15.9.07

தமிழ்த் தேசியம் ... 1

தமிழ்த் தேசியம் - முன்னுரை

கிட்டத்தட்ட ஆறு திங்கள்களுக்கு முன்பு உலகத் தமிழ் இளைஞர் பேரவைச் செயலாளர் பர்.இரா. சனார்த்தனம் அவர்கள் ஒரு மலரில் வெளியிடுவதற்காகப் பல தலைப்புகள் கொடுத்துக் கட்டுரைகள் கேட்டுத் தாளிகைகளில் அறிக்கை விடுத்திருந்தார். அவற்றில் ″தமிழ்த் தேசியம்″ என்பதும் ஒன்று. இப்பொருள் பற்றிய என் கருத்துளை வெளியிட ஒரு வாய்ப்பு என்றெண்ணி இக்கட்டுரையை விடுத்தேன். என் வழக்கப்படி இன்னும் சிலருக்கும் படிகள் அனுப்பினேன். கட்டுரைகள் கேட்டவரிடமிருந்தோ மற்றவரிடமிருந்தோ இது நாள் வரை மறுமொழி எதுவும் இல்லை. ஆனால் தோழர் குணாவின் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற நூலில் இக்கட்டுரையின் பகுதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை அறிந்தேன். இதே நூலைப் படித்த வேங்கைப் பதிப்பகத்தைச் சேர்ந்த நண்பர் பொன். மாறன் கட்டுரையை வெளியிட முன்வந்தார். கட்டுரை நூல் வடிவில் உங்கள் பார்வையில் உள்ளது.

பத்து அகவையிலிருந்தே திராவிட இயக்கச் சிந்தனையில் வளர்ந்தவன் நான்; களத்தில் இறங்கவில்லையாயினும் கனவுகளில் திளைத்தவன்; சிறுகச் சிறுக அந்தக் கனவு கலைந்து 1973 - இல் முற்றிலும் விடுபட்டவன்; பொதுமையை நாடி அதனிலும் முரண்பாடுகளைக் கண்டு இரண்டும் தமிழகத்துக்கும் பொதுமை இயக்கம் ஏழை நாடுகளுக்கும் செய்துள்ள இரண்டகத்தைக் கண்டு தெளிந்து புதுக் கோட்பாடு, இயக்கம் காண விழைபவன்; ஆனால் ஆர்வமுள்ள அளவுக்கு ஆற்றல்கள் வாய்க்கப் பெறாதவன்; கற்றும் கேட்டும் கண்டும் அறிந்தவற்றையும் உணர்ந்தவற்றையும் பிறருக்கு எடுத்துக் கூறவேண்டும் என்ற கடமையுணர்வை எழுத்துகள் முலம் நிறைவேற்ற முயல்பவன்; இயலாமைகளால் ஆக்கங்களில் குறைபாடுகள் இருக்கலாம் என்பதை உணர்ந்திருந்தும் நகையாடப்படலாம் என்ற தயக்கம் இருந்தும் தெரிந்தவற்றிலிருந்து பெறப்பட்ட முடிவுகளை மக்கள் முன்வைக்க வேண்டுமென்ற கடமையுணர்வால் உந்தப்பட்டவன்; தவறுகள் இருந்தால் அவற்றைச் திருத்தி என் முடிவுகளை மேம்படுத்தும் ஆற்றல் நம் மக்களுக்கு வளர வேண்டுமென்று விரும்புபவன்; ஆனால் நண்பர் குணா தவிர வேறெவரிடமிருந்தும் அத்தகைய ஆற்றல் வெளிப்படவில்லை.

இந்தக் கட்டுரையில் நான் சொல்லியுள்ள கருத்துகளின் எதிரொலி மிகக் கொடியதாக இருக்கக் கூடும். எதிர்ப்பின் எத்தகைய தாக்குதலையும் எதிர்கொள்ள ஆயத்தமாக இருந்தால்தான் நிகழ்காலத் தேக்க நிலையிலிருந்து எதிர்காலத்தை விழித்தெழச் செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்ற முடியும் என்பது என் முடிவு.

கட்டுரையில் தேசியம் பற்றிய ஒரு வரையறை கூறப்பட்டுள்ளது. அது மிகப் பொதுப்படையானதாகும். உண்மையான தேசியர்கள் தேசியத்தின் வினைப்பாடுகள் கூர்மையாகும் போது தான் தங்களை இனங்காட்டுவர்.

இக்கட்டுரையை வெளிக்கொணர முன் முயற்சி எடுத்துக் கொண்ட வேங்கை அச்சக வேங்கை மார்பனுக்கும் நண்பர் பொன். மாறனுக்கும் கட்டுரை அச்சேறுமுன்பே அறிமுகம் தந்த தோழர் குணாவுக்கும் நன்றி.

நம் குமுகத்தில் அண்மைக் காலங்களில் பொய்த்துப் போய்விட்ட மனந்திறந்த திறனாய்வு மழை இப்போதாவது பொழியுமா?


பின்குறிப்பு: உண்மையில் இந்தக் கட்டுரை இன்று(15-09-07) வரை நூல் வடிவம் பெறவில்லை.


(தொடரும்)

0 மறுமொழிகள்: