17.12.07

தமிழ்த் தேசியம் ... 13

மனந்திறந்து... 3

இதற்கிடையில் முகாமையான சில நிகழ்வுகள் இடம்பெற்றன. 1980-81இல் சென்னையில் பெருஞ்சித்திரனாரைச் சந்தித்தேன். அவரைப் பல வேளைகளில் இழிவான முறையில் ஏமாற்றியவரும் அவரது முயற்சிகளுக்கு எதிராகச் செயற்பட்டவருமான கருணாநிதிக்கு வேண்டுகோள்கள் வைப்பதும் தேர்தல்களின் போது அவருக்கு வாக்களிக்கத் தன் பற்றாளர்களுக்கு அழைப்பு விடுப்பதுமாகத் தன்னை நம்பித் தன் பின்னால் அணி திரண்டு நிற்கும் தொண்டர்களைக் கருணாநிதியின் வாலாக்குவது பற்றிக் குறை கூறி அவருக்கு நான் எழுதியிருந்த மடலுக்கு அவர் நேரடியாகத் தந்த விடை எனக்கு நிறைவு தரவில்லை. எனவே அவரோடுள்ள தொடர்பை அறுத்துக் கொண்டேன்.

1980ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு நண்பரின் அறிவுரையின் பேரில் அண்ணா தொழில் நுட்பக் கல்லூரி(இன்றைய அண்ணா பல்கலைக் கழகம்) மாணவர் ஒருவரைக் கல்லூரி விடுதியில் சந்தித்தேன். அவருடனிருந்த இரு இளைஞர்கள் துணையுடன் தமிழ்த் தேசியப் போராளிகள் என்று அறியப்பட்ட அல்லது தங்களை அறிவித்துக்கொண்ட பலரை அவர்களின் வீடுகளுக்குச் சென்று சந்தித்தேன். அரு.கோபாலன், விடுதலை இராசேந்திரன், அவர் துணைவியார் கோவி. சரசுவதி போன்றோர் அவர்களில் முகாமையானவர்கள். பின்னும் சில தடவைகள் சென்னை செல்லும் போது பேராசிரியர்கள் இளவரசு, பெரியார்தாசன் ஆகியவர்களைச் சந்தித்தேன். நண்பர் நா.அரணமுறுவலும் சில வேளைகளில் உடன்வந்துள்ளார். இந்தத் தேடல் சென்னைக்கு வெளியிலும் தொடர்ந்தது. இந்தச் சந்திப்புகளின் விளைவாக ஓருண்மை புரிந்தது. இத்தகையவர்களில் மிகப் பெரும்பான்மையினரும் வெறும்பேச்சு பேசிக் கொண்டு தாங்கள் எந்தத் தேசியத்துக்காகப் போராடுவதாகக் கூறிக்கொள்கிறார்களோ அத்தேசிய நலன்களின் எதிரிகளோடு இணக்கம் கண்டு அத்தேசியத்தை விற்றோ அடமானம் வைத்தோ கிடைக்கும் ஆதாயத்தில் பங்கு பெறுவதற்காகத் ″தேசிய விடுதலை″ என்று கூறி மிரட்டுகிறவர்கள் என்பதுவே அந்த உண்மை. அதிலும் ″தமிழியக்கம்″ பேசும் பேராசிரியர் ஒருவர் ஒரு முறை சந்தித்த போது மீண்டும் வரச் சொன்னார். சென்ற போது வீட்டிலிருந்துகொண்டே இல்லை என்றார்.

மதுரையிலிருக்கும்போது (1981-83) தனித்தமிழ் இயக்கத்தின் அரசியல் பின்னணி என்ற பேரா. கா.சிவத்தம்பியின் நூலைப் படிக்க வாய்த்தது. அதற்கு மறுப்பாக, கா.சிவத்தம்பியின் அரசியல் பின்னணி என்ற கட்டுரையை எழுதினேன். ஈழ மாணவர் அமைப்பு (ஈரோசு) சார்பில் தா.கோவேந்தன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த பொதுமை இதழில் அது தொடர்கட்டுரையாக வந்தது. இங்குள்ள பொதுமைக் கட்சியினர் நடத்திய நிகழ்ச்சிகளில் ஈழ மாணவர் அமைப்பினர் தங்கள் வெளியீடுகளை விற்பது அன்றிலிருந்து தடைசெய்யப்பட்டது. மதுரையில் இருக்கும்போது பேரா.கோ. கேசவனின் மண்ணும் மனித உறவுகளும் நூலைப் படிக்க வாய்த்த போது அதற்கு மறுப்பாக விளைப்பு உறவுகளும் குமுக உறவுகளும் என்ற கட்டுரையை பேயன் என்ற பெயரில் எழுதினேன்.

இந்தக் கட்டத்தில் குணாவின் தமிழக ஆய்வரணைச் சேர்ந்த பொன். பரமேசுவரன் சென்னையிலிருந்தார். அவரோடு தொடர்பு கொண்டு, தேசியச் சுரண்டலில் பல்வேறு துறையினர் பாதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி அவர் வாழ்ந்த பகுதியில் செறிந்திருந்த கைத்தறி நெசவாளர்களிடத்தில் பணிபுரிய வலியுறுத்தினேன். அதற்குத் தேவையான ஆள்வலிமையும் அமைப்பும் இருந்தாலும் அவர் போன்றோர் மாவோயியத்தின் பாட்டாளிய மற்றும் பண்பாட்டுப் புரட்சிக் கோட்பாடுகளைத் தாண்டி வர இயலாதிருந்தனர். இளைஞர்களை அறைகளிலிருத்திக் கலந்துரையாடல் என்ற எல்லையைத் தாண்டிக் களத்திலிறக்க ஏனோ விரும்பவில்லை. இந்த நிலையில் ஒரு புதிய தொடர்பு வந்தது. அது கோவை ஞானி மூலமாக வந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் எசு. என். நாகராசன் என்பவர் தான் இத்தொடர்புக்கு வழியமைத்தவர். ஞானி ஒரு வகையில் அவருக்கு மாணவர், அவ்வளவு தான். தொடர்பு கொண்டவர்கள் கேரள மாநிலத்தில் வலுப்பெற்றிருந்ததாக அவர்கள் கூறிக் கொண்ட நடுவண் மறுசீரமைப்புக் குழு என்ற மா.லெ., அதாவது நக்சலிய இயக்கத்தவரும் காம்ரேட் என்னும் மலையாள இதழின் ஆசிரியருமான ″காம்ரேட்″ கே.என். இராமச்சந்திரன் என்பவர். அவருடன் நான், நாகராசன், பொன். பரமேசுவரன், எசு.வி. இராசதுரை ஆகியோர் கலந்து உரையாடினோம். ந.ம.கு. இந்தியப் புரட்சியை இந்தியத் தேசியங்களின் விடுதலைப் புரட்சியின் திரட்சியாகக் காண்பதாகவும் அந்த அடிப்படையில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்தத் தாங்கள் ஒத்துழைப்பதாகவும் இராமச்சந்திரன் கூறினார். தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் பின்னணியில் தேசிய விடுதலை ஆர்வம் உருவாகியுள்ளது; கேரளத்தில் இது எவ்வாறு தோன்றியது என்று கேட்டோம்.

கேரளத்தில் தாங்கள் கள ஆய்வு செய்த போது அங்கு நிலவும் பொருளியல் வளர்ச்சிநிலைக்குப் பொருந்தாத, அதனை மிஞ்சிய பண்பாட்டு நிலை, அதாவது பாட்டாளிய இயக்க வளர்ச்சி நிகழ்ந்திருப்பதைக் கண்டதாகவும் அதைத் தடம்பிடித்த போது தேசியங்களை நடுவணரசு சுரண்டுவதால் பொருளியல் வளர்ச்சி தடைப்படுவதைக் கண்டதாகவும் அதிலிருந்து இந்த முடிவை எய்தியதாகவும் கூறினார். எனவே தமிழகத் தேசிய விசைகளோடு ந.ம.கு. ஓர் அணியமைத்துச் செயற்படுவதென்று அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. மார்க்சியம் இன்று என்ற பெயரில் ஓர் இதழ் வெளியிடுவதெனவும் அதற்கு எசு.வி.இராசதுரை ஆசிரியராகச் செயற்படுவதெனவும் முடிவு செய்யப்பட்டது. அங்கிருந்து பெரியவர் வே.ஆனைமுத்து அவர்களைச் சென்று சந்தித்து அவரது பெரியார் சமவுரிமைக் கழகத்தையும் இந்த அணியில் இணைத்துச் சில முழக்கங்களை அவரது அச்சகத்திலேயே அச்சிட்டுப் பிரிந்தோம். அடுத்து ஒரு கூட்டம் கல்பாக்கத்தில் நடந்தது. அதில் கேரளத்தைச் சேர்ந்த வேணு என்பவர் கலந்து கொண்டார். இவர் ந.ம.கு.வில் கே.என். இராமச்சந்திரனுக்கு மேல்நிலையில் உள்ளவர் என்று கூறப்பட்டது. அக்கூட்டத்தில் இந்திய அளவில் ஓர் அமைப்பை உருவாக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஓர் அனைந்திந்தியத் தலைமையின் கீழ் அனைத்துத் தேசிய அமைப்புகளும் செயற்பட வேண்டும் என்ற கருத்தை வேணுவும் பிறரும் முன்வைத்தனர். நான் அதை ஏற்கவில்லை. ஒவ்வொரு தேசிய அமைப்பிலிருந்தும் இரண்டு பேராளர்கள் மட்டுமே இந்திய அமைப்பின் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்; அவர்கள் தேசிய அமைப்புகளின் கருத்தை இந்திய அமைப்பில் எடுத்துச் சொல்வோராகவும் இந்திய அமைப்பு மேற்கொள்ளும் முடிவுகளைத் தேசிய அமைப்புகளிடம் கூறி விளக்குவோராகவும் இருக்க வேண்டும்; அவற்றை ஏற்பதோ மறுப்பதோ தேசிய அமைப்புகளின் உரிமையாயிருக்க வேண்டும்; இந்தப் பேராளர்கள் உட்பட தேசிய அமைப்புகளின் உறுப்பினர் எவரையும் இந்திய அமைப்பு கட்டுப்படுத்தக் கூடாது என்ற கருத்துகளை நானும் மதுரைத் தோழரும் முன்வைத்தோம். இந்திய அமைப்புக்கு முழு அதிகாரம் வேண்டும்; இல்லையென்றால் அது தன் ஒருங்கிணைப்புப் பணியைச் செய்ய முடியாது என்றனர். இந்தியாவிலுள்ள தேசியங்கள் வளர்ச்சி நிலையில் தமக்குள் பெரும் ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டுள்ளன; எனவே முழு அதிகாரமுள்ள அமைப்பு ஒரே நேரத்தில் ஒரே வகையான நடவடிக்கையை எடுத்தால் இப்போது போல் ஒன்றிரண்டு தேசியங்கள் பிற தேசியங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் நிலை வரலாம்; அதே நேரத்தில் தளர்வான ஓர் இந்திய அமைப்பு இருந்தால் பின்தங்கிய தேசியங்களில் வளர்ச்சியை ஊக்கும் வழிகாட்டல்களை நடுவண் அமைப்பு மூலமாக மேற்கொள்வதற்கான ஒருங்கிணைப்பைப் பெற முடியும் என்று நாங்கள் வாதிட்டோம். நாங்கள் இன்றியே தமிழக ந.ம.கு. அமைக்கப்பட்டது. கூட்டத்தின் இறுதியில், நாம் இங்கிருந்து கலைந்து சென்று களத்தில் மக்களை, அவர்களில் எந்த வகுப்பினரை, எந்தக் குறிக்கோள்களை, முழக்கங்களை முன்வைத்து அணுகுவது என்பது குறித்த ″செயல்திட்டம்″ வேண்டும் என்று கேட்டேன். கூட்டத்தை நெறிப்படுத்திய எசு.வி. இராசதுரை, ″மார்க்சியப் பொருளில்″, ″செயல்திட்டம்″ என்பது அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கையைப் போல் வாக்குறுதிகளின் ஒரு பட்டியல்தான் என்பது போல் பொருள் கூறி நழுவ முயன்றார். ″செயல்திட்டம்″ என்ற பெயர் பொருந்தாதென்றால் வேறு பெயர் வைத்துக்கொள்ளுங்கள்; ஆனால் இங்கிருந்து செல்வோர் தொடர்ந்து என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூறுங்கள் என்று கேட்டதற்கு இறுதி வரை விடை கிடைக்கவில்லை. எனவே இதுவும் அனைவரையும் அறைகளுக்குள் அடைத்துவைத்துக் கலந்துரையாடுவதைத் தாண்டிச்செல்ல மறுப்பது என்ற வகையிலேயே அமைந்திருந்தது.

அதன்பிறகு, நக்சலிய இயக்கத்தில் செயற்பட்ட போது வெடிகுண்டு செய்தார் என்ற குற்றச் சாட்டில் மரண தண்டனை பெற்றவரும் பொது மக்கள் குடியுரிமை ஒன்றியம்(பி.யு.சி.எல்.)[1] என்ற அமைப்பின் முயற்சிகளால் பிணையில் வெளியில் வந்தவருமான பாவலர் கலியபெருமாள் இப்போது தமிழ்த் தேசிய விடுதலையை ஏற்றுக்கொண்டு அதற்காகப் போராட இயக்கம் நடத்தப் போவதாகவும் அதை அறிவிக்கப் பெண்ணாடத்தில் ஒரு கூட்டம் நடக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலுமிருந்து ″தமிழ் உணர்வாளர்களும்″ ″தமிழ்த் தேசிய உணர்வாளர்களும்″ பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டமே ஓர் ஏமாற்று என்று அதில் உரையாற்ற வந்திருந்த குணா சண்டையிட்டு வெளியேறினார். கலியபெருமாள், தமிழரசன் முரண்பாடு தோன்றி அவர்கள் பின்னர் பிரிந்தனர். கலியபெருமாள் பிணையில் வந்ததற்கும் கூட்டம் நடந்ததற்கும் முயற்சி எடுத்தவர் இராசதுரை தான் என்று கூறப்பட்டது.

இதற்கிடையில் மார்க்சியம் இன்று இரண்டு மூன்று இதழ்கள் வந்திருந்தன. அடுத்து தனக்கு அமெரிக்காவிலிருந்து ஓர் ஆய்வுத் திட்டம் கிடைத்திருப்பதாகவும் அதனால் தான் தொடர்ந்து இதழின் ஆசிரியர் பணியைப் பார்க்க முடியாது என்றும் கூறி இராசதுரை விலகிவிட்டார் என்று கூறப்பட்டது. அதன் பிறகு ஒரேயொரு இதழ் வெளிவந்ததாக நினைவு.

நான் எழுதியிருந்த விளைப்பு உறவுகளும் குமுக உறவுகளும் என்ற கட்டுரையை மார்க்சியம் இன்று இதழில் வெளியிட தோழர் பொன்.பரமேசுவரன் மூலம் குணா முயன்றபோது அது மறுக்கப்பட்டதால் அதனை அவரே தன் தமிழக ஆய்வரண் மூலமாக வெளியிட்டார் என்பதை ஓர் இடைக்குறிப்பாகக் கூறுகிறேன்.

நான் அறிந்த வரை இராசதுரை காசுக்காக எழுதுபவர். மார்க்சியம் என்ற பெயரில் அதன் எதிர்ப்புக் கோட்பாடுகளான இருத்தலியத்தையும் அயலாதலை(அந்நியமாதல்)யும் எழுதியவர். பெரியார் வாழ்ந்த காலத்தில் அவரது கோட்பாடுகளை எள்ளி நகையாடியவர். இன்று பெரியாரைக் கடவுளாக்குவதற்காகத் தொடர்ந்து நூல்களை எழுதிக்கொண்டிருக்கிறார். தமிழகத்துக்கு உள்ளிலும் வெளியிலும் பெரியாருக்கு ஒரு கடவுள் படிமம் கொடுப்பதால் பல வகைகளில் ஆதாயம் பெறும் குழுக்கள் உள்ளன. குறிப்பாகப் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் வாணிக வல்லரசியங்களுக்கும் தமிழக அறிவாளிகளின் சிந்தனைகளைப் பொருளியல் சுரண்டல்களிலிருந்து திருப்பவும் ஒதுக்கீட்டு அரசியலாருக்கு வலிமை சேர்க்கவும் இது தேவையாகிறது. இந்திய விடுதலை, தமிழ் மேம்பாடு பற்றிய முயற்சிகளில் அடித்தள மக்களின் பணிகளை உலகுக்கு எடுத்துரைக்கும் ஆர்வம் அவரிடம் வெளிப்பட்டாலும் கூலிக்கு எழுதும் பண்பு அதை மீறி நிற்கிறது என்பது என் கணிப்பாகும். அதோடு இவரும் இவர் போன்று கோவை ஞானி, அ.மார்க்சு போன்றோரும் அமைப்புகள், நிறுவனங்கள், கட்சிகள், இயக்கங்கள் ஆகியவற்றுக்கு எதிரானவர்கள். கட்சி என்று ஒன்றிருந்தால் அதில் அதிகாரமும் ஆதிக்கமும் உருவாகிவிடும் என்று கூறுபவர்கள். கருத்து(பிரச்சாரம்) இல்லாத இலக்கியம், கட்சி இல்லாத அரசியல், இயங்கியல் இல்லாத மார்க்சியம் (அத்துடன் கரு இல்லாத குழந்தை என்ற ஒன்றையும் நாம் சேர்த்துக் கொள்ளலாம்) பற்றியெல்லாம் கூறுவார்கள். கரு என்ற ஒன்றே கிடையாது, அனைத்தும் உருவெளித் தோற்றம், மாயை, பொய்ம்மை என்பது இவர்கள் வலியுறுத்தும் சிந்தனை. கரு என்ற ஒன்று இல்லை என்பார் அ.மார்க்சு; இந்த நொடி தான் உண்மை, நேற்று, நாளை என்ற தொடர்ச்சியெல்லாம் கிடையாது என்பார் இராசதுரை. நுணுகிப் பார்த்தால் நேற்று என்பது கடந்து போன உண்மை, நாளை என்பது நாம் எதிர்பார்த்துக் காத்து நிற்கும் வாய்ப்பு, இந்த நொடி என்பது தான் சொல்லி முடிப்பதற்குள் கடந்து சென்றுவிடும் ″மாயை″, ஆனால் இந்த ″மாயை″ தான் நாம் நேரடியாகப் புலனுணரும் உண்மை, நேற்றையும், நாளையையும் இணைக்கும் பாலம். நம் அறிதல் பிழைகளினால் ஏற்படும் தவறுகளைக் காட்டி இயற்கையையும் உலகையும் வாழ்வையும் காலத்தையும் பொய் என்று கூறும் தவற்றைச் செய்கிறார்கள் இவர்கள். நான் எழுதி தாராமதி இதழில் தொடராக வந்த மார்க்சியம் எனும் கட்டுரையைப் பற்றிக் கருத்துக் கூறுகையில் ″இயங்கியல் விளக்கம் நன்றாக இருக்கிறது; ஆனால் அதை நான் மார்க்சியம் என்று ஏற்றுக்கொள்ள முடியாது″ என்றார் ஞானி. ஆக, இயங்கியல் இல்லாத மார்க்சியம் அவருடையது. ஆதிசங்கரரின் இரண்டன்மையியத்திலிருந்து (அத்துவைத்திலிருந்து) தான் மார்க்சியத்தைப் புரிந்துகொண்டதாக அவர் கூறுகிறார். ஆதிசங்கரர் உலகில் அனைத்துமே மாயை, பொய்த்தோற்றம், உண்மையென்று எதுவும் கிடையாது என்றவர். இந்தக் கோட்பாட்டிலிருந்து மார்க்சியத்தைப் பார்ப்பதாகக் கூறும் ஞானியை ஒரு மார்க்சியராகத் தமிழகப் படிப்பாளிகள் ஏற்றுக்கொண்டது ஒரு விந்தைதான். தமிழகத்தில் இவையெல்லாம் விந்தையல்ல என்கிறீர்களா? இந்த ″மாயாவாதி″களுக்கு ஏதோவொரு வகையில் வெளிவிசைகளின் தொடர்பும் இருக்கிறது. ஆனால் நிகழ்காலத் தமிழக வரலாற்றில் தமிழ்த் தேசியம் என்ற அரங்குக்குள் இவர்கள் புகுந்து சில காலமாயினும் ஆட்சி செலுத்தியிருக்கிறார்கள், செலுத்துகிறார்கள்.

ந.ம.கு.வில் ஒரு ″புரட்சிகர மாற்றம்″ வந்தது. கேரள, அதாவது தலைமை அமைப்பில் வேணுவுக்கும் கே.என்.இராமச்சந்திரனுக்கும் தனிப்பட்ட ஏதோ பகைமையால் கே.என். இராமச்சந்திரன் பிரிந்தார். அவருடன் தமிழகக் குழுவும் விலகியது. . இப்பிளவுக்கு இராமச்சந்திரன் (நாகராசனும் சேர்ந்து) கூறிய காரணம், தேசியங்களின் விடுதலைப் புரட்சிகளின் தொகுப்பே இந்தியப் புரட்சி என்ற நிலைப்பாடு ″மக்களிடையிலிருந்து உருவாகவில்லை″யாம் (இதுவரை அது உறைக்கவில்லையா?); வேணு போன்றவர்களால் ″மேலிருந்து திணிக்கப்பட்டதா″ம்; எனவே அது ″மக்களாட்சிக் கோட்பாட்டுக்கு எதிரானதா″ம். அவ்வாறு பிரிந்தவர்கள் ஓர் அனைந்திந்நிய ″புரட்சிகரப்″ பொதுமை இயக்கத்தோடு (இவர்கள் சிவப்பு விண்மீன் என்றொரு ஆங்கில இதழ் நடத்துகின்றனர். அவ்விதழின் பெயரில் அவர்கள் அழைக்கப்படுவது வழக்கம்) இணைந்தனர் இவர்களுக்குத் தேசியங்களின் விடுதலை என்பதில் உடன்பாடு கிடையாது; ஆனால் ″மக்களாட்சிக் கோட்பாடுகளின்படி″ இயங்குபவர்கள் என்று எசு.என். நாகராசன் ″வழிகாட்டினார்″. ஆக, நாகராசனுக்கு மார்க்சு, ஏங்கல்சு, லெனின், மாவோ போன்ற மார்க்சியத் தலைவர்களும் அந்த வட்டத்துக்கு வெளியில் உலகில் தோன்றிய தலைவர்களும் அவர்கள் மக்களிடம் கேட்டுக்கொண்டு தங்கள் கருத்துகளை முன்வைக்கவில்லை என்ற அடிப்படையில் ஒதுக்கத்தக்கவர்கள். இவ்வாறு வெவ்வேறு களங்களிலிருந்து ″தமிழ்த் தேசிய விசை″களில் சிலரை இழுத்துச் சென்று நட்டாற்றில் விட்டாயிற்று. இந்த இயக்க நடைமுறைகளில் நாகராசனின் தலைமையை நம்பி முனைப்பாகச் செயற்பட்ட நேர்மையும் தூய்மையும் கடும் உழைப்பும் ஊக்கமும் நிறைந்த தோழர் பொன்.பரமேசுவரன் தான் நம்பிய பாட்டாளியக் கோட்பாட்டினால் தன் வேலையை இழந்து வயிற்றுப் பிழைப்புக்காக அரபு நாடுகளுக்குச் சென்றுவிட்டார்.

நானறிந்த வரை எசு.என்.நாகராசன் அதன் பிறகு எந்தச் செயற்பாட்டிலும் ஈடுபடவில்லை. இனி அழிப்பதற்கு உருப்படியான தமிழ்த் தேசிய விசை எதுவுமில்லை என்று மனம் நிறைந்திருக்குக் கூடும். இவர் மாவோவைக் கடவுளாக வணங்குபவர். நாம் இதுவரை குறிப்பிட்ட ″மார்க்சியர்″ அனைவரும் மாவோ வழிபாட்டினர் தாம் என்றாலும் இவர் தான் தலைமைப் பூசாரி. மாவோவைத் திருமாலின் (எத்தனையாவது என்று சொல்ல முடியவில்லை; ஏசுவையும் முகமது நபியையும் கூடத் தோற்றரவுகள் என்று கூறிக் கொள்கின்றனர்) தோற்றரவு என்று கருதும் வீர மாலியர்(வைணவர்). அதே நேரத்தில் தமிழ்த் தேசிய விசைகளைக் கெல்லியெடுத்து அழித்து ஊழித் தாண்டவமாடிய சிவன். இந்தியப் பொதுமை இயக்கத்தில் தேசியங்களின் விடுதலையை முன்வைத்து பொதுமை (மார்க்சியம்), அதாவது இடங்கைப் பொதுமைக் கட்சி பிரிந்து தனியாக வந்ததற்குத் தானே காரணம் என்பவர். நக்சலிய இயக்கத்தினுள்ளும் தேசியங்களின் விடுதலைக் கோட்பாட்டைப் புகுத்தியவன் தானே என்று பெருமையடித்துக் கொண்டவர். இவை உண்மையாக இருந்தால் தேசிய விசைகளை ஏமாற்றி ஈர்த்தெடுத்து அழிப்பது தான் அவரது உள்நோக்கம் என்பது இப்போது புரிந்திருக்கும்.

″மார்க்சியர்″களின் அடுத்துக்கெடுக்கும் பணிக்கு இன்னொரு சான்று: நான் மேலே குறிப்பிட்ட பெரியாற்று அணையில் பணிபுரிந்த நண்பரைப் பற்றி நெல்லைப் பகுதி நண்பர் ஒருவர் கூறியது. அவர் நெல்லையில் பணியாற்றிய போது அங்குள்ள தி.க., தி.மு.க., தனித்தமிழ் இயக்க இளைஞர்களை அணுகி தங்கள் இயக்கம் (இந்திய மா.லெ.இயக்கம்-மக்கள் போர்க்குழு) தமிழ்த் தேசிய விடுதலையை ஏற்றுக்கொள்வதாகவும் பெரியாரின் பங்களிப்பை, தனித்தமிழ் இயக்கக் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்வதாகவும் இரண்டாண்டுகள் நம்பவைத்திருக்கிறார். இறுதியில், தமிழக மக்களின் எதிரி தில்லி அரசு, அதன் பின்னணியில் சோவியத்து, அமெரிக்கா போன்ற வல்லரசுகள் (அவற்றுள் சோவியத்து தான் உலக மக்களின் முதல் எதிரி!) நிற்கின்றன; இந்த மாபெரும் விசைகளின் படைகளை எதிர்த்துப் போரிட வேண்டுமாயின் தமிழகத்தை மட்டுமே களனாகக்கொண்ட இயக்கத்தால் முடியாது; எனவே ஓர் இந்திய அமைப்பினுள் நீங்கள் வர வேண்டும் என்றிருக்கிறார். பெரும்பாலோர் அவரை விட்டு விலகிவிட்டனர்.

இவ்வாறு ″மார்க்சிய″க் கட்சிகள் அல்லது பொதுமை என்ற சொல்லை அடைமொழியாகக் கொண்ட கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் அனைத்தும் தமிழ்த் தேசியத்தை அடுத்துக் கெடுப்பவையாக, அணைத்து அழிப்பவையாகவே உள்ளன.

(தொடரும்)

அடிக்குறிப்பு:

[1] அமெரிக்க உளவு முகவாண்மையின் உருவாக்கமான மாவோயிய முனைப்பியர்கள் வெடிகுண்டு போன்ற ஆயுதங்களைச் செய்யும்போதோ கொலைகளைச் செய்தோ பிடிபட்டுத் தண்டனையடைந்து சிறையிலிருக்கும்போது அவர்களை அணுகி ″தமிழ்த் தேசியம்″ புகட்டி மன்னிப்பு கேட்கவைத்து பிணையில் கொண்டுவந்து அவர்களை ″தமிழ்த் தேசிய மறவர்″களாக உலவவிடுவது அதே உளவு முகவாண்மையின் இன்னொரு படைப்பான பொ.ம.கு.ஆ. என்பது குறிப்பிடத்தக்கது. எ-டு. கலியபெருமாள், தியாகு போன்றோர்.

0 மறுமொழிகள்: