மதுரையை எரித்தது யார்? .....2
இந்தக் கலகத்தை நடத்தியதில் ஏதாவதொரு குறிப்பிட்ட வகுப்பு ஈடுபட்டதாகக் காண முடியுமா என்று ஆய்ந்தால், காண முடியும் என்று தோன்றுகிறது.
நெடுஞ்செழியன் மாண்டதை அடுத்து கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் மதுரைக்கு வந்து பொற்கொல்லர் ஆயிரவரை நங்கைக்கு(கண்ணகிக்கு)ப் பலி கொடுத்தான் என்று சிலம்பு கூறுகிறது. பொற்கொல்லன் சூழ்ச்சியால் கோவலன் கொலைப்பட்டான் என்பதால் தான் இது நிகழ்ந்திருக்குமென்று தோன்றவில்லை.
நகைத் தொழில் மதுரையில் மிகப் பெருந்தொழிலாயிருந்திருக்க வேண்டும்.
நுண்வினைக் கம்மியர் நூற்றுவர் பின்வர (16:106) வந்த பொற்கொல்லனிடம் நூற்றுவர்க்குக் குறையாத நுண்வினைக் கொல்லர்கள் பணியாற்றிருக்க வேண்டும். இன்று 5 பேருக்கு மேல் வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனங்கள் தொழிற் கட்டங்களுக்கு உட்படுகின்றன. நூறு பேருக்கு மேல் வைத்திருக்கும் இப்பொற்கொல்லன் ஒரு பெரும் தொழில் முதலாளியாகிறான். இத்தகைய ஒரு தொழில் முதலாளியுடன் மிக நெருக்கமான உறவு வைத்திருந்த மன்னன் தொழிலாளர் பகைவனாயிருப்பது தவிர்க்க முடியாதது. நகரில் இவனைப் போன்ற பல பொற்கொல்ல முதலாளிகள் இருந்திருக்க வேண்டும். நகரில் மட்டுமின்றி நாடு முழவதும் இவனன்றி இன்னும் பல பொற்கொல்ல முதலாளிகள் இருந்திருக்க வேண்டும்; ஏனெனில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் பொன் மாற்று அறிவதற்கென்றே ′பொன்வாரியங்கள்′ இருந்ததற்கான சான்றுகள் உள. இவ்வாறு மன்னன் மீது வெறுப்புக் கொண்டிருந்த பொற்கொல்லர்கள் ஒன்று திரண்டு மதுரைக் கலவரத்தை(அல்லது புரட்சியை) முன்னின்று நடத்தியிருக்கலாம். அது நாட்டுப் புறங்களிலும் பரவத் தொடங்கியிருக்கலாம். அக்கலகங்களுக்குத் தலைமை தாங்கியோரே இவ்வாயிரம் பொற்கொல்லாராயிருந்திருக்க வேண்டும்.
அடுத்து இந்நிகழ்ச்சியில் புலவர் சாத்தனாரின் பங்கு என்ன என்பதைப் பார்க்க வேண்டும். சாத்தனார் மதுரைப் புரட்சியின் இயக்கு தலைவராயிருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அவருக்கு சேர அரசு குடும்பத்துடன் நெருங்கிய உறவு இருப்பது போல் தோன்றினாலும் மணிமேகலை காட்டுகிறபடி பொதுவாக அரசகுலத்தின் மீது வெறுப்பு இருப்பது தெரிகிறது.
சிலப்பதிகாரக் காலத்தில் பாண்டிய நாடு சேரனுக்கு உட்பட்டிருந்தது.
தென் னரிட்ட திறை யொடு கொணர்ந்து..... (26:169)
எனவே தன் ஆளுமைக்குட்பட்ட நாட்டில் கலக மேற்பட்டால் அதை அடக்க வேண்டியது சேரனின் கடமையும் தேவையுமாகிறது. அந்த நோக்கத்துடனேயே பெரியாற்றின் கரை மீது செங்குட்டுவன் பாடியிறங்குகிறான். அவனுக்கு கண்ணகி வரலாறு தெரிந்திருக்கவில்லை. கண்ணகி வந்து வானுலகெய்திய செய்தியை வேட்டுவர் கூறிய பிறகு தான் அவன் கண்ணகியைப் பற்றி அறிகிறான். அவள் மதுரைக்கு எரியூட்டியதைச் சாத்தனார் மூலமே அறிகிறான்.
கதையின் படி, மதுரை எரிந்த பதினான்காம் நாள் கண்ணகி இறக்கிறாள். அதுவரை மதுரையில் நடந்தது, அதாவது மதுரை எரிந்தது செங்குட்டுவனுக்குத் தெரியாதிருக்க முடியாது.
நாவலந் தண்பொழில் நண்ணார் ஒற்று நம்
காவல் வஞ்சிக் கடை முகம் பிரியா........ (25:173-174)
என்றவாறு ஒற்றர் மூலம் அச்செய்தி அவனுக்கு உடனே கிடைத்திருக்க வேண்டும். கண்ணகி முலைமுகத் தெழுந்த தீ தான் மதுரையை எரித்தது என்பதை சாத்தனார் மூலமே அவன் அறிய முடிந்த தென்றால், மக்களால் தான் மதுரை எரியுண்டது என்றே அவன் அதற்கு முன்பு அறிந்திருக்க வேண்டும். (கண்ணகி பற்றி ஒற்றர்கள் கூறவில்லை யென்றால், கண்ணகி பற்றிய நிகழ்ச்சி அல்லது அவளேற்ற பங்கு அவ்வளவு முகாமையில்லாத ஒன்றாக இருந்திருக்க வேண்டும். சாத்தனாரே அவளைப் பெரிதுபடுத்தியிருக்க வேண்டும்.) அந்தக் கலகத்தைக் தேவைப்பட்டால் அடக்கலாம் என்ற நோக்கத்துடனேயே பாண்டிய நாட்டெல்லை யருகில் அவன் பாடி யிறங்கியிருக்க வேண்டும். இவ்வாறு பாண்டிய நாட்டு எல்லை நோக்கி செங்குட்டுவன் வருவதையறிந்து தான் போலும் சாத்தனார் அவனருகில் சென்று சேர்ந்திருக்கிறார். அவன் பாண்டிய நாட்டினுள் நுழைந்து புரட்சியில் ஈடுபட்டவர்களை அழித்து விடுவதைத் தவிர்க்க இதைச் செய்திருக்கலாம். வேட்டுவர்கள் கண்ணகியைப் பற்றிய சேதியைச் சொன்ன நேரம் பார்த்து பழம் வினை குறித்த தன் புனைகதையை எடுத்துவிடுகிறார், அதாவது மதுரையில் நடந்தது மக்கள் எழுச்சியல்ல, ஒரு பத்தினிப் பெண் நிகழ்த்திய இறும்பூதே(அற்பதம்) அது என்று. அதனால் தான் 'யாதவர் வினையென' என்ற பதிகத்தின் கேள்வி மூலம் அப்புனைகதையின் மறையத்தை இளங்கோவடிகள் வெளிப்படுத்துகிறார்.
இக்கதையைக் கேட்ட செங்குட்டவன் ஒன்றேல் மதுரையில் கலகமொன்றும் நிகழவில்லை, ஒரு பத்தினிப் பெண்ணின் தெய்வ ஆற்றலே மன்னவனைக் கொன்று மதுரையை அழித்தது என்று நம்பியிருக்க வேண்டும்; அன்றேல், மதுரையில் நடந்தவாறு, அதாவது மக்கள் மன்னனையும் அரசியையும் கொன்று நகரத்தைத் தீக்கிரையாக்கியது போன்ற போக்குகள் தன்னாட்டுக்கும் பரவாமல் தடுக்க இக்கதை உதவுமென்று கருதியிருக்க வேண்டும். முதலில் கூறியது போல் செங்குட்டுவன் நம்பியிருந்தால் பத்தினித் தெய்வத்துக்குப் படிமம் எடுப்பதன் மூலம் மக்களின் பரிவைப் பெறவோ, நம்பவில்லையாயின் மக்களின் கவனத்தைக் திருப்பவோ இமயத்தை நோக்கிப் படையெடுத்துச் சென்றிருக்க வேண்டும். இவ்வாறு, இங்கு தான் மதுரை நிகழ்ச்சியின் அலுவலகக் கூற்று(Official Version) உருவாகியிருக்க வேண்டும்.
ஒரு கேள்வி எஞ்சி நிற்கிறது. சிலப்பதிகாரம் கூறுவது போல் கண்ணகி தானே தனது இடது முலையைத் திருகி எறிந்தாளா, அல்லது அவளது முலை அறுக்கப்பட்டதா என்பதே அது. சிலம்பு பற்றி சிலப்பதிகாரம் என்ற பெயர் பெற்ற நூல் இறுதியில் முலைப்பூசல் பற்றி அடிக்கடி கூறுகிறது. ஒருவேளை முறைகேட்க மன்னனிடம் கண்ணகி சென்ற போது அவன் ஆட்களால் கண்ணகியின் முலை அறுக்கப்பட்டு அதனால் தான் மக்கள் அரசனையும் அரசியையும் கொன்று நகரத்தையும் அழிக்கு மளவுக்குக் கடுஞ்சினங் கொள்ள உடனடிக் காரண மானதோ என்று கருதத் தோன்றுகிறது.
இறுதியாக, இவ்வாறு புறத்தே ஒரு கதையும் அகத்தே ஒரு கதையும் வைத்து எழுதிய இங்கோவடிகள் யார் என்ற கேள்விக்கு நாம் விடை காண வேண்டியுள்ளது. நாம் மேலே அணுகியுள்ள முறை சரியாக இருந்தால் ஒரு விடையும் காண முடியும் போல் தோன்றுகிறது.
(தொடரும்)
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக