15.7.09

துவரையம்பதி

முரண்பாடுகள் தாம் வளர்ச்சியின் ஊக்கு விசையாகச் செயற்படுகின்றன. இது இயற்கைக்கும் மனித வாழ்வுக்கும் மட்டமல்ல வரலாற்று ஆய்வுக்கும் பொருந்தும் ஒரு விதியாகும்.

தமிழகப் பண்டை வரலாற்றில் இத்தகைய முரண்பாடுகள் சில உள்ளன. எடுத்துக்காட்டுக்கு அவற்றில் இரண்டை இங்கு குறிப்பிடலாம்.

1. தமிழகத்தின் வாழ்வியலை இலக்கண வடிவத்தில் கூறும் தொல்காப்பியத்தில் இரு நிலப்பகுப்புகளான நெய்தல், மருதம் ஆகியவற்றின் தெய்வங்களான வருணன், இந்திரன் ஆகியவை ஆரியர்களுக்குரியதென்று சொல்லப்படும் வேதங்களில் காணப்படுவது.


2. இரண்டாம் தமிழ்க் கழக(சங்க)க் காலத்தில் வாழ்ந்த அரசர்களில் துவரைக் கோமான் என்பவன் குறிப்பிடப்படுகிறான். துவரை என்பது இன்றைய குசராத் மாநிலத்தை ஒட்டிய கட்சு வளைகுடாவினுள் ஏறக்குறைய கி.மு.1000 ஆண்டில் முழுகிய ஒரு நகரமாகும். சிசுபாலன் என்ற தன் பகையரசனுக்கு அஞ்சி வடமதுரையைத் துறந்து வந்த கண்ணபிரான் இங்கு ஒரு நகரை அமைத்து ஆண்டான் என்பது வரலாறு. இவ்வாறு வட இந்தியாவில் ஆண்ட ஓர் அரசன் எவ்வாறு கபாடபுரத்தில் அமைந்த இரண்டாம் தமிழ்க் கழகத்தில் அமர முடிந்தது?

இந்தக் கேள்வியைச் சிலர் எழுப்பினாலும் அதற்கான விடையைத் தேடி எவரும் இன்றுவரை புறப்படவில்லை. அது போலத் தான் வருணன், இந்திரன் பற்றிய கேள்வியும். முரண்பாடுகளைக் கண்டு மிரண்டு அவற்றைப் புறக்கணித்துவிடும் நம் ஆய்வாளர்களின் போக்கினால் தமிழ் மக்கள் வரலாற்றின் மீது கவிந்துள்ள இருள் இன்னும் நீங்காமல் உள்ளது.

இந்த முரண்பாடுகளில் ஒன்றை, அதாவது துவரைக் கோமான் என்ற சொற்களிலுள்ள துவரை நகரம் எது என்று ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

துவரை என்ற சொல் துவாரகை என்ற சொல்லின் தமிழ்ச் சுருக்க வடிவம். துவாரகை என்று சொல் துவார் என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது. துவார் என்ற சமற்கிருதச் சொல்லுக்குக் கதவு என்று பொருள். அப்படியாயின் துவாரகை என்ற சொல்லுக்குக் கதவகம் என்று பொருள் சொல்லலாம். மொழிஞாயிறு தேவநோயப்பாவாணர் அவர்கள் கதவபுரம் என்ற ஒரு சொல்லை வடித்துக் கையாளுவார். அச்சொல் கபாடபுரம் என்பதன் தமிழ் வடிவமாகும். கபாடம் என்பது சமற்கிருதச் சொல் என்று கருதி அவர் இச்சொல்லைக் கையாண்டார். இந்தக் கபாடபுரம் என்ற சொல்லுக்கும் துவாரகை என்ற சொல்லுக்கும் உறவு இருக்கிறதல்லவா? எனவே துவரை என்ற சொல் கபாடபுரத்தையே குறிக்கிறதென்ற முடிவுக்கு நாம் வரலாம். இப்போது கபாடபுரமாகிய பாண்டியனின் தலைநகரில் அமைந்திருந்த இரண்டாம் தமிழ்க் கழகத்தில் துவரைக் கோமான் அரசனாக அமர்ந்திருந்ததில் முரண்பாடு எதுவும் இல்லை.

சிக்கல் இத்துடன் தீர்ந்து போகவில்லை. இந்தக் கதவம் பற்றித் தமிழகத்துக்கு வெளியிலும் தமிழ் இலக்கிய வட்டத்துக்கும் வெளியிலும் நமக்கு ஆர்வமூட்டும் சில சிறப்பான செய்திகள் உள்ளன.

இவற்றுள் ஒன்று பாபிலோனியாவிற்குரியது. கில்காமேஷ் காப்பியம் எனப்படும் இதுவரை கிடைத்துள்ள உலகின் மிகப் பழைய காப்பியத்திலுள்ளது. கி.மு. ஏழாம் நூற்றாண்டில் அசிரியாவை ஆண்ட அசூர்பானிப்பாலின் நூல் நிலையத்திலிருந்து இது கிடைத்தது. பின்னர் கி.மு.22-21ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பாபிலோனிய அரசன் அம்முராபியின் தொகுப்புகளிலிருந்தும் கிடைத்தது. இக்காப்பியம் சுமேரியர்களுக்கு உரியதாகும். புகழ்பெற்ற தமிழ் இலக்கியத் திறனாய்வாளரும் எழுத்தாளருமான க.நா.சுப்பிரமணியம் இக்காப்பியத்தைத் தமிழாக்கியுள்ளார்.

இக்காப்பியக் கதை பின் வருமாறு.

ஊருக் என்ற சுமேரிய நகரத்தைச் சுற்றிப் பெரிய சுவரெழுப்பிய சுமேரியத் தொன்ம அரசன் கில்காமேஷ். இவன் மூன்றிலிரு பகுதி கடவுளும் ஒரு பகுதி மனிதனுமாவான். இவன் அழகில் அவன் நாட்டு மகளிர் மயங்கினர்.

அருரு என்ற பெண் தெய்வத்தால் படைக்கப்பட்டவன் எங்கிடு. இவன் உடலெங்கும் மயிரடர்ந்திருந்தது. தோல் ஆடையே அணிந்திருந்தான். காட்டில் விலங்குகளோடு விலங்காக நான்கு கால்களிலும் நடந்து புல்லை மேய்ந்து நீரில் விளையாடி வாழ்ந்திருந்தான்.

இவனைப் பற்றி அறிந்த கில்காமேஷ் அழகிய ஒரு பெண்ணை அவனிடம் அனுப்பினான். இருவரும் ஆறு நாட்கள் சேர்ந்திருந்தனர். அப்பெண்ணோடு நகருக்குள் நுழைந்த எங்கிடுவுடன் கில்காமேஷ் சண்டையிட்டு வென்று அவனை நண்பனாக்கிக் கொண்டான்.

இசுத்தார் என்ற பெண் தெய்வம் தன் மீது கொண்ட காதலை கில்காமேஷ் ஏற்க மறுத்ததனால் அவனைப் பழிவாங்குவதற்காக எங்கிடுவுக்கு நோயுண்டாக்கிக் கொன்றுவிடுகிறாள். துயரத்தால் துடித்த கில்காமேஷ் சாவாமை பற்றி அறிந்துவரக் கிளம்புகிறான். தன் முன்னோனான உட்நாப்பிட்டிமைத் தேடிச்செல்கிறான். இந்த உட்நாப்பிட்டிம் வெள்ளத்திலிருந்து தப்பிய ஒரே மனிதன். யூத மறைநூலின் நோவாவின் மூலவடிவம். இவன் மரணமற்றவன்.

அவனைச் சந்திக்க நெடுந்தொலைவு நிலத்தின் மீது செல்கிறான். வானாளாவி நிற்கும் இரண்டு மலைகளுக்கு நடுவில் அமைந்திருக்கும் ஒரு பெரும் சூரியக் கதவத்தைக் கடந்து ஒரு சுரங்கத்தின் வழியாகப் 12 மைல்கள் செல்கிறான். இக்கதவம் இரண்டு பூதங்களால் காக்கப்படுகிறது. இவன் உட்நாப்பிட்டிம் வழியினன் ஆனதாலேயே உள்ளே அனுமதிக்கப்படுகிறான். சுரங்கம் ஒரு கடற்கரையில் சென்று முடிகிறது. அங்கிருந்த ஓர் கன்னித் தெய்வத்தின் உதவியுடன் நாற்பது நாட்கள் கடலில் பயணம் செய்து உட்நாப்பிட்டிம் இருக்கும் தீவை அடைகிறான். அவனிடமிருந்து வெள்ளத்தைப் பற்றிய கதையை நேரடியாக அறிகிறான். சாவாமையைத் தரும் ஒரு பழமரக் கன்றைப் பெற்றுவிட்டுத் திரும்புகிறான். வழியில் கீழே வைத்துவிட்டுக் குளிக்கச் செல்லும் போது பாம்பு ஒன்று அக்கன்றைத் திருடிச் சென்றுவிடுகிறது. இப்படிச் செல்கிறது இக்கதை.

இதே போன்ற கதவம் ஒன்று இயமனைப் பற்றிய இந்தியத் தொன்மங்களில் கூறப்படுகிறது. இயமனும் மரணமற்றவென்பது மரபு.

இவை மட்டுமல்ல இது போன்ற பல சூரியக் கதவங்கள் உலகமெல்லாம் தொல்லாய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன.

எனவே கதவபுரம் எனப் பொருள் படும் கபாடபுரமும் அதன் இன்னொரு பெயரான துவாரகையும் வெறும் கற்பனை அல்ல. அதன் நினைவுகள் உலகின் பல பகுதிகளில் எழுத்தில் பதியப்பட்டுள்ளன. அவற்றின் நினைவாக அது போன்ற கதவங்களும் நிறுவப்பட்டுள்ளன.

கதவபுரத்தைப் பற்றி இராமாயணம் கூறுகிறது. ஆனால் தமிழனின் பண்டை வரலாற்றுக்கு ஒரே மூலமாக நாம் கொள்ளும் கழக நூல் தொகுப்பில் இதைப் பற்றி ஒரு சொல் கூடக் குறிப்பிடவில்லை. இது இக்கழகத் தொகுப்பே ஏதோ காரணத்தால் தமிழர்களின் தொன்மை வரலாற்றை மறைப்பதை நோக்கமாகக் கொண்டவர்களின் ஒரு முயற்சியோ என்ற கசப்பான, ஆனால் தவிர்க்க முடியாத ஐயத்தை நம் மனதில் தோற்றுவிக்கிறது.

ஒரு வெள்ளக் காலத்துக்குப் பின் துவரை என்ற பெயர் பெற்ற கதவபுரத்தைக் தலைநகராகக் கொண்டமைந்த தமிழகத்திலிருந்து அடுத்த வெள்ளத்திலிருந்து தப்புவதற்காக வெளியேறிய ஒரு மக்கள் கூட்டம் இன்றைய குசராத் மாநிலத்திலமைந்திருந்த அவந்தி நாட்டில் காயங்கரை என்ற ஆற்றின் கரையை அடைந்தனர்.

இச்செய்திகள் மணிமேகலையின் பழம்பிறப்புணர்ந்த காதையிலிருந்து பெறப்பட்டனவாகும். (இந்தக் காயங்கரை ஆறு கோக்கரா எனும் பெயரால் குறிக்கப்பட்டது. பின்னர் அவ்வாறு பாலை மணலில் மறைந்து போனது. கங்கையின் ஒரு கிளையாறும் கோக்ரா என்ற பெயர் பெற்றுள்ளது.) காந்தாரம் என்ற நாட்டில் பூருவ தேயத்தை ஆண்ட அத்திபதியிடம் அவன் உறவினனான பிரம தருமன் என்ற முனிவன் அவன் நாடு உட்பட நாகநாட்டில் நானூறு யோசனை பரப்பான நிலம் ஏழு நாளில் நில நடுக்கத்தால் கடலினுள் புகும். ஆதலால் மாவும் மாக்களும் உடன் கொண்டு வேற்றிடம் செல்லுமாறு பணித்ததாக மணிமேகலை கூறுகிறது.

காந்தாரம் என்பது இன்று ஆப்பாகனித்தானத்தைச் சேரந்த ஒரு பகுதியாகும். பூருவ தேசம் என்பது பாண்டவர்களின் முன்னோர் பெயரைக் கொண்டதாகும். எனவே இப்பெயர்கள் முழுகிய குமரிக் கண்டப் பகுதிகளுக்கு உரியவை என்று நாம் முடிவு செய்யலாம்.

இவை நம் மரபுகளை உயர்த்திக் கூறுவதற்காக இட்டுக்கட்டப்பட்ட கதைகளிலிருந்து நமக்குச் சார்பாக இருப்பதால் மேற்கொள்ளப்பட்ட செய்திகள் என்று ஒதுக்கித்தள்ள முடியவில்லை. கதவபுரம் எனப் பொருள்படும் துவாரகை எனப் பெயர்கொண்ட நகரம் இப்பகுதியில் இருந்ததும் வேதங்களிலும் வடஇந்தியத் தொன்மங்களிலும் தெய்வங்களாகக் கூறப்படும் வருணனும் இந்திரனும் தமிழக ஐந்நிலத் தெய்வங்களாயிருப்பதும் நமக்கு மறுக்க முடியாச் சான்றுகளாகின்றன.

துவரை என்ற இச்சொல்வழக்கு இறையனார் அகப்பொருள் உரையில் மட்டும் காணக்கிடைக்கவில்லை. சென்ற நூற்றாண்டு வரை குமரி மாவட்ட மக்களின் நாவில் பயின்றும் வரப்பட்டிருக்கிறது. சாமிதோப்பில் பள்ளி கொண்டிருக்கும் முத்துக்குட்டி அடிகளின் பெருமை கூறும் அகிலத் திரட்டு அம்மானை இம்மண்ணின் மக்களின் முன்னாளைய நிலமாக இருந்து கடலில் அமிழ்ந்து போன துவரையம்பதி மீண்டும் துவங்கும் என்று வலியுறுத்துகிறது. இதனால் கடலில் முழுகிய, முதல் வெள்ளத்துக்குப் பின் பாண்டியரின் தலைநகராயமைந்த, கதவபுரத்தைத் துவரையம்பதி என அழைக்கும் மரபு குமரி மாவட்ட மக்களிடையில் சென்ற நூற்றாண்டு வரை நிலவியது என்பதை நாம் அறிகிறோம்.

இக்கட்டுரையில் கில்காமேஷ் காவியம் பற்றிய செய்திகள் புகழ்பெற்ற வரலாற்றறிஞர் வில்தூரன் எழுதிய நகரிகத்தின் கதை என்ற நூலின் முதல் மடலமாகிய கிழக்கு நமக்கு வழங்கிய கொடை (Story of civilisation - Our Oriental Henitage) என்ற நூலிலிருந்தும் அமெரிக்காவிலிருக்கும் செருமானிய ஆய்வாளரான புகழ் பெற்ற எரிக் வான் டெனிக்காவின் கடவுளரின் தேர்கள்? (Charists of Gods?) என்ற நூலிலிருந்தும் பெறப்பட்டவை.

எரிக் வான் டெனிக்கான் ஏறக்குறைய 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகில் இன்றைய நாகரிகத்தை மிஞ்சிய தொழில்நுட்பங்களைக் கொண்டவர்கள் வெளி உலகத்திலிருந்து இங்கு வந்து மாபெரும் செயல்களை ஆற்றியுள்ளனர், பெருவெள்ளங்கள் கூட அவர்களை திட்டமிட்டு உருவாக்கியவை என்றெல்லாம் எழுதியுள்ளார். அதுமட்டுமல்ல இது போன்று இன்னும் நான்கைந்து நூல்களையும் எழுதியுள்ளார். இப்பிற நூல்களைப் படிக்கும் வாய்ப்பு கட்டுரையாசிரியருக்குக் கிடைக்கவில்லை. இந்த ஒரு நூலிலிருந்து கிடைக்கும் தரவுகளிலிருந்தே நம் புராணங்களில் காணப்படுவற்றில் நம்பத்தகாதவை என்று நாம் ஒதுக்கித் தள்ளிய பல செய்திகளை இன்றைய அறிவியல் வளர்ச்சியோடு ஒப்பிட்டு மீளாய்வு செய்ய வேண்டிய தேவையை நமக்கு உணர்த்துகிறது.

நமக்கு ஏற்படும் இன்னொரு எண்ணம் என்னவென்றால் குமரிக் கண்டம் நம் முக்கழக வரலாறு குறிப்பிடுவது போல் இரண்டே கடற்கோள்களுக்கு ஆட்படவில்லை என்பதாகும். மிக உயர்ந்த நாகரிகத்துடன் வாழ்ந்த மக்களைக் கொண்டு அண்டார்ட்டிகா வரை பரந்திருந்த ஒரு நிலப்பரப்பு பகுதி பகுதியாக கடல் கொள்ளப்பட மக்கள் உலகின் பிற பகுதிகளுக்குப் பெயர்ந்து செல்லச் செல்ல நாகரிகம் சிறிது சிறிதாக நலிந்து இன்றைய இடத்துக்கும் நிலைக்கும் தமிழ் மக்கள் வந்து சேர்ந்திருக்கிறார்கள் என்பதாகும்.

இச்செய்திகளைத் தடம் பிடிக்க எரிக்வான் டெனிக்கான் போன்றவர்கள் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள மக்களின் பண்பாட்டுக் கூறுகளைக் தொகுத்துத் தந்துள்ள எண்ணற்ற ஆய்வாளர்களின் ஆக்கங்களுடன் இந்தியப் தொன்மச் செய்திகளையும் ஒப்பிட்டு நாம் ஆய வேண்டும். குறிப்பாக நம் தொன்மச் செய்திகளில் வரும் கந்தர்வர்கள், விஞ்சையர் எனப்படும் யாழோர், கருடபுராணம் ஆகியவை மிகக் கவனமாக ஆயப்பட வேண்டும்.

குமரிக் கண்ட ஆய்வு என்பது வெறும் புவியியல் ஆய்வு மட்டுமல்ல. உண்மையில் புவியியல் ஆய்வு என்பது இவ்வாய்வின் மிகச் சிறியதும் கடைசியானதுமான கூறே. மிகப் பெரும் பகுதியும் முகாமையானவையும் உலகெலாம் பரந்து விரிந்து சிதறிக் கிடக்கும் பண்பாட்டுச் செய்திகளே. அச்செய்திகளைச் சுட்டிகாட்டும் ஒரு கருவியாகத் ″துவரையம்பதி″ அமைந்திருக்கிறது.

0 மறுமொழிகள்: