தமிழ்த் தேசியம் ... 2
தமிழ்த் தேசியம்
தேசிய உணர்வென்பது இயற்கையானது. அது நில எல்லை அடிப்படையில் உருவாவது. விலங்குகளும் தாம் வாழும் இடங்களுக்கு எல்லை வகுத்துள்ளன. சிலவகை மான்கள் தாம் வாழும் எல்லைகளுக்கு அடையாளமிட்டுப் பேணுவதாக உயிர்நூலார் கூறுவர். நாய்களும் இத்தகைய எல்லைகளை வகுத்துள்ளன. எல்லையினுள் புதிதாக நுழையும் நாயை அவை உடனே அண்டை நாய்களுடன் சேர்ந்து துரத்திவிடும்.
மனிதர்கள் ஓரிடத்தில் இறுதித் திரிவாக்கம் பெற்றுப் பரவினயமையால் உலக மொழிகளில் பல அடிப்படைச் சொற்களில் ஒற்றுமை காணப்படுகிறது. அவர்கள் பல்கிப் பெருகி உலகெலாம் பரவியபோது ஆங்காங்குள்ள பருப்பொருட் சூழல்கள் மற்றும் வாய்ப்புகளுக்கேற்ப அவர்களது பண்பாடுகளும் மொழிகளும் வளர்ச்சியடைந்தன.
அருகருகே வாழ்ந்த மக்கள் உணவு தேடி தத்தம் எல்லைகளை மீறியபோது சண்டைகள் நிகழ்ந்தன. வளமில்லாப் பூமியிலிருந்து கூட்டமாக வளமிக்க பரப்புகளில் புகுந்து கொள்ளையடிப்பதற்கும் போர்கள் நடந்தன. இப்போர்களிலிருந்து பேரரசுகள் உருவாயின. பற்றாக்குறைப் பகுதியிலுள்ளோர் வளமிக்க பகுதிகளிலுள்ள வெவ்வேறு பொருட்களை வாணிகம் மூலம் பண்டமாற்றுச் செய்து உயர்நிலையடைந்த போது அத்தகைய வாணிகக் குழுக்களும் பேரரசுகளை அமைத்தன. இப்பேரரசுகள் தம் மொழி பேசும் மக்களையே அடக்கி அவர்கள் நிலத்தின் வளத்தைச் சுரண்டிச் சென்றபோது சுரண்டப்பட்ட மக்களின் தேசிய உணர்ச்சி மலர்ந்தது. தங்களைச் சுரண்டுவோரிலிருந்து தம்மை இனம் காணும் வகையில் தாம் பேசும் மொழியை தம்மை அடக்கியாளுவோர் மொழியிலிருந்தும் மாறுபடுத்திக்கொண்டனர்.[1] இதற்கு எடுத்துக்காட்டாக மலையாளம், சிங்களம் ஆகிய தேசியங்களின் வளர்ச்சியைக் கூறலாம். தமிழகத்தின், குறிப்பாகச் சோழப் பேரரசின் ஒடுக்குமுறையிலிருந்தே தமிழில் சேர நாட்டுத் திசைமொழி மலையாளமாக மாற்றப்பட்டது. மலையாளத்துக்கு இன்றைய எழுத்து வடிவத்தைக் கொடுத்த எழுத்தச்சனின் முயற்சி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இன்று கூட நாட்டுப்புற மலையாளிகளிடம் கழகக் காலத் தமிழ் அழியாமல் நிற்கிறது.
அது போன்றே சிறுபான்மையராயிருந்த சிங்களர் பக்கம் பெரும்பான்மையினரான தமிழர்கள் சோழர்கள் தாக்குதலின் எதரொலியாக உருவான தேசிய உணர்விலிருந்தே சாய்ந்திருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. சிங்களர்களின் பெயர்களில் உள்ள பின்னொட்டுகள் இந்த ஐயப்பாட்டை எழுப்புகின்றன. இன்றும் பத்மநாப, டக்ளசு தேவானந்த எனும் பெயர்கள் சிங்களப் பெயர்கள் போல் ஈறு குறிலாக இருக்கின்றன. அவர்கள் செயலும் சிங்களரைச் சார்ந்து நிற்கிறது. வல்லாண்மையை அண்டி வாழ்வதற்காகத் தேசியத்தை மாற்றிக்கொள்வதற்கு இவர்கள் எடுத்துக்காட்டுகள்.
தமிழகத்தில் தேசிய உணர்வு, அதாவது தம் நிலம் பற்றிய மக்களின் ஓர்மை கழகப் பாடல்களிலிருந்து தெரிகிறது. மோரியர் படையெடுப்பின் போது எல்லையிலிருந்த குறுநில மன்னர்களே அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டனர். ஆனால் அக்குறுநில மன்னர்களை அழித்ததன் மூலம் முவேந்தர்கள் தமிழகப் பாதுகாப்புக்கு ஊறு விளைத்தனர். தமிழரின் மானம் காப்பதற்காக இமயம் நோக்கிச் சென்ற செங்குட்டுவன் தமிழகம் முழுவதையும் ஓரரசாக்க வேண்டுமென்ற சாத்தனார் போன்றோரின் மறைமுக வேண்டுதலுக்குச் செவிசாய்க்கவில்லை. அதைச் செய்திருந்தால் தமிழக வரலாறே மாறியிருக்கும்.
தமிழகத் தேசிய உணர்வுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் இளங்கோவடிகள். ஆனால் அவர் காலத்திலும் தொடர்ந்தும் ஏற்பட்ட உள்நாட்டுக் குழப்பங்களால் தமிழகம் பலமுனைத் தாக்குதலுக்காளாகித் தன் முகத்தைச் சில காலம் இழந்தது.
சமணம் மூலமாக வந்தவர்கள் ஆட்சியாளர்களானார்கள். சமணம் வாணிகர்களின் சமயம் என்று பொதுவாகக் கூறப்படுகிறது. ஆனால் அது வெளிநாட்டு வாணிகர்களின் சமயம், ஏனென்றால் சமணத்தை எதிர்த்து உருவான சிவனியத்துக்குப் பள்ளி எழுச்சி பாடியவரான காரைக்காலம்மையார் ஒரு தமிழ் வாணிகப் பெண்மணி. சம்பந்தருக்கு ஆதரவளித்தவர்களில் வாணிகர்களே வலிமை வாய்ந்தவர்கள்.
புத்த சமயமும் வெளிநாட்டவர் தொடர்பு கொண்டிருந்தது. தன் தந்தை காலத்தில் பன்னீராயிரம் சிங்கள வீரர்களைச் சிறைபிடித்து வந்த கரிகாலனின் புகாரைக் கயவாகு மணிமேகலையின் துணைகொண்டு அழித்தான். இவையனைத்துக்கும் எதிர்ப்பாக, தேசிய எழுச்சியாகத் தான் சிவனியம் உருவானது. சிவபெருமானை மகிழ்வித்தவனாக ஒவ்வொரு பதிகத்திலும் ஒன்பதாம் பாடலில் இராவணனைப் புகழ்வதன் மூலம் அவனை கி.பி. ஆறாம் நூற்றாண்டிலேயே தமிழகத் தேசியத் தலைவர்களில் ஒருவனாக சம்பந்தர் உயர்த்திவிட்டார். இதன் மூலம் அக்காலகட்டத்தில் வைணவமும் தேசியத்துக்கு இரண்டகம் செய்ததை உய்த்துணரலாம்.[2]
தமிழ்த் தேசியத்தின் நிழலில் உருவான சோழப் பேரரசு அதில் நிலைத்து நிற்கவில்லை. மக்களின் வெறுப்புக்கு உள்ளானது. நாளடைவில் வெளியார் ஆதிக்கத்துக்குத் தமிழகம் மீண்டும் மீண்டும் ஆளானது. அவற்றிற்கு மக்களின் எதிர்ப்பின் எதிரொலிகளாக குற்றலாக் குறவஞ்சி, திரிகூடற் பள்ளு போன்ற சில இலக்கியத் தடயங்கள் மட்டும் எஞ்சி நிற்கின்றன. இவ்வெல்லா இயக்கங்களுக்கும் உள்ள ஒரு பொதுத் தன்மை, தாழ்ந்த சாதி மக்களைத் தங்கள் இறைவனுக்கு நெருக்கமானவர்களாகக் காட்டுவதேயாகும்.
இவற்றுக்குப் பின் கி. பி. 1682 முதல் 7 ஆண்டு காலம் பாண்டிய நாட்டை ஆண்ட அரங்ககிருட்டின முத்துவீரப்பனிடம் தேசிய உணர்வு தலைகாட்டியது. 19ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வெள்ளையரை எதிர்த்து சின்ன மருது வெளியிட்ட சீரங்கம் அறிக்கை தமிழகத் தேசிய வரலாற்றில் ஒப்பற்ற ஒன்றாகும்.
(தொடரும்)
அடிக்குறிப்பு:
[1] தங்களுக்குத் தனி அடையாளமாக சமயத்தை உருவாக்கிக் கொள்வதும் உண்டு. எ-டு. மோசேயின் தலைமையில் யூதர்கள்.
[2] தமிழகத்தில் மாலியத்தின் எழுச்சி குறிஞ்சி நிலத் தலைவர்களுக்கும் மூவேந்தர்களுக்கும் உருவாகியிருந்த முரண்பாடுகளைப் பயன்படுத்தி பார்ப்பனர்கள் மாலியத்தை வைத்து குறிஞ்சி, முல்லை நில மக்களிடையில் செயற்பட்டுவந்ததன் தடயம் சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது. குடகு நாட்டை அடுத்த மாங்காட்டு(இது பெரும்பாலும் மங்களூராயிருக்கலாம்) மறையோனின் சுற்றுச்செலவு இதையே சுட்டுகிறது எனலாம். களப்பிரர்கள் முதலில் மாலியர்களாகவே இருந்ததாகத் தோன்றுகிறது.
1 மறுமொழிகள்:
//இன்று கூட நாட்டுப்புற மலையாளிகளிடம் கழகக் காலத் தமிழ் அழியாமல் நிற்கிறது.//
இந்தக் கூற்றை மேலதிகமாக விளக்கவும். எவ்வகையில் நிற்கிறது?
கழக காலத் தமிழ் என்று எப்படிச் சொல்வீர்கள்?
கருத்துரையிடுக