24.9.07

தமிழ்த் தேசியம் ... 7

தமிழகத் தேசிய இயக்கம் எந்தத் திசையில் நடைபோட வேண்டும்

இதுவரை தமிழகத் தேசிய இயக்கமாகக் கருதப்பட்டு வந்த திராவிட இயக்கம் இந்த மக்களின் வளத்தைப் பெருக்கி அதன் பலனை அனைவரும் நுகர வேண்டும் என்ற அடிப்படைப் பொருளியல் அணுகலைக் கைவிட்டு அரசு வேலைவாய்ப்புக்காகக் கல்வி என்ற நிலைப்பாட்டை மட்டும் எடுத்ததால் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காகத் தாய்மொழியைக் கைவிட்டுத், தாய்நாட்டைக் கைவிட்டு அயல்நாடுகளிலும் மாநிலங்களிலும் அடிமையிலும் கீழாய் அல்லல்படுகிறார்கள். வேலை வாய்ப்பென்ற மாயையில் வெள்ளைச் சட்டையுடன் 20 அகவை வரை பட்டம் பயின்று பின்னர் உடலுழைப்பு என்பதையே வெறுத்து காலத்தையும் வாழ்வையும் வீணாக்கி குமுகத்தின் புற்றுநோய்க் கண்ணறைகளாக(செல்களாக) இளந்தலைமுறை மாறிவிட்டிருக்கிறது. இவர்களைப் பண்பாட்டுப் புரட்சி என்ற பெயரில் கலை - இயக்கியக் கண்ணோட்டத்தை வளர்க்கும் ஒட்டுண்ணி இயக்கங்கள் ஈர்த்து கைகளில் கவிதை நூல்களைக் கொடுத்துவிடுகின்றன.

பார்ப்பனர்கள் அரசுப் பதவிகளிலும் கோயில்கள் மூலமும் ஆதிக்கம் செலுத்தியதின் எதிர்ச்செயலாய் உருவான பெரியாரின் இயக்கம் அதே ஒட்டுண்ணி வாழ்க்கை மீது ஏற்படுத்திவிட்ட வலுவான பிடிப்பு தான் இந்நிலைக்குக் காரணம். அத்துடன் மாவோவின் பெயரில் அமெரிக்க உளவு நிறுவனத்தால் பரப்பப்பட்ட பண்பாட்டுப் புரட்சி பற்றிய தாக்கமும் சேர்ந்துகொண்டது. செல்வம் படைப்பதை விட இருப்பதைப் பங்கிட வேண்டுமென்ற மார்க்சியத்தின் மறுப்பான பொதுமை இயக்கத்தின் தன்முரண்பாடும் இணைந்து கொண்டது. இந்த நிலையில் நம் கல்வி அறிவே நமக்கு எதிரியாகிவிட்டது. கல்வியில் நாட்டம் செலுத்தாத மார்வாரிகளும் முசுலீம்களும்[1] கொண்டிருக்கின்ற பொருளியல் கண்ணோட்டம் நமக்கில்லை. இன்றிருக்கும் ஒட்டுண்ணிக் கண்ணோட்டத்தை உடைப்பது மிகக் கடுமையான பணி என்பது பட்டறிவாகும். இருப்பினும் அக்கடும்பணியை எதிர்கொண்டே ஆகவேண்டும். ஒட்டுண்ணிக் கண்ணோட்டத்தை உடைத்தே ஆகவேண்டும்.

பொருளியல் வளர்ச்சி என்றால் என்ன? அரசு தன் சொந்தப் பணத்திலிருந்தோ அல்லது நாட்டை அடகுவைத்துக் கடன்பட்டோ தொழில்களைத் தொடங்கி பண்டங்களை உருவாக்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதல்ல. இந்திய விடுதலைக்குப் பின் இந்நாட்டு மக்களிடையில் உருவாகித் திரண்டு நிற்கும் மாபெரும் செல்வத்தை மூலதனமாக்குவதற்கும் பணக்கார நாடுகளின் தொடர்பினால் நமக்குக் கிடைத்திருக்கும் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி தொழில்களைத் தொடங்கவும் அதன் மூலம் கிடைக்கும் பண்டங்களை நம் மக்கள் முன்னுரிமையுடன் நுகரவும் வழிபெறுவதே பொருளியல் வளர்ச்சியாகும்.

இன்னும் குறிப்பான சொற்களில் பேசுவோம். உள்நாட்டு மக்கள் தங்கள் பணத் திரட்சியை வெளியே காட்டினால், அதாவது முதலீடு செய்தால் வருமானவரித் துறை பிடுங்கிக்கொள்ளும். எனவே அவர்களுக்கஞ்சி அது கருப்புப் பணமாகப் பதுங்கியுள்ளது. வெளிநாட்டு இந்தியர் பெயரில் உண்மையான அவர்களது பணமோ, அயல்நாட்டினர் பணமோ முதலீடானால் அதற்கு வரி கிடையாது. பெரும் பண முதலைகளுக்கு வருமான வரியிலிருந்து தப்ப எவ்வளவோ சட்டப்படியான வழிமுறைகள். மார்வாரிகளை வருமான வரித்துறையினர் அண்டுவதே இல்லை.

உள்நாட்டு மக்கள் நுகர்வுக்கென்று செய்யப்படும் பண்டங்கள் மீது எத்தனையோ வரிவிதிப்புக்கள், அயலவருக்கென்று அதாவது, ஏற்றுமதிக்கென்று செய்யப்படும் பொருட்களுக்கு எத்தனையோ வரிச்சலுகைகள்.

நாட்டிலுள்ள தீர்ந்துபோகும் மூலப்பொருட்கள், உலோகக் கனிமங்கள் போன்றவை அனைத்தும் மலிவு விலையில் ஏற்றுமதி. முடிந்த பொருட்கள் உயர்ந்த விலையில் இறக்குமதி.

உள்நாட்டார் தொழில் தொடங்க எத்தனயோ தடங்கல். வெளிநாட்டாருக்கு வெற்றிலை வைத்து அழைப்பு. இதுவே முதல் தேசிய ஒடுக்குமுறை. தமிழர்களை மட்டுமல்ல இந்தியர் அனைவரையும் ஒடுக்கும் முறை.

இந்தத் தேசிய ஒடுக்குமுறைக்கு மாற்றாக மாநிலத் தன்னாட்சி கேட்பது பயனற்றது, ஏனென்றால் மக்கள் மாநில அரசுகள் மூலமாகவே ஒடுக்கப்படுகிறார்கள். மக்களுக்கு எந்த உரிமையோ அதிகாரமோ இல்லாமல் அனைத்தையும் அரசு தன் கைகளில் வைத்துள்ளது. குறிப்பாகப் பொருளியல் நடவடிக்கைகளில் பெரும்பாலானவற்றை அரசு தன் கைகளில் வைத்துள்ளது அல்லது உரிமம், மூலப்பொருள் ஒதுக்கீடு, இசைவாணை, மின்சார இணைப்பு என்று பல வகைகளில் குறுக்கிடுகிறது. இந்தக் குறுக்கீடு மாநிலங்கள் மூலமாவே பெரும்பாலும் நிகழ்கிறது. எனவே மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் என்ற முழக்கம் உண்மையான தேசியத்துக்கு எதிரானது. ஏற்கனவே மாநில அரசின் அத்துமீறல்களுக்கு நடுவணரசு தலையிட வேண்டுமென்ற எண்ணம் பெரும்பாலான மக்களின் மனதில் இருக்கிறது. எனவே மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் என்பதால் மக்களுக்கு எந்தப் பயனுமில்லை. எனவே மக்களுக்கும் அதில் நாட்டமில்லை.

எனவே, பாதுகாப்பு, பணப்புழக்கம், அயலுறவு, காவல்துறை, நீதிமன்றம் தொடக்கக் கல்வி ஆகிய துறைகள் தவிர பிற அனைத்துப் பொருளியல் நடவடிக்கைகளையும் அரசு கைவிட வேண்டுமென்ற முழக்கமே இன்றைய தேவை. அதுவே தமிழகம் உட்பட இந்தியாவிலுள்ள பல்வேறு தேசியங்களின் விடுதலைக்கு முதல் தேவையாகும். மாநில அரசு என்பது நடுவணரசின் ஒரு கிளை அலுவலகமாக இருந்தால் போதும். இன்றும் அது தானே நிலை?

(தொடரும்)

அடிக்குறிப்பு:

[1] முகம்மதியர்களின் நிலைப்பாடு இன்று மாறியுள்ளது. மார்வாரிகளின் கிடுக்கிப்பிடியில் இந்திய முகம்மதியர்கள் வழக்கமான தங்கள் பொருளியல் அடித்தளத்தை இழந்துவருகின்றனர். அதனால் கல்வியிலும் அரசுப் பணிகளிலும் முன்பில்லாத ஆர்வம் ஏற்பட்டு ஒதுக்கீடு கேட்டுப் பல்வேறு வடிவங்களில் போராடுகின்றனர். மாநிலங்கள் ஒதுக்கீடு வழங்கத் தொடங்கியுள்ளன. ஆனால் முன் போன்று வேலைவாய்ப்புகள்?

0 மறுமொழிகள்: