31.12.07

தமிழ்த் தேசியம் ... 20

மனந்திறந்து... 10

திராவிடத்தால் வீழ்ந்தோம் நூல் வெளிவந்த பிறகு நடந்த ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுவது நலமென்று கருதுகிறேன். அதுவரை என் பெயரைத் தெரிந்து கொண்டவர்கள் திராவிட, தனித்தமிழ், பொதுமை இயக்க வட்டாரங்களில் கணிசமாக உண்டு. இப்போது புதிதாகவும் பலர் அறிந்து கொண்டனர். அவர்கள் அனைவரிலும் பெரும்பாலோர் என்னைப் பகையுணர்வோடும் வெறுப்புடனும்தான் பார்த்தனர். 1996இல் ஈரோடையைச் சேர்ந்த குறிஞ்சி என்பார் குணாவின் நூலாக்கங்கள் பற்றிய கருத்தரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்து என்னைப் பேச அழைத்திருந்தார். மேடையில் பேச எழுந்ததும் 5 மணித்துணிகளுக்குள் முடித்துவிட வேண்டும் என்று தலைமை தாங்கியவர் சீட்டுக் கொடுத்தார். நான் ஓரிரு நிமையங்கள் பேசிவிட்டு இறங்கிவிட்டேன். என் மீதுள்ள ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்வதற்காகவே என்னை அங்கு அழைத்தனர் என்று என்னால் உணர முடிந்தது. அங்கு தான் பேரா.கோ.கேசவனை முதலும் இறுதியுமாகச் சந்தித்தேன். அப்போது தான் பெரியார் மார்வாரிகளிடம் பணம் பெற்றார் என்பதற்கு ஆவணச் சான்றுகள் உண்டா என்று கேட்டார். இல்லை என்றேன். ஊகமா என்றார்; உய்த்துணர்வு என்றேன். ஊகத்துக்கும் உய்த்துணர்வுக்கும் இடைவெளி மிக மெல்லிது. கிடைக்கும் சூழ்நிலைத் தரவுகளை வைத்து முடிவு செய்வது உய்த்துணர்வு. இந்த உய்த்துணர்வு இன்றி வரலாறோ அறிவியலோ வளர முடியாது. உய்த்துணர்வில் கிடைத்த முடிவைக் கொண்டு மேலும் சான்றுகளைத் தேடிக் கண்டுபிடித்து உறுதி செய்யலாம். பெரியாரைப் பொறுத்தவரை கூடுதல் தடயங்கள் இக்கட்டுரை எழுதிய பின் கிடைத்துள்ளன. ஆனால் ஆவணச் சான்றுகள் இல்லை என்ற எண்ணத்தில் பேரா.கோ.கேசவன் தன் குணா - பாசிசத்தின் தமிழ் வடிவம் என்ற தன் நூலில் ஊகம் என்றே குறித்துள்ளார்.

அந்த ஈரோடை நிகழ்ச்சியில் தான் கோவை ஞானி அவர்களை மீண்டும் ஒரு முறை சந்தித்தேன். 1980களின் தொடக்கத்தில் வெங்காலூரில் நடைபெற்ற தேனீக்கள் பட்டறையில் அவரை முதன்முதலில் சந்தித்தேன். அதற்கும் முன்பு படிகள் என்ற இதழில் அவரது எழுத்துகளைப் படித்துள்ளேன். அவரது எழுத்துகளிலும் பேச்சுகளிலும் அவர் வெளியிடும் கருத்துகளின் நேர்மை குறித்து எனக்குள் ஐயம் இருந்தது. படிகள் இதழில் தமிழுணர்வு என்பது பற்றிய கேலியும் கிண்டலும் கண்டிருக்கிறேன். தேனீக்கள் பட்டறையில் தமிழ்ப் பண்பாட்டின் மேன்மைகள் என்று பேசி முடித்து விட்டு அதே மூச்சில் தமிழ்ப் பண்பாட்டின் இழிவுகள் என்று எந்த உணர்ச்சி மாற்றமும் இன்றிப் பேசி முடித்தார். அதில் அவரது மேதைமையை வெளிப்படுத்தும் ஆர்வம்தான் வெளிப்பட்டதே ஒழிய நேர்மையான ஈடுபாட்டைக் காண முடியவில்லை. ந.ம.கு.போன்று நாட்டாற்றில் விட்டோடும் குழுக்களை தமிழுணர்வாளர்களுக்கு அறிமுகம் செய்வதிலும் அயல்நாட்டு உதவியால் செயற்படும் ″தன்னார்வ″க் குழுக்களோடு இணைந்து நிற்பதிலும் அவருக்கு நிறைய ஈடுபாடு உள்ளது. ஈரோடையில் அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க எனது கட்டுரைகள் சிலவற்றை அவருக்கு விடுத்தேன். தன்னை கோவை வந்து சந்தித்தால் நிகழ் இதழில் ஒரு நேர்காணல் வெளியிடலாம் என்றார். சந்தித்தேன். குமரிமைந்தன் சிந்தனைகள் என்ற தலைப்பில் ஓர் ஆக்கம் வெளிவந்தது. அதில் என் கருத்துகளைப் பற்றிய சில திறனாய்வுகளை வைத்திருந்தார். அவர் எழுப்பியிருந்த இந்தக் கேள்விகளுக்கான விடைகள் ஏற்கனவே குமரிமைந்தன் சிந்தனைகள் என்று அவர் தொகுத்தவற்றில் இருந்தன. இருப்பினும் நான் மீண்டும் ஒருமுறை விளக்கினேன். அவரோ சொன்னதையே திரும்பச் சொல்கிறீர்கள் என்றார். கேட்ட கேள்வியையே மீண்டும் கேட்டதால் அப்படிச் சொல்ல நேர்ந்தது, கொடுத்த விளக்கத்தில் குறை இருப்பதாகத் தோன்றினால் அதைச் சுட்டிக்காட்டியிருக்கலாம் என்று எழுதினேன். அதற்கு இதுவரை மறுமொழி இல்லை.

அவரது இதழில் ″இயற்கை வேளாண்மை″ பற்றி நம்மாழ்வாரும் மலைவாழ் மக்கள் பற்றி சுற்றுச்சூழல் கண்ணோட்டத்தில் நாஞ்சில்நாடனும் கட்டுரைகள் எழுதியிருந்தனர். ″எதிர்வினைகளை″ வரவேற்பதாக ஞானி வலியுறுத்துவார். அந்த நம்பிக்கையில் இவ்விரு கட்டுரைகளையும் திறனாய்ந்து இரு கட்டுரைகளிலும் வெளிப்பட்டிருக்கின்ற சிந்தனைகள் நம் நாட்டின் நிலைமைகளிலிருந்து தோன்றவில்லை, அயல்நாட்டார் எழுதிய நூல்களிலிருந்து தோன்றியுள்ளன என்று எழுதினேன். தன் நண்பர்கள் மீது இழிமொழி கூறியுள்ளதாக(″கேவலப்படுத்தும் முயற்சி″) என்று என் மேல் குற்றம் சாட்டினார். அத்துடன் நிகழ் இதழும் நிறுத்தப்பட்டது. இதற்கு முன்பும் அவர் நடத்திய இதழ்கள் திடீர் திடீரென நிறுத்தப்பட்டிருக்கின்றன. இக்கட்டான சூழ்நிலைகளில் இதைச் செய்வார் போலும், பல்லி தன் வாலை அறுத்துப் போட்டுக்கொண்டு ஓடிவிடுவதைப் போல.

பின்னர் எம் இயக்கத்தின் பொருளியல் உரிமைக் கோட்பாடு பற்றிய செய்தி அவரது வட்டத்துக்குள் பரவத் தொடங்கியதும் ″பொருளியலையும் நாம் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்″ என்று கூறத்தொடங்கியுள்ளார். கரூரில் நடைபெற்ற காவிரிக் காப்புக் குழு கருத்தரங்கில் இச்சொற்றோடரைக் கூறுவதை நான் முதன்முதலில் கேட்டேன். பின்னர் ஈரோடையில் பொழிலன் ஏற்பாடு செய்திருந்த ஒரு மாநாட்டில் ″தமிழகத் தேசிய முதலாளியப் புரட்சிதான் தமிழக மக்களுக்கு விடிவு தரும்″ என்ற என் உரைக்கு மறுப்புக் கூறுவது போல தமிழகத்தில் முதலாளியம் வர இசைய முடியாது என்று வீறார்ப்பாக முழங்கினார். இது தில்லியின் குரலா அல்லது வாசிங்டனின் குரலா என்ற கேள்விக்கு விடையை நீங்களே கண்டுபிடித்துக்கொள்ளுங்கள்!

உண்மையில் இவருக்கு நான் முன்வைக்கும் கருத்துகளை ஏற்றுக்கொள்ள மனமில்லை. அதேவேளையில் அவற்றை அவரால் மறுக்கவும் முடியவில்லை. அவர் மட்டுமல்ல முன்பு நான் குறிப்பிட்டதைப் போல சுப.வீரபாண்டியன், இன்னும் பலரின் நிலையும் இது தான். மற்றவர்கள் வாய் திறவாது இருக்கிறார்கள். இவரோ இப்படி முரட்டடி அடிக்கிறார்.

இப்போது தமிழ் நேயம் என்ற பெயரில் அவர் ஓர் இதழ் தொடங்கியிருக்கிறார். முன்பு அவர் திட்டி கிண்டலடித்த அண்ணாத்துரை, கருணாநிதி ஆகியோரையும் தமிழ்ப் பண்பாடு, தமிழ் மொழியார்வம், தமிழ் இலக்கியம் ஆகியவற்றையும் ″தமிழ்த் தேசியம்″ என்ற பெயரில் புகழத் தொடங்கியுள்ளார்.

ஞானி அவர்கள் எவரும் தன் மீது வெளிப்படையான திறனாய்வுகள் வைப்பதை விரும்புவதில்லை. அவரும் அவர் மட்டத்து இலக்கியத் திறனாய்வாளர்களும் படைப்பாளிகளும் தங்களுக்குள் ஒருவரையொருவர் திட்டிக்கொள்வதற்கென்று அவர்களுக்கு மட்டுமே புரியும் குழூஉக்குறி (பரிபாடை → பரிபாசை) ஒன்றை வைத்துள்ளனர். இப்படித் தொடங்கிய இந்தப் பழக்கம் இன்று இயல்பாகவே பின்இற்றையியத்தில்(பின் நவீனத்துவம்) போய் நிற்கிறது. அதனால் தான் இவர்கள் படைக்கும் இலக்கியங்கள் இந்தப் பரிபாடையைப் புரிந்த 200 பேர்களுக்கு வெளியே செல்ல மறுக்கிறது. இவர்களில் இன்று உச்சத்தைத் தொட்டவர் செயமோகன் என்னும் எழுத்தாளர். இவர் அண்மையில் எழுதிய விட்ணுபுரம் என்ற புதினத்தை ஒரு ″வாசிப்பில்″ புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் தன் ″புரிதல் மட்டத்தை உயர்த்த″ப் பாடுபட வேண்டுமென்றும் புகழ்பெற்ற சுந்தர ராமசாமி கூறியுள்ளார். ஆக, இவர் சொல்வதிலிருந்து இன்றைய 200 பேரையும் விடச் சுருங்கிய ஒரு படைப்பாளர் - படிப்பாளர் வட்டம் உருவாகப் போகிறது என்பது தெரிகிறது. இந்தப் பரிபடையிலிருந்து ஒரு புதிய சமற்கிருதம் 21 ஆம் நூற்றாண்டில் உருவாகும் என்று உறுதியாக நம்பலாம்.

(தொடரும்)

1 மறுமொழிகள்:

சொன்னது…

குமரிக்கண்டம் என்ற ஒன்றை ஆய்வதற்கு முதலில் என்னென்ன விசயங்களில் ஆய்வு தேவைப்ப்படும்.

உதாரணத்திற்கு,
1.வானியல் நிகழ்வுகள்
2.அகழ்பொருள் ஆய்வு
3.கடலடி ஆய்வு
4.பல்வேறு நாட்டினரின் தொன்மவியல் கதைகளின் ஒப்பீடுகள்

இதைப்போன்று வேறு என்னென்ன துறையில் ஆராயலாம். இதை உங்கள் வலையிலும் முடிந்தால் என் மின்னஞ்சலிலும் தர வேண்டுகிறேன். நன்றி.
மின்னஞ்சல்: smrajasubramanian@gmail.com