24.9.07

தமிழ்த் தேசியம் ... 3

இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத் தேசியம்

உலகில் தேசிய இயக்கங்களுக்கென்று ஒரு பொதுத் தன்மையுண்டு. ஒவ்வொரு தேசியத்திலுமுள்ள மிக உயர் மட்டத்திலிருப்பவர்களிடமிருந்து தோன்றுவதே அந்தப் பொதுத் தன்மை. பெரும்பாலான நேர்வுகளில் இவ்வாறு தொடங்கிவைக்கும் குழுவினரின் பங்கு வெளி உலகுக்குத் தெரியுமுன்பே அவை அவ்வியக்கத்திலிருந்து விலகிப்போகும். அவ்வாறு தமிழகத்தில் தமிழகத் தேசியத்தைத் தொடங்கி வைத்தவர்கள் தமிழ் பேசும் பார்ப்பனர்களாகும்.

கடந்த பல நூற்றாண்டுகளாகத் தமிழகத்தைக் கைப்பற்றியாண்ட தெலுங்கு, மராட்டியம், கன்னடம் ஆகிய மொழி அரசுகளின் காலத்தில் அரசு அதிகாரத்திலும் கோயில்களின் ஆளுமையிலும் அம்மொழி பேசும் பார்ப்பனர்கள் அமர்ந்துகொண்டனர். தமிழர்களின் மொழியையும் பண்பாட்டையும் சமற்கிருதத்திலிருந்து உருவானவை என்றும் அவர்கள் கூறி வந்தனர். இதற்கு மறுப்பாக தமிழ்ப் பார்ப்பனர்கள் பாண்டித்துரைத் தேவரின் தமிழ்ச் சங்கம் மூலமாகவும் தனியாகவும் ஆய்வுகள் செய்து தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையை நிறுவினர். மு.இராகவய்யங்கார், இரா. இராகவய்யங்கார், கிருஷ்ணசாமி அய்யங்கார், பி.டி. சீனிவாசய்யங்கார், வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர் போன்றவர்கள் இவ்வரிசையில் முன்னணியில் நிற்கின்றனர்.தன் பெயரைப் பரிதிமாற் கலைஞர் என்று தனித்தமிழில் மாற்றித் தனித்தமிழ் இயக்கத்துக்கு வித்திட்ட சூரியநாராயண சாத்திரி ஓர் ஒளி விளக்காய்த் திகழ்கிறார்.

இந்த எழுச்சி வரலாற்றில் பிற்போக்கு விசைகளும் வலிமையாயிருந்தன. அவற்றுக்கு ஊக்கம் தந்தவர்கள் இறையியல் கழகத்தை உருவாக்கிய அமெரிக்கராகிய ஆலிவர் ஆல்காட்டும் உருசியரான பிளாவட்கி அம்மையாரும்.

தமிழ்த் தேசியத்தைத் திசை திருப்பிய இன்னொரு முகாமையான கூறு ஆரிய - திராவிட வரலாற்றுக் கோட்பாடாகும். இதுவும் மேலையரால் உருவாக்கப்பட்டதே. செருமானியரான மாக்சுமுல்லரால் ஆரியக் கோட்பாடு உருவாக்கப்பட்டது. கால்டுவெல் ஐயரால் திராவிடக் கோட்பாடு உருவானது. ஆரியர்கள் நடு ஆசியாவிலிருந்தும் திராவிடர் நண்ணிலக் கடற் பகுதியிலிருந்தும் வந்தனர் என்று இவர்கள் கூறினர். திராவிடர்வெளியிலிருந்து வந்தவர்கள் என்ற கூற்றைத் தமிழர்கள் ஏற்றுக் கொள்ளவில்லையாயினும் சாதி ஏற்றத்தாழ்வினால் உருவான ஒரு குமுகச் சிக்கலை இனச் சிக்கலாகப் புரிந்து கொண்டனர். ஆரிய இனக் கோட்பாட்டை அறிஞர்களின் கடும் எதிர்ப்பினால் மாக்சுமுல்லர்கைவிட்டுவிட்டாலும் இரு காரணங்களினால் அக்கோட்பாடு நிலைத்து விட்டது. அப்போது தமிழகத் தேசியத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்த பார்ப்பனரல்லா மேற்சாதியினர்தாங்கள் கடைப்பிடித்து வந்த சாதிய ஒடுக்குமுறைக்கு ஆரியர்களைக் காரணம் காட்டித் தப்பிக்க முடிந்தது. பார்ப்பனர்களுக்குத் தாம் ஒரு பெரிய இனத்தின் வழியினர் என்ற மாயை தெம்பைத் தந்தது. இந்த அடிப்டையில் தமிழகத் தேசிய உணர்வு திசை திரும்பி இனச்சிக்கலாக வடிவெடுத்தது.

தமிழகத் தேசிய இயக்கம் நீதிக் கட்சி எனப்படும் நயன்மைக் கட்சியிலிருந்து அரசியல் வடிவம் பெற்றது. அன்றைய தமிழகம் சென்னை மாகாணமாக, ஆந்திர, கன்னட, கேரளப் பகுதிகளைக் கொண்டிருந்ததால் அந்த இயக்கத்திலும் தமிழர்களுடன் இம்மொழி பேசும் தலைவர்களும் இருந்தனர். திராவிடக் கோட்பாட்டுக்கு இப்பின்னணியும் வலுச் சேர்த்தது.

நயன்மைக் கட்சி பார்ப்பன மேலாண்மையை மட்டும் எதிர்த்து நிற்கவில்லை. வெள்ளையராட்சிக் காலத்தில் இந்தியாவில் அவர்களின் தேவைகளுக்காக அவர்கள் உருவாக்கிய தொழில் முனைவுகளிலிருந்து தவிர்க்க முடியாமல் உருவாகிய உள்நாட்டு மூலதனத்தில் வடக்கு வலிமை பெற்று தெற்கை நசுக்கி வந்தது. எனவே வடக்கின் பிடியிலிருந்து தெற்கின் பொருளியலைக் காக்கும் குறிக்கோளும் நயன்மைக் கட்சிக்கு இருந்தது.

இக்கட்சியின் தலைமையிலிருந்த நிலக்கிழார்களும் இடைக்கிழார்களும்(சமீன்தார்களும்) சிற்றரசர்களும் வாணிகப் பெருமக்களும் போர்க்குணம் உள்ளவர்களல்லர். எனவே ஆளுவோர்களாகிய வெள்ளையர்களுக்கு வேண்டுகோள்களை விடுப்பதிலேயே குறியாயிருந்தனர். காங்கிரசுக்கட்சி எனப்படும் பேரவைக் கட்சியின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க வேண்டியிருந்த ஆங்கில அரசு நயன்மைக் கட்சிக்கு ஆதரவாக இருந்தது. 1920 - இல் முதன்முதல் உருவான நயன்மைக் கட்சி அரசு கல்வியிலும் அரசுப் பணியிலும் பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் ஒதுக்கீட்டைக் கொண்டுவந்ததுடன் புதிய தொழில்களைத் தமிழக மக்கள் தொடங்குவதற்கு மிகுந்த ஊக்கமும் ஒத்துழைப்பும் தந்து தமிழகத்தில் முதன்முதலில் பெருந்தொழில்கள் தோன்ற வழிவகுத்துக் கொடுத்தது. இவ்வாறு ஆங்கிலேய அரசின் ஆதரவு, "ஆரிய இன" எதிர்ப்பு, பொருளியல் தன்னுரிமை என்ற திசைகளில் ஊசலாடியதால் நிலப்பற்று என்ற உணர்வு இவ்வியக்கத்தில் வலிமை பெறவில்லை.

நாளடைவில் நயன்மைக் கட்சியில் இருந்த மேற்சாதியினரும் வாணிகர்களும் கட்சியினுள் உருவாகும் சாதிய எதிர்ப்பைப் பொறுக்க முடியாமலும் தங்கள் நலனுக்கு வளர்ந்து வரும் பேரவைக் கட்சியே உகந்தது என்று கருதியும் வெளியேறினர். கட்சிக்கு வலுவான தலைமை ஒன்று வேண்டும் என்ற நிலையில் பார்ப்பனர் ஆதிக்கத்தை எதிர்த்து பேரவைக் கட்சியிலிருந்து வெளியேறி தன்மான இயக்கத்தைத் தொடங்கியிருந்த பெரியாரிடம் தலைமையை ஒப்படைத்தனர்.

பெரியாரிடம் தலைமை வந்த பின்னர் இயக்கத்தில் ஒர் அடிப்படை மாற்றம் ஏற்பட்டது. பொருளியல் வளர்ச்சி பற்றிய பார்வை பெரியாருக்குக் கிடையாது. சாதி, சமயம், மூடநம்பிக்கை ஆகியவற்றை எதிர்ப்பதிலேயே அவரது முழுக் கவனமும் இருந்தது. இந்திய விடுலைப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டுமாயின் ஆங்கிலேயர் காலத்திலேயே தமிழகம், அதாவது அன்றைய நிலையில் திராவிட நாடு விடுதலை பெறவேண்டுமென்ற முழக்கத்தை அவர் முன்வைத்தார். இயக்கத்தின் பெயரையும் திராவிடர்கழகம் என மாற்றினார்.

ஆனால் வெறும் சாதி எதிப்பு மட்டும் ஒரு நாட்டு விடுதலையின் அடிப்டையாகயிருக்க முடியாது. எனவே சிறுகச் சிறுகப் பொருளியல் காரணங்களும் முன்வைக்கப்பட்டன. இந்தப் பணியை அண்ணாத்துரை தொடங்கி வைத்தார். இந்த அனைத்துக் கூறுகளையும் கொண்டதாக திராவிட இயக்கம் ஒரு மக்கள் இயக்கமாக வலிமை பெற்று வளர்ந்தது. தமிழகத்தின் அறிவும் ஆற்றலும் நிறைந்த இளைஞர் கூட்டம் இயக்கத்தின் கட்டுப்பாட்டினுள் நின்றது.

இந்நிலையில் இயக்கத்தினுள் முரண்பாடுகள் வலுத்துவந்தன. பெரியார் இயக்கத்தைத் தன் சொந்தச் சொத்து போலும் ஒரு பெருந்தொழில் நிறுவனம் போலும் நடத்தி வந்தார். இது அடுத்த நிலைத் தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. தக்க காலம் கருதியிருந்தனர். அத்தகைய வாய்ப்பு ஒன்று உருவானது.

தொடக்கத்திலிருந்தே பெரியாரின் அரசியல் எதிரியும் தனிநிலை நண்பருமான ராசாசி எனப்படும் ஆச்சாரியாரின் அறிவுரையின் துணையுடனும் தனக்குப் பின் கழகத்தின் தலைமையையும் அதன் சொத்தையும் நடத்திச் செல்லும் ஒரு வழித்தோன்றல் வேண்டுமென்பதாலும் தனக்குத் தனிநிலை உதவியாளராயிருந்த மணியம்மை என்ற இளம்பெண்ணைப் பெரியார் தன் 61ஆம் அகவையில் மணமுடித்தார். இதனைக் காரணமாகக் காட்டி அண்ணாத்துரை கட்சியின் பெரும்பான்மையான இளந்தலைமுறைத் தலைவர்களையும் தொண்டர்களையும் தன்னோடு சேர்த்துக்கொண்டு திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை 1949 - இல் தொடங்கினார்.

திராவிடர் கழகத்தின் கொள்கைகளையே தொடர்ந்து பரப்பினர். தி.க.வும் தி.மு.க.வும் ″இரட்டைக் குழல் துப்பாக்கி″ என்றனர்.

பெரியார் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிப்பது தன் கட்சியின் நோக்கமல்ல என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால் தி.மு.க. 1952 - இல் மாணிக்கவேலர் என்பவரோடு ஓர்உடன்பாடு செய்துகொண்டது. சட்டமன்றத்தில் தி.மு.க.வின் கொள்கைளுக்காக வாதாடினால் அவரது தேர்தல் வெற்றிக்காகப் பாடுபடுவதாக ஒப்புப்கொண்டது. தேர்தலில் அவர் வெற்றி பெற்றார். ஆனால் வாக்குறுதியைக் கைவிட்டு ஆச்சாரியார் அமைத்த அமைச்சரவையில் அவர் சேர்ந்துவிட்டார்.

1957 - இல் திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் தேர்தலில் ஈடுபட்டு அதன் முலம் திராவிட நாடு விடுதலைக்குப் பாடுபடுவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 1957 தேர்தலில் பங்கு கொண்டு 15 இடங்களைப் பிடித்தனர்.

அதற்குள் திராவிடர் கழகத்தின் அடிப்படைக் கொள்கைகளிலொன்றான இறைமறுப்பைக் கைவிட்டு ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற நிலைப்பாட்டை மேற்கொண்டனர். சமய நடவடிக்கைகள், குறிப்பாக கிறித்துவ, முகம்மதிய சமயங்கள் தொடர்பானவற்றைத் திறனாய்வது கைவிடப்பட்டது. பார்ப்பன எதிர்ப்பு என்பது பார்ப்பனிய எதிர்ப்பாகக் குறுக்கப்பட்டது.

1962 தேர்தலுக்கு முன்பே தி.மு.க.வில் ஒரு பெரும் உட்கட்சிப் பூசல் ஏற்பட்டது. தி.மு.க.வில் ஐம்பெருந் தலைவர்கள் பட்டியலில் இல்லாதிருந்த மு.கருணாநிதி பிறரையெல்லாம் புறந்தள்ளி மேலேறிக்கொண்டிருந்தார். திரைப்படத் துறையிலிருந்த தன் தொடர்பாலும் பண வலிமையாலும் ஒவ்வொரு மாவட்ட மாநாடுகளை நடத்தும் போதும் உள்ளுர்த் தலைவர்களுடன் தொடர்புகொண்டு தன் பிடிப்பைக் கட்சியில் மிக வலுவாக நிலைநாட்டியிருந்தார். அத்துடன் திரைப்பட நடிகரான ம.கோ. இராமச்சந்திரனும் செல்வாக்கில் வளர்ந்திருந்தார். இதனால் பல தலைவர்கள் கசப்புற்றிருந்தனர். அவர்களின் குரலாய் சம்பத் எழுந்தார். திராவிட நாட்டுப் பிரிவினை என்பது தி.மு.க. தலைவர்களுக்கு வெறும் மேடை முழக்கமே; அதில் அவர்களுக்கு உண்மையான ஆர்வமோ நம்பிக்கையோ இல்லை என்று அவர் கூறினார். கட்சியின் அடிப்படைத் தொண்டர்கள் பலரை அவர் கவர்ந்தார். மோதல் முற்றி 1961 - இல் சம்பத் தனியாகப் பிரிந்தார். தன் கட்சிக்குத் தமிழ்த் தேசியக் கட்சி என்று பெயர் வைத்தார். இன்று கூடத் ″தேசியம்″ என்ற சொல்லுக்கு ″இந்தியத் தேசியம்″ என்றே சராசரித் தமிழர்கள் பொருள் கொள்வர். இன்று வரை தமிழக அரசியல் கட்சி எதுவும் தேசியம் என்ற சொல்லின் அரசியல் பொருளை மக்களுக்கு புரியவைக்க முயலவில்லை. எனவே கட்சியின் பெயரைப் பார்த்ததுமே சம்பத்துடன் இணைய நினைத்தவர்களில் மிகப் பெரும்பாலோர் நின்றுவிட்டனர். 1962 இல் நடைபெற்ற தேர்தலில் ஈடுபட்டுப் படுதோல்வி அடைந்ததுடன் கட்சியைத் தொடர்ந்து நடந்த ஆற்றலின்றி பேரவைக் கட்சியில் அடைக்கலம் புகுந்தனர் சம்பத்தும் அவரது தோழர்களும்.

1952 - இல் முதலமைச்சரான ஆச்சாரியார் தொடக்கப்பள்ளி மாணவர்கள் நாளில் பாதியில் தம் பெற்றோரின் தொழிலில் பயிற்சி பெறவேண்டுமென்ற திட்டத்தைக் கொண்டுவந்ததால் பழைய வருணமுறையை மீட்கும் திட்டமென்று அனைத்துத் தரப்பினரும் எதிர்த்தனர். எனவே ஆச்சாரியார் பதவி விலக அவ்விடத்தில் காமராசர் வந்தார். அவர் குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்ட போது அனைத்துக் கட்சியினரும் அவரை ஆதரித்தனர். இதன் தொடர்ச்சியாகப் பெரியார் காமராசரைப் ″பச்சைத் தமிழர்″எனக் குறிப்பிட்டு அதைச் சாக்காக வைத்துப் பேரவைக் கட்சியை ஆதரிக்கத் தொடங்கினார். உண்மையில் தி.மு.க.வுக்கு எதிர்நிலை எடுப்பதே உண்மையான அவரது நோக்கம். பெரியாரின் அண்ணன் மகனான சம்பத் தி.மு.க.வில் பிரிவேற்படுத்த மேற்கொண்ட முயற்சியும் பெரியார், காமராசர் ஆகியோரின் தூண்டுதலால் தான் என்ற குற்றச்சாட்டில் உண்மையிருக்கலாம்.

இதற்கிடையில் இந்திய அரசு திட்டமிட்ட பொருளியல் என்ற பெயரில் ஐந்தாண்டுத் திட்டங்களைத் தீட்டியது. இத்திட்டங்களில் தமிழகத்துக்குப் போதிய ஒதுக்கீடு இல்லை என்று தி.மு.க. கடுமையான கருத்துப் பரப்பல் செய்தது. இதன் மூலம் பம்பாய் மூலதனம் தமிழக மூலதனத்தை அடிமைப்படுத்துகிறது என்ற பழைய நிலைப்பாடு ஓசைப்படாமல் மூலையில் போடப்பட்டது. அது இன்று வரை எவர்கவனத்துக்கும் வரவில்லை.

1962 - இல் உள்துறை அமைச்சராயிருந்த இலால்பகதூர் சாத்திரி பிரிவினைத் தடைச் சட்டம் கொண்டுவந்தார். அச்சட்டத்தின்படி பிரிவினை கேட்கும் கட்சிகள் தேர்தலில் போட்டியிட முடியாது. அச்சட்டம் பிறப்பிக்கப்பட்ட உடனே தி.மு.க. தனித் திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டுவிட்டதாக அறிவித்தது. இவ்வாறு தி.மு.க. கொள்கைகளை எல்லாம் கைவிட்டுவிட்ட வெறும் பதவிதேடிகளின் கும்பலாக இழிந்துபோய் விட்டது; உயிரை இழந்த வெறும் பிணமாக மாறிவிட்டது.

1957 தேர்தலில் வெற்றி பெற்ற 15 பேரும் போட்டியிட்ட தொகுதிகளை 1962 - இல் குறிவைத்துப் பேரவைக் கட்சி வேலை செய்தது. காஞ்சிபுரத்தில் போட்டியிட்ட அண்ணாத்துரை வாக்காளர்களைக் கெஞ்சினார். கண்ணீர்விட்டு அழாத குறை. இறுதியில் கருணாநிதி தவிர 14 பேரும் தோல்வியுற்றனர். ஆனால் புதிதாக 61பேர் வெற்றிபெற்றனர்.

1965 இந்தியக் குடியரசு நாளான சனவரி 26 ஆம் நாள் முதல் இந்தி இந்தியாவின் ஒரே ஆட்சிமொழியாக வரவிருந்தது. அந்த நாளைத் துயரநாளாகக் கொண்டாடுவதென தி.மு.க. தீர்மானித்தது. ஆனால் தி.மு.க. தலைவர்கள் எதிர்பார்க்காத அளவில் இப்போராட்டம் வெடித்தது. மாணவர்கள் வீரார்ப்போடு புறப்பட்டனர். காவல் துறையினர்க்கும் மாணவர்களுக்குமாக மூண்ட மோதல் மக்களுக்கும் காவலர்களுக்குமாகப் புது வடிவம் பெற்றது. படையினர் அழைக்கப்பட்டனர். இந்த எதிர்பாராத வேகத்தைக் கண்டு அண்ணாத்துரையும் துணைவர்களும் கலங்கினர். மக்களையும் மாணவர்களையும் அமைதிப்படுத்தினர்.

இந்தப் போராட்டத்தில் உண்மையில் தி.மு.க. எந்தப் பங்கும் எடுக்கவில்லை. ஆனால் முழுப் பயனையும் அது பெற்றது. 1967 தேர்தலில் பேரவைக் கட்சியின் முற்றதிகாரத்தை முறியடிப்பது என்ற பெயரில் ஒரு கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு அண்ணாத்துரை வெற்றிபெற்றார். கொள்கையில் இரு முனைகளான பொதுமைக் கட்சிகளும் ஆச்சாரியாரின் சுதந்திரக் கட்சியும் இதில் பங்கேற்றன.

இந்தியாவில் கொள்கையில்லாக் கூட்டணியை முதன் முதலில் உருவாக்கிய பெருமை தமிழகத்துக்கும் அதைப் பெற்றுத்தந்த பெருமை அண்ணாத்துரைக்கும் உரியது.

கூட்டணியின் விளைவாக தி.மு.க. அறுதிப் பெரும்பான்மை பெற்று அண்ணாத்துரை தலைமையில் ஆட்சியைப் பிடித்தது. ஆட்சிக்கு வந்த ஒரு சில மாதங்களிலேயே ஏழைகளாய்ச் சட்டமன்றத்தினுள் நுழைந்த தி.மு.க. ச.ம.உ.க்கள்(சட்ட மன்ற உறுப்பினர்கள்) மகிழுந்துகள் வாங்க முற்பட்டனர். இதனால் உருவான ஊழல் குற்றச்சாட்டுகளை மூடி மறைப்பதற்காக ″தொகுதி மக்கள் ச.ம.உ.க்களுக்கு மகிழுந்து வழங்கும்″ ஊழல் விழாக்களை அண்ணாத்துரையே முன்னின்று நடத்தினார். அவருடைய ஆட்சி சீரழிந்து பெயர் கெடும் முன் புற்றுநோய் அவரைக் கொன்று அவர் பெயரைக் காத்தது.

பின்னர் திராவிட இயக்கத்தில் பச்சையான ஊழலும் பதவிச் சண்டையும் விளம்பர அரசியலும் சொத்து சேர்த்தலும் பெண்ணை நாடலும் என நாற்றமெடுத்தது.

அண்ணாத்துரை காலத்தில் தில்லியில் ஆட்சி புரிந்த இந்திரா காந்திக்கும் பேரவைக் கட்சித் தலைவர்களுக்கும் ஏற்பட்ட மோதல் கருணாநிதியின் காலத்தில் 1969-இல் வெடித்தது. தமிழகத்தில் காமராசர் தலைமையிலான பழைய பேரவைக் கட்சி பெரும் செல்வாக்கோடு விளங்கியது. தன் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள தி.மு.க.வின் பாராளுமன்ற உறுப்பினர்களின் துணைய நாடி இந்திரா கருணாநிதியை அணுகினார். பின்னர் பிற கட்சிகளின் தயவிலேயே ஆட்சி புரிய விரும்பாத இந்திரா, 1971- இல் பாராளுமன்றத்துக்குத் தேர்தல் நடத்த விரும்பினார். தி.மு.க.வின் 4 ஆண்டுக்கால ஆட்சியின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டிருப்பதாகக் கருணாநிதி கருதினார். காமராசரும் ஆட்சிக்கு எதிராகக் கணைகள் தொடுக்கத் தொடங்கியிருந்தார். எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு கருணாநிதியும் சட்டமன்றத்தைக் கலைத்துத் தேர்தல் அறிவித்தார். சட்டமன்றத் தொகுதிகள் அனைத்தும் தி.மு.க.வுக்கும் பாராளுமன்றத் தொகுதிகள் அனைத்தும் இந்திரா பேரவைக்கும் ஒதுக்கப்பட்டன.

கழக வரலாற்றிலேயே, தமிழக வரலாற்றிலேயே 183 சட்டமன்ற உறுப்பினர்களை தி.மு.க. வென்றது. இந்திரா காந்திக்கு இன்னும் தனது உதவி தேவைப்படும் என்ற மிதப்பில் கருணாநிதி ஆணவத்துடன் செயல்படத் தொடங்கினார். 1974 - இல் அலகபாத் உயர்நீதி மன்றத் தீர்ப்பின் படி இந்திரா காந்தி பதவியிழக்க வேண்டியிருந்த சூழலில் நெருக்கடி நிலை ஒன்றை அறிவித்து அதிலிருந்து தப்பினார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தல், இந்திரா காந்தியைத் தனிப்பட்ட முறையில் தாக்குதல் என்ற வகையில் தி.மு.க. அரசும் கட்சியும் செயல்பட்டன. ஓர் எல்லை வரை பொறுத்த இந்திரா 1976 - இல் திடீரென்று படை அணிகளைத் தமிழகத்தினுள் அனுப்பி தி.மு.க. அரசைக் கவிழ்த்தார். பலர் தலைமறைவாயினர். கீழ்நிலைத் தலைவர்கள், தொண்டர்கள் என்று பலரும் சிறைச்சாலைகளில் அடித்தே கொல்லப்பட்டனர்.

கொள்கைப் பரப்பலுக்குச் சிறந்த கருவி என்ற வகையில் நாடகங்கள், திரைப்படங்களைத் தி.மு.க. பயன்படுத்தியது. அண்ணாத்துரையே ஒரு சிறந்த நாடகாசிரியர். கருணாநிதியும் அவ்வாறே. இருவரும் பிற தலைவர்கள் சிலரும் கட்சி மாநாடுகளில் நாடகங்களில் நடித்திருக்கிறார்கள். திரைப்படத் துறையிலும் அண்ணாத்துரை கதை, உரையாடல்கள் எழுதியிருக்கிறார். சொந்தப் படமும் எடுத்திருக்கிறார். கருணாநிதி திரைப்படத் துறையில் அதிக ஈடுபாடு கொண்டு பெருஞ்செல்வம் சேர்த்தவர்.

திரைப்பட, நாடகத் துறைகளில் ஈடுபடுவது தி.மு.க.வுக்கு மட்டும் உரிய பழக்கமல்ல. பேரவைக் கட்சிக்கும் இந்த மரபு உண்டு. தமிழகப் பேரவைக் கட்சித் தலைவர் சத்தியமூர்த்தி கட்சி நாடகங்களில் நடித்திருக்கிறார். கல்கி முதலியோர் திரைக்கதை உரையாடல்கள் எழுதியிருக்கிறார்கள். ஏ.வி.எம். போன்ற திரைப்பட நிறுவனங்கள், நவாபு இராசமாணிக்கம் பிள்ளையின் நாடக நிறுவனங்கள், கே.பி. சுந்தராம்பாள் போன்றவர்கள் திரைப்படங்கள் மூலமும் நாடகங்கள் மூலமும் பேரவைக் கட்சிக்குப் பணியாற்றியுள்ளனர்.

இந்த நிலையில் விரைவில் ஆட்சியைப் பிடித்து விடவேண்டும் என்ற ஆவலில் கே.ஆர். இராமசாமி, ம.கோ. இரா., சிவாசி கணேசன், இரசேந்திரன் போன்ற நடிகர்ளை தி.மு.க. பயன்படுத்தியது. கணேசன் இடையில் ஓடிவிட்டார். ம.கோ.இரா. பெரும் ஆற்றலாக வளர்ந்துவந்தார். தேர்தல் முடிவுகளில் அவரது தாக்கம் இருந்தது. தி.மு.க.வின் வலிமையின் பின்னணியில் ம.கோ.இரா.வின் சுவைஞர் மன்றங்கள் இருப்பது கொஞ்சங் கொஞ்சமாகக் கருணாநிதிக்கு உறுத்தியது. எனவே தனது மகன் முத்துவைத் திரைப்படத் துறையில் நுழைத்து அதன் மூலமாக ம.கோ.இரா.வை ஓரங்கட்டுவது என்று திட்டமிட்டுச் செயற்படத் தொடங்கினார் கருணாநிதி. தினந்தந்தி நாழிதழ் உரிமையாளரும் அமைச்சராயுமிருந்த ஆதித்தனாரின்[1] துணைகொண்டு ம.கோ.இரா. மன்றங்களை முத்து மன்றங்களாக மாற்ற கருணாநிதி முற்பட்ட போது ம.கோ.இரா. நேரடி மோதலில் ஈடுபட்டு ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறி தனிக் கட்சியாக 1973-இல் அண்ணா தி.மு.க.வைத் தொடங்கினார்.

ஆட்சிக் கலைப்பினாலும் ஒடுக்குமுறையாலும் நடுநடுங்கிப் போன கருணாநிதியிடம் அதுவரை இருந்தது திமிர்தானேயொழிய வீரமல்ல என்பது அவருக்கும் அவரை நோட்டமிட்டு வந்தவர்களுக்கும் தெரிந்தது.

1976-இல் ம.கோ.இரா. இந்திரா பேரவையோடு கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தார். 1979-இல் இந்திராவுடன் கூட்டணி அமைத்து பாராளுமன்றத் தேர்தலில் கருணாநிதி ம.கோ. இரா.வின் கட்சியைத் தோற்கடித்தார். அரசியலமைப்புச் சட்ட விதி 356-இன் கீழ் அ.தி.மு.க ஆட்சியைக் கவிழ்க்கச் செய்து சட்டமன்றத் தேர்தலுக்கு வழி வகுத்தார் கருணாநிதி. எந்தக் கண்ணோட்டத்திலும் முட்டாள்தனமென்று மெய்ப்பிக்கத்தக்க வகையில் பாதிக்குப் பாதி தொகுதிகளைத் தத்தம் அணிகளுக்குப் பங்கிட்டு முதலமைச்சர் பதவி தனக்கென்று இந்திராவினால் அரைமனதுடன் அளிக்கப்பட்ட ஒரு வெற்று வாக்குறுதியை மட்டும் பெற்றார். தேர்தலில் ம.கோ. இரா. வென்றார். அன்றிலிருந்று இறுதி வரைக்கும் பேரவைக் கட்சி தன்னை மிதித்தாலும் மறைவாக அதன் காலைக் கட்டிச் கொண்டு தி.மு.க. வாழ்கிறது.

ம.கோ.இரா.-வுக்குப் பின் வந்த செயலலிதா காலத்தில் அ.தி.மு.க. பேரவைக் கூட்டணியுடன் ஆட்சியைப் பிடித்து இன்று முரணி நின்றாலும் மறைமுகமாக பேரவைக் கட்சியின் தலைமைக்கு அடிபணிந்தே நிற்கிறது.

இவ்வாறு இன்று தமிழ்த் தேசியம் என்ற ஒன்று இந்திய அரசியல் சூழலில் நிலவுவதாகக் கூற முடியவில்லை.

இந்தச் சூழலில் திராவிட இயக்கத்தைப் பற்றிய ஒரு மனந்திறந்த திறனாய்வை முன்வைப்பது நம் கடமையாகும்.

(தொடரும்)

அடிக்குறிப்பு:

[1] ம.கோ.இரா.வின் செல்வாக்கு விரைந்து வளர்ந்து வந்த 1950-களில் ஆதித்தனார் அவரைக் கிழட்டு நடிகர் என்றும் மலையாளி என்றும் குறைகூறி அவரது நாழிதழில் எழுதினார். விசயபுரி வீரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஆனந்தன் என்ற நடிகரின் நடிப்பை வானளாவப் புகழ்ந்ததுடன் தமிழன் என்று போற்றவும் செய்தார். பின்னர் நாம் தமிழர் இயக்கம் என்ற ஒரு கட்சியைத் தொடங்கினார். திராவிட நாடு என்பது தமிழர்களுக்கு நலம் செய்யாது; தமிழர் நலனுக்காகத் தனி அரசியல் அமைப்பு வேண்டுமென்று சரியாகவே சொன்னார். சடுகுடு போன்ற தமிழ் மரபு விளையாட்டுகளை ஊக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். (அவரது முன்முயற்சியில் நடைபெறும் போட்டிகளில் வழங்கப்படும் கோப்பைகளை நிகழ்ச்சி முடிந்த பின் அவரே திரும்ப வாங்கி வைத்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது). தி.மு.க.வின் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் குறைகூறி வந்தவர் திடீரென்று 1967 தேர்தலில் அக்கட்சியோடு கூட்டணி வைத்து தேர்தலில் வெற்றி பெற்று முதலில் சட்டப்பேரவைத் தலைவராகவும் பின்னர் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் இருந்தார். அப்பொழுது அவர் மீது பேருந்துகளுக்கு டயர்கள் வாங்கியதில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. அவருடைய இந்த நடவடிக்கைகளின் உண்மையான நோக்கம், பின்னணி போன்றவை இன்றும் புரியாத புதிர்களாக உள்ளன. அவருடைய பெயரையும் கட்சியின் பெயரையும் கூறிக்கொண்டு இன்றும் சிலர் இருக்கின்றனர். ஆனால் அவர்களிடம் செயல் திட்டம் எதுவுமில்லை என்பதுடன் அவர்களது நடவடிக்கைகளும் புதிராகவே உள்ளன.

0 மறுமொழிகள்: