16.12.07

தமிழ்த் தேசியம் ... 12

மனந்திறந்து... 2

குமரி மாவட்டத்தில் எங்கள் ஊர் வட்டாரத்தில் திராவிடர் கழகத்தின் முன்னோடிகளில் என் தந்தையும் ஒருவர். அதனால் ஏறக்குறைய பத்து ஆண்டு அகவையிலிருந்தே (1949) விடுதலை, திராவிட நாடு போன்ற இதழ்களையும் பின்னால் தோன்றிய இதழ்களையும் பல நூல்களையும் படிக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. அவற்றில் வெளிப்பட்ட குறிக்கோள் என்னை இறுகப் பற்றிக்கொண்டது. சாதி, சமய வேறுபாடுகளற்ற, எவ்வித அடிமைத்தனத்துக்கும் ஆட்படாத, தாய் மொழியைப் பேணுகின்ற, பகுத்தறிவுள்ள - அதாவது அறிவியல் அணுகலைக் கொண்ட ஒரு தமிழ்க் குமுகம், அதே போன்று மாந்தநேயம் மிக்க ஓர் உலகம் ஆகியவற்றை உருவாக்குவது என்பது தான் அந்தக் குறிக்கோள். அதை எய்துவதற்காக திராவிட இயக்கம் முன்வைத்த கோட்பாடுகள் மீது நம்பிக்கையும் இருந்தது. அந்தக் கோட்பாடுகளைத் தாண்டியும் சில கருத்துகள் உருவாகிக் கொண்டிருந்தன. என் தந்தை திராவிடக் கழகத்தின் கொள்கைகளைப் பொது இடங்களில் பேசி ஊரில் பலரது வெறுப்புக்கும் பகைமைக்கும் ஆளாகியிருந்தார். ஆனால் அவர் மீது மதிப்பு வைத்திருந்த ஒரு குழு இளைய தலைமுறையினரிடையில் இருந்தது. நானும் என் பருவத்து நண்பர்களிடம் இக்கருத்துகள் பற்றிய கருத்தாடல்கள் செய்வேன். அவ்வாறே பள்ளி, கல்லூரிகளிலும். ஆனால் எனக்கு இயல்பான கூச்சத்தினால் மேடையேறியதோ இயக்கங்களில் பங்கு கொண்டதோ இல்லை. பணிபுரிந்த நாட்களிலும் இதே நடைமுறை தொடர்ந்தது. அத்துடன் தமிழ், தமிழகம், தமிழகப் பண்பாடு பற்றிய நூல்களையும் செய்திகளையும் தீராத் தவிப்போடு (தாகத்தோடு) படிப்பேன். அவ்வாறு கிடைத்த பல செய்திகள் இன்று மனதில் நிலைத்து நிற்கின்றன.

1957 திருச்சி மாநாட்டில் தி.மு.க. தேர்தலில் ஈடுபட முடிவு செய்த போது சிறு உறுத்தல் இருந்தாலும் மூத்த ஒருவர் சொன்ன விளக்கம் அதனை அகற்றியது. 1962இல் திராவிட நாடு பிரிவினைக் கொள்கையைக் கைவிடுவதாக அண்ணாத்துரை அறிவித்த போது அவர் மீதும் பிறர் மீதும் இருந்த அசைக்க முடியா நம்பிக்கையில் அது அவரது அரசியல் சூழ்திறன்(ராசதந்திரம்) என்று பலரையும் போலவே நானும் மகிழ்ந்தேன். ஆச்சாரியாருடனும் அவருக்கு எதிரிகளாகக் கருதப்பட்ட பொதுமைக் கட்சிகளுடனும் 1967இல் ஒரே நேரத்தில் கூட்டணி வைத்துக்கொண்ட போதும் அதே நம்பிக்கை இருந்தது. 1961இல் சம்பத் வெளியேறும் முன் வெளிப்பட்ட முரண்பாடுகள் மூலம் இறைமறுப்புக் கோட்பாடு, ″திராவிட நாடு″ விடுதலைக் கொள்கை உட்பட இயக்கத்தின் கொள்கைகள் கைகழுவப்படுவதற்கு எதிரான இயக்கம் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும் பின்னர் அதுவே பொய்மானாகிப் போன போது அண்ணாத்துரை வகையறாவிடம் மீண்டும் நம்பிக்கை ஏற்பட்டது.

1967இல் தி.மு.க. ஆட்சி அமைத்ததும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இருமொழித் திட்டம் பற்றிய சட்டம், தமிழ்நாடு பெயர் மாற்றம், சீர்திருத்தத் திருமணங்களுக்குச் சட்ட இசைவளித்தது, பேருந்துகள் அரசுடைமையானது, மும்முனைத் திட்டம்(இன்றைய ″மனுநீதி″த் திட்டத்துக்கு முன்னோடி), பரிசுச் சீட்டுத் திட்டம், படியரிசித் திட்டம், உலகத் தமிழ் மாநாடு என்று அனைத்துச் செயற்பாடுகளும் மிகப் பெரிய அருஞ்செயல்களாகத் தோன்றின. இந்தச் செய்திகளைப் படித்து மகிழ்வதற்காகவே தினமணி நாளிதழை வாங்கிப் படிக்கத் தொடங்கினேன்.

இதே காலகட்டத்தில் அறிமுகமான பொதுப்பணித்துறைப் பொறியாளர் ஒருவர் தென்மொழி இதழ் பற்றியும் பாவாணர் பற்றியும் பெருஞ்சித்திரனார் பற்றியும் எடுத்துரைத்தார். அப்போது சோவியத்துக்கு எதிராக வளர்ந்துகொண்டிருந்த மாவோயிய இயக்கத்திலும் அவர் தொடர்பு வைத்திருந்தார். அந்த இயக்கமும் மாவோவின் நூல்களும் தடைசெய்யப்பட்டிருந்தனவாக அவர் கூறினார். ஆனால் அவர் அறை மிசை(மேசை) மீது அந்த நூல்களை அவர் அடுக்கி வைத்திருப்பார். அவர் எவ்வளவோ எடுத்துக்கூறியும் திராவிடக் கருத்துகளின் விளைவாலும் 1962 சீனப் போரின் பாதிப்பாலும் அவற்றை நான் தொடவே இல்லை.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே தென்மொழியையும் பாவாணரின் நூல்களையும் படிக்கத் தொடங்கினேன். அவற்றைப் படிக்கப் படிக்க என்னுள் உருவான கருத்துகள் தாம், ″ஆரியர்″ என்று ஒரு ″மனித இனம்″ உலகில் இருந்ததே இல்லை என்பதும் சமற்கிருதம் ஒரு தனி மொழி அல்ல, தமிழிலிருந்து உருவானது தான் என்பதும் பார்ப்பனர்கள் இந்த மண்ணின் மக்கள் தாம் என்பதும். இதே காலகட்டத்தில் படித்த, அ.கி. நாயுடு என்பார் எழுதிய தொல்காப்பியர் காட்டும் தமிழர் சமுதாயம் என்ற நூலின் கருத்துகள் இணைந்து கடவுள்கள் வெறும் கற்பனைகள் அல்ல, உயிர் வாழ்ந்த பெருமக்களின் வழிபாட்டிலிருந்து தோன்றியவை தாம் என்ற கருத்து கருக்கொண்டது.

அண்ணாத்துரை இறந்து கருணாநிதி தலைமையேற்றுப் பதவிச் சண்டைகள் தொடங்கிய போதும் ம.கோ.இரா.வுக்கும் கருணாநிதிக்கும் உருவான பூசலின் போதும் இவர்களைப் பற்றிய தெளிவுகள் உருவாகத் தொடங்கின. அதே காலகட்டத்தில் நடுவண் அரசின் ஏற்றுமதி - இறக்குமதிச் செயற்பாடுகளை அலசிப் பார்க்கையில் சட்டத்தைக் கையிலெடுத்துக்கொண்ட ஒரு கடத்தல் கும்பலாகவே நடுவணரசு தோன்றியது. கடத்தல்காரர்களுக்கும் அரசுக்கும் இடையிலான மோதல் வெறும் தொழிற்போட்டிதான் என்பதும் உறுதியாகத் தெரிந்தது. அது போலவே மாநில அரசின் மக்கள் நலத் திட்டங்களும் வளர்ச்சித் திட்டங்களும் கட்டுப்பாடுகளும் ஊழலை நோக்கியவை என்ற ஐயப்பாடும் உறுதி பெற்று வந்தது. இந்த மனநிலையில் மார்க்சு, ஏங்கெல்சு, லெனின் போன்றோரின் எழுத்துகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அரைகுறையாக உருவாகியிருந்த பல கருத்துகள் இப்போது முழு வடிவம் பெற்றன; அவற்றுக்குக் கோட்பாட்டு வடிவமும் கிடைத்தது. இதே காலகட்டத்தில் தான் பெருஞ்சித்திரனார் பரிந்துரையின் பேரில் பாவாணரால் உலகத் தமிழ்க் கழக (உ..த.க.) நெல்லை மாவட்ட அமைப்பாளராக அமர்த்தப்பட்டேன். இது 1970களின் தொடக்கத்தில் நடைபெற்றது. இது தான் என் முதன் முதலான அமைப்பு சார்ந்த நடவடிக்கையாகும். இருப்பினும் கருணாநிதி பற்றி பெருஞ்சித்திரனார் வெளியிட்டு வந்த முன்னுக்குப் பின் முரணான கருத்துகளினால் அவரோடு சிறு கருத்து மோதலும் ஏற்பட்டது.

இத்தொடர்நிலைகளால் தமிழகத்தின் குமுகியல் வரலாற்றை நான் அறிந்த தமிழ் இலக்கியங்களிலிருந்தும் பிற நூல்களிலிருந்தும் குமுக நடைமுறைகளிலிருந்தும் மார்க்சியக் கோட்பாட்டினடிப்படையிலும் ஏங்கெல்சின் குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலின் கருத்துகளின் அடிப்படையிலும் எழுத எண்ணினேன். அப்பணி ஏறக்குறைய 1979 அளவில் முடிவுற்றது. பஃறுளி முதல் வையை வரை என்று பெயரிடப்பட்ட அந்த நூலை அச்சிட்டு வெளியிடச் சிலரை அணுகியதில் எந்தப் பயனும் கிட்டவில்லை. குமரிக் கண்டத்திலிருந்து தமிழர்களின் குமுக வரலாற்றை தொடங்கும் இந்த நூலின் அடிப்படைக் கருத்து ஆரியர் என்றொரு ″இனம்″ உலகில் என்றும் வாழ்ந்ததில்லை என்பதாகும். இந்நிலையில் பெரியாற்று அணையில் பணியாற்றும் போது (1980-81) உடன் பணியாற்றிய இந்திய மா.லெ. (மக்கள் போர்க்குழு) கட்சியைச் சேர்ந்த ஒருவர் மூலம் மதுரையிலுள்ள தோழர்கள் சிலரின் தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் தமிழ்த் தேசிய விடுதலையைப் ″பாட்டாளியப் புரட்சி″ மூலம் எய்தப் பாடுபட்டுக்கொண்டிருந்தனர். ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தப்படாத(இது பாதுகாப்புக்காக) பல குழுக்களாக இவர்கள் இயங்கினர். அவர்கள் ஒரு கட்டத்தில் தமிழகத்தின் ″புரட்சிகரப் பாட்டாளியர்″ எவரென்பதைக் கண்டறியத் திணறிக்கொண்டிருந்தனர். பொதுமைக் கட்சி அறிக்கையைப் படித்திருந்த நான் மார்க்சின் மூலதனம் முதல் மடலத்தைப் படித்த போது நம் நாட்டை இன்றைய நிலையிலிருந்து அனைத்துத் துறைகளிலும் மேம்பட்ட நிலைக்குக் கொண்டு செல்வதற்குத் தேசிய முதலாளியப் புரட்சி தான் வழி என்ற முடிவுக்கு வந்திருந்தேன்; ஏனென்றால், நம் நாடு பொருளியலிலும் குமுக அமைப்பிலும் நிலக்கிழமைக் கட்டத்தில் உள்ளது. நிலகிழமைக்குப் பொருந்தாத வலிமையான நடுவண் அரசு இருப்பதற்குக் காரணம் அது வல்லரசுகளால் வழிநடத்தப்படுவதாகும். உலக வாணிகக் குழுக்களின் ஏவலாளாகிய அமெரிக்கா போன்றவற்றின் பின்னணி இல்லை என்றால் இந்தியா வெள்ளையர் வருகைக்கு முன்பிருந்தது போல் என்றோ எண்ணற்ற சிற்றரசுகளாகச் சிதறிப் போயிருக்கும். அந்த நிலக்கிழமைப் பொருளியலை அழித்து முதலாளியப் பொருளியல் உருவானால்தான் பிற துறைகளிலும் மேம்பாடு ஏற்படும். மார்க்சு கூறும் பாட்டாளி முதலாளியக் குமுகத்தில் தான் உருவாவான். அவனை இண்டு இடுக்குகளில் தேட வேண்டியதில்லை; அவனே பேருருக் கொண்டு முழுக் குமுகத்தையும் ஈர்த்து நிற்பான். இந்தக் கருத்தை முன்வைத்த போது அவர்களால் கோட்பாட்டடிப்படையில் மறுக்க முடியவில்லை. அதே நேரத்தில் தோழர்களிடையில் அவர்களே ஊட்டி வைத்திருந்த ″பாட்டாளியக் கோட்பாட்டை″ உடைக்கவும் முடியவில்லை. குழுவினரில் மிகப் பெரும்பாலோரும் திராவிட இயக்கத்திலிருந்து வந்திருந்ததால் ஒதுக்கீடு, பார்ப்பனர் எதிர்ப்பு என்ற நிலையில் வேறு உறைந்துநின்றனர். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று எமக்கு ஆணையிடு என்று கேட்டு மிரட்டும் பூதத்தைப் போலத் தோழர்கள் கொடுத்த நெருக்கடியாலும் கோட்பாடு பற்றி முடிவெடுக்க முடியாத குழப்பத்தினாலும் அக்குழுக்களின் மூலவிசையாகச் செயற்பட்ட தோழர் மனச்சிதைவடைந்து பெரும் குடியராக மாறிய பின் அக்குழு சிதறி ஓடியது.

இத்தோழருக்கு வந்த அழைப்பின் பேரில் வெங்காலூரில் குணாவின் தமிழக ஆய்வரண் நடத்திய ″தேனீக்கள் பட்டறை″யில் கலந்து கொண்டேன். இது 1980களின் தொடக்கத்தில். அதன் மூலம் குணாவின் அறிமுகம் கிடைத்தது. பின்னர் பஃறுளி முதல் வையை வரையின் கையெழுத்துப் படியை ஒளிப்படி எடுத்து அவருக்கு விடுத்தவுடனேயே அவர் அதை அச்சிடும் பணியைத் தொடங்கினார்.

(தொடரும்)

0 மறுமொழிகள்: