24.4.07

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 16. கல்வி

கல்வியின் சிறப்பைப் பற்றிப் பண்டைத் தமிழ் நூல்களில் கூறப்பட்டிருக்கும் அளவுக்கு வேறெந்த மொழியிலும் இருந்திருக்க முடியாது. இருப்பினும் சென்ற நூற்றாண்டில் வெள்ளையர்கள் ஊக்கம் அளிக்கும் முன்பு கல்வி என்பது மேற்சாதியினர், குறிப்பாகப் பார்ப்பனர், வெள்ளாளர் ஆகிய இரு சாதியினருக்கும் உரிய வாய்ப்பாகவே இருந்தது. அவர்களுக்குக் கோயில்களிலும் மடங்களிலும் உணவு, உடை ஆகியவற்றுடன் இலவயமாக நூல்கள் கற்பிக்கப்பட்டன. அங்கு பயின்றவர்கள் அரசுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். கீழ்ச்சாதி மக்களில் ஆர்வமுள்ளவர் திண்ணைப் பள்ளிகளில் ஆசிரியருக்கு “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்” கற்றனர். இயலாதவரும் ஆர்வமற்றவரும் கல்லாக் களி மக்களாகவே இருந்தனர்.

இன்றைய தமிழகத்தைப் போல் கல்வியின் முகாமை திரிபுற்று நிற்கும் மக்கள் கூட்டம் உலகில் வேறெங்கும் இல்லை எனலாம். இது கடந்த கால வரலாற்றின் தொடர்ச்சியேயாகும். மேலே நாம் குறிப்பிட்டிருப்பது போல் மேற்சாதியினரில் பார்ப்பனர்களுக்கும் வெள்ளாளர்களுக்கும், கோயில்களும் மடங்களும் இலவச உடை, உணவு, உறையுள் வசதிகளுடன் கல்வி கற்பித்தன. அரசு அவர்களை உயிர்மூச்சான பதவிகளில் அமர்த்தியது. ஆனால் நன்றி கெட்ட இந்தக் கூட்டமோ தாம் வாழும் மண் பற்றிய உணர்வின்றித் தம் சாதிகளின் நலன்களை மட்டுமே குறியாகக் கொண்டு வருகின்ற படையெடுப்பாளர்களுடனெல்லாம் கூட்டுச் சேர்ந்து தம் தாய் மண்ணை விற்றுத் தம் நாட்டு மக்களின் மீதுள்ள தமது மேலாண்மையை நிலைநிறுத்தி வந்தது. ஆனால் ஒருநாள் இவர்கள் தங்கள் இந்தக் காட்டிக் கொடுக்கும் உத்திக்கே பலியாயினர். அத்தகைய நிகழ்வுக்குக் காரணமாயிருந்தவர்கள் வெள்ளையர்கள். அதிலும் குறிப்பாக ஆங்கிலேயர்கள்.

முதலில் இத்தாலி போன்ற மேலை நாடுகளிலிருந்து சமயம் பரப்ப வந்த விடையூழியர்களிடம் மதம் மாறியவர்களில் பார்ப்பனரும் வேளாளர்களுமே மிகுதி. புதியதாக வந்திருப்பவர்களின் மூலம் தமக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்கலாமென்று வழக்கம் போல் அவர்கள் எதிர்பார்த்தனர். அடுத்து வந்த வாணிகர்களாகிய பிரஞ்சியர், ஆங்கிலேயர் ஆகியோரிடம் மொழிபெயர்ப்பாளர்களாகவும் இச்சாதியினரே அமர்ந்தனர். துபாசி என்ற பெயரில் விளங்கிய இந்த மொழிபெயர்ப்பாளர்கள் உண்மையில் இந்த நாட்டை அந்த அயலவர்கள் பிடித்துக் கொள்ள உதவி செய்யும் துப்பாளிகளாகவே செயற்பட்டனர்.

வெள்ளையர்கள் திறமையாகச் செயற்பட்டனர். முதலில் மதமாற்றம் செய்து கொண்டிருந்த விடையூழியர்களும் நாட்டைச் சிறுகச் சிறுகப் பிடித்துக் கொண்டிருந்த வாணிகக் குழும அதிகாரிகளும் தனித்தனியாகவே செயற்பட்டுக் கொண்டிருந்தனர். மதம் மாற்றப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் கோயில் விழாக்கள் போன்றவற்றில் செய்ய வேண்டிய பணிகளை (கூலி இன்றிச் செய்வதால் இது வெட்டி வேலை எனப்பட்டது) தொடர்ந்து செய்யப் பணிக்கப்பட்டனர். மதப் பணியாளர்களின் எதிர்ப்புகள் புறக்கணிக்கப்பட்டன. அது மட்டுமல்ல உள்நாட்டு சமயக் கோயில்களுக்குக் குழும அதிகாரிகளும் அவர்களின் மனைவிகளும் அளவிறந்த கொடைகளை வழங்கினர்.

ஆனால் இந்நாட்டின் மீது வெள்ளையரின் பிடி இறுகியதும் நிலை மாறியது. மதப் பணியாளர்களின் வேண்டுகோள்கள் “ஏற்றுக்கொள்ளப்பட்டன. மதம் மாறிய கீழ்ச்சாதியினர் மரபுப் பணிகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இதுவரை மதமாற்றத்தால் மேற்சாதியினர் மட்டுமே பயன் பெற்றுவந்த நிலைமாறி கீழ்ச்சாதியினரும் பயன்களை, குறிப்பாக மேற்சாதியினரின் ஒடுக்கு முறையிலிருந்து விடுதலையையும் பாதுகாப்பையும் பெறும் நிலை உருவானது. மதமாற்றம் புது வேகம் பெற்றது.

இவை எல்லாம் நடைபெற்றுக் கெண்டிருந்த வேளையில் அமைதியான ஒரு புரட்சியை மதப் பணியாளர்கள் நிகழ்த்தினார். சமய நூல்களை மதம் மாறிய மக்கள் படிக்க வேண்டியது கிறித்துவ மதத்துக்குத் தேவை. எனவே கீழ்ச்சாதி மக்கள் கல்வி கற்கக் கூடாது, மீறிக் கற்றால் தண்டனைக்குள்ளாவார்கள் என்ற நிலைக்குத் தலைகீழாக மதமாறும் ஒவ்வொருவரும் மொழி கற்றல் கட்டாயமானது. எனவே ஐரோப்பியர்கள் உள்நாட்டு மொழியாகிய தமிழைக் கற்றனர். உரைநடை இலக்கணம் வகுத்தனர். பாட நூல்களையும் சமய நூல்களையும் தமிழில் யாத்தனர். நூல்களை அச்சிட்டனர். எழுத்துச் சீர்த்திருத்தம் செய்தனர். மொழி நிலையும் கல்வி நிலையும் பாய்ச்சல் கொண்டு நின்றன.

இது சமயத்தின் பக்கத்தில். அரசியல் பக்கத்தில் நடந்ததென்ன? துப்பாளிகளாகிய துபாசிகள் நிலையிலிருந்து வெள்ளாளர்கள் முற்றிலும் அகற்றப்பட்டனர். அவ்விடங்களில் பார்ப்பனர்கள் அமர்ந்து கொண்டனர். இந்தியா போன்ற ஒரு பரந்த, மக்கள் தொகை மிகுந்த துணைக் கண்டத்தை முற்றிலும் இங்கிலாந்தில் இருந்து வருவிக்கப்பட்ட அதிகாரிகளைக் கொண்டே ஆள முடியாது என்பதை உணர்ந்த ஆங்கிலேயர் தங்கள் தேவைகளுக்கேற்ற தன்மையுள்ள ஒரு உள்நாட்டு அலுவலக ஊழியர் குழுவை உருவாக்கும் வகையில் ஒரு கல்வி முறையைப் புகுத்தினர். அதிலும் தேறியவர்கள் பார்ப்பனர்களே. சிறுபான்மை மேற்சாதியினரும் உண்டு.

இங்கும் மீண்டும் சமயப் பணியாளர்களின் இடையீடு புகுந்தது. மதம் மாறிய கீழ்ச்சாதி மக்களும் சமயத் துறைச் செல்வாக்கால் அரசுத் துறைப் பணிகளில் அமர்ந்தனர். இருந்தாலும் ஒருமுறை மேல்நிலைகளைக் கைப்பற்றிக் கொண்டவர்களோடு போட்டிபோட்டுப் புதியவர்கள் இடம் பிடிப்பதென்பது எளிதல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஒரு தனி மனிதன் போன்று ஒற்றுமையாய் இருந்து குமரி முதல் இமயம் வரையுள்ள பொருளியல் சிந்தனையியல் வளங்கள் அனைத்தையும் தங்கள் தனிச் சொத்தாக்கி அது தங்கள் கையை விட்டுப் பறி போகாமலிருக்க எத்தகைய உத்தியையும் கயமையையும் கையாளத் தயங்காத பார்ப்பனர்களிடமிருந்தும் அவர்களுக்கு அடுத்த படியில் தமிழகத்தில் இருந்த வெள்ளாளர்களிடம் இருந்தும் அவற்றைப் பறிப்பதென்பதும் எளிதானதல்ல. ஆனால் அந்தக் கடினமாக பணி தொடங்கப்பட்டது.

இந்தச் செயல்முறை சமய வடிவில்தான் தொடங்கியது. வெள்ளையர்கள் மதமாற்றம் என்ற வடிவில் மேற்சாதியினரின் பிடியிலிருந்த கீழ்ச்சாதி மக்களை விடுவித்ததற்கு எதிர்ப்பு இந்து சமயத்தைக் காத்தல் என்ற வடிவில் வந்தது. இந்த எதிர்ப்பைக் காட்டியோர் தம்முள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து நின்றனர். இந்து சமயத்துக்கு ஏற்பட்டிருக்கும் இந்த அறைகூவல் இச்சமயத்தின் குறைபாடுகளால் ஏற்பட்டவையே, அவற்றைச் சீர் செய்ய வேண்டியது தேவை என்றொரு பிரிவினர் கூறினர். இன்னொரு பிரிவினர் இதனை ஏற்கவில்லை. இருக்கும் அமைப்பில் தங்களுக்கு கிடைக்கும் வசதிகளை இழக்க அவர்கள் முன்வரவில்லை.

இந்தச் சூழ்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த கர்னல் ஆல்காட் என்பவரும் பிளாவட்கி அம்மையார் எனும் பெண்மணியும் இறையியல் கழகம் என்ற ஒன்றை அமெரிக்காவில் 1875 இல் நிறுவினர். மாக்சுமுல்லர் என்ற செருமனியைச் சேர்ந்த மொழியியலறிஞர் பெற்றெடுத்த ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்களே பார்ப்பனரும் ஐரோப்பியரும்; எனவே ஐரோப்பியருக்குப் பார்ப்பனிய மறைகளே உண்மையான இறை நூல்கள் என்று அவர்கள் கூறினர். அமெரிக்கர்கள் இந்தக் கருத்தை மதிக்கவில்லை. 1881-இல் இறையியல் கழகம் தன் தலைமையகத்தைப் பம்பாய்க்கு மாற்றிக் கொண்டது. அங்கும் அவர்கள் எதிர்பார்த்த வரவேற்புக் கிடைக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. எனவே 1882-இல் இறையியல் கழகத்தின் தலைமையகம் சென்னைக்கு மாற்றப்பட்டது.

ஆல்காட்டும் பிளாவட்கியும் நிகழ்த்திய ஆரிய மேன்மைப் பரப்பல் பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனியர் எனப்படும் வெள்ளாளக்கட்டினருக்கும் பெரும் ஊக்கம் கொடுத்தது. சமயச் சீர்த்திருத்தர்கள் செல்வாக்கிழந்தனர்.

இந்து சமய மீட்சி என்ற பெயரில் அரங்கேறிய இந்தப் பார்ப்பனிய மீட்சி நாடகத்தின் எதிர்விளைவாக முசுலீம், கிறித்தவ சமய மக்களின் சமயக் காப்புணர்வு முகிழ்த்தது. குறிப்பாக கிறித்துவர்களின் முயற்சி வலிமை பெற்றது. கல்வி பெறல் அரசுப் பணியில் இடம் பெறல் என்ற நோக்கங்களை அடிப்படையாக வைத்துக் கீழ்ச்சாதியினர் தத்தம் சாதி அமைப்புகளைத் தோற்றுவித்தனர். இந்தச் சாதி அமைப்புகளைத் தோற்றுவித்தவர்கள் பெரும்பாலும் கிறித்துவர்களாயிருப்பதைக் காணலாம். இவ்வாறு முளைவிட்டு வந்த கீழ்ச்சாதி இயக்கத்துக்கு வெள்ளாளர்களிடமிருந்து எதிர்பாராத ஓர் ஆதரவு கிடைத்தது. வெள்ளையர்களிடம் தொடக்கத்தில் துபாசிகள் போன்ற நிலைகளில் இருந்து இவர்கள் பார்ப்பனர்களால் அகற்றப்பட்டதே இதற்குக் காரணமாக இருக்க வேண்டும். ஆரியக் கோட்பாட்டுக்கு எதிரான திராவிடக் கோட்பாட்டைப் பிடித்துக் கொண்ட வெள்ளாளர்களின் இயக்கம் ஒன்று உருவானது. அது கீழ்ச்சாதியினரின் நலன்களுக்காகக் குரல் கொடுக்கவும் செய்தது.

வாணிகர்களாக வந்து ஆட்சியாளர்களாக மாறிய வெள்ளையர்கள் முதலில் கொள்ளைக்காரர்கள் போல் நாட்டைச் சூறையாடிச் சுரண்டித் தம் நாட்டின் வளத்தைப் பெருக்கினர். ஆனால் ஒரு கட்டத்தில் மேற்கொண்டு சுரண்ட முடியாத வகையில் இந்நாட்டின் மூலவளங்கள் ஒட்டச் சுரண்டப்பட்டதால் சில பொதுப் பணிகளை மேற்கொள்ள வேண்டிவந்தது. பாசனம், இருப்புப்பாதை போன்ற போக்குவரத்து வசதிகள் மக்களின் பொருளியல் வாழ்வில் மேம்பாட்டை ஏற்படுத்தின. வெள்ளையருக்குத் தேவைப்பட்ட பண்டங்களை ஒரு கட்டம்வரை செய்முறைப்படுத்துவதற்கு இங்குள்ளோரின் துணை தேவைப்பட்டது. ஆங்காங்கே விளையும் பண்டங்களைத் திரட்டித் தருவதற்கு உள்ளூர் வணிகர்களின் துணை வேண்டியிருந்தது. இவ்வாறு வெள்ளையரின் அரவணைப்பில் ஒரு பூரிய (பூர்சுவா) வகுப்பினர் வளர்ந்தனர். ஆனால் அதே நேரத்தில் வட இந்தியாவில் பெரும் வலிமை பெற்றுவிட்ட மார்வாடி, குசராத்திகள் தென்னிந்தியப் பொருளியல் மீதும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி விட்டனர். எனவே தென்னிந்தியப் பூரிய வகுப்பினர் அவர்களை எதிர்க்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இவ்வாறு “பார்ப்பன-பனியா” கூட்டத்தை எதிர்த்துத் தென்னிந்தியாவில் தோன்றிய இயக்கத்திற்கு திராவிட இயக்கம் என்ற பெயர் அமைந்தது. பனியா என்பது வாணிகர் என்பதன் வட இந்திய திரிபு வடிவம். பார்ப்பனர்கள் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர் என்ற கருத்தாலும் திராவிடர்கள் வாழும் நாடு என்பதாலும் திராவிட இயக்கம் ஓர் இன இயக்கமாகவும் நாட்டு இயக்கமாகவும் பிறவி எடுத்தது.

பேரவைக் கட்சி (காங்கிரசு என்ற சொல்லுக்குத் தேவநேயப் பாவாணர் வடித்த தமிழ்ச் சொல் பேராயம் என்பதாகும். பின்னர் அது பேரா.வே.தி.செல்லம் போன்றோரால் பேரவைக் கட்சி என எளிமைப்படுத்தப்பட்டுள்ளது) முதலில் ஆங்கிலேயரின் ஆட்சி நலனுக்காக ஏற்படுத்தப்பட்டதாக அதைத் தொடங்கிய இயூம் என்ற ஆங்கிலேயர் கூறினார். ஆனால் அவரது நடவடிக்கைகளைக் கூர்ந்து நோக்கினால் அவரது நோக்கம் வேறு என்பது புலப்படும்.

இயூம் ஓய்வு பெற்ற அரசு அலுவலர். இங்கிலாந்திலிருந்த அதிகாரிகள் இந்தியாவில் பணியாற்றிய ஆங்கில அதிகாரிகளை இழிவாக நடத்தியிருப்பர் என்பது இயல்பானதே, இன்று நடுவணரசு அலுவலர்கள் மாநில அதிகாரிகளை நடத்துவது போல். இதன் விளைவாக இந்தியாவில் உள்ள இந்திய அதிகாரிகள் மீதும் அடுத்து இந்தியாவின் மீதும் அவருக்குப் பரிவுணர்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டும். அதனால் தான் இந்திய (“ஆரிய”)ப் பண்பாட்டை உயர்த்திப் பிடித்துக் கொண்டே நுழைந்த இறையியல் கழகத்தில் அவர் இணைந்தார். ஆனால் நாளடைவில் ஆல்காட், பிளாவட்கி இருவரும் உண்மையில் இங்கிலாந்துக்கு எதிராக அமெரிக்க, செருமானிய நலன்களையே நாடுகிறவர்கள் என்பது புரிந்து போயிருக்கும். எனவேதான் இறையியல் கழகத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, இறையியல் கழகத்தின் சூழ்ச்சிகளிலிருந்து இந்தியா மீதான இங்கிலாந்து ஆதிக்கத்தைக் காக்கவும் அதே வேளையில் இந்திய அதிகாரிகளின் நலன்களைக் காக்கவும் பேரவைக் கட்சியை அமைத்தார். இக்கட்சிதான் நாளடைவில் வட இந்திய மார்வாடி-குசராத்தி நலன்களைக் காப்பதற்காக ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடும் இயக்கமாக உருமாறியது. இது, ஒன்று அதன் எதிராக மாறுதல் என்ற இயங்கியல் விதிக்கு இசைவானதே.

அவ்வாறு ஆங்கிலேயரை எதிர்த்த பனியாக்களை எதிர்த்து உருவான திராவிட இயக்கமான நயன்மைக் (நீதி) கட்சியோ ஆங்கிலேயரை ஆதரித்து நின்றது. இந்நிலையில் எல்லைக்குட்பட்ட வாக்குரிமையுடன் கூடிய தேர்தலில் இக்கட்சி வெற்றி பெற்று ஆட்சியும் அமைத்தது.

நயன்மைக் கட்சி ஆட்சி கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் ஒதுக்கீட்டு முறையைக் கொண்டு வந்தது. அத்துடன் நில்லாது தமிழகப் பொருளியல் ஏற்றம் பெறும் வகையில் தொழில்கள் தொடங்குவோருக்கு பல சலுகைகளையும் கொடுத்துப் பிற அடிப்படை ஏந்துக்களையும் அமைத்துக் கொடுத்தது.

பேரவைக் கட்சி வளர்ந்து வந்தது. பணக்காரர்களே மிகுந்திருந்த நயன்மைக் கட்சியால் அதற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அதே நேரத்தில் பேரவைக் கட்சியில் பார்ப்பனரின் ஆதிக்கத்தை எதிர்த்துத் தோல்வி கண்டு வெளியேறிய ஈ.வெ.ராமசாமிப் பெரியார் நயன்மைக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்; அவர் அதை ஏற்றுக் கொண்டார். ஆனால் அன்று முதல் தமிழகத்தின் பொருளியல் வளர்ச்சி பற்றிய சிந்தனை புறந்தள்ளப்பட்டது. பார்ப்பனர்களை வீழ்த்துவதே ஒரே பணி என்ற வகையில் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் ஒதுக்கீடு முதலிடம் பெற்றது. அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற குறிக்கோள் முன் வைக்கப்படவே இல்லை.

பார்ப்பனரும் வெள்ளாளரும் உடலுழைப்பை வெறுப்பவர்கள். உழைப்பையும் உழைப்போரையும் இழிவாகக் கருதுபவர்கள். உழைப்பதை விட கைகட்டி ஏவல் செய்வதையும் காட்டிக் கொடுத்தும் கூட்டிக்கொடுத்தும் வாழ்வதையும் கூடப் பெருமையாக நினைப்பவர்கள். எனவே இவர்கள் கல்வியையும் அரசுப் பணி, அலுவலகப் பணிகளையுமே பெரிதாக மதிப்பவர்கள். திராவிட இயக்கத்தின் ஒதுக்கீடு போராட்டம் பார்ப்பனர், வெள்ளாளரின் இந்தப் புல்லுருவி மனப்பான்மையை முழுக் குமுகத்துக்கும் ஏற்றிவிட்டு விட்டது.

கல்வி என்று மேலே நாம் குறிப்பிட்டிருப்பதும் பொதுவாகப் புரிந்து கொள்ளப்படுவதும் எழுத்தறிவையே. உண்மையில் கல்வி என்பது ஒரு மனிதன் பிறந்து இறப்பது வரை அறியும் அறிவு அனைத்தையுமே குறிக்கும். இதை மனதில் கொண்டு மேலே தொடர்வோம்.

எழுத்தறிவு என்பது மனிதனின் தனிச் சொத்து. ஒரு மனிதன் எழுத்தறிவு பெறுவது அவன் முழுமை பெறுவதற்கும் இறைமையுள்ள ஒரு நாட்டில் அறிவறிந்த குடிமகனாக வாழ்வதற்கும் இன்றியமையாத ஒன்று.

ஆனால் நம் நாட்டில் எழுத்தறிவு பற்றிய மக்களின் நிலைப்பாடு என்ன? எழுத்தறிவு வேலை வாய்ப்புடன் தொடர்புறுத்தப்படுகிறது. எழுத்தறிவு பெற்ற அனைவருக்கும் வேலை கொடுக்க வேண்டியது அரசாங்கத்தில் கடமை என்று கருதப்படுகிறது. அதற்கு மறுதலையாக எழுத்தறிவு பெற்ற அனைவருக்கும் அரசாங்கத்தால் வேலை கொடுக்க முடியாவிட்டால் கல்விக் கூடங்களே தேவையில்லை என்பது போன்ற கருத்தோட்டங்கள் தோன்றியுள்ளன.

இந்நிலை மிகக் கேடு பயப்பதாகும். உடல் நோவா வெள்ளை வேட்டி வேலைகள் வேண்டுமென்பதற்காகத் தமிழ் நாட்டிலுள்ள எழுத்தறிவு பெற்றோர் எந்நாட்டிலும் யாருக்கும் அடிமை செய்யக் காத்திருக்கின்றனர். அந்த அடிமை வேலை கிடைக்க வேண்டுமென்பதற்காக வன்முறைச் சண்டைகள் போடவும் அணியமா இருக்கின்றனர். வெளி நாடுகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் எழுத்தாணி பிடிக்கும் வேலையைச் செய்வதற்காக ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளைப் படிப்பதற்கு முண்டியடித்து வருகிறார்கள். தமிழக அரசு அவர்களுக்கு இந்தி சொல்லித் தராததால் தங்கள் வெளி மாநில வேலை வாய்ப்பே பறிபோய் விட்டது என்று ஒலமிடுகிறார்கள்.

இவ்வாறு எழுத்தறிவு என்பது ஒட்டுண்ணி வாழ்க்கைக்கே என்ற மனப்பான்மை மட்டுமீறி வளர்ந்து விட்டதால் உள்நாட்டுப் பொருளியல் வளம் பற்றியோ அது கயமைத் தனமாகச் சுரண்டப்படுவது பற்றியோ யாரும் கவலை கொள்வதில்லை. இன்று அரசுப் பணி புரிவோரில் பெரும் பகுதியினரின் சம்பளம் உலக வங்கி, ஐரோப்பியப் பொதுச் சந்தை, ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற எண்ணற்ற இடங்களிலிருந்து பெறப்படும் கடன்களிலிருந்தே பெறப்படுகிறது என்பது அவர்களுக்குத் தெரியும். காலங் காலமாக வளர்ந்து வந்துள்ள நாட்டுணர்வின்மையை வலுப்படுத்துவதாகவே தமிழ் நாட்டில் தோன்றிய கல்வி ஒதுக்கீட்டுப் போராட்டம் அமைந்திருக்கிறது.

இந்த எழுத்தறிவுச் சிக்கலில் இரண்டு பக்கங்கள் உள்ளன. ஒன்று கல்வி வாய்ப்பு. இன்னொன்று வேலை வாய்ப்பு. கல்வி, அதாவது எழுத்தறிவு அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது ஏனோ எழுப்பப்படவில்லை. கிடைக்கும் எழுத்தறிவு வாய்ப்பில் எங்களுக்கும் ஒரு பங்கு வேண்டும் என்ற அளவோடு அது நின்றது. கீழ்ச்சாதியினர் அனைவரும் ஒன்று சேர்ந்து மேற்சாதியினரை நோக்கிக் குரல் எழுப்பியது ஒரு புரட்சி தான். அதன் பக்க விளைவாக சாதி, சமயம், மூட நம்பிக்கைகள் போன்ற பல்வேறு இருட்கூறுகளுக்கு எதிரான கருத்துகள் மக்கள் நடுவில் வேர் கொண்டன. ஆனால் இக்கோரிக்கை குறிப்பிடத்தக்க வெற்றியை எய்தியதும் வெற்றியின் பயன்களைப் பங்கு போடுவதில் போட்டிகள் ஏற்பட்டன. கீழ்ச்சாதியினரின் கூட்டணி சிதறியது. ஒவ்வொரு சாதியினரும் தனித் தனியாகப் பிரிந்தனர். தத்தம் சாதியினருக்கு இத்தனை நூற்றுமேனி ஒதுக்கீடு வேண்டுமென்று கேட்கின்றனர். தத்தம் சாதியினரின் எண்ணிக்கைகளை மிகுந்துக் கூறுகின்றனர். மறைந்த தமிழக முதல்வர் ம.கோ.இரா. சாதி அமைப்புகளின் தலைவர்கள் தந்த புள்ளிக் கணக்கைத் திரட்டி அது தமிழகத்தின் உண்மையான மக்கட் தொகையைப் போல் 2½ மடங்கிருப்பதைச் சுட்டிக் காட்டி சாதித் தலைவர்களைத் தலை குனிய வைத்தார்.

இன்னொரு புறம் மேற்சாதியினர், ஒதுக்கீடு மூலம் அறிவுத் திறன் குன்றியவர்கள் வேலைக்கு வந்து விடுகிறார்கள்; எனவே நிறுவாக்கத் திறமை குன்றிவிட்டது என்று கூக்குரலிடுகிறார்கள். ஆனால் “திறமை மிக்கோராகிய” இவர்களது முன்னோர்கள் நாட்டை நடத்திய காலத்தில் தான் முன்பு உலகின் பெருமை மிக்க நாடுகளிலொன்றாக இருந்த இந்தியா சிறுகச் சிறுக இழிந்து ஐரோப்பாவிலிருந்து வந்த சின்னஞ் சிறு வாணிகக் குழுக்களின் முன் மண்டியிட்டது. இன்று போல் அன்றும் இந்திய அரசர்கள் அந்த வாணிகக் குழுக்களிடம் கடன் வாங்க அறிவுரை கூறியோர் இந்தத் “திறமை மிக்கோரே”.

இன்னுமோர் உண்மை என்னவென்றால் கீழ்நிலைப் பணிகளில் தான் கீழ்ச்சாதியினர் ஒதுக்கீட்டு உரிமை பெற்றுள்ளனர். கொள்கை முடிவுகள் எடுப்பவை, தலைமை நிலையில் உள்ளவை போன்ற பதவிகள் இன்னும் மேற்சாதியினரிடம், குறிப்பாகப் பார்ப்பனரிடமே இருக்கின்றன. அந்தப் பார்ப்பன அதிகாரிகளின் வழிகாட்டலின் கீழ்தான் அவர்களால் “திறமை குறைந்தவர்கள்” எனப்படுவோரின் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.

ஆனால் பார்ப்பனர் இருக்கும் இடத்தைக் கீழ்ச்சாதியினர் பிடித்துக் கொண்டால் மட்டும் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் இந்தப் பண்பு மாறாது. இருக்கும் அமைப்பின் அடித்தளத்தை உடைத்து நொறுக்கிப் புதிய அடித்தளத்தின் மீது புதியவர்களை அமர்த்த வேண்டும். அத்துடன் அதிகார வகுப்புக்குக் கிடைக்கும் சலுகைகளுக்கும் பொது மக்களுக்குக் கிடைக்கும் சலுகைகளுக்கும் இடையில் உள்ள ஏற்றத் தாழ்வைக் குறைக்க அல்லது இல்லாமலாக்க வேண்டும். அப்படியானால் தான் எழுத்தறிவுக்கும் அரசு வேலை வாயப்புக்கும் உள்ள உறவை முறிக்க முடியும்.

மீண்டும் எழுத்தறிவுக்கு வருவோம். ஒரு குமுகத்தில் அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டியது இன்றியமையாததாகும். எனவே பிறந்த ஒவ்வொருவருக்கும் எழுத்தறிவைப் புகட்டுவது அக்குமுகத்தின் விலக்க முடியாக் கடமையாகும். இருப்பினும் நம் பண்டைக் குமுகத்தின் தலைமையைக் கைப்பற்றிய கயவர்கள் கூட்டம் தம்மைத் தவிர எஞ்சியுள்ள பெரும்பான்மை மக்கள் எழுத்தறிவு மட்டுமல்ல, கல்வியின் குறிப்பிட்ட துறைகளில் பயிற்சி பெறுவதையும் தடை செய்தது. மகாபாரதத்தில் வரும் ஏகலைவன் வரலாறு இதற்கு ஒரு சான்றாகும். விற்போர்ப் பயிற்சி எழுத்தறிவுக்குப் புறத்தேயுள்ள ஒரு கல்வியாகும். ஆசிரியனரென்று பார்ப்பனான துரோணனைக் கற்பனை செய்து கொண்டு தனக்குப் பிறவியிலமைந்த மேதைமையினால் வில்வித்தையில் ஏகலைவன் முழுமை எய்தினான். ஆனால் இது தெரிய வந்ததும் துரோணன் ஏகலைவனின் கற்பனை ஆசிரியப் பணிக்காக அவன் கட்டைவிரலைக் காணிக்கையாகக் கேட்டான். விக்கிரமாதித்தன் கதையில் வரும் தாசி அபரஞ்சி கனவில் தன்னைக் கூடியதாகக் கூறிய ஒருவனிடம் கட்டணம் கேட்டதற்கொத்த செயலாகும் இது. தாசி அபரஞ்சியை விக்கிரமாதித்தன் இழிவு செய்தான். ஆனால் துரோணனை யாரும் குறை சொல்வதில்லை. அண்மையில் “இந்தியா டூடே” இதழில் பாலகுமாரன் என்ற பார்ப்பன எழுத்தாளன் எழுதியுள்ள கதையில் வரும் செய்தி என்ன? கட்டை விரலை இழந்த ஏகலைவன் கண்ணனைக் கண்டு தனது கட்டை விரலை மீட்பித்துக் கேட்கிறான். கண்ணனோ வேட்டையாடுவதற்கு கட்டை விரல் நீங்கிய பிற விரல்களே போதும் என்கிறான். பின்னர் பாரதப் போரைத் தூண்டி விட்டு நடத்தி முடித்துத் திரும்பும் கண்ணனைப் பார்த்துக் கட்டைவிரல் இல்லாமல் இருந்ததே மேல் என்ற ஏகலைவன் கருதுகிறானாம். வில் கொண்டு வேட்டுவனான ஏகலைவன் வேட்டையாடுவது தான் முறையாம். போர் புரிதல் மேற்சாதிகளின் தனி உரிமையாம். அதைத்தான் பார்ப்பன பாலகுமாரனின் கதை சொல்கிறது.

அது சரி, இந்தக் கண்ணனின் கதைதான் என்னவாம்? ஆயர் குலத்தில் பிறந்தவன் கடவுள் ஆவது இழிவெனக் கருதி நந்தகோபனுக்கும் அசோதைக்கும் பிறந்தவனை வாசுதேவனுக்கும் தேவகிக்கும் பிறந்தவனாகக் கதை எழுதி வைத்துள்ளனர். இளங்கோவடிகள் “அசோதை பெற்றெடுத்த.....” (ஆய்ச்சியர் குரவை) என்றுதானே கூறுகிறார்.

மதுரை வீரன் கதை நமக்குத் தெரியும். உண்மையில் மாடு மேய்த்தும் தோல் தொழில் செய்தும் வாழும் சக்கிலியக் குடியில் பிறந்து தன் முயற்சியால் திருமலை நாயக்கனின் படைத்தலைவன் ஆகிறான். சக்கிலியன் படைத் தலைவன் ஆகலாமா? எனவே குலத்துக்குக் கேடு வருமென்று துளசி ஐயா என்ற சிற்றரசனால் காட்டில் விடப்பட்ட குழந்தையை சக்கிலியர் எடுத்து வளர்த்தனர் என்று கதை கட்டி விட்டனர்.

முத்துப்பட்டன் கதையைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? முத்துப்பட்டன் என்ற பார்ப்பனன் அக்காள் தங்கைகளான இரண்டு சக்கிலியப் பெண்களைக் கண்டு காதலித்து அவர்களின் தந்தையிடம் பெண் கேட்கிறான். தங்கள் குல வழக்கம் அனைத்தையும் மேற்கொள்வதாயின் பெண்களைத் திருமணம் புரிந்து வைப்பதாகக் கூறுகிறான். ஏற்றுக் கொண்டு அவர்களை மணந்து மாடுகளுக்குக் காவல் காத்து வருகிறான். இதை அறிந்து குல இழிவு ஏற்பட்டதாகக் கருதிய அவனது தமையன்மார் மாட்டுத் திருடர்களுடன் சேர்ந்து முத்துப்பட்டனைக் கொன்றுவிடுகின்றனர். பெண்கள் இருவரும் கணவனுடன் உடன்கட்டை ஏறுகின்றனர். இதுதான் கதை. ஆனால் இக்கதையை வில்லுப் பாட்டில் வடித்த புலவர் பார்ப்பனனைச் சக்கிலிய பெண்கள் மணம் புரிவதா என்று கனன்று அப்பெண்கள் இருவரும் பார்ப்பனப் பெற்றோரால் கைவிடப்பட்டுச் சக்கிலியர்களால் வளர்க்கப்பட்டனர் என்று கதையை மாற்றி விடுகிறார். இந்த உண்மையை அந்தப் புலவர் வாயாலேயே கேட்டு நமக்கு அறிவிக்கிறார் பேரா.நா. வானமாமலை அவர்கள்.

நிற்க, ஏறக்குறைய விசயநகரப் பேரரசு தோன்றுவதற்குச் சற்று முன் ஆந்திரத்திலும் தமிழகத்திலும் சக்கிலியர்கள் மேற்சாதியினரை எதிர்த்துப் பெருமளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். தமிழ் நாட்டிலுள்ள நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் சில இதற்குச் சான்று (சின்னத்தம்பி கதை என்பது ஒன்று). Elmore என்பவர் எழுதிய Dravidian Gods in Hindusim என்ற நூலிலும் தெளிவான தடயங்கள் உள்ளன. கால்நடை வாணிகம், தோல் பதனிடுதல் போன்ற தொழில்களின் மூலம் கிட்டிய செல்வத் திரட்சியிலிருந்து இவர்களது எழுச்சி தோன்றியிருக்கலாம். அவர்களை அடக்குவதில் “இந்து மதத்தைக் காக்க வந்த விசயநகரப் பேரரசு” என்ன பங்காற்றியது என்பது தெரியவில்லை.[1] வெற்று வரட்டியம் பேசும் “மார்க்சியர்”களின் பார்வையில் இவை போன்ற சிக்கல்கள் படுவதே இல்லை. அமெரிக்க உளவு நிறுவனம் வடித்துக் கொடுக்கும் செயல் திட்டங்கள் தாம் அவர்களுக்கு நெறிகாட்டிகளாக இன்று வரை இருந்து வருகின்றன.

மீண்டும் கல்விக்கு வருவோம். காலங்காலமாக அரசியல் வன்முறையைப் பயன்படுத்தி இந்நாட்டு மக்களின் கல்வி உரிமையைப் பறித்து எழுத்தறிவைத் தமக்கு மட்டும் தனி உரிமையாக்கிக் கொண்ட கூட்டம் இன்று ஒதுக்கீட்டின் மூலம் அவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சிறிது எழுத்தறிவும் ஆட்சியில் சிறிது பங்கும் கொடுப்பதற்குள் என்ன குதி குதிக்கிறது? இவர்கள் முன்பு நுகர்ந்தது போல் உணவு, உடை, உறையுள், கல்வி வேலை என்று ஏந்துகள் செய்து கொடுத்தால் என்ன கூக்குரல் இடுவார்களோ?

எழுத்தறிவைப் பொறுத்த வரையில் திராவிட இயக்கத்தின் செயற்பாடு ஏமாற்றம் அளிக்கத்தக்கது. அனைவருக்கும் கல்வி என்ற கோரிக்கையை முன்வைக்காமல் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் ஒதுக்கீடு கேட்டது அவர்களுடைய அரை வேக்காட்டு அணுகலையே காட்டுகிறது. அனைவருக்கும் கட்டாயக் கல்வி என்று கேட்டுப் போராடியிருந்தால் இன்று தமிழகத்திலுள்ள கீழ்ச்சாதி மக்களின் பண்பாட்டு நிலையில் குறிப்பிடத்தக்க மாறுதல் ஏற்பட்டிருக்கும். ஆனால் கல்வியிலும் ஒதுக்கீடு என்ற முழக்கம் பார்ப்பனரல்லா மேற்சாதியினரையும் எழுத்தறிவின் தேவையைப் புரிந்து கொண்டு அதனைப் பெறும் பொருளியல் வலிமையுள்ள கீழ்ச்சாதியினரையுமே மனதிற்கொண்டு முன்வைத்த கோரிக்கையாகும். அம்பேத்காரின் அணுகலும் இதற்கு விலக்கல்ல.

அனைவருக்கும் கட்டாயக் கல்வி என்பது ஒன்றும் நமக்குப் புதியதல்ல. இந்திய விடுதலைக்கு முன்பு இருந்த திருவிதாங்கூர் இணை ஆட்சிப் பகுதியில் திவான் சி.பி. இராமசாமி ஐயர் அங்கு 1947-இல் கட்டாயக் கல்வி முறையைப் புகுத்தினார். அதன் செயல்முறை பின்வருமாறு: ஒவ்வொரு கோடை விடுமுறையின் போதும் பள்ளி ஆசிரியர்கள் தத்தம் பள்ளியின் ஆட்சி எல்லைக்குள் வரும் ஊர்களில் 5 அகவை எய்திய சிறுவர்களை இனம் கண்டு அவர்களின் பெற்றோரிடம் பிள்ளையைப் பள்ளிக்கு அனுப்பக் கேட்டுக் கொள்ள வேண்டும்; அவர்கள் மறுத்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அவ்வாறு திடீரென்று பள்ளிகளுக்குக் கூடுதல் பிள்ளைகள் வந்ததால் ஏற்பட்ட இட நெருக்கடியையும் ஆசிரியர் பற்றாக்குறையையும் காலையிலும் மாலையிலும் வகுப்புகளை முறை வைத்து நடத்தியதன் மூலம் சரிக்கட்டப்பட்டது. ஏழைக் குழந்தைகளுக்கு நண்பகலில் உழுந்தங்கஞ்சி வழங்கப்பட்டது.

இந்தக் கட்டாயக் கல்வித் திட்டத்தின் விளைவால்தான் அன்று திருவிதாங்கூரில் அடங்கியிருந்த குமரி மாவட்டம் தமிழ் நாட்டில் சென்னையைத் தவிர அதிக நூற்றுமேனி எழுத்தறிவு பெற்ற மாவட்டமாகத் திகழ்கிறது. இன்று பழைய கட்டாயக் கல்வி முறை இல்லாததால் முன்போல் நூற்றுக்கு நூறு எழுத்தறிவு என்ற நிலை அம்மாவட்டத்தில் மாறிவிட்டதும் இரங்கத் தக்க உண்மை.

அதே நேரத்தில் எழுத்தறிவைப் பெருக்கவென்று உலக வங்கியிடம் கடன் பெற்று நடத்தப்படும் “அறிவொளி இயக்கம்” செய்யும் வாணவடிக்கையை நாம் அறிவோம். கட்டாயக் கல்வி முறையைப் பற்றி எவராவது மூச்சு விடுகிறார்களா?

முழுமையான எழுத்தறிவு பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? முதலில் கட்டாயக் கல்வி முறையைப் புகுத்த வேண்டும். எட்டாம் வகுப்பு வரை கட்டாயக் கல்வியை இலவயமாகக் கற்பிக்கலாம். அத்துடன் குடியுரிமை பெறுவதற்கு எட்டாம் வகுப்பு வரை படிப்பை ஒரு கட்டுறவாக்கலாம்.
[2]

எட்டாம் வகுப்புக்கு மேல் பயில விரும்புவோருக்கு மூன்றாண்டுகள் உடலுழைப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும். பின்னர் தம் சொந்தச் செலவில் படிக்க அனுமதிக்கலாம். வேளாண்மையை ஊக்குவதற்காக வேளாண்மை உடலுழைப்பில் ஈடுபட்டவர்களுக்கு இலவசமாக எட்டாம் வகுப்புக்கு மேலும் கல்வி புகட்டலாம். வகுப்பில் சேர்ப்பதிலும் சலுகைகள் காட்டலாம். வேளாண்மை உடலுழைப்பில் ஈடுபட்டவர்களுக்கு அரசுப் பணிகளிலும் முன்னுரிமையும் சலுகைகளும் வழங்கலாம்.

சலுகைகளையும் முன்னுரிமைகளையும் நிலையாக வைத்திருப்பது எந்தக் குமுகத்துக்கும் நல்லதல்ல. ஒரு குறிப்பிட்ட சூழலில் புறக்கணிக்கப் பட்டவர்களையும், ஒதுக்கப்பட்டவர்களையும், ஒடுக்கப்பட்டவர்களையும் பிறருக்கு இணையாகக் கொண்டு வரவும் ஒரு சூழ்நிலையில் முறைகெட்ட சலுகைகளையும் முன்னுரிமைகளையும் கையிலெடுத்துக் கொண்டு பிற மக்களை வன்முறையால் ஒடுக்கித் தங்களை உயர்த்திக் கொண்டவர்களைப் பிறருக்குச் சமமாகக் கீழிறக்கவும் இந்த ஒதுக்கீட்டு முறை தேவை. ஆனால் இந்தத் தேவையை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் நிறைவேற்றிச் சலுகை முறையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் போர்க்கால நடவடிக்கைகளை அந்தக் குமுகம் எடுக்க வேண்டும். ஆனால் நம் நாட்டில் அந்நிலை இல்லை. சலுகையும் ஒதுக்கீடும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொச்சைப்படுத்தப்பட்டுவிட்டன. அரசியல்வாணர்களின் பகடைக்காயாக ஒதுக்கீடு மாறிவிட்டது. கல்வியே நாட்டின் மிகப்பெரிய பொருளியல் நடவடிக்கையாகி நாற்றமெடுக்கிறது.

தமிழ்நாட்டில் பண்ட விளைப்பு மற்றும் பணித்துறைகள் தொடர்பான பொருளியல் நடவடிக்கைகளில் மக்களுக்கு நாட்டமில்லை. எழுத்தறிவைக் கொண்டு உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ வெள்ளை வேட்டி அடிமை வேலை செய்வதையே தமிழக மக்கள் தம் பிறவிப் பயனாகக் கருதுகிறார்கள். இதற்காக நம் நாட்டில் நேரடியாகப் பணமாகவும் பெற்றோரின் பலதிறப்பட்ட உழைப்பின் வடிவிலும் (பிள்ளைகளைப் பள்ளியில் கொண்டு விடுதல், வீட்டில் பாடம் சொல்லிக் கொடுத்தல் முதலியன) செலவிடப்படும் மூலதனம் பிற எந்தத் துறையை விடவும் அதிகம். இதற்கு பார்ப்பனருடன் போட்டிக் கொண்டு வெள்ளை வேட்டி அடிமைப் பணி செய்யும் ஆவலை வளர்ந்துக் கொண்டதே அடிப்படைக் காரணம். இவ்வாறு தமிழ்க் குமுகத்தின் திசைமாறலுக்குத் திராவிட இயக்கமும் ஒரு காரணமாகும்.

அதே நேரத்தில் பார்ப்பனர்கள் தங்கள் பொருளியல் நடவடிக்கைகளை வளர்த்துக் கொண்டே தங்கள் சொந்தக் கல்வி நிறுவனங்களையும் அமைத்துக் கொண்டு அதே நேரத்தில் அரசுக் கல்வி நிறுவனங்களில் தங்கள் பலமுனை செல்வாக்கினைப் பயன்படுத்தி இடம்பிடித்தும் விடுகிறார்கள். பார்ப்பனரல்லாச் சாதிகளிடம் போதிய பணம் இருந்தாலும் இத்தகைய முழுவதும் தழுவிய பார்வை இல்லை. அவர்களும் இதேபோல் பொருளியல் முயற்சிகளையும் கல்வி முயற்சிகளையும் ஒருங்கே இணைத்துச் செயல்பட வேண்டும்.

கல்வி என்ற பெயரில் நாம் குறிப்பிடும் எழுத்தறிவு மனித நாகரிக வளர்ச்சியின் அடித்தளமாகும். கல்வி என்ற வகையில் மனித இனம் தான் திரட்டிய அறிவுச் செல்வத்தையும் பட்டறிவுப் பெருக்கையும் தான் வகுத்த நன்னெறிகளையும் தொழில்நுட்பம் அறிவியல் போன்ற பொருளியல் துறை அறிவையும் முன் தலைமுறைகளிடம் இருந்து அறிந்து கொள்ளவும் பின் தலைமுறைகளுக்கு அவற்றைச் செழுமைப்படுத்தி வழங்கவும் ஒரு குமுகத்தின் பல்வேறு பண்பாட்டு நடவடிக்கைகளில் தன்னுணர்வுடனும் மேன்மையுடனும் ஈடுபடவும் முறையான எழுத்தறிவு இன்றியமையாதது. இவ்வளவு இன்றியமையாத இந்த எழுத்தறிவை அனைத்துக் குடிமக்களும் இலவயமாகப் பெறுவதற்கு எங்கிருந்து எந்தவகைத் தடங்கல்கள் வந்தாலும் அவற்றை முறியடித்து வெற்றி பெற வேண்டியது நம் இன்றியமையாக் கடமையாகும்.

அத்துடன் இன்றைய தமிழகத்தில் வழங்கப்படும் எழுத்தறிவிலும் தாய்மொழியாகிய தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. மக்களே தாய்மொழிக் கல்வியைப் பேணவில்லை. இதற்கு ஆங்கிலப்பித்து, பிறமொழிப் பித்து என்று மிகப்பலர் காரணம் கூறுகின்றனர்.

மனிதன் ஓர் உயிரி. அவனுக்கு உணவும் உறைவிடமும் அத்துடன் உடையும் இன்றியமையதன ஆகும். தமிழனும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த நிலையில் அவனுக்குத் தன் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான ஈட்டத்துக்குக் காட்டப்பட்டிருக்கும் மிகச் சிறந்த வழி எழுத்தாணி பிடிக்கும் அடிமைத் தொழிலே. அடுத்ததாகப் பெருந்தொழில்களில் தொழிலாளர் பணி. அதற்கும் வழியில்லாத போது சிறு தொழிற்பட்டறைகள், மரபுத் தொழில்கள், கடை வைத்தல், இறுதியாக வேளாண்மை. எனவே முன்னுரிமை அடிப்படையில் எழுத்தாணி ஒட்டுண்ணி வேலையை மனதில் கொண்டு வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்குச் செல்லத் தோதாகப் பிறமொழிப் படிப்பை அவன் நாடுகிறான். அத்துடன் தமிழகம் தன்னுரிமையுடைய நாடல்ல. தான் செயற்படுத்தும் ஒவ்வொரு திட்டத்துக்கும் நடுவணரசின் இசைவும் பண நல்கையும் வேண்டும். வழக்குகள் உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றங்களுக்குச் செல்ல வேண்டுமாயின் ஆங்கிலம் தேவைப்படுகிறது. இக்காரணங்களால் ஆங்கிலேயர் புகுத்திய ஆங்கில மொழிவாயில் கல்வியை நம் மக்களால் கைவிட முடியவில்லை.

ஒட்டுண்ணிப் பணி இல்லையாயினும் ஆகுக, தொழில் வளர்ச்சி இருந்தாலாவது அதில் நம் இளைஞர்கள் ஈடுபட வாய்ப்பிருக்கும். அங்காவது தாய்மொழிக் கல்வியைப் பயன்படுத்தலாம். ஆனால் நம்மை ஆள்வோரும் “முற்போக்கர்கள்” என்று பறைசாற்றிக் கொள்ளும் “மார்க்சியர்”களும் உள்நாட்டுத் தொழில் வளர்ச்சியை நசுக்கத் தங்களால் இயன்றவை அனைத்தையும் செய்து வருகின்றனர். அதற்கு மாறாக நம் நாட்டின் பொருளியலையே முற்றிலும் ஏற்றுமதி சார்ந்ததாக நம் ஆட்சியாளர்கள் மாற்றி வருகிறார்கள். அரசும், அரசுசார் மற்றும் தனியார் பொதுத்தொடர்புக் கருவிகளும் ஏற்றுமதிப் பொருளியலின் இன்றியமையாமை குறித்து மூச்சுவிடாமல் கருத்துப் பரப்பல் செய்கின்றன. எனவே இந்தத் திசையில் உருவாகும் வேலைவாய்ப்பிலும் பிறமொழி அறிவு தேவைப்படும். இச்சூழ்நிலையில் இன்று சில தமிழாவலர்கள் ஈடுபட்டுவரும் தமிழ்ப் பயிற்றுமொழிக் கிளர்ச்சிகள் வளர்ச்சியடைந்தால் பொதுமக்களிடமிருந்து அதற்கு எதிர்ப்புகள் வெடித்தெழலாம். 1971-இல் கருணாநிதி, கல்லூரிகளில் தமிழ்ப் பயிற்றுமொழி வகுப்புகளைத் தொடங்கிய போது மாணவர்களிடையில் உருவான கிளர்ச்சிகள் இந்த வகையில் ஒரு பாடமாக இருக்க வேண்டும்.

எனவே தமிழ்ப் பயிற்று மொழி பற்றி ஆர்வம் கொண்டுள்ளோர் தமிழகத்தின் அரசியல் தன்னுரிமைக்குப் பாடுபடவில்லையாயினும் தொழில் வளர்ச்சிக்கு, அதுவும் உள்நாட்டு மக்களின் நுகர்வை நோக்கமாகக் கொண்ட தொழில் வளர்ச்சிக்கும் அத்தொழில் வளர்ச்சிக்கு ஈடு செய்வதான மக்களின் வாங்கும் ஆற்றலை வலுப்படுத்துவதற்கும் சேர்த்துப் போராட வேண்டும். இன்றைய அரசு தன் ஏற்றுமதிப் பொருளியல் கொள்கையின் அடிப்படையில் உள்நாட்டினரின் வாங்கும் ஆற்றலை அழிப்பதையே நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு மக்களை மேலும் மேலும் வறுமைக் குழியினுள் தள்ளிக் கொண்டுள்ளது. எனவே இது ஓர் மொழிப் போராட்டத்துடன் இணைந்த பொருளியல் - அரசியல் போராட்டமாக அமைய வேண்டும்.


அடிக்குறிப்புகள்:

[1] திருமலை நாயக்கன் சக்கிலியர்களை ஒடுக்கினான் என்று கூறப்படுகிறது. அவனது ஆணையை கட்டபொம்மனின் முன்னோன் ஏற்காமல் தன் எல்லைக்குள் உள்ளோரைக் காத்ததால் அவர்கள் கட்டபொம்மன் காலத்தில் அவனுக்கு மிக உதவியாயிருந்தனர்.

[2] கட்டுறவு: நிபந்தனை (அக்குத்து ஒரு சிறந்த சொல். 50 ஆண்டுகளுக்கு முன் வழக்கிலிருந்தது)

0 மறுமொழிகள்: