25.12.07

தமிழ்த் தேசியம் ... 16

மனந்திறந்து... 6

1986வாக்கில் பொள்ளாச்சி திரு நா.மகாலிங்கம் அவர்களால் திரு.சூ.மி. தயாசு என்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த தமிழர் பண்பாடு என்ற இதழுக்கு ″ஏற்றுமதிப் பொருளியல்″ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று விடுத்தேன். அது உலகத் தமிழர் என்ற இதழில் வெளிவந்தது. அதே கட்டுரையை விரித்து நலிந்து வரும் நாட்டுப் புறம் என்ற தலைப்பில் எழுதி விடுத்தேன். அது தமிழர் பண்பாடு இதழில் தொடராக வெளிவந்தது. அதை என் சொந்தச் செலவில் நூலாக்கி த.ம.பொ.உ.க. தொடக்க விழாவில் வைத்தேன். இன்றும் அது படிப்போரின் பாராட்டுக்குரியதாக உள்ளது.

இந்த நிலையில் 1990ஆம் ஆண்டு தொடக்கத்தில் தோழர் ஓவியா என்னைத் தொடர்பு கொண்டார். அவரை 1980களின் தொடக்கத்திலிருந்தே எனக்குத் தெரியும். அப்போது அவர் தன் அன்றாடப் பாட்டுக்காகக் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. இருப்பினும் பெண்ணுரிமை எனும் குறிக்கோளில் முனைப்பான ஈடுபாடும் செயற்பாடும் கொண்டிருந்தார். பெண்களின் சிக்கலை மட்டும் தனியாகப் பிரித்தெடுத்துப் பார்ப்பதில் பயனில்லை என்று நான் அப்போது அவருக்கு எடுத்துரைத்தேன். இந்த நிலையில் அரசுப் பணி பெற்று நாகர்கோவிலிருந்து வந்து அவர் பாளையங்கோட்டையிலிருந்த என்னைச் சந்தித்தார். த.ம.பொ.உ.க. தேக்கநிலையில் இருந்ததை அறிந்து நாம் இணைந்து செயற்படலாம் என்றார். தனக்கும் தன் தோழர்களுக்கும் உலக வரலாறு பற்றி வகுப்புகள் நடத்த வேண்டுமென்றார். எனவே நான் வரலாறு பற்றி ஏற்கனவே தொகுத்து வைத்திருந்த செய்திகளோடு வேறு நூல்களையும் தேடிப் படித்து உலக வரலாற்றுக் குறிப்புகளைத் திரட்டினேன். இது உலக வரலாற்றை நான் ஓரளவு அறிந்து கொள்ள உதவியாக இருந்தது. ஞாயிறு தோறும் தொடர்ச்சியாக சில மாதங்கள் வகுப்புகள் நடந்தன. ஓவியாவும் தோழர்களும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். அந்த நிலையில் த.ம.பொ.உ.க.வுக்கு ஒரு செயல்திட்டம் வகுக்க வேண்டும் என்ற அவர் தூண்டலினால் ஒரு செயல்திட்ட வரைவு எழுதி அதைத் தோழர்கள் முன் படித்து விளக்கினேன். அதை அவர் செலவிலேயே உருட்டச்சு செய்தார். மதுரையில் பல தோழர்களைக் கூட்டி செயல்திட்ட விளக்கம் ஒன்றும் நடைபெற்றது. பெரியாற்று அணைச் சிக்கல் பற்றியும் நெசவாளர்களின் சிக்கல் பற்றியும் எள் ஏற்றுமதி பற்றியும் நான் அச்சிட்டு வழங்கிய துண்டறிக்கைகளைப் பரப்பியும் பெரியாற்று அணைச் சிக்கலை ஊர்ப்புறத்து உழவர்களிடம் எடுத்துக் செல்லும் களப்பணியிலும் இளம் தோழர்கள் ஊக்கமுடன் செயற்பட்டனர். மதுரையில் ஒரு பொதுக் கூட்டமும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் வகுப்புகளின் போது பெரியாரைப் பற்றிய சில கேள்விகளை நான் தோழர்களுடன் பகிர்ந்து கொண்டேன். அது தோழர் ஓவியாவுக்கு ஆத்திரமூட்டியது. ஆனால் அது எவ்வளவு ஆழமானது என்பதை அப்போது நான் உணரவில்லை. இந்தக் கட்டத்தில் தான் வி.பி.சிங் மண்டல் ஆணையப் பரிந்துரைகளை நடுவணரசு ஏற்றுக்கொண்டதாக அறிவித்து, பா.ச.க.வினர் மாணவர்களைத் திரட்டி அதற்கு எதிராகத் கிளர்ச்சிகள் நடைபெற்றன. இந்தச் சிக்கலில் ஒரு முடிவு தெரியும் வரை தன்னால் த.ம.பொ.உ.க. செயற்பாடுகளில் பங்கேற்க இயலாது என்று தோழர் ஓவியா கூறிவிட்டார். மீண்டும் அவர் தொடர்பு கொள்ளவே இல்லை. மதுரையிலுள்ள இளம் தோழர்களைப் பலமுறை சென்று தொடர்பு கொண்ட போது அவர்களும் இயங்கவில்லை.

தோழர் ஒவியா நல்ல அறிவாற்றலுள்ளவர்; சிந்தனைத் தெளிவு மிக்கவர்; தான் நினைப்பதை எந்த ஒளிவும் மறைவுமின்றி அஞ்சாது எடுத்துரைக்கும் இயல்புடையவர்; தனது குறிக்கோளில் நிலையாகவும் உறுதியாகவும் நிற்பவர்; தனது கருத்துகளைச் சரியான சொற்களில் எடுத்துரைக்கும் சொல்லாற்றலும் சொற்பொழிவாற்றலும் எழுத்தாற்றலும் மிக்கவர்; செயலாற்றலிலும் சிறந்தவர்; நல்ல ஆள்வினைத் திறனும் ஆளுமைச் சிறப்பும் உள்ளவர்; நானறிந்த வரை அவர் நோர்மையானவர் என்பதே என் கணிப்பு. அத்தகைய தெளிவான சிந்தனையுடைவர் பெரியாரைப் பற்றிய சிறு மாற்றுக் கருத்தைக் கூடப் பொறுத்துக் கொள்ளாதவராக இருப்பதும் பெரியாரின் சிந்தனைகளைத் தாண்டியும் சிந்திப்பவராயிருந்தும் பெரியாரைத் தாண்டி எவரும் சிந்திக்க முடியாது என்று நம்புவதும் விந்தையே. மனிதர்களைப் பற்றிய எத்தனையோ விந்தைகளில் இதுவும் ஒன்று என்றுதான் கொள்ளவேண்டியுள்ளது. இட ஒதுக்கீடு பற்றிய என் கருத்து, அதாவது அது சாதி ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கு ஒரு தற்காலிகத்தீர்வே, அதற்கு மாற்று வழிகளைக் காணாமல் அதையே பற்றிக் கொண்டிருப்பது தவறு என்பது, அவரை விலக்கியிருக்கும் என்று தோன்றவில்லை, ஏனென்றால் செயல்திட்டத்தில் கூறப்பட்டிருந்த கல்வித் திட்டத்தை அவர் மிகவும் பாராட்டினார். தொழிற்பயிற்சியோடியைந்ததாகவும் கல்வி, வேலை, கல்வி, வேலை என்று படிப்படியாக உயர்கல்விக்கு மாறவும் வேண்டும் என்பதைச் சாதிகளின் அடிப்படையையே தகர்க்கும் ஓர் அருமையான திட்டம் என்று அவர் புகழ்ந்தார். பெரியாரைப் பற்றிய என் கருத்துகள்தாம் அவரை விலக்கின என்பது இறுதியில் தெளிவாகிறது. அவர் விலகிக் கொண்டது எமது இயக்கத்துக்குப் பெரும் பின்னடைவு என்று நான் கருதினாலும் சரி என்று நான் கருதும் ஒரு கருத்தை, அது தவறு என்று நான் கைவிடுவதற்குத் தகுந்த அடிப்படையின்றி என்னால் கைவிடவும் முடியாது.

தோழர் ஓவியா தனது பெண் விடுதலை இயக்கப் பணிகளைத் தொடர்ந்தார். நாகர்கோவிலில் அரசுப் பேருந்து ஓட்டுநராக வசந்தகுமாரி என்ற பெண் அமர்த்தப்பட்டது அவரது நீடித்த உழைப்பின் வெற்றியாகும். ஆனால் அமர்த்தம் பெற்ற பெண் ஓவியாவுக்கு நன்றி கூறாமல் அப்போதைய முதலமைச்சர் செயலலிதாவுக்கு நன்றி கூறியது இவரது மனதில் வடுவேற்படுத்தியது. செயலலிதாவை வெறுப்பவர் அவர். கருணாநிநி திராவிட மரபின் ஒப்பற்ற வழித்தோன்றல் என்று அவர் கருதினார்(இன்று எப்படியோ?). இன்று எந்தச் செயற்பாடுமின்றி அவரது பெண் விடுதலை இயக்கம் தேங்கி நிற்கிறது.

பெண் விடுதலை என்ற கோணத்தில் மிக முனைப்பான கருத்துகளைப் பெரியார் கூறியுள்ளார். தாலி மறுப்பு போன்ற சில அடையாள நடவடிக்கைகளை இயக்கத் தோழர்களின் திருமணங்களில் செய்தும் உள்ளார். ஆனால் அவை வெறும் அடையாளங்களே. கட்சித் தோழர்களில் பெண் விடுதலையைப் பெரிதாக எடுத்துக் கொண்டவர் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இல்லை. உண்மையான பெண் விடுதலைக்குத் தேவையான பொருளியல் அடிப்படை பற்றி அவர் எதுவும் கூறியதாகத் தெரியவில்லை. திருமணம் வேண்டாம், பிள்ளைகளும் வேண்டாம். பிள்ளைகளைப் பெற்று மனிதன் என்ன கண்டான் என்ற சலிப்பாக அவரது பெண் விடுதலைக் கருத்து நின்றுவிட்டது. தேவதாசி முறை ஒழிப்பில் அவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் பெண் விடுதலையை நோக்கி உண்மையாகவே நடைபோடுவோர் பார்ப்பனப் பெண்கள் தாம். பெண் கல்வி, பெண் வேலைக்குச் சென்று தன் காலில் நின்று நல்வாழ்வு வாழ்தல் என்று வளர்ந்துவருவோர் அவர்களே. இதற்காக இந்த நூற்றாண்டின் முதற்பாதியில் பார்ப்பனத் தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் போற்றத்தக்கன. நயன்மைக் கட்சி காலம் தொட்டு தங்கள் மீது நடைபெற்று வரும் தாக்குதலால் சொத்துகளை விற்று நகர்ப்புறங்களுக்கு வந்து பல்வேறு தொழில்களில் ஈடுபட்டும் அரசிலும் தனியார் துறைகளிலும் ஆணும் பெண்ணும் பணியாற்றிப் பெண்களின் பொருளியல் தற்சார்பு வளர்ந்து நிற்பதும் அவர்களிடையே தான்.

ஆனால் அதற்கு எதிராக நிற்பது பார்ப்பனர்களிடம் இறுகிக் கிடக்கும் பார்ப்பன - வெள்ளாளப் பண்பாடு. அதனைத் தகர்த்து முன்னேறுவதற்குத் தடையாயிருப்பது பிற மக்களின் மீது இந்தப் பண்பாட்டு அடிப்படையில் தமக்கிருக்கும் ஆதிக்கம் தகர்ந்து விடுமோ என்ற அச்சம். இந்த முட்டுக்கட்டை நிலை மாற வேண்டுமாயின் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்புப் பெண்களும் தம் காலில் நிற்கும் பொருளியல் வளர்ச்சி பெற வேண்டும். ஊர்ப்புறங்கள் கலைந்து அனைவரும் கலந்து வாழும் புதிய குடியிருப்புகள் தோன்ற வேண்டும். இந்த நிகழ்முறை சிறிது சிறிதாக நடைபெற்றாலும் அது வளர்ச்சியின் விளைவானதல்ல. வேளாண்மை, மற்றும் ஊர்ப்புறத் தொழில்களின் வீழ்ச்சியால் நடைபெறுவதாகும். அதோடு இதற்கு எதிரான நடைமுறைகள் மிக முனைப்பாக நடந்தேறுகின்றன. ″திராவிட மரபின் ஒப்பற்ற வழித் தோன்றலான″ கருணாநிதி தொடங்கி வைத்து வளர்ந்து வரும் இலவய வீட்டுமனைப் பட்டாத் திட்டங்கள், நம் பொதுமைப் ″புரட்சியாளரின்″ மிகப்பெரும் ஒத்துழைப்புடன் நகரங்களில் பிற சாதி மக்களுடன் கலந்து வாழ்ந்த எத்தனையோ மக்களைச் சாதி வாரியாக அமைக்கப்பட்ட குடியிருப்புகளில் அமர்த்தியுள்ளது. ″பெரியார் சமத்துவபுரக் குடியிருப்புகள்(எவ்வளவு பொருத்தமான பெயர்!) சாதி வாரியாகத் தொகுக்கப்பட்ட புதிய வீடுகளில் மக்களைக் குடியமர்த்தி கலைந்து வரும் ஊர்ப்புறங்களை மீட்டமைத்துள்ளது. தனியார் மனைப்பிரிவுகளில் வீடுகளமைத்து அனைவரும் கலந்து வாழும் நடைமுறையை முறியடிப்பதாகவும் இது உள்ளது. (இது திட்டமிடாமல் நடைபெறுகிறது என்று நம்புகிறீர்களா?) சாதி மீண்டும் இறுக்கமாவதற்கு வேறு துணைக்காரணி தேவையில்லை. சாதி இறுக்கமடையும் போது பெண்ணடிமைத்தனத்தின் கடுமையும் மிகும் என்பதில் ஐயமில்லை. அத்துடன் நடுத்தர மக்களிடையில் விரைந்து பரவி வேரூன்றி வரும் பார்ப்பன-வெள்ளாளப் பண்பாடு அவர்களிடமிருந்து நேரடியாகவும் திரைப்படம், இதழ்கள், தொலைக்காட்சிகள் மூலமாக அடித்தள மக்களிடையிலும் பரவி அங்கு ஏற்கனவே பெண்களுக்கு இருக்கும் ஒரே பெண்ணுரிமையாகிய மண விலக்கு - மறுமணம், கைம்பெண் மறுமணம் ஆகியவற்றையும் அடித்துத் தகர்த்து வருகிறது. நாட்டின் பொருளியல் நடவடிக்கைகளை அயலவர் கைகளில் ஒப்படைப்பதிலும் ″திராவிட மரபின் ஒப்பற்ற வழித் தோன்றலின்″ பங்கு சிறிதல்ல. ஆகவே இன்றைய நிலையில் அடிப்படை மக்களின் பொருளியல் அடித்தளம் வலிமை பெறுவதும் அதன் மூலம் பெண்களின் தற்சார்பு நிலை மேம்படுவதும் நினைத்துப்பார்க்க முடியாதவை. எனவே உண்மையான பெண் விடுதலை கைகூட வேண்டுமாயின் மக்களின் பொருளியல் உரிமைக்காகப் போராடுவது தவிர வேறு வழியில்லை.

இந்தக் கட்டத்தில் 1980 முதல் 85க்குள் நடைபெற்ற சில நிகழ்ச்சிகளையும் குறிப்பிட வேண்டும். எழுத்தாளர் பொன்னீலன் ஒருமுறை நெல்லை மாவட்டத்திலுள்ள ஓரிடத்திலிருந்து இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் குமரி மாவட்டத்தில் 3 வெவ்வேறிடங்களில் குடியேறிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தாங்கள் அதுவரை சார்ந்திருந்த சாதியல்லாத வேறு மூன்று சாதிகளாக வாழ்ந்துவருவதை எடுத்துக் கூறி சாதி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்றார். நான் அதை அடிப்படையாகவும் எனக்குக் கிடைத்த வேறு சில தடயங்களையும் வைத்துப் பார்த்ததில் மக்களின் இடப்பெயர்ச்சியில் போர்கள் முகாமையான பங்கேற்றிருப்பதையும் அதில் சாதி மாற்றங்களும் புதிய சாதி உருவாக்கங்களும் நிகழ்ந்திருப்பதையும் உணர்ந்தேன். எனவே இந்த மாற்றங்களையும் உருவாக்கங்களையும் தடம்பிடித்தால் சாதி என்பது வெறும் மாயை என்பதுடன் அதன் பின்னணியிலுள்ள அரசியல் ஆதிக்கம் மற்றும் வன்முறைக் காரணிகளை வெளிப்படுத்தி மக்களுக்குக் காட்டலாம் என்ற நோக்கத்துடன் தமிழகச் சமூக வரலாறு-வினாப்படிவமும் வழிகாட்டிக் குறிப்புகளும் என்ற நூலை எழுதினேன். இது ஒரு நீண்ட வினாப்பட்டியலைக் கொண்டது. இந்த வினாப்பட்டியலின் அடிப்படையில் கள ஆய்வு செய்வதற்காக தமிழகச் சமூக வரலாற்றுக் கழகம் (தசவகம்) என்ற அமைப்பையும் உருவாக்கினேன். இந்த அமைப்பை உருவாக்குவதில் புலவர் கு.பச்சைமால் முதன்மைப் பங்கேற்றுச் சிறப்பாகப் பணியாற்றினார். திருவாளர்கள் சுடலை.செண்பகப்பெருமாள், ஆபிரகாம் லிங்கன், கேசவன் தம்பி ஆகியோர் நல்ல ஒத்துழைப்புத் தந்தனர். இருப்பினும், பல கூட்டங்கள் நடத்தப்பட்டாலும் பல்வேறு இயலாமைகள் காரணமாக கள ஆய்வு எதுவும் செய்ய இயலாமல் அந்த அமைப்பு முடங்கிப் போய்விட்டது. இந்த வினாப்படிவம் நூலை உருவாக்குவதில் அறிவுரைகள் கூறி உதவியதிலும் மாநிலத் தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பின் மூலம் வெளியிடுவதிலும் பேரா.தே.லூர்து, பேரா.வே.மாணிக்கம், நண்பர் நா.இராமச்சந்திரன் ஆகியோர் உதவியும் ஒத்துழைப்பும் நல்கினர். குணாவும் தொடக்கத்தில் 12 பக்கங்களைக் கொண்ட ஒரு வினாப்பட்டியலை அச்சிட்டுத்தந்து ஊக்கினார். இறுதியில் இந்த வினாப்படிவங்கள், ″குமுகப் பணிக்காக″ மக்களைப் பற்றிய செய்திகளைத் திரட்டுவது என்ற பெயரில் கிறித்துவ நிறுவனங்கள் செய்திகளைத் திரட்டி அயல்நாடுகளுக்கு அளிப்பதற்குத்தான் பயன்பட்டன. இது போன்ற செய்தி திரட்டல், நூலாக்கல், பதிவு செய்தல் பணிகள் நம் நாட்டுக்கு எதிராகப் பயன்படாமல் நமக்கே பயன்பட வேண்டுமாயின் ஒரு வலுவான மக்களியக்கத்தின் பின்னணி தேவை என்பது எனக்குத் தெரிந்திருந்ததுதான். ஆனால் அதற்கு நான் மேற்கொண்ட முயற்சிகள்தாம் பயனற்றுக் கைநழுவிப் போய்க்கொண்டிருந்தனவே!


(தொடரும்)

0 மறுமொழிகள்: