21.12.07

தமிழ்த் தேசியம் ... 14

மனந்திறந்து... 4

ந.ம.கு.வினருடன் தொடர்பு கொண்ட நாளிலிருந்தே பெரியவர் திரு.வே. ஆனைமுத்துவுடனும் தொடர்பு ஏற்பட்டது. அப்போது அவரது இயக்கத்தின் பெயர் பெரியார் சமவுரிமைக் கழகம் (இப்போது மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி). அந்த இயக்கத்தின் கருத்தாய்வுக் கூட்டங்களில் சென்னை சென்று கலந்துகொண்டேன். சிந்தனையாளன் இதழில் பேயன் என்ற பெயரில் பொருளியல் உரிமை அடிப்படையிலான கட்டுரைகள் எழுதினேன். ஆனால் இதழின் பிற ஆக்கங்களிலிருந்து அக்கருத்துகள் தனிமைப்பட்டே நின்றன. இயக்கத்தை வளர்ப்பதற்கும் இதழைப் பரப்புவதற்கும் அவர் கொள்கை அடிப்படையிலன்றி இயந்திரவியலான அணுகல்களையே மேற்கொண்டார்.

உந்துவண்டி(வேன்)களை எடுத்துக் கொண்டு ஒரு முறை தமிழக வலம் வந்தார். அதில் நெல்லை மாவட்டமும் அடக்கம். நெல்லையில் ஒரு பொதுக் கூட்டத்துக்கு நான் ஏற்பாடு செய்திருந்தேன். தமிழகப் பொருளியல் உரிமைகள் குறித்த செய்திகளைத் தொகுத்து நெல்லையில் உழவர், நெசவாளர் சிக்கல்கள் குறித்து துண்டறிக்கை அச்சிட்டு பரவலாக மக்களிடையில் வழங்கியிருந்தேன். அவருக்கும் விடுத்திருந்தேன். அவர் நெல்லை வந்ததும் உடன் வந்திருந்தவர்களுக்கு அத்துண்டறிக்கையை வழங்கினேன். அவர்களில் ஒருவரான சீர்காழி முத்துசாமி அதைப் படித்துப்பார்த்துவிட்டு ″இது நன்றாக இருக்கிறது; இதை நாம் எல்லோருக்கும் வழங்கலாம்″ என்றார். ஆனைமுத்து அவர்கள், ″நம்மை மக்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? நம் துண்டறிக்கையை ஊரெங்கும் உந்துவண்டியில் சென்று வழங்குங்கள்″ என்று கடுகடுத்தார். அந்தத் துண்டறிக்கை, மண்டல் ஆணையப் பரிந்துரைகளின் நிறைவேற்றத்துக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளின் தொகுப்பாகவே இருந்தது. தன்னை மண்டல் ஆணையப் பரிந்துரைகளின் நிறைவேற்றத்துக்காக உழைப்பவராக முன்னிறுத்தவே அவர் விரும்புகிறார் என்பது தெரிந்தது. எனவே நான் இட ஒதுக்கீட்டைப் பற்றிக் குறிப்பிட்டு அது என்றும் நிலைக்க முடியாது, இன்றைய நிலையிலேயே இக்கொள்கையினால் பிளவுண்டு நிற்கும் மக்கள் அணு அணுவாகச் சிதைந்துவிடுவார்கள்; தமிழகத் தேசிய உரிமைகளுக்கும் அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கும் நடத்தும் போராட்டத்தினாலேயே மக்களிடையிலுள்ள பிளவுகளை அகற்றி ஓரணியில் கொண்டுவர முடியும் என்று விளக்கி ஒரு நீண்ட கட்டுரை விடுத்தேன். அடுத்த முறை அவரைச் சென்னையில் சந்தித்த போது கட்டுரையில் வரலாற்றுப் பிழைகள் இருக்கின்றன என்று கூறி என்னைச் சாடினார். அவரது ஆத்திரம் தேவைக்கு அதிகமாக இருப்பதாக எனக்குப்பட்டது. ஒதுக்கீடு என்பது சாதிய ஏற்றத்தாழ்வுக்கான ஒரு தற்காலிக ஏற்பாடாகத் தான் இருக்க வேண்டும்; நிலையான தீர்வுக்கான போராட்டத்துக்கு இயக்கத்தை ஆயத்தப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். இரண்டு மணி நேரக் கருத்தாடலுக்குப் பின் அவர் ″மண்டல் ஆணைய நிறைவேற்றம் தான் என் இலக்கு; இறுதியான சாதி ஒழிப்புப் போராட்டம் கடுமையானதாகவும் நீண்ட காலம் நின்று போராட வேண்டியதாகவும் இருக்கும்; அது என்னால் இயாலது″ என்று தீர்த்தறுத்துக் கூறிவிட்டார். அதன் பின்னர் இன்று வரை அவரை நான் சந்திக்கவில்லை.

இந்த இடத்தில் பெரியவர் ஆனைமுத்துவைப் பற்றி நானறிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். அவருக்கு வன்னியர் நலன்தான் உண்மையான குறிக்கோள். அதற்காகவே அவர் பிற்படுத்தப்பட்டோருக்கு நடுவணரசுப் பணியில் ஒதுக்கீடு வேண்டுமென்று பரிந்துரைத்த மண்டல் ஆணையப் பரிந்துரைகள் நிறைவேற்றத்துக்காகப் பாடுபட்டார். வட மாவட்டங்களில் உள்ள வன்னியர்கள் இராமதாசு தலைமையில் போராடியதன் விளைவாகத் தமிழகத்தில் 20 நூற்றுமேனி ஒதுக்கீடு மிகப்பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கி அதில் வன்னியர்களையும் சேர்ந்துக் கருணாநிதி ஆணையிட்ட போது வன்னியர்களுக்கு அதில் உள் ஒதுக்கீடு வேண்டுமென்று கேட்டார்; ஏனென்றால் அந்த 20 நூற்றுமேனியில் பெரும்பகுதியைத் தமிழகத்தில் அரசியல் செல்வாக்கு மிக்க முக்குலத்தோர் எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு மிகுதி. இவரது அணுகலின் விளைவாக, ஒதுக்கீட்டு நோக்கத்துக்காகத் தமிழகத்தைப் பாண்டிய மண்டலம், சோழ மண்டலம், கொங்கு மண்டலம் என்று பிரித்து அந்தந்த மண்டலத்திலுள்ள சாதிக் குழுக்களின் விகிதப்படி ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று பொ.வீ. சீனிவாசன், பெ.பழனிச்சாமி என்ற இருவர் இதற்கேற்பத் தமிழக வரைபடம் ஒன்றில் வெவ்வேறு வண்ணங்களில் இம்மூன்று மண்டலங்களையும் காட்டியுள்ளனர். இதன் அடுத்த கட்டமாக, முக்குலத்தோர் இன்றுள்ள தமிழகத்தில் ஒரு நாளும் முதல்வராக வர முடியாது; எனவே தென்மாவட்டங்களை இணைத்து மதுரையைத் தலைநகராகக் கொண்ட ஒரு தனி மாநிலம் வேண்டும் என்று கேட்கத் தொடங்கியுள்ளனர் சிலர். ஆக, ஒதுக்கீட்டுக் கோட்பாடு அதன் தவிர்க்க முடியாத இலக்கைத் தொட்டுக்கொண்டிருக்கிறது. அதாவது தமிழக மக்களை அணு அணுவாகச் சிதறச் செய்வதுடன் தமிழகம் என்னும் நிலப்பரப்பைப் பிரிக்கவும் தொடங்கியுள்ளது. ஆக, ஒதுக்கீட்டுத் திட்டத்தை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருக்கும் பெரியவர் வே.ஆனைமுத்து இப்போது தன் இயக்கத்துக்கு மார்க்சிய - பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி என்று பொருத்தமாகத்தான் பெயர் வைத்துள்ளார். பெரியாரியம் தமிழக மக்களை மட்டுமல்ல, தமிழக மண்ணையே சாதி அடிப்படையில் சிதறடிக்கவும் ″மார்க்சியம்″ அவர்களைப் பொருளியல் அடிப்படையில் சிதறடிக்கவும் போதுமல்லவா?

தான் பெரியாரோடு நெருங்கிப் பழகியவன், பெரியாரின் சிந்தனைகளை முழுமையாக அறிந்துள்ளவன் தான் ஒருவன் தான் என்று பெருமை பேசுபவர் அவர். உண்மை தான். அதனால் தான் இட ஒதுக்கீட்டைத் தாண்டி அவரால் சிந்திக்க முடியவில்லை. நக்சலிய இயக்கத்தவரும் திராவிட இயக்கத்தவரும் இணைந்து செயற்படுவது என்ற அடிப்படையில் தென்னாற்காடு மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் இணைந்து செயற்படுவதைப் பற்றி ஒரு சொல் கூடப் பேசாமல், பெரியாரின் சிந்தனைகளை அறிந்தவன் தான் ஒருவன் தான் என்று முழங்கினார். கேட்டவர்கள் சலிப்படைந்தனர். பெரியாரின் சிந்தனைகள் என்ற தொகுப்பை வெளியிட்டவர் அவர் என்பது சரிதான். ஆனால் இப்படி அவர் முழங்கும் போது அவர் மனக்கண்ணில் தன் எதிரே ஒருவரை நிறுத்தி அவரைப் பார்த்துத் தான் முழங்குகிறார். அவர் வேறு எவருமில்லை, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணிதான்.

பெரியாருக்குப் பின் திராவிடர் கழகப் பொறுப்பு தனக்குத் தான் வரும் என்ற எதிர்பார்ப்பு அவருக்கு இருத்ததை அவரோடு பழகிய நாட்களில் அறிந்துகொள்ள முடிந்தது. ஆனால் அது கைகூடாமல் போனது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி இருந்தது. எனவே, தான் ஒருவன் தான் பெரியாரின் பின்னடியாக(வாரிசாக) இருக்கத் தகுந்தவன் என்று அவர் முழங்கினார். வீரமணி உந்து வண்டியில் தமிழகத்தைச் சுற்றி வந்ததைப் போலத் தானும் சுற்றி வந்தார்.அதனால் அவர் பொறுப்பில் இருந்த, பங்கு அடிப்படையிலான குழுமம் ஒன்றுக்கு உரு 80.000∕- க்கு மேல் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

பொதுவாக ஓர் இயக்கத்தில் உடைவு ஏற்படும் போது அதற்குப் பின்னணியாகச் சில காரணங்கள் இருக்கும். கொள்கை முரண்பாடுகள், தனிமனித மோதல்கள், பணம், பதவி ஆகியவை கருதி நடைபெறுபவை என்று அவை இருக்கும். அவற்றின் ஊடாக வெவ்வேறு மக்கள் குழுக்கள் அணி திரள்வதும் உண்டு. உருசியாவில் புரட்சிக்கு முந்திய உருசியப் பொதுமைக் கட்சி(உருசிய குமுக மக்களாட்சிக் கட்சி என்பது அதன் அப்போதைய பெயர்) பெரும்பான்மை (போல்சுவிக்), சிறுபான்மை (மென்சுவிக்) என்று பிரிந்த பின் அவை ஒன்றுக்கொன்று போட்டிபோட்டுக்கொண்டு புரட்சியை விரைவுபடுத்தின. அது போல் இந்தியாவில் காந்தியை எதிர்த்த சுபாசு சந்திரபோசு இந்திய விடுதலை என்பதை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எய்த வேண்டும் என்று செயலில் இறங்கியதன் விளைவாகத்தான் ஆங்கிலரும் காந்தியும் உடன்பாடு கண்டதால் இன்று நமக்கு ஒரு போலி விடுதலை கிடைத்துள்ளது. போசு அதைச் செய்யவில்லையாயினும் ஒரு போலி விடுதலை தான் கிடைத்திருக்கும்; ஆனால் கொஞ்சம் காலம் பிடித்திருக்கும்.

திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.க. தோன்றிய போது அது கொள்கை அடிப்டையிலான பிளவுதான் என்று காட்ட அண்ணாத்துரை முயன்றார். பிளவுபட்ட இரு இயக்கங்களும் இரட்டைக் குழல் துப்பாக்கியென்றார். வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற பொருளியல் முழக்கத்தை முன்வைத்தார். ″திராவிடர்″ என்பது இனத்தைக் குறிக்கிறது; ″திராவிட(ம்)″ என்பது நிலத்தைக் குறிக்கிறது என்றார். ஆனால் பெரியார் இத்தகைய முகமூடி எதையும் அணியவில்லை. திராவிட இயக்கத்தின் அரசியல் எதிரியான பேரவைக் கட்சிக்குள் சென்று காமராசரைத் தூக்கிப்பிடித்தார். இன்னொரு கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால், திராவிட இயக்கத்தின் உண்மையான குறிக்கோள் என்ன? கடவுள் மறுப்பா, சாதி ஒழிப்பா, பார்ப்பனர் எதிர்ப்பா, பார்ப்பனர் ஒழிப்பா, பார்ப்பனிய ஒழிப்பா, இட ஒதுக்கீடா, தமிழ் மொழிக் காப்பா, இந்தி எதிர்ப்பா, தமிழக விடுதலையா, பொருளியல் உரிமையா, நிகர்மை அல்லது பொதுமையா என்று எவரும் வரையறுத்ததாக நமக்குத் தெரியவில்லை. எனவே மேலே பட்டியலிட்ட குறிக்கோள்களுக்குள் முரண்களோ மோதல்களோ உருவாகும் போது எவ்வெவற்றைத் தற்காலிகமாக ஒதுக்கிவைக்கலாம், எவ்வெவற்றைக் கைவிடலாம், எவ்வெவற்றைக் கைவிடக் கூடாது, கைவிட முடியாது என்ற வரையறை எதுவும் இல்லை. ஆனால் நடைமுறையில் தமிழகத் தேசியப் பொருளியல் உரிமை என்ற ஒன்று, இடையில் சிறிது காலம் திராவிட இயக்கத்தின் கவனத்தில் இருந்து இப்போது முற்றிலும் அகன்றுவிட்டது. பிறவற்றை அவரவர் தத்தமது வசதிக்கேற்ப அவ்வப்போது கையாண்டு வருகின்றனர். இதனால் இன்றைய இளைஞர்கள் தமிழ்த் தேசியம் என்ன என்ற தெளிவேயின்றி அங்கும் இங்குமாக ஓடி ஓடி ஓய்ந்து போகின்றனர்.

பெரியாருடன் அறிவு, கருத்தாடல் என்ற அடிப்படையில் உறவு கொண்டிருந்த ஆனைமுத்துவை விட அவரது வளர்ப்புப் பிள்ளை போல் அவருக்குப் பணிவிடை செய்து வந்த வீரமணி அவருக்கு நெருக்கமானதிலும் இயக்கத்தில் செல்வாக்குப் பெற்றதிலும் வியப்பில்லை. அந்த நெருக்கத்தின் விளைவாகவே, ஆனைமுத்து அடிக்கடி குறிப்பிடுவதைப் போலப் பெரியாரின் இறுதிக் காலத்தில் வீரமணியும் மணியம்மையாரும் அவரை அடித்துத் துன்புறுத்தித் தங்களுக்கு வேண்டிய உரிமைகளைப் பெற்றுக்கொண்டிருக்கவும் வாய்ப்புள்ளது. எத்தனையோ வழிகளில் (தன்னை நம்பிய தமிழக மக்களை ஏமாற்றி) அக்கிழவர் சேர்த்து வைத்திருந்த அப்பெருஞ்செல்வம் அவரது இறுதிக்காலத் துன்பத்துக்கே காரணமாயிருந்திருக்கிறது. சமய மடங்களில் நடைபெறுபவை போன்றதுவே இதுவும்.

ஆனைமுத்து அவர்கள் நிறைய தொடர்புகளைப் பேணியவர். எல்லாக் கட்சிப் பெருமக்களிடமும் அதிகார அமைப்புகளோடும் அவர் நல்லுறவு வைத்திருப்பார். எந்த ஆட்சி நடைபெற்றாலும் எவருக்கும் இடமாற்றுதலோ பதவி உயர்வோ பெற்றுத்தர அவரால் முடியும் என்பதை அவரோடு பழகிய காலத்தில் நான் கண்டிருக்கிறேன்.

திரு. ஆனைமுத்து அவர்களின் அணியில் இருந்தவர்களில் பெரியவர் சேலம் சித்தையன் அவர்கள் எனது செயற்பாடுகளைப் புரிந்து ஏற்று ஆதரித்தவர். அவருக்கே எனது சிந்தனை ஓட்டம் இருந்ததை என்னால் அறிய முடிந்தது. ஆனால் எதையும் செய்ய இயலாத நிலையில் மூப்பெய்தியும் தனிமைப்பட்டும் இருந்தார் என்பதையும் பதிவு செய்ய வேண்டும்.

(தொடரும்)

1 மறுமொழிகள்:

சொன்னது…

//எத்தனையோ வழிகளில் (தன்னை நம்பிய தமிழக மக்களை ஏமாற்றி) அக்கிழவர் சேர்த்து வைத்திருந்த அப்பெருஞ்செல்வம் அவரது இறுதிக்காலத் துன்பத்துக்கே காரணமாயிருந்திருக்கிறது. சமய மடங்களில் நடைபெறுபவை போன்றதுவே இதுவும்.//

இப்படி எல்லாம் எழுதினால் ஜெயமோகன் உங்களை முக்கியமான சிந்தனையாளர் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்லுவார்?!