24.4.07

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 15. இலக்கியம்

மேற்சாதியினர் தமிழில் மூவகை இலக்கியங்களை விரும்பிப் போற்றுகின்றனர். சங்க இலக்கியம் போன்ற தேசியத் தன்மை கொண்ட இலக்கியங்கள், இராமாயணம் போன்ற தரகுத் தன்மை கொண்ட இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் ஆகியவை அவை. இவை அனைத்தும் எழுதப்பட்ட இலக்கியங்கள். இவற்றைப் பற்றிப் பேசுவதும் எழுதுவதும் பட்டிமன்றங்கள் நடத்துவதுமாக இருப்பார்கள் அவர்கள். அதே வேளையில் கீழ்ச்சாதியினர் வாய்மொழியாக எண்ணற்ற இலக்கிய வடிவங்களைக் காலங்காலமாகப் பேணி வருகின்றனர். இவ்வாய்மொழி இலக்கியங்கள் அனைத்தையும் திரட்ட முடியுமாயின் அவற்றின் அளவு மேற்சாதியினரின் இலக்கியங்களைப் போல் பல நூறு மடங்குகள் தேறும்.

மேலே கூறிய இலக்கியங்கள் தமிழ் இலக்கியங்கள் மட்டுமே. ஆனால் தமிழகத்தில் பிறந்த, தமிழ்நாடு சார்ந்த இலக்கியங்களை விட மேற்சாதியினர் சங்கத இலக்கியங்களையே விரும்பிக் கற்பர் அல்லது கற்றது போல் காட்டிக்கொள்வர். அவற்றையே போற்றிப் புகழ்வர். பகவத் கீதையில் இல்லாதது எதுவும் இல்லை என்பர். இயன்ற போதெல்லாம் அதிலிருந்து மேற்கோள் காட்டுவர். அடுத்துத் தமிழ் இலக்கியம் என்று வந்தால் கம்பராமாயணமே தமிழிலுள்ள மிகச் சிறந்த இலக்கியம் என்று அதற்கு இல்லாத பெருமையெல்லாம் சேர்ப்பர். கம்பனுக்கு அடுத்த புலவனாகப் பாரதியைப் போற்றுவர். அரசியல் கட்சி சார்பில் கம்பனையும் பாரதியையும் வானளாவப் புகழ்வதிலும் உலகமெலாம் அவர்கள் புகழைப் பரப்புவதிலும் பொதுமைக் கட்சியினரை மிஞ்சியவர் யாரும் கிடையாது. அதிலும் சீவானந்தம் போன்ற தலைவர்களுக்கு எல்லாம் இன்னும் கொஞ்சம் வாய்ப்புக் கிடைத்திருந்தால் பொதுமைக் குமுகம் பற்றிய தன் படிமத்தை மார்க்சு கம்பனைப் படித்தே உருவாக்கினார் என்று கூறியிருப்பார். நல்ல வேளை மார்க்சு பிழைத்தார். இதற்குக் காரணம் கம்பன் கங்கைக் கரையினனான இராமனைப் பாடினான் என்பதும் பாரதி தில்லியின் தலைமையைக் கொண்ட இந்திய விடுதலைப் போராட்டத்தைப் போற்றினான் என்பதுமே. அரசியல் விடுதலைப் போரில் இந்தியர் வெற்றி பெற்றுவிட்டனர் என்பதும் இனிமேல் விடுதலை பெற்ற இந்தியா சோவியத்தை விட்டு அகலக்கூடாது என்பதுமே அவர்களது அரசியல் நிலைப்பாடு.

கம்பன் மாலியக் காப்பியமான இராமாயணத்தைப் பாடினான். அவனுக்கு முன்பு வாழ்ந்த சிவனியக் குரவர்களோ இராமனின் எதிரியாகிய இராவணனுக்கு அருள் செய்தான் எனச் சிவனைப் போற்றுகின்றனர். இது சமயப் போட்டியாக வெளிப்பட்டாலும் இதில் தேசிய உணர்வுகளுக்கும் தரகு உணர்வுகளுக்கும் இடையிலுள்ள மோதல் வெளிப்படுகிறது.

இந்த நூற்றாண்டில் தமிழ்த் தேசிய உணர்வை ஊட்டிய மேற்சாதியினர் கழக இலக்கியங்களையும் ஐம்பெரும் காப்பியங்களையும், குறிப்பாகச் சிலப்பதிகாரத்தையும் திருக்குறளையும் சிவனிய இலக்கியங்களையும் பாரதிதாசன் எனப்படும் கனகசுப்புரத்தினத்தையும் போற்றினார். பகுத்தறிவாளர்கள் சிவனிய இலக்கியங்களுக்கு மதிப்பளிக்கவில்லை. சமய இலக்கியங்களைக் கொண்டிருப்பதால் தமிழைக் “காட்டு விலங்காண்டி மொழி” என்று கூறக்கூடப் பெரியார் தயங்கவில்லை. ஆனால் குன்றக்குடி அடிகளார் போன்ற சமயத் தலைவர்களைத் தன் மேடையிலேற்றுவதற்கும் அவர் தயங்கவில்லை. இவ்வாறு திரிபடைந்த ஒரு தேசிய உணர்வுக்கும் பகுத்தறிவுக்கும் இடையில் அவர் தடுமாறினார்.

மொழி பற்றிக் குறிப்பிடும் போது வட இந்தியா வெளி நாட்டாரின் ஆதிக்கத்தில் இருந்த காலத்தில் சங்கதத்தில் இலக்கியங்கள் உருவாயின என்று கூறப்பட்டது. அச்சூழ்நிலையில் அவ்விலக்கியங்களை உருவாக்கியோர், குறிப்பாகச் இராமாயணத்தை எழுதிய வான்மீகர் வெளி நாட்டாரை விடத் தென்னாட்டினரையே எதிரிகளாகக் கருதினார் என்று தெரிகிறது. புத்த சாதகக் கதைகளில் ஒன்றான தசரத சாதகம் என்பதில் இராமன் தன் தங்கையான சீதையைத் திருமணம் புரிவதற்கு முன்பே அவளுடன் காட்டுக்குச் சென்று திரும்பிவிட்டதாகக் கூறுவதுடன் அதில் இராவணனைப் பற்றியோ சீதை சிறைப்படுத்தப்பட்டது பற்றியோ குறிப்பேதுமில்லை. அதுமட்டுமல்ல இராமனின் தலைநகரம் இன்று சமய-அரசியல் போட்டிகளின் நிலைக்களனாக விளங்கும் அயோத்தியே அல்ல; வாரணாசி எனப்படும் காசி தான். ஆனால் வான்மீகமோ இந்தியாவின் தென்கோடி கடலுக்கு அப்பால் இருந்தவனான இராவணன் என்பவனைக் காட்டி அவனை இராமன் தோற்கடித்ததாகக் கூறுகிறது. அவனையும் அவன் சுற்றத்தாரையும் பெயரிலும் பண்பிலும் இழித்துக் கூறுகிறது. கடலையே அறியாத இராமாயண ஆசிரியர், ஆற்றைப் படகில் கடக்கும் இராமன் கடலைக் கற்களைப் போட்டு அதன் மீது நடந்து கடந்தான் என்கிறார். இவற்றிலிருந்து கங்கைக் கரைக்கும் காவிரி, கோதாவரி, கிருட்டினை, பொருனைக் கரைகளுக்கும் இருந்த பகைமை வெளிப்படுகிறது. இதன் வெளிப்பாடு அன்றிலிருந்து இன்று வரை இலக்கியத்திலும் மொழியிலும் பண்பாட்டிலும் அரசியலிலும் பொருளியலிலும் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. கடல் வாணிகத்திலிருந்து தோன்றிய தென்னிந்தியப் பண்பாட்டுக்கும் வேளாண்மையிலிருந்து தோன்றிய வட இந்தியப் பண்பாட்டுக்கும் இடையிலான முரண்பாடு வேறெரல்லா முரண்பாடுகளையும் விழுங்கி நிற்கிறது.

எழுத்திலிருக்கும் இந்த இலக்கியங்களுக்குப் புறம்பான ஓர் இலக்கிய வகை நாட்டுப்புற மக்களின் எழுதப்படாத இலக்கியங்களாகும். பழமொழிகள், விடுகதைகள், சிறுகதைகள், குழந்தைக் கதைகள், புதிர்கள், ஏசல்கள், தாலாட்டுகள், ஒப்பாரிகள், வாழ்த்துகள், ஊசல்கள், அம்மானைகள், வள்ளைப் பாட்டுகள், கும்மிகள், கதைப்பாடல்கள் என்று எண்ணற்ற வகையினவாக இவ்விலக்கியங்கள் திகழ்கின்றன.

சங்கத மொழியில் பஞ்சதந்திரக் கதைகள் போன்ற கதைத் தொகுதிகளும் இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில் காணப்படும் துணைக்கதைகளும் போன்று தமிழில் மக்கள் கதைகளின் தொகுப்பு அருகியே காணப்படுகிறது. தொகுத்தோர் பற்றி முன்பு குறிப்பிடப்பட்ட சூழ்நிலையே இதற்குக் காரணமாக இருக்க வேண்டும். வெள்ளையர் சிலர் அரும்பாடுபட்டுச் சேர்த்த இத்தகைய இலக்கியங்களில் பலவற்றைப் பின்னர் பதிப்பிக்கும் பொறுப்பேற்ற தமிழ் “அறிஞர்” சிலர் அழித்த கொடுமையும் இங்கு உண்டு. இன்று ஒருசில வெளியீடுகள் வந்திருந்தாலும் அவற்றிலும் வெளியிடுவோரின் “திருவிளையாடல்கள்” உண்டு. இத்தகைய நூற்களை வெளியிடும் போது நியூ செஞ்சுரி புத்தக நிலையம் போன்ற “முற்போக்கு”ப் பதிப்பாளர்கள் அவற்றில் தமது கருத்துக்குப் புறம்பானவற்றைக் கழித்துக்கொண்டே வெளியிடுகின்றனர்.

புலவர்களைப் போலவே உழைக்கும் மக்களும் தமக்கு ஏற்படும் அனைத்து வகை உணர்ச்சிகளையும் வெளியிட்டு இலக்கியங்களைப் படைக்க வல்லவர்கள். வெள்ளையராட்சியிலும் அதற்கு முன்னரும் பின்னரும் தம் மீது தொடுக்கப்பட்ட கொடுமைகளையும் கூடப் பாடல்களாக்கிப் பாடும் திறம் படைத்தவர்கள் அவர்கள். அவர்களுடைய பாடல்களிலிருந்து இறுத்தெடுக்கப்பட்டவையே இலக்கணங்களும் அவற்றுக்குட்பட்ட செய்யுள்கள் அனைத்தும். எனவே மரபுச் செய்யுள்களுக்கும் மக்கள் பாடல்களுக்கும் ஒரு தொடர்பு என்றும் உண்டு.

மரபுச் செய்யுள்கள் மேற்சாதியினரிடம் அல்லது பார்ப்பனியம் எனப்படும் வெள்ளாளக்கட்டு மேற்கொண்ட கீழ்ச்சாதியினரிடம் சிக்கும்போது இறுக்கம் பெற்று நின்று விடுகின்றன. மக்களைத் தட்டியெழுப்ப மக்களை நோக்கி அல்லது பலர் கூடிப்பாட எழுதப்படும்போது பாடல்கள் நெகிழ்ச்சி பெறுகின்றன. உணர்ச்சிக்கேற்ற இலக்கண வடிவத்தை இயல்பாகவே பெற்று மரபுச் செய்யுள்களின் தன்மையும் பெறுகின்றன. பாரதியார், கனகசுப்புரத்தினம் ஆகியோர் பாடல்கள் இத்தகையவே. இறுக்கம் பெற்ற மரபுப் பாடல்களுக்கு எதிராக முன் வைக்கப்பட்ட (புதுக் கவிதைகள்) மரபுக் கவிதைகளைப் போன்றே தனிப்பட்டவர்களால் அல்லது படித்துச் செருக்கேறியவர்களால் அப்படிப்பட்டவர்களுக்காகச் செய்யப்பட்டவையே. அப்பாடல் நூல்களைக் கையில் வைத்திருப்பதையே பெருமை என்று நம் நாட்டு “முற்போக்காளர்கள்” ஒரு காலத்தில் கருதினர். அவர்களுக்கு அத்தகைய உணர்வூட்டி ஆட்கொண்ட வைரமுத்துவும் காமராசனும் இன்று இருக்கும் இடங்களைப் பார்த்து இவர்கள் தலைகுனிந்து திரிகிறார்கள். அத்துடன் ஒரு முகாமையான செய்தியையும் தெரிந்துக் கொள்வோம். கழக காலத்துப் பாடல்களாக நமக்குக் கிடைத்திருப்பவற்றில் பெரும்பாலானவை இலக்கண அமைப்பில் இன்றைய “புது”ப் பாடல்களோடு ஏறக்குறைய ஒத்தவையே.

நம் நாட்டில் உண்மையான முற்போக்கு எழுத்தாளர்களுக்குப் பெரும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் அத்தகைய எழுத்தாளர்கள் இருந்தாலும் அவர்களை ஏற்றுக்கொள்ளும் திறனாய்வாளர்களும் பதிப்பாளர்களும் இல்லை. திராவிட எழுச்சிக் காலத்தில் அவ்வியக்கத்தில் தோன்றிய தில்லை வில்லாளன், வாணன், இராதாமணாளன் போன்றோரின் எழுத்துகளின் அளவு எழுதத்தக்க எழுத்தாளர்களைக் கூட இங்குள்ள பொதுமை இயக்கத்தால் பெற முடியவில்லை. பொன்னீலன் போன்றோர் சில நல்ல படைப்புகளைத் தந்திருந்தாலும் அவ்வியக்கத்தின் பார்ப்பனியப் போக்கால் அவர்களால் ஓரளவுக்கு மேல் நடப்பிய இலக்கியத்தை (Realist Literature) கொண்டு செல்ல முடியவில்லை. திரிபுற்ற பாலுணர்வுகளைக் கருப்பொருளாக்கி எழுதிய செயகாந்தனைப் பிடித்துக்கொண்டு ஒரு காலத்தில் அழுதார்கள். இப்போது திராவிட இயக்கத்துக்கு எதிராகவும் பார்ப்பனியத்துக்கு முட்டுக் கொடுக்கவும் தோன்றிய “எழுத்து” சி.சு.செல்லப்பாவைக் கட்டிக்கொண்டு அழுகின்றனர் இன்னொரு பிரிவினர். அவர்கள் தம் பாவலர் என்று பறைசாற்றிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தினால் இவர்களின் இயக்கத்தை விட உண்மையில் பயனடைந்தவர் ம.கோ.இராமச்சந்திரனே. இறுதியில் காலங்கடந்து போன இந்தியத் தேசியப் போராட்டத்தின் கலம்பகப் புலவர் பாரதியும் சாதியப் புலவன் கம்பனுமே இவர்களுக்குப் புகலிடம். இலக்கியங்களின் குமுகவியல் திறனாய்வு என்ற பெயரில் எழுதுவோர் யாரும் திராவிட இயக்கத்தால் உருவாக்கப்பட்ட இலக்கியங்களைத் தொடாமல் விட்டுச் செல்வதில் குறியாயிருக்கின்றனர். இது நம் நாட்டுப் பொதுமை இயக்கத்தின் காட்டிக் கொடுக்கும் தன்மையையும் திராவிட இயக்கத்தினர் தாம் முன்பு படைத்த இலக்கியங்களைக் கண்டே நடுக்குறும் அளவுக்கு இழிந்துவிட்டதையும் சுட்டுகிறது. இவ்வாறு எத்திசையிலும் வரண்டு கிடக்கும் இற்றைத் தமிழிலக்கிய உலகுக்கு ஆக்க முறையில் எந்த இலக்கியத்தையும் படைக்க இயலாத கூட்டங்கள் கலை இலக்கியத்தின் பெயரால் என்ன செய்கிறார்களென்று தெரியவில்லை.

இன்றுவரை மேலை உலக இலக்கிய வளர்ச்சியின் தாக்கத்தால் மட்டும் உருவாகியிருக்கும் நம் நாட்டு இன்றைய இலக்கியத்துக்குப் புத்துயிர் ஊட்டுவது எவ்வாறு? இங்கும் நம் நாட்டுப்புற மக்களின் இலக்கியங்கள் தாம் கைகொடுக்க முடியும். இதற்காக நாட்டுப்புற இலக்கியங்களைத் திரட்டி அவற்றின் பல்வேறு வடிவங்களையும் உத்திகளையும் பிரித்துத் தொகுத்து அவற்றிலிருந்த புதிய இலக்கியங்களை, இலக்கிய வடிவங்களை உத்திகளை உருவாக்க வேண்டும். வடிவமும் உத்தியும் இருந்தால் மட்டும் போதாது. இலக்கியக் கரு எங்கிருந்து உருவாகும்? தேங்கி, முடங்கிப் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் இன்றைய குமுகத்திலிருந்து எழுச்சியான புரட்சிகர இலக்கியங்கள் எப்படி எழ முடியும்?

இன்று கீழ்த்தர(ஆபாச) இலக்கியங்களே உருவாகின்றன என்று கூறி அதனை எதிர்த்துக் குரல் எழுப்புவோர் ஏராளம். ஆபாச இலக்கியங்களுக்கு மாற்றாக இவர்கள் புரட்சிகர இலக்கியங்களைப் படைக்கிறார்களா என்றால் இல்லை. இலக்கியம் என்பது குமுகத்தின் எதிரொளிப்பாகத்தான் இருக்க முடியும். இன்றைக் குமுகத்தில் நிலவும் குழப்ப நிலையைத் தான் இன்றைய இலக்கியங்களும் திரைப்படங்களும் எதிரொளிக்கின்றன. பொய்ம்மையும் காட்டிக்கொடுத்தலும் கூட்டிக் கொடுத்தலும் கோலோச்சும் குமுகத்தில் அவற்றுக்குச் சரியான எதிர் இயக்கம் உருவாகாத நிலையில் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? நாட்டுப்புற மக்கள் திரைப் படங்களில் காட்டப்படும் ஒழுக்கக் கேடுகளையோ இருபொருட் பேச்சுகளையோ பாடல்களையோ அறியாதவர்களில்லை. எனவே அவற்றால் அவர்கள் ஒன்றும் கெட்டுப்போகப் போவதில்லை. ஆனால் நகர்ப்புறங்கள் பேணிவந்த போலி ஒழுக்கத்தின் பொய்ம்மைகள் அம்பலமாவது பற்றியே இவர்களுக்கு ஆத்திரம். வீட்டினுள் அடைத்து வைத்திருந்த பெண்ணைப் பணத் தேவையினால் கல்வி கற்பித்து வேலைக்கு அனுப்ப வேண்டியிருக்கிறது. அதனால் முன்பிருந்ததற்கு மாறான சூழ்நிலையில் புதுவகை உறவுகளுக்கு அவள் ஆளாக வேண்டியுள்ளது. இவற்றையே கீழ்த்தரமானவை என்று கூறப்படும் இன்றைய கதைகளும் திரைப்படங்களும் காட்டுகின்றன. இந்தக் குமுக மெய்ம்மையை மாற்றாத வரை, மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாத வரை இலக்கியங்களில் இவற்றின் எதிரொலிப்புகள் இருந்துகொண்டே இருக்கும். பொருளியலில் மேம்பாடடைந்த பெண் குமுக நிலையிலும் மேம்பாடடைய வேண்டும். வேலைவாய்ப்பு ஒரு சலுகையாயிருப்பது உரிமையாகும் நிலை ஏற்பட வேண்டும். அதற்கு நாட்டின் பொதுப் பொருளியல் உயர வேண்டும். அதற்கு ஊற்றுக் கண்ணான நாட்டுப்புறங்கள் வளம் பெற வேண்டும். அதற்கான முயற்சிகளிலும் போராட்டங்களிலும் இருந்துதான் புரட்சிகர குமுக மெய்ம்மைகளும் (Realities) புரட்சிகர நடப்பிய (Realist) கலை இலக்கியங்களும் உருவாக முடியும்.

இன்றைய கலை இலக்கியங்களில் குறிப்பாகத் திரைப் படங்களில் நாட்டுப்புற மக்களுக்கும் பெண்களுக்கும் மிகவும் தீங்கானவை தெய்வத்தையும் விதியையும் கருப்பொருட்களாக்கும் கதைகளைக் கொண்டவையும் பெண்களைத் தன்னம்பிக்கை இழக்க வைக்கும் பட்டிக்காடா பட்டணமா, மௌன கீதங்கள் போன்றவையுமான திரைப்படங்களே. ஆனால் இவற்றுக்கெதிரான திரைப்படங்களை உருவாக்குவதோ அல்லது ஒரு போராட்டத்தைத் தொடங்குவதோ இன்றைய நிலையில் எதிர்பார்க்க முடியாத ஒன்று. ஒரு எழுச்சியடைந்த குமுகப் பின்னணியில் திராவிட இயக்கத்தினர் அத்தகைய திரைப்படங்கள் ஒன்றிரண்டை உருவாக்க முடிந்தது. (எ-டு) ரத்தக் கண்ணீர், அந்தமான் கைதி. அதுபோன்ற ஒரு குமுக எழுச்சியை உருவாக்காமல் புதிய கலை இலக்கியம் பற்றிப் பேசுவோர் அனைவரும் ஏமாற்றித் திரியும் வேலையற்ற எத்தர்களே.

0 மறுமொழிகள்: