14.7.09

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - ஒரு மதிப்பீடு

அண்மையில் வாழ்வு நிறைவை எய்திய பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழக உணர்வுடைய நெஞ்சங்களில் எவ்வளவு இடம் பிடித்திருந்தார்கள் என்பதற்கு அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட பெருந்திரளும் ஆங்காங்கே தோழர்கள் ஒட்டிய இரங்கல் சுவரோட்டிகளும் கூட்டங்களும் சான்று கூறின. ஆனால் இவ்வளவு பெருந்திரளான ஆர்வலர்களை ஈர்த்து வைத்திருந்த பாவலரேறு அவர்களால் தன் வாழ்நாளில் தமிழார்வம் மிக்குடையவர்களைத் தவிர்த்த பிறரிடையில் ஓர் அறிமுகம் என்ற அளவில் கூடப் பரவலாக அறியப்படாமல் போனது ஒரு பெரும் கேள்வியாக நிற்கிறது.

மக்களிடையில் இயக்கங்கள் முகிழ்த்தெழுவதற்கு அவற்றைத் தொடங்குவோரின் தனித்த பொருளியல், வாழ்வியல் நோக்கங்கள் காரணமாயிருப்பதில்லை. அவர்களால் உயர்ந்தவையாய் புரிந்துகொள்ளப்படும் நோக்கங்களிலிருந்தே அவை தோற்றம்பெறுகின்றன.

அந்த வகையில் பாவலரேற்றின் பொதுவாழ்வின் தொடக்கம் தமிதழ்மொழித் தூய்மை குறித்தாகும். அதனாலேயே அவர் பாவாணரைத் தன் ஆசானாக ஏற்றுக் கொண்டார்.

தமிழ் மொழியின் உரிமை இந்தி ஆட்சிமொழிச் சட்டத்தால் அச்சத்துக்குள்ளான போது தன் எதிர்கால வாழ்வைப் பற்றிய சிந்தனையையே உதறி எறிந்துவிட்டு மொழிப் போராட்டத்தினுள் நுழைந்தார்.

சமற்கிருதக் கலப்பு மட்டுமல்ல ஆங்கிலம் உட்பட அனைத்து மொழிக் கலப்புகளிலுமிருந்து தமிழை மீட்கும் போர்ப்படையாகத் தென்மொழியை வளர்த்தார். அந்தத் தொடக்க காலத்தில் தென்மொழி மூலம் தமிழகத்திலுள்ள பல்துறை அறிஞர்களின் ஆற்றல் வெளிப்பட்டது. அவர்களின் படைப்புகள் தனித்தமிழின் பன்முனை ஆற்றலைத் தமிழார்வலர்களிடம் விளங்க வைத்தன. தனித்தமிழ் மீது அவை பெரும் தன்னம்பிக்கையையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தின. தென்மொழி மூலம் வெளிப்பட்ட பாவாணரின் சொல்லாய்வு உத்திகள் பலரிடம் புதிய சொல்லாக்கத் திறனைப் படைத்தன. அந்தக் காலத்தில் தென்மொழி வெளிப்படுத்திய அந்த ஆற்றல் அளப்பரியது.

தமிழ் மொழி மீட்சி என்ற நோக்கத்தினடியாகப் பிறந்ததுவே தமிழக விடுதலை என்ற பாவலரேறு அவர்களின் குறிக்கோளும். அப்போது அவருடனிருந்த எண்ணற்ற இளைஞர்களின் கனவாகவும் அது உருப்பெற்றிருந்தது. ஆனால் ஒரு மக்கள் விடுதலை என்பது எவ்வளவு கடுமையான பணி, அதற்கு எத்தகைய பின்புலம் உருவாக்கப்பட வேண்டும், மக்கள் மனதில் ஒரு ஆர்வத்தை எழுப்பவதற்கு என்னென்ன செய்ய வேண்டுமென்ற சிந்தனையை விட கட்டுப்படுத்த முடியா தன் ஆர்வத்தையே வலிமையாக்கி 1972இல் மதுரையில் தமிழக விடுதலை மாநாடு நடத்தித் தளைப்பட்டார். அம்மாநாட்டில் விளைவாக அவருடனிருந்த இளைஞர்களில் பலர் அகன்றனர்.

பாவலரேற்றின் அணியில் முற்றிலும் தனித்தமிழ் ஆர்வம், தமிழக விடுதலை வேட்கை ஆகியவற்றை மட்டுமே உள்ளுணர்வாகக் கொண்டோர் மட்டும் திரளவில்லை. கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியர்களுக்கு அன்று இருந்த இரண்டாம் தர நிலையாலும் தங்களுக்கு வேலைவாய்ப்பற்றிருப்பதாலும் வெறுப்புற்றிருந்த தமிழ் இலக்கியம் முதுகலை பயின்ற இளைஞர்கள் எண்ணற்றோர் இணைந்தனர். இந்த நிலையில் கல்லூரித் தமிழாசிரியர்கள் பிற துறை ஆசிரியர்களைப் போலவே முதல்வராவதற்குச் சம தகுதியுள்ளவர்களாக்கப்பட்டனர். ம.கோ. இரா ஆட்சிக் காலத்தில் பல புதிய பல்கலைக் கழகங்கள் தொடங்கப்பட்டன. தமிழ் வளர்ச்சி, தமிழாய்வு என்ற பெயர்களில் நிறுவனங்களும் உருவாயின. இவற்றால் ஏற்பட்ட எண்ணற்ற பணியிடங்களில் வேலையற்றிருந்த தமிழ் இலக்கிய முதுகலைப் படிப்பாளிகளுக்கு வேலை கிடைத்தது. இயல்பாகவே இவர்கள் இயக்கத்திலிருந்து விலகிவிட்டனர். தனித்தமிழ் இயக்கம் மொழியைப் பொறுத்தவரை ஆட்சியாளர்களைக் குறைகூறும் ஓர் அரசியல் இயக்கத்தின் தன்மையைப் பெற்றிருந்ததால் சிலர் தனித்தமிழ் இயக்கத்தோடு தமக்கு உடன்பாடில்லை என்று காட்டுவதற்காகத் தனித்தமிழுக்கு எதிரான நிலையைக் கூட எடுத்தனர். இது பாவலரேறு அவர்கள் மனதைப் புண்படுத்தியது. எனவே ″பணம்படைத்தவர் நலனையே நாடுவதாக என் கடந்த கால நடவடிக்கைகள் அமைந்துவிட்டன. இனி ஏழை மக்களின் நலன் பற்றிச் சிந்திக்கப்போகிறேன்″ என்று ஒரு கட்டத்தில் கூறினார்கள். இந்தக் கட்டத்துக்குப் பின் அவர்கள் பொதுமை என்ற நோக்கத்தை முன்வைத்தனர். பொதுமைக் கோட்பாடுகளைக் ″கரைத்துக் குடித்தவர்கள்″ கூட திசை தெரியாது மயங்கிச் சோர்ந்து நிற்கும் இன்றைய நிலையில் பாவலரேறு அவர்களால் இந்தத் திசையிலும் எந்தத் தடத்தையும் பதிக்க முடியவில்லை.

இன்னொரு பக்கம் தி.மு.க. தலைவர் திரு. கருணாநிதி மீது பாவலரேறு வைத்திருந்த அளவிலாப் பற்று அவரைப் பின்தொடர்ந்தோரை மனம் வருந்தவைத்தது.

பெரியார், அண்ணாத்துரை, கருணாநிதி ஆகிய தலைவர்கள் அனைவருமே தமிழுக்கும் தமிழகத்துக்கும் அதன் மக்களுக்கும் இரண்டகம் செய்துவிட்டனர்; எனவே புது இயக்கம் அமைத்துப் புதுப் பாதை காண்போம் என்று புறப்பட்டவர் அவர். அப்படியாயின் ஏன் மீண்டும் மீண்டும் கருணாநிதியின் பின் நின்று கொள்கிறார் என்ற கேள்விக்கு இறுதி வரையிலும் யாராலும் விடை காண முடியவில்லை.

பெருஞ்சித்திரனாரின் பின் அணிவகுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் இறை மறுப்பாளர்கள். பெருஞ்சித்திரனாரோ அவருக்கே உரித்தான ஓரிறைக் கொள்கை ஒன்றைக் வைத்திருந்தார். இந்த முரண்பாட்டைக் கூடப் பெரிதாக எண்ணாமல் தமிழ், தமிழகம், தமிழக மக்களின் நலன் என்ற குறிக்கோளில் அவரது வழிகாட்டலை எதிர்நோக்கியிருந்தவர்களுக்கு இந்த முரண்பாடு தாங்கிக் கொள்ளத்தக்கதாயில்லை. அதுவும் கருணாநிதி - ம.கோ.இரா. பிரிவின் போது பலர் மனங்கசந்தனர். இதனால் பலருக்குப் பாவலரேறு அவர்களின் நேர்மை, நாணயம் ஆகியவற்றன் மீதே கூட ஐயுறவு ஏற்பட்டுவிட்டது. ஆனால் தன் இறுதிக் காலம் வரை எவரது துணையையும் நாடாது தனித்து நின்றே போராடித் தன் வாழ்நாளையே தேய்த்துக் காட்டி அனைத்து ஐயப்பாடுகளினின்றும் நீங்கிப் பெருமை பெற்றுவிட்டார்.

மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் தன் உயிர்மூச்சாகக் கருதிய செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகமுதலி உருவாக வேண்டுமென்ற தணியாத வேட்கையில் தென்மொழி வாயிலாகப் பாவலரேறு அவர்கள் மேற்கொண்ட அரிய முயற்சியில் பக்கவிளைவே அரசு அத்திட்டத்தை ஏற்றுக் கொண்டது. ஆனால் பாவாணர் இறைவன் தன்னை இப்பணிக்காகவே படைத்துள்ளதாகவும் எனவே அப்பணி முடியாமல் தன்னைச் சாகவிடமாட்டான் என்ற தவறான நம்பிக்கையாலும் தன் குடும்பத்தாரின் நெருக்குதல்களை நிறைவேற்ற வேண்டியும் அகரமுதலிப் பணியில் சுணக்கம் காட்டியபோது பாவலரேறு தன் அன்புக்கும் மதிப்புக்குமுரிய ஆசானைக் கடிந்துகொள்ளத் தவறவில்லை. ஆனால் அவரது சொல்லாய்வு நெறிகளிலிருந்து தான் மாறுபடுவதாகத் தெரிவித்த கருத்துகள் அத்துறையில் அவரது ஆழமின்மையையே காட்டின. இருப்பினும் குறிக்கோளில் அவருக்கிருந்த இறுக்கமான பிடிப்புக்கு அது ஒரு சான்றாக அமைந்தது.

இப்போது தென்மொழி அரசியல், குமுகியல் மட்டுமே கூறும் இதழாகத் தன் முகப்பைச் சுருக்கிக்கொண்டது. அத்துடன் தேசியம் என்பதன் நிலம் சார்ந்த இயல்பைப் புரிந்துகொள்ளாமல் தமிழ் பேசும் உலக மக்களனைவரையும் ஒரு தேசியமென்று கருதி உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் அமைத்து அதன் கொள்கைகளைப் பரப்பவும் அமைப்புக்கு உதவவும் தமிழ் நிலம் இதழைத் தொடங்கினார். ″தமிழ் நிலம்″ என்ற சொல் தமிழகத்தைத்தான் குறிப்பதாகக் கொண்டிருந்தாரா என்பது தெரியவில்லை.

தேசியம் பற்றிய வரையறையில் தெளிவின்றியிருந்தார் என்பதை ஒரு குறையாகக் கூறமுடியாது; ஏனென்றால் அதற்குரிய வரையறையை இன்னும் மிகப் பெரும்பாலோரால் வகுத்துக்கொள்ள முடியவில்லை.

தமிழகத்தில் தேசியச் சிக்கல் ஆழப் புரையோடிப்போயுள்ளது. தேசிய ஒடுக்குமுறையின் உள்ளடக்கமான பொருளியல் ஒடுக்குமுறை மிக மறைமுகமாகவும் மென்மையாகவும் மயங்க வைக்கும் முழக்கங்களின் பின்னணியிலும் நடைபெறுவதால் அதனை வெளிப்படையாகப் புரிந்துகொண்டு எதிர்ப்புக் கோட்பாடு ஒன்றை வகுக்க எவராலும் இயலவில்லையாயினும் இந்தத் தேசிய ஒடுக்குமுறைச் சூழலை இங்குள்ள மக்கள் தன்னுணர்வின்றியே புரிந்துகொண்டுள்ளனர். எனவே பழையவர்கள் விலகினாலும் மீண்டும் மீண்டும் புதியவர்கள் தென்மொழியை மொய்த்தார்கள்.

இப்படிப்பட்ட குழப்பமான நிலையில் பொதுமை இயக்கதினர், அதிலும் மூன்றாம் அணி என அறியப்படும் மா.இலெ. குழுவினர் தங்களுக்கு இளைஞர்களைப் பிடிப்பதற்குத் திராவிடர் கழகத்துடன் தென்மொழி இயக்கத்தையும் ஒரு மூலவளமாகக் கொண்டனர். இவ்வாறு கொண்டுசெல்லப்பட்ட தமிழுணர்வும் தமிழக விடுதலை வேட்கையும் தமிழகக் குமுக மாற்ற நாட்டமும் கொண்ட இளைஞர்கள் மா.இலெ. இயக்கங்களின் தலைவர்களின் வழிகாட்டலால் எந்தவித மக்கள் பின்னணியும் பாதுகாப்பும் பெறாத நிலையில் நடுத்தெருவில் கொண்டுவிடப்பட்டு அவர்களில் கணிசமான தொகையினர் காவல்துறையினால் நாய்களைப் போல் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவ்வாறு கொல்லப்பட்டவர்களைப் போல் பல மடங்கு எண்ணிக்கையினர் செயலிழந்து போயினர். எனவே இந்த நிகழ்ச்சியை எம்போன்றோரால் தவறான வழிகாட்டல் என்று ஒதுக்கித்தள்ள முடியவில்லை. திட்டமிட்ட அழிம்புவேலை என்றே ஐயுற வேண்டியுள்ளது. அதுமட்டுமல்ல இந்த அழிம்புவேலைக்கு இரையாயின இளைஞர்களில் கிட்டத்தட்ட அனைவருமே பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோருமே என்பது இதிலுள்ள கொடிய உண்மை.

இந்நிகழ்ச்சிக்குப் பின் தமிழகத் தேசியப் போராட்டத்தை ஏற்றுக்கொண்ட பின்னும் மக்களைத் தங்கள் பால் ஈர்காதது மட்டுமல்ல அயற்படவும் வைக்கும் பழைய ஆசான்கள் வகுத்துத்தந்த கோட்பாடுகளையும் செயல் திட்டங்களையும் நடைமுறைகளையுமே பின்பற்றியதால் தமிழரசன் போன்ற வீறுமிக்க போராளிகளும் முன்னவர்களின் துயர முடிவையே எய்தினர்.

இன்று மார்க்சிய-இலெனினியக் குழுக்களிலிருந்து தமிழகத் தேசிய சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்புக் குரல்கள் எழுவதற்குத் தங்கள் போலி மார்க்சியத் தலைவர்களை உதறிவிட்டு வெளிவந்த முன்னாள் தென்மொழிக் குழுவினர் தான் காரணம். இருப்பினும் கோட்பாட்டளவில் தமிழகத் தேசியப் போராட்டத்துக்கும் தமிழகத்தில் நிலவும் சாதிய ஒடுக்குமுறை ஒழிப்புக்கும் இடையிலுள்ள இயங்கியல் உறவைப் புரிந்து கொள்ளாமல் இரண்டையுமே வெற்று முழக்கங்களாகவே இவர்கள் இன்றுவரை வைத்துள்ளனர்.

இவ்வாறு பாவலரேறு அவர்களை நாடிச்சென்ற உள்ளங்கள் எண்ணிலடங்கா. அவர்களைச் சிதறாமல் வைத்துத் தமிழகத் தேசியத்துக்கேற்ற ஒரு செயற்திட்டத்தை வகுத்துச் செயலாற்ற முடிந்திருக்குமாயின் அவரது குறிக்கோள்கள் இதற்குள் நிறைவேறியிருக்கும் என்று கூற முடியாது; ஏனென்றால் இந்தக் குறிக்கோளை அடைய நாம் எதிர்கொள்ள வேண்டிய தடைகள் மிகக் கடுமையும் கொடுமையும் வாய்ந்தவை; போராட்டமும் நீண்ட நெடியதாயிருக்கும். ஆனால் அந்தப் பாதையில் குறிப்பிட்ட அளவு முன்னேறியிருக்க முடியும்.

ஆனால் காலம் அவ்வாறு நினைக்கவில்லை. பாவலரேறு அவர்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள அலையெனத் திரண்டிருந்த உள்ளங்கள் தங்கள் கனவுகளும், குறிக்கோள்களும் திசையறியாமல், நடுக்கடலில் நிற்பதைக் கண்டு கலங்கியவையே. அக்கனவுகளுக்கு வேறெந்த பற்றுக்கோடும் இல்லாத நிலையில் அக்கனவுகளுக்கும் குறிக்கோள்களுக்கும் ஒரே அடையாளமாக விளங்கிய ஐயா பெருஞ்சித்திரனார் அவர்களின் திருவுருவை இறுதியாகக் காண்பதன் மூலம் தங்கள் கனவுகளையும் குறிக்கோள்களையும் மீண்டும் வலிமையேற்ற வந்து மொய்த்தனையே.

தமிழகத் தேசிய ஒடுக்குமுறை ஒரு கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால் 1800 ஆண்டுகள் பழமையானது. அத்தேசிய உணர்ச்சியையும் எழுச்சியையும் வெளிவிசைகளும் உள்விசைகளும் திசைதிருப்பி மக்களை ஒருவரோடொருவர் மோதவிட்டுச் சிதைந்துவைத்திருக்கின்றன. அதே விசைகளும் மேலும் மேலும் புதிதான விசைகளும் அதே வகையான குழப்பங்களைப் புகுத்தி ருகிறார்கள். தேசியத்தின் மீது உண்மையான பரிவும் பற்றும் உள்ள சிலரும் தம் அறியாமையாலும் திசை மாறிய உணர்ச்சிக் கொந்தளிப்புகளாலும் கூடத் தங்களை அறியாமலே, தங்களுக்கு இயல்பான தெளிவையும் மீறி இக்குழப்பமூட்டும் பணிகளைச் செய்துவருகின்றனர்.

ஆனால் தமிழகம் என்றுமே தோற்றதில்லை. கடந்த 1800 ஆண்டுகளாக அது தன் அடையாளத்தையும் தேசிய ஓர்மையையும் கட்டிக்காத்துவந்துள்ளது. ஆனால் இன்று போல் அது தன் தேசியக் குறிக்கோளை ஐயந்திரிப்பின்றி வெளிப்படையாக அடையாளங்கண்டதில்லை. எனவே அத்தேசியக் குறிக்கோளை, அதற்கு உரிய கோட்பாட்டை வகுத்தும் அதனடிப்படையில் செயல்திட்டம் ஒன்றை வரையறுத்தும் அவற்றினடிப்படையில் இயக்கமொன்றைக் கட்டியும் எய்தும் நாள் தொலைவிலில்லை.

அவ்வாறு தமிழகம் தன் தேசியக் குறிக்கோளை நோக்கி நடைபோடும் போதும் அதனை எய்திய பின்னரும் அத்தேசியக் குறிக்கோளுக்காகப் பாடுபட்ட நேர்மையான தலைவர்களில் காலவரிசையில் முதலாவதாக ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனாரே நிற்பார்.

தமிழகத் தேசியம் என்ற ஒன்றுக்காகப் பாடுபடுவதாகத் திராவிட இயக்கத்தை இத்தமிழக மக்கள் நம்பினார்கள். ஆனால் அவ்வியக்கம் தங்கள் தன்னலத்திற்காகப் பொய் பேசி இம்மக்களை ஏமாற்றிவிட்டது என்று இன்று அனைவருக்கும் புரிகிறது. அவ்வியக்கம் வீசியெறிந்துவிட்டத் தமிழகத் தேசியக் குறிக்கோளைப் பொன்னேபோல் போற்றி எண்ணற்ற இளைய தலைமுறையினரின் உள்ளங்களின் மீது அழுத்தமாக அமர்த்திவைத்துவிட்ட பாவலரேறு அவர்களின் மிகப்பெரும் பணி காலத்தால் அழியாதது. அதற்காக அவர் தன் உயிரையே தேய்த்துக் கொண்டார். அத்தகைய அரிய அந்தத் தமிழகத் தேசியத்தை அதன் திசையறிந்து, இலக்கு நோக்கி எடுத்துச் செல்வோம்.


(இக்கட்டுரை 1995ஆம் ஆண்டு எழுதப்பட்டதாகும்)

0 மறுமொழிகள்: