'சுயமரியாதை இயக்கத்துக்கு நாடார்கள் ஆற்றிய தொண்டு' நூல் பற்றி...1
மதிப்புக்குரிய பேரா. பு. இராசதுரை அவர்களுக்கு வணக்கம்.
தங்கள் படைப்பான சுயமரியாதை இயக்கத்துக்கு நாடார்கள் ஆற்றிய தொண்டு எனும் நூலைப் படித்தேன். திராவிட இயக்கத்தைப் பற்றி நான் அறியாத பல புதிய செய்திகள் கிடைத்தன.
திராவிட இயக்கமும் வேளாளர்களும் எனும் ஆ.இரா.வெங்கடாசலபதி அவர்களின் நூலையும் படித்தேன். இரு நூல்களிலுமிருந்து திராவிட இயக்கத்தில் பெரியாரின் செயற்பாடுகள் பற்றிய சில தெளிவுகள் கிடைத்தன.
நீதிக்கட்சி தன் ஆட்சிக் காலத்தில் இரு முனைகளில் செயலாற்றியுள்ளது. தமிழ்நாட்டில் வருணப் பாகுபாட்டின் அடிப்படையில் நாட்டிலுள்ள மிகப் பெரும்பாலான பதவிகளையும் கோயில்கள் மூலமாகவும் நேரடியாகவும் பெரும் நிலவுடைமைகளையும் தம் ஆதிக்கத்தில் வைத்திருந்த பார்ப்பனர்களுக்கு எதிராகவும் வடக்கிலுள்ள மார்வாரிகள் தமிழகப் பொருளியலின் மீது செலுத்திவந்த ஆதிக்கத்துக்கு எதிராகவும் செயற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அக்கட்சியிலிருந்த பணக்காரர்களால் பேரவைக்கட்சி(காங்கிரசு) மக்களிடையில் எழுப்பிவிட்ட தேசியப் புயலை எதிர்கொள்ள முடியவில்லை. அதனால் பேரவைக்கட்சியில் அடைக்கலம் புகுவதே தங்கள் பொருளியல் நலன்களுக்கும் குமுகியல் ஆதிக்க நிலைபேற்றுக்கும் தோதானது என்று கண்டு அணி மாறிவிட்டனர். 1917-இலிருந்தே நாடார் மகாசன சங்கத்துடன் நீதிக்கட்சிக்கு இருந்த தொடர்பும் பாண்டியனார் மூலம் நாடார்கள் நீதிக்கட்சியினுள் பெருகியதும் மேற்சாதியினரான அவர்களை அங்கே இருக்க முடியாமல் செய்தன. இது உலகத்திலுள்ள அனைத்து இயக்கங்களிலும் நடைபெற்றுவரும் செயல்முறையாகும். இதில் நமக்குத் தெரியாத செய்தி தமிழகத்தின் பொருளியல் வளர்ச்சிக்குச் செய்து வந்த பணிகள் நீதிக்கட்சியால் தொய்வின்றி மேற்கொள்ளப்பட்டனவா அல்லது பின்னாளில்போல் வெறும் வாய்ச்சவடால் நடைபெற்றதா அல்லது எதுவுமே செய்யப்படவில்லையா என்பதுதான்.
அடுத்து வருவோர் வெள்ளாளர்கள். பார்ப்பனர் எதிர்ப்பிலிருந்து சாதி ஒழிப்புக்கு மாறி, சாதியைத் தூக்கிப் பிடிக்கும் சமயத்தை மறுப்பதாக கட்சி வடிவெடுத்தபோது வெள்ளாளர் வைணவம் எனப்படும் மாலியத்துக்கு எதிராகப் பெரியாரைத் திருப்பிவிட்டார்கள். ஆனால் சிவனியத்தின் மீதும் பெரியாரின் பார்வை சென்றபோது வெள்ளாளர் நடுவில் பெரும் குழப்பமும் கொந்தளிப்பும் ஏற்பட்டன. ஆனால் அவை தணிக்கப்பட்டு அவர்கள் எதுவும் ஊடுருவ முடியாத கோட்டையாகத் தம் சாதியமைப்பை அமைத்துக் கொண்டார்கள். நாடார்கள், கோனார்கள், தாழ்ந்த சாதிகளிலிருந்த சில வெள்ளாக்கட்டு மேற்கொண்டோரைச் சேர்த்துக் சைவசபைகளை அமைத்துத் தம் அரணை வலுப்படுத்திக்கொண்டனர். (இந்தச் சைவசபைகள் இப்போது செயற்படவில்லை. ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கு முன்பு வழிவழியாகப் புலாலுண்ணாதவரே உண்மைச் சிவனியர் என்ற ஒரு புதிய விதியை - வேதாந்த தேசிகர் தென்கலை மாலியர்களைப் புறந்தள்ள மேற்கொண்ட உத்திபோல - புகுத்தினர். மூக்குடைபட்ட தாழ்ந்த சாதி வெள்ளாளக் கட்டினர் சைவ சித்தாந்த சபை என்ற அமைப்பை அமைத்தனர். வெள்ளாளர் போன்ற ஒரு வகுப்பினரின் ஆதரவு இந்தப் புதிய சபைக்கு இல்லாததாலும் பழைய சபை மேற்கொண்டு வெள்ளாளருக்குத் தேவைப்படாததாலும், அதாவது தன்மான இயக்கத்தால் வந்த இடர்கள் வெற்றிகரமாக எதிர்கொள்ளப்பட்டதாலும் இருசபைகளும் இல்லாமல் போயின). அதாவது தமிழகச் சூழ்நிலையில் வெள்ளாளர்களின் பொருளியல், குமுகியல், இடத்துக்கு ஏற்றவாறு எத்தனை உறுப்பினர்களை ஒரு புரட்சிகர இயக்கத்தில் முழு உறுப்பினராகத் தரமுடியுமோ அவர்களைத் தவிர பிறரனைவரும் ஓரணியில் நின்றுகொண்டனர். வெள்ளாளர்கள் அனைத்து நடைமுறைக் கருதுகோள்களின் படி திராவிட இயக்கத்தை ஒதுக்கி வைத்துவிட்டனர்.
ஆனால் பெரியார் அவர்களை விடவில்லை. பார்ப்பன எதிர்ப்பு என்ற அடிப்படையிலும் இந்தி எதிர்ப்பு என்ற அடிப்படையிலும் இவரே அவர்களை நாடி நின்றார். இந்தி எதிர்ப்புக்குக் காசு உதவுங்கள் என்று மடத்தலைவர்களைக் கேட்டார்.
இந்த இடத்தில் வேளாளர்களின் பொருளியல் பின்னணியை அலசிப்பார்க்க வேண்டும். நிலவுடைமைகள் முன்பு அவர்களிடம் பெருமளவு இருந்தாலும் ஆங்காங்கே குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பணக்காரர்கள் இருந்தாலும் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு அவர்களில் பெருந்தொழிற் குடும்பங்கள் குறைவு. அவர்களுடைய வாழ்க்கைமுறை குத்தகை வருமானத்திலிருந்து உடல் நோகாமல் உண்டும் அவ்வருமானம் இல்லாதவர்கள் கணக்கெழுதுதல் போன்ற எளிய ஆனால் உடலுழைப்பில்லாத பணிகளில் ஈடுபட்டும் அருமுயற்சிகளைத் தவிர்ப்பவர்களாகவே இருந்துள்ளனர். சிவன் கோயில்களைச் சார்ந்து தம்மை ஒற்றுமைப்படுத்திக் கொண்டு தம்மைப் பிறரிலிருந்து அயற்படுத்தித் தம் மேலாண்மையைக் காப்பாற்றிக் கொள்வதாகிய கற்பனை இன்பத்திலேயே மகிழ்ந்து கொண்டிருப்பவர்கள். அவர்கள் சார்ந்திருக்கும் கோயில்களும் மடங்களும் தமிழ்நாட்டு நன்செய் நிலத்தில் 25 நூற்றுமேனியும் புன்செய்நிலத்தில் குறிப்பிடத்தக்க அளவும் சொந்தமாகக் கொண்டவை. நில உச்சவரம்பு, குத்தகை ஒழிப்பு ஆகிய நிலச் சீர்திருத்தங்களிலிருந்து விதிவிலக்குகளால் தப்பித்துக் கொண்டிருக்கின்றன இச்சொத்துகள். பெரியாரிடமிருந்து பிரிந்து ஓடிய பொதுமை எண்ணம் கொண்ட சீவா போன்றோர் அமைத்த தமிழகப் பொதுமைக் கட்சியில் வெள்ளாளரே மிகுதியாக இருந்தனர். ஆனால் பெரியார் இராமமூர்த்தியைப் பெரிதுபடுத்திக் காட்டிப் பொதுமைக் கட்சியின் வஞ்சனைகளுக்குப் பார்ப்பனச் சாயம் பூசி அங்கிருந்த வெள்ளாளரையும் காத்தார். இந்தியப் பொதுமைக் கட்சியின் தமிழகப் பிரிவில் வெள்ளாளர்கள்தாம் ஆதிக்கம் செலுத்துகின்றனர். நில உச்சவரம்பு, குத்தகை ஒழிப்புச் சட்டம் ஆகியவற்றிலிருந்து கோயில் சொத்துக்கு விலக்களிக்கப்பட்ட போது இம்′′மார்க்சியர்கள்′′ எந்த எதிர்ப்பும் சொல்லாதது தங்கள் சாதி நலன்களின் அடிப்படையிலேயே. பெரியார் இதைப் பற்றி மூச்சுவிடவில்லை.
பெரியார் சமயத்துக்கு எதிராகவும் கோயில்களுக்கெதிராகவும் தொடங்கிய போராட்டத்தை வெறும் பார்ப்பன எதிர்ப்பியக்கமாகச் சுருக்காமல் பரந்து விரிந்த நிலையில் மேற்கொண்டிருப்பாரேயானால் (வெங்கடாசலபதி பெரியார் பரந்து விரிந்த அளவில் மேற்கொண்டதாக குறிப்பிடுவது உண்மையல்ல. பரந்து விரிந்த அளவில் மக்கள் அவரை மொய்த்தனர். ஆனால் பெரியார் பொய்த்து விட்டார்.) இன்று கோயில்களோ மடங்களோ அவற்றின் சொத்துகளோ இருந்திருக்கா. அச்சொத்துகளைக் காப்பதற்காக மடத்தடிகளுடன் ஓர் உடன்பாடு ஏற்படுவதற்கு இந்திப் போராட்டம் உதவியதா? அன்றைய நிலையில் வேளாளர்களையும் மடத்தலைவர்களையும் அவர் ஏன் அழைத்தார். நீதிக்கட்சி அப்போது வலிமை குன்றியிருந்ததா? அல்லது முதல்வர் பதவியேற்ற ஆச்சாரியாருக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கினாரா?
பெரியார் - ஆச்சாரியார் இருவரும் தங்கள் பொதுவாழ்வின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை அரசியலில் எதிரிகளாகவும் தனிவாழ்வில் நண்பர்களாகவும் இருந்துவந்துள்ளதின் கமுக்கம் என்ன? அவர்களின் தனிமனிதப் போட்டிக்காகவே திராவிடர் இயக்கத்தை அல்லது இந்தி எதிர்ப்பைத் தொடங்கினாரா? (இந்தி எதிர்ப்பில் உண்மையான தமிழ் மொழிப்பற்று அல்லது இந்தி மீது வெறுப்பினால் அவர் ஈடுபடவில்லை என்பதற்கு குணாவின் திராவிடத்தால் வீழ்ந்தோம் ஏராளமான சான்றுகளைக் காட்டுகிறது.) வெள்ளாளர்களைப் பொறுத்தவரையில் அதுவும் மடத்தலைவர்களைப் பொறுத்தவரையில் அவர் மிகப் பரிவுடன் நடந்து கொண்டார். குன்றக்குடியார் மடத்தலைவர்களுக்கும் அவருக்கும் பாலமாகச் செயற்பட்டார்.
திராவிட இயக்கம் வெள்ளாளர் இயக்கம் அல்ல என்று வெங்கடாசலபதி கூறுவது உண்மையில்லை. பெரியார் இறுதிவரை வெள்ளாளர்களுக்கு அரண் செய்திருக்கிறார். உயிர்க் காப்பீட்டுக் கழகம், வங்கிகள், பல்கலைக் கழகங்கள் என்று அரசுசார் நிறுவனங்களில் பார்ப்பனர்களுடன் வெள்ளாளர்கள் நுழைந்தபோது இவர் கண்டுகொள்ளவில்லை, வெளியில் சொல்லவில்லை. தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் இன்று வெள்ளாளர் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறதென்றால் அது பெரியார் இட்ட பிச்சை. இதற்குப் பார்ப்பனர் எதிர்ப்பு, திராவிடக் கோட்பாடு என்ற மூடுதிரைகள் பயன்பட்டன. வெள்ளாளர்கள் ஒரு பெரும் கண்டத்திலிருந்து பெரியார் உதவியால் தப்பிவிட்டார்கள்.
இனி நாடார்களுக்கு வருவோம்.
நாயக்கர்கள் மதுரையில் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் தமிழகத்தின் தென்கிழக்கு மூலையில் ஒதுங்கிய மக்கள் நாடார்கள். தேரிகளாயமைந்திருந்து வளமற்றிருந்த அப்பகுதியில் அவர்கள் பெரும்பான்மையராயிருந்தனர். அரியநாதனால் பாளையங்களாக்கப்படுவதற்கு முன்பு பாண்டிய நாட்டு உள்ளாட்சிப் பிரிவுகளாகிய நாடுகளின் ஆட்சித் தலைவர் பட்டமான நாடான் எனும் பட்டத்தை அவர்கள் தாங்கிக் கொண்டார்கள். வளமற்ற அம்மண்ணில் வளர்ந்திருந்த பனையிலிருந்து பதனீர் இறக்கி அதிலிருந்து கருப்புக்கட்டி செய்தனர். [பனைமரம் முதலில் கள்ளெடுக்கவே பயன்பட்டது. கரும்பிலிருந்து செய்யப்பட்ட வெல்லத்துக்கே கருப்புக்கட்டி என்ற பெயர் பொருந்துகிறது. பனை ஏறிக் கள்ளிறக்கிய மக்களைக் கட்குடிகள் என்று கழக (சங்க) இலக்கியங்கள் குறிப்பதாகக் கூறுவர். நாடார்களின் வரலாற்றைக் கூறும் நாட்டுப்புறப் பாட்டு வடிவிலான வலங்கையர் கதை ஒரு முனிவர் பனை ஏறும் ஒருவன் வீட்டில் தான் உண்ட சோற்றுக்குக் கைம்மாறாக இரும்பு அரிவாளைக் கொண்டு வரச்செய்து அதில் ஒரு பச்சிலைச் சாற்றைத் தடவி அதனை அடுப்புத் தீயில் சொருகி வைக்குமாறு கூறியதாகவும் அவ்விரும்பு தங்கமாகிவிட்டதாகவும் தொடர்ந்து அப்பனையேறி கிடைத்த இரும்பையெல்லாம் அதே முறையைக் கையாண்டு தங்கம் ஆக்கி பெரும் செல்வானாகி ஆட்சியமைத்ததாக்கவும் கூறுகிறது. பதனீரை அடுப்பில் வைத்துக் காய்த்துக் கருப்பட்டியாக்கும் தொழில்நுட்பம் தான் இக்கதையில் குறியீடாகக் கூறப்பட்டிருக்கும் என்று கருதுகிறேன். இது எப்போது நிகழ்ந்திருக்கும் என்று தெரியவில்லை. கள்ளர் என்பதற்கும் கள்ளுக்கும் உள்ள தொடர்பும் கருப்பணசாமி என்பதற்கும் கரும்பனைக்கும் உள்ள தொடர்பும் ஆராயத் தக்கன.]
கருப்பட்டி மற்றும் பனைபடு பொருட்களை விலையாக்காமல் அவர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாது. எனவே வாணிகத்துக்கு வெளியே செல்ல வேண்டும். வழியில் மறவர்களின் தொல்லையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருந்தது. எனவே பெரும் எண்ணிக்கையிலான மாட்டுவண்டிகளைச் சேர்த்துச் செல்ல வேண்டியிருந்தது. சிறுவனாக இருக்கும்போது குமரி மாவட்டத்திலிருந்து நெல்லை மாவட்டத்துக்கு வரும் இத்தகைய வண்டித் தொகுதிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இவ்வாறு புறப்பட்ட வண்டிகள் தங்கி ஓய்வு கொள்ள அமைந்த வண்டிப் பேட்டைகளிலிருந்து நாடார்கள் பரந்தனர் என்ற செய்தியை ஆர்டுகிரவ்ன் நூலில் படித்திருப்பீர்கள். மோசே பொன்னையா எழுதிய நாடார் வரலாற்றில் இப்பேட்டைகள் புத்தர்களால் நிறுவப்பட்டன என்கிறார்.
நெல்லை குமரி மாவட்ட நாடார்களின் சிறப்பு என்னவென்றால் அவர்கள் பிற பகுதியினரைப்போல் பிற சாதியினரிடையில் அடைபட்டுக் கிடக்கவில்லை. தாங்களே பெரும்பான்மையினராய் இருந்ததால் தாழ்வுணர்ச்சியின்றி நிமிர்ந்து நின்றனர். அதுவே அவர்கள் சென்று படிந்த இடங்களிலும் அவர்களது வளர்ச்சிக்குத் துணையாயமைந்தது. இருப்பினும் அரசின் கெடுபிடியால் மேற்சாதியினரின் கொடுங்கோன்மையைத் தாங்க வேண்டித்தான் இருந்தது.
பொருளியல் ஓரளவு மேன்மையடைந்தும் குமுகியல் இழிவுகளை எதிர்த்துப் போராடுதல் இயல்பு. ஆனால் நாடார் மகாசன சங்கத்தின் அமைப்புக் கூட்டத்தில் எடுத்தக் கொண்ட பொருட்கள் அனைத்துமே பொருளியல் மேம்பாடு கருதியவை. தலைவர் உரையில்தான் கல்வி வளர்ச்சியின் மூலம் அரசுப் பணிகளிலும், வழக்கறிஞர் போன்ற தொழில்களிலும் காலூன்ற வேண்டும் என்ற நோக்கம் வெளிப்படுகிறது.
அதேபோல் தியாகராயச் செட்டியார் முழு அறிக்கையையும் படிக்க முடியவில்லை. ஆனால் நீதிக்கட்சி ஆட்சியின் அருஞ்செயல்கள் என்ற பட்டியலில் தமிழகத்தில் பல தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டது ஒரு வரலாற்று நூலில்(தமிழக வரலாறும் பண்பாடும், பேரா.வே.தி.செல்லம்) குறிப்பிடப்பட்டுள்ளது. திராவிட இயக்க வரலாறு எழுதுவோரில் எவரும் பொருளியல் பகுதிக்கு உரிய இடத்தை அளிப்பதில்லை என்ற உண்மை இன்றைய தமிழகத்தின் பொருளியல் பின்னடைவுக்கும் வேலையின்மைக்கும் இளைஞரும் முதியோரும் படித்தோரும் படியாதோரும் வேலை தேடி நாட்டை விட்டோடும் நிலைமைக்கும் அடிப்படைக் காரணமாகும். நீங்களும் அதற்கு விதிவிலக்கல்ல.
(தொடரும்)