குன்றக்குடி அடிகளாருக்கு மடல்
குன்றக்குடி அடிகளாருக்கு (அருணாசலத் தம்பிரான்) 06-01-95 நாளிட்ட மடல்
நாள்: 06-01-1995.
மதிப்பிற்குரிய அடிகளார் அவர்களுக்கு வணக்கம்.
இரு நாட்களுக்கு முன் தினமணியில் தாங்கள் எழுதியிருந்த கட்டுரை படித்தேன். முதலாளியம் தன்னலத்தை அடிப்படையாகக் கொண்டது எனவே அது வேண்டாம், கூட்டுறவு முறையே சரியானது என்றும் நம் மரபுகள் அதாவது மதிப்பீடுகள் முதலாளியத்தால் அழிந்து போய்விடும் என்றும் எழுதியுள்ளீர்கள். மாற்றம் வேண்டும் அதுவும் விரைந்த மாற்றம் வேண்டும் என்று எழுதிய நீங்கள்தான் மரபு அழிந்துவிடும் என்று அஞ்சுகிறீர்கள். இது தங்களிடம் காணப்படும் ஓர் இரட்டைத் தன்மை என்று நான் கருதுகிறேன். 1981 இல் மதுரை புதூர் பேரூந்து நிலையத்தில் ஓர் அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் நீங்கள் பேசியதை ஒரேயோரு முறை கேட்டேன். முயற்சி பற்றியும் உடலுழைப்பு பற்றியும் மிக உயர்வான கருத்துகளை நெடுநேரம் உதிர்த்துவிட்டு அம்மனுக்குப் பூசையிட்டால் மழை பெய்யும் என்ற மூடக்கருத்தைக் கூறி முடித்தீர்கள். இந்த இரட்டை நிலை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதே இரட்டை நிலைதான் இன்றும் உங்களிடம் காணக்கிடக்கிறது.
மாற்றம் என்பது அமைதியாக, அழகாக, சீராக, இனிமையாக நடைபெறுவதில்லை. ஒரு மகப்பேற்றின் போது தாய் அடையும் நோவும் வலியும் சில வேளைகளில் சாவும் நேர்வதுபோல் குமுகத்திலும் நேரும். சிற்றுயிர்கள், நிலைத்தினையாயினும் விலங்கினமாயினும் பேற்றின் போது மாண்டுவிடுகின்றன. உயர் உயிர்கள் மாள்வதில்லையாயினும் அவற்றின் உடலிலுள்ள கண்ணறைகள் ஒவ்வொன்றும் புதுப்பிக்கப்படுகின்றன. அவ்வாறுதான் குமுகம் ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்தை ஈனும்போது அதன் ஒவ்வொரு கூறும் ஒவ்வொரு தனியாளும் மாற்றம் பெறுகின்றனர். இதைத் தடுப்பதற்காக மாற்றத்தையே தள்ளிப் போடுவது குமுகக் கொலைக்கு ஒப்பாகும்; ஒரு தாயின் முற்றிய சூலை வெளியேறாமல் தடுத்தால் என்ன நிகழும்?
நாம் இன்று நிலக்கிழமைப் பண்பாட்டில் வாழ்கிறோம். அதன் இயல்பை வாழ்வின் அனைத்து மட்டங்களிலும் காண்கிறோம். பொருளியலில் முதலாளியத்தை நோக்கி இந்தக் குமுகம் நிற்கிறது. இம்முதலாளிய நிகழ்முறை முற்றுப்பெறுந்தோறும் தான் நிலக்கிழமைப் பண்பாடு அழிந்து உயர்ந்த ஒரு பண்பாட்டுத் தொகுதி உருவாகும். அதாவது பழைய ″மரபுகள்″ கட்டாயம் அழியும், அழிய வேண்டும். புதிய பண்பாட்டுத் தொகுதியில் பழைய மரபுகளில் சில மீண்டும் தோன்றும். ஆனால் அவை கட்டாயம் அகன்றே மீண்டும் தோன்றும். அதற்காக அழுது பயனில்லை. அவை அழிகின்றனவே என்று மாற்றங்களைத் தடுத்து நிறுத்துவது பேதைமை மட்டுமல்ல குமுகப் பகைமை.
நம் குமுகம் முதலாளியத்துக்கு மாறுவதை உங்களைப் போன்ற உள்நாட்டு அறிவுச் சிந்தனையாளர்கள் மட்டும் தடுக்க நினைக்கவில்லை. நம்மைச் சுரண்டிக் கொழுத்து நிற்கும் வல்லரசியத்தின் அனைத்து நிறுவனங்களும் திட்டமிட்டுத் தடுத்துவருகின்றன.
முதலாளியம் என்றால் என்னவென்று நீங்கள் அறிவீர்கள். அதாவது மார்க்சியம் கூறும் பெருமரபு அல்லது செவ்வியல்(Classical) முதலாளியம், அதாவது சிற்றுடைமைகள் எல்லாம் அழிந்து குமுகத்தின் விளைப்பு விசைகள் அனைத்தும் விரல்விட்டு எண்ணத் தக்க ஒரு சிலரிடம் குவிதல், பிறரனைவரும் அவ்வொரு சிலரிடம் கூலி பெறும் உழைப்பாளர்களாக (மூளை மற்றும் உடல் உழைப்பாளர்களாக) மாறுவது.
இந்த நிகழ்முறையால் சிற்றுடைமையாளரும் சிறு முதலாளிகளும் அச்சிற்றுடைமை எனும் மினுக்கமுள்ள விலங்கினின்று விடுபட்டு நிமிர்ந்து நின்று தத்தம் தனித்தன்மைகளை வளர்த்துக்கொள்ள முடியும். முதலாளிய நாட்டுப் பொதுமக்கள் பண்பாட்டு வளர்ச்சி இவ்வாறு வாய்த்ததே.
தாங்கள் சுட்டிக்காட்டியுள்ள கூட்டுறவுத் தந்தை ஓவனின் முயற்சிகள் தோற்றதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இங்கோ கூட்டுறவு பெயருக்குத்தான். உண்மையில் அரசின் முன்முயற்சியில் உருவாக்கப்பட்டு உறுப்பினர்கள் என்ற பெயரில் அடிமைகளை உருவாக்கி ஆட்டிப்படைத்து முதலாளியம் மூலம் கிடைக்கும் தொழிலாளர் நலன்கள் கூட மறுக்கப்படுவதை நீங்கள் அறிவீர்கள். அதற்கு எதிராக நீங்கள் குரல் கொடுக்கவில்லை.
உலகில் அமீபா என்ற ஒற்றைக் கண்ணறை உயிர் தோன்றியது ஏறக்குறைய 100 கோடி ஆண்டுகளுக்கு முன் என்றும் மீஇன்னாளைய கண்டுபிடிப்புகளின் படி மனித இனம் உருவாக அதிலிருந்த 97 கோடி ஆண்டுகள் தேவைப்பட்டது என்றும் அறிவியல் கூறுகிறது. இந்த 97 கோடி ஆண்டின் திரிவாக்கத்தை ஒவ்வொரு குழந்தையும் தாயின் வயிற்றினுள் 270 முதல் 290 நாட்களில் எய்திவிடுகிறது. தவளைக் குஞ்சாய், மீனாய், குரங்காய் மாறித்தான் ஒவ்வொரு குழந்தையும் மனிதக் குழந்தையாகிறது. இந்த விதியே குமுகத்திலும் செயற்படுகிறது. அது தான் மார்க்சு நாம் குமுக விதிகளை அறிந்து கொள்வதால் எந்த விதமான சட்ட நடவடிக்கை அல்லது உத்தியாலும் குமுகம் இடையிலுள்ள ஒரு கட்டத்தைக் கடக்காமல் குறுக்கு வழியில் இன்னொரு கட்டத்தினுள் தாவிச் சென்று விட முடியாது; ஒரு புதிய கட்டத்தை ஈனுவதற்குரிய பேற்றுக்கால நீட்சியையும் நோவையும் வேண்டுமானால் குறைக்கலாம் என்றார். இங்கும் அது தான்.
நம் நாட்டில் கூட்டுறவு அமைப்பு மூலம் மக்களை வாழவைக்கும் முயற்சி தோற்றுவிட்டது. நம் ஆளவந்தாரும் பொதுமைக் கட்சிகளும் இணைந்து நடத்திய சோசலிசம் எனும் போலி நிகர்மையும் வெளுத்துவிட்டது. அனைவரும் சேர்ந்து புரோகிதர்கள் போல் வருவோர் போவோரிடம் காணிக்கைக்காகக் கையேந்தும் இயற்கைக் குணமுள்ள அதே நேரத்தில் திமிர் பிடித்த அதிகாரக் கும்பலிடம் நாட்டின் பொருளியலையும் நாட்டுமக்களின் வாழ்வையும் ஒப்படைத்துவிட்டு மக்களுக்கு அறிவுரைகளும் அறவுரைகளும் கூறி மகிழ்கின்றோம். அயலவர்களுடைய மூலதனம் இங்கு புகுந்து நம் மக்களுக்குரிய இந்நாட்டு வளங்களனைத்தையும் வாரிக்கொண்டு போவதை எதிர்த்து வெறும் கூச்சல் போடுவதைத் தவிர வேறு எதையும் செய்ய மனமோ வகையோ அற்ற ″இடதுசாரி″ப் பொய்யர்களை நம்பி உள்நாட்டு மூலதனம், உள்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு வகை காண்பதைப் பற்றிச் சிந்திக்கவில்லை.
″மனிதம்″ என்பது மனித இனத்தின் இலக்குதானே யொழிய இன்னும் எங்கும் எய்தப்பட்வில்லை. அந்த மனிதத்தை எய்தும் வழியில் அவனை இழுத்துச் செல்வது தன்னலமே. பலரின் தன்னலம் ஒன்று சேரும் போது அது பொது நலமாகிறது. ஒரு பணக்காரன் அச்செல்வத்தைத் தன் வாழ்க்கை வசதிகளுக்காகச் செலவிடும் போது அதிலிருந்து விளைவது அவனது நலன்களை மட்டுமே. அதே நேரத்தில் மீண்டும் பொருள் சேர்க்க வேண்டுமென்ற ″தன்னலத்தில்″ தொழில்களில் முதலிடும் போது நாட்டின் தொழில்துறையை வளர்க்கிறான். அதற்காக அவன் உழைப்பை, சிந்தனையைச் செலவிடுகிறான். புதிய மூலதனத்தை உருவாக்குவதற்காக மூலதனத்தின் அடிமையாகிக் குமுகச் செல்வத்தை உயர்த்துகிறான். நமது இன்றைய ″நிகர்மை″ இதனைத் தடுத்து நிறுத்த வல்லமை பெற்றுள்ளது; ஆனால் வெளியாரின் வேட்டையைத் தடுத்து நிறுத்த முடியாத பேடிமையுடையது. தங்கள் போன்ற ஆழ்ந்த அறிவுடையோருக்கு இதுவே அனைத்தையும் விளக்கும்.
இந்த நாட்டு மக்கள் தங்களுடைய நிலக்கிழமை அடிமைத்தனத்திலிருந்து அடிமைச் சிந்தனைகளிலிருந்து விடுபட்டுவிடக் கூடாது; தங்கள் வேட்டையும் தேட்டையும் குலைந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்திய - வரவு செலவுத் திட்டத்தைப் போல் பல மடங்கு செலவில் பல்லாயிரம் ′தொண்டு′ நிறுவனங்களை இங்கு செயற்படுத்துகின்றன வல்லரசுகள். அவற்றின் நிகழ்ச்சிகளில் நீங்களும் அறிந்தோ அறியாமலோ கலந்துகொள்கின்றீர்கள்.
தாங்கள் தங்களிடம் காணும் இரட்டை நிலையையும் மீறித் தொடர்ந்து வேறுபட்டு நிற்கிறீர்கள். போலி ஆன்மிகக் குட்டையில் மக்களை மூழ்கடிக்க இடைவிடாது முயலும் சமயத் துறையினரிடையில் பொருளியல் வாழ்வின் இன்றியமையாமையை எடுத்துரைத்து எழுஞாயிறாக ஒளிர்கிறீர்கள். கருணாநிதி ஆட்சிக் காலத்தில் திருவாரூரில் திரு.வி.க. உருவத் திறப்புக்கு நண்பர் த.சரவணத் தமிழன் ஏற்படுத்தியிருந்த நிகழ்ச்சியில் பாவாணரின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரரசு முதலித் திட்டத்தைச் செயற்படுத்தாமைக்குக் கருணாநிதியைச் சபிக்கவும் நீங்கள் தயங்கவில்லை என்பதை நானறிவேன். நாம் வாழும்போது நம் பெயரும் புகழும் நம் செவிகளில் விழுந்தால் மட்டும் போதாது. நமக்குப் பின் நிலைத்து நிற்பது தான் உண்மையான புகழ். அதற்குச் சிலரது பகைமையையும் வெறுப்பையும் நாம் ஈட்டினாலும் இழப்பில்லை. இன்று நாம் வெறுக்கப்பட்டாலும் வரலாற்றில் நிலைத்து நிற்போம். புகழுக்காகத்தான் நாம் பாடுபட வேண்டுமென்பதில்லை. உண்மையான புகழ் தனியே வருவதில்லை. நாம் வாழும் மனிதக் குமுகத்தின் மேம்பாட்டைத் துணை கொண்டுதான் அது வரும்.
நல்வாழ்த்துகளுடனும் வணக்கங்களுடனும்
குமரிமைந்தன்.
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக