29.4.07

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 22. ஈழ விடுதலைப் போர்

இருபதாம் நூற்றாண்டை நிகர்மைப் புரட்சியின் ஊழி என்கிறார்கள் ‘மார்க்சியர்கள்’. ஆனால் தொடர்ச்சியாக நடைபெற்ற இரு உலகப்போர்களின் விளைவாக வலிமை குன்றிய வல்லரசுகளின் பிடியிலிருந்து ஐரோப்பியத் தேசியங்கள் விடுதலை பெற்றன. இருப்பினும் அவற்றில் பெரும்பாலானவை உருசியாவின் செல்வாக்கினுள் அடைபட்டுக் கிடந்தன. உருசியப் பொதுமைக் கட்சியின் இயலாமையால் சோவியத்துகளின் ஒன்றியம் சிதைந்த போது ஐரோப்பியத் தேசியங்களனைத்தும் உருசியக் கட்டமைப்புக்குள்ளிருந்த ஆசியத் தேசியங்களில் சிலவும் விடுதலை பெற்றன. அத்துடன் ஐரோப்பிய வல்லரசுகளின் பிடியிலிருந்த அனைத்து நாடுளும் அரசியல் விடுதலை பெற்றன. எனவே இந்நூற்றாண்டை தேசிய விடுதலையின் ஊழி என்பதே பொருந்தும்.

ஆனால் ஏழை நாடுகளில் அடிமைப்பட்டுக் கிடக்கும் தேசியங்கள் எதுவும் விடுதலை பெறவில்லை. அதேவேளையில் உலகின் முழுக் கவனத்தையும் ஈர்த்து நிற்கும் ஒரே தேசிய விடுதலைப் போராட்டம் ஈழ விடுதலைப் போராட்டமே.

ஆயுதந்தாங்கிய கூர்மையான இந்தப் போராட்டத்தின் அகவை பதினைந்து ஆண்டுகளுக்குள் தான். ஆனால் இந்தக் கால எல்லைக்குள் அது எத்தனையோ திரிவாக்க வளர்ச்சிகளைக் காட்டி நிற்கிறது. இவற்றின் பரிமாணங்களைப் புரிந்து கொள்ளும் முன் ஈழ விடுதலைப் போராட்டத்தின் பின்னணியை அறிந்துக் கொள்வது நலம்.

ஈழத்தீவை நாகத்தீவு என்று கூறுவர் என்பதை ஏற்கனவே கூறியுள்ளோம். அதற்குச் சேரன்தீவு என்ற பெயரும் உண்டு. இது கிரேக்கர் அத்தீவுக்கு வழங்கிய பெயர். இச்சொல்லிலிருந்து Serendipity என்ற ஆங்கிலச் சொல்லை உருவாக்கியுள்ளார் வால்போல் என்ற ஆங்கில அறிஞர். எதிர்பாராமல் நிகழும் கண்டுபிடிப்புகளைக் குறிப்பதாக இந்தச் சொல்லை அவர் அறிவித்தார். சேரன் தீவாகிய ஈழத்தீவைச் சேர்ந்த மூன்று இளவரசர்கள் உலகைச் சுற்றியதையும் அவர்கள் எதிர்பாராமல் நிகழ்த்திய பல கண்டுபிடிப்புகளையும் குறிப்பிடும் ஒரு புதினம் அல்லது தேவதைக் கதையிலிருந்து அவர் இச்சொல்லை வடித்துள்ளார்.[1] இப்புதினத்தைக் கண்டுபிடிக்கும் இந்நூல் ஆசிரியரின் முயற்சி வெற்றி பெறவில்லை. ஆனால் தென்தமிழ்நாட்டில் வழங்கும் முத்தாரம்மன் கதையில் வரும் முப்புராதிகளின் கதையாக அது இருக்கலாமோ என்றொரு ஐயம் எழுகிறது.

பினீசியர்கள் தற்செயலாகக் கண்ணாடியைக் கண்டுபிடித்ததைப் பற்றிக் கிரேக்கத்தின் வரலாற்றாசிரியரான ஏரோதோத்தே கூறுகிறார். வெடியுப்பை ஏற்றிவந்த பினீசியர்களின் கப்பலொன்று ஓராற்றங்கரையில் உடைந்து ஒதுங்கியது. கவிழ்ந்த கப்பலிலிருந்து கொட்டிய வெடியுப்பு ஆற்றங்கரை மண்ணுடன் கலந்திருந்தது. ஆற்று மணலில் அடுப்பமைத்து மாலுமிகள் சமைத்தனர். அந்தச் சூட்டில் வெடியுப்பும் மணலும் கலந்த கலவை உருகிக் கண்ணாடி[2] உருவானதாம்.

இந்தப் பினீசியர்கள் இந்தியாவின் தென்கோடியிலிருந்து நண்ணிலக் கடற்கரை சென்று குடியேறியவர்கள். இவர்களைப் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். பினீசியர்களுக்கும் இந்த மூன்று இளவரசர்களுக்கும் உள்ள தொடர்பு கூட ஆயத்தக்கது.

இலங்கைத் தீவில் சிங்களர் புகுந்தது பற்றிய செய்தி இலங்கை வரலாற்று நூல்களில் கூறப்பட்டுள்ளது. கலிங்கநாடு எனப்படும் ஒரிசாவிலிருந்து விசயன் என்பானும் அவனது தோழர்கள் சிலரும் கடல் வழியாக இலங்கைத் தீவை அடைந்தனர். அங்கே ஆட்சி செய்த நாகமன்னனின் தங்கையின் மகனுக்குப் பட்டம் சூட்டுவதாக வாக்களித்து அவளது உதவியை பெற்றனர் அவர்கள். நாக மன்னனும் பரிவாரங்களும் களியாட்டத்திலிருந்த நேரம் பார்த்து அவர்களனைவரையும் தாக்கியழித்து நாட்டைப் பிடித்தனர். பாண்டிய மன்னன் தன் தங்கையை மணமுடித்துக் கொடுத்தான். விசயனின் தோற்றக்குறியான சிங்கத்தின் பெயரால் அவன் வழியினர் சிங்களர் எனப்பட்டனர். எனவே சிங்களர் தமிழரும் கலிங்கரும் இணைந்த கலப்பினத்தினர் என்பது தெளிவு.

இதே நிகழ்ச்சியை மணிமேகலை ஆசிரியர் வேறுவிதமாகக் கூறுகிறார். மணிபல்லவத் தீவில் ஒரு புத்த பீடிகைக்காக நாகநாட்டின் இரு நாகங்கள் பெரும்போர் நிகழ்த்திய போது புத்தர் தோன்றி இது தனக்குரியது என்று அமர்ந்தார் என்கிறார் அவர். விசயன் தான் முதன்முதலில் புத்த சமயத்தை ஈழத்துக்கு எடுத்துச் சென்றவன் என்பது வரலாற்று உண்மை.
[3]

மயிலிராவணன் கதையென்று ஒன்று இராமாயணத்தோடு தொடர்புபடுத்திக் கூறப்படுகிறது. இராவணனின் உறவினனான மயிலிராவணன் என்பவன் இராம-இலக்குவர்களைத் தன் விஞ்சையால் மயக்கித் தூக்கிச் சென்று ஒளித்து வைத்து விடுகிறான். அனுமன் அவர்களைத் தேடிச் செல்கிறான். மயிலிராவணனின் தங்கை தன் மகனுக்குப் பட்டம் சூட்டினால் தமையனின் இருப்பிடத்தையும் அவன் உயிர்நிலையையும் தெரிவிப்பதாகக் கூறுகிறாள். அவ்வாறே மயிலிராவணனைக் கொன்று இராம இலக்குவர்களை மீட்டு வருகிறான் அனுமான்.

இராமாயணத்திலேயே வீடணனுக்குப் பட்டஞ் சூட்டுவதாக வாக்களித்தே உதவி பெறுகிறான் இராமன். இவையனைத்தும் ஒரே செய்தியையே குறிப்பிடுகின்றன.

இவ்வாறு மூலக்குடிகளாகிய நாகர்களென்னும் தமிழ்க் குலத்தினரிடையில் நடைபெற்ற பதவிப் போட்டியினாலும் பாண்டியர்களின் பகைமை உணர்வாலும் அயலவர்களான ஒரியர்கள் ஈழத்தில் வந்து புதிய ஒரு இனத்தை உருவாக்கி நிலைத்து விட்டனர்.

ஈழத்தின் மீது தமிழக அரசர்கள் போர் தொடுத்த நிகழ்ச்சி முதன்முதலாகக் கரிகாலனின் படையெடுப்பாகவே நம் கவனத்திற்கு வருகிறது. அப்படையெடுப்பின் போது பன்னீராயிரம் இலங்கையரைக் கரிகாலன் சிறைப்பிடித்து வந்தான். காவிரிக்குக் கரையமைக்கும் பணியில் அவர்களை ஈடுபடுத்தினான். இவ்விலங்கையரே ஈழவர் என்றும் பணிக்கர்களென்றும் தீயர்களென்றும் கேரளத்தில் அழைக்கப்படுகிற மக்களாகும் என்று சிலர் கருதுகிறார்கள்.

தமிழகத்தினுள் இல்லத்துப் பிள்ளைகள் என்று அழைக்கப்படும் மக்களும் இவர்களே. ஆனால் அவர்கள் இதை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் ஈழத்துப் பிள்ளைகள் என்பதே இல்லத்துப் பிள்ளைகள் என மருவி வழங்குகிறதென்ற உண்மைக்குச் சான்றுகள் உள்ளன. பட்டப்பெயர்கள், சாதி உட்பிரிவுகள் ஆகியவற்றில் ஈழவர்களுக்கும் இவர்களுக்கும் ஒற்றுமைகள் உள்ளன.

இவ்வாறு கரிகாலன் பிடித்துவந்த மக்கள் தமிழர்களா சிங்களவரா என்பது தெரியவில்லை. இதையும் ஆய்ந்து கண்டுபிடிக்க வேண்டும். தமிழகத்தில் முறையான வரலாற்றாய்வு என்று எதுவுமே நடைபெறவில்லை என்பதைத் தான் இது காட்டுகிறது.

கரிகாலன் படையெடுத்த காலம் கயவாகுவின் தந்தை இலங்கையை ஆண்ட காலம். தன் தந்தைக்கு இழைக்கப்பட்ட இழிவுக்குப் பழிவாங்கவே மணிமேகலையைப் பயன்படுத்திச் சோழ இளவரசனான உதயகுமாரனைக் கொன்றான்; பீலிவளை என்ற நாகப்பெண் சோழ அரசனுக்குத் தான் ஈன்ற தன் மகனுடன் மணிபல்லவத் தீவுக்குப் புத்த பீடிகையை வழிபட வந்தாள். அவ்வாறு வந்தவள் அங்கு வந்து சேர்ந்த கம்பளச் செட்டியின் கலத்தில் அவனைச் சோழ மன்னனிடம் அனுப்பினாள். ஆனால் மரக்கலம் கரை சேருவதற்குள் முழுகியதாகக் கூறப்பட்டது. அவ்வாறு சோழனின் பிறங்கடையினர் இறந்தனர். புகார் கடலால் அழிந்ததென்று கூறப்படுகிறது. ஆனால் எட்கார் தர்சுட்டன்[4] செட்டியார்களைப் பற்றித் தொகுத்துள்ள கதை வேறுவிதமாகக் கூறுகிறது. சோழ மன்னன் செட்டியார் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் புரியக் கேட்டதாகவும் ஆனால் மறுத்த செட்டியார்கள் புகாரை நெருப்பு வைத்து அழித்து விட்டு வெளியேறியதாகவும் அக்கதை கூறுகிறது. அறிஞர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளையவர்களும் இவ்வாறு தான் கருதுகிறார். கோவலன் எனும் வாணிகனுக்குப் பிறந்த மணிமேகலையை வாணிகச் சாதியினர் தங்கள் சாதிப் பெண்ணாக ஏற்றுக் கொண்டனர் என்பதற்கு வாணிகரான சாத்தனார் அவள் வரலாற்றை ஒரு காப்பியமாக இயற்றியுள்ளதே சான்று.

இவ்வாறு மணிமேகலையின் உதவியோடு புகாரை அழித்த பின்னர் தான் கயவாகு கண்ணகிக்குச் சேரன் கோயிலெடுத்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டான் என்று இ.மு.சுப்பிரமணியன் கருதுகிறார். இது ஆயப்பட வேண்டியது.

இதன் பின்னர் இலங்கை மீது படையெடுத்துச் சிங்கள அரசுக்குப் பெரும் இன்னல் விளைவித்தவன் இராசராசன். அவன் காலத்திலும் அதைத் தொடர்ந்த சோழப் பேரரசின் காலத்திலும் ஈழத்தீவு சோழப் பேரரசின் முழு ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. சோழப் பேரரசு வலிமை குன்றிய போது ஈழத்தை ஆண்ட சோழப் பேரரசின் பேராளனாயிருந்த ஒரு முதிய தலைவனான எல்லாளனைத் துட்கைமுனு என்ற சிங்கள வீரன் தனிப்போரில் வென்று சோழப் பேரரசிலிருந்து ஈழத்தை மீட்டான் என்று சிங்கள வரலாறு கூறுகிறது.

விசயனால் அழிக்கப்பட்டவர்கள் அரசனும் அவனது சுற்றத்தாருமே. மக்கள் எஞ்சியிருக்கவே செய்தார்கள். சோழப் பேரரசின் காலத்தில் அங்கு வந்து சேர்ந்தோரே அங்கிருக்கும் மிக உயர் சாதியினரான சிவனிய வேளாளர்கள். தமிழகத்திற் போலல்லாமல் இவர்கள் பார்ப்பனரை விடச் செல்வாக்கில் மிக்கவர்கள்.

மொழிநடையைப் பொறுத்தவரையில் இந்த யாழ்ப்பாணத்து வெள்ளாளர்களுக்கும் ஈழத்தின் பிற தமிழ்ப் பகுதி மக்களுக்கும் வேறுபாடுண்டு. ஆனால் பொதுவான மொழிநடை தமிழகத்தின் உள்நாட்டுப் பகுதியிலிருந்து வேறுபட்டதாகும். ஈழத்தின் தமிழ்நடையும் தமிழகத்துத் தென் மாவட்டங்களிலுள்ள மீனவர்களின் மொழிநடையும் குமரி மாவட்டத்தின் கல்குளம், விளவங்கோடு வட்டங்களிலுள்ள மொழிநடையும் தெக்கன் மலையாளம் எனப்படும் தென் கேரள மலையாளமும் மிக நெருக்கமானவை. முழுகிப் போன குமரிக் கண்டத் தமிழ்நடையைத் தடம் பிடிக்க வேண்டுமென்றால் மேற்கூறிய இவர்களுடைய மொழிநடையை நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம்.

இந்தப் பின்னணியில் நிகழ்ந்த தென்னவென்றால் தமிழகத்துப் பார்ப்பனரைப் போலவே ஆட்சிப் பதவிகளை யாழ்ப்பாணத்து வெள்ளாளர்கள் கைப்பற்றிக் கொண்டனர். தமிழகத்தில் இருந்தது போல் பார்ப்பனர்களின் போட்டி அவர்களுக்கில்லை. எழுத்தறிவின் மூலம் பெறப்படும் பதவிகளில் மிக உயர்ந்த நிலையை அவர்கள் எய்தியிருந்தனர்.

வெள்ளையர்கள் வந்த போது ஒட்டுண்ணிகளின் இயல்புக் கிணங்க இவர்களில் கணிசமான எண்ணிக்கையினர் மதம்மாறிக் கும்பினியாரிடம் பணிக்கமர்ந்தனர். பின்னர் ஆங்கிலங்கற்று இலங்கையில் மட்டுமல்ல தெற்காசியா முழுவதும் பெரும் பதவிகளைக் கைப்பற்றினர். தங்களுக்கென்று தனியாக வெள்ளையரையொத்த சில பண்பாட்டுக் கூறுகளை வகுத்து கொண்டனர்.

இவர்கள் தமிழகத்திலும் இலங்கையிலும் வாழும் பிற தமிழர்களைத் தங்களுக்கு ஈடாக மதிப்பதில்லை. தமிழர்களிலேயே தாங்கள் தான் உயர்ந்தவர்கள் என்ற ஆணவம் அவர்களுக்கு உண்டு.

19ஆம் நூற்றாண்டிலும் பின்னரும் இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் கூலி வேலை செய்வதற்காகத் தமிழகத்திலிருந்து ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்ட பஞ்சத்திலடிப்பட்ட தமிழ் மக்களும் இலங்கையில் சிங்களர் நடுவே மலையகத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கை ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றது. ஆனால் ஈழத் தமிழர்களின் தலைமையிலிருந்த யாழ்ப்பணத்து வெள்ளாளர்கள் தமிழர்களின் நலனைக் காத்துக் கொள்ள வேண்டுமென்று கருதவில்லை. அதற்குரிய முனைப்பான போராட்டங்களில் ஈடுபடவில்லை. அவர்கள் கணிப்பு வேறாக இருந்தது. இலங்கை ஒருங்கிணைந்து இருந்தால் தம் பதவி வாய்ப்புக்குக் கேடு வராமல் இருக்கும் என்பதே அந்தக் கணிப்பு.

ஆனால் சிங்களரின் கணிப்பு வேறாக இருந்தது. தமிழர்கள் கையிலிருக்கும் ஒட்டுண்ணி வேலைவாய்ப்பைத் தங்களுக்கு உரிமையாக்கிக் கொள்ள வேண்டுமென்பதே அது. முதல் தேர்தலில் கணிசமான எண்ணிக்கையில் தமிழ்ப் பேராளர்கள் பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் ஒரு பெரும் பகுதியினர் மலையகத் தமிழர்களாவர். இது சிங்களர் கண்களை உறுத்தியது. யாழ்ப்பாணத்து வெள்ளாளர்கள் கண்களையும் உறுத்தியது. எனவே தான் மலையகத் தமிழர்களின் வாக்குரிமையைப் பறிக்க சிங்களவர் மேற்கொண்ட முயற்சிக்கு அவர்கள் துணை நின்றனர்.

தமிழர்களின் அரசியல் செல்வாக்கை ஒழிக்க இருமுனைத் தாக்குதல் திட்டத்தைச் சிங்களர் மேற்கொண்டனர். அதில் ஒன்று தான் மலையகத் தமிழரின் வாக்குரிமையைப் பறித்தது, இன்னொன்று வடகிழக்கு மாகாணம் எனப்படும் திரிகோணமலைப் பகுதியில் பரவலாகச் சிங்களரைக் குடியமர்த்தியது. இதற்கும் தமிழ்த் தலைவர்கள் உரிய எதிர்ப்பைக் காட்டவில்லை.

தாம் எழுத்தறிவு பெறுவதன் மூலம் அரசுப் பதவிகளிலிருந்த தமிழர்களின் இடத்தைப் பிடிக்கச் சிங்களர் முயன்றனர். ஆட்சி அவர்களிடமிருந்தாலும் தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் முன் பிறர் தோற்றது போலவே சிங்களராலும் எளிதில் வெற்றி பெற முடியவில்லை. எனவே அடுத்த கட்ட முயற்சியாகத் தரப்படுத்தல் என்ற உத்தியைச் சிங்களர் கல்வித்துறையில் புகுத்தினர். இதன்படி ஒரு சிங்கள மாணவன் உயர்கல்விக்குச் செல்வதற்குத் தமிழ் மாணவனை விடக் குறைவான மதிப்பெண்களே போதுமானது. இது தமிழ் மாணவர்களுக்கு, குறிப்பாக எழுத்தறிவு மூலமாகவே தங்கள் வளவாழ்வை நிலைநாட்டி வந்த யாழ்ப்பாணத்து வெள்ளாளர் மாணவர்களுக்கு ஆத்திர மூட்டியது.

இதற்கிடையில் கொழும்பிலும் பிற பகுதிகளிலும் குறிப்பாக மலையகத்திலும் அடிக்கடி சிங்களர்கள் இனவெறித் தாக்குதல்களை நடத்தி வந்தனர். தமிழர்களின் பண்பாட்டு வாழ்வைக் குலைக்கவும் முயன்றனர். 1974ஆம் ஆண்டில் அங்கு நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிங்களப்படை புகுந்து வெறித் தாக்குதல் நடத்தியது.

இந்த நிகழ்ச்சிப் போக்குகளுக்கிடையில் தமிழர்களின் கட்சிகளில் காட்டிக் கொடுப்பவையே மலிந்திருந்தன. எனினும் செல்வநாயகம் என்ற தலைவர் சிங்களர்களோடு தமிழர்களின் அமைதியான உடன்வாழ்வுக்கு மனமுவந்து மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் இரு பெரும் சிங்களக் கட்சிகளால் போட்டிபோட்டுக் கொண்டு முறியடிக்கப்பட்டன. இறுதியில் தனி ஈழம் தான் தமிழர்களின் விடிவுக்கு வழியென்று முடிவு கூறி அவர் மறைந்தார். இதற்கிடையில் இளைஞர்கள் எழுச்சியடைந்தனர். அவர்களது நெருக்குதலுக்குப் பணிந்து தமிழர் கட்சிகள் ஒருங்கிணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி அமைந்தது. அமிர்தலிங்கம் அதன் தலைவரானார்.

1977ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் ஈழ விடுதலை என்ற நோக்கத்தை முன் வைத்துத் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழர்கள் பகுதியில் முழு வெற்றியடைந்தது. ஆனால் தேர்தலுக்குப் பின் ஆளுங்கட்சியான ஒன்றிய தேசியக் கட்சியுடன் இணங்கி நின்றது. ஈழ விடுதலைக்கான நடவடிக்கை எதிலும் இறங்கவில்லை. இதனால் இளைஞர்கள் பல்வேறு இயக்கங்களாகச் செயற்படத் தொடங்கினர்.

இந்தக் காலட்டத்தில் சிவகுமாரன் என்ற வீர இளைஞன் உருவானான். தமிழர்கள் மீது கொடுமை புரியும் காவல்துறையினரைக் கொல்வதன் மூலம் அவன் மக்களிடையிலும் இளைஞர்கள் நடுவிலும் புகழ் பெற்றான். அவன் தோழர்களாயிருந்தவர்களிலிருந்தே பின்னால் உருவான பல போராளி இயக்கங்களின் கருக்கள் உருவாயின என்று கூறப்படுகிறது.

வெவ்வேறு போராளி இயக்கங்களும் தமக்குத் தேவைப்படும் பணத்தைப் பெறுவதற்காக வங்கிகளைக் கொள்ளையிட்டன. காவல்துறையினரையும் காட்டிக் கொடுக்கும் தமிழர்களையும் கொல்லவும் செய்தனர். அவற்றில் தொடர்புள்ளவர்களைப் பிடிப்பதற்காகக் காவல்துறை தேடிய போது அவர்கள் தமிழகத்துக்கு ஓடி வந்து விட்டனர். அப்படி வந்த ஒரு சில தலைவர்களை அப்போது ஆட்சியிலிருந்த திராவிடர் இயக்க ஆட்சி பிடித்து இலங்கை அரசிடம் ஒப்படைத்து தமது “தமிழினக் காவலர்” பணியை நிறைவேற்றியது.

இலங்கையில் ஒவ்வொரு தேர்தலுக்குப் பின்னும் சிங்களர் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவது வழக்கமாயிருந்தது. அது போல் 1977 தேர்தல் முடிந்தவுடனும் நடந்தது. இந்தக் கலவரச் செய்திகள் தமிழகத்து மக்களை மிகவும் பாதித்தன. ஆனால் 1982இல் நடந்த கலவரம் தேர்தலை ஒட்டி நடைபெற்றதல்ல. இனவெறி பிடித்த அரசு இயந்திரம் முழுவதும் இனவெறி பிடித்த சிங்களர்களுடன் இணைந்து திட்டமிட்டு தொடங்கப்பட்ட இந்தத் தாக்குதல் பல நாள் நடைபெற்றது. மக்கள் ஆதரவு தேடித் தமிழகத்திற்குப் படகேறி ஓடி வந்தனர். தமிழக மக்கள் முழுமனதோடு அவர்களுக்கு ஆதரவளித்தனர். சிங்களர் மீது சீற்றம் கொண்டனர். அவர்களது உணர்வுகள் தாமே வெளிப்பட்ட ஊர்வலங்கள், உண்ணா நோன்புகளாக உருவெடுத்தன. அது வரை இவை யாவற்றையும் கண்டுகொள்ளாமலிருந்த தமிழக அரசியல் கட்சிகள் புதிய ஆயுதம் ஒன்று தங்கள் முன் வந்து விழுந்திருப்பதைக் கண்டுகொண்டன. ஆளும் கட்சியும் ஆளாத கட்சியும் நாளொரு ஊர்வலமும் பொழுதொரு ஆர்ப்பாட்டமும் கடையடைப்புமாக திருவிழா நடத்தின.

ஈழத்தில் அரசு நடத்திய அடக்குமுறையிலிருந்து தப்ப அங்கு உருவாகியிருந்த பல்வேறு இயக்கங்களின் தலைவர்களும் தமிழத்தில் அடைக்கலம் புகுந்தனர். அப்படிப் புகுந்தவர்கள் அனைவரையும் இங்குள்ள வெவ்வேறு அரசியற் கட்சிகள் தமக்குள் பங்கு போட்டுக் கொண்டன.

தில்லியும் வாளாவிருக்கவில்லை. தெற்காசியாவில் தன் அரசியல் செல்வாக்கைச் செலுத்த வேண்டுமென்ற அவா தில்லிக்கு என்றுமே உண்டு. இந்த வகையில் இதுவரை தன் கைகளுக்குள் சிக்காமலிருக்கும் இலங்கையை ஆட்டிப்படைக்க இதை ஒரு வாய்ப்பாக அது கருதியது. அத்துடன் ஈழ விடுதலை இயக்கத்துக்கு உதவி செய்வதன் மூலம் அதனுள் புகுந்து அது (ஈழ விடுதலை இயக்கம்) தன் நோக்கத்தை ஈடேற்ற முடியாதபடி தடுக்கவும் அது எண்ணியது. அதன் மூலம் இந்த வட்டாரத்தில் அல்லது பொதுவாக உலகில் ஒரு தேசிய விடுதலை இயக்கம் வெற்றி பெறும் வாய்ப்பைத் தகர்த்து விடலாம்; அவ்வாறு இந்தியாவினுள் தோன்றி வளர்ந்துகொண்டிருந்த தேசிய எழுச்சிகளுக்கு ஓர் உளவியல் தாக்குதலையும் கொடுக்கலாம்.

இந்தக் கணிப்புகளோடு இந்தியா ஈழ விடுதலை இயக்கங்களுக்கு ஆதரவு கொடுக்கத் தொடங்கியது. ஒவ்வொரு இயக்கத்துக்கும் தனித்தனிப் பயிற்சி முகாம்கள் அமைத்துக் கொடுத்து அங்கு போராளிகளுக்குப் பயிற்சியும் ஆயுதங்களும் கொடுத்தது. இங்கு பயிற்சி பெற்ற போராளிகள் ஈழம் சென்று அரசுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தி வந்தனர்.

அதே வேளையில் தமிழகத்திலுள்ள சில கட்சிகள் இவ்வியக்கங்களில் சிலவற்றோடு தொடர்பு வைத்து அவர்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்துப் பயிற்சியளித்து ஈழத்தில் வங்கிக் கொள்ளைகள் நடத்த வைத்துப் பங்கு பெற்றதும் உண்டு.

இதற்கிடையில் “மார்க்சியர்களும்” கையைக் கட்டிக்கொண்டிருக்கவில்லை. அவர்களில் மூன்றாம் அணியினர் எனப்படும் நக்சலர்கள் சில இயக்கங்களில் புகுந்தனர். அவர்கள் பாணியில் மாணவரனி, மகளிரணி, அலுவலர்களணி என்று தாளில் எண்ணற்ற அணிகளை ஈழ மக்கள் புரட்சிகர முன்னனி என்ற அமைப்பு உருவாக்கியது. இது ஈரோக்கள் என அழைக்கப்படும் அமைப்பிலிருந்து பிரிந்ததாகும். ஈரோக்களை உருவாக்கிய இரத்தினசபாபதி எனும் சிவனிய வேளாளர் ‘மாணிக்கவாசகர் ஒரு மார்க்சியர்’ என்று வாதிடும் ஒரு விந்தையான மார்க்சியர். இவர் சோவியத்து உருசியா தேசிய விடுதலைப் போர்களுக்கு உதவும் என்று கூறி சோவியத்துக்கு ஆதரவு தேடுபவர்.

தெலோ எனப்படும் தமிழ் ஈழ விடுதலை அமைப்பு இதுபோன்று கோட்பாட்டுச் சாயல் எதுவுமில்லாத அமைப்பாகும். அதன் தமிழகப் புரவலர் தி.மு.க.வின் தலைவர் கருணாநிதியாகும்.

இன்று ஈழத்தில் நிலைத்து நிற்கும் தலைவரான பிரபாகரன் தொடக்கத்தில் தமிழர் விடுதலை முன்னணித் தலைவர்களுக்கு நம்பிக்கையானவராயிருந்தார். அவர்களை நம்பியிருந்தார். ஆனால் அவர்கள் தமிழர் நலன்களுக்கு நாணயமில்லாமல் எதிரியோடு நெருங்க நெருங்க இவர் தன் வழியில் தன்னை உறுதிப்படுத்திக் கொண்டார். போர்க்கருவியையே எதிரி தனது ஆயுதமாகக் கொண்டிருக்கும் போது இவரும் போர்க்கருவியையே தன் முதன்மையான ஆயுதமாகக்கொண்டார். தங்களுக்கு உதவும் பல்வேறு தரப்பினரின் தனித்தனி நலக் குறிக்கோள்களை இனம் கண்டு அதில் தம் நலனை மட்டும் பேணி ஆதாயம் தேடும் பக்குவம் அவருக்கிருந்தது. உண்மையான இயங்கியல் அணுகல் இது தான். இயங்கியலைப் பற்றிப் பேசும் போது, லெனின் கூறுவார் “இயங்கியல்; என்பது இயல்பான பொது அறிவு (Common sense)தான்” என்று.

பிரபாகரனின் தொடக்க காலக் கூட்டாளியாக இருந்த உமாமகேசுவரன் என்ற முகுந்தனுக்கும் பிரபாகரனுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு சென்னையில் தெருவில் ஒருவர் மீதொருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதிலிருந்து அவ்வியக்கம் இரண்டாய்ப் பிரிந்து முகுந்தனின் தலைமையில் தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம் (பிளாட்) உருவானது. இது வங்கிக் கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு பணம் ஈட்டியது. இவ்வியக்கத்தை வெவ்வேறு நேரங்களில் தமிழ்நாட்டின் வெவ்வேறு கட்சிகள் ஆதரித்தன. ஒரு வேளையில் இந்தியப் பேரவைக் கட்சி முகுந்தனை தமிழகமெங்கும் அழைத்துச் சென்று கூட்டங்கள் நடத்தியதுண்டு.

இந்தப் போராளி இயக்கத்தினர் எந்த ஆதரவுமின்றி உண்ணவோ உறங்கவோ எந்த வசதியுமின்றி வந்த பொது தமிழகத்திலுள்ள மனிதநேயமும் மொழியடிப்படையில் அமைந்த இனப்பற்றும் கொண்டு எந்தக் கைம்மாறையும் கருதாமல் உதவியோர் எண்ணற்றவர். ஆனால் அரசியல்வாணர்களின் உதவியும் ஆதரவும் கிடைத்தவுடன் அந்த எளியவர்கள் ஓசைப்படாமல் அனைத்து இயக்கங்களாலும் ஒதுக்கி வீசப்பட்டனர் என்பது மனம் நோக வைக்கும் உண்மையுமாகும்.

அதே நேரத்தில் அரசியல்வாணர்களின் ஆதரவு வெறும் அரசியல் ஆதாயங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. ஈழத்தில் போராளிகள் கொள்ளையடித்துக் கொண்டு வந்த பணத்தில் அவர்களுக்குக் கிடைத்த பங்கும் காரணமாகும். இத்தகைய ஒரு பங்கை அனைத்து இயக்கங்களும் இங்குள்ள அதன் ஆதரவுத் தலைவர்களுக்கு வழங்கின. தங்களுக்கு இந்தியாவில் ஒரு “தளம்” வேண்டுமென்பதற்காக அவர்கள் கொடுக்க ஆயத்தமாக இருந்த ஒரு விலையே அது.

தனித்தனிக் குழுக்களாக ஒருவருக்கொருவர் முரண்படாமல் இணைந்து நின்று போராளிகள் போராட வேண்டுமென்று இந்திய அரசும் தமிழக அரசியல்வாணர்களும் விரும்பினார்கள். அதன்படி விடுதலைப் புலிகள் இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈழப் புரட்சிகர அமைப்பு (ஈரோக்கள்), தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பு, தமிழீழ விடுதலை அமைப்பு ஆகிய ஐந்தும் ஒரு கூட்டணியில் வர இணங்கின.[5] சில நாட்களிலேயே அவற்றிலொன்றான தமிழ் விடுதலை அமைப்பு (தெலோ) ஈழத்தில் இந்திய அரசின் ஆதரவோடு ஓர் அரசு அமைப்பதற்கான மறைமுகமான பேச்சில் ஈடுபட்டிருப்பதாகச் செய்திகள் வந்தன. ஒரிரு நாட்களில் தமிழகத்திலிருந்து ஈழம் சென்றிருந்த அதன் தலைவர் சிறீசபாரத்தினம் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அது மட்டுமல்ல த.வி.அமைப்பின் போராளி உறுப்பினர்களும் மிகக் கொடுமையான முறையில் அழிக்கப்பட்டனர். சிறிது சிறிதாகப் பிற இயக்கங்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் முரண்பாடுகள் முற்றி ஈழம் முழுவதும் இயக்கங்களுக்கிடையிலான போர்கள் வலிமை பெற்றன.

இதற்கிடையில் ஈழப் போராளிகளின் துணிச்சல் மிக்க தாக்குதல்களால் நடுநடுக்கிப் போன இலங்கை அரசு அதன் சிறிய படையைச் சிறிது சிறிதாக வலுப்படுத்தி வந்தது. இந்தியாவுக்கு எதிரானவையும் வழக்கமாகவே இலங்கையுடன் நட்பாகவும் உள்ள நாடுகளிடமிருந்து பெற்ற உதவிகளுடன் தான் அது தன் படையை வலுப்படுத்தியது. இவ்வாறு புது வலிமை பெற்ற இலங்கைப் படை ஈழத்தினுள் போராளிகள் மீது தாக்குதல் தொடுத்தது. போராளி இயக்கங்களுக்கிடையிலான சண்டையால் அவற்றின் எதிர்ப்பு வலிமை குன்றியிருந்தது. இலங்கைப் படை தொடர்ந்து முன்னேறியது. இலங்கைப் படைகள் மக்கள் மீது தாக்குதல் தொடுத்ததுடன் நில்லாது மக்களுக்கு உணவு, தண்ணிர், மின்சாரம் என்று முழுமையான பொருளியல் முற்றுகையையும் நடத்தியது. மீண்டும் தமிழகத்துக்கு மக்கள் ஓடி வந்தனர். இந்திய ஆட்சியாளருக்கு ஒரு புதிய சிந்தனை தோன்றியது.

உள்நாட்டுப் போரினால் நிலைகுலைந்து நிற்கும் ,இலங்கையைத் தன் முழுக்கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவதற்கு இதை விட்டால் வேறு வாய்ப்புக் கிடைக்காது என்று இந்தியா கருதியது. அத்துடன் ஈழத்தில் வலுப்பெற்று வெற்றி நோக்கி நடைபோடும் தேசிய விடுதலைப் போரினால் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் கொழுந்து விட்டெரிந்து, அந்த நெருப்பில் குளிர்காய எண்ணிய திராவிட இயக்கத்தினால் சிறிது சிறிதாக நீருற்றப்பட்டு அணையும் நிலையிலிருக்கும் தேசியத் தீ மீண்டும் புகையத் தொடங்கும் அறிகுறி வேறு இந்திய அரசின் வயிற்றில் கலக்கத்தை ஏற்படுத்தியது. தமிழகத் தலைவர்களோ, வழக்கம் போல் ‘எங்கள் வீட்டில் பாம்பு, ஆண்கள் யாராவது வாருங்களேன்’ என்றலறும் பேடி இல்லத் தலைவனாக வெளியார் உதிவியையே வேண்டினர். ‘இந்திய அரசே வங்காள தேசத்தில் செய்தது போல் இலங்கை மீது படையெடுத்து ஈழத் தமிழர்களுக்கு விடுதலை வாங்கிக்கொடு’ என்று கூக்குரலிட்டனர்.

இந்திய அரசோ தமிழகத்துக்கு வந்திருந்த ஏதிலி (அகதி) ஈழ மக்களைக் காரணமாகக் காட்டி ஈழச் சிக்கலுக்கு ஒரு தீர்வு காண முயல்வதாகத் தொடக்கத்திலிருந்தே பாசாங்கு செய்து வந்தது. இவற்றையெல்லாம் பயன்படுத்தி ஈழத் தமிழர்களுக்கு உணவளிப்பதாகக் கூறி வானூர்திகளில் உணவுப் பொட்டலங்களுடன் ஈழ எல்லைக்குள் சென்று உணவை மக்களுக்கு வழங்கியது இந்திய அரசு. இருதியில் இலங்கை அரசு இந்திய அரசுடன் ஓர் உடன்பாட்டுக்கு வர இணங்கியது. இழி பெயர் பெற்ற இலங்கை இந்திய உடன்படிக்கை உருவாயிற்று.

வடமாகாணம் எனும் யாழ்ப்பாணப் பகுதியும் திருகோணமலைப் பகுதியாகிய வடகிழக்கு மாகாணமும் தமிழர்களின் மரபு நிலப்பரப்புகளாகும். அவற்றில் வடகிழக்கு மாகாணத்தில் இலங்கை ஆங்கிலேயரிடமிருந்து விடுபட்ட பின்னர் சிங்கள அரசு நிறைவேற்றிய சிங்களக் குடியேற்றத் திட்டங்களினால் அங்கு தமிழர்கள் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பகுதியினராகக் குறைந்து போயினர். அத்துடன் அம்மாகாணத்தில் வாழ்ந்த தமிழ் பேசும் முகம்மதியர்கள் தாங்கள் தமிழரோடு இணைந்து வாழ்வதை விரும்பவில்லை என்று கூறிவந்தனர். தாங்கள் இலங்கையின் பிற பகுதிகளிலுள்ள முகம்மதியரோடு சேர்ந்து ஒரு தனித் தேசியம் என்றனர். இவர்கள் வடகிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் பேசும் மக்களில் பாதியளவு இருந்ததால் தாய் மதத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் அங்கு மூன்றிலொரு பகுதியாகக் குறைந்து விட்டனர். இந்த நிலையில் தமிழ் விடுதலைக் குழுக்கள் ஒரே குரலில் வடக்கு மாகாணமும் வடகிழக்கு மாகாணமும் இணைவதை முதல் தேவையாக வலியுறுத்தி வந்தனர். அதாவது ‘மரபுத் தமிழ்ப் பகுதிகள் மேலுள்ள தங்கள் உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்’ என்பது அவர்களது நிலைப்பாடு.

இந்திய அரசு இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு மிகச் சூழ்ச்சியாகத் திட்டம் தீட்டியது. வடக்கு மாகாணத்தையும் வடகிழக்கு மாகாணத்தையும் "தற்காலிகமாக" இணைக்க வேண்டும்; பின்னர் இரண்டாண்டுகளுக்குப் பிறகு கருத்துவாக்கெடுத்து அதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்என்று கூறியது உடன்படிக்கை. கருத்து வாக்கெடுப்பை ஈழத்தில் மட்டும் நடத்த வேண்டுமா முழு இலங்கைக்கும் நடத்த வேண்டுமா என்பது வரையறுக்கப்படவில்லை. ஆனால் இலங்கை முழுவதற்கும் தான் என இலங்கை அரசு பின்னர் விளக்கம் கூறியது. எனவே இந்தத் தற்காலிக இணைப்பு என்பது ஈழத் தமிழர்களைப் பொறியில் சிக்க வைக்கும் பொய்த் தீனி தான் என்பது தெளிவு. அத்துடன் புதிதாக அமையவிருக்கும் தமிழ் மாநிலத்திற்கு ‘இந்தியாவிலுள்ள மாநிலங்களுக்கிருப்பவை போன்ற’ அதிகாரங்களை வழங்க வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் இந்திய மாநிலங்களுக்கிருப்பவற்றை விடக் கூடுதலான உரிமைகள் வழங்கப்பட்டு அதே போன்ற உரிமைகள் தங்களுக்கும் வேண்டுமென்ற கேள்வி இந்திய மாநிலங்களில் எழுப்பப்படும் வாய்ப்பு தடுக்கப்பட்டது. இந்த உடன்படிக்கை இலங்கையை மிரட்டியே பெறப்பட்டது என்பது தான் உண்மை.

ஈழப் போராளி இயக்கங்களில் ஈழப்புலிகள் தவிர பிறவனைத்தும் இந்த உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டன. ஈரோக்கள் எனப்படும் ஈழப்புரட்சி அமைப்பு தான் இந்த உடன்படிக்கைக்கான முன்முயற்சி எடுத்த இயக்கம் என்று கூறலாம். இவ்வியக்கம் சோவியத்து உருசியாவை ஆதரிக்கும் இயக்கம் என்று முன்பே கூறினோம். ஈழ விடுதலைக்காக அது உருசிய அரசை அணுகியதாகவும் இந்தியாவின் சொற்படி நடக்குமாறு உருசியா அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்திய அரசின் உதவி பெற்றே ஈழ இயக்கத் தலைவர்கள் இந்தியாவில் தங்கியிருந்ததால் நினைத்த நேரம் அவர்களை மிரட்டித் தன் விருப்பம் போல் ஆட வைக்க இந்திய அரசால் முடிந்தது. உடன்பட மறுத்த பிரபாகரன் சூழ்நிலை எனும் சிறையினுள் அகப்பட வேண்டியதாயிற்று.

உடன்படிக்கையின்படி வட மற்றும் வடகிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு தமிழ் மாநிலம் உருவாக்கப்படும். இந்தியா தன் அமைதிகாப்புப் படையை அனுப்பி தமிழ் மாநிலத் தேர்தலை நடத்தி அதற்குரிய உரிமைகள் வழங்கப்படுவதை மேற்பார்க்கும்; போராளிக் குழுக்கள் அனைத்தும் தத்தம் ஆயுதங்களை அமைதிகாப்புப் படையிடம் ஒப்படைத்து மக்களாட்சிக் களத்துக்குள் புக வேண்டும்.

அவ்வாறே அமைதிகாப்புப் படை ஈழத்தில் நுழைந்தது. ஈழத் தமிழ் மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். ஈழத்திலும் தமிழகத்திலும் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர். ஆனால் உலகமறிந்தவர்கள் நடக்கப் போகும் நிகழ்ச்சிகளைக் கவலையுடன் எதிர்பார்த்தனர்.

உடன்படிக்கையை வடிவமைத்ததில் முதல் பங்காற்றிய ஈழப் புரட்சி அமைப்பினர் முழு நம்பிக்கையுடன் ஆயுதங்களை இந்தியப் படையிடம் ஒப்படைத்தனர். ஆனால் அப்படி ஒப்படைத்த போராளிகள் அந்தமானுக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு ஈழப் புரட்சி அமைப்பினர் முகலாயப் பேரரசன் சாசகானைப் போலத் தாங்கள் கட்டிய கூண்டினுள்ளேயே சிறைப்பட்டனர். பிரபாகரன் இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்குத் தப்பிச் சென்றார்.

ஈழப் போராளிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. படகில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பதினேழு விடுதலைப் புலிப் போராளிகளை இலங்கையரசு சிறைப் பிடித்தது. இந்திய அரசு எவ்வளவோ கூறியும் பயனில்லை. அப்பதினேழு பேரும் நஞ்சருந்தித் தற்கொலை செய்து கொண்டனர். இந்திய அமைதிப் படை போராளிகளை ஒடுக்கத் தொடங்கியது. எதிர்ப்புக் கிளர்ச்சிகளும் உண்ணாநோன்புகளும் தொடங்கின. தாய்மார்கள் கூட உண்ணாநோன்பிருந்து உயிர்விட்டனர். திலீபன் என்ற விடுதலைப்புலி இயக்கப் பெருமகன் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்தான். விடுதலைப்புலிகளுக்கும் இந்திய அமைதிப் படைக்கும் மோதல்கள் உருவாயின.

இரண்டே நாட்களில் விடுதலைப் புலிகளை அழித்துவிடலாம் என்று இந்திய அரசு போட்ட கணிப்பு தப்புக்கணக்காயிற்று. இரண்டாண்டுகளாகியும் புலிகளை ஒடுக்க முடியவில்லை. இந்தியத் தரப்பில் மிகக் கடும் இழப்புகள் ஏற்பட்ட வண்ணமிருந்தன.

தொடரும் முன் சிங்களரின் நிலைபற்றி ஒரு சிறிது ஆய்வோம்.

அண்மைக் காலத்தில் இலங்கைக்குள் இந்தியப் படை நுழைந்தது இது முதல் முறையல்ல. 1971இல் சிறீமா பண்டாரநாயக இலங்கையின் தலைமை அமைச்சராயிருந்த போது, அவரது வேண்டுகோளின் பேரில் அப்போது இந்தியாவின் தலைமையமைச்சராயிருந்த இந்திராகாந்தியால் ஒருமுறை படை அனுப்பப்பட்டது. ஆனால் அது வெளி உலகுக்கு அப்போது தெரியாது; பின்னர் தான் தெரிவிக்கப்பட்டது. அந்தச் சூழ்நிலை பின்வருமாறு “1960களின் இறுதியில் உலகமெங்கும் உருசியப் பொதுமைக் கோட்பாட்டை எதிர்த்து மூன்றாம் அணி என்ற பெயரில் வன்முறைக் கிளர்ச்சிக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. சீனாவின் பெயரில் அவை அமைக்கப்பட்டாலும் உருசிய எதிர்ப்பு விசைகளெல்லாம் அவற்றின் பின்னணியில் நின்றன. இந்தியாவில் உருவான நக்சலர்கள் அத்தகைய குழுவினரே.

இத்தகைய ஒரு குழுவே இலங்கையில் உருவான மக்கள் விடுதலை இயக்கத்தினர் (சனதா விழுக்தி பெரமுனா). அதன் தலைவரான ரோகன விசயவீர என்பவர் வேலையின்மையால் கசப்புற்றிருந்த இளைஞர்களைத் திரட்டி ஒரு ஆயுதப் புரட்சிக்குத் திட்டமிட்டார். ஆனால் அவர் தங்கள் வேலையின்மைக்கு மலையகத் தமிழர்கள் தான் காரணமென்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்தவும் தூண்டினார். இப்படிப்பட்ட இயக்கம் பெரும் வலிமை பெற்று சிரிமா ஆட்சிக்கு அறைகூவலாயமைந்த போது தான் தோழி இந்திராவின் உதவியை நாடி பல்லாயிரக்கணக்கான இளைஞர்களைப் பலி கொண்டார். (இந்திராவும் சிறீமாவும் உருசிய ஆதரவாளர்கள்.)

அப்போது தலைமறைவாயிருந்த ரோகன விசய வீர மீண்டும் அந்த இயக்கத்தை வளர்த்தெடுத்தார். இப்போது அவ்வியக்கம் தீவிர தமிழர் எதிர்ப்பைக் காட்டவில்லை. தமிழர்களின் உரிமைகளை ஏற்றுக் கொள்ளும் மனநிலையைப் பெற்றுவிட்டது போலத் தோன்றியது. முன் போலவே அரசுக்கு அச்சந்தரும் அளவுக்கு விரைந்த வளர்ச்சி பெற்று வந்தது. இந்த நிலையில் ஈழத் தமிழர்களையும் மக்கள் விடுதலை இயக்கத்தையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ள இயலாமல் தான் அப்போது இந்திய அமைதிப் படையை உள்ளே விட்டதாக அப்போதிருந்த இலங்கை குடியரசுத் தலைவர் செயவர்த்தன பின்னாளில் தெரிவித்தார்.

இந்திய அமைதிப்படை இலங்கையினுள் இருக்கும் போதே மக்கள் விடுதலை இயக்கத்தை அழிக்கும் இலங்கையரசின் செயல்திட்டம் நிறைவேறியது. படைத்துறை, காவல்துறை, ஆளும்கட்சி அமைத்த குண்டர் படை ஆகியவை ஒன்று சேர்ந்து மக்கள் விடுதலை இயக்க இளைஞர்களை பல்லாயிரக் கணக்கில் வெட்டி வீழ்த்தினர். சாலைகள், தோப்புகள், காடுகள் என்று எங்கெங்கும் பிணக்குவியல். தலைவர் ரோகன விசய வீரவும் கொல்லப்பட்டார்.

படைத்துறையினரும் காவல்துறையினரும் இப்படிக் கொடுமையாக நடந்து கொண்டதற்குக் காரணமும் கூறப்படுகிறது. மக்கள் விடுதலை இயக்கத்தினர் தங்களைப் பிடிக்கும் காவல்துறையினர் மற்றும் படைத்துறையினரின் குடும்ப உறுப்பினர்களைக் கொன்று பழிதீர்த்துக் கொள்ளும் உத்தியைக் கையாண்டது தான் அந்தக் காரணம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு இந்த இரு கட்டங்களிலும் ஒன்றரை இலக்கம் சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்களாம்.

தொடக்கத்திலிருந்தே ஈழச் சிக்கலில் இந்தியா தலையிடுவதைச் சில சிங்களத் தலைவர்கள் கடுமையாக எதிர்தனர். அவர்களில் அப்போதைய தலைமை அமைச்சரான பிரேமதாச முதலிடம் பெறுகிறார். இதை அவர் செயவர்த்தனவுக்கு எதிரான தன் அரசியல் நலன்களுக்காகவும் பயன்படுத்தினார். இந்தியப் படை இலங்கையிலிருப்பது இலங்கையின் இறைமைக்கே அச்சுறுத்தல் என்ற அவரது கருத்துக்குச் சிங்களரிடையில் செல்வாக்கிருந்தது. இந்தச் செல்வாக்கால் அவர் அடுத்த குடியரசுத் தலைவரானார்.

இப்போது இந்திய அமைதிப் படையைத் திருப்பி அனுப்பும் வேலையை அவர் தொடங்கினார். இந்த அடிப்படையில் அவர் விடுதலைப் புலிகளுடன் இணக்கம் ஏற்படுத்தினார். இருவரும் சேர்ந்து இந்தியப் படை வெளியேறக் குரல் கொடுத்தனர். இந்தியாவுக்குள்ளும் கண்டனக் குரல்கள் எழுந்தன. அமைதிப்படைத் தளபதிகள் கூடக் குறை கூறினர். வேறு வழியில்லாமல் இந்தியப் படையைப் பெரும் எதிர்பார்ப்புகளுடன் அனுப்பிய இராசீவ் காந்தி அதைத் திரும்பப் பெற ஒப்புக் கொண்டார்.

அதற்குள் இந்தியாவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. எனவே திட்டமிட்டதற்கு முன்பாகவே அமைதிப்படை விலக்கிக் கொள்ளப்பட்டது.

வியத்தாகிலிருந்து அமெரிக்கப் படைகள் பின்வாங்கிய போது வியட்நாமியப் யோராளிகள் தாக்குவார்கள் என்ற அச்சத்தால் வானூர்திகளில் ஏறுவதற்கு அமெரிக்க வீரர்கள் முண்டியடித்த நெரிசலில் கணிசமான எண்ணிக்கையில் உயிரிழந்தனர் அதுபோல இங்கும் நடந்து விடக்கூடாது என்பதற்காக அப்போது இந்தியத் தலைமையமைச்சராயிருந்த வி.பி.சிங் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி வழியாக பிரபாகரனுடன் தெடர்பு கொண்டு மானத்தோடு “இந்திய அமைதிகாப்புப் படையைத்” திரும்பப் பெற்றார். இதற்குள் கொழும்பிலிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கமும் தமிழ் மக்கள் விடுதலை அமைப்பின் (பிளாட்டின்) தலைவர் முகுந்தனும் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டனர்.

இப்போது ஈழம் விடுதலைப் புலிகளின் முழுக்கட்டுப்பாட்டிலிருந்தது. இலங்கைப் படையினர் "அமைதிப்படை" இருந்த போது இருந்தது போல் தங்களது பாசறைகளுக்குள்ளேயே இருந்தனர். விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் பேச்சுகள் நடந்து கொண்டிருந்தன.

இலங்கைப் படைகள் தங்கள் பாசறைகளை விட்டு வெளியில் நடமாடத் தொடங்கின. புலிகள் எதிர்ப்புக் காட்டினர். சிறிது சிறிதாக மோதல்கள் உருவாகித் திடீரென்று ஒரு நாள் புலிகள் வடகிழக்கு மாகாணத்தின் சிங்களர் பகுதி மீது தாக்குதல் நடத்தியதிலிருந்து மீண்டும் உள்நாட்டுப் போர் தொடங்கியது.

இந்திய அமைதிப்படை ஈழத்திலிருந்த போது விடுதலைப் புலிகளுடன் மோதல் நடை பெற்றுக் கொண்டிருந்த போதே ‘தற்காலிகமாக இணைக்கப்பட்ட’ "தமிழ் மாநி"லத் "தேர்தல்" நடைபெற்றது. புலிகள் புறக்கணித்த இந்தத் தேர்தலில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி வெற்றி பெற்று அதன் சார்பில் வரதராசப் பெருமாள் என்பவர் முதலமைச்சராகப் பதவியேற்றார். அவரையும் அவரது அரசையும் விடுதலைப் புலிகளிடமிருந்து காப்பாற்றுவதே இந்திய அமைதிப் படைக்குப் பெரும் வேலையாயிருந்தது. அமைதிப்படை வெளியேறிய கையோடு வரதராசப் பெருமாளையும் இந்தியாவுக்குக் கொண்டு வந்து ‘பாதுகாப்பு நோக்கங்களுக்காக’ பூனை தன் குட்டிகளை இடம் மாற்றுவதைப் போல் வெவ்வேறிடங்களுக்கு இந்திய ஆட்சியாளர்கள் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

புலிகள், இலங்கைப் படை ஆகியோரின் மோதல் தொடங்கியவுடன் இலங்கைப் படைக்கு ஒத்துழைப்பது குறித்துக் கலந்தாய்வு செய்வதற்காக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனித் தலைவர் பத்மநாப தில்லியிலிருந்து சென்னை வந்தார். ஆனால் அங்கே அவர் தன் கூட்டாளிகளுடன் சுட்டுக் கொல்லப்பட்டார். விடுதலைப் புலிகள் தான் அவரைக் கொன்றனர் என்று கூறப்படுகிறது. அவர் இயக்கத்தின் ஒரு குழுவைச் சேர்ந்த டக்ளர் தேவானந்த என்பவர் தான் அவரைக் கொன்றார் என்றும் கூறப்படுகிறது. இன்று இந்த தேவானந்தவின் கட்சியினர் சிங்களப் படையினருடன் இணைந்து நின்று ஈழப் புலிகளின் மறைவிடங்களைக் காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் நாள் இந்தியத் தேசியப் பேரவைக்கட்சியின் தலைவரும் (ஓரிரண்டு கால இடைவெளிகள் நீங்கலாக) நாற்பதாண்டுகளாகத் தொடாந்து இந்தியாவை ஆண்ட நேரு குடும்பத்தைச் சேர்ந்தவரும் இந்தியத் தலைமை அமைச்சராயிருந்த போது இந்திய-இலங்கை உடன்பாட்டை உருவாக்கி அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்பியவரும் தெற்காசிய மண்டலத்தில் வளர்ந்துவரும் தேசிய விடுதலை இயக்கங்களை ஒடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கோடு தெற்காசிய ஒத்துழைப்பு அமைப்பை (சார்க்) உருவாக்கிய இருபதாம் நூற்றாண்டின் ஆசிய மெட்டர்னிக்குமான[6] இராசீவ் காந்தி தமிழகத்திலுள்ள திருப்பெரும்புதூர் எனும் இடத்தில் ஒரு மனிதக்குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். விடுதலைப் புலிகளே இக்கொலைக்குக் காரணமானவர்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் இராசீவின் தாயாரான இந்திராகாந்தியின் கொலையைப் போலவே விடை கிடைக்காத பல கேள்விகள் இக்கொலையிலும் உள்ளன. மூடப்பட்ட நயமன்றத்திலுள் நடக்கவிருக்கும் உசாவலில் இந்தக் கேள்விகளுக்கு விடை வருமா என்பதை இப்போது கூற முடியாது.

இந்தக் கொலைகளைக் காரணம் காட்டித் தமிழக மக்களுக்கு ஈழப் புலிகள் மீது சிறிது சிறிதாக வெறுப்பூட்டப்ட்டது. இருப்பினும் அதையும் மீறி தமிழக மக்களுக்கு ஈழ மக்கள் மீது பரிவு அடிமனத்தில் இருந்தே வருகிறது.

மேலே கூறிய செய்திகள் எல்லாம் பெரும்பாலோர் அறிந்தவையே. அறியாதவை இந்த நிகழ்ச்சிகளின் அடியில் புதைத்து கிடக்கும் வகுப்புகளிடையிலுள்ள முரண்பாடுகளும் அவை எவ்வெவ்வகையில் செயலாற்றித் தங்களை வெளிப்படுத்திக் கொண்டன என்பதுமாகும்.

விடுதலைப் புலிகள் இயக்கம் தவிர பிற இயக்கங்கள் அனைத்திலும் தலைமை தாங்கியோர் யாழ்ப்பானத்துச் சிவனிய வேளாளர்களே. இது இயற்கையானதே என்று நாம் முன்பே கூறியுள்ளோம். ஈழத் தமிழரில் அதிகக் கல்வி வாய்ப்புப் பெற்று உயர் பதவிகளிலும் வாழ்ந்து வந்த இவர்களுக்கெதிராகத் தான் முதன்முதலில் தேசிய ஒடுக்குமுறை செலுத்தப்பட்டது. அதாவது அவர்கள் தான் அதை உணர்ந்து ஒன்று திரண்டு போரிடும் நிலையிலிருந்தார்கள். திரிகோணமலை மாவட்டத்தில் சிங்களக் குடியேற்றங்களின் மூலம் தமிழ் மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்ட போது அதற்கு எதிர்க்குரல் எழுப்பி அதனை அரசியலாக்கும் பொருளியல், பண்பாட்டியல் பின்னணி இழப்புக்குள்ளான தமிழ் மக்களுக்கு இல்லை. எனவே இவ்வொட்டுண்ணிகள் தான் தேசிய ஒடுக்குமுறைக்கெதிராக முதன்முதலில் குரல் கொடுத்தார்கள். அந்த ஒடுக்குமுறை முயற்சி ஒரு திட்டவட்டமான வடிவத்தில் தரப்படுத்தலாக வெளிப்பட்ட போது அவர்கள் ஆயுதந்தாங்கிய போராட்டத்தில் இறங்கினார்கள். போர் ஒரு கட்டத்தை அடைந்தது. படித்தவர்களில் மிகப் பெரும்பாலோர் வெளிநாடுகளில் சென்று வேலை தேடிக் கொண்டனர். தம் மக்களை அயல்நாடுகளுக்கனுப்பிப் படிக்க வைத்தனர். இனி இந்த நாடு தமக்கு உதவாது என்று உலகில் எந்த மூலையிலாவது ஓடி இடம் பிடித்து அமர்ந்து கொண்டனர். அங்கிருந்தவாறு இதுவரை தம்மால் இகழ்ந்து ஒதுக்கப்பட்ட பிற நாட்டுத் தமிழர்களோடு இணைந்து பண்பாட்டு இயக்கங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் இந்த வேரற்ற ஒட்டுண்ணிகள். இந்தப் பண்பாட்டு இயக்கங்களின் நோக்கம் என்னவென்றால் புதிய இடத்தில் தம் நலன்களுக்கு அழிவு ஏற்பட்டுவிடக் கூடாது என்பது தான்.

அப்படி ஓட முடியாதவர்கள் ஏதாவது அமைதித் தீர்வு ஏற்பட்டு விட்டால் கிடைக்கும் ஒட்டுண்ணி வாழ்க்கையே போதுமென்று எண்ணுபவர்கள் தான். எதிரிப் படைகளுடன் சேர்ந்து காட்டிக் கொடுப்போரோ சிங்களம் படித்துச் சிங்களராகவே மாறத் துணிந்துவிட்ட புல்லுருவிகளே. பத்மநாப, தேவானந்த எனும் அவர்களின் பெயர்கள் விகுதியின்றி சிங்களர் பெயர் போன்ற வடிவத்தை ஒரு தலைமுறைக்கு முன்பே பெற்றுவிட்டதைக் காணலாம்.

இப்படி எந்த மாற்றுப் பாதையும் நாடாமல் எதிரியை எதிர்த்து நின்று விடுதலைப் புலிகளுடன் இணைந்து நின்று போராடுவோர் இரு பிரிவினரே. ஈழக் கடற்கரையில் இருந்து கடல் தரும் உணவை நம்பி வாழும் மீனவரும் உள்நாட்டில் உழுது பயிருட்டு உணவு தரும் உழவர்களுமே. இவர்களில் தப்பினோம் என்று கருதி எதிலிகளாக இந்தியா வந்துவிட்டவர்களோ இங்கு தாம் வாழும் அவலமும் இழியும் மிக்க வாழ்வை விடத் தம் பிறந்த மண்ணில் நின்று எதிரியுடன் போரிட்டு மானமுடன் மடிந்திருக்கலாமேயென்று ஏங்குகின்றனர்.[7]

இவ்வாறு இந்த இருபிரிவு மக்களும் மட்டும் நிலைத்து நிற்கக் காரணம் என்ன?

இலங்கையரசு தாய்மொழிவழிக் கல்வியையயும் வேலைவாய்ப்பையும் மட்டும் தமிழர்களிடமிருந்து பறிக்கப் பார்க்கவில்லை. சிங்களர்களின் குடியிருப்புகளை ஏற்படுத்தி தமிழர்களின் மண்ணையும் பறித்து வருகிறது. எனவே அந்த மண்ணைக் காப்பதற்காக அம்மக்கள் அம்மண்ணில் நிலைத்து நின்று இடைவிடாத விடுதலைப் போரை நடத்தி வருகிறார்கள். மண்ணில் வேர் ஊன்றாத ஒட்டுண்ணிகள் ஓடி விட்டாலும் எதிரியோடு சேர்ந்து கொண்டாலும் தாங்கள் ஒரு போதும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று உறுதியாயிருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல காலமாக வரலாற்றில் அரிதாகவே கிடைக்கத் தக்க ஒரு தலைமை அமைந்திருக்கிறது.

விடுதலைப் புலிகளின் தலைமை, அது பிரபாகரனாயிருந்தாலும் சரி, அவருடைய கருத்துரைஞர்கள் துணைவர்களுடன் சேர்ந்ததாயிருந்தாலும் சரி சரியான சூழ்நிலைக்குச் சரியான முடிவுகளை எடுத்துச் செயற்பட்டு வெற்றிகளையும் எய்தி வருகிறது. தங்களை நேராகத் தாக்காத எந்தக் கேள்விக்கும் விடை கூற அவர்கள் முற்பட்டதில்லை. படைகொண்டு தாக்கிய இலங்கை அரசுக்கு அதன் மொழியிலேயே மறுமொழி கூறி வெறும் போரிடும் இயக்கமாகத் தோன்றிய அது ஈழத்தின் ஒரு பகுதி தன் முழுக்கட்டுப்பட்டினுள் வந்த போது ஏற்பட்ட சட்டம், பொருளியல், தொழில் நுட்பம் போன்ற பொருளியல், பண்பாட்டுச் சிக்கல்களுக்கு மிகப் புரட்சிகரமான தீர்வுகளை எடுத்து வருகிறது. வெளி உதவிகள் பல வகைகளிலும் குறையக் குறையச் சிறிது சிறிதாகத் தன் சொந்த வளங்களைக் கொண்டே அது தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. அது தன் குறிக்கோளில் வெற்றி பெறப்போவது உறுதி. அப்போது அது ஏழை நாடுகளுக்கு ஒரு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் விளங்கப் போகிறது.

பிரபாகரன் மாற்றியக்கத் தலைவர்களையும் தன் இயக்கத்திலுள்ள சில தலைவர்களையும் கொன்றது சுட்டிக்காட்டப்படுகிறது. பொதுவாகத் தலைவர்களுக்குள் முரண்பாடுகள் ஏற்படும் போது அது தனிப்பட்ட முறையில் உண்டான முரண்பாடா அல்லது கொள்கையடிப்படையில் அமைந்த முரண்பாடா என்பதை இனங்காணுவது கடினம். இன்றைய இந்தியாவைப் போல் குறிப்பிட்ட கொள்கை அல்லது கோட்பாடுகள் இன்றி ஆதாயம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு மட்டும் அரசியல் நடைபெறும் போது இது தனிப்பட்டவர்களின் போட்டி ஒன்றையே அடிப்படையாகக் கொண்டதாக அமைகிறது. ஆனால் காந்திக்கும் போசுக்கும் ஏற்பட்ட முரண்பாடு திட்டவட்டமான கொள்கையினடிப்படையில் உருவானது. அவ்வாறே லெனினுக்கும் திராட்கிக்கும் உருவான முரண்பாடும். புத்தர், முகம்மது நபி போன்றோருக்கும் அவரவர் காலத்திலேயே போட்டிகள் உருவாகி அவர்கள் அவற்றை அடக்கி ஆதிக்கம் பெற்றனர். இதில் வெற்றி பெற்றவர்களின் தலைமைக் காய்ச்சல் எவ்வளவு இருந்தது கொள்கைப் பற்று எவ்வளவு இருந்தது என்பதை அறிவது கடினம். இரண்டும் ஒன்றையொன்று ஊடுருவி நிற்கின்றன. தன் கொள்கையைக் காப்பாற்றுவது ஒரு புறம். இன்னொரு பக்கம் தான் ஒரு தலைவனை வீழ்த்த வேண்டும் என்று கருதும் போது ஒரு கொள்கைச் சிக்கலைக் காரணமாகக் காட்டி அத்தலைவனை வீழ்த்தி தான் ஆதிக்கம் பெறுவது மற்றொன்று. இந்த வகையில் ஆதிக்கம் பெற்ற பின் தன் கொள்கையைக் கைவிட்டுக் காட்டிக் கொடுக்கவும் செய்யலாம். அல்லது தான் தன் நலன் கருதி ஏறிய புலியை விட்டுக் கீழிறங்க முடியாமல் குறிக்கோளை நோக்கிச் செல்லக்கூடிய கட்டாயத்துக்கும் ஆளாகலாம். இத்தகைய இயங்கியல் உறவில் தான் கொள்கைகளும் குறிக்கோள்களும் தலைவர்களும் தொண்டர்களும் மக்கள் திரளினரும் இயங்குகின்றனர். இப்படிச் சிக்கலான, தூய்மையானதென்று குறிப்பிட முடியாத வகையில் தான் மனித இனம் முன்னேறிச் செல்கிறது.

இந்த வெளிச்சத்தில் பார்க்கும் போது பிரபாகரனின் தலைமைப் போராட்டத்தில் எங்கே எவ்வளவு கொள்கைப் போராட்டம் இருக்கிறது எவ்வளவு தனிமனிதப் போராட்டம் இருக்கிறது என்பதை அறுதியிட்டுக் கூறுவது கடினம். கொள்கையின் வெற்றி தனிமனிதனாகிய தலைவனின் வெற்றியைச் சார்ந்தே இருக்கிறது என்கிற அதே வேளையில் அப்போதைய குமுகத்தின் மனநிலையைப் பொறுத்தும் இருக்கிறது. ஆனால் அந்த மனநிலையை உருவாக்குவதிலும் தலைவனின் பங்கு உண்டு. சூழ்நிலைகள் என்ற புறநிலைகளுக்கிசைய மக்களின் அகநிலையைப் பக்குவப்படுத்துவதும் தலைவனின் திறமையைப் பொறுத்ததே. இவ்வாறு தலைமை, புற, அகச்சூழ்நிலைகள் என்ற இயங்கியல் எதிரிணைகளின் வினைப்பாடே வெற்றிக்கு இட்டுச் செல்கிறது.

ஈழப் புலிகள் தலைமையின் சிறப்பு என்ன வென்றால் அது எதிரியின் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாகக் கவனித்து அதற்கு எதிர் நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்வது தான். பேச்சுக்களையோ வாக்குறுதிகளையோ போலியான மனிதநேயக் கோட்பாடுகளையோ அது நம்பாதது தான். வெற்றி என்பதைத் தவிர வேறெந்தக் கோட்பாட்டையும் பின்பற்றாத ஆங்கிலேயரிடம் ஊமைத்துரை காட்டிய தவறான “மனிதநேயம்” விடுதலைப் போராளிகளுக்குக் கேடு விளைவிப்பது என்பதை ஈழப் புலிகள் தம் வெற்றியால் நமக்கு விளக்குகின்றனர். தன்னை எப்போதும் காட்டிக் கொடுக்க ஆயத்தமாயிருந்த எட்டப்பனை விட்டு வைத்திருந்த கட்டபொம்மனின் தயக்கம் விடுதலைப் புலிகளுக்கு இல்லை.

ஈழத்தில் வாழும் முகம்மதியர்களின் உள்ளூர் தலைவர்கள் சிங்களர்களால் தம் நிலங்கள் பறிக்கப்படுவதைக் கண்டு ஈழ விடுதலைப் போரில் தாய் மதத்துத் தமிழர்களுடன் தங்களை இணைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களின் உயர்மட்ட ஒட்டுண்ணித் தலைவர்கள் முகம்மதியர்கள் தனித் தேசிய இனம் என்று சிங்களப் பகுதியில் வாழ்கின்றவரோடு சேர்ந்து இலங்கை முகம்மதியப் பேரவைக் கட்சியை உருவாக்கினர். இலங்கை அரசு அமைச்சரவையில் இந்த ஒட்டுண்ணிகளுக்கு நிறையப் பதவிகளும் அளித்து ஊக்கம் கொடுத்தது. இதனால் வட மாகாணமும் வடகிழக்கு மாகாணமும் இணைவதைச் சிங்களவருடன் சேர்ந்து முகம்மதியர்கள் எதிர்க்கின்றனர். அதனாலேயே விடுதலைப் புலிகள் சிங்களவரோடு சேர்த்து முகம்மதியர்களையும் ஈழத்தை விட்டு விரட்டும் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். முகம்மதியர்கள் தனித் தேசியம் என்பதற்கு கன்ணெய்யக் காசு[8] பொங்கி வழியும் அரபு நாடுகளின் தூண்டுதலும் இவ்வொட்டுண்ணிகளுக்கு உண்டு.

ஈழ விடுதலைப் போரின் ஒரு முகாமையான கூறு அங்குள்ள பெரும்பான்மைத் தேசியத்தின் முரட்டுத்தனமாகும். அது தன் ஒடுக்குமுறையை எவ்விதமான மறைமுக உத்திகளையும் கையாண்டு செயற்படுத்தவில்லை. மாறாக தனக்குள்ள எண்ணிக்கை வலிமையின் அடிப்படையில் நேரடியாகவும் முரட்டுத்தனமாகவும் செயற்படுத்துகிறது. தேர்தல் மூலம் பெரும்பான்மையரான சிங்களர் அந்த வலிமையால் படைத் துறையையும் காவல்துறையையும் முழுமையாகக் கைப்பற்றிவிட்டதால் இந்த நேரடித் தாக்குதல் இயல்வதாயிற்று. இந்தச் சூழல் ஈழத் தேசிய விசைகளின் பணியை எளிதாக்கிற்று. ஆளும் அரசு ஈழ மக்களுக்கு எதிரானது என்பதையோ தம் மீது ஒரு தேசிய ஒடுக்குமுறை நிகழ்த்தப்படுகிறது என்பதையோ சுட்டிக்காட்டுவதற்கு ஈழத் தேசிய இயக்கம் தனியாக ஆற்றல் எதையும் செலவழிக்கத் தேவையில்லை. தேவைப்பட்டதெல்லாம் தங்களை விட எண்ணிக்கையிலும் பொருளியல் பின்னணியிலும் கருவிகளின் நுண்மைணிலும் அளவிலும் மேம்பட்ட ஒரு எதிரியைத் தடுத்தும் தாக்கியும் வெற்றி பெறுவது மட்டுமே. அப்பணியை ஈழப் புலிகள் வெற்றியுடன் நிறைவேற்றி வருகின்றனர்.

ஈழச் சிக்கல் தொடக்கத்திலிருந்தே இலங்கை அரசும் சிங்களர்களும் எடுத்த ஆயுதந்தாங்கிய அடக்குமுறையிலிருந்து எழுந்ததால் எங்குமே போட்டிகளைக் கொலைகளைக் கொண்டு முடிக்கும் நிலை தவிர்க்க முடியாமல் உருவாகிவிட்டது. அந்தச் சூழ்நிலையில் முதுகுக்குப் பின்னாலிருக்கும் வாளான எட்டப்பன்களைக் கட்டபொம்மன் செய்யத் தவறியது போல் களையாமல் இருக்கவில்லை என்று பிரபாகரனைக் குறை சொல்வோர் ஈழப் போராட்டத்தை வெற்றியுற நடத்திச் செல்கிறாரே அவர் என்ற வெறுப்பாலேயே அவ்வாறு கூறுகின்றனர் என்று தள்ளத்தக்கவரே.

இவ்வாறு ஈழ விடுதலைப் போர் ஒரு பெரும் உண்மையைச் சுட்டிக் காட்டுகிறது. எந்தத் தேசியத்திலும் தேசியச் சிக்கல் முதன்முதலில் அத்தேசியத்திலுள்ள மக்களின் மிக மேல்தட்டிலிருக்கும் ஒட்டுண்ணிகளால் தான் தொடங்கி வைக்கப்படுகிறது. ஆனால் தொடர்ந்து அதன் உண்மையான இலக்கை நோக்கிப்போவது அதற்கு அமையும் சரியான தலைமையில் அணிதிரளும் அம்மண்ணில் வேர்கொண்டு நிற்கும் உழவர்களும் உழைப்பாளி மக்களும் தான். அவர்களே லெனின் கூறிய முரண்பாடற்ற புரட்சிகர வகுப்பு.

தமிழகத்தில் திராவிடர் இயக்கம் பொருளியல் சாரத்தைக் கைவிட்ட போது அதற்குச் சரியான எதிர்ப்பு எதுவும் உருவாகாததற்குக் காரணம் அதுவரை அதன் பக்கமிருந்த வலுவான பொருளியல் நலன்கள் இந்தியப் பொருளியல் அழுத்தத்தின் முன் வீழ்ந்து விட்டதும் புதிய பொருளியல் விசைகள் வலுவான முறையில் உருவாததும் ஆகும். அத்துடன் மண்ணை அடிப்படையாகக் கொண்ட கோட்பாட்டுடன் சரியான தலைமை எதுவும் உருவாகாததும் அதைவிட முகாமையான காணமாகும். புதிய பொருளியல் முனைவுகளைக் கருவறுப்பதற்கென்றே ஏழை நாடுகளில் களமமைத்துள்ள "புரட்சியாளர்களை"யும் நாம் இதனுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

நாம் முன்பு கூறிய திருவிதாங்கூர் தமிழ்நாடு பேரவைக் கட்சி முதலில் தேவிகுளம், பீர்மேடு வட்டங்களும் தமிழகத்துடன் இணைய வேண்டுமென்றே போராட்ட காலத்தில் கேட்டு வந்தது. ஆனால் இறுதிக்கட்ட பேரத்தில் தேவிகுளம்- பீர்மேட்டைக் கைவிட இசைந்து விட்டனர். அது ஏன்? இப்போராட்டத்தின் தலைமை சி.பி.இராசாமி ஐயரால் அளிக்கப்பட்ட கட்டாயக் கல்வியால் பயன்பெற்று ஒட்டுண்ணி வேலைவாய்ப்பை நாடிநின்றவர்களின் தலைமையாகவே இருந்தது. தேவிகுளம்-பீர்மேடோ அந்தக் கல்வியைப் பெறாத பகுதி; இன்று கேரள அரசுக்குப் பெரும் வருமானத்தை ஈட்டித் தரும் மலைபடுபொருட்களை வழங்கும் வளமிக்க மேற்குமலைத் தொடர்ப் பகுதி. எனவே மண்ணில் வேரில்லாத ஒட்டுண்ணிகளுக்கு மண்ணோடு இயைந்து வாழும் அந்த மக்களின நலன் பெரிதாயிருக்கவில்லை.

எனவே எந்த ஒரு தேசியத்துக்கும் உண்மையான பற்றுள்ள மக்கள் அதன் மண்ணில் வேர்கொண்டு நிற்கும் உழவர்களும் பிற உழைக்கும் மக்களுமே.[9] இந்த உழைக்கும் மக்களைச் சார்ந்து நிற்கும் போது தான் அந்தத் தேசியம் தன் இறுதி வெற்றியை எய்த முடியும். அதே நேரத்தில் எந்தத் தேசிய இயக்கமும் அதன் மேல் தட்டு ஒட்டுண்ணி வகுப்பால் தான் தட்டியெழுப்பப்படுகிறது என்பதையும் தன் சொந்த நலனுக்காக அத்தேசியத்தின் எதிரிகளுடன் தனக்குள்ள முரண்பாட்டைத் தீர்த்துக் கொள்வதற்காக அது இதனைச் செய்கிறது என்பதையும் இதிலும் இயங்கியல் செயற்படுகிறது என்பதையும் சொல்லியாக வேண்டும்.

ஈழ விடுதலைப் போர் காட்டும் தேசியச் சிக்கலிலுள்ள இன்னொரு உண்மையையும் நாம் கண்டு கொள்ள வேண்டும். தேசிய எதிரி அத்தேசியச் சிக்கலை எவ்வாறு கையாள்கிறான் என்பதைப் பொறுத்தும் தேசிய இயக்கத்தின் வெற்றி தோல்விகள் அமைகின்றன. இங்கே சிங்கள எதிரி மறைமுகமான எந்த வழியையும் கடைப்பிடிக்காமல் நேரடியாக ஆயுதங்கொண்டு தாக்கத் தொடங்கியதால் ஈழத் தமிழ் இளைஞர்கள் ஆயுதந்தாங்குவது தவிர்க்க முடியாமல் போனது மட்டுமல்ல அவர்களை ஆதரிப்பதும் அவர்களுக்குப் பின்புலமாக இருப்பதும் அம்மக்களுக்கு தவிர்க்க முடியாததாயிற்று. அவ்வாறு ஆயுதத்துடன் வராமல் மறைமுகமான வழிகளில் ஒடுக்கும் எதிரியை எதிர்க்க அதற்கேற்ற உத்திகளை வகுத்துக் கொள்ள வேண்டும் என்பதும் ஈழ விடுதலைப் போர் தரும் முகாமையான பாடமாகும்.

அடிக்குறிப்புகள்:

[1] Chamber's Twentieth Century Dictionary,1972 இந்தச் செய்தியைச் சுட்டிக் காட்டியவர் பேரா.இரா.மதிவாணன் அவர்கள்.

[2] கண்ணாடியையும் வெடிமருந்தையும் சீனர்கள் தான் முதன்முதலில் கண்டுபிடித்தார்கள் என்ற கருத்தை மறுப்பதாக இது உள்ளது. ஒருவேளை மூக்குக் கண்ணாடியையும். வானவேடிக்கை வகைகளையும் அவர்கள் கண்டுபிடித்திருக்கலாம்.

[3] மணிபல்லவம் என்பது ஈழத்தைச் சுற்றியுள்ள தீவுக்கூட்டகளிலொன்று. இன்று இரத்தினத்தீவு என்று அழைக்கப்படுகிறது. மேலும் மணிமேகலைக்கும் இலங்கைக் கயவாகு மன்னனுக்கும் தொடர்பு ஏற்பட்டது இங்கு தான். பெண்கள் கடல் மீது செல்லக் கூடாது என்ற இலக்கியத் தடை இருந்ததால் அவளை மணிமேகலா தெய்வம் தூக்கிச் சென்றதாகச் சாத்தனார் கூறுகிறார். சோழநாட்டில் கொடும் பஞ்சம் ஏற்பட்ட போது மணிபல்லவத்திலிருந்து பெறப்பட்ட “அமுத சுரபி”யிலிருந்து தான் மணிமேகலை மக்களுக்கு உணவளித்து அவர்களது ஆதரவைப் பெற்றாள். இவ்வமுதசுரபி இலங்கை மன்னனளித்த உதவியேன்றி வேறல்ல. தமிழகத்துப் பஞ்சத்துக்கு உதவும் அளவில் இலங்கையில் உணவு விளைந்ததா என ஐயுறுவோர் “ஈழத்துணவும் காழகத்தாக்கமும்” என்ற கழகப் பாடல் வரியை நினைவு கூர்க.

[4] Castes and Tribes of Southern India.

[5] தமிழகத்திலுள்ள சில தாளிகைகள் (பத்திரிகைகள்) அனைத்து ஈழ விடுதலை அமைப்புகளையும் வேறுபாடின்றி அண்மைக் காலம் வரை “விடுதலைப் புலிகள்” என்றே குறிப்பிட்டன.

[6] மெட்டர்னிக் என்பவர் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆத்திரிய நாட்டுத் தலைமையமைச்சர். அப்போது ஐரோப்பாவில் கொழுந்துவிட்டெரிந்துகொண்டிருந்த தேசிய விடுதலை இயக்கங்களை ஒடுக்குவதற்கென்று ஒரு திட்டத்தை மேற்கு ஐரோப்பிய நாட்டு ஆட்சியாளர்களின் ஆதரவுடன் உருவாக்கியவர். மேற்குப் பேலியா உடன்படிக்கை எனப்படும் இத்திட்டம் உறுப்பு நாடுகளுக்கிடையிலிருந்த முரண்பாடுகளினால் செயற்படவில்லை. பின்னர் உள்நாட்டில் எழுந்த கொந்தளிப்புகளால் கடைந்தெடுத்த பிற்போக்கினரான மெட்டர்னிக் நாட்டை விட்டோடினார். மேற்கு பேலியா ஒப்பந்தமும் சார்க் உடன்படிக்கையும் அடிப்படையில் ஒரே தன்மையுடையன.

[7] ஈழ விடுதலைப் போரில் ஈடுபட்டு உண்மையாகப் பாடுபடுவோர் அனைவரும் இவ்விரு வகுப்புகளை மட்டும் சேர்ந்தவர்களென்றோ இவ்விரு வகுப்புகளையும் சேர்ந்த அனைவரும் இப்போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர் என்றோ இதற்குப் பொருளில்லை. இதில் அனைத்து வகுப்புகளிலுள்ள புரட்சிகர ஆற்றல்களும் ஈடுபட்டுள்ளன. அவ்வாறில்லாதவை அதைப் புறக்கணிக்கவோ எதிர்க்கவோ. செய்கின்றன. தலைமைக்கும் கூட இது பொருந்தும். ஆனால் மேலாதிக்கம் செய்யும் கோட்பாடு இவ்விரு வகுப்பாரின் நலன்களைப் பேணுவதாயிருக்கிறது.

[8] பெட்ரோலியக் காசு

[9] இந்த உழவர் உழைப்பாளி மக்கள் வல்லரசியத்தின் நேரடி அல்லது நிறுவன ஆதிக்கத்தினுள் வராத நிலக்கிழமை சார்ந்த மரபு வேளாண்மை. மரபுத் தொழில்களில் ஈடுபட்டோரே. பெருந்தொழில் அல்லது அரசுத்தொழில் உழைப்பாளிகளை இது குறிக்காது. இந்த பெருந்தொழில் உழைப்பாளிகள் வல்லரசியத்தின் பணியாட்களாகவே செயற்படுகின்றனர்.

0 மறுமொழிகள்: