24.9.07

தமிழ்த் தேசியம் ... 8

ஒருவரை ஒரு தேசியத்தைச் சேர்ந்தவரா இல்லையா என்பதை எப்படி முடிவு செய்வது?

தேசியம் என்பது ஒருவரின் தாய்மொழியை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. அவர் வாழும் நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்டது. எவரொருவர் தான் வாழும் நிலத்தின் நலத்தோடு தன் சொந்த நலம் இரண்டறக் கலந்துள்ளது என்று உணர்ந்து அதற்காகப் பாடுபடுகிறாரோ அதுபோல் எவரொருவருக்கு அவர் வாழும் நிலத்தின் மீது அவரது வாழ்வும் வளமும் வேர்கொண்டுள்ளதாக உணர்ந்துள்ளாரோ அவரே அத்தேசியத்தின் மக்களாவர்.

தமிழகத்தின் தேசிய வாழ்வில் ஒரு திரிபாகவேனும் நிலவிய திராவிட இயக்கத்தில் மொழி உணர்வை முழுமனதோடு வெளிப்படுத்தியவர்களில் பெரும்பாலோர் தெலுங்கைத் தம் தாய்மொழியாகக் கொண்டவர்கள். வரலாற்றுக் காரணங்களால் தமிழகத்தைத் தம் தாயகமாகக் கொண்டுவிட்ட இவர்களுக்குத் தமிழ் நிலத்தின் மீதுள்ள தொடர்பும் நெருக்கமும் வேறெவருடையதைக் காட்டிலும் குறைந்ததல்ல. அதே போல் தனித்தமிழ் இயக்கத்தில் கன்னடத்தைக் தாய்மொழியாகக் கொண்ட எத்தனையோ பேர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களெல்லாம் தமிழகத் தேச மக்களே.

மாறாகப் பார்ப்பனர்கள் எந்த நிலத்தின் மீதும் பற்றுக்கொண்டவர்களல்லர். அவர்களுக்குத் தேசியம் எதுவுமே கிடையாது. ஆனால் அவர்களும் ஒவ்வொரு சமயம் தாம் வாழும் வெளி இடங்களில் தங்களுக்கு அச்சுறுத்தல் வரும்போது தேசியம் பேசுவர். ஆனால் அதை நம்பி அவர்களைப் பொருட்டாகக் கருதக் கூடாது.

அதேபோல் வளவாழ்வு வாழ முடியுமென்ற நம்பிக்கையில் பிற நாடு சென்று வாழ நினைப்போரும் தேசியத்தில் வேர்கொள்ளாதவரே. ஆனால் இவர்கள் அனைவரும் தாம் செல்லும் இடங்களில் படும் இன்னல்களிலிருந்து விடுதலை பெறத் தாய்நாடு வரும்போது தேசியம் பற்றி நாம் அவர்களுக்கு எடுத்துரைக்கலாம்.

மொத்தத்தில் தமிழகத் தேசியம் புத்துயிர் பெற நாம் மக்களுக்குப் பொருளியல் உணர்வு ஊட்ட வேண்டும். இம்மண்ணின் வளங்கள் மீது நமக்குள்ள உரிமையை நிலைநாட்ட வேண்டும். இந்த மண்ணில் எந்த விதமான பொருளியல் நடவடிக்கையிலும் நாம் ஈடுபட நமக்குள்ள தடையற்ற உரிமையை நாம் வலியுறுத்த வேண்டும். ஒட்டுண்ணி வாழ்க்கையைக் கடிய வேண்டும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது போன்ற ஏமாளித்தனமான, ஏமாற்றுத் தனமான முழக்கங்களைக் கைவிட வேண்டும். அனைத்துக்கும் மேலாக, காசுமீரத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் அரசியலமைப்புத் சட்டத்தின் 370 - ஆம் விதி அனைத்துத் தேசியங்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டுமென்று நாம் போராட வேண்டும்.

வாழ்க தமிழகம்! வளர்க தமிழகத் தேசியம்!

2 மறுமொழிகள்:

சொன்னது…

தமிழ் தேசியத்திற்காக தமிழகத்தில் கட்சி நடத்தியவர்களைப் பற்றி, அல்லது தேசிய பார்வை கொண்டு தமிழுக்காக பாடுபட்டவர்களை பற்றி, தமிழ் நாட்டில் தமிழுக்காகக் குரல் கொடுத்தவர்களைப் பற்றி, குறைந்தபட்சம் அவர்கள் பெயரைக் குறிப்பிட்டுக் கூட கட்டுரையில் பதிவு ஒன்றும் இல்லையே?

சொன்னது…

அய்யா! வணக்கம். தமிழ்தேசியம்குறித்த கட்டுரைப்படித்தேன். இது ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கு ,ப்ண்பாட்டிற்குஎப்படிபயன்படும்.?