20.4.07

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 9. தொழில் நுட்பம்

மேற்சாதியினர் தொழில்களைச் செய்வதிலிருந்து விடுபட்டவர்கள். இறக்குமதியான இன்றைய தொழில்நுட்பம் தவிர அவர்களுக்கென்று சொந்தத் தொழில் நுட்பம் எதுவும் கிடையாது. ஆனால் தரத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் கீழ்ச்சாதியினர் அனைவருக்கும் ஏதோவொரு தொழில் நுட்பத்தில் தேர்ச்சி உண்டு.

அறிவியல் பற்றிய ஆய்வை மேற்கொள்ளும் போது கூடவே தொழில்நுட்பம் பற்றியும் கூறப்பட்டுவிட்டது. இருந்தாலும் மேற்சாதி கீழ்ச்சாதிகளிடையில் தொழில்நுட்பத்தைப் பொறுத்த அளவில் உள்ள வேறுபாடுகளை இன்னொரு முறை சொல்வது பயனுள்ளது எனக் கருதுவதால் கூறியது கூறல் என்ற குறை ஏற்படாது எனக் கருதுகிறோம்.

இற்றை நாள் மேலைநாட்டுத் தொழில் நுட்பங்களைப் பயின்று அதன் மூலம் உயர்பதவி பெற்றிருப்போர் அறிந்த ஏட்டுத் தொழில்நுட்பம் தவிர மேற்சாதியினரிடையில் தொழில்நுட்பம் ஏதும் இல்லை. உண்மையில் அவர்கள் உழைப்பையும் தொழிலையும் வெறுப்பவர்கள். தொழில் செய்வோரைப் பழித்து ஒதுக்குபவர்கள். அதனால் இவர்கள் தொழில்நுட்பங்களைக் கல்லூரிகளில் கற்றாலும் அவற்றைத் தாமே கையாண்டு பார்ப்பதில்லை. மேற்பார்வை செய்தல், ஏவுதல் என்ற வகையில் பழைய மேட்டுக்குடி மனப்பான்மையிலேயே செயற்படுகின்றனர். அதனால் அவர்கள் அறிவியர்களாகவோ தொழில்நுட்பர்களாகவோ விளங்குவதில்லை. வெறும் அலுவலர்கள் அல்லது அதிகாரிகள் என்ற தரத்திலேயே செயற்படுகின்றனர். அதையும் மீறி எவராவது களத்தில் இறங்கி ஆய்வுப் பணி மேற்கொண்டாலோ நம் நாட்டு ஒட்டுண்ணி அதிகார வகுப்பும் அரசியலாளரும் அவர்களை முடக்கி இருந்த இடம் தெரியாமல் செய்துவிடுவர். எனவே மீண்டும் மீண்டும் பணக்கார நாடுகளின் தொழில் நுட்ப இறக்குமதியும் அந்த இறக்குமதிக்கு ஏற்பாடு செய்யும் ஆட்சியாளர்களுக்குத் தரகும் தொடர்கதைகளாகின்றன.

இங்குள்ள சிலர் பன்னாட்டு மட்டத்தில் புகழ் பெற்ற ஆய்வாளர்களாக விருதுகளைப் பெறுகின்றனர். இவ்விருதுகள் வெளிநாட்டு அரசுகள் அல்லது அமைப்புகளாலேயே வழங்கப்படுகின்றன. இவர்களின் அருஞ்செயல்களும் ஆய்வுகளும் உள்நாட்டுக்குப் பயன்படுவதை விட இவர்களுக்கு விருது வழங்கிப் பெருமைப்படுத்தும் நாடுகளுக்கே பயன்படுகின்றன.

இவை தவிர இந்திய அரசும் அவ்வப்போது விருதுகளை வழங்குகிறது. ஆனால் இந்த விருது வழங்கல் வெறும் கண்துடைப்பே. அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கும் புதுப்புனைவுகளுக்கும் ஆட்சியாளர்கள் என்றுமே மதிப்பளிப்பதில்லை. அதனால் மிகப்பெரும்பாலோர் வெளிநாடுகளுக்கு ஓடி அந்நாடுகளுக்கே பணியாற்றுகின்றனர். இவ்வறிஞர்களின் கண்டுபிடிப்புகளும் புதுப்புனைவுகளும் அவ்வெளிநாட்டினர்க்கு ஆதாயத்தையும் அவற்றை இறக்குமதி செய்யும் நம் ஆட்சியாளர்களுக்குத் தரகையும் பெற்றுத் தருகின்றன.

அதே நேரத்தில் கீழ்ச்சாதியினரிடையில் ஒரு குமுகத்துக்குத் தேவையான தொழில் நுட்பங்கள் அனைத்தும் உள்ளன. சாதிக்குச் சாதி இத்தொழில்நுட்பத்தின் படித்தரம் மாறுபடலாம். ஆனால் அனைவரிடமும் ஏதோவொரு வகைத் தொழில் நுட்பம் உண்டு. மேலை நாட்டுத் தொழில்நுட்பம் மேலோங்கிவிட்டது போன்ற ஒரு பொய்த் தோற்றம் இருந்தாலும் கூட இன்றும் நம் பழைய தொழில்நுட்பம் பரவலாக செயற்பட்டே வருகிறது. மேலையர் தம் தொழில்நுட்பங்கள் பலவற்றின், குறிப்பாக உணவு விளைப்புத் துறையில், எதிர் விளைவுகளை எதிர்கொள்ள மாட்டாமல் பன்னூறாண்டு காலம் “வெற்றிகரமாகச் செயற்பட்ட” மரபு முறைகளை நோக்கி வரத் தொடங்கியிருக்கிறார்கள். வழக்கம் போல் நம் நாட்டு அறிவர்களும் அவர்களைப் “போலச் செய்வதற்கு”க் காத்திருக்கிறார்கள். முன்பே கூறியது போல் மேலையர்களால் இன்னும் சரிவரப் புரிந்து கொள்ள முடியாத பல நுட்பங்கள் நம்மிடம் நிலவுகின்றன. அவற்றின் அடிப்படைக் கோட்பாடுகளை நாமும் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை. அவற்றை எவ்வளவு விரைவில் நாம் புரிந்து கொள்கிறோமோ, அவ்வளவு விரைவில் நாம் மேலையர்களை முந்திச் செல்லும் வாய்ப்பு உள்ளது.

இன்றைய மேலைத் தொழில்நுட்பம் காட்டியுள்ள வழிகாட்டலின் உதவியுடன் நம் மரபு முறைகளை மக்களின் செயற்பாடுகளிலிருந்தும் கிடைக்கும் நூல்களிலிருந்தும் திரட்டி நம்பிக்கையுடன் ஆய்வுகளைச் செய்வதன் மூலம் இந்த வாய்ப்பை மெய்ம்மையாக்கிக் காட்டலாம்.

0 மறுமொழிகள்: