'சுயமரியாதை இயக்கத்துக்கு நாடார்கள் ஆற்றிய தொண்டு' நூல் பற்றி...3
பெரியார் எடுத்துக்கொண்ட குமுகக் குறிக்கோள்களை ஒரு நேர்மையான தலைவன் எடுத்துக் கொண்டிருப்பானானால் அவன் வீடிழந்து நாடிழந்து தலைமறைந்து ஆயுதத்தையே துணைகொண்டு வாழ்ந்திருக்க வேண்டும்.
ஆனால் பெரியாரோ அவரைப் போற்றிப் புகழும், வாழ்த்தி வணங்கும் ஒரு தொண்டர் குழாமுடன் சங்கராச்சாரி எவ்வாறு வலம் வருகிறாரோ அவ்வாறே வாழ்ந்திருந்தார்.
தான் வெறும் சீர்திருத்தர்தான்; அரசியல்வாணரல்ல என்ற சாக்குச் சொல்லி வாய்வீச்சு வீசி எதிரிகளுக்கு விழிப்புணர்வும் ஒற்றுமையும் உறுதியும் ஏற்படுத்தித் தந்நுவிட்டார். நேரடியான, தீவிரமான, குறிப்பாகச் சொல்வதனால் வன்முறை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட தொண்டர்கள் முனைந்த போதெல்லாம் அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டார். அதே நேரத்தில் ஆட்சியாளர்களுடன் இணக்கமாக இருந்து பலன்களும் பெற்றார்.
தான் மக்களுக்குச் சிந்திக்க மட்டும் கற்றுத்தருவதாகவும் செயற்பட வேண்டியது அவர்கள் பொறுப்பென்றும் தந்திரமாகப் பேசி செயற்படாத, வெறும் வாய்ப்பேச்சு அரசியலைத் தமிழகத்தில் புகுத்தி அரசியல் இவ்வளவு இழிநிலை அடையக் காரணமாயிருந்தார்.
குப்பையை அகற்றுவோம் என்று கூவி அழைத்து மக்களைத் திரட்டிக் குப்பையைக் கிளறி மட்டும் விட்டு நாட்டை நாறவைத்து விட்டார்.
இன்று கல்வி இவ்வளவு பரவிய பிறகும் கல்வி என்பது மக்களின் பிறப்புரிமையல்ல அது ஒரு சலுகை என்ற கருத்து மக்களிடையிலிருந்து விலகாததற்குப் பெரியார் ஒதுக்கீடு கிடைத்த பின்பும் அனைவருக்கும் கல்வி என்ற முழக்கத்தை வைக்காததுதான் காரணம்.
பண்ட விளைப்பு, தொழில் வளர்ச்சி என்ற கண்ணோட்டத்தைக் கற்றோர் கல்லாதோர், ஏழை, பணக்காரன் ஆகிய அனைவர் மனங்களிலிருந்தும் துடைத்தெறிந்துவிட்டு உடலுழைப்பற்ற ′வேலைக்கு′ மாநிலம் மாநிலமாக, நாடு நாடாக ஓடுவதற்கும் எந்தமொழியைக் கற்கலாம் என்று பித்துப் பிடித்தலைவதற்கும் ஒதுக்கீடு என்ற மிகச் சிறு வேலைவாய்ப்புள்ள ஒன்றின் மீது 75 ஆண்டுகாலம் மக்களின் மனத்தை இழுத்துப் பிடித்து வைத்தே காரணம்.
கோயில் சொத்துகளை அவற்றைப் பயிர் செய்துவரும் பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோராகிய குத்தகையாளருக்கே சொந்தமென்று முழங்கி இந்து சமயத்தின் ஆணிவேரில் கைவைத்திருந்தால் இன்றைய கோயில்கள் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கும். தேர், திருவிழா, குடமுழக்கு, சம்ரோச்சனம், வேள்வி, அருளாசி எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கும். பார்ப்பனனின் பூணூல் அறுந்து அதைத் தொடர்ந்து மேற்சாதியினரின் கட்டமைப்பும் உடைந்து இந்து சமயமே உருமாறிப் போயிருக்கும்.
ஆனால் இன்று தாழ்த்தப்பட்டோர் தமது அடிப்படை மனித உரிமைகளுக்காகப் போராடுவதன் அடையாளமாக சிற்றூர்களிலெல்லாம் கோயில்களை நிறுவி பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் போட்டிபோட்டுத் திருவிழாக்கள் நடத்தி பண்பாட்டிலும் பொருளியலிலும் பெருஞ்சிதைவு ஏற்படுத்துவதற்குப் பெரியார் பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இரண்டகம் செய்து பார்ப்பனருடன் மறைமுகமாகவும் பிற மேல் சாதிக்காரர்களுடன் திராவிடர் என்ற பெயரிலும் வைத்துக் கொண்ட உறவு தானே காரணம்? அத்துடன் தமிழகத்தின் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு இருக்கவும் மாநிலத்துக்கு வெளியே மண்டல் ஆணையத்துடன் இணைத்துக்கொண்டதும் தாழ்த்தப்பட்டோரில் உயர்நிலையிலுள்ளோர் அம்மக்களைப் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராகத் தூண்டிவிடக் காரணமாகிறது. உங்களை நேரடியாகக் கேட்கிறேன், உங்களுக்கு ஒன்றுபட்ட மக்களைக் கொண்ட, ஒற்றுமையுடன் மண்ணின் உரிமைக்காகப் போராடும் தமிழகம் வேண்டுமா, அல்லது வெளிமாநிலங்களிலும் நடுவணரசிலும் வேலை வாய்ப்புகள்(அவை எத்தனை?) வேண்டுமா?
இன்றைய நிலையில் இந்த மண்ணின் மக்கள் மேல் படர்ந்து நின்று அவர்களை எழ விடாமல் அழுத்திக் கொண்டு கட்டிதட்டிப் போனவை மூன்று.
1. அடிமை மனப்பான்மையை மக்கள் மனதில் புகுத்திப் பொருளியலிலிருந்து அடிமைப்பணி நோக்கி மக்களின் மனநிலையைத் திருப்பி வைத்துவிட்ட திராவிட இயக்கம்.
2. மார்க்சியத்தை ஏழைநாடுகளின் நலனுக்கு எதிராகவும் வல்லரசுச் சுரண்டலுக்கு ஏற்பவும் திரித்து இந்நாடுகளில் நடைபெறும் தொழில் முயற்சிகளைக் கருக்கலைத்து விட்டு வல்லரசுகள் நுழையும்போது கதிரவனை நோக்கிக் குலைக்கும் நாய்களைப் போல் வெற்றுக் கூச்சலிடும் பொதுமையினரின் போலி மார்க்சியம்.
3. தமிழக வரலாற்றையும் பழம் தொன்மங்களை(புராணங்களை)யும் தோண்டிப் புதைத்துத் தமிழனை வரலாறில்லாதவனாகச் செய்துவிட்ட கழக(சங்க) நூல் தொகுப்புகள்.
தமிழக மக்கள் மேல் கவிந்து பாறையாக இறுகிப் போன இம்மூன்று அடுக்குகளை உடைத்தெறிய என்னாலான முயற்சிகளைச் செய்து வருகிறேன். தொடர்பான என் எழுத்தாக்கங்கள் சிலவற்றை உங்களுக்கு அனுப்பியுள்ளேன்.
இன்றைய நிலையில் நாடார்கள் செய்யத்தக்கவை;
1. நாடார்களை மிகப் பிற்படுத்தப்பட்டனர்களாக அறிவிக்க வேண்டுமென்று பணந்திரட்டி நம்மை இழிவுபடுத்தும் கங்காராம் துரைராசு வகையறாக்களின் முயற்சியை முறியடிக்கும் வகையில் நாம் சலுகைகளால் உயரவில்லை; தன்முயற்சியால் தான் உயர்ந்தோம்; எனவே எங்களை முற்பட்ட வகுப்பாக அறிவிக்க வேண்டும் என்ற அரசுக்கு வேண்டுகோள் விடுப்பதன் மூலம் தமிழக மக்களுக்கு ஓர் அதிர்ச்சி மருத்துவம் செய்தல். இவ்வாறு செய்வதால் நமக்குப் பெரும் இழப்பு ஏதுவும் இல்லை. ஒதுக்கீட்டினால் கிடைக்கும் பயன்கள் மிகவும் சுருங்கிக் கொண்டு வருகின்றன. பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோருக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்பு என்ற ஆதாயத்துடன் பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் எனும் இரு வகைப்பாட்டினுள்ளும் அடங்கியுள்ள எண்ணற்ற சாதிப்பிரிவுகளும் உட்பிரிவுகளும் உடைந்து சிதறும் போக்கு உருவாகியுள்ளதால் முழுக் குமுகத்துக்கும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இழப்பு மிகப் பெரிது. அரசு வேலைவாய்ப்புகள் அருகத் தொடங்கியுள்ள இக்காலகட்டத்தில் ஒதுக்கீடு எனும் மாயமான் மாபெரும் குமுகச் சாபக்கேடு. அதைத் தெரிந்து தமிழக மக்கள் விடுபடுவதற்கு இத்தகைய ஒரு தீர்மானம் மிக உதவியாயிருக்கும்.
2. அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி வேண்டும் என்ற முழக்கத்துடன் நம் ஆற்றலுக்கேற்ற வகையில் எண்ணற்ற தொடக்கப் பள்ளிகளைத் தொடங்கி அவற்றுக்கு ஒப்புதலும் நல்கையும்(Grant) தருமாறு மக்களைத் திரட்டிப் போராடல். மிகப்பிற்பட்டோர் சலுகைக்குக் கைக்கூலியாகத் திரட்டப்பட்ட பணம் இதற்குச் செலவாகலாம்.
3. இது முதன்மையானதும் இன்றியமையாததுமாகும். உள்நாட்டுத் தொழில் வளர்ச்சியைத் தாக்கி வெளி மூலதனம் நுழைவதற்குக் காரணமாகவும் அரசியலாளர்கள், அதிகாரிகளின் அதிகார, பொருளியல், அட்டுழியங்களுக்கு மூலமாகவும் விளங்கும் வருமானவரியை எதிர்ப்பதும் தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் உரிமம், இசைவாணை, மூலப்பொருள் ஒதுக்கீடு, சுற்றுச்சுழல், மாசுத்தடுப்பு, சிறார் உழைப்புத்தடுப்பு என்பன போன்ற "உயர்ந்த" ஆனால் போலியான அரசின் உத்திகளை எதிர்த்துப் போராடுவது. இதில் நாடார்கள் தலைமைப் பங்காற்றும் பொருளியல் நிலைமையில் உள்ளனர். முக்குலத்தோரில் இதே நலன்களை உடையவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினர் உள்ளனர். தாழ்த்தப்பட்டோர், குறிப்பாக ஆற்றுப்படுகைப் பள்ளர்களும் அவ்வாறே. மேல் சாதிக்காரர்கள் ஆதரவும் கிடைக்கும். பூனைக்கு மணிகட்டுவோர் யாரென்பதே கேள்வி. அதனை நாம் செய்யலாம்.
4. வேளாண் விளைபொருள் விலை ஆணையத்தை ஒழிக்க, நெல், கோதுமை, வாணிகத்துக்கு வாணிக உரிம முறையை ஒழிக்க, ஆண்டுக்கு ஒன்றே கால் கோடி டன் உணவுப் பொருளை முடையிருப்பு என்ற பெயரில் மக்கள் பணத்திலிருந்து வாங்கி வைத்து அழிக்கும் நடுவணரசின் ″பதுக்கல் ஒழிப்பு″(!) நடவடிக்கையை ஒழிக்க, உணவுப் பொருள் நடமாட்டத்துக்குக் கடத்தல் என்று பெயரிட்டு உணவுப் பொருள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளோரை வேட்டையாடும் கயமையை எதிர்க்க ஆயத்தப்பட வேண்டியுள்ளது. (ஆனால் இது நாடார்களின் உடனடிச் சிக்கல்ல. அவர்களுக்கு வேளாண்மை முகாமைத் தொழிலல்ல. ஆனால் நாம் இதை முன்வைத்தாக வேண்டும்).
நமக்கிருந்த குமுக இழிவுக்கெதிராகப் போராடி வெற்றிமுகத்தை என்றோ கண்டுவிட்டோம். பொருளியல் ஒடுக்குமுறையை இனம்காணவும் அதற்காகப் போராடவும் தவறிவிட்டோம். அதுதான் நமக்கு மட்டுமல்ல முழுத் தமிழ்நாட்டுத் தேக்கத்துக்கும் மூலகாரணம். முன்னர் குமுக இழிவுக்கெதிராக போராட்டத்தில் நம் பொருளியல் வலிமை எவ்வாறு பின்னணியாக நின்றதோ அவ்வாறே தமிழகத்தின் பொருளியல் அடிமைத்தனத்துக்கு எதிரான போராட்டத்திலும் தமிழகத்தின் பொருளியல் வளர்ச்சியின் முன்னோடிகளாகிய நம் பங்கு, அதனைத் தொடங்கி வைக்கும் நம் பணி துவங்கட்டும்.
உங்கள் நூலிலிருந்து நீங்கள் ஆழமான பெரியார்ப் பற்றாளர் என்பது புரிகிறது. அத்துடன் ஒதுக்கீடு, சாதி ஓழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, தமிழ்த் தூய்மை ஆகியவற்றுக்குள்ள முதன்மையைப் பொருளியலுக்கு நீங்கள் வழங்காததும் தெரிகிறது. இருந்தாலும் நான் சொல்ல வேண்டியவற்றைச் சொல்லி விட்டேன், நீங்கள் வாழும் இடத்தின் சூழ்நிலை ஒருவேளை உங்களைச் செயலுக்குத் தூண்டும் என்ற நம்பிக்கையில்.
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக