30.12.07

தமிழ்த் தேசியம் ... 18

மனந்திறந்து... 8

1980களின் தொடக்கத்தில் திருச்சி ஈ.வே.ரா. கல்லூரியில் வரலாற்றுத் துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய பேரா.வே.தி.செல்லம் அவர்களைச் சந்திக்கத் திருச்சிக்குச் சென்ற போது அவரது முன்னாள் மாணவரும் அப்போது சட்டம் பயின்றுகொண்டிருந்தவருமான திருவாரூரைச் சேர்ந்த கருணாநிதி என்ற இளைஞரைச் சந்திக்க அவர் ஏற்பாடு செய்தார். அவ்விளைஞர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். திராவிடர் கழகத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் ஒரு காலத்தில் வினைப்பட்டவர். தஞ்சை மாவட்டத்திலுள்ள கள்ளர் வகுப்பைச் சேர்ந்த திராவிடர் கழகத்தினர் தாழ்த்தப்பட்ட கட்சி உறுப்பினர்களைக் கட்சி அமைப்புக் கூட்டங்களில் சாதிப் பெயர் கூறித் திட்டி அடித்த நிகழ்ச்சிகள் பல நடந்ததாகக் கூறினார். அதன் பின்னர்தான் அதுவரை தங்கள் தலைவராகத் தாங்கள் மதித்திருந்த பெரியாரைக் கைவிட்டு அம்பேத்காரை நாடியதாகக் கூறினார். அத்துடன் பெரியாற்று அணையில் என்னுடன் பணியாற்றியவரும் அப்போது தான் பொறியியல் கல்லூரியிலிருந்து வெளியே வந்திருந்தவருமான பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான ஓர் இளைஞருடன் கருத்தாடிய போதுதான் ஒதுக்கீடு போன்ற சலுகைகள் தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்ட இளைய தலைமுறையினருக்கிடையில் எவ்வளவு ஆழமான பிளவையும் பகைமையையும் உருவாக்கியுள்ளன என்பதை உணர முடிந்தது. தொழிற்கல்லூரிகளில் இவ்விரு வகுப்பு மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற வன்முறை மோதல்கள், கொலைகளுக்கான உண்மையான விளக்கம் கிடைத்தது.

இந்தப் பட்டறிவுகளின் பின்னணியில் தான் தமிழ்த் தேசியம் கட்டுரை எழுதப்பட்டது. அதில் மேலே குறிப்பிட்ட அனைத்துத் துறைகள் பற்றிய அலசல் இடம்பெறவில்லை. அரசியல் அரங்கில் இடம்பெற்ற நிகழ்ச்சிகளுக்கே முதன்மை தரப்பட்டது. கூறப்பட்ட செய்திகள் அனைத்திலும் பலரது உள்ளத்தைத் தைத்தது பெரியார் மார்வாரிகளுடன் மறைமுக உறவு வைத்திருந்தார், பணம் பெற்றார் என்பது தான். எமது இயக்கத்தின் நிலைபாட்டை அறிந்தவர்களில் பலர், ″நீங்கள் பெரியாரைப் பற்றிய உங்கள் கண்ணோட்டத்தை மறுபார்வைக்கு உட்படுத்தினால் நாங்கள் உங்கள் இயக்கத்தை ஏற்றுக்கொள்கிறோம்″ என்கின்றனர். ஆனால் அவ்வாறு மாற்றிக்கொள்வதற்கு எந்த அடிப்படையும் இல்லாத நிலையில் என்னதான் செய்வது? உண்மையில் அவர் மீதுள்ள ஐயப்பாடுகள் வலுப்பெறுவதற்கான சான்றுகள்தாம் நமக்குக் கிடைக்கின்றனவே அன்றி வேறில்லை. எடுத்துக்காட்டாகச் சிலவற்றைக் கூறலாம்.

1. சில ஆண்டுகளுக்கு முன் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ″மானமிகு″ கி.வீரமணி மீது செயலலிதாவிடம் ஐந்து இலக்கம் உரூபாய் நன்கொடை பெற்றார் என்று அவரது எதிராளிகள் குற்றம் சாட்டியபோது ″ஐயா″வே ஆச்சாரியாரிடம் (இராசாசி) பணம் வாங்கிய உண்மையை வெளியிட்டுத் துண்டறிக்கையாக அது வெளிவந்தது. எனவே தான் வாங்கியதில் தவறில்லை என்றார் அவர். இதன் பின்னணி என்னவென்றால் இந்தியா ″விடுதலை″ பெற்று குடியரசான போது அதுவரை இந்தியாவின் முதலும் இறுதியுமான தலைமை ஆளுநராகப் பணியாற்றிய ஆச்சாரியாரை அகற்றிவிட்டு இராசேந்திரப் பிரசாத்தை முதல் குடியரசுத் தலைவராக்க வடவர்கள் முனைந்தனர். இதனை எதிர்த்து ஒரு போராட்டம் நடத்த வேண்டுமென்று கேட்டு திரைப்பட முதலாளியும் ஆனந்த விகடன் உரிமையாளருமான எசு.எசு.வாசன் மூலம் உரு 5000-கொடுத்தனுப்பினாராம் ஆச்சாரியார். பணத்தை வாங்கிக்கொண்டாராம் பெரியார். ஆனால் ஆச்சாரியார் கேட்டுக்கொண்டவாறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பற்றிப் பிறர் கேட்டபோது, ″கொடுத்தார், வாங்கிக் கொண்டேன்; வேறென்ன செய்ய?″ என்றாராம். ஆக, எவர் பணம் கொடுத்தாலும் அவரால் மறுக்க முடிவதில்லை, பணம் கொடுத்தவர் வெளி உலகுக்குத் தன் அரசியல் எதிரி என்று அவரால் பறைசாற்றப்பட்ட ஆச்சாரியாராயிருந்தாலும் சரி. பணத்துக்கு கைம்மாறாகத் தன்னிடம் எதிர்பார்க்கப்பட்ட பணியைத் தான் செய்யப்போவதில்லை என்பது தெரிந்திருந்தும் (பணம் வாங்குவது நேர்மையற்றது என்பது இன்னொரு புறம்). அவரிடம் இருந்தது, சிறப்பானதென்று பலரால் போற்றப்படும் சிக்கனமல்ல, அதைப் பல படிகள் தாண்டிய பணத்தாசை என்பதே இதன் பொருள். இத்தகைய மனமெலிவுக்குள்ளான ஒருவர் எவ்வாறு நேர்மையான அரசியல் அல்லது கடுமையான குமுகியல் இயக்கம் நடத்த முடியும்?

2. பெரியாரின் கடவுள் மறுப்பு உலகறிந்தது. அத்துடன் தமிழகத்திலுள்ள மடங்கள், குறிப்பாகச் சிவனிய மடங்களின் தலைவர்களின் அட்டூழியங்களும் கோயில்களில் நடைபெற்ற அட்டூழியங்களும் மக்களின் வெறுப்புக்கு ஆளாகியிருந்தன. இந்த நிலையில் பார்ப்பனர்களுக்குப் புகலிடங்களாகவும் உள்ள இந்தக் கோயில்களின் நிலங்களை உழவர்களுக்குச் சொந்தமாக்க வேண்டும் என்றும் கோயில்களையும் கோபுரங்களையும் வெடிவைத்துத் தகர்த்தும் தேர்களுக்குத் தீயிட்டும் அழிக்க வேண்டுமென்றும் தொண்டர்கள் குமுறிக் கொண்டிருந்தனர். ஆனால் பெரியார் ஆரிய - திராவிடக் கோட்பாட்டை வைத்து அம்மடங்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டார், பணம் தருமாறு வெளிப்படையாகவே கேட்டார். அத்துடன் மடத்தொடர்புடைய அடியார்களைத் தன் இயக்கத்தில் சேரத் தூண்டுமாறும் வேண்டிக் கொண்டார். பல இலக்கம் கோடி உரூபாய் மதிப்புடைய கோயில் சொத்துகளுக்குப் பாதுகாப்பளித்த பெரியாருக்கு அவர் கேட்ட பணத்தை மடத்தலைவர்கள் வழங்கியிருப்பார்கள் என்று உறுதியாக நம்பலாம். இங்கு மடத்தலைவர்களை ஒருவகையில் மிரட்டிப் பணத்தை வெளிப்படையாகவே கேட்கும் உத்தியைப் பார்க்கிறோம்.[1]

3. கிறித்துவத்துக்கும் முகமதியத்துக்கும் முகவராக வீரமணி செயற்பட்டார் என்று கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரியாரே அதைச் செய்துள்ளார். இறைமறுப்பென்பதைப் பெரிய அளவில் செய்துவந்த பெரியார் பிற மதங்களுக்கு மட்டும் பரிந்துரை செய்தது ஏன்? எனக்கு தெரிந்த, காவல் துறையில் தலைமைக் காவலராக ஓய்வு பெற்ற ஒருவரது இரங்கத்தக்க கதை இது. முக்குலத்தோர் மரபைச் சேர்ந்த இவர் பெரியாரின் மேடைப்பேச்சைக் கேட்டுத் தன் துனைவியாருடன் முகம்மதியத்தைத் தழுவினாராம். ஒய்வு பெற்ற பின்னர் தான் தங்கியிருந்த இடத்தில் உள்ள சமாத் சபையினர் அவர் தவறாது தொழுகைகளில் பங்குகொள்ளவில்லையென்றால் அவர் இறக்கும் போது பிணத்தைப் பள்ளிவாசல் இடுகாட்டில் புதைக்கவிடமாட்டோம் என்று மிரட்டுவதாகக் கூறிக் கண்ணீர் விட்டு அழுதது இன்றும் மனக்கண்ணில் தெரிகிறது. கிறித்துவர்கள் தி.க.கூட்டங்களுக்குச் சென்று ஆதரித்து ஆரவாரம் செய்தது தெரிந்ததே. மதமாற்றிகள் பணத்துடன் அலைவதைப் பார்க்கும் போது பெரியாரின் இச்செயலிலும் நமக்கு ஐயம் ஏற்படுகிறது.


பெரியாரின் வேறு சில முரண்பாடுகள்:

1. இந்து சமயத்தை எதிர்த்துக் கொண்டே இந்து சமயக் கோயிலொன்றின் தாளாளராக இருந்தது.

2. நான் சிந்தனைகளைத் தருவேன், செயற்பட வேண்டியது மக்கள் பொறுப்பு என்று கூறிக்கொண்டு அதே வேளையில் குறிப்பிட்ட நடவடிக்கைகளில் மட்டும் இறங்கியது. தன் சிந்தனைகளைச் செயலாக்க மக்கள் எவ்வகைகளில் செயலாற்ற வேண்டும் என்ற அறிவுரை கூடக் கூறாமல் இருந்தது.

3. தேர்தலில் நிற்பதில்லை என்று கூறிக்கொண்டே பிற கட்சிகளுக்காகத் தேர்தல் பரப்பல்களில் இறுதிவரை ஈடுபட்டது.

4. இவையனைத்துக்கும் மேலாக ஓர் உண்மை நமக்குப் பல கேள்விகளை எழுப்புகிறது. திராவிடர் கழகத்தின் கொடி கறுப்புப் பின்னணியில் சிவப்பு வட்டமாகும். இதனோடு ஒப்பிடும் வகையில் அமைந்தது இத்தாலிய முசோலியின் பாசியக் கட்சியின் கொடி. அது சிவப்புப் பின்னணியில் கருப்பு வட்டத்தைக் கொண்டிருந்தது. அத்துடன் பாசியக் கட்சியினர் கருஞ்சட்டை அணிந்திருந்தனர். அதே போல் இன்றும் தி.க.வினர் கருஞ்சட்டையாளர்களாகவே உள்ளனர். பாசியக் கட்சியின் கோட்பாடு வன்முறை மூலம் தங்கள் குமுகத்திலுள்ள தீங்குகளென்று தாங்கள் கருதுவனவற்றைத் தகர்த்து அழிப்பதாகும். பாசியக் கட்சியின் அதே தோற்றத்தில் அமைந்த ஒரு கட்சியின் கீழ் தலைவரின் ஆணைக்காகவும் கட்சியின் கொள்கைகளுக்காகவும் எதையும் இழக்கத் தயங்காத ஒரு கருஞ்சட்டைப் படையைப் பெரியார் உருவாக்கினார். எந்நேரத்தில் அழைத்தாலும் சிறை செல்லவோ உயிரை இழக்கவோ ஆயத்தமான நிலையில் குடும்பப் பொறுப்புகளுக்கு மாற்று ஏற்பாடு செய்துவிட்டு வருமாறு அவர் விடுத்த அழைப்பை நம்பி வந்த 3500 பேர் அடங்கிய தற்கொலைப்படையாக அது விளங்கியது. அத்தகைய படையை அவர் எப்போதுமே பயன்படுத்தவில்லை. அது ஏன்? எதற்காக இந்தப் படையை அவர் உருவாக்கினார் என்ற கேள்விகளுக்கு, ″அது தான் எங்களுக்கு விளங்கவில்லை ஐயா″ என்றுதான் இன்று வாழும் நேர்மையுள்ள மூத்த கருஞ்சட்டைப் படையினர் விடையிறுக்கின்றனர்.

நமக்கு எழும் ஐயம் என்னவென்றால் அவர் இந்த கருஞ்சட்டைப் படையை யார் யரையோ எதெதற்கோ எவ்வெப்போதோ மிரட்டிப் பணம் பறிக்கத்தான் பயன்படுத்தியிருப்பாரோ என்பதுதான்.

சிலர், அண்ணாத்துரை செய்த இரண்டகம்தான் அவரது திட்டங்களைத் தகர்த்துவிட்டது என்கின்றனர். ஆனால் இதை ஏற்பதற்கில்லை. ஏனென்றால் அண்ணாத்துரை பெரியாரின் கொள்கைகள், கோட்பாடுகளை மறுத்து அவரது கட்சியினரை ஏற்றுக்கொள்ளவைத்துப் பிரித்து எடுத்துச்செல்லவில்லை. பெரியாரின் தனி வாழ்வில் அவர் மேற்கொண்ட ஒரு செயல் கட்சியின் கோட்பாடுகளுக்கு எதிரானது என்று குறைகூறி வெளியேறிச்சென்று, தனது கட்சி தி.க.வுடன் ஒரே கொள்கை கோட்பாடு கொண்ட ″இரட்டைக்குழல் துப்பாக்கி″ என்றுதான் கூறினார். அண்ணாத்துரை தொண்டர்களை ஏமாற்றுகிறார் என்று பெரியார் எண்ணியிருந்தால் தான் முன்வைத்த குறிக்கோளில் தன் உறுதியைக் கட்டிக்காத்து அண்ணாத்துரை கொள்கைகளைக் கைவிட முடியாத நெருக்கடிகளை ஏற்படுத்தியிருக்க முடியும். அவ்வாறு கைவிட்டதால் கொள்ளைகள் கைவிடப்படுகின்றன என்று தி.மு.க.வுக்குள்ளிருந்து சம்பத் எதிர்க்குரல் கொடுத்தவுடன் கட்சியின் பெரும்பான்மைத் தொண்டர்கள் அவருடன் சேர்ந்துகொள்ள முன்வந்தனர். ஆனால் அவர் தொடங்கிய தமிழ்த் தேசியக் கட்சி என்ற பெயரைக் கேட்டதுமே பழையபடி தி.மு.க.வுக்குத் திரும்பிவிட்டனர். (அன்றைய நிலையில் தேசியம் என்ற சொல்லுக்கு இந்தியத் தேசியம் என்ற பொருள் தான் இருந்தது. இன்று கூட அதன் உண்மைப் பொருள் அரங்குகளுக்குள் தான் விளங்கிக் கொள்ளப்படுகிறதேயன்றி அக்கட்சி தோன்றி 38 ஆண்டுகளுக்குப் பின்னும் மக்கள் மன்றத்துக்கு எட்டவில்லை. அந்த அளவுக்குத் தான் நம் ″தமிழ்த் தேசிய விசைகள்″ செயற்படுகின்றன.) ஆனால் சம்பத் நடத்திய அந்தப் போராட்டத்தைப் பெரியார் வெளியிலிருந்து செய்திருந்தால் அத்தொண்டர்கள் அவரை நாடித் திரும்பியிருப்பார்கள். மாறாக பெரியார், அவரது குறிக்கோள்களில் முகாமையானது என்று இன்று பலர் பொய்யாக உரிமை கோரும் தமிழ்த் தேசிய உரிமைகளுக்கான போராட்டத்தைத் தொடுவதற்கு மாறாக அக்குறிக்கோளுக்கு எதிரியாகிய காமராசருக்குத் தோள்கொடுத்தார். சம்பத்தையும் காமராசரிடத்தில் தள்ளி அழித்தார். எனவே அண்ணாத்துரையின் இரண்டகத்தால் பெரியார் ஆற்றலிழந்து போனார் என்பது தவறு. உண்மையில் கருஞ்சட்டைப் படையை அவர் உருவாக்கியது ஒரு மிரட்டல் ஆயுதமாக அதைப் பயன்படுத்த வேண்டுமென்பதற்காகத்தான். போராட்டங்கள் என்ற பெயரில் அவர் என்னென்ன போராட்டங்களை அறிவித்தார், அவற்றில் எவ்வெவற்றை நடத்தினார், எந்த நிலையில் முடித்தார் என்பவற்றை நுணுகி ஆய்ந்தால் அந்த மிரட்டல்களின் குறி பணமா இல்லையா என்பதை நம்மால் இனங்காண முடியும்.

5. பெரியாரிடம் வெளிப்படுகிற இன்னொரு முகாமையான முரண்பாடு குடியரசு முதல் இதழ் பற்றியது. பகுத்தறிவுப் பகலவன் என்று அறியப்படும் அவர் தொடங்கிய இந்த இதழின் முதல் வெளியீட்டில் கடவுள் அருளை வேண்டி எழுதியிருக்கிறார் பெரியார்; தன் பெயருடன் நாயக்கர் என்ற சாதி அடைமொழியைச் சேர்த்திருந்தார்; வருணங்களைக் காக்க வேண்டுமென்று கூறும் கட்டுரை வெளியாகியிருக்கிறது. ஆனால் அடுத்த இதழிலிருந்து ஒரு மாற்றம். கடவுள் மறுப்பு, சாதி ஒழிப்பு போன்றவை. இந்தச் சிந்தனை மாற்றத்துக்காக நாம் அவரைக் குற்றம் கூறத் தேவையில்லை. தான் நெடுநாள் நம்பி வந்த ஒரு கருத்தைத் தன் நேரடிப் பட்டறிவு காரணமாகவோ உள்ளத்திலே தோன்றிய புதிய சிந்தனைகளினாலோ வேறொருவரின் அறிவுரையாலோ ஒருவர் மாற்றிக்கொள்வது புதிதுமல்ல, தவறுமல்ல. ஆனால் இந்த மாற்றத்தின் நோக்கம் நேர்மையானதுதானா என்பது தான் கேள்வி. நான் இதுவரை விளக்கியவற்றிலிருந்து நமக்குக் கிடைக்கும் விடை ′இல்லை′ என்பது தான்.

இந்தப் பின்னணியில் பெரியாரின் வரலாற்றை ஒரு புதிய கோணத்தில் காண்போம்.

(தொடரும்)

அடிக்குறிப்பு:

[1] திராவிட இயக்கமும் வெள்ளாளர்களும் என்ற ஆ.இரா.வெங்கடாசலபதியின் நூலில் பெரியாருக்கும் சிவனிய வெள்ளாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கும் பின் அவர்களுக்குள் உருவான இணக்கமும் பற்றிய விரிவான செய்திகள் உள்ளன.

0 மறுமொழிகள்: