிக்கைகள் அல்லது
2. கடுமையான, நீண்ட ஓர் உள்நாட்டுப்போர் அல்லது
3. இரண்டும்.
இறுதியில் ஓர் ஐயம், பா.ம.க. தலைவரிடம் கூட்டணி தொடர்பாக வாழப்பாடியைச் சந்திக்க வைத்தது தாங்கள்தான் என்று ஈரோட்டில் பேசிக்கொண்டார்கள். அது உண்மையா? அது ஏன்? தன் தீர்மானிப்புரிமை பற்றிய தீர்மானம் இயற்றுமாறு தூண்டியதில் ′மார்க்சியர்களான′ தங்களுக்கும் அ.மார்க்சுக்கும் பங்குண்டா? அதனால் உருவான இக்கட்டிலிருந்து தப்பத்தான் அந்த உத்தி கையாளப்பட்டதா? அறிந்து கொள்ள விரும்புகிறேன்.
வழக்கமாக ′மார்க்சியர்கள்′ இதுபோல் தூண்டிவிட்டு நட்டாற்றில் அல்லது நடுத்தெருவில் விட்டுவிட்டு ஓடிவிடுவார்கள், திருப்பத்தூரிலும் தருமபுரியிலும் போல. ஆனால் நீங்கள் தவறைப் புரிந்துகொண்டு உடனிருந்து உதவியுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் பா.ம.க. உங்களைப் போன்றவர்கள் இடம்பெறத்தக்க அமைப்புதானா?
தங்கள் மறுமொழியை எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்,
குமரிமைந்தன்.
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக