24.4.07

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 18. சாதி இயக்கங்களும் சாதி ஒழிப்பு இயக்கங்களும்

சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் பல இயக்கங்கள் நம் நாட்டில் தோன்றியுள்ளன. அவை ஒவ்வொரு சமயத்தில் சாதிய ஒழிப்பைத் தம் குறிக்கோளாகக் கூறின. ஆனால் அவை அனைத்திலும் காணப்படும் பொதுக்கூறு, அவை வெள்ளாளக்கட்டு எனப்படும் பார்ப்பனியப் பண்பாடுகளைத் தூக்கிப் பிடித்திருப்பது தான். பொருளியலில் மேம்பாடடைந்தும் வெள்ளாளக்கட்டினுள் நுழைய இடம் பெற முடியாத சாதிகளால் தான் இந்த இயக்கங்கள் தலைமை தாங்கப்பட்டு வந்துள்ளன. தலைமை தாங்கிய இச்சாதிகள் வெற்றி பெற்று வெள்ளாளக்கட்டினுள் வெற்றிகரமாக நுழைந்தவுடன் அதுவரை தமக்குத் துணையாக இருந்து வெற்றி தேடித்தந்த பிற சாதியினரை இழிவுபடுத்தி ஒதுக்கிவிட்டன. இதனால் ஒதுக்கப்பட்ட சாதியினர் முன்னிலும் பன்மடங்கு தாழ்வுணர்ச்சியினால் தாக்கப்படுகின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாக எண்ணூறு ஆண்டுக்கால வலங்கை-இடங்கைப் பூசலின் இறுதியில் ஐந்தொழிற் கொல்லர்களின் செயலைக் கூறலாம். அண்மைக் கால வரலாற்றில் கேரளத்து ஈழவர்களையும் தமிழகத்து நாடார்களையும் சுட்டலாம். ஒடுக்கப்பட்டிருந்த அவர்கள் பார்ப்பனியம் எனும் வெள்ளாளக்கட்டினுள் நுழையும் அளவுக்குப் பொருளியலில் ஏற்றம் பெற்றதும் மேற்சாதிக் கோயில்களில் நுழையவும் மேற்சாதியினரைப் போல் பார்ப்பனரை வைத்துச் சங்கதத்தில் மந்திரங்கள் ஓதித் திருமணம் போன்ற சடங்குகளை நடத்தவும் உரிமை வேண்டி ஆலய நுழைவுப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கி நடத்தினர். ஆலய நுழைவு ஆணையைப் பிறப்பித்து அரசு நாள் குறிப்பிட்டதும் அதற்கு மூன்று நாட்கள் முன்னதாகவே, தாழ்த்தப்பட்டோர் தம்மோடு ஒக்க வருவதை விரும்பாமல் கோயில்களினுள் நுழைத்தனர். இது தமிழகத்து நாடார்கள் செய்தது.

குமரி மாவட்டத்தில் நடைபெற்ற தோள்சீலைப் போராட்டத்தைப் பற்றி நாம் மேலே கூறியுள்ளோம். முன்னாள் திருவிதாங்கூர் மாகாணத்தில் ஒரு சாதியினர் அணியும் உடைகளைவிடக் கூடுதலாக அவர்களைவிடத் தாழ்ந்த சாதியினர் அணியக்கூடாது. அத்துடன் மேல்சாதி ஆடவர் முன்வரும்போது பெண்கள் தம் மார்பகங்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும். இத்தகைய அருவருப்பான பழக்கத்தைக் கண்ட ஆங்கிலப் பெண்கள் தங்களால் மத மாற்றம் பெற்ற நாடார் பெண்கள் சட்டை அணிய வேண்டும் என்று வற்புறுத்தியபோது மேற்சாதியினரிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. பெரும் போராட்டங்களுக்குப் பிறகு ஒருவழியாக அந்த உரிமை வழங்கப்பட்டது. ஆனால் கிறித்துவ நாடார்கள் தங்களோடு இணைந்து போராடிய இந்து நாடார்களுக்கு அந்த உரிமையைக் கொடுக்க விரும்பவில்லை. இதனால் கிறித்துவக் கோயில்களை இடித்தல், கிறித்துவர்களைத் தாக்குதல் என்ற வகையில் கலவரங்கள் ஏற்பட்டு இந்துக்களும் அவ்வுரிமையைப் பெற்றனர். ஒரு சாதிக்குள்ளே வெளிநாட்டிலிருந்து வந்து நாடு பிடித்து ஆண்ட வெள்ளையர்களின் ஆதரவு இருக்கிறது என்ற இறுமாப்பில் தம்மோடு இணைத்து போராடியவர்களைத் தமக்கு நிகராக மதிக்க மறுத்த இந்த மதம்மாறிகள் தமிழகச் சாதிய இயல்புக்கு ஓர் அரிய சான்றாகும்.

பண்டைய வரலாற்றில் நுழைந்து பார்த்தால் நாம் காண்பது என்ன? சிவனிய எழுச்சிக் காலத்தில் சாதி வேறுபாடின்றிச் சிவனடியார்கள் போற்றப்பட்டனர். வேடனான கண்ணப்பர் வழங்கிய புலாலுணவைச் சிவனார் ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் ‘ஆவுரித்துத் தின்னும் புலையர்’ என்று உயர்வு தாழ்வைப் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றான உணவின் அடிப்படையாகக் கூறுகிறது சிவனிய இலக்கியம்.

அதற்கு முந்திய சமணமோ புலாலுண்ணாமை என்பதைத் தன் ஒழுக்க விதிகளுள் முதன்மையாகக் கொண்டது. உண்மையில் உணவு, திருமண முறை ஆகியவற்றின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பித்தல் என்ற நடைமுறையை முதன் முதலில் செயற்படுத்தியவர்களே சமணர்களாகத்தான் தோன்றுகிறார்கள்; ஏனென்றால் வாணிகர்களின் சமயமாக இது மாறிவிட்டது. உழைப்பிலிருந்து விடுபட்டு பெரும் செல்வம் குவித்ததிட்ட வாணிகர்கள் தம் மேன்மையைப் பறைசாற்ற இச்சமயத்தின் கொல்லாமைக் கோட்பாடு உதவியது.

பிற்காலத்தில் தோன்றிய பசவனின் வீரசிவனியக் கோட்பாடும் புலாலுண்ணாமை என்பதைத் தன் அடிப்படைக் கோட்பாடாகக் கொண்டுள்ளது.

சென்ற நூற்றாண்டில் தமிழகத்தில் நாடார்களின் மீட்சிக்கெனப் போராடிய ஒரு தலைவர் குமரி மாவட்டத்து சாமிதோப்பில் சமாதியைக் கொண்டுள்ள முத்துக்குட்டியடிகள். இவரை நாராயணசுவாமி என்றும் வைகுண்டசாமி என்றும் குறிப்பிடுவர். இவர் முன்னாள் திருவிதாங்கூர் மாகாணத்தில் சாணார்களுகெதிராக நாயர்களால் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கெதிராகப் போராடியவர்.

நெல்லை மாவட்டத்திலும் திருவிதாங்கூர் மாகாணத்திலும் சென்ற நூற்றாண்டிலும் இந்நூற்றாண்டுத்[1] தொடக்கத்திலும் நாடார்கள் மேற்சாதியினரால் கடுமையான ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டனர். அவ்வொடுக்குமுறையிலிருந்து தப்பிக்கக் கிறித்துவத்துக்கு மாறும் மதமாற்றம் அவர்களுக்கு உதவியது. ஆனால் கிறித்துவமும் மேற்சாதியினர் கைகளிலேயே இருந்தது. அது மட்டுமல்ல ஐரோப்பிய சமய ஊழியர் இங்கு மதமாற்றம் செய்ய வந்தது தத்தம் நாட்டு அரசை இங்கு நிறுவுவதில் அரசினருக்கு உதவத்தானேயொழிய இந்நாட்டு மக்களின் பண்பாட்டை மேம்படுத்த அல்ல.

இதற்குச் சான்றாகப் போர்த்துக்கீசீயரைக் கூறலாம். தமிழகம் மற்றும் கேரளக் கடலோரங்களில் வாழ்ந்த மீனவர்களை நெடுநாட்களாகவே அரேபியர்கள் சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆளாக்கினர். உள்நாட்டு அரசுகள் தமக்குள் மாறி மாறிக் கொள்ளையடிப்பதையே நோக்கமாகக் கொண்டு போரிட்டு வந்தனவேயன்றி மக்களைப் பாதுகாப்பதென்பதைப் பல நூற்றாண்டுகளாகவே கைவிட்டிருந்தன.[2] இந்நிலையில் இங்கு வந்த போர்த்துக்கீசிய விடையூழியர் தென் தமிழ்நாடு மற்றும் திருவிதாங்கூர் கடலோர மீனவர்களை அணுகினர். தங்கள் சமயத்துக்கு மாறினால் அதன் மூலம் அவர்கள் போர்த்துக்கீசிய மன்னரின் குடிமக்களாகலாம். அதன் மூலம் மன்னர் அவர்களுக்குப் படைக்கலன்கள் கொடுத்து உதவுவார் என்று வாக்குறுதியளித்தனர். மக்கள் ஏற்றுக் கொண்டு மதம் மாறினர். ஒரே நாளில் 6 ஆயிரம் பேர் மதம் மாறியதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு மதம் மாறியவர்கள் போர்த்துக்கீசியரோடு சேர்ந்து கொண்டு உள்நாட்டுக் கோயில்களை அழித்ததாகவும் தமிழக வரலாறு கூறுகிறது.

இதே போர்த்துக்கீசியர்களால் கிட்டத்தட்ட இதே கால கட்டத்தில் (16-17ஆம் நூற்றாண்டுகள்) சப்பானில் ஒரே தலைமுறையில் ஓரிலக்கம் பேர் மதமாற்றம் பெற்றனர். புத்தக் கோயில்களை அழித்தனர். அவர்கள் அரசால் நாட்டை விட்டோடும் படி அல்லது தாய் மதத்துக்குத் திரும்பும் படி எச்சரிக்கப்பட்டனர். எனவே ஒரு தீவுக்குச் சென்று கோட்டை கட்டி வாழ்ந்து வந்தனர். பின்னர் ஆட்சிக்கு வந்த ஒருவன் 37 ஆயிரம் பேரில் 105 பேர் தவிர மீதிப் பேரை கொலை செய்தான். இவ்வாறு கிறித்துவம் பரவுதலும் அயலவருக்கு மக்கள் துணை போவதும் தடுக்கப்பட்டது. சப்பானுக்கு மதமாற்றம் செய்ய வந்த ஒருவனின் வாக்குமூலத்தை ஒரு வரலாற்றாசிரியர் மேற்கோள் காட்டியிருக்கிறார்.[3] முதலில் மதமாற்றம் செய்வதும் பின்னர் அம்மக்களைக் கொண்டு நாட்டைப் பிடிப்பதுமே தம் உத்திகள் என்பது அந்த வாக்குமூலம்.

சப்பானில் வெற்றி பெற முடியாத ஐரோப்பியர் இந்தியாவில் வெற்றி பெற்ற வரலாறு இது. இவ்வாறு மதம் மாறிய சூழ்நிலையில் முத்துக்குட்டியார் நாடார்கள் மதமாற்றத்தால் முழு விடுதலை பெறலாம் என்று நம்பி கிறித்துவத்துக்கு மாறிக் கோயில் ஊழியம் செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் ஆங்கில ஆட்சிக்கு இடைஞ்சல் வரும் அளவுக்கு எந்தப் போராட்டத்திற்கும் சமயத் தலைவர்கள் இடந்தர மாட்டார்கள் என்பதை அறிந்ததும் அவர் தாய் மதத்துக்குத் திரும்பினார்.
[4]

தாய் மதத்துக்குத் திரும்பிய அடிகள் தம் சாதிக்காரர்களைத் திரட்டினார். தாழ்த்தப்பட்ட மக்களையும் சேர்த்துக் கொண்டு கூட்டுணவு விருந்துகள் நடத்தினார். நாடார்கள் மீது சுமத்தப்பட்ட பல்வகை ஊழியங்களுக்கும், வெட்டி வேலைகளுக்கும்[5] பிற கொடுமைகளுக்கும் எதிராகக் குரல் கொடுத்தார். திருவிதாங்கூர் ஆட்சிக்கெதிராகப் பெரும் கலகம் எழும் சூழல் உருவானது. திருவிதாங்கூர் மன்னர் பேச்சுக்கு அழைத்தார். கலகம் விளைந்தால் ஆங்கிலேயர் வகுத்திருந்த விதிப்படித் தம் மாகாணத்தைப் பேரரசோடு இணைத்துக் கொள்வர் என்று எடுத்துரைத்தார். ஆங்கிலேயரை முற்றிலும் வெறுத்த அடிகள் விட்டுக்கொடுக்க முன் வந்தார். எனவே அவர்களுக்குள் ஓர் உடன்பாடு ஏற்பட்டது. அதனடிப்படையில் தன் இருப்பிடம் திரும்பிய அடிகள் தான் திருமாலின் தோற்றரவு என்றும் மக்களுக்கு நோய் தீர்ப்பேன் என்றும் கூறி தாமரைக்குளம் எனும் ஊரில் சாமிதோப்பு என்ற இடத்தை நிறுவி அமர்த்தார். அங்கு வழிபாட்டுக்கு வருவோர் மேற்சாதியினரால் நாடார்களுக்கு மறுக்கப்பட்ட தலைப்பாகை கட்டுதல் கட்டாயமாக்கப்பட்டது. வழிபாடு பிற கோயில் முறைகளிலிருந்து மாற்றங்களுடன் நடத்தப்பட்டது. ஆனால் மேற்சாதிக் கோயில்கள் போலவே புலால் உண்ணாமை வலியுறுத்தப்பட்டது. வழிபாட்டுக்காக அவர் இயற்றிய பாடலில் இந்து - முசுலீம் ஒற்றுமை வலியுறுத்தப்படுகிறது.
[6]

இதே காலத்தில் வாழ்ந்த இராமலிங்கரும் ஆங்கிலேயரை வெறுத்தவரே. ‘கருணையிலா ஆட்சி ககுகி ஒழிக’ என்று அவர் குறிப்பிடுவது ஆங்கில அரசையே. கிறித்துவர்களின் வளர்ச்சியைத் தடைப்படுத்தவே ‘சுத்த சமரச சன்மார்க்க சங்கத்தை’ நிறுவினார். இதன் மூலம் இந்து - முசுலீம் ஒற்றுமை முயலப்பட்டது.

இராமலிங்கர் சாதி வேற்றுமையை ஒழிக்கப்பாடுபட்டவர் தான். இருந்தாலும் இவரும் புலாலுண்ணாமையை வலியுறுத்தினார்.

கேரளத்தில் ஈழவர்கள் என்றொரு சாதியினர் தமிழகத்து நாடார்களைப் போன்றே ஒடுக்கப்பட்ட நிலையிலிருந்தனர். அவர்கள் பணிக்கர் என்ற பட்டப் பெயர் வைத்துக் கொள்வர். தீயர் என்றும் அழைக்கப்பட்டனர். அவர்களைக் கண்டால் தீட்டு என்று மேற்சாதியினர் கூறினர். அவர்களில் யாரையாவது மேற்சாதியினர் பார்த்துவிட்டால் அதற்குரிய தண்டனையை அந்த ஈழவனே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்நிலையில் நாராயணகுரு என்றொரு பெருமகன் அச்சாதியில் தோன்றினார். தம் சாதி மக்களை ஒருங்கிணைத்தார். புலாலுண்ணாமை, சங்கதம் (சமற்கிருதம்) கற்றல் முதலியவற்றை ஊக்கினார். இன்று அச்சாதியினர் நாராயணகுருவின் பெயரில் சங்கம் அமைத்துள்ளனர். அது ஒரு பெரும் அரசியல் அமைப்பாகச் செயற்படுகிறது.

இவ்வாறு வரலாற்றில் சாதி எதிர்ப்பு இயக்கங்களைத் தொடங்கியோர் மேற்சாதியினராயிருந்தாலும் சரி கீழ்ச்சாதியினராயிருந்தாலும் சரி அவர்கள் அனைவரும் வெள்ளாளக்கட்டையே தம் பண்பாட்டுக் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். இதுவே பெரும்பான்மை மக்கள் ஓரணியில் திரண்டு நின்று நெருங்கி இணைந்து நிற்கவொட்டாமல் அவர்களுக்கிடையிலிருந்த இடைவெளி சுருங்காமல் பேணிக்காத்து வந்துள்ளதன் காரணமாகும்.

குமுகவியலில் பார்த்தால் சாதி அடுக்கில் பார்ப்பனர்க்கு அடுத்தபடியாக வருபவர்கள் பொட்டுக் கட்டும் சாதியினரான தேவரடியார்கள் எனப்படும் தளியிலார்களே. அவர்களை நாம் இசைவேளாளர்களென்றே குறிப்பிடுவோம். கோயிலுக்குப் பொட்டுக்கட்டி விடும்போது இறைவனின் பெயரால் தளியிலாப் பெண்ணுக்குத் தாலி கட்டுவதும் அவள் இறக்கும் போது அவளுக்கு இறுதிக் கடன்களைச் செய்வதும் கோயிற் பூசாரிகளான பார்ப்பனரே. அப்பெண்ணைப் பிற ஆடவர் இற்கிழத்தியாக[7] அடைவதற்கு இப்பூசாரிப் பார்ப்பனரின் இசைவு வேண்டும். ஏழ்மை நிலையிலிருந்த பார்ப்பனர்கள் இவ்வாறு இப்பெண்களைக் கூட்டிக்கொடுக்கும் தரகர்களாக(மாமாக்களாக)வும் செயற்பட்டனர். இப்பெண்களை இவ்வாறு பயன்படுத்தும் வாய்ப்பு பார்ப்பனர்கள் தங்கள் மேலாளுமையைத் தக்க வைத்துக் கொள்வதில் முதன்மைப் பங்காற்றயுள்ளது. பார்ப்பனர்களோடு நெருக்கமாக எந்த விதமான தீட்டும் விலக்குமின்றி திருமண உறவுக்கு இணையான ஒருவகை உறவோடு வாழ்ந்தனர்களென்ற வகையில் இசை வேளாளர்கள் தமிழகச் சாதி அமைப்பில் பார்ப்பனர்களுக்கு அடுத்த நிலையிலுள்ளவர்கள்.

சென்ற நூற்றாண்டில் தேவரடியார்களைப் பற்றி எழுதிய ஓர் ஆங்கிலேயர், கும்பினியின் அதிகாரிகளாக இருந்த பார்ப்பனர்கள் ஓர் ஊரினுள் நுழையும்போது நுழைவாயிலில் அவர்களைச் சதிராடி வரவேற்று அவர்கள் ஊரினுள் இருக்கும்போது “அனைத்து” வகைப் பணிவிடைகளும் செய்து போகும்போது ஊர் எல்லைவரை சென்று சதிராடி வழியனுப்புவது அவ்வூர்க் கோயில் தளியிலாப் பெண்டிராகிய தேவரடியார்களின் கடமையாயிருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். இதற்குக் காரணமாகப் பார்ப்பனப் பெண்கள் கல்வி, நடையுடை முதலியவற்றிலிருந்த பிற்பட்ட நிலைமையையும் தேவரடியார்கள் இத்துறைகளில் எய்தியிருந்த மேம்பட்ட நிலையையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.[8] இளங்கோவடிகளும் கணிகையரை எண்ணெண் கலையோர் (8 x 8 = 64) என்று குறிப்பிடுகிறார். அக்கலைகளில் சிலவற்றை இங்கு குறிப்பிடுவது அவற்றின் தன்மைகளைப் புரிந்துகொள்ள உதவும்: எழுத்திலக்கணம், கடிதம் எழுதுதல், கணிதம், வேதம், தொன்மம்(புராணம்), இலக்கணம், நீதி நூல், கணியம்(சோதிடம்), அறநூல், ஓகம்(யோகம்), மந்திரம், நிமித்திகம்(சகுனம்), சிற்பம், மருத்துவம், உருவம்(சாமுத்திரிகா லட்சணம்), மறவனப்பு (இதிகாசம்), காப்பியம், ஒப்பனை, சமையல், நாடகம், நாட்டியம், ஒலிநூல், யாழ், குழல், முழவு, தாளம், வில்வித்தை, பொன் பார்த்தல், குதிரையறிதல், மணி (இரத்தினம்) அறிதல், நிலமறிதல், மலையேறுதல், மற்போர், காமக்கலை, வசியம், வானிற்பறத்தல் முதலியன. கணிகையரிடம் எதிர்பார்க்கப்பட்ட திறன்களின் விரிவுகளை இதன் மூலம் நம்மால் அறிய முடிகிறது. எனவே அவர்களிடம் இவற்றில் சிலவாவது எய்தப்பட்டிருக்க வேண்டும். பின்னர் வெள்ளையரின் நிலவுடைமைச் சீரமைப்புகளால் ஏற்பட்ட மாற்றங்களினால் பார்ப்பனர்களுக்கும் தளியிலார்க்கும் பிணக்குகள் எழுந்தன.[9] தேவரடியார்களை இழிவுபடுத்திக் கதைகளும் திரைப்படங்களும் வெளிவந்தன. குடும்பங்களைச் சிதைப்பவர்கள், வஞ்சக உள்ளம் படைத்தவர்கள், நன்றியில்லாதவர்கள், இரக்கமற்றவர்கள் என்ற வகையில் அவை தேவரடியார்களைக் காட்டின. அரிதாசு, டம்பாச்சாரி, தாசி அபரஞ்சி போன்றவை சில எடுத்துக்காட்டுகள். அதே நேரத்தில் இசை வேளாளப் பெண்களும் பள்ளிகளில் கல்வி கற்று முறைப்படியான திருமண உறவுகளில் ஈடுபடத் தொடங்கினர். அவ்வாறு மேம்பாடடைந்தோர் பொட்டுக்கட்டும் முறையை எதிர்த்துக் குரல் எழுப்பினர். பார்ப்பனர்கள் அதை நிலைநிறுத்த முயன்றனர். பொட்டுக்கட்டுவதை எதிர்த்து அந்நாளைய சட்டமன்றத்தில் நடந்த வாதத்தில் பழமையான பொட்டுக்காட்டும் முறையை ஒழிக்கக் கூடாது என்று புகழ்பெற்ற பேரவை (காங்கிரசு)க் கட்சித் தலைவர் சத்தியமூர்த்தி எனும் பார்ப்பனர் கூறிய போது ப-ர்.[10] முத்துலட்சுமி ரெட்டியார் என்ற பெண்மணி திரு.சத்தியமூர்த்திக்கு பொட்டுக்கட்டும் மரபைப் பேண வேண்டுமென்பதில் அவ்வளவு கவலை இருந்தால் தன் சாதிப் பெண்களுக்குப் பொட்டுக்கட்டி அம்மரபைப் பேணட்டும் என்று முகத்திலறைந்தாற் போல் கூறி வரலாறு படைத்தார்.

பெரியாரின் தன்மான இயக்கம் பெண்கள் விடுதலை மாநாடுகள் நடத்திப் பெண்களுக்குப் பொட்டுக்கட்டும் வழக்கத்தை ஒழிக்க வேண்டுமென்று முழங்கியது. அத்தகைய ஒரு பெண்கள் மாநாட்டில் தான் ஈ.வெ.ராமசாமியான தன்மான இயக்கத் தலைவருக்குப் பெரியார் என்ற பட்டம் சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கோயில்கள் வளமாயிருந்த காலத்தில் தம் பொருளியல் நிலையையும் அதன் மூலம் குமுகத் தரத்தையும் ஓரளவு பேணி வந்த இசைவேளாளப் பெண்கள் கோயில்கள் தளர்ச்சியடைந்த காலங்களில் மிகத் தாழ்ந்த நிலைக்கு இழிந்தார்கள். குமுகத்தால் ஒதுக்கப்பட்ட ஒரு நிலையை அடைந்தார்கள். இத்தகைய தாழ்வான ஒரு நிலையில் அவர்கள் இருந்தபோதுதான் அச்சாதியைச் சேர்ந்த அண்ணாத்துரையும் கருணாநிதியும் தன்மான இயக்கத்தில் சேர்ந்தனர். தாங்கள் பிறந்த பின்னணிக்கேற்ப முதலில் அவர்கள் மிகப் புரட்சிகரமான உணர்வுகளை வெளிப்படுத்தினர்.[11]

பெரியாரின் தன்மான இயக்கம் நயன்மை (நீதி)க்கட்சியுடன் இணைந்தபோது அதிலிருந்த கீழ்ச்சாதி மக்களின் பெரும்பான்மையைப் பொறுக்காத மேற்சாதியைச் சேர்ந்த பல தலைவர்கள் பேரவைக் கட்சிக்குத் தாவினர். இவ்வாறு தமிழ்த் தேசிய இயக்கம் ஒரு முன்னோக்கியப் பாய்ச்சலை அடைந்தது. அடுத்த கட்டமாகப் பெரியாரின் தன்முனைப்புப் போக்கினால் மனம் தளர்ந்து போயிருந்த இளைஞர்களைச் சேர்த்துக் கொண்டு அண்ணாத்துரை திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். இயக்கம் அடிப்படை மக்களை நோக்கிப் பரவியது. இதற்குள் அண்ணாத்துரை, கருணாநிதி ஆகியோரின் மேற்சாதி உள்ளுணர்வுகள் அவர்களை அறியாமலே செயற்படத் தொடங்கின. பார்ப்பன ஏடுகளும் தலைவர்களும் அண்ணாத்துரையின் அறிவுத் திறனையும் தலைமைப் பண்பையும் ஏற்றுக் கொண்டு அவருக்கு ‘அறிவுரை’ கூறத் தொடங்கினர். அதனை ஏற்றுக்கொண்டு அவர் தான் இதுவரை கூறி வந்த புரட்சிகரக் கொள்கைகளை ஒவ்வொன்றாகக் கைவிட்டுச் சிறிது சிறிதாகப் பார்ப்பனர் பக்கம் நகர்ந்தார். கொள்கை அளவில் தம்மை எதிரெதிராகக் காட்டிக் கொள்ளும் பொதுமைக் கட்சிப் பார்ப்பனர்களும் இராசகோபாலாச்சாரியும் அவரை ஆதரிக்கத் தொடங்கினர். இந்நிலையில் கட்சியில் கொதிப்படைந்த இரண்டாம் மட்டத் தலைவர்கள் சம்பத்தின் கீழ்த் திரண்டனர். ஆனால் சம்பத்தும் வாய்ப்பியத்தை(சந்தர்ப்பவாதத்தை)க் காட்டவே அம்முயற்சி குலைந்தது. சென்றவர்கள் மீண்டும் தி.மு.க.வுக்கே திரும்ப வேண்டியதாயிற்று. சரியான மாற்றுத் தலைமை கிடைக்காமற் போயிற்று. தன் முனைப்பால், புண்படுத்தப்பட்ட மான உணர்வால் மனம் குழம்பிப் போன பெரியார் கொள்கையைப் பிடித்துச் செல்ல வகை தெரியாது காமராசரைப் பிடித்துப் பேரவைக் கட்சிக்கு எடுபிடியாக மாறி விட்டார். இந்நிகழ்ச்சிகளால் மாபெரும் வாய்ப்புகளைக் கொண்டு தொடங்கிய திராவிட இயக்கம் எய்தியது அதிகாரத்தைப் பார்ப்பனர்களிடமிருந்து இசைவேளாளர்களுக்கு மாற்றியதே.

இந்தத் திறனாய்வைச் செரிப்பதற்குத் திராவிட இயக்கத்தில் தம்மைப் பிணைத்துக் கொண்டவர்களுக்கு மிகக் கடினமாயிருக்கலாம். ஆனால் இதுதான் உண்மை. ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், குமாராசாமி ராசா முதலிய பார்ப்பனரில்லா மேற்சாதியினரிடமிருந்து இராசகோபாலாச்சாரி என்ற, பார்ப்பனரில் மிக உயர்ந்த சாதியாகிய வடகலை ஐயங்காரிடம் சென்றுவிட்ட தமிழக ஆட்சி மீட்கப்பட்டுக் கீழ்ச்சாதியைச் சேர்ந்த காமராசரிடம் சென்றது ஒரு வளர்ச்சி நிலையானால் அது மீண்டும் மேற்சாதியினரான பக்தவத்சல முதலியாரிடமும் அவரை விட மேற்சாதியினராக அண்ணாத்துரையிடமும் கருணாநிதியிடமும் சென்றது ஒரு தளர்ச்சியே. தி.மு.க.., அ.தி.மு.க. ஆட்சியில் கீழ்ச் சாதியைச் சேர்ந்த பலர் அரசியல் பதவிகளையும் அரசுப் பதவிகளையும் அரசு ஒப்பந்தங்களையும் பெற்றாலும் ஒரளவு தாக்குதலுக்குள்ளாகியிருந்த பார்ப்பனர்கள் பல துறைகளிலும் மீட்சி பெறத்தொடங்கியது இக்காலத்தில்தான். கீழ்ச்சாதியினர் பெற்றவை தம் சாதிகளிலுள்ள பிறரைக் காட்டிக் கொடுப்பதற்கான கைக்கூலியே. தூக்குமேடை, பராசக்தி போன்ற நாடகங்கள், திரைப்படங்களை எழுதிய கருணாநிதி வெள்ளிக்கிழமை[12] போன்ற கதைகளை எழுதியது தற்செயல் நிகழ்ச்சிகளல்ல. 1969 அல்லது 70 ஆகிய ஆண்டுகளிலும் பின்னரும் தமிழ்நாட்டு அரசூழியர் தேர்வாணையம், மின்வாரியம் ஆகியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட IV-ஆம் வகுப்பு ஊழியர்களில் பெருமளவில் பார்ப்பனர்கள் இருந்தனர். வெளியே உயரதிகாரிகளில் சில பார்ப்பனர்களை பதவி உயர்வு கொடுப்பதில் ஒதுக்கி விட்டுப் பார்ப்பனருக்கு எதிரானவன் என்ற பெயரைத் தட்டிக் கொண்டு திரைமறைவில் நடத்தப்பட்ட நாடகம் இது. இந்தத் தேர்வுப் பட்டியல்களைக் கருணாநிதி தன் கைப்பட உருவாக்கினார், தேர்வாணையத்தில் தலையிட்டார் என்பது ஒரு குற்றச்சாட்டு. வட்ட, மாவட்டத் தலைவர்கள் தந்த பட்டியல்களிலிருந்து அது உருவாக்கப்பட்டதாம். வட்ட, மாவட்டத் தலைவர்களுக்கு பெண்களைக் காட்டிப் பெயர்கள் பட்டியல்களில் இடம்பெற்றன என்றும் சென்னை சட்டமன்ற உறுப்பினர் விடுதியிலேயே இவையாவும் நடைபெற்றன என்றும் கூறப்பட்டது. கீழ்ச்சாதியைக் சேர்ந்தவர்கள் என்று நம்மால் நம்பப்படும் இந்த மேற்சாதித் தலைவர்களால் தமிழக வளர்ச்சிக்கு ஏற்பட்டுள்ள தடங்கல்களை நாம் எல்லோரும் அறிவோம்.

அரசியல் தலைவர்களை அவரவர் சாதி நலன்களை நாடுபவர்களாகக் கூறுவது சரியா என்ற ஐயம் எழலாம். அரசுத் தலைவர்கள் பொதுவாகச் செல்வம் படைத்தவர்களையே சார்ந்து நிற்பர். ஆனால் இரத்த உறவை அடிப்படையாகக் கொண்ட நம் சாதியமைப்பில் உறவுமுறைகளைப் பயன்படுத்தித் தலைவரின் சாதியினர் பயன்பெறுவது தவிர்க்க முடியாதது. மேலும் சாதிகள் ஒரே தொழில் செய்வோரின் ஒரே அமைப்பல்ல. எல்லாச் சாதிகளிலும் பல தொழில்கள் பொதுவாக உள்ளன. பெரும்பாலான தொழில்களைச் செய்வோரும் எல்லாச் சாதிகளிலும் உண்டு. சிறப்பாக இது கீழ்ச்சாதிகளுக்குப் பொருந்தும். எனவே சாதி என்பது இரத்த உறவை அடிப்படையாகக் கொண்ட குமுக அமைப்பாகவே இறுதியில் சுருங்கிவிடுகிறது. தொழில் அமைப்பாக முதலில் தோன்றி குக்குல அமைப்பை உடைத்த சாதி மீண்டும் குக்குல அமைப்பாகத் தானே மாறிவிட்டது. ஒன்று தன் எதிரதாக மாறுதல் என்ற இயங்கியல் விதிக்கு இது இன்னுமோர் எடுத்துக்காட்டு.

சில சாதிகளில், குறிப்பாகக் கீழ்ச் சாதிகளில் இருந்து உருவாகும் தலைவர்கள் தம் சாதியாருக்குப் பொருளியல் வகையில் உதவுவது இயலாமலிருக்கக் கூடும். அத்தகைய உதவியைப் பெறும் அளவுக்கு அவர்களது பொருளியல் வலிமை பெறாதது ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது அத்தகைய உதவிகள் பெறுமுன்னரே அவர்கள் பொருளியலில் வலிமை எய்தியிருக்கலாம். ஆனால் குமுக மதிப்பைப் பெறுவதற்கு அத்தலைவரின் அரசியல் தலைமை பயன்படலாம். காமராசரால் நாடார்கள், குறிப்பாக விருதுநகர் நாடார்கள் பொருளியலில் பயன் ஏதும் பெறவில்லை என்றே அவர்கள் (விருதுநகர் நாடார்கள்) கூறுகிறார்கள். இவ்வாறே குமரி மாவட்ட நாடார்களும். குமரி மாவட்டம் திருவிதாங்கூர் மாநிலத்திலிருந்து பிரிந்தபோது தேவிகுளம், பீர்மேடு ஆகிய வட்டங்கள் அவற்றோடு பிரிவதற்குத் தடங்கலாயிருந்தவரும் குமரி மாவட்டக் கல்வி, பொருளியல் வளர்ச்சிகளைத் தடுத்த சி.சுப்பிரமணியத்துக்கு உறுதுணையா யிருந்தவரும் காமராசரே என்பது அம்மாவட்டத்தவர் கருத்து. அப்படிப்பட்ட காமராசர் தான் பதவியிழந்து அரசியலிலிருந்து தூக்கியெறியப்பட்ட நிலையில் குமரி மாவட்ட நாடார்களிடையில் ஓரளவு மங்கி அரசியல் கட்சி, கொள்கை என்ற மனப்பாங்குகளுக்கு இடமளித்துக் கொண்டிருந்த சாதியுணர்வுகளை வளர்த்து அதில் குளிர்காயச் சென்றதும் அரசியல்வாணர்களின் இயல்பான இரண்டகத்துக்கு ஒரு சான்றாகும். கீழ்த்தர அரசியல்வாணர்கள் தாங்கள் மக்களுக்குச் செய்வனவற்றை விட அவர்களிடமிருந்து அதிகமாகவே பெறுகிறார்கள். ஆனால் காமராசரின் பதவிக் காலத்தில் தமிழகத்தில் நாடார்களின் செல்வாக்கு அவர்களின் பொருளியல் நிலைக்கேற்ப ஓரளவு உயர்ந்தது. வடக்கில் விறகு மண்டிக்காரர்கள், கட்டை மண்டிக்காரர்கள் என்றும் தென் மாவட்டங்களில் பனையேறிகள், சாணார்கள் என்றும் அழைக்கப்பட்டு இழிவாகக் கருதப்பட்டு வந்த நாடார்களுக்குக் காமராசர் காலத்தில் ஓரளவு மதிப்பு ஏற்படத் தொடங்கி அந்நிலை தொடர்ந்தது. காமராசருக்கு நெருங்கிய உறவினர்கள் எவரும் பெரும் பொருளியல் ஆதாயங்களை அவரைக் கொண்டு சேர்க்கும் நிலையில் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் கருணாநிதி காலத்தில் அப்போது அவரது சாதியினர்க்குக் கொஞ்ச நஞ்சம் இருந்த தாழ்வுணர்ச்சி நீங்கியதுடன் அவரது உறவினர்களின் நிலையும் உயர்ந்தது. கருணாநிதி தன் பதவியையும் தலைமையையும் காத்துக் கொள்ளத் தன்னையும் தன் கட்சியையும் சார்ந்திருந்த கீழ்ச்சாதித் தலைவர்களை நன்றாக மேயவிட்டதால் இந்த ஆட்டபாட்டத்தில் அவர் சாதி பற்றியோ அவரது உறவினர் பற்றியோ யாரும் கவலைப்படவுமில்லை. இந்த மொத்த வேட்டையில் அது மிகச் சிறு பகுதியாகவே இருக்கவும் கூடும்.

அன்று ஆங்கில எழுத்தாளர் இசைவேளாளப் பெண்கள் எய்தியிருந்தனர் என்று கூறிய திறமைகளை எல்லாம் ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்குள் பார்ப்பனப் பெண்கள் எய்திவிட்டனர் என்பதும் அவர்களது அன்றைய பிற்பட்ட நிலைமை இன்று பழங்கதையாய்ப் போய்விட்ட தென்பதும் இன்று நாமறித்த உண்மைகள். அத்துடன் பல இசைவேளாளப் பெண்கள் பார்ப்பனச் சாதிகளால் உட்செரிக்கப்பட்டும் விட்டனர். ஏதோவொரு வகையில் ப-ர். முத்துலட்சுமி ரெட்டிக்கும் சத்தியமூர்த்திக்கும் நடைபெற்ற வாக்குவாதப் பொருளில் ஒரு பகுதியேனும் நிறைவேறி விட்டது.

இன்று வரை நடைபெற்ற குமுக இயக்கங்கள் அல்லது சாதி எதிர்ப்பு இயக்கங்கள் அல்லது சாதி ஒழிப்பு இயக்கங்கள் எல்லாம் பார்ப்பனியம் எனப்படும் வெள்ளாளக்கட்டை உயர்த்தியும் கீழ்ச்சாதிப் பண்பாடுகளைத் தாழ்த்தியுமே வந்துள்ளன. தலித் என்ற பெயரில் இயங்கும் தாழ்த்தப்பட்டோர் இயக்கங்களால் பயனடைந்த பள்ளர்கள் தம்மை தேவேந்திர குலவேளாளர் என்று கூறி பார்ப்பனியம் எனும் வெள்ளாளக்கட்டைத் தழுவிவிட்டது கூட இத்தகையதே. அவற்றின் விளைவால் கீழ்ச்சாதியினரிடம் தன்னம்பிக்கையிழப்பும் தாழ்வுணர்ச்சியுமே மிகுந்துள்ளன. தாம் தம் பண்பாட்டால் இழிந்தவர்கள்; தாம் அடக்கி ஒடுக்கப்படுவது இயற்கையே; தாம் செய்த பாவங்களே தம்மைக் கீழ்ச்சாதியில் பிறக்க வைத்துள்ளன. நல்வினையால் அல்லது நல்லூழால் மேற்சாதியினர் அவ்வாறு பிறந்துள்ளனர் என்ற தோல்வியுணர்வு மேலோங்குவதற்கே இந்த இயக்கங்கள் பயன்பட்டு வந்துள்ளன.

இந்த இயக்கங்களுக்கு ஒரே விதிவிலக்கான தன்மான இயக்கம் நகரத்தை அல்லது வெள்ளாளக்கட்டை ஏற்கனவே மேற்கொண்டுவிட்ட கீழ்ச்சாதியினரை நோக்கியதாக இருந்ததே தவிர கீழ்ச்சாதிகளிடையில் உள்ள சிறந்த பண்பாட்டுக் கூறுகளை இனங்கண்டு அவற்றைப் பாராட்டி எழுச்சியூட்டவில்லை. எனவே அதன் பணி அம்மக்களை எட்டவில்லை. இந்த விதிவிலக்குக் கூட இன்று அதற்குப் பொருந்தாது. பிற்போக்கு இயக்கமான தி.மு.க.வுடன் தன்னை இரண்டறப் பிணைத்து அதன் வாலாகவும் தொங்குசதையாகவும் அது மாறிவிட்டதும்[13] மேற்சாதிக் கோயில்களில் பூசாரி (அருச்சகரெனும் போற்றி) வேலை வேண்டுமென்று போராட்டங்கள் நடத்துவதும் அவ்வியக்கமும் வழக்கமான பார்ப்பனியம் எனும் வெள்ளாளக்கட்டு சகதிக்குள் சிக்கிக் கொண்டதையே காட்டுகிறது. திராவிடர் கழகத்தின் இன்றைய தலைவர் “மானமிகு” (?!) வீரமணியும் பார்ப்பனர்களின் பேச்சாளர் சோவும் கூடிக் குலவிப் பேசிக்கொண்டது தற்செயல் நிகழ்ச்சியல்ல என்பதை அப்போதுதான் புரிந்து கொள்ள முடியும். (தி.மு.க.வின் தொடர்ச்சியே அ.தி.மு.க. என்பதால் அதைத் தனித்துப் பிரித்துக் கூறவில்லை. தி.மு.க. வைப் பற்றிக் கூறும் திறனாய்வுகள் அதற்கும் பொருந்தும். அத்துடன் திராவிட இயக்கத்தில் பார்ப்பனியம் எனும் வெள்ளாளக்கட்டுப் போக்கு இறுதியில் பார்ப்பனப் பெண் ஒருவரின் தலைமையின் கீழ் கொண்டு வந்து சேர்த்துவிட்ட விதியின் விளையாட்டை வலியுத்துகிறது. ஒன்று அதன் எதிராவது என்ற இயங்சியல் விதியே அது. அது மட்டுமல்ல, பார்ப்பனருக்கு நேர் கீழ்மட்டத்திலிருக்கும் இசைவேளாளராகிய கருணாநிதியிடமிருந்து ம.கோ.இரா. என்ற இடைவெளிக்குப் பின் பார்ப்பனப் பெண் கையில் ஆட்சி சென்று விட்டதையும் இது காட்டுகிறது.)

திராவிடர் கழகத்தைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கு அதன் ஒரு சில போராட்டத் திட்டங்களைப் பார்த்தால் போதும். 1982ஆம் ஆண்டு கோயில்களில் அருச்சகர் வேலை தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற போராட்டத்தை அது நடத்தியது. ‘முகம்மதிய மதத்தில் யார் வேண்டுமானாலும் முல்லாவாகலாம், கிறித்துவத்தில் யார் வேண்டுமானாலும் பாதிரியாகலாம். ஆனால் இந்து மதத்தில் யார் வேண்டுமானாலும் அரச்சகராக முடியாது’ என்பது அதனுடைய போராட்ட முழக்கம். இது அவர்களைப் பற்றிய இரண்டு கருத்துகளை உருவாக்குகிறது.

இந்தக் காலகட்டத்தில் தான் தாழ்த்தப்பட்ட மக்கள் நாட்டுப்புறச் சிறுதெய்வக் கோயில்களில் பிற்படுத்தப்பட்ட சாதியாருக்கு இணையாகத் தாங்களும் வழிபாடு செய்ய வேண்டுமென்றும் பொதுக்கிணறுகளிலும் குடிநீர்க் குழாய்களிலும் பிறரோடு தாங்களும் பொதுவாகத் தண்ணீர் பிடிக்க வேண்டுமென்றும் பிறர் இடுகாட்டுக்கும் சுடுகாட்டுக்கும் பிணம் கொண்டு செல்லப் பயன்படுத்தும் பாதைகளையே தாங்களும் பயன்படுத்த வேண்டுமென்றும் போராடத் தொடங்கி ஆங்காங்கே கலகங்கள் வெடித்துக் கொண்டிருந்தன. இந்நிலையில் மேற்கூறிய அருச்சகர் வேலைக்கான போராட்டத்தைத் தொடக்கியதன் மூலம் தி.க. தாழ்த்தப்பட்ட மக்களின் கவனத்தைப் பிற்படுத்தப்பட்ட மக்களின் மீதிருந்து பார்ப்பனர்கள் மீது திருப்ப முயன்றது தெளிவாகத் தெரிகிறது. இன்னொன்று மத மாற்றத்தை எப்போதுமே தி.க.ஆதரித்து வந்துள்ளது. எனவே பூசாரிகளின் நிலையைப் பிற மதங்களோடு ஒப்பிட்டுக் காட்டி இந்துக்களை அம்மதங்களுக்கு மாறத் தூண்டி மதமாற்றங்களுக்குத் தரகர் வேலை செய்வதாயும் அமைந்தது.

அத்துடன் 1970களில் திராவிடர் கழகத்திலிருந்த தாழ்த்தப்பட்டோரை அதிலிருந்த பிற்படுத்தப்பட்ட சாதியினர் இழிவுபடுத்தவும் தாக்கவும் செய்தனர். இதனால் தாழ்த்தப்பட்ட மக்களில் மிகப் பெரும்பாலோர் திராவிடர் கழகத்திலிருந்து விலகி அதுவரை தமிழகத்தில் வலிமை பெறாமலிருந்த வடநாட்டு தலித் இயக்கத்தில் சேர்ந்து அதனை வலுப்படுத்தினர்.

திராவிடர் கழகம் பிற்படுத்தப்பட்டோரில் மேனிலையடைந்து விட்டோருக்கும் பார்ப்பனரல்லா மேற்சாதியினருக்ம் பாடுபடும் இயக்கமாக நிலைத்து விட்டது தெளிவு. தாழ்த்தப்பட்ட மக்கள் தமிழகத்தில் பெற்ற கல்வி - வேலைவாய்ப்பு ஒதுக்கிடு நயன்மைக் கட்சியால் பிற்படுத்தப்பட்டோருடன் சேர்த்து வழங்கப்பட்டது. ஆனால் அம்பேத்கார் முயற்சியால் நடுவணரசிடமிருந்து அந்தச் சலுகைகளை அவர்கள் பெற்றுவிட்டனர். அதே உரிமைகளைப் பிற்படுத்தப்பட்டோருக்குப் பெற்றுத் தருவதிலேயே திராவிடர் கழகம் தன் ஆற்றலை எல்லாம் செலவழித்துக் கொண்டிருக்கிறது.

அனைவருக்கும் கல்வி என்ற முழக்கத்தை முன்வைக்காமல் கல்வியை; அதன் மூலம் வேலைவாய்ப்பை ஒரு சலுகையாக்கியதால் பிற்படுத்தப்பட்டோருக்கான திராவிடர் கழகத்தின் முயற்சிகளைத் தாழ்த்தப்பட்டோர் ஐயங்கொண்டு பார்க்கின்றனர். தாங்கள் ஏற்கனவே பெற்றிருக்கும் சலுகையில் பங்கு கேட்கிறார்களே என்று அவர்கள் பதற்றமடைகின்றனர். நடுவணரசுப் பணிகளைத் தங்களோடு பங்கு போட்டுக் கொள்ளும் பார்ப்பனர்களுடன் கூட்டணி சேரவும் முயல்கின்றனர்.

சென்ற நூற்றாண்டின் இறுதியில் தனித் தனிச் சாதி இயக்கங்கள் தோன்றியவென்றும் அவற்றின் செல்வாக்கை ஒழித்துக் கீழ்ச் சாதி மக்கள் அனைவரின் ஒற்றுமையிலிருந்து திராவிட இயக்கம் வளர்ந்ததென்றும் கூறினோம். இந்த இயக்கம் வளர்ந்து போராடிக் கீழ்ச் சாதியினருக்குக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஒதுக்கீடு பெற்றுத் தந்தது. ஆனால் இந்த வெற்றியை ஈட்டிய அதே நொடியே அது தன் தோல்வியைத் தழுவிய நேரமுமாகும். சாதியொழிப்பைத் தன் நோக்கமென்று அந்த இயக்கம் நம்பியது. அதற்காகவே அது போராடியது. அதற்கென அது வைத்த போராட்ட உத்தியோ உண்மையில் அதை எய்தும் வகையில் அமையவில்லை. அது ஒரேயொரு சாதியை, அதாவது பார்ப்பனர்களை மட்டும் எதிர்ப்பதன் மூலம் ஒரு எதிர்நிலைச் சாதி இயக்கமாகவே திகழ்ந்தது. அதனால் தான் அனைவருக்கும் கல்வி எனப் போராடுவதற்குப் பகரம் கல்வியில் ஒதுக்கீடு மட்டும் என்று தன் எல்லையைச் சுருக்கிக் கொண்டது. அதன் விளைவை நாடும் அந்த இயக்கமும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஒதுக்கீடு எனும் மாயவலையிலிருந்து அந்த இயக்கமும் கீழ்ச்சாதி அரசியல்வாணர்களும் அறிவர்களும் கூட விடுபட முடியாமல் தடுமாறி நிற்கின்றனர்.

தீமை இத்துடன் நிற்கவில்லை. ஒதுக்கீடு கிடைத்துவிட்டது. அதைப் பெற்றிருப்பவர்களோ எண்ணற்ற சாதிகளின் கூட்டிணைப்பான ஒரு பெரும் மக்கட் தொகுதி. எனவே யாருக்கு எவ்வளவு என்று பங்கு போடுவது யார்? எவ்வாறு? ஒரே விடை ஒவ்வொரு சாதியினரும் தனித்தனியாகப் பிரிந்து விடவேண்டியதுதான். தத்தமக்குரிய பங்குகளுக்குப் போராட வேண்டியதுதான். அதுதான் நடந்தது. செல்வாக்கிழந்து நின்றிருந்த சாதியமைப்புகள் புத்துயிர் பெற்றன. திராவிடத் தாய் இயக்கம் பெயருக்கு வெறும் கூடாய் நிற்கிறது.

சிக்கல் இத்துடனும் நிற்கவில்லை. பார்ப்பனரை மட்டும் எதிர்த்ததனால் ஒரு பொய்த் தோற்றம் உருவாகியது. பார்ப்பனர் நீங்கிய பிற மேல்சாதியினர் கீழ்ச்சாதியினருடன் ஒன்றுபட்டுவிட்டதாகிய மாயத் தோற்றமே அது. ஆனால் ஒதுக்கீடு கிடைத்ததும் அம்மேற்சாதிகளில் பெரும்பான்மையினர் ஒதுக்கீட்டுப் பட்டியல்களில் ஓட்டைகளை உண்டாக்கிக் கொண்டு கீழ்ச்சாதிகளின் உரிமைகளைத் திருடிக் கொள்கின்றனர். அதே வேளையில் ஒதுக்கீட்டு முறை மூலம் தாம் வஞ்சிக்கப்பட்டதாகக் கூறிக்கொண்டு இரா.கே.ச.[14] இயக்கத்தில் சேர்ந்து நின்று அதற்கு வலிமை சேர்த்துப் பழைய சாதியக் கொடுமைகளைக் கீழ்ச்சாதியினர் மீது மீண்டும் சுமத்தவும் கனவு கண்டு கொண்டிருக்கின்றனர்.

இணைந்த கீழ்ச்சாதிகள் மீண்டும் பிரிந்து நின்றாலும் முன்பிருந்த நிலைமையில் இருந்து இன்றைய நிலைமையில் மாற்றம் ஏற்பட்டிருப்பது மறுக்க முடியாத உண்மை. இன்று சாதிகளிடையில் போட்டியும் பகைமையுணர்வுகளும் உள்ள அளவுக்கு உயர்வு தாழ்வுக் கருத்துகள் இல்லை. அவை மிகக் கட்டுப்பட்டிருக்கின்றன.

எனவே சாதியத்தை எதிர்த்து மேற்கொள்ளப்படும் போராட்டங்களில் பண்பாட்டுப் பணி என்ன? கீழ்ச்சாதிப் பண்பாடுகளின், அதாவது அவை உழைக்கும் மக்களுக்கும் ஏற்றத்தாழ்வில்லாக் குமுகத்துக்கும் ஆண்-பெண்பாலர்களிடையில் முரண்பாடுகளில்லாத, ஒரு குமுக வாழ்வுக்கும் நெருங்கி வருகிறது என்பதை அவர்களுக்கு விளக்க வேண்டும்; அழிக்கப்பட வேண்டியது வெள்ளாளக்கட்டான பார்ப்பனியத்தையே என்பதையும் வளர்த்தெடுக்கப்பட வேண்டியது உழைக்கும் பண்பாடான கீழ்ச்சாதிப் பண்பாட்டையே என்பதையும் எடுத்துரைக்க வேண்டும்; எடுத்துரைத்து அவர்களுக்குத் தேவையான உளவியல் வலிமையைக் கொடுக்க வேண்டும்.

அடிக்குறிப்புகள்:

[1] பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டுகள்

[2] இன்னும் நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை.

[3] Will Durant, Story of Civilisation-Our Orient heritage.

[4] முத்துக்குட்டியடிகளின் அன்பர்கள் சிலர் அவரது மத மாற்றங்கள் பற்றிய செய்திகளை ஏற்றுக் கொள்வதில்லை. ஒன்றரை நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த இப்பெருமகனின் உண்மை வரலாற்றைக் கூட நம்மால் முழுமையாக அறியமுடியவில்லை.

[5] வெட்டி வேலை = கூலியில்லா வேலை

[6] சில ஆண்டுகளுக்கு முன்னால் தமிழக சமூக வரலாற்றுக் கழகம் என்ற அமைப்பு குமரி மாவட்டம் வட்டக் கோட்டையில் *வரலாற்றிய சமயத்தின் பங்கு* என்ற தலைப்பில் நடத்திய கலந்துரையாடலில் புலவர் கு. பச்சைமால் கூறிய செய்தி இது.

[7] சின்னவீடு என்று கூறுவர். வைப்பாட்டி என்றும் கூறுவர். மனைவிக்கு உள்ள உரிமைகளில் தாலி தவிர்த்த உரிமைகள் அனைத்தும் இவர்களுக்கு உண்டு. அண்மைக்காலம் வரை தஞ்சை போன்ற நன்செய் மலிந்த இடங்களில் இவ்வழக்கம் மிகுதி. மாதவியும் கோவலனுக்கு இற்கிழத்தியாகத் தான் இருந்தாள்.

[8] எட்கார் தர்சுட்டன்

[9] இதுவரை தம் கட்டுப்பாட்டிலிருந்த இப்பெண்களை கும்பினி அதிகாரிகள் என்ற நிலையில் தம் ஆதிக்கத்தின் கீழ்ப் பார்ப்பனர் கொண்டு வந்ததன் எதிர்வினைதான் பின்னாளில் திராவிட இயக்கமாக மாற்றம் பெற்ற தென்னிந்திய நல உரிமைச் சங்கத்துக்கு வலிமை தேடிக் கொடுத்த நிலக்கிழமைப் பெருங்குடியினரின் செயற்பாடோ வென்ற ஐயமும் தோன்றுகிறது.

[10] அறிவுத்திறனைக் குறிக்கும் Doctor என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணைச்சொல்லாகப் பண்டாரகர் என்ற சொல்லை வடித்து அதனைப் ப-ர் என்று சுருக்கி எழுதினார் பாவாணர். ஆனால் அது மருத்துவர் எனப்பொருள் தரும் Doctor என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் பொருந்தவில்லை. தமிழில் பண்டிதர் என்ற சொல் இவ்விரண்டு பொருட்களையும் தரும். மருத்துவர் என்று அழைக்கப்படும் நாவிதர்களுக்குப் பண்டிதர் என்ற பட்டமும் உண்டு. புலவர்களையும் பண்டிதர் என்று கூறகிறோம். எனவே ஆங்கிலத்தில் போலவே இருபொருள் தரும் பண்டிதர் என்ற சொல்லும் அதன் சுருக்கமான ப-ர் என்பதும் இங்கு கையாளப்படுகின்றன. கீழ்ச்சாதி ஒன்றின் பட்டமான இதைக் கைக் கொள்ளுவதா என்று மேற்சாதியினர் காட்டும் எதிர்ப்புகளைப் பற்றிக் கவலை இல்லை.

[11] அண்ணாத்துரை எழுதிய சந்திரோதயம் போன்ற நாடகங்களிலும் கதைகளிலும் பார்ப்பனர்கள் எழுதிய கதைகளில் இசைவேளாளப் பெண்கள் ஏற்றிருந்த பங்கைப் பார்ப்பனப் பெண்கள் ஏற்றனர்” அண்ணாத்துரையையும் கருணாநிதியையும் தாக்குவதற்காகத்தானோ என்னவோ எம்.ஆர். இராதா தன் இரத்தக்கண்ணீர் நாடகத்தில் இசைவேளாளப் பெண்ணை இரக்கமற்றவளாகக் காட்டியிருக்கிறார்.

[12] “அணையா விளக்கு” என்ற பெயரில் இது பின்னர் திரைப்படமாக வந்தது.

[13] இப்போது இவ்வுறவு அ.தி.மு.க.வுடன் ஏற்பட்டுள்ளது ஆள்வோரை அண்டி வாழ்தல் என்று பெரியார் தொடங்கி வைத்த மரபு தொடர்கிறது.

[14] இரா.சே.ச. இராட்டிரிய சுயம் சேவக்சங்கம் (R.S.S.)

0 மறுமொழிகள்: