27.11.07

தமிழ்த் தேசியம் ... 11

மனந்திறந்து... 1

தமிழ்த் தேசியம் கட்டுரைக்கு அச்சேறும் முன்பே பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய விறுவிறுப்பான ஒரு வரலாற்றுப் பின்புலம் உண்டு.

ஏறக்குறைய 6 ஆண்டுகளுக்கு முன் உலகத் தமிழ் இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் திரு. இரா.சனார்த்தனம் அவர்கள் தினமணி நாளிதழ் வழியாக ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதில் சில தலைப்புகள் தந்து அத்தலைப்புகளில் கட்டுரை கேட்டிருந்தார். அவற்றுள் ஒரு தலைப்பு ″தமிழ்த் தேசியம்″ என்பது. அத்தலைப்பில் இக்கட்டுரையை எழுதி அவருக்கு விடுத்தேன். திரு.இரா. சனார்த்தனம் திராவிட இயக்கம் சார்ந்தவர். தி.மு.க.வின் உறுதியான பற்றாளர். அவருக்கு இக்கட்டுரை உவப்பாயிராது என்று எனக்குத் தெரியும். அதற்கேற்பவே இந்தக் கட்டுரை வந்து சேர்ந்தது குறித்துக்கூட அவரிடமிருந்து எந்தக் குறிப்பும் வரவில்லை.

வழக்கம் போல் இந்தக் கட்டுரையைப் படியெடுத்துச் சிலருக்கு விடுத்தேன். படி பெற்றவர்களில் வெங்காலூர் குணாவும் ஒருவர். எவரிடமிருந்தும் கட்டுரை பற்றிய கருத்து எதுவும் வரவில்லை. கட்டுரையை அச்சிட்டு வெளியிடும் விருப்பம் இருந்தாலும் நூலை உரிய முறையில் விற்பனை செய்து உண்மையான ஆர்வலர்களைச் சென்றடைய உதவும் வகையில் யாரும் கிடைக்காததால் அது நடைபெறவில்லை. இந்நிலையில் ஏறக்குறைய இரண்டாண்டுகளுக்குப் பின் குணாவின் திராவிடத்தால் வீழ்ந்தோம் நூற்படி வந்தது. பெரியாரின் திராவிடக் கோட்பாட்டைத் திறனாய்ந்து, தமிழக மக்களில் தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்களைத் தமிழ்த் தேசியத்துக்கு எதிரிகளாகக் காட்டுவதே அந்நூலின் நோக்கமாக இருந்தது. இது தமிழ்த் தேசியம் கட்டுரையின் அடிப்படை அணுகலுக்கு நேர் எதிரானதாகும். இருப்பினும் பெரியாரைப் பற்றியும் அண்ணாத்துரை போன்றோர் பற்றியும் கட்டுரையில் உள்ள சில பகுதிகள் நூலில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

குணாவின் நூல் தமிழன்பர்களிடையில் பரவலான ஈர்ப்பைப் பெறுவதில் தினமலர் நாளிதழ் பெரும் பங்காற்றியது. தமிழ், தமிழகம், தமிழக மக்கள் மீது பகையுணர்வு கொண்ட இந்த நாளிதழ் திராவிட - தமிழ் இயக்கத்தினுள்ளிருந்து வெளித்தோன்றிய இந்த முரண்பாட்டுக்கு நல்ல விளம்பரம் கொடுத்து மனநிறைவு கொண்டது. இவ்வாறு இந்த நூலால் திராவிட - தமிழ் வட்டாரங்களிடையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெரியாரைப் பற்றிய திறனாய்வுகள் சிலருக்குக் கொதிப்பேற்றியது. அதன் விளைவாக குணா ஒரு பொய் வழக்கின் அடிப்படையில் ″தடா″ சிறையில் அடைக்கப்பட்டார். ″தமிழ்ச் சான்றோர்″ ஒருவர் குணாவைக் கொல்ல ஆளமர்த்தினார் என்று கூட அண்மையில் ஒரு பேச்சு அடிபட்டது. அதை நம்மால் நம்ப முடியவில்லை. அதே நேரத்தில் தமிழ்த் தேசியம் கட்டுரையிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பகுதிகளை அந்நூலில் படிக்கும் போது முதல் பார்வையில் அவை குணாவின் கூற்றுப் போல் தோன்றுகின்றன; எனவே குமரிமைந்தன் மேல் பாய வேண்டிய கொதிப்பு குணாவின் மீது பாய்ந்துவிட்டது என்று கருதுவாரும் உள்ளனர். எது எப்படியாயினும் பெரியார் தமிழ்த் தேசியத்தின் ஒப்பற்ற தலைவர் என்ற பொய்ப் படிமத்தில் விரிசல் ஏற்படச் செய்ததில் இந்தக் கட்டுரைக்கு முகாமையான பங்கு உண்டு.

இந்தச் சூழலில் 1998 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற பெரியாற்று நீருரிமை மீட்பு மாநாட்டில் நான் பேசி முடித்து இருக்கையில் அமர்ந்த போது அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்த திரு. சுப.வீரபாண்டியன் அவர்கள் என்னைப் பார்த்து ″இவ்வளவு தெளிவாக இருக்கிறீர்களே; ஆனால் பெரியார் குறித்து மட்டும்...?″ என்று கேட்டார். அதைப் பற்றி நாம் பேசலாம் என்று கூறினேன். நிகழ்ச்சி முடிந்த பின் பேசலாம் என்றார். இது நடந்தது நண்பகல் வேளையில். மாலை 6.00 மணிக்கு அவரைத் தேடியபோது அவர் 4.00 மணிக்கே சென்னை புறப்பட்டுச் சென்றுவிட்டதாக அறிந்தேன். பின்னரும் கூட எம் இயக்க இதழான பொருளியல் உரிமை தொடர்ந்து அவருக்கு விடப்பட்டுக்கொண்டிருக்கிறது. இருந்தும் அவர் எந்த தொடர்பும் கொள்ளவில்லை. இருந்தாலும் அவர் கேட்ட கேள்வி விடை தேடி நின்றுகொண்டிருக்கிறது. அதற்கு விடையளிக்கும் போது என் வரலாற்றின் ஒரு பகுதியினுள் சென்று வர வேண்டியுள்ளது.

(தொடரும்)

0 மறுமொழிகள்: