17.8.07

தமிழ் மருத்துவ வானில் புதிய விடிவெள்ளிகள்

′தினமணி′யில் ′′மாற்றங்கள் தேவை. எங்கு′′ என்ற மடல் பற்றி.

பாளையங்கோட்டை,
10-07-1994.

9.7.94 ′தினமணி′யில் ′′மாற்றங்கள் தேவை. எங்கு′′ என்ற தலைப்பிடப்பட்டு வந்துள்ள கருத்தைக் கவரும் கடிதம் உவகை கொள்ளச் செய்தது. நம் நாட்டு மரபு அறிவியல் - தொழில்நுட்பங்களை நோக்கி இளைய தலைமுறையின் கவனம் திரும்பியிருப்பது மகிழ்ச்சியளிப்பதில் வியப்பில்லை.

நாட்டு மருத்துவத்தை இழிவுபடுத்திக் கருத்துப் பரப்புவது தொலைக்காட்சியின் இடைவிடாத பணியாகும். அதில் பங்கு கொள்ளும் அலோபதி மருத்துவர்கள் நோய் தீர்க்கும் பணியாளர்களாக நடுநின்று கருத்துரைப்பதில்லை. தங்கள் தொழிலுக்குப் போட்டியாக விளங்கும் இன்னொரு தொழில்முறையைக் குறைகூறும் வாணிகர்களாகவே செயற்படுகின்றனர். இறக்குமதி - ஏற்றுமதித் தொழிலையே தன் ஆட்சியின் ஒரே பணியாகச் செய்யும் இந்திய அரசின் ஆளுகையிலிருக்கும் தொலைக்காட்சி அலோபதி மருத்துவர்களின் இந்தப் போக்கைத் தன் நோக்கங்களுக்குப் பயன்படுத்துவது எதிர்பார்க்கத்தக்கதே.

டாக்டர் க.வெங்கடேசன் ′தினமணி′யில் ஒரு மருந்து பற்றி எழுதிய ஒரு கருத்தைக் குத்தலாகத் தாக்கிய ஒரு அலோபதி மருத்துவருக்கு அவரது கூற்று தொழிற் போட்டியினால் எழுந்ததே தவிர நடுநிலையானதல்ல என்று நான் எழுதியதற்கு அவர் இன்று வரை மறுமொழி கூறவில்லை.

தமிழ் மருத்துவத்தின் இன்றைய நிலை என்ன? நாட்டுப் புறங்களில் ஆங்காங்கே வாழும் நாட்டுப்புற மருத்துவர்கள் ஏதோவொரு நோய் தீர்ப்பில் மட்டும் திறன்படைத்துள்ளனர். நோய்க் கணிப்பில் தவறாலோ வேறு காரணங்களாலோ சிக்கல்கள் நேர்ந்தால் அடுத்து என்ன செய்வதென்று அறியமுடியாமல் திகைக்கிறார்கள். இதற்குக் காரணமுள்ளது. ஒரு மாபெரும் மாளிகையாயிருந்த நம் தொழில்நுட்பங்கள் வரலாற்றுக் காரணங்களால் வெடித்துச் சிதறியதில் ஆங்காங்கு சிதறிக் கிடக்கும் துணுக்குகள் போன்றவை தாம் இன்றைய நாட்டு மருத்துவர்கள். அவர்களிடம் இருக்கும் இந்தத் துணுக்குகளைத் திரட்டி அதனை அறிவியல் அடிப்படையில் தொகுத்தும் பகுத்தும் ஆய்ந்தும் தெளிந்தால் ஒட்டுமொத்தமான ஒரு மருத்துவ மண்டலத்தை அலோபதி மண்டலத்துக்கு எதிராக அல்லது இணையாக நிறுத்தலாம்.

சோழர்கள் காலத்தில் குந்தவை பிராட்டியார் போன்றோர் நிறுவிய மருந்துச் சாலைகள், அலோபதியில் இன்று விளங்கும் பொது மருத்துவமனைகளின் தன்மையில் தமிழ் மருத்துவமுறையில் பொது மருத்துவமனைகளாக விளங்கியிருக்கும்.

இதுபோன்ற வேட்கையுடன் மருத்துவக் கல்லூரியில் தேறிச் சொந்தமாக தொழில் தொடங்கியிருந்த மைக்கேல் என்ற இளைஞர் கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்கு முன்பு இங்கு ஒரு கூட்டம் நடத்தினார். அவரது ஆசிரியரான பெண்மணி ஒருவர் தலைமை தாங்கினார். அதில் தமிழ் மருத்துவக் கல்லூரியில் படித்து மருத்துவம் செய்வோர் சிக்கல்களை எதிர் கொள்ளும்போது அந்நோய்களில் தனித்திறமை பெற்ற நாட்டுப்புற மருத்துவர்களை சிறப்பாளர்களாகக் கொண்டு ஆலோசனை பெறுவதன் மூலம் அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்று அவர்களது மருத்துவ இரகசியங்களை அறியலாம். அவர்களுக்குத் தகுந்த ஆலோசனைக் கட்டணத்தை நோயாளிகளிடமிருந்து பெற்றுத்தருவதன் மூலம் அவர்களது தன்னம்பிக்கையையும் உயர்த்தலாம் என்று நான் கருத்துரைத்தேன். இந்தக் கருத்து அந்தக் கூட்டத்துக்கு முன் திரு. மைக்கேலுடன் உரையாடும்போது எங்களிடையில் உருவானதாகும்.

ஆனால் தலைமை தாங்கிய ஆசிரியர் இந்தக் கருத்தைப் புறக்கணித்தார். வலியுறுத்தியபோதும் கருத்தெதுவும் தெரிவிக்கவில்லை. நேரடியாகவே கேட்டேன். ′′நாட்டுப்புறத்தில் மருத்துவம் புரிபவர்களைப் பண்டாரப்பயல்கள் என்று கருதுகிறீர்களா?′′ என்று அதற்கும் அந்த அம்மையார் மறுமொழி கூறவில்லை. ′′தமிழ் மருத்துவம் பற்றித் திரட்ட வேண்டிய செய்திகளெல்லாம் திரட்டப்பட்டுவிட்டன. அவற்றை அறிவியல் அடிப்படையில் ஆய முனைந்தால் போதும்′′என்று கூறிவிட்டார். மூலிகைகளின் இயற்பியல் வேதியல் குணங்களையும் மருந்துகள் உடலில் செயற்படும் பாங்கினையும் அறிவியல் அடிப்படையில் ஆயவேண்டுமென்பதில் நமக்குக் கருத்து வேற்றுமை இல்லை. ஆனால் தமிழ் மருத்துவக் கல்வித் துறையில் கவனத்துக்கு வராத மருந்துச் செல்வங்கள் எண்ணற்றவை உண்டு என்பதையும் அவற்றைக் கையாளும் மருத்துவர்கள் நம் மதிப்புக்கு உரியவர்கள் என்பதையும் பட்டம் படித்தவர்கள் ஏற்க மறுக்கிறார்களே. தங்களை ஒரு புதிய சாதியினராகப் பார்க்கத் தொடங்கிவிட்டனரே; அதன்மூலம் தமிழ் மருத்துவத்துக்குக் கிடைக்க வேண்டிய பெருமையும் வலிமையும் கைநழுவிப் போகின்றனவே என்பதுதான் நம் கவலை.

மேற்கொண்டு நடந்த கூட்டங்களோ பிற முயற்சிகளோ என் போன்றோருக்கு தெரிவிக்கப்படவில்லை. ஓரிரண்டாண்டுகளுக்குப் பின்னர் கற்ப அவிழ்தம் என்ற காலாண்டிதழ் ஒன்றை மட்டும் தற்செயலாகக் காண நேர்ந்தது. இன்னொரு தமிழ் மருத்துவப் பட்ட மருத்துவரிடம் பேசும்போது அக்குழு சிதைந்துவிட்டதாக அறிந்தேன். (இச்செய்தி உண்மையல்ல என்பதைப் பின்னர் அறிந்தேன்.)

உண்மைநிலை என்னவென்றால் ஒருமுறை செயப்பிரகாஷ் நாராயணன் என்பவர் (இவர் சென்னை தமிழ் மருத்துவக் கல்லூரியில் ரீடராக இருக்கிறார்) கூறியதுபோல இன்னும் முப்பு போன்று பண்டை மருத்துவ நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல பொருட்களின் உண்மையான சேர்மானம் கூட இன்றைய தமிழ் மருத்துவக் கல்வித்துறையினருக்குத் தெரியாது. தமிழ் மருத்துவத்தின் பெயரில் பட்டம் பெற்றவர்களில் மிகப் பெரும்பான்மையினர் நாடி பார்க்கும் குழலைத் தோளில் போட்டுக் கொண்டு அலோபதி மருத்துவர் போல் பாவனை செய்கின்றனர்.

அதே நேரத்தில் இங்கு எலும்பு முறிவுக்கு மருத்துவம் செய்யும் பண்டாரவிளைக் குடும்பத்தினர் எவ்விதத் தயக்கமோ தாழ்வுணர்ச்சியோ இன்றி நோவை மட்டுப்படுத்துவதற்கு அலோபதி மாத்திரைகள் எழுதிக் தருகின்றனர். தமிழ் மருத்துவத் தொழில் குடும்பங்களைச் சேர்ந்த மிகச் சிறுபான்மை அலோபதி மருத்துவர்கள் அலோபத் மருந்துகளுக்குத் துணையாகத் தங்கள் குடும்பத் தயாரிப்புகளான நாட்டு மருந்துகளையும் கையாள்கின்றனர்.

தமிழ் மருத்துவத்தின் மூலவர்களாகிய சித்தர்கள் நிட்டையில் அமர்ந்து உட்கார்ந்த இடத்திலேயே தம் அறிவைப் பெற்றனர் என்று தமிழ் மருத்துவக் கல்லூரிகளில் சொல்லிக் கொடுக்கிறார்கள். இதன்மூலம் மாணவர்கள் ஆய்வு மனப்பான்மையையே மடிய வைத்துவிடுகின்றனர். சித்தர் நூல்களில் இருப்பனவாகக் கல்லூரியில் சொல்லித் தரப்படுபவற்றுக்கு அப்பால் அவர்களது சிந்தனை செல்ல முடியாமல் சிறைப்படுத்திவிடுகின்றனர். ஆனால் சித்தர்கள் நூல்களில் அவர்கள் ஒவ்வொரு மூலிகையையும் உலோகத்தையும் முழுமையாக ஆய்ந்து அவற்றின் இயற்பியல் வேதியியல் பண்புகளை விளக்கியுள்ளனர். இது நிட்டையில் அமர்ந்து எய்த முடியாதது. கடும் உழைப்பின் மூலமே இதனை எய்த முடியும். ஆனால் எவ்வித ஆய்வு உத்திகளை அவர்கள் கையாண்டார்கள் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

சித்தர்கள் அனைவரும் விதிவிலக்கின்றி சோதிட நூற்களை இயற்றியுள்ளனர். சோதிடம் என்பது வானியலின் திரிந்த ஓர் வடிவமே. மனிதனும் உலகில் வாழும் பிற உயிர்கள் அனைத்தும் வான்பொருட்களின் இடைவினைப்பாட்டில் தோன்றியவையே. எனவே மனிதனின் உடல், உள்ளம் ஆகியவற்றின் செயற்பாட்டில் அவ்வான்பொருட்களில் பாதிப்பு இருப்பதில் ஐயமில்லை. அந்தப் பாதிப்புகளைக் கண்டறியும் ஒரு முயற்சியாக அல்லது கண்டறிந்து பெறப்பட்ட முடிவுகளின் ஒரு வடிவமாகச் சோதிடத்தைப் பார்ப்பதில் தவறில்லை. உடல், உள்ளம் தவிர மனைவி, மக்கள், உறவினர், எதிர்காலம் போன்றவற்றுக்கு விரிவாக்கும் போதுதான் சோதிடம் கொச்சைப்பட்டுப் போகிறது.

புகழ்பெற்ற நாட்டு மருத்துவர்கள் அனைவருமே சோதிடத்திலும் வல்லவர்களாக இருந்தனர். நோய்களின் தன்மைகளை அறிந்து கொள்ள அவர்கள் சோதிடத்தின் துணையை நாடினர். புகழ்பெற்ற கணியராக விளங்கிய நெல்லை ஈ.மு.சுப்பிரமணிய பிள்ளை ஒரு மருத்துவரும் கூட.

சோதிடத்துக்கும் தமிழ் மருத்துவத்துக்கும் உள்ள தொடர்பு உறுதிப்படுத்தப்படுமேயானால் நம் பண்டைத் தொழில்நுட்பம் குறித்த ஓர் அரிய உண்மை புலப்படும். அதாவது வான்பொருட்களின் இயக்கத்தைத் துல்லியமாக அவர்கள் கண்டறிந்திருந்தார்கள் என்பதுடன் அவை ஒவ்வொன்றும் மனிதனின் உடல், உள்ளம் ஆகியவற்றில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் கண்டுபிடித்திருந்தார்கள் என்பதே அந்த உண்மை. எனவே சோதிட நூல்களைப் புதிய கண்ணோட்டத்தில் ஆய்வது இன்றியமையாதது.

இலக்கியத் திறனாய்வு, மொழியியல், மானிடவியல், மெய்ப்பாட்டியல்(அழகியல்) ஆகிய துறைகளில் இன்றைய மேலையர் இன்னும் திட்டவட்டமான முடிவுக்கு வரமுடியாமல் திணறுகின்றனர். ஆனால் பண்டைத் தமிழர் அவற்றில் திட்டவட்டமான முடிவுகளை எய்திவிட்டனர் என்பதைத் தமிழ் இலக்கிய, இலக்கண நூல்கள் சான்று கூறுகின்றன. இவை அனைத்தையும் கருத்திற்கொண்டு எனக்கு ஒரு எண்ணம் உருவாகியுள்ளது. தமிழகத்தில் நாட்டுப் புறங்களில் நிலவும் பல்வேறுதுறைத் தொழில்நுட்பங்களை மேலை அறிவியலின் துணை கொண்டு ஆய்வு செய்து அவற்றின் அடிப்படையில் இனம் காணமுடியுமென்றால் மேலையர்கள் சென்றவழியில் செல்லாமலேயே அவர்களைத் தாண்டி (Bye - Pass செய்து) நாம் முன்னே செல்ல முடியும் என்பதே அது. இளைய தலைமுறை அந்தச் செயலில் ஈடுபட வேண்டும்.

நாகர்கோயில் கார்மல் பள்ளியில் ஆபிரகாம் லிங்கன் என்றொரு அறிவியல் ஆசிரியர் உள்ளார். அவர் தன் சொந்த முயற்சியால் தமிழ் மருத்துவ நூல்களைக் கற்று மருத்துவம் செய்து வருகிறார். தான் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு தன் சொந்த முயற்சியால் தீர்வுகள் கண்டு வெற்றிநடை போடுகிறார். தான் செய்யும் மருத்துவங்களின் குறிப்புகளையும் வைத்திருக்கிறார் என்று கருதுகிறேன்.

இன்று தமிழ் மருத்துவ வானில் புதிய விடிவெள்ளிகள் முளைத்திருக்கின்றன. டாக்டர் என்.கே. சண்முகம் போன்றோர் மூலிகைகளில் அடங்கியிருக்கும் பல்வேறு வேதிப் பொருட்களையும் அவை எவ்வாறு நோய்களோடு வினைப்பட்டுக் குணத்தைத் தருகின்றனவென்றும் ஆய்வு செய்து ஒரு நல்ல தொடக்கத்தைத் தந்துள்ளனர். இளைய தலைமுறை அதனைப் பற்றிக் கொள்ளும் என்பதில் ஐயமில்லை. தொலைக்காட்சியும் அரசின் பொதுத் தொடர்புக் கருவிகளும் இருட்டடித்தாலும் அரசு இயந்திரத்தில் அடங்கியிருக்கும் சிறுபான்மையினரான நாட்டுப்பற்றாளர்களின் துணையுடன் இந்த இருட்டடிப்பை நாம் வெல்லலாம்.

அன்புடன்,
குமரிமைந்தன்.

1 மறுமொழிகள்:

பெயரில்லா சொன்னது…

ஆஹாஹா .... அருமையானதொரு கட்டுரை. மிகைப்படுத்தல் இல்லை. நமது மரபு சார்ந்த மருத்துவம் (சித்தா, ஆயுர்வேத மற்றும் மூலிகை) பற்றி என் மனதில் வெகு நாட்களாகவே இருக்கும் எண்ணம் இது.

உணர்ச்சிவசப்படாமல் மரபுசார் மருத்துவத்தின் நிறை குறைகளை நேர்த்தியாக அலசியுள்ளீர்கள்.

நான் என்ன நினைக்கிறேனென்றால், நமது தமிழ் மருத்துவம் உச்சத்தில் இருந்த கால கட்டத்திலெல்லாம், அதற்கு சரியான ஆவணப்படுத்தல் (doccumentation) சாத்தியமற்றுப்போயிருக்கும். ஒவ்வொரு மருந்தின் குணம், அது வினைப்புரியும் விதம், கலவை விகிதம் இன்னபிற இப்போதும் இருப்பினும் அலோபதி மருத்துவம் போன்ற முழுமையான ஆய்வின்பாற்பட்டதாக இல்லை என்பது என் அனுமானம்.

பெரும்பாலான மருத்துவர்கள் வழிவழியாக தங்கள் முன்னோர் வழியாகவே மருத்துவ அறிவை அடைந்தவர்கள். உதாரணம், நீங்கள் குறிப்பிட்ட திரு.க.வேங்கடேசன் (மூலிகைமணிதானே ?) அவர்தம் தந்தையார் மூலிகைமணி கண்ணப்பர் மூலம் மருத்துவம் கற்றவர் என்று நினைக்கிறேன். (பின்னர் கல்லூரியிலும் பயின்றார் என்று அறிகிறேன்)

இதனாலெல்லாம் அறிவியல் ரீதியான நோக்கோ, விரிவான சோதனைகளோ, தொடர்ச்சியான ஆராய்ச்சிகளோ, முறையான ஆவணப்படுத்தலோ அற்று, நீங்கள் கூறியதுபோல அறிவானது எங்கெங்கெல்லாமோ சிதறிப்போய்விட்டது. (திரு.ராமகிருஷ்ணன் ஒரு கட்டுரையில், தாம் தண்ணீர் வாங்கி அருந்திய பாங்கை வைத்தே அவருக்கு இருக்கும் ஒருசில பிரச்சினைகளை கண்டுபிடித்த ஒரு மரபுசார் மருத்துவப்பெண்மணி பற்றி எழுதியிருந்தார்.)

தாமதமாயினும் இப்போதாவது, ஏதேனும் ஒரு வணிக நிறுவனம், அறக்கட்டளை போன்ற பொருளாதார ரீதியில் வலுவான நிறுவனங்கள் ஆதரவு அளிப்பின், ஆர்வமும் ஈடுபாடும் உள்ள மரபுசார் மருத்துவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம், தமிழகம் முழுதும் சிதறிக்கிடக்கும் நமது தமிழ் மருத்துவ அறிவை திரட்டி, தொகுத்து, ஆய்வு மேற்கொண்டால் ....

கிட்டத்தட்ட ஒரு மருத்துவ புரட்சியே நிகழும் என்றுதான் தோன்றுகிறது.

மறுபடி, நல்லதொரு கட்டுரைக்கு என் நன்றி.

அன்புடன்
முத்துக்குமார்