30.12.07

தமிழ்த் தேசியம் ... 19

மனந்திறந்து... 9

பொரியாரும் ஆச்சாரியாரும் முறையே ஈரோடையிலும் சேலத்திலும் பிறந்தவர்கள். இருவரும் ஏறக்குறைய சம அகவையினர். (ஆச்சாரியார் பெரியாரை விட ஓராண்டு மூத்தவர்). ஒரே கட்சியில் (பேரவை) பணியாற்றியுள்ளனர். இருவரும் அவரவர் பகுதி நகரவைகளில் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றியுள்ளனர். இறுதிவரை பொதுவாழ்வில் எதிரிகளாகக் காட்சியளித்தவர்கள் தனிவாழ்வில் நண்பர்களாக வாழ்ந்தனர்.

இந்த உண்மைகளிலிருந்து நமக்குத் தோன்றுவதென்னவென்றால் ஏதோவொரு சூழ்நிலையில் இந்த இரு ″நண்பர்களும்″ ஒருவரையொருவர் வீழ்த்திக் காட்டுவதாகச் சூளுரைத்து(பந்தயம் போட்டு)க் களத்திலிறங்கியிருக்கிறார்கள். தனிப்பட்ட போட்டி சாதி அடிப்படையில் வெளிப்பட்டதா சாதி அடிப்படையில் ஏற்பட்ட போட்டி தனிப்பட்ட போட்டியாக மாறியதா என்று பிரித்தறிவது கடினம். ஏனென்றால் அப்போது பேரவைக் கட்சியில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் மிகுந்திருந்தது.

பேரவைக் கட்சிக்கு வெளியே உருவாகி செல்வாக்குப் பெற்றிருந்த பார்ப்பனர்க்கு எதிரான நயன்மைக்கட்சி முன்வைத்த இட ஒதுக்கீட்டைப் பேரவைக் கட்சியினுள்ளும் கொண்டுவரப் பெரியார் முயன்றார். பார்ப்பனர்களும் அவர்களது ஆதரவாளர்களும் தீவிரமாக எதிர்த்தனர். பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிராக உருவான நயன்மைக் கட்சியில், பார்ப்பனர் தவிர்த்த பிற ஆதிக்கச் சாதிகளின் ஒடுக்குமுறைக்கு எதிராகச் செயற்பட்ட நாடார் மகாசன சங்கம் போன்றவற்றின் பங்கும் இருந்தது. இவையனைத்தும் சேர்ந்து பெரியாருக்கு ஒரு வளமான வாய்ப்பு இருப்பதைக் காட்டின. எனவே பேரவைக் கட்சியிலிருந்து வெளியேறித் தன்மான இயக்கத்தைத் தொடங்கினார். நயன்மைக் கட்சி அதனுடன் ஒத்துச் செயற்பட்டது. பல்வேறு ஒடுக்குதல்களுக்கு உள்ளான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினர் பார்ப்பனர் எதிர்ப்பு என்பதனைச் சாதிய எதிர்ப்பு, சாதி ஒழிப்பு என்று விரித்துப் பொருள் கொண்டனர். ஆனால் பெரியாரின் நோக்கம் பார்ப்பனர் எதிர்ப்பு என்ற எல்லையைத் தாண்டவேயில்லை என்ற உண்மையை வரலாறு நமக்குக் காட்டுகிறது. குமுகம் தலைவனை உருவாக்குகிறது என்ற உண்மைக்குச் சான்றாகப் பெரியார் நிற்கிறார். அத்தலைவன் நேர்மையாகச் செயல்பட்டால் அக்குமுகம் மேம்படும்; ஏமாற்றினால், அதாவது மக்களுக்குத் தெரியாத ஒரு குறிக்கோளை அல்லது நோக்கத்தை அத்தலைவன் தன் மனதுக்குள் மறைந்து வைத்துக்கொண்டு இயக்கத்தை அதற்குள் முடக்கினால் அக்குமுகம் சிதையும். காந்தியும் பெரியாரும் இவ்வகையில்தாம் செயற்பட்டுள்ளனர். எனவே தான் இந்திய நாடு ஆங்கிலர் வெளியேறுவதற்கு முன்பிருந்ததைவிடக் கூடுதலான வெளிச்சுரண்டலுக்கு ஆளாகியுள்ளது; தமிழ்க் குமுகம் பெரியாருக்கு முன்பிருந்தை விடக் கூடுதலாக மக்களிடையில் பிளவையும் பகைமையையும் கண்டுள்ளது. காந்தியையும் பெரியாரையும் நேராகப் பார்க்க வாய்ப்பில்லாத தொண்டர்கள் கூட அத்தலைவர்கள் தம் மனங்களுக்குள் மறைத்துவைத்திருந்த எல்லைகளையும் மீறிச் சாதி ஒழிப்பு, மக்கள் பணி ஆகிய களங்களில் இறங்கித் தங்களைத் தேய்த்து அழித்துக்கொண்டுள்ளனர். ஆனால் இவ்விரண்டு தலைவர்களின் இரண்டகத்தால் அம்மக்களின் ஈகம் வீணாகிப்போயிற்று.

ஆச்சாரியாருடனான போட்டியில் ஒரு நல்வாய்ப்பைப் பெரியாருக்கு ஏற்படுத்தித் தந்தது இந்திப் போராட்டமாகும். அதைப் பயன்படுத்திக்கொண்டு ஆச்சாரியாருக்கு நெருக்கடி கொடுக்கவும் உட்கட்சித் தலைமைப் போட்டியில் தன் கையை வலுப்படுத்தவும் அவர் மடத்தலைவர்களையும் வெள்ளாளச் சாதி சமயச் சிந்தனையாளர்களையும் சேர்த்துக்கொண்டார். இந்தப் போராட்டத்தின் மூலம் அவருக்கு கிடைத்த இன்னொரு வாய்ப்பு தமிழகத்தில் வெடித்துக் கிளம்பிய தமிழ்த் தேசிய விடுதலை உணர்வு. இது அவரது தன்வளர்ச்சித் திட்டத்தின் அடுத்த கட்டத்தைக் காட்டியது. அதோடு அண்ணாத்துரை முன்வைத்த மும்பை மார்வாரிப் பொருளியல் ஆதிக்கக் கோட்பாடும் உதவியது. அதே வேளையில் பெரியாரும் ஆச்சாரியாரும் அவ்வப்போது சந்தித்துப் போட்டியில் யார் கை ஒங்கியிருக்கிறது என்று கருத்தாடிக் கொண்டனர்.

தமிழகத்தில் தமிழிசைக்கான போராட்டத்தின் வழியாக வெளிப்பட்ட தமிழுணர்வால் கிலியடைந்த தமிழகத்திலிருந்த ஆந்திரத்தைச் சேர்ந்த தெலுங்கர்களும் கன்னடத்தைச் சேர்ந்த கன்னடரும் தங்கள் நலன்களைக் காத்துக்கொள்ளப் பெரியாரை அணுகியதால்தான் போலும் 1944-இல் சேலம் மாநாட்டில் தமிழர் கழகம் என்ற பெயரை மறுத்து திராவிடர் கழகம் என்ற பெயரைப் பிடிவாதமாக வலியுறுத்தி வெற்றிபெற்றிருக்கிறார். தமிழிசைச் சங்கத்தைத் தொடங்கிவைத்தவர்கள் அண்ணாமலைச் செட்டியார், ஆர்.கே. சண்முகம் செட்டியார் போன்ற தமிழ் பேசும் தொழில் துறையினரும் ′கல்கி′, ஆச்சாரியார் போன்ற தமிழ் பேசும் பார்ப்பனர்களும் என்பதையும் நாம் இணைத்துப் பார்க்க வேண்டும். கருஞ்சட்டைப் படை எனும் மிரட்டல் ஆயுதம் வைத்திருந்த பெரியாரும் அதில் பங்கேற்றார் என்பது தனிக் கவனத்துக்குரியது.

இவ்வாறு 20 ஆம் நூற்றாண்டுத் தமிழக வரலாறு ஒரு தோல்வி வரலாறாகப் போனதற்குப் பெரியார் முழுமுதற்காரணமாவார். அவர், தனக்குக் கிடைத்த குறிப்புகளைக் கொண்டு அவற்றை வளர்த்து வளப்படுத்தித் தன்னை வளர்த்துக் கொள்ளும் அறிவுத்திறன், சிந்தனையாற்றல், செயலாற்றல், ஊக்கம், உழைப்பு, சூழ்ச்சித் திறன் என்ற அனைத்தும் வாய்க்கப் பெற்றவர். ஆனால் அரசு ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சுபவர். பணப்பேய் பிடித்தவர், நேர்மையற்றவர். தமிழக மக்களுக்கிருந்த சமத்துவ வேட்கை, விடுதலை வெறி ஆகியவை அவரது இக்குறைகளை அவர்களது கண்களிலிருந்து மறைத்தன.

பெரியார் - ஆச்சாரியார் போட்டியின் தெளிவான வெளிப்பாடுகள் ஆச்சாரியார் இரண்டு முறை முதலமைச்சரான போதும் போராட்டங்கள் நடத்தி அவரைப் பெரியார் பதவியிறங்க வைத்தார். அதே நேரத்தில் இந்தியைத் திணிக்க முயன்றும் சாதிகளை இறுகச் செய்யும் கல்வி முறையைப் புகுத்தியும் அதற்கு ஆச்சாரியார் களம் அமைத்துக் கொடுத்தார் என்ற உண்மையையும் மறுக்க முடியாது. இந்தப் பதவிப் பறிப்புக்குப் பழிவாங்க, பெரியார் ஆதரித்தவரும் பதவி அரசியலில் தனக்குப் போட்டியாளருமான காமராசரின் அரசியலை முடிவுக்குக் கொண்டுவருதற்காகத் தான் வெறுத்த பொதுமைக் கட்சியை அணைத்து தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுத்து அண்ணாத்துரையைப் பதவியிலேற்றினார் ஆச்சாரியார்.

தலைவர்களிடையிலான இந்தப் போட்டி தமிழகத்தில் பெரியார்-ஆச்சாரியாருடன் நின்று போகவில்லை. கருணாநிதி - ம.கோ.இரா. போட்டியும் இத்தகையதே. இருவரும் இறுதிவரை ″நண்பர்களாக″ இருந்தனர். இன்று கருணாநிதி - செயலலிதா இடையிலான போட்டி வேறு விதமானது. இருவரும் தங்கள் பொதுவாழ்வில் சுருட்டி வைத்திருக்கும் கணக்கில்லாப் பொதுச் சொத்துகளைக் காக்கவும் ஊழல் வழக்குகளிலிருந்து தப்பிக்கவுமே பதவிப் போட்டியில் உள்ளனர்.

பெரியாரைப் பற்றி திராவிடத்தால் வீழ்ந்தோம் நூலில் வெளிவந்தவை, குறிப்பாக தமிழ்த் தேசியம் கட்டுரையிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பகுதிகள் தமிழகத்திலுள்ள ″தமிழுணர்வு″, ″தமிழ் தேசிய உணர்வு″ உடையவர்களிடையில் அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளன. அறிவுத்துறை சார்ந்த தனியாள் அரட்டலிய (தனிநபர் பயங்கரவாத) நிகழ்ச்சி போல் அமைந்து விட்டது அது. தனியாள் அரட்டலியத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது தோழர் லெனின், அது, எல்லாம் நல்லபடியாகவே இருக்கிறது என்று குனிந்த தலையுடன் இயங்கும் மக்களை அதிர்ச்சியடையச் செய்து தலைநிமிரச் செய்கிறது; வழக்கத்துக்கு மாறான ஏதோவொன்று நடைபெறுகிறது என்று அனைவரது சிந்தனைகளையும் புலன்களையும் கூர்மையாக்குகிறது; புதிய போக்குகளைப் புரிந்து கொள்ளத் தொடங்குகிறார்கள் மக்கள்; தங்களை அப்போக்குகளில் இணைத்துக்கொள்ள முற்படுகின்றனர் என்றார். அதைப் போலத் தான் பெரியார் குறித்த இத்திறனாய்வு பயன்பட்டுள்ளது. இது என்னால் திட்டமிட்டுச் செய்யப்படவில்லை. என் கருத்துகளைப் பதிவு செய்தேன். அது குணாவின் நூலில் தற்செயலாக வெளிப்பட்டுத் தன் பணியை முடித்துள்ளது.

பெரியாரின் பெயரைக் கூறிக்கொண்டு இயக்கம் நடத்துவோரும் இதழ் நடத்துவோரும் தாங்கள் தமிழ்த் தேசியப் போராளிகள் என்று கூறிக்கொள்கிறார்கள். அவர்கள் பார்ப்பனர்களோடும் பார்ப்பனரல்லாத போட்டிக் குழுக்களோடும் தமிழகத்தின் செல்வத்தைப் பறித்துச் செல்லும் ஆட்சியாளரோடும் அயலவரோடும் அக்கொள்ளையைப் பங்குபோடுவதற்காகப் போடும் சண்டையைத் தமிழ்த் தேசப் போராட்டம் என்று கூறுகின்றனர். தங்கள் தங்கள் சாதிக்குழுக்களிலுள்ள அடித்தள மக்கள் கல்வியும் அறிவும் பொருளியல் மேம்பாடும் பெற்றுவிடக் கூடாது என்று திட்டமிட்டு இட ஒதுக்கீட்டுச் சிக்கலை வைத்து அடித்தள மக்களிடையில் சாதி வெறியைத் தூண்டிவிட்டுப் பார்ப்பான் தான் தூண்டிவிட்டான் என்று ஏமாற்றுகின்றனர். பயனைத் தாங்கள், தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் அறுவடை செய்கின்றனர். அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு என்ற நோக்கில் செயற்படுவதைத் திட்டமிட்டு மறுக்கிறார்கள். உழைப்பு, விளைப்பு பற்றிக் கவலைப்படாதவர்கள் இவர்கள். பணம் கிடைத்தால் அனைத்தும் கிடைக்கும் என்ற நிலையிலுள்ள ஒட்டுண்ணிகளின் கூட்டம். விளைப்பவனையும் உழைப்பவனையும் இழிவாக நடத்தும் பாரதப் பண்பாட்டின், தமிழப் பண்பாட்டின், இந்துப் பண்பாட்டின் வழிவந்தவர்கள். இந்தக் கூட்டம் தான் இன்று பெரியாரின் படிமத்தைத் தூக்கிப்பிடித்துக்கொண்டிருக்கிறது. தமிழ்த் தேசியம் கட்டுரையை எழுதும் போது பெரியாரின் படிமத்தை உடைக்க வேண்டும் என்ற திட்டவட்டமான ஓர் எண்ணம் எனக்கு இல்லை. நானறிந்த உண்மைகளையும் எனது உள்ளக் குமுறலையும் வெளிப்படுத்த வேண்டும் என்றுதான் எண்ணினேன். ஆனால் இன்று இராசதுரை போன்றோரும் பெரியாரின் படிமத்தைக் காப்பதில் முனைப்பாக நிற்பதைப் பார்க்கும்போது பெரியாரின் படிமத்தை உடைப்பது தமிழ்த் தேசிய வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்று உணர்கிறேன். தமிழகம், அதன் வளங்கள், அவற்றின் மீது தமிழக மக்களுக்குள்ள விலக்கவொண்ணா உரிமை முதலிய அடிப்படைத் தமிழ்த் தேசியக் கண்ணோட்டத்திலிருந்து பிற திசைகளில் தமிழக மக்களின் கவனத்தை திசைதிருப்புவதையே தொழிலாகக் கொண்டிருக்கும் சுப.வீரபாண்டியன் வகையறாக்களின் மூலம் கிடைத்த பட்டறிவில்தான் நான் பெரியாரைப் பற்றிய இந்த முடிவுக்கு வந்தேன் என்பதே திரு.சுப.வீரபாண்டியன் கேட்ட கேள்விக்கு நான் தரும் விடை..

தலைவர்கள் என்பவர்களும் மனிதர்கள் தாம். கோட்பாடுகள் கொள்கைகள் எனும் பகுதிகளாலும் செயல்திட்டங்கள் எனும் ஆணி, பூட்டுகளாலும்(போல்ட்டு நட்டுகளாலும்) இயக்க விதிமுறைகள், அமைப்புமுறைகள் என்ற திட்டப்படி ஒன்றிணைக்கப்பட்ட பொறிகள் அல்ல அவர்கள். அவர்களுக்குச் சொந்தமான உணர்வுகளும் குறைபாடுகளும் உண்டு. இருப்பினும் தாம் வாழும் காலத்தில் நிலவும் குமுகச் சூழல்களிலிருந்து கொள்கைகளையும் கோட்பாடுகளையும் வகுக்கும் வல்லமை பெற்றவர்கள் என்ற வகையில் பிறரிடமிருந்து உயர்ந்து நிற்கிறார்கள். அந்த வகையில் அவர்கள் குமுகத்தின் படைப்பாகவும் விளங்குகிறார்கள். அதே வேளையில் அவர்களிடமுள்ள தனிப்பட்ட பண்புகளும் குறைபாடுகளும் அவர்களின் செயற்பாட்டில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அந்தப் பாதிப்புகளை இனம்கண்டு கோட்பாடுகளையும் கொள்கைகளையும் மேம்படுத்தும் திறனும் நேர்மையுமுள்ள வழித்தோன்றல்கள் உருவாகும்போது தலைவர்களது படிமங்கள் மக்கள் உள்ளங்களில் உயர்ந்து நிற்கின்றன. தலைவரின் படிமத்தை வைத்துப் பிழைப்பு நடத்துவோராக வழித்தோன்றல்கள் தரம் தாழும்போது தலைவர்களின் படிமங்கள் வீழ்ந்து நொறுங்குகின்றன. தலைவர்கள் இயல்பான மனிதர்கள் இல்லை, கடவுள்கள்; அவர்கள் சொன்னவை அனைத்துக் காலத்துக்கும் பொருந்துபவை; அவை மறுபார்வைக்கு உரியன அல்ல என்ற நிலையை வழித்தோன்றல்கள் எடுக்கும் போது அவர்கள் கடவுளாகக் காட்டும் தலைவர்கள் சராசரி மனிதர்கள் தாம், சில வேளைகளில் சராசரி மனிதர்களை விடக் கீழானவர்கள் என்ற உண்மைகளை எடுத்துச்சொல்ல வேண்டியுள்ளது. ஐரோப்பாவில் மார்க்சு வாழ்ந்த காலத்திலிருந்த குமுகச் சூழலுக்கேற்றவாறு அவர் தன் கோட்பாடுகளை வளர்த்தார். அவற்றில் காலம் இடம் ஆகிய எல்லைகளைக் கடந்து நிற்கும் வளர்ச்சிக் கோட்பாடுகளாகிய இயங்கியல் பருப்பொருளியமும் வரலாற்றுப் பருப்பொருளியமும் ஊடுருவி நிற்கின்றன. அதே வேளையில் அவர் வாழ்ந்த இடத்துக்கு அதாவது ஐரோப்பாவுக்கு அந்தக் காலகட்டத்துக்கு மட்டும் பொருந்தும் என்று கருதத்தக்க ஒரு செயல்திட்டத்தை எப்போதும் எல்லா இடங்களிலும் பொருந்தும்(பாட்டாளியே எப்போதும் புரட்சிகரமானவன்) என்றும் கூறினார். அது இன்றுவரை ஐரோப்பாவில் கூட செயலுக்கு வரவில்லை. இவ்வாறு அந்தச் செயல்திட்டம் காலாவதியாகிப் போனதை வரலாறு காட்டுகிறது. அந்தச் செயல்திட்டங்களில் தத்தமது நாடுகளுக்குப் பொருந்துவனவென்று தாங்கள் கருதிய சில மாற்றங்களைச் செய்து புரட்சி செய்தனர் லெனின், மாவோ, காட்டிரோ, ஓ சி மின் போன்ற மார்க்சின் வழித்தோன்றல்கள். லெனினின் வழித்தோன்றல்கள் காலத்தின் தேவைக்கேற்ப மாற்றங்களைச் செய்து அக்கோட்பாட்டைச் செழுமைப்படுத்தாமல் தம் அதிகாரப்பசியை ஆற்றிக்கொள்வதற்காக அதைக் கொச்சைப்படுத்தியதால் உருசியாவில் லெனினின் உருவச்சிலையையே கீழே தள்ளி இழிவுபடுத்தினர் மக்கள். சீனத்தில் மாவோவின் படிமத்துக்கு என்ன நேருமோவென்று நாம் திகைத்து நிற்கிறோம். அதே நேரத்தில் மார்க்சியத்திலுள்ள, காலங்களைக் கடந்துநிற்கும் வலிமை பெற்ற வளர்ச்சிக் கோட்பாட்டை இனங்காண மனமின்றி வேறு எவற்றையோ தேடிக்கொண்டிருக்கிறார்கள் மார்க்சின் இன்றைய வழித்தோன்றல்கள். தங்கள் அணுகலை மாற்றி மார்க்சியத்தின் வளர்ச்சிக் கோட்பாட்டை இனங்காண்பதில் அவர்கள் வெற்றி பெறவில்லையாயின் லெனினுக்கு நேர்ந்த அவலம் தான் மார்க்சுக்கும் நேரும்.

இந்தியாவில் தோன்றிய நாராயண குருவின் குறிக்கோளை எய்துவதற்கு அவரது வழித்தோன்றலான குமரன் ஆசான் செயற்பட்டு அவருக்குப் பெருமை சேர்த்தார். அவர் போன்ற வழித்தோன்றல்கள் பெரியாருக்கு அமையவில்லை. அதனால் தான் பெரியாரின் வாழ்க்கையை மீளப்பார்க்க வேண்டிய தேவையே ஏற்பட்டது. அத்தகைய ஒரு குமுகத் தேவைக்கன்றி பொழுதுபோக்குக்காக அவ்வாய்வு செய்யப்பட்டிருந்தால் அது எவரது கவனத்தையும் ஆர்வத்தையும் ஈர்த்திருக்காது.

சப்பானில் சென்ற நூற்றாண்டின் பாதிக்குப்பின் பேரரசு மீட்பியக்கம் என்ற பெயரில் உருவான இயக்கத்தில் இரண்டு சாமுரைத் தலைவர்கள் தலைமையேற்றனர். புதிதாக முடிசூடிய இளம் பேரரசரும் பங்கேற்றார். ஐரோப்பாவுக்குச் சென்று அவ்விரு தலைவர்களும் நாடுகளைச் சுற்றிப் பார்த்துத் தலைவர்களைச் சந்தித்துப் பேசி ஆய்வு செய்து தமது நாட்டுக்குப் பொருத்தமான அரசியலமைப்பு, கல்வி, அறிவியல் - தொழில்நுட்பக் கொள்கை என்று அனைத்தையும் வடிவமைத்தனர். மாற்றங்கள் தேவைப்பட்ட நேரங்களில் மக்களிடையிலிருந்து தலைவர்கள் தோன்றி அவர்களைத் திரட்டி போராட்டங்கள் நடத்தினர். ஆட்சித் தலைவர்கள் போராட்டங்களை ஒடுக்கித் தலைவர்களைச் சிறையிலிட்டனர், அல்லது கொன்றனர். ஆனால் மக்கள் முன்வைத்த வேண்டுகைகளுக்குச் செவிமடுத்து உடனுக்குடன் நிறைவேற்றினர். இதனால் இரண்டு நன்மைகள் கிடைத்தன. நாடும் மக்களும் அவர்களது கைகளை விட்டு ஐயத்துக்குரிய புதிய தலைவர்களின் கைகளில் சிக்குவது தடுக்கப்பட்டது. அதேவேளையில் புதிய உரிமைகளைக் கேட்கும் அளவுக்கு மக்கள் விழிப்புணர்வும் பக்குவமும் அடைந்த போது அவர்களுக்கு அவற்றை வழங்கியதால் குமுகத்தின் பண்பாட்டு மட்டம் உயர்ந்தது. அதனால்தான் உலகத்தின் ஒரு கோடியில் தனிமைப்பட்டுக் கிடந்த பிற்போக்கு சப்பான் ஒரு வல்லரசாகத் தன்னை வளர்த்துக் கொள்ள முடிந்தது. 1945இல் உலகப் போரில் தாங்கொணாக் கொடுமைக்கு ஆளான நிலையில் தான் அதுவரை கடைப்பிடித்து வந்த படையியல் அணுகலைக் கைவிட்டுப் புதிய தலைமையின் கீழ் இன்று உலகில் தன்னிகரற்றுத் தலைநிமிர்ந்து நிற்கிறது.

அங்கு அரச மதமாக இருந்த, பழமையடைந்ததும் மனிதனைச் செயலிழக்கச் செய்வதும் நமது ″குண்டலினி″க் கோட்பாட்டுக்கு உற்ற தோழனாகவும் விளங்கிய ஊழ்க(தியான-சென்) புத்த சமயம் தூக்கியெறியப்பட்டு அந்த இடத்தில் பண்டைய வீரவழிபாட்டு மதமான சிண்டோயியம் பேரரசு மீட்பியக்கத்தின் போது அரச மதமாக்கப்பட்டது. இன்று அதையும் கைவிட்டுப் புதிய சமயமொன்றைச் சமைக்கப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவிலோ, ஆங்கிலேயருடன் உடன்பாடு கண்டு இந்தியப் பொருளியலை அடகுவைத்து மார்வாரிகளுக்கு மட்டும் பணி புரிந்த காந்தியைக் கடவுளாக்கி, காலங்கடந்து போன பண்பாடுகளைக் காப்போராகவும் மக்களின் அறியாமையையும் வறுமையையும் அடிமை நிலையையும் நிலைநிறுத்துவோராகவும் அவரது வழித்தோன்றல்கள் அரும்பாடுபட்டு வருகிறார்கள். கொடுமைகளை எதிர்த்து மக்களின் குரலாகத் தலைவர்கள் தோன்றும் போது அவர்களது படிமங்களைத் தெய்வமாக்கிவிட்டு மக்களை ஏமாற்றிக் கைவிட்டுவிடுகிறார்கள். அதனால் தான் இங்கு மக்களும் நாடும் வலிமையிழந்து எவரெவருக்கோ அடிமைசெய்து கிடக்கின்றன. இந்தக் கேடுகளுக்கு முடிவுகட்ட நேர்மையும் திறனுமுள்ள ஒரு தலைமை உருவாகி வெற்றிபெறும்போது இதுவரை காலங்காலமாகத் தாக்குப்பிடித்து நிற்கும் பிற்போக்கு விசைகள் கட்டிக்காத்து வந்திருக்கும் அனைத்தும், அனைத்துப் படிமங்களும் நொறுங்கித் தூள்தூளாகி மண்ணோடு மண்ணாகி நாளை இந்தியாவுக்கு உரமாகி விடும். பெரியாரின் படிமமும் தான்!

(தொடரும்)

0 மறுமொழிகள்: