24.9.07

தமிழ்த் தேசியம் ... 8

ஒருவரை ஒரு தேசியத்தைச் சேர்ந்தவரா இல்லையா என்பதை எப்படி முடிவு செய்வது?

தேசியம் என்பது ஒருவரின் தாய்மொழியை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. அவர் வாழும் நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்டது. எவரொருவர் தான் வாழும் நிலத்தின் நலத்தோடு தன் சொந்த நலம் இரண்டறக் கலந்துள்ளது என்று உணர்ந்து அதற்காகப் பாடுபடுகிறாரோ அதுபோல் எவரொருவருக்கு அவர் வாழும் நிலத்தின் மீது அவரது வாழ்வும் வளமும் வேர்கொண்டுள்ளதாக உணர்ந்துள்ளாரோ அவரே அத்தேசியத்தின் மக்களாவர்.

தமிழகத்தின் தேசிய வாழ்வில் ஒரு திரிபாகவேனும் நிலவிய திராவிட இயக்கத்தில் மொழி உணர்வை முழுமனதோடு வெளிப்படுத்தியவர்களில் பெரும்பாலோர் தெலுங்கைத் தம் தாய்மொழியாகக் கொண்டவர்கள். வரலாற்றுக் காரணங்களால் தமிழகத்தைத் தம் தாயகமாகக் கொண்டுவிட்ட இவர்களுக்குத் தமிழ் நிலத்தின் மீதுள்ள தொடர்பும் நெருக்கமும் வேறெவருடையதைக் காட்டிலும் குறைந்ததல்ல. அதே போல் தனித்தமிழ் இயக்கத்தில் கன்னடத்தைக் தாய்மொழியாகக் கொண்ட எத்தனையோ பேர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களெல்லாம் தமிழகத் தேச மக்களே.

மாறாகப் பார்ப்பனர்கள் எந்த நிலத்தின் மீதும் பற்றுக்கொண்டவர்களல்லர். அவர்களுக்குத் தேசியம் எதுவுமே கிடையாது. ஆனால் அவர்களும் ஒவ்வொரு சமயம் தாம் வாழும் வெளி இடங்களில் தங்களுக்கு அச்சுறுத்தல் வரும்போது தேசியம் பேசுவர். ஆனால் அதை நம்பி அவர்களைப் பொருட்டாகக் கருதக் கூடாது.

அதேபோல் வளவாழ்வு வாழ முடியுமென்ற நம்பிக்கையில் பிற நாடு சென்று வாழ நினைப்போரும் தேசியத்தில் வேர்கொள்ளாதவரே. ஆனால் இவர்கள் அனைவரும் தாம் செல்லும் இடங்களில் படும் இன்னல்களிலிருந்து விடுதலை பெறத் தாய்நாடு வரும்போது தேசியம் பற்றி நாம் அவர்களுக்கு எடுத்துரைக்கலாம்.

மொத்தத்தில் தமிழகத் தேசியம் புத்துயிர் பெற நாம் மக்களுக்குப் பொருளியல் உணர்வு ஊட்ட வேண்டும். இம்மண்ணின் வளங்கள் மீது நமக்குள்ள உரிமையை நிலைநாட்ட வேண்டும். இந்த மண்ணில் எந்த விதமான பொருளியல் நடவடிக்கையிலும் நாம் ஈடுபட நமக்குள்ள தடையற்ற உரிமையை நாம் வலியுறுத்த வேண்டும். ஒட்டுண்ணி வாழ்க்கையைக் கடிய வேண்டும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது போன்ற ஏமாளித்தனமான, ஏமாற்றுத் தனமான முழக்கங்களைக் கைவிட வேண்டும். அனைத்துக்கும் மேலாக, காசுமீரத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் அரசியலமைப்புத் சட்டத்தின் 370 - ஆம் விதி அனைத்துத் தேசியங்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டுமென்று நாம் போராட வேண்டும்.

வாழ்க தமிழகம்! வளர்க தமிழகத் தேசியம்!

தமிழ்த் தேசியம் ... 7

தமிழகத் தேசிய இயக்கம் எந்தத் திசையில் நடைபோட வேண்டும்

இதுவரை தமிழகத் தேசிய இயக்கமாகக் கருதப்பட்டு வந்த திராவிட இயக்கம் இந்த மக்களின் வளத்தைப் பெருக்கி அதன் பலனை அனைவரும் நுகர வேண்டும் என்ற அடிப்படைப் பொருளியல் அணுகலைக் கைவிட்டு அரசு வேலைவாய்ப்புக்காகக் கல்வி என்ற நிலைப்பாட்டை மட்டும் எடுத்ததால் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காகத் தாய்மொழியைக் கைவிட்டுத், தாய்நாட்டைக் கைவிட்டு அயல்நாடுகளிலும் மாநிலங்களிலும் அடிமையிலும் கீழாய் அல்லல்படுகிறார்கள். வேலை வாய்ப்பென்ற மாயையில் வெள்ளைச் சட்டையுடன் 20 அகவை வரை பட்டம் பயின்று பின்னர் உடலுழைப்பு என்பதையே வெறுத்து காலத்தையும் வாழ்வையும் வீணாக்கி குமுகத்தின் புற்றுநோய்க் கண்ணறைகளாக(செல்களாக) இளந்தலைமுறை மாறிவிட்டிருக்கிறது. இவர்களைப் பண்பாட்டுப் புரட்சி என்ற பெயரில் கலை - இயக்கியக் கண்ணோட்டத்தை வளர்க்கும் ஒட்டுண்ணி இயக்கங்கள் ஈர்த்து கைகளில் கவிதை நூல்களைக் கொடுத்துவிடுகின்றன.

பார்ப்பனர்கள் அரசுப் பதவிகளிலும் கோயில்கள் மூலமும் ஆதிக்கம் செலுத்தியதின் எதிர்ச்செயலாய் உருவான பெரியாரின் இயக்கம் அதே ஒட்டுண்ணி வாழ்க்கை மீது ஏற்படுத்திவிட்ட வலுவான பிடிப்பு தான் இந்நிலைக்குக் காரணம். அத்துடன் மாவோவின் பெயரில் அமெரிக்க உளவு நிறுவனத்தால் பரப்பப்பட்ட பண்பாட்டுப் புரட்சி பற்றிய தாக்கமும் சேர்ந்துகொண்டது. செல்வம் படைப்பதை விட இருப்பதைப் பங்கிட வேண்டுமென்ற மார்க்சியத்தின் மறுப்பான பொதுமை இயக்கத்தின் தன்முரண்பாடும் இணைந்து கொண்டது. இந்த நிலையில் நம் கல்வி அறிவே நமக்கு எதிரியாகிவிட்டது. கல்வியில் நாட்டம் செலுத்தாத மார்வாரிகளும் முசுலீம்களும்[1] கொண்டிருக்கின்ற பொருளியல் கண்ணோட்டம் நமக்கில்லை. இன்றிருக்கும் ஒட்டுண்ணிக் கண்ணோட்டத்தை உடைப்பது மிகக் கடுமையான பணி என்பது பட்டறிவாகும். இருப்பினும் அக்கடும்பணியை எதிர்கொண்டே ஆகவேண்டும். ஒட்டுண்ணிக் கண்ணோட்டத்தை உடைத்தே ஆகவேண்டும்.

பொருளியல் வளர்ச்சி என்றால் என்ன? அரசு தன் சொந்தப் பணத்திலிருந்தோ அல்லது நாட்டை அடகுவைத்துக் கடன்பட்டோ தொழில்களைத் தொடங்கி பண்டங்களை உருவாக்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதல்ல. இந்திய விடுதலைக்குப் பின் இந்நாட்டு மக்களிடையில் உருவாகித் திரண்டு நிற்கும் மாபெரும் செல்வத்தை மூலதனமாக்குவதற்கும் பணக்கார நாடுகளின் தொடர்பினால் நமக்குக் கிடைத்திருக்கும் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி தொழில்களைத் தொடங்கவும் அதன் மூலம் கிடைக்கும் பண்டங்களை நம் மக்கள் முன்னுரிமையுடன் நுகரவும் வழிபெறுவதே பொருளியல் வளர்ச்சியாகும்.

இன்னும் குறிப்பான சொற்களில் பேசுவோம். உள்நாட்டு மக்கள் தங்கள் பணத் திரட்சியை வெளியே காட்டினால், அதாவது முதலீடு செய்தால் வருமானவரித் துறை பிடுங்கிக்கொள்ளும். எனவே அவர்களுக்கஞ்சி அது கருப்புப் பணமாகப் பதுங்கியுள்ளது. வெளிநாட்டு இந்தியர் பெயரில் உண்மையான அவர்களது பணமோ, அயல்நாட்டினர் பணமோ முதலீடானால் அதற்கு வரி கிடையாது. பெரும் பண முதலைகளுக்கு வருமான வரியிலிருந்து தப்ப எவ்வளவோ சட்டப்படியான வழிமுறைகள். மார்வாரிகளை வருமான வரித்துறையினர் அண்டுவதே இல்லை.

உள்நாட்டு மக்கள் நுகர்வுக்கென்று செய்யப்படும் பண்டங்கள் மீது எத்தனையோ வரிவிதிப்புக்கள், அயலவருக்கென்று அதாவது, ஏற்றுமதிக்கென்று செய்யப்படும் பொருட்களுக்கு எத்தனையோ வரிச்சலுகைகள்.

நாட்டிலுள்ள தீர்ந்துபோகும் மூலப்பொருட்கள், உலோகக் கனிமங்கள் போன்றவை அனைத்தும் மலிவு விலையில் ஏற்றுமதி. முடிந்த பொருட்கள் உயர்ந்த விலையில் இறக்குமதி.

உள்நாட்டார் தொழில் தொடங்க எத்தனயோ தடங்கல். வெளிநாட்டாருக்கு வெற்றிலை வைத்து அழைப்பு. இதுவே முதல் தேசிய ஒடுக்குமுறை. தமிழர்களை மட்டுமல்ல இந்தியர் அனைவரையும் ஒடுக்கும் முறை.

இந்தத் தேசிய ஒடுக்குமுறைக்கு மாற்றாக மாநிலத் தன்னாட்சி கேட்பது பயனற்றது, ஏனென்றால் மக்கள் மாநில அரசுகள் மூலமாகவே ஒடுக்கப்படுகிறார்கள். மக்களுக்கு எந்த உரிமையோ அதிகாரமோ இல்லாமல் அனைத்தையும் அரசு தன் கைகளில் வைத்துள்ளது. குறிப்பாகப் பொருளியல் நடவடிக்கைகளில் பெரும்பாலானவற்றை அரசு தன் கைகளில் வைத்துள்ளது அல்லது உரிமம், மூலப்பொருள் ஒதுக்கீடு, இசைவாணை, மின்சார இணைப்பு என்று பல வகைகளில் குறுக்கிடுகிறது. இந்தக் குறுக்கீடு மாநிலங்கள் மூலமாவே பெரும்பாலும் நிகழ்கிறது. எனவே மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் என்ற முழக்கம் உண்மையான தேசியத்துக்கு எதிரானது. ஏற்கனவே மாநில அரசின் அத்துமீறல்களுக்கு நடுவணரசு தலையிட வேண்டுமென்ற எண்ணம் பெரும்பாலான மக்களின் மனதில் இருக்கிறது. எனவே மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் என்பதால் மக்களுக்கு எந்தப் பயனுமில்லை. எனவே மக்களுக்கும் அதில் நாட்டமில்லை.

எனவே, பாதுகாப்பு, பணப்புழக்கம், அயலுறவு, காவல்துறை, நீதிமன்றம் தொடக்கக் கல்வி ஆகிய துறைகள் தவிர பிற அனைத்துப் பொருளியல் நடவடிக்கைகளையும் அரசு கைவிட வேண்டுமென்ற முழக்கமே இன்றைய தேவை. அதுவே தமிழகம் உட்பட இந்தியாவிலுள்ள பல்வேறு தேசியங்களின் விடுதலைக்கு முதல் தேவையாகும். மாநில அரசு என்பது நடுவணரசின் ஒரு கிளை அலுவலகமாக இருந்தால் போதும். இன்றும் அது தானே நிலை?

(தொடரும்)

அடிக்குறிப்பு:

[1] முகம்மதியர்களின் நிலைப்பாடு இன்று மாறியுள்ளது. மார்வாரிகளின் கிடுக்கிப்பிடியில் இந்திய முகம்மதியர்கள் வழக்கமான தங்கள் பொருளியல் அடித்தளத்தை இழந்துவருகின்றனர். அதனால் கல்வியிலும் அரசுப் பணிகளிலும் முன்பில்லாத ஆர்வம் ஏற்பட்டு ஒதுக்கீடு கேட்டுப் பல்வேறு வடிவங்களில் போராடுகின்றனர். மாநிலங்கள் ஒதுக்கீடு வழங்கத் தொடங்கியுள்ளன. ஆனால் முன் போன்று வேலைவாய்ப்புகள்?

தமிழ்த் தேசியம் ... 6

உண்மையான தேசிய இயக்கம் ஏன் உருவாகவில்லை

கடந்த 80 ஆண்டுகளாகத் தமிழகத்தில் வலுவான தேசிய உணர்வுகள் இருந்தாலும் ஓர் உண்மையான தேசிய இயக்கம் ஏன் உருவாகவில்லை என்ற கேள்வி எழுகிறது. இதற்கு விடை காண வேண்டுமாயின் இன்னொரு தமிழர் தேசியமான ஈழத் தேசியத்தின் வரலாற்றை ஆய்ந்து பார்க்க வேண்டும்.

இந்தியா பல தேசியங்ளைக் கொண்ட நாடு. இலங்கையோ இசுரேலைப் போல் இரு தேசியங்களை மட்டுமே கொண்டது. எனவே இந்தியாவைப் போல் அனைத்துத் தேசியங்களையும் கடந்த தேசிய ஒடுக்குமுறையாளர்கள் இல்லை. இந்தியாவைப் போல் மறைமுக ஒடுக்குமுறை இல்லை. பெரும்பான்மை தேசிய இனம் நேரடியாவே தன் ஒடுக்குமுறையைச் செயற்படுத்துகிறது.

நெடுநாட்களாகவே கல்வியிலும் ஆட்சிப் பணியிலும் நிலைத்துவிட்ட தமிழ் மேற்சாதியினர் சிங்களவர் மீது என்றும் மேலாண்மை செலுத்தலாம் என்ற இறுமாப்பில் வெள்ளையர் வெளியேறிய போது தம் நலன்களளைப் பாதுகாக்க முனைப்பான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. மலையக மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதிலும் கூடச் சிங்களர்களுக்குத் துணைநின்றனர். ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்ற பெரும்பான்மையினர் சிறுகச் சிறுகத் தமிழ்ப் பகுதிகளில் குடியேறித் தமிழர்களை அவர்களின் மரபுப் பகுதிகளிலும் சிறுபான்மையராக்கி இறுதியில் இளைஞர்களின் கல்வியிலும் கைவைத்தபோது தான் சூழ்நிலையின் கடுமையை உணர்ந்தனர். ஆயுதத்துடன் தோன்றிய எதிரியை ஆயுதம் கொண்டு எதிர்க்க வேண்டியதாயிற்று. ஆயுதப் போராட்டமென்ற கடைதலில் உருவான வெணணெய் தான் விடுதலைப் புலிகள் இயக்கம். ஆயுதத்துடன் நிற்கும் எதிரிக்கு முதல் மறுமொழி ஆயுதம் தான், அதன் பின்னரே கோட்பாடுகளும் கொள்கைகளும் என்ற தூய இயங்கியலில் அவ்வியக்கம் ஊசலாட்டமின்றிச் செயற்பட்டதால் அது இன்று களத்தில் காலுன்றி, வேரூன்றி நிற்கிறது.

பிறரெல்லாம் ஏன் ஒடினார்கள்? பிறரெல்லாம் படித்து வேலை தேடி ஒட்டுண்ணி அடிமை வாழ்க்கை வாழப் புறப்பட்டவர்கள். அதற்கும் வழியில்லை என்றபோது ஆயுதம் தூக்கிப் பார்த்தனர். எனவே மக்களுடன் பிணைப்பு ஏற்படவில்லை. எதிரியிடமே சரணடைந்து விட்டனர். ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கமோ எளிய மக்களின் அடிப்படையான நிலத்தைப் பிடுங்கிய, பிடுங்க இடைவிடாது முயலும் எதிரியை எந்தத் தொய்வுமின்றித் தாக்கி வந்தது, வருகிறது. எனவே அதற்கு மக்களின் முழு ஆதரவும் உள்ளது. ஈழத்தில் உழைக்கும் இறுதித் தமிழன் இருக்கும் வரை அவனது ஆதரவு விடுதலைப் புலிகளுக்கு இருக்கும்.

தமிழகத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட தேசிய முயற்சிகள் அனைத்துமே மொழி, பண்பாடு குறித்தனவாகும். இங்கு அவை இரண்டுமே வெளிப்படையாக அச்சுறுத்தலுக்கு உட்படுகின்றன. பொருளியல் சுரண்டலும் அடிமைத்தனமும் மிக மறைமுகமாகவும் சோசலிசம், சமூகநீதி, ஒப்புரவு, குழந்தை உழைப்பு எதிர்ப்பு, மாசுக் கட்டுப்பாடு, சிறு தொழில்களைப் பாதுகாத்தல், பணக்காரரிடமிருந்து ஏழைகளைக் காத்தல், நில உச்சவரம்பு, நிலச்சீர்திருத்தம் என்ற ″உயர்ந்த″ நோக்கங்களின் பெயரால் நடைபெறுவதால் அதனை இனங்கண்டுகொள்ளும் தெளிவும் அதனை மக்கள் முன் எடுத்து வைக்கும் துணிவும் யாருக்கும் இல்லை.

தமிழகத்தில் பெரியார் தொடங்கி நெடுமாறன் வரை மார்வாரிகளின் பிடியில் சிக்கியவர்கள். எனவே ஒவ்வொருவரும் ஒவ்வொரு உத்தியைக் கையாண்டு மார்வாரிகளைக் காத்து வருகிறார்கள்.

மார்வாரிகளின் ஆதிக்கத்துக்கெதிராகச் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கையில் சிவகாசி, விருதுநகர் முதலாளிகள் குமரி அனந்தன், நெடுமாறன் முதலியவர்களை ஆதரித்தனர். ஆனால் அவர்களின் உதவியால் அரசியலில் வளர்ந்த பின் இத்தலைவர்கள் மார்வாரிகளிடமே தங்களை நம்பிய முதலாளிகளின் நலனுக்கு விலைபேசிவிட்டார்கள். எனவே இம்முதலாளிகள் நம்பிக்கையிழந்து எதிரியிடமே மண்டியிட்டுவிட்டார்கள். அண்மையில் மார்வாரி நிறுவனங்கள் முன் மறியல் செய்யும் நெடுமாறனின் போராட்டம் கூட மார்வாரிகளை மிரட்டி ஆதாயம் தேடும் முயற்சியேயன்றி வேறில்லை, ஏனென்றால் பல முறை இவர் இது போன்ற முயற்சிகளைத் தொடங்கிவிட்டுக் காணாமல் போயுள்ளார்.

(தொடரும்)

தமிழ்த் தேசியம் ... 5

அடுத்து வருவோர் மார்க்சிய இயக்கத்தினர்

மார்க்சியம் தேசிய விடுதலையை நோக்கமாகக்கொண்டு உருவானதல்ல. தேசிய இயக்கங்களுக்கு இனி உலகில் இடமில்லை என்ற நிலைப்பாட்டையே அதன் மூலவர்களான மார்க்சும் ஏங்கல்சும் கொண்டிருந்தனர். ஆனால் அயர்லாந்து மக்களின் போராட்டங்ளைக் கண்ட பின் தேசிய விடுதலை இயக்கத்திற்கும் உலகில் ஓர் இடம் உண்டு எனற அளவில் ஏற்றுக்கொண்டிருந்தனர்.

காலத்தின் கட்டாயமாக உருசியப் புரட்சியில் உருசியப் பல்தேசியங்களின் விடுதலை வேட்கை இரண்டறக் கலந்திருந்தது. அதை முழுக்கப் புரிந்து நேர்மையுடன் செயல்பட்ட உருசியத் தலைவர் லெனின் மட்டுமே.

சப்பானியப் படையெடுப்பையும் மேலை நாடுகளின் ஆதிக்கத்தையும் எதிர்த்து சீனம் தேசிய விடுதலைப் போரை நடத்திய காலத்தில் மசேதுங் புதிய குடியாட்சிப் புரட்சி என்ற பெயரில் பாட்டாளிகள் அல்லாத வகுப்பினரையும் சேர்த்து வெற்றிபெற்றார். புதிய குடியாட்சிப் புரட்சியை லெனினும் வரையறுத்துச் செயற்படுத்தியிருந்தார்.

இந்த நூற்றாண்டின் முதற்பாதியில் இவ்வாறு பல தேசிய விடுதலைப் புரட்சிகள் மார்க்சியத்தின் பெயரில் நடைபெற்றன. ஆனால் இந்தியாவில் மட்டும் மார்க்சியத்தைக் கைப்பற்றிக்கொண்ட கூட்டம் தேசிய விடுதலையை வாயினால் கூறிக்கொண்டே அதற்கு எதிராகச் செயற்பட்டது, செயற்படுகிறது.

1960களின் பிற்பாதியிலும் 1970களிலும் தீவிர மார்க்சிய-லெனினியக் கட்சிகள் உருவான போது அவை திராவிடர் கழகம், தனித்தமிழ் இயக்கம் ஆகியவற்றில் ஊடுருவி இளைஞர்களைக் கவர்ந்து அவர்களுக்கு வெறியூட்டி பாதுகாப்பில்லாத ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுத்தினர். மிக எளிதாக அரசின் துப்பாக்கிக்கு அவ்விளைஞர்கள் அனைவரும் பலியானார்கள்.
இந்த மார்க்சிய-லெனினிய இயக்கங்கள் மா சே துங்கின் பெயரில் செயற்பட்டாலும் உருசியாவுக்கும் சீனத்துக்கும் ஏற்பட்ட மோதலில் உலகிலுள்ள மாவோவின் ஆதரவாளர்களுக்குள் அமெரிக்க உளவு நிறுவனத்தின் ஊடுருவலால் உருவானவை. இன்றைய நிலையில் மார்க்சியத்தின் பெயரில் எந்த இயக்கம் தேசியப் போராட்டத்தில் ஈடுபடுவதாகக் கூறினாலும் செயற்பாட்டில் அது உறவாடிக் கெடுப்பதாகவே அமைவது தமிழகத்தின் நெடுநாள் பட்டறிவாகும்.

(தொடரும்)

தமிழ்த் தேசியம் ... 4

பெரியாரைத் திறனாய்வோம்

பேரவைக் கட்சியில் இருந்த போதும் அதிலிருந்து வெளியே வந்த தொடக்க காலத்திலும் ஒரு நேர்மையான சாதிய எதிர்ப்புணர்வை அவரிடம் நம்மால் காண முடிகிறது. [1] ஊர் ஊராகக் கடும் வன்முறை எதிர்ப்புகளுக்கிடையில் உள்ளுரிலுள்ள ஆர்வலர்களின் உறுதுணையோடு சாதி சார்ந்த பழமைக் கருத்துகளுக்கு எதிர்ப்பை விதைத்ததில் அவரது வீரம் வெளிப்படுகிறது. ஆனால் பல வேளைகளில் ஒரு கோழைத்தனம் காணப்பட்டது. 1933-இல் உருசியா சென்று திரும்பிய கையோடு பொதுமைக் குமுகத்தை உருவாக்குவதற்கென்று ஈரோட்டுத் திட்டத்தை வெளியிட்டார். ஆங்கில அரசு அவரைச் சிறையிலிட்டு ஒடுக்குமுறையைக் கையாண்டதும் உறுதிமொழி எழுதிக் கொடுத்து வெளியே வந்தவர் இன்னொரு முறை அந்தப் பேச்சையே எடுக்கவில்லை.

சாதியத்தை எதிர்த்துக் கருத்துப் பரப்பல் செய்து வந்த வேளையில் முத்துராமலிங்கத்தேவர்மூலமாக நம் நாட்டுப் பிற்போக்கு விசைகளின் நேரடியான அறைகூவல் வந்தது. அதை அவர்களது வழியிலேயே எதிர்கொள்ளும் ஆற்றல் அன்று திராவிடர் கழகத்துக்கு இருந்தது. ஆனால் பெரியார் அதை எதிர்கொள்ளவில்லை. எதிர்கொண்டிருந்தால் இன்று நம்மால் எதிர்கொண்டு தீர்வு காண முடியாமலிருக்கும் தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத்தப்பட்டோர் பிளவு இருந்திருக்காது. தமிழகக் குமுக அமைப்பே புரட்சிகரமாக மாறியிருக்கும். எண்ணிக்கையில் குறைந்த, அடிதடிகளில் இறங்காத பார்ப்பனர்களையும் அவர்கள் பெண்களையும் வரைமுறையின்றி வசைபாடிய பெரியாரின் ″வீரம்″ முத்துராமலிங்கரிடம் பிடரியில் கால்பட பின்வாங்கி ஓடியது.

பார்ப்பன - பனியாக் கூட்டணி தமிழகத்தைச் சுரண்டுவதாக அடிக்கடி பெரியார் சுட்டிச் காட்டியுள்ளார். ஆனார் பார்ப்பனர்களை மட்டும் எதிர்த்துக் செயற்பட்டுள்ளார். பனியாக்கள் எனப்படும் மார்வாரிகளை எதிர்த்து ஒரு துரும்பைக் கூட அசைத்ததில்லை அவர்.

1950களில் சென்னையிலுள்ள செனாய்நகரிலும் சவுக்கார்ப்பேட்டையிலும் வாழும் மார்வாரிகள் மீது தாக்குதல் நடைபெறும் என்ற அச்சம் நிலவும் அளவுக்கு இயக்கத்தவர்களுக்கு அவர்கள் மீது வெறுப்பு இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் அம்பிசு கபே எனும் உணவகத்தின் பெயர்ப் பலகையிலிருந்த ″பிராமணாள்″ என்ற சொல்லை அழிக்கும் போராட்டத்தில் கழகத்தவரை ஏறக்குறைய 1½ ஆண்டுகள் பெரியார் ஈடுபடுத்தினார். அத்துடன் ஊரெங்கும் பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டங்கள் நடத்தினார்.

மார்வாரிகள் சமண சமயத்தினர். இந்து சமயத்துக்கு எதிராக சமண சமயத்தை உயர்த்திப் பேசுவது திராவிட இயக்கத்தவர் வழக்கம். இவ்வாறு தம் மறைமுக ஆதரவை மார்வாரிகளுக்குத் தந்தனர். பெரியாரின் செயற்பாடுளையும் திராவிட இயக்கத்தின் செயற்பாடுகளின் பின்னணியில் மார்வாரிகள் முழுமையாக வளர்ந்து தமிழகப் பொருளியலைத் தங்கள் முழுக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளதையும் பார்க்கும் போது பெரியாருக்கும் மாரிவாரிகளுக்கும் இடையில் ஒரு மறைமுகத் தொடர்பு இருந்திருக்குமோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவிலலை. அவர் தன் வாழ்நாளில் ஈட்டிய உரூபாய் 125 கோடிப் பணம் எடைக்கு எடை வெள்ளிப் பணம், பணத்தாள் மாலைகள், பெயர் வைக்கக் கட்டணம் போன்றவற்றால் மட்டும் சேர்ந்திருக்கும் என்று நம்ப முடியவில்லை.

பெரியார் தேர்தல்களில் தன் கட்சி மூலம் நேரடியாக ஈடுபடுவதில்லையே தவிர ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவதொரு கட்சிக்குப் பாடுபட்டிருக்கிறார். அத்துடன் அவர் எப்போதும் ஆளும் கட்சிகளின் ஆதரவாளராகவே இருந்திருக்கிறார். ஆச்சாரியார், பக்தவத்சலம் இருவரின் ஆட்சியை மட்டுமே எதிர்த்திருக்கிறார். அவர்கள் இருவரும் இவரது பரிந்துரைகளை ஏற்றுச் செயற்பட முன்வந்திருக்க மாட்டார்கள் என்பதே உண்மைக் காரணமாக இருக்க வேண்டும்.

பெரியாருக்குப் பின் வந்த தலைமை வேற்று நாட்டு மதங்களுக்கு விளம்பரம் தேடியது. நாட்டுப்புறத்திலே தாழ்த்தப்பட்ட மக்கள் பொதுக் கிணற்றிலே தண்ணீர் எடுக்கவும் பொதுச் சுடுகாட்டில் பிணம் எரிக்கவும் போராடிக்கொண்டிருந்த வேளையில் கோயில்களில் கிறித்துவர்களும் முசுலீம்களும் யார் வேண்டுமானாலும் பூசகராகலாம், இந்துக்களில் பார்ப்பனர்கள் மட்டுமே பூசகராகலாம் என்று கூறி அம்மதங்களுக்கு மறைமுக விளம்பரம் செய்து போராட்டங்கள் நடத்தியது.

இனி திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பார்ப்போம். அக்கட்சியின் முதல் தலைவரான அண்ணாத்துரையும் அடுத்து வந்த கருணாநிதியும் பொட்டுக்கட்டும் சாதியினர். ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை பார்ப்பனர்களுடன் கோயில்களில் நெருங்கி உறவாடி வந்தவார்கள். ஏதோ காரணத்தினால் இவ்விரு சாதியினர்க்கும் பிணக்கு ஏற்பட பார்ப்பனர்கள் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் தேவதாசிப் பெண்களை இழிவுபடுத்தினர். அதன் எதிர்வினை தான் அண்ணாத்துரை, கருணாநிதி ஆகியோரின் தொடக்க காலப் புரட்சித் தன்மை. அரசியலில் தலைமை பெற்று குமுகத்திலும் ஏற்புக் கிடைத்தவுடன் பார்ப்பனார்கள் நட்புக் கரம் நீட்டினர், இவர்கள் பற்றிக் கொண்டனர். ஆனால் வெளிப்டையாக அதைக் காட்டிக் கொள்ளவில்லை.

அண்ணாத்துரை மிக உயாந்த அறிவுத்திறனும் நினைவாற்றலும் கல்வி அறிவும் படைத்தவர். மிகுந்த தன்னம்பிக்கை உடையவர். தன் திறமைகளைத் தானே அறிந்தவர். இளையோர், முதியோர், கற்றோர், கல்லாதோர் என்று அனைவரையும் ஈர்க்கும் திறன் படைத்தவர். உலகில் தோன்றிய பெரும் தலைவர்களைப் போன்றவர். அவர் முன்னால் ஒரு மோசே, முகமது நபி, ஆலிவர் கிராமவெல், சோன் ஆப் ஆர்க், மாசினி, கரிபால்டி, பிம்மார்க், கமால் பாச்சா, லெனின், மசேதுங் போன்ற உலக விடுதலை வீரர்களுடன் ஒப்பிடும் வகையில் பெருமை வாய்ந்த ஓர் களம் விரிந்து கிடந்தது. அதனை ஆளும் ஆற்றலும் அவருக்கிருந்தது. ஆனால் அவர் அவை அனைத்தையும் ஒரு முதலமைச்சர் பதவிக்காகக் காவு கொடுத்து விட்டது தமிழக வரலாற்றில் மட்டுமல்ல உலக வரலாற்றிலேயே ஒரு மாபெரும் அவலமாகும்.

தமிழக மக்களின் பொருளியல் நலன்களை இந்திய அரசிடமும் வட இந்தியப் பண முதலைகளிடமும் விலைபேசி விட்டு பேருந்துகளில் திருவள்ளுவர் படங்களையும் திருக்குறள்களையும் எழுதிவைத்தல், பேருந்துக் கழகங்களுக்கு பாண்டியன், சேரன், சோழன், பல்லவன் என்று பெயர்கள் சூட்டுதல். திருவள்ளுவருக்குக் குமரியில் சிலை எடுத்தல் என்று உணர்ச்சிகளை ஆற்றும் ஏமாற்று நடவடிக்கைகளைக் கருணாநிதி மேற்கொண்டார். கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்ப்பதில் பங்கேற்றார். காவிரியில் கன்னட அரசு பல அணைகள் கட்டுவதற்கு ஒப்புதல் அளித்தார்.

தன்னை நாடி வருவோர்க்கு பதவியின் துணையால் உதவிக்கரம் நீட்டி ஒரு மாபெரும் மாபியாத் தலைவர் போல் கருணாநிதி விளங்கினார். ஊழல்களில் எதிர்க் கட்சியினருக்கும் உரிமை வழங்கி அவர்களின் எதிர்ப்பைத் தவித்தார்.

மக்களுக்கு நிலையான பயன் தரும் திட்டங்களை வகுக்காமலும் அவ்வாறு வகுத்ததைச் செயற்படுத்துவதற்குத் தங்களுக்கு அதிகாரமில்லை என்ற உண்மையை மக்களுக்கு எடுத்துரைக்காமலும் ஏழைகளுக்கு இலவசக் கண்ணாடி வழங்குதல், நர(ரிக்சா)வண்டி வழங்குதல் போன்ற இலவசத் திட்டங்களை அறிமுகம் செய்தார். நெடுநாட்களாக மக்கள் மறந்து விட்டிருந்த குடிப் பழக்கத்தைப் புதிய, இளைய தலைமுறையினரிடம் ஏற்படுத்தும் வகையில் மதுவிலக்கை ஒத்திவைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றித் தமிழகத்தில் ஒரு பெரும் பண்பாட்டுச் சீரழிவுக்கு வழிகோலினார். தனக்கும் தன் கட்சியினருக்கும் பல தலைமுறைகளுக்கு வேண்டிய செல்வத்தைத் தன் ஆட்சிக் காலத்திலும் பின்னர் எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய காலத்திலும் திரட்டினார். அவரும் அவரது கட்சியினரும் ஆங்கிலம், இந்தி கற்பிக்கும் மழலையர் பள்ளிக்குத் தங்கள் வீட்டுக் குழந்தைகளை அனுப்பினர். தமிழ் ஆட்சிமொழித் திட்டம் பேரவை ஆட்சிக் காலத்தை விட மிக மந்தமாகவே செயற்பட்டது.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலித் திட்டத்தை வகுத்தளித்த மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரை அலைக்கழித்து பலரின் கடுமையாக கண்டனத்துக்குப் பின்னரே அரைமனதாக ஒப்புதல் தந்தார். பார்பபனரை ஒடுக்குவதாக ஒருபுறம் பொய் கூறிக்கொண்டு நான்காம் நிலை ஊழியர்களிலிருந்து உயர் பதவிகள் வரை அவர்களுக்கு மறைமுகமான முன்னுரிமை வழங்கப்பட்டது. கட்சியின் பதவிகளில் கூட பார்ப்பனர் அமர்த்தப்பட்டனர்.

ஆண்டுதோறும் மார்வாரிகள் நடத்தும் பொங்கல் விழாவில் கருணாநிதி கலந்துகொள்வார். கடந்த 25 ஆண்டுகளாக இராசத்தானி சங்கத்தாருடன் தனக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதாக அவர் ஒரு முறை பெருமையுடன் குறிப்பிட்டார்.

கொள்கையடிப்படையிலன்றி வெறும் ஊழலைக் காரணமாகக் காட்டி வெளியேறிய ம.கோ.இரா. பெரியாரைப் போல், அண்ணாத்துரையைப் போல், கருணாநிதியைப் போல் ஒரு கோழை.

எடுத்துக்காட்டாக உயர் நீதிமன்றம் வரை தீர்ப்புகள் தமிழிலேயே வழங்கப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார். இந்த முயற்சியை முறியடிக்க இந்திரா உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாநிலத்துக்கு மாநிலம் மாற்றப்படுவர் என்று ஆணை பிறப்பித்து தமிழ் தெரியாத ஒரு நீதிபதியைச் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அமர்த்தினார். தமிழ் நீதிமன்ற மொழியாவதற்கு நடுவணரசு இவ்வாறு மறைமுகத் தடை விதித்துள்ளது என்ற உண்மையை அவர் மக்கள் முன் எடுத்து வைக்கவில்லை.

மதுரை மீனாட்சி ஆலை, இந்தியா சிமென்று ஆலை போன்றவை அரசுடைமை வங்கிகள், உயிர்காப்பீட்டுக் கழகம் போன்றவற்றின் துணையுடன் அயலவர்கள் கைகளுக்கு மாறிய போது ம.கோ. இரா. அரசு அதற்குத் துணைநின்றது. நயன்மைக் கட்சி காலத்தில் கட்டி எழுப்பப்பட்ட தமிழகத் தொழிற்கூடங்கள் அயலவருக்குத் தாரைவார்க்கப்பட்டன. தாதா, டாடா நிறுவனங்களுடன் தமிழக. அரசு நிறுவனங்கள் கூட்டு வைத்துத் தொழில்களைத் தொடங்கியது. எந்த வடநாட்டு முலதனத்தைக் காட்டி வளர்ந்து ஆட்சியைப் பிடித்தார்களோ அதே ஆட்சியை அதே வடநாட்டு முலதனத்தை இங்கு கொண்டுவருவதற்குப் பயன்படுத்தியுள்ளார்.

மக்களிடமிருந்து கையூட்டுப் பெறும் ஒரே நோக்கத்துடன் மிக எளிய பட்டா மாற்றுவதிலிருந்து தொழில்களுக்கு மின்சாரம் பெறுவது வரை எண்ணற்ற சிக்கலான விதி முறைகளை உருவாக்கி மக்களின் பொருளியல் நடவடிக்கைகளுக்குப் பெரும் முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் மனம் சலித்து செயலற்று நிற்கிறார்கள் மக்கள். அனைத்து மட்டத்திலும் தொழில் தேக்கம் ஏற்பட்டு படித்தோரும் படியாதோரும் செல்வரும் பிறரும் வெளிநாடுகளுக்கும் மாநிலங்களுக்கும் ஓடி மாய்ந்து சீரழிகின்றனர். பத்திரங்கள் பதிவதற்குக் கூட பிற மாநிலங்களை நாடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.[2]

திராவிட இயக்கத்தினர் கையில் ஆட்சி வந்த பின்னர் அவர்கள் தம் பொருளியல் நடவடிக்கைகளுக்கு அவர்களது ஆட்சி அதிகாரமே உறுதுணையாய் நின்றது. எனவே பிற மக்களின் இடர்கள் தெரியாதது மட்டுமல்ல, பிறரை விடத் தமக்குக் கிடைக்கும் முன்னுரிமைகளாலும் முற்றுரிமைகளாலும் இத்தகைய தடங்கல்களுக்கு அவர்கள் ஆதரவாய் நின்றனர். எதிர்க்கட்சியாய் இருந்த போதும் தி.மு.க.வினர்க்கு இத்தகைய முன்னுரிமைகள் கிடைத்தன. இன்று எதிர்க்கட்சி என்ற நிலையும் தகர்ந்து போனதால் தான் கருணாநிதியை விட்டு வை.கோ.வுக்கு ஆதரவாகப் பலர் ஓடியிருக்கின்றனர். அதன் மூலம் ஆட்சியையாவது, குறைந்தது முதன்மை எதிர்க்கட்சி இடத்தையாவது பிடித்துக்கொண்டால் மீண்டும் பழைய முன்னுரிமைகளையாவது பெறலாம் என்ற எதிர்பார்ப்பினால் தான் ஊழலைத் தவிர வேறெதையும் பற்றி அக்கட்சி கூறவில்லை. மக்களுக்கு அரசுப்பொறி ஏற்படுத்தி வைத்திருக்கும், தொடர்ந்து ஏற்படுத்தி வரும் எண்ணற்ற இடையூறுகளைப் பற்றி அறிந்திருந்தும் எடுத்துக் கூற முற்படவில்லை. அவற்றை எடுத்துக் கூறி அகற்றி விட்டால் அவற்றால் தமக்குக் கிடைக்கும் ஆதாயம் பறிபோய்விடுமே! இவ்வாறு தமிழகப் பொருளியல் வளர்ச்சிக்குத் திராவிடர் இயக்கம் பெரும் இடையூறாக நிற்கிறது.

மொத்த ஆய்வில் திராவிடர் இயக்கம் எத்தர்களின் ஒரு கூட்டம். தமிழகத்தில் ஓர் உண்மையான தேசிய இயக்கத்தின் தேவை இருப்பதைப் புரிந்து கொண்டு அந்தக் களத்தை தங்கள் ஆதாயத்துக்குப் பயன்படுத்தி அரசியல், பொருளியல், பண்பாட்டியல், ஒழுக்கவியல் தளங்களில் தமிழகத்தை ஒரு பாலைவனமாக்கிவிட்ட குடிகேடர்களின் கும்பல்.

தி.க., தி.மு.க. ஆகியவை இவ்வாறு இரண்டகம் செய்துவிட்ட நிலையில் இளைஞர்களைத் தனித்தமிழ் இயக்கம் ஈர்த்தது. பாவாணரின் மொழியியல் ஆய்வுகளின் பின்னணியில் தென்மொழி என்ற மாத இதழை நடத்திய பெருஞ்சித்திரனாரின் தனித்தமிழ்க் கட்டுரைகளும் வீரம் சொட்டும் பாக்களும் பல இளைஞர்களை ஈர்த்தன. ஆனால் ஒர் இயக்கத்தைக் கட்டி எழுப்பும் திறமையும் தலைமைப் பண்புகளும் ஆழ்ந்த சிந்தனையும் அவருக்கு இல்லை. தன்முனைப்பும் தான்தோன்றித்தனமும் மிகுந்திருந்தன. நாளெல்லாம் கருணாநிதியைத் திட்டிவிட்டுத் தேர்தல் வந்தால் கருணாநிதிக்கு வாக்களிக்கச் சொல்வார்.

இவர் தமிழக விடுதலை மாநாடெல்லாம் நடத்தினார். மக்கள் கவனத்தை அது ஈர்க்கவில்லை. மொழித் தூய்மைக்காக மட்டும் தமிழக விடுதலை வேண்டிப் போராட மக்கள் முன்வர மாட்டார்கள் என்பது அவருக்குப் புரியவில்லை.

ஒரு கட்டத்தில் பெரும்படை போல் தோன்றிய தனித்தமிழ் இயக்கம் திடீரென்று புகைபோல் கரைந்து போயிற்று. காரணம் புரியாமல் பெருஞ்சித்திரனார் திகைத்தார்.

தமிழில் பட்டமும் பட்டமேற்படிப்பும் பயின்ற எண்ணற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி இருந்த நேரத்தில் தனித்தமிழ் இயக்கத்தில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தனர். ஆனால் தமிழ்ப் பேராசிரியர்களுக்கும் பிற பேராசிரியர்களுக்கு இணையான சம்பளமும் பிற அனைத்து வகைகளிலும் அவர்களுக்கு ஈடான உரிமைகளும் உண்டென அறிவிக்கப்பட்டதாலும் பல புதிய பல்கலைக் கழகங்களும் கல்லுரிகளும் தமிழாய்வு நிறுவனங்களும் தோன்றியதாலும் தமிழ் பயின்றோரில் ஏறக்குறைய அனைவருக்கும் நல்ல வேலை கிடைத்து விட்டது. அனைவரும் ஓடிவிட்டனர்.

ஆனால் திராவிட இயக்கம் குப்பைத் தொட்டியில் வீசியெறிந்துவிட்ட தமிழ்த் தேசியம் என்ற கருத்துருவைப் பொன் போல் பாதுகாத்து இளைய தலைமுறையினர் கைகளில் ஒப்படைத்தல் என்ற அரும்பணியைச் செய்தவர் என்ற வகையில் தமிழ்த் தேசிய வரலாற்றில் நீங்கா இடம்பெற்றவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

(தொடரும்)

அடிக்குறிப்பு:

[1] இதில் கூட கருத்து வேறுபாடுகள் உள்ளன. பெரியார் நடத்திய குடியரசு என்னும் ஏட்டின் முதல் இதழில் கடவுளின் அருளை வேண்டியும் வருண, சாதி முறைகளைக் காப்பது இதழின் நோக்கமென்றும் கட்டுரைகள் வந்திருப்பதாக குடியரசு முதல் இதழ் என்ற தலைப்பில் ஒருவர் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். அடுத்த இதழிலிருந்து தான் சாதி எதிர்ப்பு, கடவுள் மறுப்பு போன்ற கொள்கைகளை அந்த ஏடு தாங்கி வந்துள்ளது. இடையில் என்ன நடந்தது, அவர் இந்தக் கருத்துகளை யாருடைய அறிவுரையில் கைக்கொண்டார் அல்லது எந்தச் சூழல் தன்னை இந்தச் சிந்தனைகளுக்கு இட்டுச் சென்றது என்பது பற்றி எதுவும் கூறியிருப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை அயோத்திதாச பண்டிதரின் கருத்துகள் அவரைக் கவர்ந்திருக்கலாம்.

[2] அந்த வழியைக் கூட இப்போது அடைத்துவிட்டனர், அதாவது தடைசெய்துவிட்டனர்.

தமிழ்த் தேசியம் ... 3

இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத் தேசியம்

உலகில் தேசிய இயக்கங்களுக்கென்று ஒரு பொதுத் தன்மையுண்டு. ஒவ்வொரு தேசியத்திலுமுள்ள மிக உயர் மட்டத்திலிருப்பவர்களிடமிருந்து தோன்றுவதே அந்தப் பொதுத் தன்மை. பெரும்பாலான நேர்வுகளில் இவ்வாறு தொடங்கிவைக்கும் குழுவினரின் பங்கு வெளி உலகுக்குத் தெரியுமுன்பே அவை அவ்வியக்கத்திலிருந்து விலகிப்போகும். அவ்வாறு தமிழகத்தில் தமிழகத் தேசியத்தைத் தொடங்கி வைத்தவர்கள் தமிழ் பேசும் பார்ப்பனர்களாகும்.

கடந்த பல நூற்றாண்டுகளாகத் தமிழகத்தைக் கைப்பற்றியாண்ட தெலுங்கு, மராட்டியம், கன்னடம் ஆகிய மொழி அரசுகளின் காலத்தில் அரசு அதிகாரத்திலும் கோயில்களின் ஆளுமையிலும் அம்மொழி பேசும் பார்ப்பனர்கள் அமர்ந்துகொண்டனர். தமிழர்களின் மொழியையும் பண்பாட்டையும் சமற்கிருதத்திலிருந்து உருவானவை என்றும் அவர்கள் கூறி வந்தனர். இதற்கு மறுப்பாக தமிழ்ப் பார்ப்பனர்கள் பாண்டித்துரைத் தேவரின் தமிழ்ச் சங்கம் மூலமாகவும் தனியாகவும் ஆய்வுகள் செய்து தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையை நிறுவினர். மு.இராகவய்யங்கார், இரா. இராகவய்யங்கார், கிருஷ்ணசாமி அய்யங்கார், பி.டி. சீனிவாசய்யங்கார், வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர் போன்றவர்கள் இவ்வரிசையில் முன்னணியில் நிற்கின்றனர்.தன் பெயரைப் பரிதிமாற் கலைஞர் என்று தனித்தமிழில் மாற்றித் தனித்தமிழ் இயக்கத்துக்கு வித்திட்ட சூரியநாராயண சாத்திரி ஓர் ஒளி விளக்காய்த் திகழ்கிறார்.

இந்த எழுச்சி வரலாற்றில் பிற்போக்கு விசைகளும் வலிமையாயிருந்தன. அவற்றுக்கு ஊக்கம் தந்தவர்கள் இறையியல் கழகத்தை உருவாக்கிய அமெரிக்கராகிய ஆலிவர் ஆல்காட்டும் உருசியரான பிளாவட்கி அம்மையாரும்.

தமிழ்த் தேசியத்தைத் திசை திருப்பிய இன்னொரு முகாமையான கூறு ஆரிய - திராவிட வரலாற்றுக் கோட்பாடாகும். இதுவும் மேலையரால் உருவாக்கப்பட்டதே. செருமானியரான மாக்சுமுல்லரால் ஆரியக் கோட்பாடு உருவாக்கப்பட்டது. கால்டுவெல் ஐயரால் திராவிடக் கோட்பாடு உருவானது. ஆரியர்கள் நடு ஆசியாவிலிருந்தும் திராவிடர் நண்ணிலக் கடற் பகுதியிலிருந்தும் வந்தனர் என்று இவர்கள் கூறினர். திராவிடர்வெளியிலிருந்து வந்தவர்கள் என்ற கூற்றைத் தமிழர்கள் ஏற்றுக் கொள்ளவில்லையாயினும் சாதி ஏற்றத்தாழ்வினால் உருவான ஒரு குமுகச் சிக்கலை இனச் சிக்கலாகப் புரிந்து கொண்டனர். ஆரிய இனக் கோட்பாட்டை அறிஞர்களின் கடும் எதிர்ப்பினால் மாக்சுமுல்லர்கைவிட்டுவிட்டாலும் இரு காரணங்களினால் அக்கோட்பாடு நிலைத்து விட்டது. அப்போது தமிழகத் தேசியத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்த பார்ப்பனரல்லா மேற்சாதியினர்தாங்கள் கடைப்பிடித்து வந்த சாதிய ஒடுக்குமுறைக்கு ஆரியர்களைக் காரணம் காட்டித் தப்பிக்க முடிந்தது. பார்ப்பனர்களுக்குத் தாம் ஒரு பெரிய இனத்தின் வழியினர் என்ற மாயை தெம்பைத் தந்தது. இந்த அடிப்டையில் தமிழகத் தேசிய உணர்வு திசை திரும்பி இனச்சிக்கலாக வடிவெடுத்தது.

தமிழகத் தேசிய இயக்கம் நீதிக் கட்சி எனப்படும் நயன்மைக் கட்சியிலிருந்து அரசியல் வடிவம் பெற்றது. அன்றைய தமிழகம் சென்னை மாகாணமாக, ஆந்திர, கன்னட, கேரளப் பகுதிகளைக் கொண்டிருந்ததால் அந்த இயக்கத்திலும் தமிழர்களுடன் இம்மொழி பேசும் தலைவர்களும் இருந்தனர். திராவிடக் கோட்பாட்டுக்கு இப்பின்னணியும் வலுச் சேர்த்தது.

நயன்மைக் கட்சி பார்ப்பன மேலாண்மையை மட்டும் எதிர்த்து நிற்கவில்லை. வெள்ளையராட்சிக் காலத்தில் இந்தியாவில் அவர்களின் தேவைகளுக்காக அவர்கள் உருவாக்கிய தொழில் முனைவுகளிலிருந்து தவிர்க்க முடியாமல் உருவாகிய உள்நாட்டு மூலதனத்தில் வடக்கு வலிமை பெற்று தெற்கை நசுக்கி வந்தது. எனவே வடக்கின் பிடியிலிருந்து தெற்கின் பொருளியலைக் காக்கும் குறிக்கோளும் நயன்மைக் கட்சிக்கு இருந்தது.

இக்கட்சியின் தலைமையிலிருந்த நிலக்கிழார்களும் இடைக்கிழார்களும்(சமீன்தார்களும்) சிற்றரசர்களும் வாணிகப் பெருமக்களும் போர்க்குணம் உள்ளவர்களல்லர். எனவே ஆளுவோர்களாகிய வெள்ளையர்களுக்கு வேண்டுகோள்களை விடுப்பதிலேயே குறியாயிருந்தனர். காங்கிரசுக்கட்சி எனப்படும் பேரவைக் கட்சியின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க வேண்டியிருந்த ஆங்கில அரசு நயன்மைக் கட்சிக்கு ஆதரவாக இருந்தது. 1920 - இல் முதன்முதல் உருவான நயன்மைக் கட்சி அரசு கல்வியிலும் அரசுப் பணியிலும் பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் ஒதுக்கீட்டைக் கொண்டுவந்ததுடன் புதிய தொழில்களைத் தமிழக மக்கள் தொடங்குவதற்கு மிகுந்த ஊக்கமும் ஒத்துழைப்பும் தந்து தமிழகத்தில் முதன்முதலில் பெருந்தொழில்கள் தோன்ற வழிவகுத்துக் கொடுத்தது. இவ்வாறு ஆங்கிலேய அரசின் ஆதரவு, "ஆரிய இன" எதிர்ப்பு, பொருளியல் தன்னுரிமை என்ற திசைகளில் ஊசலாடியதால் நிலப்பற்று என்ற உணர்வு இவ்வியக்கத்தில் வலிமை பெறவில்லை.

நாளடைவில் நயன்மைக் கட்சியில் இருந்த மேற்சாதியினரும் வாணிகர்களும் கட்சியினுள் உருவாகும் சாதிய எதிர்ப்பைப் பொறுக்க முடியாமலும் தங்கள் நலனுக்கு வளர்ந்து வரும் பேரவைக் கட்சியே உகந்தது என்று கருதியும் வெளியேறினர். கட்சிக்கு வலுவான தலைமை ஒன்று வேண்டும் என்ற நிலையில் பார்ப்பனர் ஆதிக்கத்தை எதிர்த்து பேரவைக் கட்சியிலிருந்து வெளியேறி தன்மான இயக்கத்தைத் தொடங்கியிருந்த பெரியாரிடம் தலைமையை ஒப்படைத்தனர்.

பெரியாரிடம் தலைமை வந்த பின்னர் இயக்கத்தில் ஒர் அடிப்படை மாற்றம் ஏற்பட்டது. பொருளியல் வளர்ச்சி பற்றிய பார்வை பெரியாருக்குக் கிடையாது. சாதி, சமயம், மூடநம்பிக்கை ஆகியவற்றை எதிர்ப்பதிலேயே அவரது முழுக் கவனமும் இருந்தது. இந்திய விடுலைப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டுமாயின் ஆங்கிலேயர் காலத்திலேயே தமிழகம், அதாவது அன்றைய நிலையில் திராவிட நாடு விடுதலை பெறவேண்டுமென்ற முழக்கத்தை அவர் முன்வைத்தார். இயக்கத்தின் பெயரையும் திராவிடர்கழகம் என மாற்றினார்.

ஆனால் வெறும் சாதி எதிப்பு மட்டும் ஒரு நாட்டு விடுதலையின் அடிப்டையாகயிருக்க முடியாது. எனவே சிறுகச் சிறுகப் பொருளியல் காரணங்களும் முன்வைக்கப்பட்டன. இந்தப் பணியை அண்ணாத்துரை தொடங்கி வைத்தார். இந்த அனைத்துக் கூறுகளையும் கொண்டதாக திராவிட இயக்கம் ஒரு மக்கள் இயக்கமாக வலிமை பெற்று வளர்ந்தது. தமிழகத்தின் அறிவும் ஆற்றலும் நிறைந்த இளைஞர் கூட்டம் இயக்கத்தின் கட்டுப்பாட்டினுள் நின்றது.

இந்நிலையில் இயக்கத்தினுள் முரண்பாடுகள் வலுத்துவந்தன. பெரியார் இயக்கத்தைத் தன் சொந்தச் சொத்து போலும் ஒரு பெருந்தொழில் நிறுவனம் போலும் நடத்தி வந்தார். இது அடுத்த நிலைத் தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. தக்க காலம் கருதியிருந்தனர். அத்தகைய வாய்ப்பு ஒன்று உருவானது.

தொடக்கத்திலிருந்தே பெரியாரின் அரசியல் எதிரியும் தனிநிலை நண்பருமான ராசாசி எனப்படும் ஆச்சாரியாரின் அறிவுரையின் துணையுடனும் தனக்குப் பின் கழகத்தின் தலைமையையும் அதன் சொத்தையும் நடத்திச் செல்லும் ஒரு வழித்தோன்றல் வேண்டுமென்பதாலும் தனக்குத் தனிநிலை உதவியாளராயிருந்த மணியம்மை என்ற இளம்பெண்ணைப் பெரியார் தன் 61ஆம் அகவையில் மணமுடித்தார். இதனைக் காரணமாகக் காட்டி அண்ணாத்துரை கட்சியின் பெரும்பான்மையான இளந்தலைமுறைத் தலைவர்களையும் தொண்டர்களையும் தன்னோடு சேர்த்துக்கொண்டு திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை 1949 - இல் தொடங்கினார்.

திராவிடர் கழகத்தின் கொள்கைகளையே தொடர்ந்து பரப்பினர். தி.க.வும் தி.மு.க.வும் ″இரட்டைக் குழல் துப்பாக்கி″ என்றனர்.

பெரியார் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிப்பது தன் கட்சியின் நோக்கமல்ல என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால் தி.மு.க. 1952 - இல் மாணிக்கவேலர் என்பவரோடு ஓர்உடன்பாடு செய்துகொண்டது. சட்டமன்றத்தில் தி.மு.க.வின் கொள்கைளுக்காக வாதாடினால் அவரது தேர்தல் வெற்றிக்காகப் பாடுபடுவதாக ஒப்புப்கொண்டது. தேர்தலில் அவர் வெற்றி பெற்றார். ஆனால் வாக்குறுதியைக் கைவிட்டு ஆச்சாரியார் அமைத்த அமைச்சரவையில் அவர் சேர்ந்துவிட்டார்.

1957 - இல் திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் தேர்தலில் ஈடுபட்டு அதன் முலம் திராவிட நாடு விடுதலைக்குப் பாடுபடுவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 1957 தேர்தலில் பங்கு கொண்டு 15 இடங்களைப் பிடித்தனர்.

அதற்குள் திராவிடர் கழகத்தின் அடிப்படைக் கொள்கைகளிலொன்றான இறைமறுப்பைக் கைவிட்டு ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற நிலைப்பாட்டை மேற்கொண்டனர். சமய நடவடிக்கைகள், குறிப்பாக கிறித்துவ, முகம்மதிய சமயங்கள் தொடர்பானவற்றைத் திறனாய்வது கைவிடப்பட்டது. பார்ப்பன எதிர்ப்பு என்பது பார்ப்பனிய எதிர்ப்பாகக் குறுக்கப்பட்டது.

1962 தேர்தலுக்கு முன்பே தி.மு.க.வில் ஒரு பெரும் உட்கட்சிப் பூசல் ஏற்பட்டது. தி.மு.க.வில் ஐம்பெருந் தலைவர்கள் பட்டியலில் இல்லாதிருந்த மு.கருணாநிதி பிறரையெல்லாம் புறந்தள்ளி மேலேறிக்கொண்டிருந்தார். திரைப்படத் துறையிலிருந்த தன் தொடர்பாலும் பண வலிமையாலும் ஒவ்வொரு மாவட்ட மாநாடுகளை நடத்தும் போதும் உள்ளுர்த் தலைவர்களுடன் தொடர்புகொண்டு தன் பிடிப்பைக் கட்சியில் மிக வலுவாக நிலைநாட்டியிருந்தார். அத்துடன் திரைப்பட நடிகரான ம.கோ. இராமச்சந்திரனும் செல்வாக்கில் வளர்ந்திருந்தார். இதனால் பல தலைவர்கள் கசப்புற்றிருந்தனர். அவர்களின் குரலாய் சம்பத் எழுந்தார். திராவிட நாட்டுப் பிரிவினை என்பது தி.மு.க. தலைவர்களுக்கு வெறும் மேடை முழக்கமே; அதில் அவர்களுக்கு உண்மையான ஆர்வமோ நம்பிக்கையோ இல்லை என்று அவர் கூறினார். கட்சியின் அடிப்படைத் தொண்டர்கள் பலரை அவர் கவர்ந்தார். மோதல் முற்றி 1961 - இல் சம்பத் தனியாகப் பிரிந்தார். தன் கட்சிக்குத் தமிழ்த் தேசியக் கட்சி என்று பெயர் வைத்தார். இன்று கூடத் ″தேசியம்″ என்ற சொல்லுக்கு ″இந்தியத் தேசியம்″ என்றே சராசரித் தமிழர்கள் பொருள் கொள்வர். இன்று வரை தமிழக அரசியல் கட்சி எதுவும் தேசியம் என்ற சொல்லின் அரசியல் பொருளை மக்களுக்கு புரியவைக்க முயலவில்லை. எனவே கட்சியின் பெயரைப் பார்த்ததுமே சம்பத்துடன் இணைய நினைத்தவர்களில் மிகப் பெரும்பாலோர் நின்றுவிட்டனர். 1962 இல் நடைபெற்ற தேர்தலில் ஈடுபட்டுப் படுதோல்வி அடைந்ததுடன் கட்சியைத் தொடர்ந்து நடந்த ஆற்றலின்றி பேரவைக் கட்சியில் அடைக்கலம் புகுந்தனர் சம்பத்தும் அவரது தோழர்களும்.

1952 - இல் முதலமைச்சரான ஆச்சாரியார் தொடக்கப்பள்ளி மாணவர்கள் நாளில் பாதியில் தம் பெற்றோரின் தொழிலில் பயிற்சி பெறவேண்டுமென்ற திட்டத்தைக் கொண்டுவந்ததால் பழைய வருணமுறையை மீட்கும் திட்டமென்று அனைத்துத் தரப்பினரும் எதிர்த்தனர். எனவே ஆச்சாரியார் பதவி விலக அவ்விடத்தில் காமராசர் வந்தார். அவர் குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்ட போது அனைத்துக் கட்சியினரும் அவரை ஆதரித்தனர். இதன் தொடர்ச்சியாகப் பெரியார் காமராசரைப் ″பச்சைத் தமிழர்″எனக் குறிப்பிட்டு அதைச் சாக்காக வைத்துப் பேரவைக் கட்சியை ஆதரிக்கத் தொடங்கினார். உண்மையில் தி.மு.க.வுக்கு எதிர்நிலை எடுப்பதே உண்மையான அவரது நோக்கம். பெரியாரின் அண்ணன் மகனான சம்பத் தி.மு.க.வில் பிரிவேற்படுத்த மேற்கொண்ட முயற்சியும் பெரியார், காமராசர் ஆகியோரின் தூண்டுதலால் தான் என்ற குற்றச்சாட்டில் உண்மையிருக்கலாம்.

இதற்கிடையில் இந்திய அரசு திட்டமிட்ட பொருளியல் என்ற பெயரில் ஐந்தாண்டுத் திட்டங்களைத் தீட்டியது. இத்திட்டங்களில் தமிழகத்துக்குப் போதிய ஒதுக்கீடு இல்லை என்று தி.மு.க. கடுமையான கருத்துப் பரப்பல் செய்தது. இதன் மூலம் பம்பாய் மூலதனம் தமிழக மூலதனத்தை அடிமைப்படுத்துகிறது என்ற பழைய நிலைப்பாடு ஓசைப்படாமல் மூலையில் போடப்பட்டது. அது இன்று வரை எவர்கவனத்துக்கும் வரவில்லை.

1962 - இல் உள்துறை அமைச்சராயிருந்த இலால்பகதூர் சாத்திரி பிரிவினைத் தடைச் சட்டம் கொண்டுவந்தார். அச்சட்டத்தின்படி பிரிவினை கேட்கும் கட்சிகள் தேர்தலில் போட்டியிட முடியாது. அச்சட்டம் பிறப்பிக்கப்பட்ட உடனே தி.மு.க. தனித் திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டுவிட்டதாக அறிவித்தது. இவ்வாறு தி.மு.க. கொள்கைகளை எல்லாம் கைவிட்டுவிட்ட வெறும் பதவிதேடிகளின் கும்பலாக இழிந்துபோய் விட்டது; உயிரை இழந்த வெறும் பிணமாக மாறிவிட்டது.

1957 தேர்தலில் வெற்றி பெற்ற 15 பேரும் போட்டியிட்ட தொகுதிகளை 1962 - இல் குறிவைத்துப் பேரவைக் கட்சி வேலை செய்தது. காஞ்சிபுரத்தில் போட்டியிட்ட அண்ணாத்துரை வாக்காளர்களைக் கெஞ்சினார். கண்ணீர்விட்டு அழாத குறை. இறுதியில் கருணாநிதி தவிர 14 பேரும் தோல்வியுற்றனர். ஆனால் புதிதாக 61பேர் வெற்றிபெற்றனர்.

1965 இந்தியக் குடியரசு நாளான சனவரி 26 ஆம் நாள் முதல் இந்தி இந்தியாவின் ஒரே ஆட்சிமொழியாக வரவிருந்தது. அந்த நாளைத் துயரநாளாகக் கொண்டாடுவதென தி.மு.க. தீர்மானித்தது. ஆனால் தி.மு.க. தலைவர்கள் எதிர்பார்க்காத அளவில் இப்போராட்டம் வெடித்தது. மாணவர்கள் வீரார்ப்போடு புறப்பட்டனர். காவல் துறையினர்க்கும் மாணவர்களுக்குமாக மூண்ட மோதல் மக்களுக்கும் காவலர்களுக்குமாகப் புது வடிவம் பெற்றது. படையினர் அழைக்கப்பட்டனர். இந்த எதிர்பாராத வேகத்தைக் கண்டு அண்ணாத்துரையும் துணைவர்களும் கலங்கினர். மக்களையும் மாணவர்களையும் அமைதிப்படுத்தினர்.

இந்தப் போராட்டத்தில் உண்மையில் தி.மு.க. எந்தப் பங்கும் எடுக்கவில்லை. ஆனால் முழுப் பயனையும் அது பெற்றது. 1967 தேர்தலில் பேரவைக் கட்சியின் முற்றதிகாரத்தை முறியடிப்பது என்ற பெயரில் ஒரு கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு அண்ணாத்துரை வெற்றிபெற்றார். கொள்கையில் இரு முனைகளான பொதுமைக் கட்சிகளும் ஆச்சாரியாரின் சுதந்திரக் கட்சியும் இதில் பங்கேற்றன.

இந்தியாவில் கொள்கையில்லாக் கூட்டணியை முதன் முதலில் உருவாக்கிய பெருமை தமிழகத்துக்கும் அதைப் பெற்றுத்தந்த பெருமை அண்ணாத்துரைக்கும் உரியது.

கூட்டணியின் விளைவாக தி.மு.க. அறுதிப் பெரும்பான்மை பெற்று அண்ணாத்துரை தலைமையில் ஆட்சியைப் பிடித்தது. ஆட்சிக்கு வந்த ஒரு சில மாதங்களிலேயே ஏழைகளாய்ச் சட்டமன்றத்தினுள் நுழைந்த தி.மு.க. ச.ம.உ.க்கள்(சட்ட மன்ற உறுப்பினர்கள்) மகிழுந்துகள் வாங்க முற்பட்டனர். இதனால் உருவான ஊழல் குற்றச்சாட்டுகளை மூடி மறைப்பதற்காக ″தொகுதி மக்கள் ச.ம.உ.க்களுக்கு மகிழுந்து வழங்கும்″ ஊழல் விழாக்களை அண்ணாத்துரையே முன்னின்று நடத்தினார். அவருடைய ஆட்சி சீரழிந்து பெயர் கெடும் முன் புற்றுநோய் அவரைக் கொன்று அவர் பெயரைக் காத்தது.

பின்னர் திராவிட இயக்கத்தில் பச்சையான ஊழலும் பதவிச் சண்டையும் விளம்பர அரசியலும் சொத்து சேர்த்தலும் பெண்ணை நாடலும் என நாற்றமெடுத்தது.

அண்ணாத்துரை காலத்தில் தில்லியில் ஆட்சி புரிந்த இந்திரா காந்திக்கும் பேரவைக் கட்சித் தலைவர்களுக்கும் ஏற்பட்ட மோதல் கருணாநிதியின் காலத்தில் 1969-இல் வெடித்தது. தமிழகத்தில் காமராசர் தலைமையிலான பழைய பேரவைக் கட்சி பெரும் செல்வாக்கோடு விளங்கியது. தன் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள தி.மு.க.வின் பாராளுமன்ற உறுப்பினர்களின் துணைய நாடி இந்திரா கருணாநிதியை அணுகினார். பின்னர் பிற கட்சிகளின் தயவிலேயே ஆட்சி புரிய விரும்பாத இந்திரா, 1971- இல் பாராளுமன்றத்துக்குத் தேர்தல் நடத்த விரும்பினார். தி.மு.க.வின் 4 ஆண்டுக்கால ஆட்சியின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டிருப்பதாகக் கருணாநிதி கருதினார். காமராசரும் ஆட்சிக்கு எதிராகக் கணைகள் தொடுக்கத் தொடங்கியிருந்தார். எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு கருணாநிதியும் சட்டமன்றத்தைக் கலைத்துத் தேர்தல் அறிவித்தார். சட்டமன்றத் தொகுதிகள் அனைத்தும் தி.மு.க.வுக்கும் பாராளுமன்றத் தொகுதிகள் அனைத்தும் இந்திரா பேரவைக்கும் ஒதுக்கப்பட்டன.

கழக வரலாற்றிலேயே, தமிழக வரலாற்றிலேயே 183 சட்டமன்ற உறுப்பினர்களை தி.மு.க. வென்றது. இந்திரா காந்திக்கு இன்னும் தனது உதவி தேவைப்படும் என்ற மிதப்பில் கருணாநிதி ஆணவத்துடன் செயல்படத் தொடங்கினார். 1974 - இல் அலகபாத் உயர்நீதி மன்றத் தீர்ப்பின் படி இந்திரா காந்தி பதவியிழக்க வேண்டியிருந்த சூழலில் நெருக்கடி நிலை ஒன்றை அறிவித்து அதிலிருந்து தப்பினார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தல், இந்திரா காந்தியைத் தனிப்பட்ட முறையில் தாக்குதல் என்ற வகையில் தி.மு.க. அரசும் கட்சியும் செயல்பட்டன. ஓர் எல்லை வரை பொறுத்த இந்திரா 1976 - இல் திடீரென்று படை அணிகளைத் தமிழகத்தினுள் அனுப்பி தி.மு.க. அரசைக் கவிழ்த்தார். பலர் தலைமறைவாயினர். கீழ்நிலைத் தலைவர்கள், தொண்டர்கள் என்று பலரும் சிறைச்சாலைகளில் அடித்தே கொல்லப்பட்டனர்.

கொள்கைப் பரப்பலுக்குச் சிறந்த கருவி என்ற வகையில் நாடகங்கள், திரைப்படங்களைத் தி.மு.க. பயன்படுத்தியது. அண்ணாத்துரையே ஒரு சிறந்த நாடகாசிரியர். கருணாநிதியும் அவ்வாறே. இருவரும் பிற தலைவர்கள் சிலரும் கட்சி மாநாடுகளில் நாடகங்களில் நடித்திருக்கிறார்கள். திரைப்படத் துறையிலும் அண்ணாத்துரை கதை, உரையாடல்கள் எழுதியிருக்கிறார். சொந்தப் படமும் எடுத்திருக்கிறார். கருணாநிதி திரைப்படத் துறையில் அதிக ஈடுபாடு கொண்டு பெருஞ்செல்வம் சேர்த்தவர்.

திரைப்பட, நாடகத் துறைகளில் ஈடுபடுவது தி.மு.க.வுக்கு மட்டும் உரிய பழக்கமல்ல. பேரவைக் கட்சிக்கும் இந்த மரபு உண்டு. தமிழகப் பேரவைக் கட்சித் தலைவர் சத்தியமூர்த்தி கட்சி நாடகங்களில் நடித்திருக்கிறார். கல்கி முதலியோர் திரைக்கதை உரையாடல்கள் எழுதியிருக்கிறார்கள். ஏ.வி.எம். போன்ற திரைப்பட நிறுவனங்கள், நவாபு இராசமாணிக்கம் பிள்ளையின் நாடக நிறுவனங்கள், கே.பி. சுந்தராம்பாள் போன்றவர்கள் திரைப்படங்கள் மூலமும் நாடகங்கள் மூலமும் பேரவைக் கட்சிக்குப் பணியாற்றியுள்ளனர்.

இந்த நிலையில் விரைவில் ஆட்சியைப் பிடித்து விடவேண்டும் என்ற ஆவலில் கே.ஆர். இராமசாமி, ம.கோ. இரா., சிவாசி கணேசன், இரசேந்திரன் போன்ற நடிகர்ளை தி.மு.க. பயன்படுத்தியது. கணேசன் இடையில் ஓடிவிட்டார். ம.கோ.இரா. பெரும் ஆற்றலாக வளர்ந்துவந்தார். தேர்தல் முடிவுகளில் அவரது தாக்கம் இருந்தது. தி.மு.க.வின் வலிமையின் பின்னணியில் ம.கோ.இரா.வின் சுவைஞர் மன்றங்கள் இருப்பது கொஞ்சங் கொஞ்சமாகக் கருணாநிதிக்கு உறுத்தியது. எனவே தனது மகன் முத்துவைத் திரைப்படத் துறையில் நுழைத்து அதன் மூலமாக ம.கோ.இரா.வை ஓரங்கட்டுவது என்று திட்டமிட்டுச் செயற்படத் தொடங்கினார் கருணாநிதி. தினந்தந்தி நாழிதழ் உரிமையாளரும் அமைச்சராயுமிருந்த ஆதித்தனாரின்[1] துணைகொண்டு ம.கோ.இரா. மன்றங்களை முத்து மன்றங்களாக மாற்ற கருணாநிதி முற்பட்ட போது ம.கோ.இரா. நேரடி மோதலில் ஈடுபட்டு ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறி தனிக் கட்சியாக 1973-இல் அண்ணா தி.மு.க.வைத் தொடங்கினார்.

ஆட்சிக் கலைப்பினாலும் ஒடுக்குமுறையாலும் நடுநடுங்கிப் போன கருணாநிதியிடம் அதுவரை இருந்தது திமிர்தானேயொழிய வீரமல்ல என்பது அவருக்கும் அவரை நோட்டமிட்டு வந்தவர்களுக்கும் தெரிந்தது.

1976-இல் ம.கோ.இரா. இந்திரா பேரவையோடு கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தார். 1979-இல் இந்திராவுடன் கூட்டணி அமைத்து பாராளுமன்றத் தேர்தலில் கருணாநிதி ம.கோ. இரா.வின் கட்சியைத் தோற்கடித்தார். அரசியலமைப்புச் சட்ட விதி 356-இன் கீழ் அ.தி.மு.க ஆட்சியைக் கவிழ்க்கச் செய்து சட்டமன்றத் தேர்தலுக்கு வழி வகுத்தார் கருணாநிதி. எந்தக் கண்ணோட்டத்திலும் முட்டாள்தனமென்று மெய்ப்பிக்கத்தக்க வகையில் பாதிக்குப் பாதி தொகுதிகளைத் தத்தம் அணிகளுக்குப் பங்கிட்டு முதலமைச்சர் பதவி தனக்கென்று இந்திராவினால் அரைமனதுடன் அளிக்கப்பட்ட ஒரு வெற்று வாக்குறுதியை மட்டும் பெற்றார். தேர்தலில் ம.கோ. இரா. வென்றார். அன்றிலிருந்று இறுதி வரைக்கும் பேரவைக் கட்சி தன்னை மிதித்தாலும் மறைவாக அதன் காலைக் கட்டிச் கொண்டு தி.மு.க. வாழ்கிறது.

ம.கோ.இரா.-வுக்குப் பின் வந்த செயலலிதா காலத்தில் அ.தி.மு.க. பேரவைக் கூட்டணியுடன் ஆட்சியைப் பிடித்து இன்று முரணி நின்றாலும் மறைமுகமாக பேரவைக் கட்சியின் தலைமைக்கு அடிபணிந்தே நிற்கிறது.

இவ்வாறு இன்று தமிழ்த் தேசியம் என்ற ஒன்று இந்திய அரசியல் சூழலில் நிலவுவதாகக் கூற முடியவில்லை.

இந்தச் சூழலில் திராவிட இயக்கத்தைப் பற்றிய ஒரு மனந்திறந்த திறனாய்வை முன்வைப்பது நம் கடமையாகும்.

(தொடரும்)

அடிக்குறிப்பு:

[1] ம.கோ.இரா.வின் செல்வாக்கு விரைந்து வளர்ந்து வந்த 1950-களில் ஆதித்தனார் அவரைக் கிழட்டு நடிகர் என்றும் மலையாளி என்றும் குறைகூறி அவரது நாழிதழில் எழுதினார். விசயபுரி வீரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஆனந்தன் என்ற நடிகரின் நடிப்பை வானளாவப் புகழ்ந்ததுடன் தமிழன் என்று போற்றவும் செய்தார். பின்னர் நாம் தமிழர் இயக்கம் என்ற ஒரு கட்சியைத் தொடங்கினார். திராவிட நாடு என்பது தமிழர்களுக்கு நலம் செய்யாது; தமிழர் நலனுக்காகத் தனி அரசியல் அமைப்பு வேண்டுமென்று சரியாகவே சொன்னார். சடுகுடு போன்ற தமிழ் மரபு விளையாட்டுகளை ஊக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். (அவரது முன்முயற்சியில் நடைபெறும் போட்டிகளில் வழங்கப்படும் கோப்பைகளை நிகழ்ச்சி முடிந்த பின் அவரே திரும்ப வாங்கி வைத்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது). தி.மு.க.வின் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் குறைகூறி வந்தவர் திடீரென்று 1967 தேர்தலில் அக்கட்சியோடு கூட்டணி வைத்து தேர்தலில் வெற்றி பெற்று முதலில் சட்டப்பேரவைத் தலைவராகவும் பின்னர் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் இருந்தார். அப்பொழுது அவர் மீது பேருந்துகளுக்கு டயர்கள் வாங்கியதில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. அவருடைய இந்த நடவடிக்கைகளின் உண்மையான நோக்கம், பின்னணி போன்றவை இன்றும் புரியாத புதிர்களாக உள்ளன. அவருடைய பெயரையும் கட்சியின் பெயரையும் கூறிக்கொண்டு இன்றும் சிலர் இருக்கின்றனர். ஆனால் அவர்களிடம் செயல் திட்டம் எதுவுமில்லை என்பதுடன் அவர்களது நடவடிக்கைகளும் புதிராகவே உள்ளன.

15.9.07

தமிழ்த் தேசியம் ... 2

தமிழ்த் தேசியம்

தேசிய உணர்வென்பது இயற்கையானது. அது நில எல்லை அடிப்படையில் உருவாவது. விலங்குகளும் தாம் வாழும் இடங்களுக்கு எல்லை வகுத்துள்ளன. சிலவகை மான்கள் தாம் வாழும் எல்லைகளுக்கு அடையாளமிட்டுப் பேணுவதாக உயிர்நூலார் கூறுவர். நாய்களும் இத்தகைய எல்லைகளை வகுத்துள்ளன. எல்லையினுள் புதிதாக நுழையும் நாயை அவை உடனே அண்டை நாய்களுடன் சேர்ந்து துரத்திவிடும்.

மனிதர்கள் ஓரிடத்தில் இறுதித் திரிவாக்கம் பெற்றுப் பரவினயமையால் உலக மொழிகளில் பல அடிப்படைச் சொற்களில் ஒற்றுமை காணப்படுகிறது. அவர்கள் பல்கிப் பெருகி உலகெலாம் பரவியபோது ஆங்காங்குள்ள பருப்பொருட் சூழல்கள் மற்றும் வாய்ப்புகளுக்கேற்ப அவர்களது பண்பாடுகளும் மொழிகளும் வளர்ச்சியடைந்தன.

அருகருகே வாழ்ந்த மக்கள் உணவு தேடி தத்தம் எல்லைகளை மீறியபோது சண்டைகள் நிகழ்ந்தன. வளமில்லாப் பூமியிலிருந்து கூட்டமாக வளமிக்க பரப்புகளில் புகுந்து கொள்ளையடிப்பதற்கும் போர்கள் நடந்தன. இப்போர்களிலிருந்து பேரரசுகள் உருவாயின. பற்றாக்குறைப் பகுதியிலுள்ளோர் வளமிக்க பகுதிகளிலுள்ள வெவ்வேறு பொருட்களை வாணிகம் மூலம் பண்டமாற்றுச் செய்து உயர்நிலையடைந்த போது அத்தகைய வாணிகக் குழுக்களும் பேரரசுகளை அமைத்தன. இப்பேரரசுகள் தம் மொழி பேசும் மக்களையே அடக்கி அவர்கள் நிலத்தின் வளத்தைச் சுரண்டிச் சென்றபோது சுரண்டப்பட்ட மக்களின் தேசிய உணர்ச்சி மலர்ந்தது. தங்களைச் சுரண்டுவோரிலிருந்து தம்மை இனம் காணும் வகையில் தாம் பேசும் மொழியை தம்மை அடக்கியாளுவோர் மொழியிலிருந்தும் மாறுபடுத்திக்கொண்டனர்.[1] இதற்கு எடுத்துக்காட்டாக மலையாளம், சிங்களம் ஆகிய தேசியங்களின் வளர்ச்சியைக் கூறலாம். தமிழகத்தின், குறிப்பாகச் சோழப் பேரரசின் ஒடுக்குமுறையிலிருந்தே தமிழில் சேர நாட்டுத் திசைமொழி மலையாளமாக மாற்றப்பட்டது. மலையாளத்துக்கு இன்றைய எழுத்து வடிவத்தைக் கொடுத்த எழுத்தச்சனின் முயற்சி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இன்று கூட நாட்டுப்புற மலையாளிகளிடம் கழகக் காலத் தமிழ் அழியாமல் நிற்கிறது.

அது போன்றே சிறுபான்மையராயிருந்த சிங்களர் பக்கம் பெரும்பான்மையினரான தமிழர்கள் சோழர்கள் தாக்குதலின் எதரொலியாக உருவான தேசிய உணர்விலிருந்தே சாய்ந்திருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. சிங்களர்களின் பெயர்களில் உள்ள பின்னொட்டுகள் இந்த ஐயப்பாட்டை எழுப்புகின்றன. இன்றும் பத்மநாப, டக்ளசு தேவானந்த எனும் பெயர்கள் சிங்களப் பெயர்கள் போல் ஈறு குறிலாக இருக்கின்றன. அவர்கள் செயலும் சிங்களரைச் சார்ந்து நிற்கிறது. வல்லாண்மையை அண்டி வாழ்வதற்காகத் தேசியத்தை மாற்றிக்கொள்வதற்கு இவர்கள் எடுத்துக்காட்டுகள்.

தமிழகத்தில் தேசிய உணர்வு, அதாவது தம் நிலம் பற்றிய மக்களின் ஓர்மை கழகப் பாடல்களிலிருந்து தெரிகிறது. மோரியர் படையெடுப்பின் போது எல்லையிலிருந்த குறுநில மன்னர்களே அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டனர். ஆனால் அக்குறுநில மன்னர்களை அழித்ததன் மூலம் முவேந்தர்கள் தமிழகப் பாதுகாப்புக்கு ஊறு விளைத்தனர். தமிழரின் மானம் காப்பதற்காக இமயம் நோக்கிச் சென்ற செங்குட்டுவன் தமிழகம் முழுவதையும் ஓரரசாக்க வேண்டுமென்ற சாத்தனார் போன்றோரின் மறைமுக வேண்டுதலுக்குச் செவிசாய்க்கவில்லை. அதைச் செய்திருந்தால் தமிழக வரலாறே மாறியிருக்கும்.

தமிழகத் தேசிய உணர்வுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் இளங்கோவடிகள். ஆனால் அவர் காலத்திலும் தொடர்ந்தும் ஏற்பட்ட உள்நாட்டுக் குழப்பங்களால் தமிழகம் பலமுனைத் தாக்குதலுக்காளாகித் தன் முகத்தைச் சில காலம் இழந்தது.

சமணம் மூலமாக வந்தவர்கள் ஆட்சியாளர்களானார்கள். சமணம் வாணிகர்களின் சமயம் என்று பொதுவாகக் கூறப்படுகிறது. ஆனால் அது வெளிநாட்டு வாணிகர்களின் சமயம், ஏனென்றால் சமணத்தை எதிர்த்து உருவான சிவனியத்துக்குப் பள்ளி எழுச்சி பாடியவரான காரைக்காலம்மையார் ஒரு தமிழ் வாணிகப் பெண்மணி. சம்பந்தருக்கு ஆதரவளித்தவர்களில் வாணிகர்களே வலிமை வாய்ந்தவர்கள்.

புத்த சமயமும் வெளிநாட்டவர் தொடர்பு கொண்டிருந்தது. தன் தந்தை காலத்தில் பன்னீராயிரம் சிங்கள வீரர்களைச் சிறைபிடித்து வந்த கரிகாலனின் புகாரைக் கயவாகு மணிமேகலையின் துணைகொண்டு அழித்தான். இவையனைத்துக்கும் எதிர்ப்பாக, தேசிய எழுச்சியாகத் தான் சிவனியம் உருவானது. சிவபெருமானை மகிழ்வித்தவனாக ஒவ்வொரு பதிகத்திலும் ஒன்பதாம் பாடலில் இராவணனைப் புகழ்வதன் மூலம் அவனை கி.பி. ஆறாம் நூற்றாண்டிலேயே தமிழகத் தேசியத் தலைவர்களில் ஒருவனாக சம்பந்தர் உயர்த்திவிட்டார். இதன் மூலம் அக்காலகட்டத்தில் வைணவமும் தேசியத்துக்கு இரண்டகம் செய்ததை உய்த்துணரலாம்.[2]

தமிழ்த் தேசியத்தின் நிழலில் உருவான சோழப் பேரரசு அதில் நிலைத்து நிற்கவில்லை. மக்களின் வெறுப்புக்கு உள்ளானது. நாளடைவில் வெளியார் ஆதிக்கத்துக்குத் தமிழகம் மீண்டும் மீண்டும் ஆளானது. அவற்றிற்கு மக்களின் எதிர்ப்பின் எதிரொலிகளாக குற்றலாக் குறவஞ்சி, திரிகூடற் பள்ளு போன்ற சில இலக்கியத் தடயங்கள் மட்டும் எஞ்சி நிற்கின்றன. இவ்வெல்லா இயக்கங்களுக்கும் உள்ள ஒரு பொதுத் தன்மை, தாழ்ந்த சாதி மக்களைத் தங்கள் இறைவனுக்கு நெருக்கமானவர்களாகக் காட்டுவதேயாகும்.

இவற்றுக்குப் பின் கி. பி. 1682 முதல் 7 ஆண்டு காலம் பாண்டிய நாட்டை ஆண்ட அரங்ககிருட்டின முத்துவீரப்பனிடம் தேசிய உணர்வு தலைகாட்டியது. 19ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வெள்ளையரை எதிர்த்து சின்ன மருது வெளியிட்ட சீரங்கம் அறிக்கை தமிழகத் தேசிய வரலாற்றில் ஒப்பற்ற ஒன்றாகும்.


(தொடரும்)


அடிக்குறிப்பு:

[1] தங்களுக்குத் தனி அடையாளமாக சமயத்தை உருவாக்கிக் கொள்வதும் உண்டு. எ-டு. மோசேயின் தலைமையில் யூதர்கள்.

[2] தமிழகத்தில் மாலியத்தின் எழுச்சி குறிஞ்சி நிலத் தலைவர்களுக்கும் மூவேந்தர்களுக்கும் உருவாகியிருந்த முரண்பாடுகளைப் பயன்படுத்தி பார்ப்பனர்கள் மாலியத்தை வைத்து குறிஞ்சி, முல்லை நில மக்களிடையில் செயற்பட்டுவந்ததன் தடயம் சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது. குடகு நாட்டை அடுத்த மாங்காட்டு(இது பெரும்பாலும் மங்களூராயிருக்கலாம்) மறையோனின் சுற்றுச்செலவு இதையே சுட்டுகிறது எனலாம். களப்பிரர்கள் முதலில் மாலியர்களாகவே இருந்ததாகத் தோன்றுகிறது.


தமிழ்த் தேசியம் ... 1

தமிழ்த் தேசியம் - முன்னுரை

கிட்டத்தட்ட ஆறு திங்கள்களுக்கு முன்பு உலகத் தமிழ் இளைஞர் பேரவைச் செயலாளர் பர்.இரா. சனார்த்தனம் அவர்கள் ஒரு மலரில் வெளியிடுவதற்காகப் பல தலைப்புகள் கொடுத்துக் கட்டுரைகள் கேட்டுத் தாளிகைகளில் அறிக்கை விடுத்திருந்தார். அவற்றில் ″தமிழ்த் தேசியம்″ என்பதும் ஒன்று. இப்பொருள் பற்றிய என் கருத்துளை வெளியிட ஒரு வாய்ப்பு என்றெண்ணி இக்கட்டுரையை விடுத்தேன். என் வழக்கப்படி இன்னும் சிலருக்கும் படிகள் அனுப்பினேன். கட்டுரைகள் கேட்டவரிடமிருந்தோ மற்றவரிடமிருந்தோ இது நாள் வரை மறுமொழி எதுவும் இல்லை. ஆனால் தோழர் குணாவின் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற நூலில் இக்கட்டுரையின் பகுதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை அறிந்தேன். இதே நூலைப் படித்த வேங்கைப் பதிப்பகத்தைச் சேர்ந்த நண்பர் பொன். மாறன் கட்டுரையை வெளியிட முன்வந்தார். கட்டுரை நூல் வடிவில் உங்கள் பார்வையில் உள்ளது.

பத்து அகவையிலிருந்தே திராவிட இயக்கச் சிந்தனையில் வளர்ந்தவன் நான்; களத்தில் இறங்கவில்லையாயினும் கனவுகளில் திளைத்தவன்; சிறுகச் சிறுக அந்தக் கனவு கலைந்து 1973 - இல் முற்றிலும் விடுபட்டவன்; பொதுமையை நாடி அதனிலும் முரண்பாடுகளைக் கண்டு இரண்டும் தமிழகத்துக்கும் பொதுமை இயக்கம் ஏழை நாடுகளுக்கும் செய்துள்ள இரண்டகத்தைக் கண்டு தெளிந்து புதுக் கோட்பாடு, இயக்கம் காண விழைபவன்; ஆனால் ஆர்வமுள்ள அளவுக்கு ஆற்றல்கள் வாய்க்கப் பெறாதவன்; கற்றும் கேட்டும் கண்டும் அறிந்தவற்றையும் உணர்ந்தவற்றையும் பிறருக்கு எடுத்துக் கூறவேண்டும் என்ற கடமையுணர்வை எழுத்துகள் முலம் நிறைவேற்ற முயல்பவன்; இயலாமைகளால் ஆக்கங்களில் குறைபாடுகள் இருக்கலாம் என்பதை உணர்ந்திருந்தும் நகையாடப்படலாம் என்ற தயக்கம் இருந்தும் தெரிந்தவற்றிலிருந்து பெறப்பட்ட முடிவுகளை மக்கள் முன்வைக்க வேண்டுமென்ற கடமையுணர்வால் உந்தப்பட்டவன்; தவறுகள் இருந்தால் அவற்றைச் திருத்தி என் முடிவுகளை மேம்படுத்தும் ஆற்றல் நம் மக்களுக்கு வளர வேண்டுமென்று விரும்புபவன்; ஆனால் நண்பர் குணா தவிர வேறெவரிடமிருந்தும் அத்தகைய ஆற்றல் வெளிப்படவில்லை.

இந்தக் கட்டுரையில் நான் சொல்லியுள்ள கருத்துகளின் எதிரொலி மிகக் கொடியதாக இருக்கக் கூடும். எதிர்ப்பின் எத்தகைய தாக்குதலையும் எதிர்கொள்ள ஆயத்தமாக இருந்தால்தான் நிகழ்காலத் தேக்க நிலையிலிருந்து எதிர்காலத்தை விழித்தெழச் செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்ற முடியும் என்பது என் முடிவு.

கட்டுரையில் தேசியம் பற்றிய ஒரு வரையறை கூறப்பட்டுள்ளது. அது மிகப் பொதுப்படையானதாகும். உண்மையான தேசியர்கள் தேசியத்தின் வினைப்பாடுகள் கூர்மையாகும் போது தான் தங்களை இனங்காட்டுவர்.

இக்கட்டுரையை வெளிக்கொணர முன் முயற்சி எடுத்துக் கொண்ட வேங்கை அச்சக வேங்கை மார்பனுக்கும் நண்பர் பொன். மாறனுக்கும் கட்டுரை அச்சேறுமுன்பே அறிமுகம் தந்த தோழர் குணாவுக்கும் நன்றி.

நம் குமுகத்தில் அண்மைக் காலங்களில் பொய்த்துப் போய்விட்ட மனந்திறந்த திறனாய்வு மழை இப்போதாவது பொழியுமா?


பின்குறிப்பு: உண்மையில் இந்தக் கட்டுரை இன்று(15-09-07) வரை நூல் வடிவம் பெறவில்லை.


(தொடரும்)

4.9.07

'சுயமரியாதை இயக்கத்துக்கு நாடார்கள் ஆற்றிய தொண்டு' நூல் பற்றி...3

பெரியார் எடுத்துக்கொண்ட குமுகக் குறிக்கோள்களை ஒரு நேர்மையான தலைவன் எடுத்துக் கொண்டிருப்பானானால் அவன் வீடிழந்து நாடிழந்து தலைமறைந்து ஆயுதத்தையே துணைகொண்டு வாழ்ந்திருக்க வேண்டும்.

ஆனால் பெரியாரோ அவரைப் போற்றிப் புகழும், வாழ்த்தி வணங்கும் ஒரு தொண்டர் குழாமுடன் சங்கராச்சாரி எவ்வாறு வலம் வருகிறாரோ அவ்வாறே வாழ்ந்திருந்தார்.

தான் வெறும் சீர்திருத்தர்தான்; அரசியல்வாணரல்ல என்ற சாக்குச் சொல்லி வாய்வீச்சு வீசி எதிரிகளுக்கு விழிப்புணர்வும் ஒற்றுமையும் உறுதியும் ஏற்படுத்தித் தந்நுவிட்டார். நேரடியான, தீவிரமான, குறிப்பாகச் சொல்வதனால் வன்முறை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட தொண்டர்கள் முனைந்த போதெல்லாம் அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டார். அதே நேரத்தில் ஆட்சியாளர்களுடன் இணக்கமாக இருந்து பலன்களும் பெற்றார்.

தான் மக்களுக்குச் சிந்திக்க மட்டும் கற்றுத்தருவதாகவும் செயற்பட வேண்டியது அவர்கள் பொறுப்பென்றும் தந்திரமாகப் பேசி செயற்படாத, வெறும் வாய்ப்பேச்சு அரசியலைத் தமிழகத்தில் புகுத்தி அரசியல் இவ்வளவு இழிநிலை அடையக் காரணமாயிருந்தார்.

குப்பையை அகற்றுவோம் என்று கூவி அழைத்து மக்களைத் திரட்டிக் குப்பையைக் கிளறி மட்டும் விட்டு நாட்டை நாறவைத்து விட்டார்.

இன்று கல்வி இவ்வளவு பரவிய பிறகும் கல்வி என்பது மக்களின் பிறப்புரிமையல்ல அது ஒரு சலுகை என்ற கருத்து மக்களிடையிலிருந்து விலகாததற்குப் பெரியார் ஒதுக்கீடு கிடைத்த பின்பும் அனைவருக்கும் கல்வி என்ற முழக்கத்தை வைக்காததுதான் காரணம்.

பண்ட விளைப்பு, தொழில் வளர்ச்சி என்ற கண்ணோட்டத்தைக் கற்றோர் கல்லாதோர், ஏழை, பணக்காரன் ஆகிய அனைவர் மனங்களிலிருந்தும் துடைத்தெறிந்துவிட்டு உடலுழைப்பற்ற ′வேலைக்கு′ மாநிலம் மாநிலமாக, நாடு நாடாக ஓடுவதற்கும் எந்தமொழியைக் கற்கலாம் என்று பித்துப் பிடித்தலைவதற்கும் ஒதுக்கீடு என்ற மிகச் சிறு வேலைவாய்ப்புள்ள ஒன்றின் மீது 75 ஆண்டுகாலம் மக்களின் மனத்தை இழுத்துப் பிடித்து வைத்தே காரணம்.

கோயில் சொத்துகளை அவற்றைப் பயிர் செய்துவரும் பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோராகிய குத்தகையாளருக்கே சொந்தமென்று முழங்கி இந்து சமயத்தின் ஆணிவேரில் கைவைத்திருந்தால் இன்றைய கோயில்கள் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கும். தேர், திருவிழா, குடமுழக்கு, சம்ரோச்சனம், வேள்வி, அருளாசி எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கும். பார்ப்பனனின் பூணூல் அறுந்து அதைத் தொடர்ந்து மேற்சாதியினரின் கட்டமைப்பும் உடைந்து இந்து சமயமே உருமாறிப் போயிருக்கும்.

ஆனால் இன்று தாழ்த்தப்பட்டோர் தமது அடிப்படை மனித உரிமைகளுக்காகப் போராடுவதன் அடையாளமாக சிற்றூர்களிலெல்லாம் கோயில்களை நிறுவி பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் போட்டிபோட்டுத் திருவிழாக்கள் நடத்தி பண்பாட்டிலும் பொருளியலிலும் பெருஞ்சிதைவு ஏற்படுத்துவதற்குப் பெரியார் பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இரண்டகம் செய்து பார்ப்பனருடன் மறைமுகமாகவும் பிற மேல் சாதிக்காரர்களுடன் திராவிடர் என்ற பெயரிலும் வைத்துக் கொண்ட உறவு தானே காரணம்? அத்துடன் தமிழகத்தின் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு இருக்கவும் மாநிலத்துக்கு வெளியே மண்டல் ஆணையத்துடன் இணைத்துக்கொண்டதும் தாழ்த்தப்பட்டோரில் உயர்நிலையிலுள்ளோர் அம்மக்களைப் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராகத் தூண்டிவிடக் காரணமாகிறது. உங்களை நேரடியாகக் கேட்கிறேன், உங்களுக்கு ஒன்றுபட்ட மக்களைக் கொண்ட, ஒற்றுமையுடன் மண்ணின் உரிமைக்காகப் போராடும் தமிழகம் வேண்டுமா, அல்லது வெளிமாநிலங்களிலும் நடுவணரசிலும் வேலை வாய்ப்புகள்(அவை எத்தனை?) வேண்டுமா?

இன்றைய நிலையில் இந்த மண்ணின் மக்கள் மேல் படர்ந்து நின்று அவர்களை எழ விடாமல் அழுத்திக் கொண்டு கட்டிதட்டிப் போனவை மூன்று.

1. அடிமை மனப்பான்மையை மக்கள் மனதில் புகுத்திப் பொருளியலிலிருந்து அடிமைப்பணி நோக்கி மக்களின் மனநிலையைத் திருப்பி வைத்துவிட்ட திராவிட இயக்கம்.


2. மார்க்சியத்தை ஏழைநாடுகளின் நலனுக்கு எதிராகவும் வல்லரசுச் சுரண்டலுக்கு ஏற்பவும் திரித்து இந்நாடுகளில் நடைபெறும் தொழில் முயற்சிகளைக் கருக்கலைத்து விட்டு வல்லரசுகள் நுழையும்போது கதிரவனை நோக்கிக் குலைக்கும் நாய்களைப் போல் வெற்றுக் கூச்சலிடும் பொதுமையினரின் போலி மார்க்சியம்.

3. தமிழக வரலாற்றையும் பழம் தொன்மங்களை(புராணங்களை)யும் தோண்டிப் புதைத்துத் தமிழனை வரலாறில்லாதவனாகச் செய்துவிட்ட கழக(சங்க) நூல் தொகுப்புகள்.

தமிழக மக்கள் மேல் கவிந்து பாறையாக இறுகிப் போன இம்மூன்று அடுக்குகளை உடைத்தெறிய என்னாலான முயற்சிகளைச் செய்து வருகிறேன். தொடர்பான என் எழுத்தாக்கங்கள் சிலவற்றை உங்களுக்கு அனுப்பியுள்ளேன்.

இன்றைய நிலையில் நாடார்கள் செய்யத்தக்கவை;

1. நாடார்களை மிகப் பிற்படுத்தப்பட்டனர்களாக அறிவிக்க வேண்டுமென்று பணந்திரட்டி நம்மை இழிவுபடுத்தும் கங்காராம் துரைராசு வகையறாக்களின் முயற்சியை முறியடிக்கும் வகையில் நாம் சலுகைகளால் உயரவில்லை; தன்முயற்சியால் தான் உயர்ந்தோம்; எனவே எங்களை முற்பட்ட வகுப்பாக அறிவிக்க வேண்டும் என்ற அரசுக்கு வேண்டுகோள் விடுப்பதன் மூலம் தமிழக மக்களுக்கு ஓர் அதிர்ச்சி மருத்துவம் செய்தல். இவ்வாறு செய்வதால் நமக்குப் பெரும் இழப்பு ஏதுவும் இல்லை. ஒதுக்கீட்டினால் கிடைக்கும் பயன்கள் மிகவும் சுருங்கிக் கொண்டு வருகின்றன. பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோருக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்பு என்ற ஆதாயத்துடன் பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் எனும் இரு வகைப்பாட்டினுள்ளும் அடங்கியுள்ள எண்ணற்ற சாதிப்பிரிவுகளும் உட்பிரிவுகளும் உடைந்து சிதறும் போக்கு உருவாகியுள்ளதால் முழுக் குமுகத்துக்கும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இழப்பு மிகப் பெரிது. அரசு வேலைவாய்ப்புகள் அருகத் தொடங்கியுள்ள இக்காலகட்டத்தில் ஒதுக்கீடு எனும் மாயமான் மாபெரும் குமுகச் சாபக்கேடு. அதைத் தெரிந்து தமிழக மக்கள் விடுபடுவதற்கு இத்தகைய ஒரு தீர்மானம் மிக உதவியாயிருக்கும்.

2. அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி வேண்டும் என்ற முழக்கத்துடன் நம் ஆற்றலுக்கேற்ற வகையில் எண்ணற்ற தொடக்கப் பள்ளிகளைத் தொடங்கி அவற்றுக்கு ஒப்புதலும் நல்கையும்(Grant) தருமாறு மக்களைத் திரட்டிப் போராடல். மிகப்பிற்பட்டோர் சலுகைக்குக் கைக்கூலியாகத் திரட்டப்பட்ட பணம் இதற்குச் செலவாகலாம்.

3. இது முதன்மையானதும் இன்றியமையாததுமாகும். உள்நாட்டுத் தொழில் வளர்ச்சியைத் தாக்கி வெளி மூலதனம் நுழைவதற்குக் காரணமாகவும் அரசியலாளர்கள், அதிகாரிகளின் அதிகார, பொருளியல், அட்டுழியங்களுக்கு மூலமாகவும் விளங்கும் வருமானவரியை எதிர்ப்பதும் தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் உரிமம், இசைவாணை, மூலப்பொருள் ஒதுக்கீடு, சுற்றுச்சுழல், மாசுத்தடுப்பு, சிறார் உழைப்புத்தடுப்பு என்பன போன்ற "உயர்ந்த" ஆனால் போலியான அரசின் உத்திகளை எதிர்த்துப் போராடுவது. இதில் நாடார்கள் தலைமைப் பங்காற்றும் பொருளியல் நிலைமையில் உள்ளனர். முக்குலத்தோரில் இதே நலன்களை உடையவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினர் உள்ளனர். தாழ்த்தப்பட்டோர், குறிப்பாக ஆற்றுப்படுகைப் பள்ளர்களும் அவ்வாறே. மேல் சாதிக்காரர்கள் ஆதரவும் கிடைக்கும். பூனைக்கு மணிகட்டுவோர் யாரென்பதே கேள்வி. அதனை நாம் செய்யலாம்.

4. வேளாண் விளைபொருள் விலை ஆணையத்தை ஒழிக்க, நெல், கோதுமை, வாணிகத்துக்கு வாணிக உரிம முறையை ஒழிக்க, ஆண்டுக்கு ஒன்றே கால் கோடி டன் உணவுப் பொருளை முடையிருப்பு என்ற பெயரில் மக்கள் பணத்திலிருந்து வாங்கி வைத்து அழிக்கும் நடுவணரசின் ″பதுக்கல் ஒழிப்பு″(!) நடவடிக்கையை ஒழிக்க, உணவுப் பொருள் நடமாட்டத்துக்குக் கடத்தல் என்று பெயரிட்டு உணவுப் பொருள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளோரை வேட்டையாடும் கயமையை எதிர்க்க ஆயத்தப்பட வேண்டியுள்ளது. (ஆனால் இது நாடார்களின் உடனடிச் சிக்கல்ல. அவர்களுக்கு வேளாண்மை முகாமைத் தொழிலல்ல. ஆனால் நாம் இதை முன்வைத்தாக வேண்டும்).

நமக்கிருந்த குமுக இழிவுக்கெதிராகப் போராடி வெற்றிமுகத்தை என்றோ கண்டுவிட்டோம். பொருளியல் ஒடுக்குமுறையை இனம்காணவும் அதற்காகப் போராடவும் தவறிவிட்டோம். அதுதான் நமக்கு மட்டுமல்ல முழுத் தமிழ்நாட்டுத் தேக்கத்துக்கும் மூலகாரணம். முன்னர் குமுக இழிவுக்கெதிராக போராட்டத்தில் நம் பொருளியல் வலிமை எவ்வாறு பின்னணியாக நின்றதோ அவ்வாறே தமிழகத்தின் பொருளியல் அடிமைத்தனத்துக்கு எதிரான போராட்டத்திலும் தமிழகத்தின் பொருளியல் வளர்ச்சியின் முன்னோடிகளாகிய நம் பங்கு, அதனைத் தொடங்கி வைக்கும் நம் பணி துவங்கட்டும்.

உங்கள் நூலிலிருந்து நீங்கள் ஆழமான பெரியார்ப் பற்றாளர் என்பது புரிகிறது. அத்துடன் ஒதுக்கீடு, சாதி ஓழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, தமிழ்த் தூய்மை ஆகியவற்றுக்குள்ள முதன்மையைப் பொருளியலுக்கு நீங்கள் வழங்காததும் தெரிகிறது. இருந்தாலும் நான் சொல்ல வேண்டியவற்றைச் சொல்லி விட்டேன், நீங்கள் வாழும் இடத்தின் சூழ்நிலை ஒருவேளை உங்களைச் செயலுக்குத் தூண்டும் என்ற நம்பிக்கையில்.

'சுயமரியாதை இயக்கத்துக்கு நாடார்கள் ஆற்றிய தொண்டு' நூல் பற்றி...2

பாண்டியனாரைப் பற்றிய சிறு குறிப்புகளை மகாசனம் இதழ்கள் சிலவற்றில் காண நேர்ந்தது. அவற்றிலிருந்து தொழில் வளர்ச்சி பற்றியும் வேளாண்மையில் அறிவியல் அணுகுமுறைகளின் தேவைப் பற்றியும் தரிசு நிலங்களை விளை நிலங்களாகவோ காடுகளாகவோ மேம்படுத்த வேண்டியது பற்றியும் தாம் சென்றவிடமெல்லாம் மக்களுக்கு (நாடார்களுக்கு) அறிவுரை கூறியிருப்பதை அறிய முடிந்தது. அவரது சட்டமன்ற உரைகளிலும் மேடைப் பேச்சுகளிலும் இதுபோன்ற பொருளியல் மேம்பாட்டுக் கருத்துகள் என்னென்ன இருந்தன என்று அறிய விரும்புகிறேன்.

பாண்டியனாரின் இன்னொரு சிறப்பு நாடார்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் மீது பார்ப்பனர், வெள்ளாளர், நாயக்கர், மறவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நிகழ்த்தும் ஒடுக்குமுறைகளுக்கெதிராக நாடார்கள்-தாழ்த்தப்பட்டோர் கூட்டணி ஒன்று அமைக்கும் முயற்சியே. இதில் அவர் கணிசமான வெற்றியைப் பெற்றிருந்தார் என்பது தங்கள் நூலிலிருந்து தெளிவாக விளங்குகிறது. நாடார்கள் நடத்திய பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடமளித்தல், கூட்டுணவு, (சம்பந்தி போசனம்) ஆகியவை, அத்துடன் பொதுக் குளங்கள், கிணறுகள், சுடுகாடு, அவற்றுகுரிய பாதைகள் ஆகியவற்றை அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் சட்டம் இயற்றுவதற்காகச் சட்டமன்றத்தினுள்ளும் வெளியிலும் அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள்.

இந்தப் பின்னணியில் சராசரிப் பொருளியல் வலிமை பெற்ற நாடார்களின் அடிப்படை மன உணர்வாகிய குமுக உரிமைகளைப் பெறுதல் பாண்டியனாரின் பிற நோக்கங்களைப் பின்னடையச் செய்தனவா என்ற கேள்வி எழுகிறது. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்ச்சிகள் குமுறிக் கொண்டிருந்த நிலையில் பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு மேல்சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான ஓர் அறைகூவலாகப்பட்டது. அத்துடன் நீதிக்கட்சியுடன் பாண்டியனாருக்கிருந்த நெருக்கமான உறவும் அவர்களுக்குப் பெரியாரின் தொடர்பை எளிதாக்கின. பெரியாருக்கு ஆதரவளித்தார்களா அல்லது பெரியாரைப் பயன்படுத்திக் கொண்டார்களா என்று இனம் பிரித்துக் காண முடியாமலிருந்தது.

தன்மான இயக்கத்துக்காகப் பெரியாரும் மற்றோரும் கலந்து கொண்ட கூட்டங்களில் பிற்படுத்தப்பட்டோர் உட்பட பிற்போக்கினர் ஏற்படுத்திய தடங்கல்களையும் தாக்குதல்களையும் மீதுற்று நிகழ்ச்சிகளை வெற்றி பெறச்செய்வதிலும் பெரியாரின் இயக்கம் தமிழ் மண்ணில் ஆழமாகவும் அகலமாகவும் வேர்கொள்வதிலும் நாடார்கள் பெருந்துணையாக இருந்திருக்கிறார்கள். இந்தப் பயனை எய்தத்தானோ என்னவோ பெரியார் பாண்டியனாருக்கு ஏறக்குறைய தனக்கிணையான ஓர் இடத்தை இயக்கத்தில் கொடுத்தார்.

ஆனால் பாண்டியனாரைப் பெரியார் பின்னாளில் புறக்கணித்தாரோ என்ற ஐயமேற்படுகிறது. பாண்டியனார் மாண்டபோது அவர் பற்றிய செய்திகளைத் திராவிட நாடு இதழில் படித்திருக்கிறேன். அப்போதுதான் சவுந்திரபாண்டியன் என்று ஒருவர் இருந்திருக்கிறார், அவர் திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்குப் அரும்பணியாற்றி இருக்கிறார்; சேலத்திலோ, வேறெங்கோ நடைபெற்ற ஒரு மாநாட்டின் ஒரு தீர்மானத்தால் என்று நினைவு - அவர் வெளியேறியிருக்கிறார் என்பனவெல்லாம் தெரியவந்தன.

அவற்றை உங்கள் நூல் தரும் தரவுகளுடன் நினைத்துப் பார்க்கையில், உலகில் இயக்கங்கள் மக்களின் மேலடுக்குகளிலிருந்து கீழடுக்குகள் நோக்கி நகரும் நிகழ்முறை விதிகளுடன் ஒப்பிட்டு நோக்கையில், தனிமனிதர்களான தலைவர்களுக்கும் அவர்களுக்குப் பின்னணியாக நிற்கும் மக்களுக்கும் உள்ள உறவுகளைக் குறித்த விதிகளைக் கையாண்டு பார்க்கையில் அன்று நிகழ்ந்த நிகழ்ச்சி பற்றிப் பல ஐயுறவுகள் எழுகின்றன.

தன்மான இயக்கத்தினுள் பெரும் முழக்கத்துடன் நாடார்களின் நுழைவும் நாடார் - தாழ்த்தப்பட்டோர் என்ற முழக்கத்துடன் நாடார்கள் என்ற வலிமையான பின்னணியுடன் நிற்கும் பாண்டியனாரால் தன் தலைமைக்கு அறைகூவல் வருமென்று பெரியார் கருதினாரா? பாண்டியனாரின் முகாமையை நீர்த்தப் போகச் செய்யத்தான் வெள்ளாளர்களை நாடினாரா என்ற கேள்விகளெல்லாம் எழுகின்றன.

பாண்டியனார் விலகிய பின்னும் நாடார்கள் பிடி தன்மான இயக்கத்தில் வலிமையாக இருந்ததா? அண்ணாத்துரையுடன் வெளியேறிய கும்பலில் நாடார் எதிர்ப்பினர் மிகுந்திருந்தனரோ? தி.மு.க.வின் ஐம்பெருந் தலைவர்களைப் பாருங்கள். அண்ணாத்துரை தவிர நெடுஞ்செழியன், அன்பழகன் இருவரும் சிவனிய வேளாளர்கள், (சிவனிய முதலியார்களும் வேளார்களும் ஒரே சாதியினர்.) மதியழகன் கவுண்டர் அவரும் கொங்கு நாட்டு வேளாளரே, சம்பத் கன்னட நாயக்கர். மற்றும் தி.மு.கழகத்தின் பிற முன்னணித் தலைவர்களில் ஆசைத்தம்பியைத் தவிர பிறரெல்லோரும் மேல் சாதியினரே. குமரி மாவட்டத்து மனோகரன் கூட அங்கு நாடார்களை இழிவாக நடத்தும் ஈழவச் சாதியைச் சேர்ந்தவரே.

தன்மான இயக்கத்தின் வளர்ச்சியில் பெரும்பங்கு கொண்ட நாடார்கள் மட்டுமல்ல மாநிலத்தின் தென்பகுதியைச் சேர்ந்த ஒருவர்கூட இந்த ஐம்பெருந்தலைவர்களில் இல்லை என்பதைக் கவனிக்க.

பெரியாருக்கும் மறைமலையடிகளுக்கும் சமரசம் ஏற்பட்ட நாளிலிருந்தே நாடார்களும் அவர்களைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்டோரும் இயக்கத்தினுள் நுழைந்து செல்வாக்குப் பெறுவதைத் தடுத்து நிறுத்தும் திட்டம் செயற்படத் தொடங்கிவிட்டது.

சாதி என்ற வகையில் அண்ணாத்துரையைப் பற்றியும் கருணாதியியைப் பற்றியும் ஒரு தவறான கருத்து நிலவுகிறது. அவர்கள் பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட சாதி அடுக்குகளில் ஒன்றைச் சார்ந்தவர்களென்பது அது. ஆனால் உண்மை அதுவல்ல. அவர்கள் பார்ப்பனர்களுக்கு அடுத்த சாதியினர். அதாவது பொட்டுக்கட்டும் சாதி எனப்படும் அக்குலப் பெண்டிருக்குக் கடவுளின் பெயரால் கோயிலில் தாலி கட்டுபவன் பார்ப்பனப் பூசாரி. கோயில் நிகழ்ச்சிகளில் இறைத் திருமேனியைத் தொடுவது போன்று அவனுக்கிருக்கும் உரிமைகள் எல்லாம் அவளுக்கும் உண்டு. அவள் சாகும்போது அவளுக்குக் கருமாதி செய்பவனும் அவனே. இந்த வகையில் அண்ணாத்துரையும் கருணாநிதியும் பார்ப்பனர்களுக்கு அடுத்த சாதிகள். ஏதோ காரணத்தால் சென்ற நூற்றாண்டிறுதியிலும் இந்நூற்றாண்டு தொடக்கத்திலும் இவ்விரு சாதியார்க்கும் இடையில் ஏதோ பூசல் ஏற்பட்டு கதைகளிலும் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் தேவதாசிப் பெண்களை பார்ப்பனர்கள் அளவுக்கு மீறி இழிவு படுத்துவதன் மூலம் அது வெளிப்பட்டது. அதே நேரத்தில் வசதியும் திறமையும் படைத்த தேவதாசிப் பெண்கள் மெல்ல மெல்லப் பார்ப்பனச் சாதியினரால் உட்செரிக்கப்பட்டனர். அடுத்த கட்டமாக அண்ணாத்துரையையும் கருணாநிதியையும் வளைத்துப் போட்டுக்கொண்டனர். இன்று கருணாநிதியின் குடும்பமும் இந்து கத்தூரிரங்கய்யங்கார் குடும்பமும் ஓசையின்றி மணவுறவினுள் இணைந்துகொண்டது தற்செயலானதல்ல.

கருணாநிதியின் சாதிக்கு மேளக்காரர்கள் என்றொரு பெயரிருப்பதால் தென்மாவட்டங்களில் நாதசுரம், தவில், இசைக்கும் நாவிதர்கள் மட்டுமல்ல, பெரும்பான்மையினரும் அவரை நாவிதர் என்றே கருதிக்கொண்டுள்ளனர். இவ்வாறு பார்ப்பனரில்லாதாரில் மிக உயர்ந்த சாதியினராகிய அவர் பிற்படுத்தப்பட்டவர் அல்லது தாழ்த்தப்பட்டவர் என்றொரு போலித் தோற்றத்தில் ஏறக்குறைய அறுபது ஆண்டுகள் அரசியல் செய்து விட்டார்.

நாடார் மகாசன சங்கத்தார் பாண்டியனாரைக் கைவிட்டுவிட்டுக் காமராசரைப் பற்றிக்கொண்டனர் என்று கூறியுள்ளீர்கள். ஒருவேளை திராவிட இயக்கம் பொருளியல் துறையில் எந்தக் கவனமும் செலுத்தாததும் பாண்டியனாரைக் கைகழுவிவிட்டதன் மூலம் நாடார்களைக் கைகழுவி விட்டதும் காரணமாயிருக்க வேண்டும். தங்கள் பொருளியல் குமுகியல் - நலன்களுக்கு அரசியலை விட்டு விலகி இருந்த பாண்டியனாரை விட அரசியல் செல்வாக்கில் உயர்ந்து வந்த காமராசர் உகந்தவர் என நாடார்களில் பெரும்பான்மையினர் கருதியிருக்க வேண்டும்.

பாண்டியனாரின் செல்வாக்கை உடைப்பதற்காகக் காமராசரைத் தூக்கிப்பிடித்தவர்கள் பேரவைக் கட்சியினர் மட்டமல்ல, பெரியாரும்தான். காமராசரைப் பச்சைத் தமிழர் என்று கூறித் தூக்கிப் பிடித்தது அவர் தானே!

தி.மு.க.வில் நாடார்களைப் புறந்தள்ள முக்குலத்தோருக்கு முதன்மை கொடுத்த பெருமை கருணாநிதியையே சாரும். தன்மான இயக்கத்தின் அரும்பணியினாலும் கல்வி, வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டாலும் பயன்பெற்றுத் தம் குமுகியல் உரிமைகளைப் பெறத் தாழ்த்தப்பட்ட மக்கள் தலைதூக்கியதன் எதிர்விளைவே முதுகுளத்தூர் கலவரம். இந்தக் கலவரத்தில் முன்னறிவிப்பு ஏற்கனவே முத்துராமலிங்கத் தேவரால் திராவிடர் கழகத்தின் முன் அறைகூவலாக வைக்கப்பட்டுவிட்டது. விபூதி வீரமுத்து, அணுகுண்டு அய்யாவு போன்ற பிற்போக்கர்களின் தலைமையில் இந்த அறைகூவலை அவர் வைத்தார். அதனை இயக்கத்தின் தலைமையில் பெரியார் எதிர்கொண்டிருந்திருப்பாரேல் பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோர் கூட்டு வலுப்பட்டு சாதிவேறுபாடுகளை மறந்து அம்மக்கள் நெருங்கிவர வாய்ப்பிருந்திருக்கும். பன்னூறாண்டுக் காலமாக ஆட்சியாளர்களுக்கும் மேற்சாதியினருக்கும் அடியாட்களாகச் செயற்பட்டு பிற்படுத்தப்பட்டோரையும் தாழ்த்தப்பட்டோரையும் ஒடுக்கி வந்த முக்குலத்தோரின் ஆதிக்க மனப்பான்மை சிதைந்திருக்கும். ஆனால் பெரியார் அதைச் செய்யாமல் நழுவிவிட்டார். எனவே முதுகுளத்தூர் கலவரத்தின்போது தாழ்த்தப்பட்டோர் தனித்துவிடப்பட்டனர். அரசு தலையிட வேண்டியதாயிற்று. அப்போது முதல்வராயிருந்த நாடாராகிய காமராசர் கலவரத்தை நடத்திய மறவர்களைக் கடுமையாக ஒடுக்க வேண்டியதாயிற்று. இந்நிகழ்ச்சியைப் பயன்படுத்தி, மறவர்களைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டார் கருணாநிதி. இது அவரது அரசியலுக்கும் உயர்சாதி மனப்பான்மைக்கும் பொருத்தமாக இருந்தது.

திராவிடர் கழகத்திலும் அதன் மூலம் தி.மு.க.விலும் இடம்பெற்ற அன்பில் தர்மலிங்கம், மன்னை நாராயணசாமி ஆகியோர் பார்ப்பனர் எதிர்ப்பு என்ற நிலையில் பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோர் நலன்களுடன் தம்மை இணைத்துக் கொண்டார்களாயிலும் அன்றைய குமுகியல் சூழலில் மறவர்களின் விழுக்காடு இயக்கத்தினுள் குறைவாகத்தான் இருக்க முடியும். ஆனால் தி.மு.க.வில் அவர்களின் நுழைவு பெருமளவில் இருந்ததன் காரணம் கருணாநிதி மறைமுகமாக பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோர் நலனுக்கெதிராக முக்குலத்தோரைத் தாங்கிப் பிடித்ததே.

இனி, பாண்டியனாரைப் பற்றிய சில ஐயங்கள்:

சிந்தனையிலும் செயலிலும் புரட்சிகரமானவராகவும் வீறும் எடுப்பும் மிக்கவராகவும் வீரத்திலும் ஈகத்திலும் ஈடிணைற்றவராகவும் இருந்து அவர் அரசியலில் தொட்டாற்சுருங்கியாக இருந்தாரா? அதனால்தான் ஒரேவொரு உறுப்பினர் நம்பிக்கையில்லை என்று கூறியவுடன் மாவட்டக் கழகப் பதவியைத் துறந்தாரா? அவருடைய இத்தன்மையைப் புரிந்துகொண்டு அவரை வெளியேற்றுவதற்கென்றே சேலம் மாநாட்டு அல்லது இன்னொரு மாநாட்டுத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதா?

திராவிடர் கழகம் என்ற பெயரை எதிர்த்த கி.ஆ.பெ. முதலியோரோடு சேர்ந்து ஒரு தனிக்கட்சி அன்று தொடங்கும் இன்றியமையாமையைப் புரிந்துகொண்டு வரலாற்றுத் திருப்புமுனையான அக்கட்டத்தில் தலைமையேற்றுப் பாண்டியனார் செயற்பட்டிருப்பாரானால் தமிழக வரலாறு இன்று உயர்ந்திருக்கும். ஆனால், ′′ஆனால்′′களை எண்ணி ஏங்கி என்ன பயன்?

இவ்வாறு நடந்தவற்றையெல்லாம் அலசினால் பெரியாரைப் பற்றி நமக்குக் கிடைக்கும் முடிவுகள்:

1. அவர் துடிப்பான ஒரு மனிதர்.


2. தன் வாழ்வில் ஏற்பட்ட ஓர் நிகழ்ச்சியால் அல்லது நிகழ்ச்சிகளால் பார்ப்பனர்களை ஒழித்தே தீர்வது என்று புறப்பட்டிருக்கிறார்.

3. அவர் எதிர்பாராத ஆதரவும் அத்துடன் கொடும் எதிர்ப்பும் கிடைத்திருக்கிறது.

4. நாடார் என்ற பணம் படைத்த மக்களின் பேராதரவு அவருக்குப் பெரும் செல்வமாகக் கிடைத்துத் தொடக்கவிசையைக் கொடுத்து அவரது அரசியல் வாழ்வை உறுதிப்படுத்தியது.

5. குறிக்கோள் பரவலாகி வெள்ளாளர்களுடன் மோதல் உருவாகி அவர்கள் வெளியேறிவிட்ட சூழ்நிலையில் இயக்கத்தில் பெருகிவந்த நாடார்களின் செல்வாக்கும் அதன் தொடர்ச்சியும் காரணமான பாண்டியனாரின் செல்வாக்கும் அவரை அச்சுறுத்த அவர் முதலில் மறைமலையடிகளிடமும் பின்னர்? வெள்ளாளர்களாகிய மடத்தடிகளிடமும் இணக்கம் கொண்டார் ( பார்க்க: திராவிடர் இயக்கமும் வெள்ளாளரும்).

6. பேச்சிலும் கருத்துகளிலும் வீரமும் அஞ்சாமையும் இருந்தாலும் பெரும் மோதல்கள், அரசு ஒடுக்குமுறைகள் (சிறைக்காவல்கள் அத்தகையவை அல்ல) நெருங்கும்போது பின்வாங்கிவிடும் கோழைத்தனம் இருந்தது.

7. எதிரிகளிடம் பணம் வாங்கும் பழக்கம் அவருக்கு இருந்தது. வாசனிடம் அவர் பணம் வாங்கியதாக வீரமணியே அறிக்கை விட்டிருப்பதைப் பார்க்க.

8. அவர் முன்வைத்த குறிக்கோள்கள் பல தரப்பார் அவருக்குப் பணம் தர முன்வரும் வாய்ப்பிருந்தது.

(அ) பார்ப்பனர்

(ஆ) மார்வாடிகள்

(இ) மடத்தலைவர்கள்

(ஈ) தமிழகத்திலுள்ள பிறமொழி பேசும் மக்கள், குறிப்பாக தெலுங்கர்கள்

(உ) அயல் மதத்தினர்

திராவிட இயக்கத்தின் முன்னோடிகளான தமிழக வரலாற்றாசிரியர்களான தமிழ்ப் பார்ப்பனர்கள் தமிழகத்தில் அவர்களைவிடச் செல்வாக்குடனிருந்த தெலுங்கு, மராட்டிப் பார்ப்பனர்களுக்கெதிராகவே செயற்பட்டனர். பெரியாரின் ′திராவிட′ அரசியல் பார்ப்பனரிடையிலிருந்த இந்தப் பிளவை மழுங்கச் செய்து அவர்களை வலிமையாக ஒற்றுமைப்படுத்தி தமிழக நலன்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டது; தமிழர்கள் நில உணர்விழந்து மயங்கவைப்பதில் வெற்றிபெற்றுவிட்டது. குணாவின் திராவிடத்தால் வீழ்ந்தோம் நூலில் அவர் வைத்துள்ள குற்றச்சாட்டுகளை ஒதுக்கிவிட முடியாது.

பணம் வாங்கிப் பழக்கமுள்ள பெரியாரிடம் இத்தரப்பினரெல்லாம் பணத்தை அள்ளிக் குவித்தனால்தான் ஒரு வாழ்நாளில் அவரால் 125 கோடி உரூபாய்கள்ச் சேர்க்க முடிந்தது.

(தொடரும்)