20.4.07

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 6. சட்டங்களும் அரசியலும்

தமிழகத்தில் எழுதப்பட்ட சட்டங்களென்று எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. மனுச் சட்டத்தைக் கொண்டு தமிழகத்தில் ஆட்சி செய்ய முயற்சிகள் நடந்துள்ளன. ஆனால் அது மக்களிடமிருந்து இடைவிடாத எதிர்ப்புகளைக் கிளப்பிக் கொண்டே இருந்தது; இடங்கை வலங்கைப் போராக அது வெடித்துக் கிட்டத்தட்ட எண்ணூறு ஆண்டுக்காலம் தமிழகத்தைக் கலக்கியது. ஆங்கிலேயர் இங்கே நிலை கொண்ட பின்னரே அந்தப் போராட்டம் அடக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட கீழ்ச்சாதி மக்கள் அடங்கிக் கிடக்க வேண்டியதாயிற்று.

எழுதப்படாத சட்டங்களாகச் சாதி மரபுகள் இன்றும் நிலவுகின்றன. இத்தகைய மரபுகளில் மேற்சாதியினருக்கும் கீழ்ச்சாதியினருக்கும் ஒரு வேறுபாட்டைக் காணலாம். பிற சாதிகளுடன் உள்ள உறவுகள் குறித்து காணப்படும் அளவுக்கு சாதியினுள் நடைபெறும் அன்றாட வாழ்வில் மேற்சாதியினரிடையில் ஒரு குமுகக் கட்டுப்பாடு இல்லை என்பது இன்றைய நிலை. மாறாகக் கீழ்ச்சாதியினரிடையில் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு நடவடிக்கையையும் குமுகத்தால் கட்டுப்படுத்த முடியும்.

முன்பு மேற்சாதியினர் வாழ்ந்த பகுதிகளில் அமைந்திருந்த பெருங்கோயில்களில் அவர்களது அரசியல் நடவடிக்கைகள் நிலைகொண்டிருந்தன. இன்று இந்த அமைப்பு தகர்ந்துவிட்டது. இன்று தேர்தல் அரசியல் தவிர அவர்களுக்கு வேறொன்றும் இல்லை என்றே கூற வேண்டும். ஆனால் நாட்டுப் புறங்களிலுள்ள கீழ்ச்சாதியினரிடம் அவர்களுக்குரிய அம்மன் கோயில்கள் அல்லது வேறு சில கோயில்கள் அவர்களது அரசியல் அரங்கங்களாகச் செயற்படுகின்றன. இந்த ஆட்சிமுறை இன்றும் அவர்களிடையில் செல்வாக்குச் செலுத்துகிறது.

ஒவ்வொரு சிற்றூருக்கும் அல்லது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழும் ஒவ்வொரு சாதிக்கும் ஓர் ஊர்க் கோயில் உண்டு. அந்த ஊர்க் கோயிலில் அதைச் சேர்ந்த மக்கள் மாதத்துக்கொரு முறை கூடுவர். கூடி ஊரின் நடைமுறைகள் பற்றியும் அன்றாடச் சிக்கல்கள் பற்றியும் கலந்துரையாடுவர். வழக்குகளும் இவ்வூர்க் கூட்டங்களில் மூதலித்துத் தீர்ப்பளித்துத் தண்டனைகள் உண்டாயின் நிறைவேற்றப்படும். இவ்வூர் மன்றத்தின் தலைவராக அம்பலக்காரர், மூப்பனார், சேர்வை, நாட்டாண்மை போன்ற பட்டங்களைக் கொண்ட ஊர்த் தலைவர்கள் செயற்படுவர். நிலப் பகுதிகள் அல்லது சாதிகளுக்கு ஏற்றாற்போல் இப்பட்டங்கள் மாறுகின்றன. திருமணங்களிலும் பூப்பெய்தல், சாவு போன்ற நிகழ்ச்சிகளிலும் வீட்டார் ஊருக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்கள் இம்மன்றத்தால் தண்டப்படுகின்றன. கோயில் திருவிழா போன்றவற்றை நடத்துவதற்கு வரி விதிக்கப்படுகிறது. வரி கட்டுவோர் ஒவ்வொருவரும் ஒரு வரி எனக் கணக்கிடப்படுகின்றனர். வரிகளின் எண்ணிக்கை, பொதுவாக அகவை அடைந்த ஆண்களின் எண்ணிக்கையாக அமைகிறது. மணமாகாதவன், மணமானவன் என்ற அடிப்படையில் சில இடங்களிலும் வேலைக் கூலி அடிப்படையில் அரை ஆள் முழு ஆள் என்று சில இடங்களிலும் வரி விதிக்கப்படுகிறது. சிலவிடங்களில் குடும்பத் தலைவருக்கொன்றாகத் தலைக்கட்டு வரி தண்டப்படுகிறது.

இவ்வூர்மன்றங்களில் பணப்பண்டுகளும் நடத்தப்படுவதுண்டு. அதன் மூலம் ஏலச்சீட்டுகள் நடத்துவதும் வட்டிக்குக் கடன் கொடுப்பதும் உண்டு. வரி விதிப்புக்குத் தகுதியான ஒவ்வொருவரும் ஊர்க்கூட்டங்களில் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும். அவ்வாறு கலந்து கொள்ளத் தவறுவோர்க்குப் பிழை (தண்டம்) போடப்படும். குடி மராமத்து எனப்படும் பொதுப்பணிகளில் மக்களைத் திரட்டி குளக் கரைகளைச் சீர்படுத்தல், வாய்க்கால்களைத் தூர் எடுத்தல் சாலைகளைப் பழுது பார்த்தல் முதலிய வேலைகளையும் இவ்வூர் மன்றங்கள் செய்கின்றன.

ஆனால் இந்த ஊராட்சி முறை இன்று கோயில் திருவிழாக்கள், திருமணம் போன்ற வாழ்வுச் சடங்குகள் என்ற வகையில் தன் ஆட்சியைச் சுருக்கிக் கொண்டுவிட்டது. சில வழக்கு உசாவல் நடவடிக்கைகளை இன்றும் இந்த ஊர் மன்றங்கள் கையாளுகின்றன.

கீழ்ச்சாதிகளின் சட்டங்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டில் மேற்சாதியினரோ அல்லது கீழ்ச்சாதியினரில் தோன்றிய பார்ப்பனியர்களோ (அதாவது செல்வப் பெருக்கால் பார்ப்பனியம் எனும் வெள்ளாளக்கட்டு மேற்கொண்டவர்களோ) இன்று தலைமை தாங்கி அவற்றை உருக்குலைத்து வைத்துள்ளனர். தங்கள் கைக்கூலிகள் மற்றும் அடியாட்களின் துணை கொண்டு பெரும்பான்மை மக்களை அடக்கி ஒடுக்கி வைக்க முயலுகின்றனர். இதுவே இவ்வாட்சி முறை சுருங்கி விட்டதற்குக் காரணம்.

இந்த வழக்கு உசாவல்களில் பெரும் கொடுமைகள் நிகழ்ந்தன. ஊரில் வல்லாண்மை பெற்றோர் தம் எதிரிகளையும் தம் அதிகாரத்துக்கு எதிராகக் குரல் எழுப்பியவர்களையும் தண்டிப்பதற்கு இந்த வழக்கு உசாவல்களைப் பயன்படுத்தினர். தங்களுக்கு வேண்டாதவர்கள் மீது கைக்கூலிகளை வைத்துப் பொய்க்குற்றம் சுமத்தி குற்றச்சாட்டு பொய் என்று நிறுவுவதற்கு கொதிக்கும் எண்ணையில் கையைவிட்டு அல்லது நெருப்பைக் கையில் எடுத்து அதனால் புண் ஏற்படாமல் இருக்க வேண்டுமென்று கூறப்பட்டது. அதுபோல் குற்றஞ்சாட்டப்பட்டவன் தனக்கு வேண்டியவனாக இருந்தால் வழக்கைத் திருப்பிக் குற்றம் சுமத்தியவனையே குற்றவாளியாக்கித் தண்டம் கட்ட வைப்பது அல்லது குற்றமற்ற ஒருவன் மீது வேண்டுமென்றே குற்றம் சுமத்தி அவனைத் தண்டம் கட்ட வைக்கும் “கட்டைப் பஞ்சாய. முறையும் இவ்வூர்ப் பஞ்சாயங்களில் நடைபெற்றன. இந்தக் காரணங்களால் தான் மக்கள் நய(நீதி)மன்றங்களை நாடவேண்டியதாயிற்று. இன்றும் சட்டம் எட்டமுடியாத மூலை முடுக்குகள் இருக்கின்றன. அங்கெல்லாம் இத்தகைய கொடும் பஞ்சாயங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

உருக்குலைந்து நிற்கும் இந்த ஊராட்சிமுறை இன்றைய வாக்குச் சீட்டு ஊராட்சிகளை விடத் தரத்தில் பன்மடங்கு உயர்ந்தது. இங்கு அகவையடைந்த ஒவ்வொரு ஆண்மகனும் கலந்து கொள்கிறான். அவனுக்குத் தெரியும்படியாக அனைத்து ஊராட்சி அலுவல்களும் நடைபெறுகின்றன. மாறாக, வாக்குச்சீட்டு ஊராட்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மட்டுமே ஊராட்சியின் அலுவல்களில் பங்கு கொள்கின்றனர். நடைமுறையில் அதுகூட முறைப்படி நடைபெறுவதில்லை. ஊராட்சி மன்றத் தலைவரும் எழுத்தரும் அல்லது செயற்பாட்டு (நிர்வாக) அதிகாரியும் சேர்ந்து உருவாக்கும் தீர்மானங்கள் பதிவேட்டில் எழுதப்பட்டு உறுப்பினர்களின் ஊடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஒப்பம் பெறப்படுகின்றன. கணக்கில் காட்டப்படும் செலவுகளில் அவரவர்களுக்கு உரிய “பங்கு” சென்று சேர்ந்து விடுகிறது. ஒரு சாலையோ வாய்க்காலோ குளமோ சீர் செய்யப்பட்டதாகத் தீர்மானம் எழுதப்பட்டு கணக்கில் செலவு காட்டப்பட்டு பணம் பங்கு போடப்பட்டால் அது அவ்வூர் மக்கள் எவருக்கும் தெரியாது; அப்படித் தெரிவிக்க வேண்டிய கடமை சட்டப்படி ஊராட்சி மன்றத்தைச் சேர்ந்த யாருக்கும் கிடையாது; அவ்வாறு காட்ட வேண்டுமென்று கேட்கும் உரிமை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் தவிர்த்த எந்தக் குடிமகனுக்கும் கிடையாது. இவ்வாறு மக்களைத் தேர்தலின் பெயரால் ஏமாற்றி அவர்களை அப்பால் துரத்திவிட்டு நடத்தும் கொள்ளையே அரசு நடத்தும் வாக்குச்சீட்டுத் தேர்தல் முறையாகும். இதனை மாற்றிப் பழைய முறையில் ஆனால் வழிவழியாக வரும் நாட்டாண்மைக்குப் பகரம் (பதிலாக) தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்களைக் கொண்டு மக்கள் நேரடிப் பங்கேற்று நடத்தும் ஊராட்சி அமைப்பை உருவாக்குவது புதிய அரசியல் முறையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு சட்டங்களையும் அரசியல் அமைப்பையும் மட்டும் தவிர்த்தும் நேரடியாகவும் மாற்றும் முயற்சிகள் வெற்றி பெற மாட்டா. இது பட்டறிவு நமக்குக் காட்டும் படிப்பினை. இம்மாற்றங்களைச் செய்ய முற்படுவோர் பெரும்பான்மை மக்களின் அசைக்க முடியா நம்பிக்கையைப் பெற்றோராக இருக்க வேண்டும். பல திசைகளிலிருந்தும் அன்றாடம் நாட்டுப்புறக் கீழ்ச்சாதி மக்களின் வாழ்வைக் கொத்திக் குதறிக் குருதியைக் குடிக்கும் நகர்ப்புறத் தரகுச் சுரண்டல்களிலிருந்து அவர்களைத் தற்காத்துக் கொள்ள அவர்களுக்கு வழிகாட்டி வழிநடத்திச் செல்லும் ஓர் இயக்கத்தால் தான் இந்தப் பண்பாட்டு மாற்றங்களை மேற்கொள்ள முடியும். இந்தச் சுரண்டலுக்கெதிரான போராட்டத்தின் தேவைகளுக்காகவும் பழைய முறையிலுள்ள குறைகள் இப்போராட்டத்திற்குத் தடைக் கற்களாக நிற்பதை மக்கள் தம் நேரடிப்பட்டறிவின் மூலம் உணரும் போதுதான் இம்முயற்சிகள் வெற்றி பெறும்.

அரசியலைப் பற்றிக் குறிப்பிடும் போது வரலாற்றினுள் சற்றுப் பின்னோக்கிச் செல்வது பயன்தரும். பிரிட்டனில் வரிவிதிப்புகளுக்கு மக்களின் படிநிகராளிகளின் (பிரதிநிதிகளின்) ஒப்புதலைப் பெறுவதற்காகத் தான் முதன்முதலில் அவ்வப்போது நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து பேராளர்கள் தலைநகருக்கு வரவழைக்கப்பட்டனர். இந்தப் பேராளர்கள் செல்வர்களாயில்லாத போது அவர்களுக்குப் போக்குவரத்துச் செலவை அரசு வழங்கியது. இதுவே பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளமாக உருவெடுத்தது. பின்னர் பூரிய வகுப்பினர் தலைமையேற்ற போது பாராளுமன்றம் மட்டுமே அதிகாரங்களை வளர்த்துக் கொள்ள உள்ளூர் அரசியல் சிதைந்து மறைந்தது. இதற்கு நேர்மாறாகத் தமிழகத்தில் வெள்ளையர் வரும்போது உண்மையான நடுவணரசென்று ஒன்று இல்லை. உள்ளூர் ஆட்சியே இருந்தது. திருடர்கள் மற்றும் அயலார்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள உள்ளூர் மக்களே காவலர்களை அமர்த்தியும் (இக்காவலர்கள் பின்னர் மரபு வழியில் கடமை ஏற்றனர்) எதிரிகளைத் தடுப்பதற்காக மக்கள் தாங்களே ஆயதமேந்திப் போராடியும் வந்தனர். இந்த நிலைதான் வெள்ளையர் எளிதில் இங்கு காலூன்றக் காரணமாயிருந்தது. பின்னர் வெள்ளையர் நடுவப்படுத்தப்பட்ட அரசை அமைத்த போது நிலைமை தலைகீழானது. உள்ளூர் ஆட்சி என்று பெயருக்கு இருந்தாலும் தற்காப்புக்காகவும் தம் நலனுக்காகவும் மக்கள் போராடும் நிலை முற்றிலும் அகன்றது. தமிழக மக்கள் கோழைகள் என்ற நிலைமை இன்று உருவாகி நிற்கிறது. எனவே உள்ளூர் ஆட்சிக்கும் நடுவப்பட்ட அரசுக்கும் ஒரு நயமான சமநிலை உருவாகும் வகையில் உள்ளூர் ஆட்சி உயிர்ப்பிக்கப்படல் வேண்டும்.

“தேர்தலை ஒழிப்போம்”, “தேர்தலைப் புறக்கணிப்பீர்” என்ற “புரட்சியாளர்” களின் கூக்குரல் அடிக்கடி நம் செவிகளில் விழுகிறது. இப்படிக் கூறுவோர் இதற்கு மாற்றாக வைக்கும் முறை என்ன? முற்றதிகாரத்தை (சர்வாதிகாரத்தை)ப் பரிந்துரைக்கிறார்களா அல்லது அரசே இல்லாத காட்டாட்சியை (அராசகத்தை) முன் வைக்கிறார்களா என்பது யாருக்கும் தெரியாது. மக்களாட்சியை விரும்புவார்களாயின் மக்களின் கருத்தை அறியத் தேர்தல் தவிர வேறு வழி என்ன வைத்திருக்கிறார்கள்? பூரியப் (பூர்சுவா) பாராளுமன்றத் தேர்தலுக்கும் பாட்டாளிய மக்களாட்சிக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு என்ன? இவற்றை இவர்கள் விளக்குவதில்லை. இந்த வேறுபாடு தான் என்ன? பூரியப் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் பங்கேற்பதாக ஓர் ஏமாற்று மட்டும் நடைபெறுகிறது. உண்மையான ஆட்சியை அதிகாரக் கும்பலும், காவல்துறையும், நீதிமன்றங்களும் படைத்துறையும் அரசியலாளர்களும் நடத்துகின்றனர். உண்மையான மக்களாட்சியில் மக்கள் தங்கள் பேராளர்களைத் தேர்ந்தெடுப்பதோடு அமையாமல் தம் வாழ்வின் அன்றாட அரசியல், குமுக நிகழ்ச்சிகளை நேரடியாக நடத்துவர். வெறும் ‘பார்வையாளர்களாகவும் அரசின் ஏவலர்களாகவும் அடிமைகளாகவும் இன்று வாழும் மக்கள் தங்கள் ஆட்சியைத் தாமே மேற்கொள்ளுவோராக மாறுவதற்கு அவர்களை ஒன்றுதிரட்டி ஒரே அமைப்பில் கொண்டுவரத்தக்க குமுக வினைப்பாடுகளான போராட்டங்களைப் பெரும்பான்மை மக்களும் நடத்துமாறு முதலில் அவர்களை ஒன்றுதிரட்ட வேண்டும். நினைத்துப் பார்க்க முடியாத அளவு கடுமை வாய்ந்த இப்பணியைச் செய்யத் துணிவில்லாத போலிப் புரட்சியாளர்கள் தான் இக்குரலை எழுப்புவோர் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.’

புரட்சி முன்னோக்கிச் செல்லும்போது பூரியத் தேர்தல்களில் பங்கெடுப்பது பற்றி ஏங்கெல்சு கூறிய கருத்தையும் லெனின் கூறிய கருத்தையும் இங்கு சுட்டிக் காட்டுவது நமக்குத் தெளிவு தருவதாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட வருங்காலத் திட்டத்தை வைத்துப் போராட மக்களைத் திரட்டும் ஓர் இயக்கம் அம்மக்களின் மனநிலையை அறிவதற்குப் பூரியப் பாராளுமன்றத் தேர்தல் பயன்படுமென்றார் ஏங்கல்சு. அத்துடன் புரட்சிக் கட்சித் தன் கருத்துகளை இயலும் எல்லா அரங்குகளிலும் முழங்கவும் பூரியப் பாராளுமன்றத்தின் ஏமாற்றையும் கையாலாகாத்தனத்தையும் மக்களுக்கு எடுத்துக்காட்டவும் சட்டத்துக்குட்பட்ட முறையில் நேரடியாக மக்கள் முன் தங்கள் திட்டங்களையும் கொள்கைகளையும் வெளியிடுவதற்கு ஒரு வாய்ப்பாகவும் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த வேண்டுமென்று லெனின் கூறினார். ஓர் இயக்கம் தேர்தலில் பங்கு கொள்வதற்கும் அது முற்றிலும் தேர்தல் நோக்கிய கட்சியாக இழிவதற்கும் உள்ள வேறுபாட்டை அறியாதோரும் தேர்தலின் பங்கு கொண்டால் அந்தத் தேர்தல் முறையின் சேற்றுப் பகுதிக்குள் முழுகிவிடுவோமோ என்று அஞ்சும் தன்னம்பிக்கையில்லாதோரும் புரட்சிகரப் போராட்டத்தோடு சட்டத்துக் குட்பட்ட இயக்கங்களை இணைக்க வழி தெரியாதோரும் தான் இந்த வகையிலான எதிர்நிலை அணுகுமுறையை முன் வைப்போர், புரட்சிகர நடவடிக்கைக்குப் பகரம் (பதிலாக) வெற்று முழக்கங்களை எழுப்புவோர்.

இவ்வாறு பூரியப் பாராளுமன்ற (அல்லது சட்டமன்ற)த் தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானால் என்ன செய்வது? இருக்கின்ற அரசியல் சட்டத்தையும் அரசுப் பொறியையும் கைப்பற்றி இன்றைய ஏமாற்றுக்காரர்கள் சென்ற பாதையில் செல்வதா என்ற கேள்வி எழும். அப்போது தான் புரட்சிகரச் செயற்பாடு தேவைப்படும். இருக்கின்ற அரசியல் சட்டத்தை நீக்கிவிட்டு நம் செயல்திட்டத்தில் வகுத்தவாறு புதிய அரசியல் சட்டத்தை வகுக்க வேண்டும். அரசுப் பொறியையும் அகற்றி புதியவொன்றை அமைக்க வேண்டும். இதற்கு ஆளும் கும்பல்கள் இடம் தராது. இந்தக் கட்டத்தில் நாம் மக்களைத் திரட்டிப் போராட்டங்களை நடத்தி மக்களை உண்மையான மக்களாட்சியை நோக்கி நடத்தி சென்று அவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்.

0 மறுமொழிகள்: