குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு - சில கேள்விகள்
குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க இந்திய அரசு முனைந்து நிற்கிறது. அதற்குத் துணைபுரியப் பல்வேறு "தன்னார்வ"த் "தொண்டு" நிறுவனங்கள் களத்தில் துடிப்புடன் செயற்பட்டு வருகின்றன. அத்துடன் அண்மையில் வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பொன்று குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருக்கும் முதலாளியர் அத்தொழிலாளர் கல்வி அறிவு பெறுவதற்காகவும் மறுவாழ்வுக்காகவும் ஒவ்வொரு குழந்தைத் தொழிலாளருக்கும் 20000 ⁄-ரூபாய்கள் வழங்க வேண்டும் என்று கூறுகிறது. எல்லாம் சேர்ந்து விரைவில் குழந்தைத் தொழிலாளர்களை "ஒழித்து" விடுவார்கள் போல் தோன்றுகிறது. இந்நேரத்தில் நமக்கு எழும் சில அடிப்படைக் கேள்விகளுக்கு விடை காண வேண்டியுள்ளது.
1. குழந்தைகள் ஏன் உடலுழைப்புக்கு அனுப்பப்படுகிறார்கள்?
இன்றைய நிலையில் பல்வேறு காரணங்களால் நம் வேளாண்மை வீழ்ந்துவிட்டது. நிலம் தரிசாகப் போடப்பட்டுப் பாலைவனமாக மாறி வருகிறது. அதன் விளைவுதான் நீண்ட வறட்சியும் திடீர் வெள்ளங்களும். அதனால் பெரியவர்களின் வேலைவாய்ப்புகள் அருகிவிட்டன. இருப்பவை எல்லாம் குழந்தைகளைப் பயன்படுத்தும் வேலைவாய்ப்புகள் தாம். எனவே குடும்பத்தை நடத்தப் பெற்றோர்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்புகின்றனர்.
வேலையில்லா நிலையில் பெற்றோர்கள், குறிப்பாக ஆடவர்கள் குடிப்பதற்கும் பரிசுச் சீட்டு வாங்குவதற்கும் கூட இக்குழந்தைகளின் உழைப்பையே சுரண்டுகின்றனர். பெரியவர்களுக்கு வேலைவாய்ப்பு இருக்கும் நிலையிலும் கூட சாராயம், பரிசீச் சீட்டு போன்றவற்றில் அவ்வருமானம் கரைந்து போனதால் ஏற்படும் வறுமையும் குழந்தைகள் வேலைக்கு அனுப்பப்படுவதற்கான ஒரு முகாமையான காரணம்.
2. குழந்தை உழைப்பைத் தடை செய்துள்ள அரசு அதன் விளைவாகிய குடும்ப வருமான இழப்பை ஈடு செய்ய என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது?
ஒன்றுமே இல்லை. குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான சட்டத்தை இயற்றியதுடன் அதற்குச் தோதான ஒரு மனநிலையைப் பொதுமக்களிடையில் ஏற்படுத்துவதற்காக அரசே நேரடியாகவும் தன் ஆளுகையின் கீழிருக்கிற மற்றும் மக்களுக்கு(தனியாருக்கு)ச் சொந்தமான பொதுத் தொடர்பு வகைதுறைகளின் மூலமாகவும் "தன்னார்வ"த் "தொண்டு" நிறுவனங்கள் மூலமாகவும் பலவகைகளிலும் கருத்துப் பரப்புவதற்குப் பல கோடி உரூபாய்களைச் செலவு செய்வதோடு சரி.
3. குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பின் விளைவுகள் என்னவாக இருக்கும்?
முதலாவதாக, உழைப்பிலிருந்து விடுபட்ட குழந்தைகளும் அவர்களது உழைப்பை நம்பி வாழும் குடும்பமும் இப்போது கிடைக்கும் அரைவயிற்றுக் கஞ்சியிலிருந்தும் "விடுபடுவர்". அதன் தொடர்ச்சியாகப் பட்டினிச் சாவுகளும் தற்கொலைகளும் பெருகும். மக்களின் இடப்பெயர்ச்சி கூடும்.
மானத்தோடு உழைத்துப் பிழைத்து வந்த சிறுவர்கள் இனி நாய்களோடும் பன்றிகளோடும் போட்டியிட்டு எச்சில் இலைகளுக்காகச் சண்டை போடுவர். குப்பைகளில் காகிதம் பொறுக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை பெருகும்.
சிறுவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவர். குமுகப் பகைக் கும்பல்களுக்கு ஆள் வலிமை சேரும். விலைமகளிராக மாறும் சிறுமிகளின் எண்ணிக்கை பெருகும். இத்துறைத் தரகர்களுக்கு நல்ல வேட்டையாகும்.
இரண்டாவதாகக் குழந்தைத் தொழிலாளர்களை வைத்து மலிவாகப் பண்டங்கள் செய்த நிறுவனங்கள் வெளிப்போட்டியைத் தாக்குப்பிடிக்க முடியாமல் மூடப்படும். தொழில் குறிப்பிட்ட பகுதிகளில் அழித்து போகும். எனவே அங்குள்ள பெரியவர்களுக்கிருக்கும் வேலைவாய்ப்புகளும் அழிந்து போகும். அப்பகுதிகள் ஆளற்ற பாலைவனங்களாகும். இப்போது பெருகி வரும் வழிப்பறிகளும் கொள்ளைகளும் இனிமேல் விரைந்து பெருகும்.
மூன்றாவதாக இத்தொழில்களின் மூலம் செய்யப்பட்ட பொருட்களைச் செய்ய இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள் நிறுவப்படும். அவற்றை இறக்குமதி செய்வதற்காக வெளிச்செலாவணித் தேவை கூடும்.
நான்காவதாகச் சட்டத்துக்குப் புறம்பாகக் குழந்தைத் தொழிலாளர் முறை தொடரும். இதனால் குழந்தைகளுக்கு இப்போது வழங்கப்படும் கூலியும் குறையும். இவ்வாறு குறைவதால் மிச்சப்படும் தொகை இச்சட்ட மீறலை மறைப்பதற்கான கையூட்டாக ஆட்சியாளரைச் சென்றடையும்:
4. குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பில் இவ்வளவு முனைப்புக் காட்டும் ஆட்சியாளரின் உள்நோக்கம் என்ன?
முன்பு "நெருக்கடி நிலை"யின் போது மக்களிடையில் "பணப் புழக்கத்தைக் குறைப்பதற்காக" ஊதிய முடக்கம், பஞ்சப்படி முடக்கம் எல்லாம் செய்தார்களல்லவா அதே நோக்கம் தான். அதாவது மக்களின வாங்கும் ஆற்றலைக் குறைப்பது தான். அதாவது தங்கள் தேவைகளை வாங்க இயலாத வறியவர்களாக்குவது தான். இதன் மூலம் மிஞ்சும் பண்டங்களை ஏற்றுமதி செய்யலாம். இப்போது ஏற்றுமதி செய்யப்படும் 30 லட்சம் டன் உணவுத் தவசங்களை(தானியங்களை) இன்னும் கூட்டலாம்.
குழந்தைத் தொழிலாளர்களின் இடத்தை நிரப்ப இறக்குமதி செய்யப்படும் இயந்திரங்களுக்கு வழக்கமான தரகு கிடைக்கும். இறக்குமதியால் ஏற்படும் வெளிச் செலாவணிக்காக புதிதாக ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கும் தரகு கிடைக்கும்.
5. "தொண்டு" நிறுவனங்களின் உள்நோக்கம் என்ன?
இத்"தொண்டு" நிறுவனங்கள் இந்திய அரசிடமிருந்தும் உலகின் பெரும் தொழிற்பேரரசுகள் நடத்தும் அறக்கட்டளைகளிலிருந்தும் பணம் பெறுவதால் அப்பேரரசுகள் செய்யும் கருவிகளை இறக்குமதி செய்வதற்குத் தோதான சூழ்நிலையை உருவாக்கப் பாடுபடுகின்றன. குழந்தைகளுக்குக் குறைவான கூலி கொடுத்து ஏழை நாடுகள் மலிவாக பண்டங்களைப் படைத்துத் தங்களுடன் போட்டியிடுவதிலிருந்து அவற்றைத் தடுப்பது முகாமையான நோக்கம்.
6. குழந்தைத் தொழிலாளரை வேலைக்கு வைத்திருப்போர் தான் வேலைக்கு வைத்திருக்கும் ஒவ்வொரு குழந்தைத் தொழிலாளருக்கும் 20,000⁄-உரூபாய்கள் மறுவாழ்வுக்காக வழங்க வேண்டுமென்ற நீதிமன்றத் தீர்ப்பின் விளைவு என்னவாக இருக்கும்?
குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருக்கும் முதலாளிகளுக்கு மறைமுகமாக விதிக்கப்படும் தண்டமாகும் இது. குழந்தைகள் வேலையிழக்கும் வேகத்தை இது கூட்டும். குழந்தைகளை வேலைக்கு வைத்திருப்போர் தங்களிடமிருக்கும் கொஞ்ச நஞ்ச இரக்கம், மாந்தநேய உணர்வுகளைத் துடைத்தெறிந்துவிட்டு அவர்களைத் தெருவில் இறக்கிவிடத் தூண்டும்.
7. குழந்தைத் தொழிலாளர் பற்றிய இந்த நிலைப்பாடு சரிதானா?
பதின்மூன்று அகவைக்குட்பட்ட குழந்தைகள் உழைத்துப் பிழைக்க வேண்டிய சூழ்நிலை வருந்தத்தக்கது தான். ஆனால் குழந்தைகளின் உழைப்பில் குடும்பம் வாழ வேண்டுமென்றிருக்கும் நிலையை மாற்றுவது பற்றிய சிந்தனையே இன்றி அத்திசையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குழந்தை உழைப்புக்கு எதிராக முனைப்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வது தவறு மட்டுமல்ல இரக்கமற்ற கொடுஞ் செயலுமாகும். அதே வேளையில் உடலுழைப்பு இழிவானது என்ற உணர்வு எழுத்துறிவுடன் கூடவே பள்ளிகளில் உருவாகி விடுகிறது. இது நெடுங்காலமாகப் பெருந்திரள் மக்களுக்கு எழுத்தறிவு மறுக்கப்பட்டதன் விளைவாகும். அத்துடன் உழைப்போருக்கு உரிய ஊதியமோ குமுக மதிப்போ இல்லை. அதனால் இன்று இருக்கும் எத்தனையோ வேலைவாய்ப்புகளைப் படித்த இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளாமல் வீண் பொழுது போக்குவதுடன் குமுகத்துக்குத் தொல்லை தருபவர்களாகவும் மாறிவிட்டிருக்கிறார்கள். எனவே இதில் ஒரு மாற்றத்தின் தேவையுள்ளது. குறைந்தது பத்து ஆண்டுகள் தொடர்ந்து உடலுழைப்பையே தவிர்த்து வருவதால் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களிடத்தில் உழைப்பை ஏற்றுக்கொள்ள ஓர் எதிர்ப்பு நிலை உருவாகி விடுகிறது. அதை மாற்ற எட்டாம் வகுப்பு முடிந்தவுடன் ஒரு மூன்றாண்டுக் காலம் உடலுழைப்பில் ஈடுபடுவதைக் கட்டாயமாக்க வேண்டும். எட்டாம் வகுப்பு வரை கட்டாய இலவசக் கல்வி அனைவருக்கும் அளிக்க வேண்டும். மூன்றாண்டு உடலுழைப்பிற்குப் பின் மேற்படிப்புக்கு மாணவன் கட்டணம் செலுத்த வேண்டும். எட்டாம் வகுப்பு மட்டத்தில் மனமும் உடலும் முற்றிப் போகாவாகையால் உழைப்பு பற்றிய சிந்தனையிலும் உடல் வணக்கத்திலும் எதிர்ப்பு இருக்காது.
கட்டிடத் தொழிலிலாயினும் வேறு எந்தக் தொழிலிலாயினும் ஈடுபடுவோருக்கு அத்தொழில் குறித்த அடிப்படைத் தொழிற்கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். அப்போது தொழில்களின் தரம் மேம்படுவதுடன் புதியன படைக்கும் ஆர்வமும் உண்டாகும்.
8. இது பற்றி மேலையாடுகளின நிலை என்ன?
மேலை நாடுகளில் பதினபருவம்(Tennage) எனப்படும் பதின்மூன்று அகவை எட்டிய இளைஞர்கள் குழந்தைப் பருவத்தைத் தாண்டியவர்களாகக் கருதப்படுகின்றனர். அப்போதிலிருந்து பெற்றோரைச் சார்ந்திருப்பதிலிருந்து அவர்கள் அகலுகின்றனர். பகுதி நேர உழைப்பின் மூலம் தம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர். இது அவர்களின் முழு ஆற்றலையும் வளர்த்துக் கொள்ளும் பயிற்சியாகிறது. தன்னம்பிக்கை, குமுகத்துடன் நெருக்கமான உறவு, பொது அறிவு, குமுக உணர்வு ஆகியவற்றை வளர்க்கப் பெருந்துணை புரிகிறது. மாறாக நம் நாட்டு இளைஞர்கள் பெற்றோர் நிழலிலேயே நெடுங்காலம் ஒதுங்கி, ஒடுங்கி உடலியல், உளவியல் ஆற்றல்களை வளர்க்கும் பயிற்சியின்றி இருவகைகளிலும் மெலிந்து போகின்றனர்.
9. இது குறித்து நம் பண்டைமரபுகள் ஏதேனும் உண்டா?
உண்டு. சில சாதியினர் தங்கள் மகன்களைத தங்களையொத்த பிற தொழில் நிறுவனங்களில் கூலி வேலைக்குப் பயிற்சியாளர்களாய் அனுப்புவதுண்டு. மாதவி ஏழாண்டுப் பயிற்சிக்குப் பின் பன்னீரண்டாம் அகவையில் அரங்கேறியதாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.
மகாபாரதத்தில் நளாயினி கதையில் வரும் ஆணி மாண்டவியர் வரலாற்றில் ஒரு குறிப்பு உள்ளது. தவறுதலாகத் தான் கழுவேற்றப்பட்டதற்கு எமனிடம் விளக்கம் கேட்கிறார் ஆணி மாண்டவியர். அதற்கு, அவர் சிறுவனாயிருக்கும் போது ஒரு முனிவரிடம் தவறாக நடந்து கொண்டதன் விளைவே அது என்று கூறுகிறான் எமன். பதின்மூன்று அகவைக்குள் செய்த தவறுகளுக்குத் தண்டனை கிடையாதென்ற அறநூல் கூற்றைத் காட்டித் தவறிழைத்த எமனுக்குச் சாபமிடுகிறார் முனிவர். இதிலிருந்து பதின்மூன்று அகவையடைந்தவர்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயற்படத் தக்கவர் என்ற கருத்து மிகப் பண்டை நாட்களிலேயே நம் குமுகத்தில் நிலவியது தெளிவாகிறது.
10. குழந்தைத் தொழிலாளர் குறித்த நம் நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும்?
முதலாவதாக, ஏழைச் சிறுவர்களின் வாழ்வின் அடிப்படையையே தகர்க்கும் குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டத்தின் செயற்பாட்டை உடனடியாக நிறுத்திவைக்க வேண்டும்.
இரண்டாவதாக, குழந்தைத் தொழிலாளரை வேலைக்கு அமர்த்தியிருக்கும் முதலாளிகளும் அரசும் இணைந்து அவர்களுக்கு அடிப்படைக் கல்வி அளிக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் அவர்களது வேலை நேரத்தை அமைத்துக் கொடுக்க அம்முதலாளிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். இக்குழந்தைத் தொழிலாளர் கல்வி நிலையங்கள் அரசின் பொறுப்பிலிருக்க வேண்டும்.
மூன்றாவதாக, அழிந்து கொண்டிருக்கும் வேளாண்மையை மீட்டெடுக்க நிலவுச்சவரம்பு, வேளாண் விளைபொருள் ஆணையம், உணவுப் பொருள் நடமாட்டக் கட்டுப்பாடுகள், உணவுப் பொருளின் வாணிகத்தில் உரிம முறை, வருமான வரி போன்ற தடைக்கற்களை உடனடியாக அகற்றி வேளாண்மைக்கு மறு உயிர் கொடுத்து பெரியவர்களின் வேலைவாய்ப்பைப் பெருக்க வேண்டும்.
வருமானவரியை முற்றாக ஒழித்து உரிமம், இசைவாணை, மூலப்பொருள் ஒதுக்கீடு போன்ற தடைக் கற்களை அகற்றி உள்ளூர் தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமூட்டியும் உள்ளூர் தொழில்நுட்பக் கண்டு பிடிப்புகளை ஊக்குவித்தும் தொழில் வளர்ச்சியை பாய்ச்சல் நிலைக்குக் கொண்டு வந்து அனைத்து வகை வேலை வாய்ப்புகளையும் பெருக்க வேண்டும்.
சாராயத்தையும் பரிசுச் சீட்டையும் முற்றாக ஒழிக்க வேண்டும்.
மூன்றாவதாக, குழந்தைத் தொழிலாளர்களை அகற்ற உள்நாட்டுத் தொழில் நுட்பத்தில் உள்நாட்டில் உருவான கருவிகளையே பயன்படுத்த வேண்டும்.
நான்காவதாக, அனைவருக்கும் எட்டாம் வகுப்பு வரை கட்டாய இலவசக் கல்வித் திட்டத்தை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும். இதற்கும் உலக வங்கியிடம் நாட்டை அடகு வைக்கக் கூடாது. இத்தொடக்கக் கல்வி முழுவதும் அரசாலேயே செல்வநிலை வேறுபாடின்றி அனைவருக்கும் மேற்கொள்ளப்பட வேண்டும். எட்டாம் வகுப்புக்குப் பின் மூன்றாண்டு உடலுழைப்புக்குப் பின் மேற்படிப்புக்குத் தகுதியான ஏழையர் தவிர அனைவரிடமும் கட்டணம் பெற வேண்டும்.
அனைத்துக்கும் மேலாகப் போலி மாந்தநேயத்தைக் காட்டி நம் பொருளியல் நடவடிக்கைகளில் தலையிடும் வெளியுதவி பெறும் "தொண்டு" நிறுவனங்களின் நடவடிக்கைகளை மிகக் கூர்மையாகக் கண்காணித்து அவர்களது இது போன்ற அழிம்பு வேலைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்.