24.9.07

தமிழ்த் தேசியம் ... 4

பெரியாரைத் திறனாய்வோம்

பேரவைக் கட்சியில் இருந்த போதும் அதிலிருந்து வெளியே வந்த தொடக்க காலத்திலும் ஒரு நேர்மையான சாதிய எதிர்ப்புணர்வை அவரிடம் நம்மால் காண முடிகிறது. [1] ஊர் ஊராகக் கடும் வன்முறை எதிர்ப்புகளுக்கிடையில் உள்ளுரிலுள்ள ஆர்வலர்களின் உறுதுணையோடு சாதி சார்ந்த பழமைக் கருத்துகளுக்கு எதிர்ப்பை விதைத்ததில் அவரது வீரம் வெளிப்படுகிறது. ஆனால் பல வேளைகளில் ஒரு கோழைத்தனம் காணப்பட்டது. 1933-இல் உருசியா சென்று திரும்பிய கையோடு பொதுமைக் குமுகத்தை உருவாக்குவதற்கென்று ஈரோட்டுத் திட்டத்தை வெளியிட்டார். ஆங்கில அரசு அவரைச் சிறையிலிட்டு ஒடுக்குமுறையைக் கையாண்டதும் உறுதிமொழி எழுதிக் கொடுத்து வெளியே வந்தவர் இன்னொரு முறை அந்தப் பேச்சையே எடுக்கவில்லை.

சாதியத்தை எதிர்த்துக் கருத்துப் பரப்பல் செய்து வந்த வேளையில் முத்துராமலிங்கத்தேவர்மூலமாக நம் நாட்டுப் பிற்போக்கு விசைகளின் நேரடியான அறைகூவல் வந்தது. அதை அவர்களது வழியிலேயே எதிர்கொள்ளும் ஆற்றல் அன்று திராவிடர் கழகத்துக்கு இருந்தது. ஆனால் பெரியார் அதை எதிர்கொள்ளவில்லை. எதிர்கொண்டிருந்தால் இன்று நம்மால் எதிர்கொண்டு தீர்வு காண முடியாமலிருக்கும் தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத்தப்பட்டோர் பிளவு இருந்திருக்காது. தமிழகக் குமுக அமைப்பே புரட்சிகரமாக மாறியிருக்கும். எண்ணிக்கையில் குறைந்த, அடிதடிகளில் இறங்காத பார்ப்பனர்களையும் அவர்கள் பெண்களையும் வரைமுறையின்றி வசைபாடிய பெரியாரின் ″வீரம்″ முத்துராமலிங்கரிடம் பிடரியில் கால்பட பின்வாங்கி ஓடியது.

பார்ப்பன - பனியாக் கூட்டணி தமிழகத்தைச் சுரண்டுவதாக அடிக்கடி பெரியார் சுட்டிச் காட்டியுள்ளார். ஆனார் பார்ப்பனர்களை மட்டும் எதிர்த்துக் செயற்பட்டுள்ளார். பனியாக்கள் எனப்படும் மார்வாரிகளை எதிர்த்து ஒரு துரும்பைக் கூட அசைத்ததில்லை அவர்.

1950களில் சென்னையிலுள்ள செனாய்நகரிலும் சவுக்கார்ப்பேட்டையிலும் வாழும் மார்வாரிகள் மீது தாக்குதல் நடைபெறும் என்ற அச்சம் நிலவும் அளவுக்கு இயக்கத்தவர்களுக்கு அவர்கள் மீது வெறுப்பு இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் அம்பிசு கபே எனும் உணவகத்தின் பெயர்ப் பலகையிலிருந்த ″பிராமணாள்″ என்ற சொல்லை அழிக்கும் போராட்டத்தில் கழகத்தவரை ஏறக்குறைய 1½ ஆண்டுகள் பெரியார் ஈடுபடுத்தினார். அத்துடன் ஊரெங்கும் பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டங்கள் நடத்தினார்.

மார்வாரிகள் சமண சமயத்தினர். இந்து சமயத்துக்கு எதிராக சமண சமயத்தை உயர்த்திப் பேசுவது திராவிட இயக்கத்தவர் வழக்கம். இவ்வாறு தம் மறைமுக ஆதரவை மார்வாரிகளுக்குத் தந்தனர். பெரியாரின் செயற்பாடுளையும் திராவிட இயக்கத்தின் செயற்பாடுகளின் பின்னணியில் மார்வாரிகள் முழுமையாக வளர்ந்து தமிழகப் பொருளியலைத் தங்கள் முழுக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளதையும் பார்க்கும் போது பெரியாருக்கும் மாரிவாரிகளுக்கும் இடையில் ஒரு மறைமுகத் தொடர்பு இருந்திருக்குமோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவிலலை. அவர் தன் வாழ்நாளில் ஈட்டிய உரூபாய் 125 கோடிப் பணம் எடைக்கு எடை வெள்ளிப் பணம், பணத்தாள் மாலைகள், பெயர் வைக்கக் கட்டணம் போன்றவற்றால் மட்டும் சேர்ந்திருக்கும் என்று நம்ப முடியவில்லை.

பெரியார் தேர்தல்களில் தன் கட்சி மூலம் நேரடியாக ஈடுபடுவதில்லையே தவிர ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவதொரு கட்சிக்குப் பாடுபட்டிருக்கிறார். அத்துடன் அவர் எப்போதும் ஆளும் கட்சிகளின் ஆதரவாளராகவே இருந்திருக்கிறார். ஆச்சாரியார், பக்தவத்சலம் இருவரின் ஆட்சியை மட்டுமே எதிர்த்திருக்கிறார். அவர்கள் இருவரும் இவரது பரிந்துரைகளை ஏற்றுச் செயற்பட முன்வந்திருக்க மாட்டார்கள் என்பதே உண்மைக் காரணமாக இருக்க வேண்டும்.

பெரியாருக்குப் பின் வந்த தலைமை வேற்று நாட்டு மதங்களுக்கு விளம்பரம் தேடியது. நாட்டுப்புறத்திலே தாழ்த்தப்பட்ட மக்கள் பொதுக் கிணற்றிலே தண்ணீர் எடுக்கவும் பொதுச் சுடுகாட்டில் பிணம் எரிக்கவும் போராடிக்கொண்டிருந்த வேளையில் கோயில்களில் கிறித்துவர்களும் முசுலீம்களும் யார் வேண்டுமானாலும் பூசகராகலாம், இந்துக்களில் பார்ப்பனர்கள் மட்டுமே பூசகராகலாம் என்று கூறி அம்மதங்களுக்கு மறைமுக விளம்பரம் செய்து போராட்டங்கள் நடத்தியது.

இனி திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பார்ப்போம். அக்கட்சியின் முதல் தலைவரான அண்ணாத்துரையும் அடுத்து வந்த கருணாநிதியும் பொட்டுக்கட்டும் சாதியினர். ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை பார்ப்பனர்களுடன் கோயில்களில் நெருங்கி உறவாடி வந்தவார்கள். ஏதோ காரணத்தினால் இவ்விரு சாதியினர்க்கும் பிணக்கு ஏற்பட பார்ப்பனர்கள் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் தேவதாசிப் பெண்களை இழிவுபடுத்தினர். அதன் எதிர்வினை தான் அண்ணாத்துரை, கருணாநிதி ஆகியோரின் தொடக்க காலப் புரட்சித் தன்மை. அரசியலில் தலைமை பெற்று குமுகத்திலும் ஏற்புக் கிடைத்தவுடன் பார்ப்பனார்கள் நட்புக் கரம் நீட்டினர், இவர்கள் பற்றிக் கொண்டனர். ஆனால் வெளிப்டையாக அதைக் காட்டிக் கொள்ளவில்லை.

அண்ணாத்துரை மிக உயாந்த அறிவுத்திறனும் நினைவாற்றலும் கல்வி அறிவும் படைத்தவர். மிகுந்த தன்னம்பிக்கை உடையவர். தன் திறமைகளைத் தானே அறிந்தவர். இளையோர், முதியோர், கற்றோர், கல்லாதோர் என்று அனைவரையும் ஈர்க்கும் திறன் படைத்தவர். உலகில் தோன்றிய பெரும் தலைவர்களைப் போன்றவர். அவர் முன்னால் ஒரு மோசே, முகமது நபி, ஆலிவர் கிராமவெல், சோன் ஆப் ஆர்க், மாசினி, கரிபால்டி, பிம்மார்க், கமால் பாச்சா, லெனின், மசேதுங் போன்ற உலக விடுதலை வீரர்களுடன் ஒப்பிடும் வகையில் பெருமை வாய்ந்த ஓர் களம் விரிந்து கிடந்தது. அதனை ஆளும் ஆற்றலும் அவருக்கிருந்தது. ஆனால் அவர் அவை அனைத்தையும் ஒரு முதலமைச்சர் பதவிக்காகக் காவு கொடுத்து விட்டது தமிழக வரலாற்றில் மட்டுமல்ல உலக வரலாற்றிலேயே ஒரு மாபெரும் அவலமாகும்.

தமிழக மக்களின் பொருளியல் நலன்களை இந்திய அரசிடமும் வட இந்தியப் பண முதலைகளிடமும் விலைபேசி விட்டு பேருந்துகளில் திருவள்ளுவர் படங்களையும் திருக்குறள்களையும் எழுதிவைத்தல், பேருந்துக் கழகங்களுக்கு பாண்டியன், சேரன், சோழன், பல்லவன் என்று பெயர்கள் சூட்டுதல். திருவள்ளுவருக்குக் குமரியில் சிலை எடுத்தல் என்று உணர்ச்சிகளை ஆற்றும் ஏமாற்று நடவடிக்கைகளைக் கருணாநிதி மேற்கொண்டார். கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்ப்பதில் பங்கேற்றார். காவிரியில் கன்னட அரசு பல அணைகள் கட்டுவதற்கு ஒப்புதல் அளித்தார்.

தன்னை நாடி வருவோர்க்கு பதவியின் துணையால் உதவிக்கரம் நீட்டி ஒரு மாபெரும் மாபியாத் தலைவர் போல் கருணாநிதி விளங்கினார். ஊழல்களில் எதிர்க் கட்சியினருக்கும் உரிமை வழங்கி அவர்களின் எதிர்ப்பைத் தவித்தார்.

மக்களுக்கு நிலையான பயன் தரும் திட்டங்களை வகுக்காமலும் அவ்வாறு வகுத்ததைச் செயற்படுத்துவதற்குத் தங்களுக்கு அதிகாரமில்லை என்ற உண்மையை மக்களுக்கு எடுத்துரைக்காமலும் ஏழைகளுக்கு இலவசக் கண்ணாடி வழங்குதல், நர(ரிக்சா)வண்டி வழங்குதல் போன்ற இலவசத் திட்டங்களை அறிமுகம் செய்தார். நெடுநாட்களாக மக்கள் மறந்து விட்டிருந்த குடிப் பழக்கத்தைப் புதிய, இளைய தலைமுறையினரிடம் ஏற்படுத்தும் வகையில் மதுவிலக்கை ஒத்திவைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றித் தமிழகத்தில் ஒரு பெரும் பண்பாட்டுச் சீரழிவுக்கு வழிகோலினார். தனக்கும் தன் கட்சியினருக்கும் பல தலைமுறைகளுக்கு வேண்டிய செல்வத்தைத் தன் ஆட்சிக் காலத்திலும் பின்னர் எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய காலத்திலும் திரட்டினார். அவரும் அவரது கட்சியினரும் ஆங்கிலம், இந்தி கற்பிக்கும் மழலையர் பள்ளிக்குத் தங்கள் வீட்டுக் குழந்தைகளை அனுப்பினர். தமிழ் ஆட்சிமொழித் திட்டம் பேரவை ஆட்சிக் காலத்தை விட மிக மந்தமாகவே செயற்பட்டது.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலித் திட்டத்தை வகுத்தளித்த மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரை அலைக்கழித்து பலரின் கடுமையாக கண்டனத்துக்குப் பின்னரே அரைமனதாக ஒப்புதல் தந்தார். பார்பபனரை ஒடுக்குவதாக ஒருபுறம் பொய் கூறிக்கொண்டு நான்காம் நிலை ஊழியர்களிலிருந்து உயர் பதவிகள் வரை அவர்களுக்கு மறைமுகமான முன்னுரிமை வழங்கப்பட்டது. கட்சியின் பதவிகளில் கூட பார்ப்பனர் அமர்த்தப்பட்டனர்.

ஆண்டுதோறும் மார்வாரிகள் நடத்தும் பொங்கல் விழாவில் கருணாநிதி கலந்துகொள்வார். கடந்த 25 ஆண்டுகளாக இராசத்தானி சங்கத்தாருடன் தனக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதாக அவர் ஒரு முறை பெருமையுடன் குறிப்பிட்டார்.

கொள்கையடிப்படையிலன்றி வெறும் ஊழலைக் காரணமாகக் காட்டி வெளியேறிய ம.கோ.இரா. பெரியாரைப் போல், அண்ணாத்துரையைப் போல், கருணாநிதியைப் போல் ஒரு கோழை.

எடுத்துக்காட்டாக உயர் நீதிமன்றம் வரை தீர்ப்புகள் தமிழிலேயே வழங்கப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார். இந்த முயற்சியை முறியடிக்க இந்திரா உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாநிலத்துக்கு மாநிலம் மாற்றப்படுவர் என்று ஆணை பிறப்பித்து தமிழ் தெரியாத ஒரு நீதிபதியைச் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அமர்த்தினார். தமிழ் நீதிமன்ற மொழியாவதற்கு நடுவணரசு இவ்வாறு மறைமுகத் தடை விதித்துள்ளது என்ற உண்மையை அவர் மக்கள் முன் எடுத்து வைக்கவில்லை.

மதுரை மீனாட்சி ஆலை, இந்தியா சிமென்று ஆலை போன்றவை அரசுடைமை வங்கிகள், உயிர்காப்பீட்டுக் கழகம் போன்றவற்றின் துணையுடன் அயலவர்கள் கைகளுக்கு மாறிய போது ம.கோ. இரா. அரசு அதற்குத் துணைநின்றது. நயன்மைக் கட்சி காலத்தில் கட்டி எழுப்பப்பட்ட தமிழகத் தொழிற்கூடங்கள் அயலவருக்குத் தாரைவார்க்கப்பட்டன. தாதா, டாடா நிறுவனங்களுடன் தமிழக. அரசு நிறுவனங்கள் கூட்டு வைத்துத் தொழில்களைத் தொடங்கியது. எந்த வடநாட்டு முலதனத்தைக் காட்டி வளர்ந்து ஆட்சியைப் பிடித்தார்களோ அதே ஆட்சியை அதே வடநாட்டு முலதனத்தை இங்கு கொண்டுவருவதற்குப் பயன்படுத்தியுள்ளார்.

மக்களிடமிருந்து கையூட்டுப் பெறும் ஒரே நோக்கத்துடன் மிக எளிய பட்டா மாற்றுவதிலிருந்து தொழில்களுக்கு மின்சாரம் பெறுவது வரை எண்ணற்ற சிக்கலான விதி முறைகளை உருவாக்கி மக்களின் பொருளியல் நடவடிக்கைகளுக்குப் பெரும் முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் மனம் சலித்து செயலற்று நிற்கிறார்கள் மக்கள். அனைத்து மட்டத்திலும் தொழில் தேக்கம் ஏற்பட்டு படித்தோரும் படியாதோரும் செல்வரும் பிறரும் வெளிநாடுகளுக்கும் மாநிலங்களுக்கும் ஓடி மாய்ந்து சீரழிகின்றனர். பத்திரங்கள் பதிவதற்குக் கூட பிற மாநிலங்களை நாடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.[2]

திராவிட இயக்கத்தினர் கையில் ஆட்சி வந்த பின்னர் அவர்கள் தம் பொருளியல் நடவடிக்கைகளுக்கு அவர்களது ஆட்சி அதிகாரமே உறுதுணையாய் நின்றது. எனவே பிற மக்களின் இடர்கள் தெரியாதது மட்டுமல்ல, பிறரை விடத் தமக்குக் கிடைக்கும் முன்னுரிமைகளாலும் முற்றுரிமைகளாலும் இத்தகைய தடங்கல்களுக்கு அவர்கள் ஆதரவாய் நின்றனர். எதிர்க்கட்சியாய் இருந்த போதும் தி.மு.க.வினர்க்கு இத்தகைய முன்னுரிமைகள் கிடைத்தன. இன்று எதிர்க்கட்சி என்ற நிலையும் தகர்ந்து போனதால் தான் கருணாநிதியை விட்டு வை.கோ.வுக்கு ஆதரவாகப் பலர் ஓடியிருக்கின்றனர். அதன் மூலம் ஆட்சியையாவது, குறைந்தது முதன்மை எதிர்க்கட்சி இடத்தையாவது பிடித்துக்கொண்டால் மீண்டும் பழைய முன்னுரிமைகளையாவது பெறலாம் என்ற எதிர்பார்ப்பினால் தான் ஊழலைத் தவிர வேறெதையும் பற்றி அக்கட்சி கூறவில்லை. மக்களுக்கு அரசுப்பொறி ஏற்படுத்தி வைத்திருக்கும், தொடர்ந்து ஏற்படுத்தி வரும் எண்ணற்ற இடையூறுகளைப் பற்றி அறிந்திருந்தும் எடுத்துக் கூற முற்படவில்லை. அவற்றை எடுத்துக் கூறி அகற்றி விட்டால் அவற்றால் தமக்குக் கிடைக்கும் ஆதாயம் பறிபோய்விடுமே! இவ்வாறு தமிழகப் பொருளியல் வளர்ச்சிக்குத் திராவிடர் இயக்கம் பெரும் இடையூறாக நிற்கிறது.

மொத்த ஆய்வில் திராவிடர் இயக்கம் எத்தர்களின் ஒரு கூட்டம். தமிழகத்தில் ஓர் உண்மையான தேசிய இயக்கத்தின் தேவை இருப்பதைப் புரிந்து கொண்டு அந்தக் களத்தை தங்கள் ஆதாயத்துக்குப் பயன்படுத்தி அரசியல், பொருளியல், பண்பாட்டியல், ஒழுக்கவியல் தளங்களில் தமிழகத்தை ஒரு பாலைவனமாக்கிவிட்ட குடிகேடர்களின் கும்பல்.

தி.க., தி.மு.க. ஆகியவை இவ்வாறு இரண்டகம் செய்துவிட்ட நிலையில் இளைஞர்களைத் தனித்தமிழ் இயக்கம் ஈர்த்தது. பாவாணரின் மொழியியல் ஆய்வுகளின் பின்னணியில் தென்மொழி என்ற மாத இதழை நடத்திய பெருஞ்சித்திரனாரின் தனித்தமிழ்க் கட்டுரைகளும் வீரம் சொட்டும் பாக்களும் பல இளைஞர்களை ஈர்த்தன. ஆனால் ஒர் இயக்கத்தைக் கட்டி எழுப்பும் திறமையும் தலைமைப் பண்புகளும் ஆழ்ந்த சிந்தனையும் அவருக்கு இல்லை. தன்முனைப்பும் தான்தோன்றித்தனமும் மிகுந்திருந்தன. நாளெல்லாம் கருணாநிதியைத் திட்டிவிட்டுத் தேர்தல் வந்தால் கருணாநிதிக்கு வாக்களிக்கச் சொல்வார்.

இவர் தமிழக விடுதலை மாநாடெல்லாம் நடத்தினார். மக்கள் கவனத்தை அது ஈர்க்கவில்லை. மொழித் தூய்மைக்காக மட்டும் தமிழக விடுதலை வேண்டிப் போராட மக்கள் முன்வர மாட்டார்கள் என்பது அவருக்குப் புரியவில்லை.

ஒரு கட்டத்தில் பெரும்படை போல் தோன்றிய தனித்தமிழ் இயக்கம் திடீரென்று புகைபோல் கரைந்து போயிற்று. காரணம் புரியாமல் பெருஞ்சித்திரனார் திகைத்தார்.

தமிழில் பட்டமும் பட்டமேற்படிப்பும் பயின்ற எண்ணற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி இருந்த நேரத்தில் தனித்தமிழ் இயக்கத்தில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தனர். ஆனால் தமிழ்ப் பேராசிரியர்களுக்கும் பிற பேராசிரியர்களுக்கு இணையான சம்பளமும் பிற அனைத்து வகைகளிலும் அவர்களுக்கு ஈடான உரிமைகளும் உண்டென அறிவிக்கப்பட்டதாலும் பல புதிய பல்கலைக் கழகங்களும் கல்லுரிகளும் தமிழாய்வு நிறுவனங்களும் தோன்றியதாலும் தமிழ் பயின்றோரில் ஏறக்குறைய அனைவருக்கும் நல்ல வேலை கிடைத்து விட்டது. அனைவரும் ஓடிவிட்டனர்.

ஆனால் திராவிட இயக்கம் குப்பைத் தொட்டியில் வீசியெறிந்துவிட்ட தமிழ்த் தேசியம் என்ற கருத்துருவைப் பொன் போல் பாதுகாத்து இளைய தலைமுறையினர் கைகளில் ஒப்படைத்தல் என்ற அரும்பணியைச் செய்தவர் என்ற வகையில் தமிழ்த் தேசிய வரலாற்றில் நீங்கா இடம்பெற்றவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

(தொடரும்)

அடிக்குறிப்பு:

[1] இதில் கூட கருத்து வேறுபாடுகள் உள்ளன. பெரியார் நடத்திய குடியரசு என்னும் ஏட்டின் முதல் இதழில் கடவுளின் அருளை வேண்டியும் வருண, சாதி முறைகளைக் காப்பது இதழின் நோக்கமென்றும் கட்டுரைகள் வந்திருப்பதாக குடியரசு முதல் இதழ் என்ற தலைப்பில் ஒருவர் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். அடுத்த இதழிலிருந்து தான் சாதி எதிர்ப்பு, கடவுள் மறுப்பு போன்ற கொள்கைகளை அந்த ஏடு தாங்கி வந்துள்ளது. இடையில் என்ன நடந்தது, அவர் இந்தக் கருத்துகளை யாருடைய அறிவுரையில் கைக்கொண்டார் அல்லது எந்தச் சூழல் தன்னை இந்தச் சிந்தனைகளுக்கு இட்டுச் சென்றது என்பது பற்றி எதுவும் கூறியிருப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை அயோத்திதாச பண்டிதரின் கருத்துகள் அவரைக் கவர்ந்திருக்கலாம்.

[2] அந்த வழியைக் கூட இப்போது அடைத்துவிட்டனர், அதாவது தடைசெய்துவிட்டனர்.

0 மறுமொழிகள்: