விடுதலை இறையியல் - சில கேள்விகள்
பாளையங்கோட்டை,
19-8-95.
19-8-95.
அன்புள்ள ஆசிரியர் (நிகழ்) அவர்களுக்கு வணக்கம்.
நிகழ் 30-இல் வெளிவந்த திரு கே.அல்போன்சு அவர்களின் ′விடுதலை இறையியல்′ குறித்து சில கேள்விகள், ஐயங்கள்.
விடுதலை இறையியல் தமிழர் (தேசிய) விடுதலையுடன் இணைத்துக் கூறப்பட்டுள்ளது. இப்போக்கு இப்போது இங்கு புதிதாக அரும்பியுள்ளது. ஆனால் ஏசுநாதரின் வரலாற்றோடு தேசிய விடுதலைக்கு ஓர் உறவு உண்டு. அது தரும் செய்தி வேறு வகையானது.
ஏசுவின் தொடக்ககால நடவடிக்கைகள் இசுரேலைத் தன் ஆதிக்கத்தினுள் வைத்திருந்த உரோம வல்லரசு எதிர்ப்பாக இருந்தது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் நாளடைவில் அவரது நடவடிக்கைகள் யூதர்களிடையிலிருந்த ஆதிக்கர்களுக்கு எதிராக முழுமூச்சுடன் திரும்பியமையால் அவரது இயக்கமே மறைமுகமாக வல்லரசுக்கு வாய்ப்பாக மாறிவிட்டது. யூத குமாரனாகத் தொடங்கிய ஏசு தேவ குமாரனாக மாறிவிட்டார். அதனால் தான் வல்லரசு ஆளுநன் வழக்குசாவலை யூதத் தலைவர்களிடமே ஒப்படைத்துவிட்டுக் கையைக் கழுவிக்கொண்டான். தண்டனையிலிருந்த ஒருவரை விடுவிக்கக் கிடைத்த வாய்ப்பை அவன் ஏசுநாதருக்கு அளிக்க முன்வந்ததும் ஏசுநாதரால் வல்லரசுக்கு எந்தக் கேடும் நேராது என்ற அவனது கணிப்பின் விளைவேயாகும்.
ஏசுநாதருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது பொதுமக்களிடையில் கொந்தளிப்பு எதுவும் ஏற்படாததும் அவருக்குப் பின் அவரது மாணவர்கள் யூதர்களிடையில் வாழ முடியாததும் அவரால் தம் மக்களின் மனதில் தன் மீது ஒரு பரிவுணர்ச்சியை உருவாக்க முடியவில்லை என்பதையே உணர்த்துகின்றன. ஏசுநாதரின் மாணவர்கள் செயலூக்கம் மிக்கவர்கள். அவரது மரணத்துக்குப் பின் உலகெங்கும் பரந்து சென்று தம் ஆசானின் செய்திகளைப் பரப்பிய அருஞ்செயலே இதற்குச் சான்று. அத்தகையவர்களால் கூட அவரது மரண தண்டனைக்கு எதிராக மக்களைத் திரட்ட முடியவில்லை என்றால் ஏசுவும் அவரது மாணவர்களும் யூத மக்களிடமிருந்து அயற்பட்டிருந்தனரென்றே பொருட்படுகிறது. இதற்கான காரணங்களை ஏசுநாதரின் வாழ்க்கையைப் புதிய கோணத்திலிருந்து ஆய்ந்து கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.
ஏசுநாதரின் இயக்கத்தால் அவர் வாழ்நாளில் மட்டும் யூதத் தேசியத்துக்கு பின்னடைவு ஏற்படவில்லை. நான்கு நூற்றாண்டுகளுக்குப் பின் உரோம வல்லரசு கிறித்துவத்தை அரச மதமாக ஏற்றவுடன் தங்கள் இறைவனான ஏசுநாதரைச் சிலுவையில் அறைந்தவர்கள் என்ற குற்றச்சாட்டுடன் யூதர்கள் மீது கொடுந்தாக்குதலை நடத்தி அவர்களை அடுத்த பதினாறு நூற்றாண்டுகள் உலகெலாம் ஏதிலிகளாக அலையவும் வைத்தது.
தேசிய விடுதலை இயக்கத்துக்கு மட்டுமல்ல, எந்த ஓர் இயக்கத்துக்கும் ஒரு திரிவாக்கம் உண்டு. அது குமுகத்தின் உச்சியிலிருந்து தொடங்கி பிற்போக்கு விசைகளைக் கழித்தும் அடுத்த மட்டத்து மக்களை ஈர்த்தும் படிப்படியாகக் கீழ்மட்டத்தை நோக்கி நகர வேண்டும். எடுத்த எடுப்பிலேயே கீழ்மட்டத்து மக்களின் சிக்கல்களை மட்டும் அதாவது உள்முரண்பாடுகளை மட்டும் முதன்மைப்படுத்தினால் யூதர்களின் பட்டறிவு காட்டுவது போல் சிதைவுதான் மிஞ்சும். இன்றைய தமிழகம் கண் முன்னால் காணக்கிடைக்கும் இன்னொரு சான்று.
உருசியாவிலும் சீனத்திலும் பொதுமைக் கட்சிகளிடத்தில் அரசியல் நடுவம் கொள்வதற்கு முன் மேல்மட்டத்திலும் பல இயக்கங்களின் திரிவாக்கம் இருந்தது. அத்தொடர்ச்சியில் தொய்வு இன்றி அவ்வந்நாட்டுப் பொதுமைக் கட்சிகள் உரிய காலத்தில் களத்தில் இறங்கிச் செயற்பட்டன.
இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது தன்னைப் பேராய(காங்கிரசு)க் கட்சியினுள் உட்படுத்திக் கொண்டதுடன் நில்லாமல் வெள்ளையனை எதிர்ப்பதற்குப் பகரம் உள்முரண்பாடுகளுக்கு அதிலும் உடமை முரண்பாடுகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து மக்களிடமிருந்து அயற்பட்டு நின்றது, நிற்கிறது இந்தியப் பொதுமை இயக்கம்.
தமிழகத்தில் திரைப்படங்களில் தமிழகத் தேசிய விடுதலைக் குறிப்புகள் வரும்போது மக்கள் ஆர்ப்பரித்து வரவேற்ற காலம் ஒன்று இருந்தது. அதை உருவாக்கிய இயக்கம் தொய்வடைவதைக் கொடுநெஞ்சுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது மட்டுமல்ல அவ்வாறு தொய்வடைந்த இயக்கத்துடன் கூட்டுச்சேர்ந்து கொஞ்ச நஞ்சமிருந்த தேசிய இயக்கத்தையும் அழித்தொழிந்துவிட்டன தமிழகப் பொதுமைக் கட்சிகள். இன்று தமிழகத் தேசியம் என்பது ஒரு மக்கள் இயக்கமாக இல்லை. விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சிலரின் கனவாகவே இருக்கிறது.
இந்த வெற்றிடத்திலிருந்து ஒரு மக்களியக்கத்தை அதன் இயல்பான படிமுறையில் வளர்த்தெடுக்க விடுதலை இறையியலாரும் பொதுமையரும் ஆயத்தமாக இருக்கிறார்களா? அதாவது தமிழகத் தேசியத்தின் வலிமையாகத் தக்கவர்களாகிய தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோரில் உள்ள உடைமை வகுப்பினர் மீது இந்திய அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ள பொருளியல் ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல்கொடுக்கத்தக்க ஒரு செயல்திட்டத்தை ஏற்றுக்கொள்வார்களா? இந்திய, பன்னாட்டு முதலைகளைப் பாதிக்காத ஆனால் உள்நாட்டினரின் குரல்வளையை நெரிக்கிற வருமானவரி, நில உச்சவரம்பு, வேளாண் விலை நிறுவுதல், தொழில் உரிமம், மூலப்பொருள் கட்டுப்பாடு, உள்ளூர் விளைப்புக்கும் நுகர்வுக்கும் எதிரான கட்டுப்பாடுகள்(ஏற்றுமதிப் பொருட்களுக்கும் இறக்குமதிப் பொருட்களுக்கும் இக்கட்டுப்பாடுகள் கிடையா. எ-டு. இப்போது இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் பருப்பு வகைகள்) போன்றவற்றுக்கு எதிராகவும் கோயில் நிலங்கள் உட்பட அனைத்து நிலவுடைமையிலும் குத்தகைமுறையை ஒழித்து நேரடியாகப் பயிரிடுபவனுக்கே நிலத்தை உரிமையாக்குவதற்கு ஆதரவாகவும் போராட வருவார்களா? அவ்வாறு தொடங்கினால் தமிழக மக்கள் மட்டுமல்ல இந்திய மக்கள் அனவரும் இந்தியத் தரகு அரசிடமிருந்தும் அதனைப் பிடித்துக்கொண்டு கொள்ளையடிக்கும் பணக்கார நாடுகளிடமிருந்தும் விடுதலை பெற வழி பிறக்கும்.
அத்தகைய ஒரு ″விடுதலை இறையியலை″ உருவாக்கும் மனநிலை யாருக்கும் இப்போது இல்லை என்பதே என் கருத்து.
அன்புடன்
குமரிமைந்தன்.
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக