31.12.07

தமிழ்த் தேசியம் ... 21

மனந்திறந்து... 11

புதுப்பா(கவிதை) என்ற ஒன்று 1970-80களில் பரவலான ஏற்பைப் பெற்றது. இது இலக்கணங்களைக் கடந்த படைப்பு என்று புகழப்பட்டது. பாரதியார் இதைத் தோற்றுவித்தார், பிச்சமூர்த்தி வளர்த்தார், சி.சு.செல்லப்பா பரவலாக்கினார் என்று கூறிக்கொள்கின்றனர். ஆனால் கழக(சங்க) இலக்கியங்கள் அனைத்தும் மிகத் தளர்வான இலக்கணக் கட்டுக்கோப்பு கொண்ட இதே வகைப் பாக்களால் இயற்றப்பட்டவை என்பதே உண்மை. அவை காலத்தைக் கடந்து நிற்கும் உள்ளடக்கத்தைக் கொண்டவை. இந்தப் புதுப்பாவினுள்ளும் இந்தப் பரிபாடைக் கூட்டம் புகுந்து தன் அழிவு வேலையைச் செய்தது. படைப்பில் ஆசிரியன் தானாக எந்தச் செய்தியையும் புரிய வைக்கக் கூடாதாம்; அது படிப்பவர் மேல் தன் ஆதிக்கத்தையும் கருத்தையும் திணிப்பதாம்; படிப்பவனே படைப்பினுள் தன் கருத்தைத் தேடிப் படைப்பவனாக மாற வேண்டுமாம். அதாவது ″படைப்பை″ வைத்துக் கொண்டு அதன் மேல் தன் படைப்பாற்றலைத் தேடுவதில் தன் பொழுதைக் கழிக்க வேண்டுமாம்; இது தான் உண்மையான இலக்கியத் தொண்டாம்.

1970-80 காலகட்டத்தில் பாட்டாளியக் கோட்பாட்டாளர்கள் என்ற பெயரில் புதுப்பாக் களம் புகுந்தனர் வைரமுத்து, ந.காமராசன், மு. மேத்தா போன்றோர். அவர்களது நூல்களைக் கையில் வைத்திருப்பதே பெருமை என்று இறுமாந்திருந்தனர் பொதுமைக் கட்சிகளையும் நக்சலிய இயக்கத்தையும் சேர்ந்த இளைஞர்கள். இன்று திரைத்துறையில் நுழைந்து சிதைந்து போன இப்பாவலர்களைக் கண்டு கசந்து போயுள்ளனர் அவர்கள்.

இருப்பினும் பா புனைவதும் கதை எழுதுவதும் இதழ் நடத்துவதும் படைப்புச் செயல்முறை என்ற தவறான எண்ணம் பல இளைஞர்களின் மூளையில் ஆழமாகப் பதிந்துள்ளது. அதற்கு எருவூட்டி வளர்க்கிறார்கள் தி.க.சி., வல்லிக்கண்ணன் போன்ற சில பெரியவர்கள். இந்தப் ″படைப்பாளி″களில் ″தமிழ்த் தேசியம்″ பேசுவோரும் உண்டு. பண்டத்தைப் படைப்பதை விட இலக்கியம் படைப்பது உயர்வானது என்று இவர்கள் நம்புகிறார்கள். இடைக்காலத்தில் ″குண்டலினிக் கோட்பாடு″ என்ற பெயரில் பல தலைமுறைகளைச் சேர்ந்த ஆற்றல் மிக்க, வசதி படைத்த மக்களை ″ஆசனமிட்டு″ அமர்த்தி மூச்சைக் கண்காணிக்க வைத்து அவர்களது திறன்கள் குமுகத்துக்குக் கிடைக்காமல் செய்த அழிவுக் கோட்பாட்டிலிருந்து இது எந்த வகையிலும் மேம்பட்டதல்ல என்பதை அவர்கள் உணர வேண்டும்.

குமுகத்தை மேம்படுத்தும் ஒரு கோட்பாடு, அதனடிப்படையிலான ஒரு செயல்திட்டம் அதைச் செயற்படுத்தத்தக்க ஓர் இயக்கச் செயற்பாடு ஆகிய இவற்றிலிருந்து உருவாகும் இலக்கியம்தான் மக்களுக்குப் பயன்படும். இன்று முந்தைய கோட்பாடுகள் குறியிழந்து ஒன்றோடொன்று மயங்கிச் சிதைந்து நிற்கும் நிலையில் புதிய கோட்பாட்டை வகுப்பதிலும் அதைச் செயலுக்குக் கொண்டுவருவதிலும் தான் நேர்மையான படைப்பாளிகள் ஈடுபட வேண்டும். இது தமிழ்த் தேசிய ஆர்வம் கொண்ட படைப்பாளி இளைஞர்களுக்கு நம் வேண்டுகோள்.

(தொடரும்)

0 மறுமொழிகள்: